கருப்பு மழை-பி.அஜய் ப்ரசாத், தமிழில்-க.மாரியப்பன்

ங்கள் பிரிய பரலோகபிதாவே, கிருபையும்சமாதானமும்கொண்டிருப்பதாக, இதோ தந்தையே, உம்முடைய அடியவன், உலகப் பயணத்தை முடித்துக்கொண்டு உம்மிடம் வந்திருக்கிறாராக..

                பாஸ்டர் ஜெபித்துக்கொண்டிருக்கும்போது ஒரு கைப்பிடி மண்ணைக் கையில் வாங்கிக்கொண்டேன்.

                என்னோடு என் இரண்டு அண்ணன்கள், அக்காக்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஒரு பிடி மண்ணைப் பெற்றனர்.

                சாயங்கால மஞ்சள் வெயிலில் சவப்பெட்டி இறக்கிய குழியைச் சுற்றி அனைவரும் சோகமான முகத்தோடு நின்று கொண்டிருந்தனர்.

                குழியிலிருந்தசவப்பெட்டியில் அவன் நிம்மதியாகப் படுத்துக்கொண்டிருந்தான். எப்பொழுதும்போல, எதுவும் நடக்காதது போல்.

                அனைவருக்கும் கடைசிப் பார்வை. கடைசிப் பிரியாவிடை.

                விறைத்திருந்த உடலை அகற்ற முடியாமல், அலங்காரமாகத் தைக்கப்பட்ட கறுப்பு அங்கி உடல்மேல் கலைந்து கிடந்தது.

                கிறித்துவ மதப்படி இப்படி மனிதனைச் சவப்பெட்டியில் வைத்துப் புதைப்பதை நான் எப்பொழுதும் பார்த்ததில்லை. மயானத்தில் மனிதர்களை எரிப்பது மட்டுமே எனக்குத் தெரியும். இதெல்லாம் எனக்குப் புதிது.

                அவன் எப்பொழுதும் அப்படித்தான். எதுவும் சாதாரணமாக இருக்காது. ஏதோ ஒரு தனிச்சிறப்பாய்.  அதேபோல் அசாதாரணமாகவும் இருக்காது.

                இப்படி நடக்குமென்றுஉண்மையில் என்றும் நினைக்கவில்லை. இத்தனை வருடங்களாக அவன் இல்லை என்ற குறை மாத்திரமே அந்தச் சுமையைச் சுமக்க முடியாமல் அப்படியே காகிதத்தில் எழுதினால் மனநிம்மதி கிடைக்குமென்று இப்படி எழுதுவதைத் தொடங்கினேன்.

                                                                                                                -000-

அவனது முழுப்பெயர் பாதர்ல ஹரேராம கோடீஸ்வர ப்ரசாத்.

எங்கள் தாத்தா பெயர் ‘கோட்டய்யா’

வீட்டில் அனைவரும் ‘ஹரி’ என்று அழைப்பார்கள். வெளியே நண்பர்கள் ‘ப்ரசாத்’ என்று அழைப்பார்கள்.

எனக்கு முன்னால் பிறந்தவன். என்னை விட மூன்று ஆண்டுகளே மூத்தவன்.

எஙகள்இருவர் இடையேயும் வயது வித்தியாசம் குறைவு என்பதால் சிறுபிராயத்திலிருந்தே நான் அவனை ‘டேய்’ என்று அழைப்பது வழக்கமானது.

                பார்ப்பதற்கு அவன் என்னைவிடச் சிறியவன்;போலக்காணப்படுவான். இருவரும் ஏறக்குறைய ஒரே உயரம். என்னைவிட ஒல்லியாக இருந்து அவனே எனக்குத் தம்பிபோலக் காணப்படுவான்;. எங்கள் தந்தையின் சாயல். ஆனால் கறுப்பு. நான் பார்க்க எங்கள் அம்மாவைப் போல இருக்கிறேன் என்பார்கள். நாங்கள் நான்குபேர் அண்ணன் தம்பிகள், வரிசைப்படி அவன் மூன்றாமவன். எங்களுக்கு இரண்டு அக்காக்கள் கூட இருக்கிறார்கள். எல்லாரையும் விட நான்தான் சின்னவன்.

                அந்த நாட்களில் எங்கள் தந்தை நாகார்ஜூனசாகர்ப்ராஜக்டில்பணிசெய்துகொண்டிருந்தார். நாங்கள் அன்றைக்குக் குண்டூரு ஜில்லா மாச்சர்லா பி.டபிள்யூ.டி காலனியில் குடியிருந்தோம். எனக்கு விவரம் வந்தது மாச்சர்லாவில்தான். எங்கள் தந்தை டிபார்ட்மெண்டில் ஜூனியர் கிளார்க் ஆகையால் காலனியில் நாங்கள் இருந்தது மூன்று அறைகள் கொண்ட சிறிய வீடு. பின்னால் கொல்லைப்புறம். வீடு சின்னதாகயிருந்தாலும் வீட்டைச் சுற்றிலும் விசாலமான காலி இடம் இருந்தது. வீட்டிலிருந்து நாலடி தூரத்தில் ஆகாயத்தை நோக்கி கிளைகளை நீட்டி உயரமாக வளர்ந்த பெரிய பெரிய வேப்ப மரங்கள், வாகை மரங்கள் இருந்தன. அந்த மரங்களோடு கூட நாங்கள் கொல்லைப்புறத்தில் காய்கறிகளை வளர்த்தோம். வீட்டின்முன்பு வாசலில் இருந்து தோட்டம் வரைக்கும் செல்லும் பாதையின் இருபுறமும் விதