Saturday, May 28, 2022
Homeபடைப்புகள்சிறுகதைகள்ரூஹின் யாத்திரை

ரூஹின் யாத்திரை

ரவு பத்து மணியைக் கடந்து சில நிமிடங்களே ஆகி இருந்தன. பக்கத்துத் தெருவிலிருந்து மையத்துப் புலம்பல் கனத்த துயருடன் காற்றில் கிளம்பி வந்தது. பக்குல் கத்தியிராத இராப் பொழுதாக அது இருந்தாலும் மரணம் ஒன்று சம்பவித்திருப்பதாக எண்ணிக்கொண்டேன். பக்கத்து தெருவில்தான் என் மாமாவின் வீடும் இருந்தது. இரண்டு வாரங்களாக கடைசிக்கால நோயில் விழுந்திருந்தார். எழுபது வயதைத் தாண்டிவிட்டிருந்த போதிலும் சுறுசுறுப்பாக இயங்கித் திரிந்த ஒருவர். குடும்பத்தின் தலையாரி போன்று அவர் சிலவேளைகளில் செயற்பட்டிருக்கிறார். தொடக்கத்தில் நல்ல பொருளாதார நிலையில் மாமா இருந்தாலும் பிற்பட்ட நாட்களில் மத்திய தர வரிசைக்கு இறங்கி விட்டார். கடைசிக் காலத்தில் அதற்கும் கீழே இறங்கிவிட்டிருந்தார். அவரது இந்த சரிவு பற்றி அவர் பெரிதாக அலட்டிக்கொண்டதாகவும் தெரியவில்லை. எப்போதும் போலவே இருந்தார். குடும்பத்தின் நல்லது கெட்டதுகளில் பங்கெடுத்துக்கொள்பவர். வெளியூர்களில் இருக்கும் அவரது உறவினர்களிடம் வருடத்தில் நாளொதுக்கி போய் வந்து கொண்டிருப்பார். எல்லோர் மீதும் அன்பு செலுத்தும் மனிதர். அவரால் மிகவும் செல்லமாக வளர்த்து அவர் கையாலேயே ஆளாக்கிய அவரது பேரனான இபுறாஹிம் யாழ்ப்பாணத்தில் திருமணம் முடித்து தபாலகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தான். அவன் மீது அவருக்கும், அவர் மீது அவனுக்கும் பேரன்பு இருந்து வந்தது. தொலைவில் இருந்தாலும் தொலைபேசியில் அவன் அவருடன் உரையாடுவான். அவரை அவன் தன் வாய்நிறைய வாப்பா என்றே அழைப்பான்.  

மாமா, மாமி மரணித்து சில வாரங்களில் படுக்கையில் விழுந்துவிட்டார். மனைவியின் மரணம் அவரை அடித்துப் போட்டுவிட்டதாகப் பலரும் பேசிக்கொண்டனர். அவர் அன்பு நிறைந்த மனிதர்தான் என நான் நினைத்துக்கொண்டேன். இப்போது பக்கத்து தெருவில் மரணத் துயர் கலந்தெழுந்த குரல் மாமாவுக்கானது தானா? என்ற எண்ணத்தில் இருந்த போது என் மனைவி பதட்டத்துடன் கத்திக்கொண்டு முன்னே வந்து நின்றாள். 

‘மாமாக்கு சீரியஸாம். கோல் வந்திருக்கு..வாங்க போவோம்…’ அவள் முகம் சிவந்திருந்தது. அவள் கண்களில் பயமும் பதட்டமும் உறைந்திருந்ததைக் கண்டேன். உண்மையில் அப்போது பக்குல் கத்தாத போதிலும் கத்துவது போன்ற அசரீரியை உணர்ந்தேன். சிலவேளைகளில் பிரமை உண்மையை விட கெட்டியானதாக மாறிவிடுகிறது. அவர் மீது அவளுக்கும் எவ்வளவு பாசம் இருந்திருக்கிறது. வாசித்துக் கொண்டிருந்த புத்தகத்தை மூடிவைத்துவிட்டு கிளம்ப ஆயத்தமானேன். வீட்டிலிருந்த மற்றவர்களும் அலறியடித்துக் கொண்டு மாமாவின் வீட்டை நோக்கி ஓடினர். 

மாமாவின் வீடு மரணக்கோலம் பூண்டிருந்தது. வாசலில் சடைத்து நின்ற மாமரம் கனத்த மௌனத்துடன் அசைவற்றிருப்பது போல் தெரிந்தது. அதில் தங்கி இருந்த காகமொன்று எச்சை பீய்ச்சியதை அசூசையுடன் ஒரு சிறுவன் எதிர்கொண்டபடி சற்றுத் தள்ளி உட்கார்ந்தான். அவன் முகம் காக்கையின் எச்ச வாசனையை அருவருத்துச் சுருங்கியது. மாமா வழக்கமாகப் படுத்துக்கிடக்கும் கட்டிலில் படுத்துக்கிடந்தார். ஆனால் கண்களை மட்டும் சற்று இறுக்கமாக மூடி இருப்பது போல் இருந்தது. அவரைச் சுற்றி உறவுக்காரச் சிறுவர்கள், பெரியவர்கள் என பலர் கூடியிருந்து குர்ஆன் ஓதிக்கொண்டிருந்தனர். மரணத் தருவாயில் இருப்பவர்களுக்கு குர்ஆன் ஓதுவது எங்களின் வழக்கமாக இருந்தது. அதன் அர்த்தம் இத்துடன் உங்களது வாழ்வு நிறைவு பெறுகிறது. இறைவனைச் சந்திக்கச் செல்லும் நீங்கள் அவனது வேதத்தின் வரிகளை செவியேற்ற வண்ணம் சென்று அவனைச் சந்தியுங்கள். அதுவே உங்களுக்கு விமோசனமாக அமையும் என்பதுதான். அது ஓதுபவர்களுக்கும் ஓதப்படுபவர்க்கும் தெரிந்திருந்தது. குர்ஆன் ஓதப்படும் நாளே அவரது கடைசி நாள். கடைசி மணித்துளிகள். அதன் பின் அவருக்கு உலக வாழ்க்கை இல்லை என்பதை அவரே ஒத்துக்கொண்டு போய்விட வேண்டியதுதான். முதற் பார்வையிலேயே எனக்கு என்னமோ இது மாமாவுக்கான கடைசிப் பிரார்த்தனையல்ல என என் உள்மனம் சொன்னது.  

பார்க்க வந்தவர்கள் ஒரு மையத்தை பார்ப்பது போலவே மாமாவைப் பார்த்துக்கொண்டு நின்றிருந்தனர். அவர் கண்களை இப்போது லேசாகத் திறந்தார். அது ஒரு குழந்தை கண் விழித்து மூடுவதைப் போல் எனக்குத் தோன்றியது. அவர் வருத்தத்தில் இலேசாக முனகிக் கொண்டிருந்தார். அவர் எதையோ சொல்ல முற்படுபவரைப் போல கையைத் தூக்கி சைகை மொழியில் ஏதோ பேச முனைந்தும், வார்த்தைகளை வெளியேற்ற முயன்றும் தோற்றுக்கொண்டிருந்தார். குர்-ஆன் ஓதும் சத்தம் வீட்டைக் கனமாக நிறைத்திருந்ததால் அவர் சத்தம் அங்கு எடுபடவில்லை. தலையை சற்று மேலே உயர்த்தி வாய்க்குள்ளால் எதையோ முணுமுணுத்தார்.

‘செரி..ரூஹூ போகப் போகுது..கடெசில அப்புடித்தான். கொஞ்சம் சத்தமா ஓதுங்க..’ 

கூட்டத்திலிருந்த மாமாவின் உறவினர் ஒருவர் ஓதுபவர்களை உற்சாகமூட்டினார். ஓதிக்கொண்டிருந்த இன்னொருவர் அவரது கூற்றை ஆமோதிப்பது போல மாமாவின் தலையில் கையை வைத்து மெல்ல பணித்துக்கொண்டே உச்சஸ்தாதியில் ஓதத் தொடங்கினார். மாமா எப்படியும் மரணித்தே ஆகவேண்டிய துரதிஸ்டநிலையில் இருந்தார். அவர் உயிரும் உடலும் இரைச்சலால் அந்தரித்துக்கொண்டிருந்தது. அந்த சூழல் வாழ்வதற்காக அவருக்குள் எஞ்சியிருந்த கொஞ்ச நம்பிக்கையையும் சிதைத்துவிட்டிருக்கும் என நான் திண்ணமாக நம்பினேன். ஒருவனை நிற்கவைத்து துப்பாக்கியை அவன் நெற்றிப் பொட்டில் வைத்து விசையை அழுத்துவதற்கு முன்னிருக்கும் அந்தக் கணப்பொழுதில் அவன் அனுபவிக்கும்  அதே மரண பயங்கரத்தைத்தான் மாமாவும் இப்போது அனுபவித்துக் கொண்டிருப்பார். 

ஓதல் தொடங்கியதுமே தன் வாழ்க்கை முடிந்துவிட்டதோ என மாமா மனரீதியாக அந்தக் கணம் உடைந்துவிட்டிருப்பார். அப்போதே அவர் அரைவாசி மரணித்துவிட்டவரைப் போல் தெரிந்தது. மிகுந்த நம்பிக்கையும் மனதைரியமும் கொண்டவரான அவர் முகத்தில் எப்போதும் இருக்கும் நம்பிக்கையின் பிரகாசத்தை மரண தூதன் பிடுங்கிவிட்டதைப் போல் இருந்தது. மாமா எதுவும் தெரியாததைப் போல் மௌனமாகவே படுத்துக் கிடந்தார். ஆனால் அவருக்கு எல்லாம் தெரிந்துகொண்டிருந்தது. ஒருவனுக்கு மரணம் அவன் அறியாக் கணத்தில் நிகழ்ந்துவிட வேண்டும். அது முன்னால் வந்து நின்றுகொண்டு அவனை ஏய்க்காட்டி, அவனோடு கண்ணாமூச்சி விளையாடிவிட்டு அவன் கதையை முடிப்பது மிகவும் அவஸ்தையானது என எண்ணிக்கொண்டேன். அப்போதும் கூட சுற்றி இருந்த எந்த மரத்திலிருந்தும் பக்குல் கத்தும் சத்தம் கேட்கவில்லை என்பது இது மாமாவின் இறுதி நேரமல்ல என்ற எனது நம்பிக்கை மேலும் மேலும் வலுப்பெற்றுக்கொண்டு வந்தது. இதை ஏன் இப்படி மடத்தனமாக நம்புகிறேன் என்று தெரியாமலே நம்பிக்கொண்டிருந்தேன். என் சின்னப் பருவத்தில் மரணதூதர்தான் பக்குல் வடிவத்தில் வந்து அலறுவதாக மையத்து வீடுகளில் நின்று கொண்டு கற்பனை செய்வேன்.   

 

மாமாவின் இளைய மகள் கைரியா வந்தவர்களுக்கு வாப்பாவின் நிலைமையை விளங்கப்படுத்திக்கொண்டிருந்தாள். அவளது கருத்துப்படி இன்று நள்ளிரவுக்கு முன் அவர் எப்படியும் இறந்துவிடுவார். ஆனால் அவருக்கு இப்போது ஏற்பட்டிருந்தது இறுதி வருத்தமல்ல என்பதை ஓரளவு நான் அனுமானித்துக் கொண்டேன். குர்ஆன் ஓதுவது இறுதிக் கணங்களில்தான் என்றாலும் அது அவருக்கு இறுதியான நாளல்ல என்பது எனக்குப் புரிந்துவிட்டது. அவர் மீண்டும் எதையோ சைகை மூலம் கேட்பது தெரிந்தது. அவர்  சாப்பாடுதான் கேட்கிறார் என்பது எனக்கு சற்றே புரிந்துவிட்டது. மாமா தைரியசாலிதான் தன் மனபலத்தை அந்த சந்தர்ப்பத்திலும் அவர் இழந்துவிடவில்லை. சத்தமில்லாத ஒரு அமைதியான சூழலையே அவர் அப்போது விரும்பினார். தன் உப்பிக்கிடந்த அடிவயிற்றிலிருந்து வார்த்தைகளை இழுத்தெடுத்து சத்தற்ற வாய் வழியே வெளியிட்டார். ஓதுபவர்களுக்கும் இப்போது சலிப்பாகிக் கொண்டு வந்தது. இது மாமாவுக்கு இறுதிநேரமல்ல என்பதை என்னைப் போல் அவர்களும் உணரத் தொடங்கினர். பின்னர் மெல்ல ஓதல் சத்தம் அடங்கிக்கொண்டு வந்தது. மாமா எப்படியோ உயிர்பிழைத்துக் கொண்டார்.

 ஓதியவர்கள் ஒவ்வொருவராகக் கலையத் தொடங்கினர். மாமா மரணிக்கவில்லையே என்ற ஏமாற்றமோ அல்லது அவர் பிழைத்துக்கொண்ட குதூகலமோ எந்த உணர்ச்சியுமற்ற வெற்று முகத்துடன் அவர்கள் கலைந்து சென்றனர். மரணத்தைக் கூவியழைக்கும் பறவை ஏன் இன்னும் கத்தவில்லை என்ற பெருத்த கேள்வியுடன் நான் மாமரத்தை அண்ணாந்து பார்த்தேன். என்னைத் தொடர்ந்து ஒரு சிறுவனும் மாமரத்தை அண்ணாந்து இருளின் திக்கில் எதையோ தேடினான். அதன் கிளைகளுக்குள் எங்கோ தான் பக்குல் ஒளிந்திருக்க வேண்டும். மரணதூதரிடமிருந்து மாமாவுக்கான கட்டளை வந்தவுடன் இருட்டைச் சொறியும் மாமரத்தின் ஆழ்ந்த மௌனத்தை கலைத்தபடி அதன் இருள் மண்டிய கிளையிலிருந்து யார் கண்களும் காணுமுன் பயங்கரமாக அலறிவிட்டு அது தப்பிச் செல்லும் என நான் மாமா படுத்துக் கிடக்கும் கட்டிலைப் பார்த்தபடி நம்பினேன். 

மாமா இப்போது வழமைக்குத் திரும்பி விட்டார். அவர் அருகில் உட்கார்ந்திருந்த மரணம் இப்போது மாமரத்தின் உச்சியில் போய் உட்கார்ந்து விட்டதோ?

மாமாவின் இளைய மகன் மிர்ஜானுக்கு திடீர் செலவு ஏற்பட்டதில் சற்றுக் கடுப்பாக இருந்தான். வந்தவர்களுக்கு பிஸ்கட்டும், டீயும் அவன் செலவில் கொடுக்கப்பட்டிருந்தது. 

‘நீதான் எல்லாருக்கும் கோல் பண்ணி கூப்பாடு போட்ட..’

கைரியா மீது பாய்ந்தான் மிர்ஜான்.

‘அதுக்கு மறா வாப்பாக்கு ஒன்னும் கதைக்கேலாம பெய்த்து.. சாப்புர்ராருமில்ல.. அதான் நான் கத்தின’

இப்போது இன்னும் சிலர் மிர்ஜானுக்கு சார்பாகவும் கைரியாவுக்கெதிராகவும் ஆஜராகினர்.

‘இவள்தான் சும்மா இருந்த எங்களையும் கோல் பண்ணி வரவெச்ச..” 

மூத்த ராத்தாவின் முகத்தில் தூக்கக் கலக்கம் சற்றுத் தூக்கலாகத் தெரிந்தது. வந்தவர்கள் அனைவரும் மேலும் சில மணித்தியாலங்கள் அங்கே அளவளாவிக் கொண்டிருந்துவிட்டு கலைந்து சென்றனர். மாமா நோயில் விழுந்த பிறகு கைரியா மச்சிதான் அவரைக் கவனித்து வந்தாள். 

இது நடந்து இரண்டு வாரங்களுக்குப் பின் மாமாவைச் சென்று சந்தித்தேன். விறாந்தைக்குள் கட்டப்பட்டிருந்த ஊஞ்சலின் நைலோன் கயிற்றில் முதுகைச் சாத்தி மெதுவாக ஆடிக்கொண்டிருந்தார். சலாம் சொல்லிக் கொண்டு அருகில் போடப்பட்டிருந்த கதிரையில் உட்கார்ந்து கொண்டேன். மாமா நல்ல மனநிலையில்தான் இருந்தார். நம்பிக்கை சுடர்விடும் இரண்டு சுடர் நட்சத்திரங்களாக மூக்குக்கண்ணாடிக்குள்ளால் அவர் கண்கள் பிரகாசித்தன. 

‘வாடா..வாடா..சுகமா இருக்கிறியா..’ எனக் கேட்டுக்கொண்டே, தன் வழக்கமான குறும்புச் சிரிப்புடன்

‘அண்டெய்க்கு என்ன எல்லாருமா கொண்டு போய் புதைக்கப் பார்த்திங்கடா..” என்றார். அவருக்காக ஓதப்பட்ட யாஸீன் குர்ஆன் கட்டுக்கள் அவரது கட்டிலின் தலைமாட்டில் அப்படியே அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அவை மீண்டும் திறக்கப்படும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை என்பதைப்போல் இருந்தது அந்தக்குவியலின் சீர்குலைவு. 

‘எங்க எல்லாரையுமே பயங்காட்டிட்டிங்க மாமா நீங்க” என்றேன் பதிலுக்கு.

‘அண்டெய்க்கு எனக்கு லேசான ஒரு மூச்சுத் திணறல்தான்டா..ஓதல் சத்தத்தில நான் சொன்னது எதுவுமே யாருக்கும் காதில விழல..’

மாமா இப்போது சொன்னதும் நான் அப்போது நினைத்ததும் சரியாக இருந்தது. 

இந்த சந்திப்பும் இடம்பெற்று சரியாக மூன்று வாரங்களுக்குப் பின் ஒரு ஞாயிற்றுக் கிழமை காலை 10 மணிக்கு மாமா இறந்து போனார். மாமாவுக்கு அந்தக் கணத்தில் குர்ஆன் ஓதி யாரும் முன்கூட்டியே மரணபீதியை ஏற்படுத்தி இருக்கவில்லை. ஒரு சுமாரான மனநிலையில் இலேசான உறக்கம் போல் சற்று நேரத்தில் எழுந்திருப்பதற்கான அனைத்து நம்பிக்கைகளோடும் அவர் மௌத்தாகிப் போனார். மணக்குச்சியின் வாசனையை முகர்ந்தபடி அவர் கட்டிலில் சாதாரணமாகப் படுத்துக்கிடந்தார். அவர் மரணித்துவிட்டதைப் போன்று சும்மா பாவனை செய்பவரைப் போல் எனக்கு முதல் பார்வையில் தோன்றினார்.  உறவுக்காரப் பெண்களின் கனத்த அழுகைச் சத்தத்தைத் தவிர மரணத்தின் வேறெந்த சுவடும் அங்கிருக்கவில்லை. அவரது வழமையான உறக்கத்துக்கும் இந்த மரணப்படுக்கைக்குமிடையில் எந்த வித்தியாசமும் எனக்குத் தென்படவில்லை. மாமா உண்மையிலேயே மரணித்துவிட்டாரா என்ற சந்தேகத்தில் சில நிமிடங்கள் அவரையே உற்றுப் பார்த்தபடி நின்றிருந்தேன். 

‘விலகுங்க இனி மோதினார் வந்துட்டார் மையத்தக் குளிப்பாட்டனும்..’ இளைய மாமா உரத்த சத்தத்துடன் மையித்திருக்கும் அறைக்குள் பிரவேசித்தார். 

‘மையத்து சுனங்கப் போடா நபியவங்க சொல்லிருக்காங்க.’ இளைய மாமா ஒரு ஹதீஸ் ஒன்றை ஞாபகமூட்டிக்கொண்டு மாமா மரணித்து சில மணித்தியாலங்களிலேயே அவரை நல்லடக்கம் செய்துவிட முயற்சித்தார். அதுதான் இஸ்லாத்தின் வழிமுறை என்பது எங்கள் எல்லோருக்கும் தெரியும். மரணித்தவர்களின் உடல்களை நீண்ட நேரத்துக்கு வைத்திருப்பது எங்கள் மார்க்கத்தில் தடைசெய்யப்பட்டிருந்தது. அந்த அவசரமான அடக்கம் பிரிவின் வலியில் வாடும் உறவுகளிடமிருந்து அவர் உடல் இரக்கமின்றி பிடுங்கப்படுவது போல் எனக்குத் தோன்றியது. அவரது ரூஹ் பிரிந்தாலும் அவரது உடல் கொஞ்ச நேரம் அவர் நம்முடன் கூட இருப்பது போல் ஒரு உணர்வைத் தரும் என்றொரு நம்பிக்கை எனக்குள் இருந்தது. அது ஒருவகையான ஆறுதல் போலவும் எனக்குத் தோன்றியது.

அவரது அன்புப் பேரன் இபுறாஹிம் யாழ்ப்பாணத்திலிருந்து வந்து கொண்டிருப்பதாகவும் மையத்து வீட்டின் சோகத்துடன் சேர்ந்து ஒரு செய்தி உலாவியது. ஆனாலும் மையத்து வீடு மையத்து தூக்கப்படும் வரை மிகவும் பரபரப்பாக இருந்தது. மிக அவசரமாக வார்த்தைகள் பரிமாறப்பட்டன. சலவாத்துகளும் இன்னபிற ஓதல்களும் ஒரு சீரான வேகத்தில் சூடுபிடித்துக்கொண்டு வந்தன. பேரன் வந்து சேராமலே மாமா தன் இறுதிப் பயணத்தை நான்கு பேரின் தோள்களில் படுத்துக்கொண்டு மேற்கொண்டார். மாமாவின் வீட்டுக்கும், மையவாடிக்குமிடையில் கிட்டத்தட்ட ஐந்து கிலோ மீற்றர் தூரமிருக்கும். நான்கு பேர் நான்கு பேராக மாறி மாறி சந்தூக்கைத் தூக்கிச் சென்றனர். 

சலவாத்துகளும், இன்னபிற ஓதல்களும் தெருவை ஆக்கிரமித்திருந்தது. ஆனால் மாமாவால் மட்டும் எதையும் செவியுற முடியவில்லை. சந்தூக்குத் தூக்கியவர்கள் தோள் வலியாலும், கை வலியாலும் நெளிவது தெரிந்தது. சந்தூக்கைச் சுமந்து சென்றவர்கள் சந்தூக்கை கைமாறுவதற்கு பக்கத்தில் வந்தவர்களின் தயவை எதிர்பார்த்தனர். அவர்களின் கைகள் கடுமையாக நடுங்கின. சிலர் சுமைதாங்க அஞ்சி கூட்டத்தை விட்டும் பெரியதொரு இடைவெளியைப் பேணிக்கொண்டு பின்னால் நடந்து வந்து கொண்டிருந்தனர். அப்போது தருணம் பார்த்து பக்கத்தில் நடந்து வந்துகொண்டிருந்தவரிடம் சந்தூக்கைச் சுமந்து செல்பவர்களின் துயரத்துக்கு ஒரு நிரந்தரத் தீர்வு பற்றி கருத்துரைக்க முயன்றேன். 

‘சந்தூக்க வாகனத்திலதான் இனிக் கொண்டு போகனும்..அதான் லேசி’ என்றேன். 

அவர் என்னை ஒருமாதிரியாகப் பார்த்தார். அந்தப் பார்வை பலநூற்றாண்டு காலப் பழமைவாய்ந்த ஒரு பார்வை போல் இருந்தது. மனிதர்களின் இன்றைய கஷ்டங்களும், துயரங்களும் மிக மோசமானவையாக இருந்தன. ஆனால் அவற்றுக்கான பரிகாரங்கள் மிக எளிமையானதாக, சிடுக்குகள் எதுவுமற்றதாக இருந்தன. சலவாத்துச் சத்தம் தொடர்ந்ததும் ஒரு சீரான வேகத்தில் கூடிக்குறைந்து ஒலித்துக்கொண்டு வந்தது.    

எல்லாம் முடிந்த பின்தான் மாமாவின் பேரன் இபுறாஹீம் யாழ்ப்பாணத்திலிருந்து வந்து சேர்ந்தான். மிகவும் களைப்பும், சோர்வும் அடைந்திருந்தான். வந்த வேகத்தில் மையத்து இருக்கக்கூடும் என அவன் நம்பி வந்த வீட்டின் அறைக்குள் விம்மலுடன் பிரவேசித்தான்.

‘மையத்து அடக்கியாச்சு மனே…’ அவன் உம்மா அவனைக் கட்டிக்கொண்டு சோகமாகச் சொன்னாள். அப்போது அவன் கண்களில் பெரிய ஏமாற்றத்தை நான் காணவில்லை. அதுவே நிகழும் என அவன் முன்கூட்டியே தீர்மானித்திருந்தது போல் இருந்தது.

‘வாப்…ப்பா…’ என உடைந்து கேவிக் கேவி அழத்தொடங்கினான். அப்போது அவன் அழுகை ஒரு பக்குல் கேவிக் கேவிக் கத்துவதைப் போல் இருந்தது. 


-ஜிஃப்ரி ஹஸன்

பகிர்:
Latest comments
  • சிறப்பு….👌

    பல வார்த்தைகள் எனக்கு புதியவை…. முதன்முதலாக சில வார்த்தைகளை இப்பொழுது தான் படிக்கிறேன். ஆயினும் புரிந்து கொள்வதில் சிரமமில்லை….. அருமை 👌

  • பக்குல் என்றால் என்ன?

leave a comment

error: Content is protected !!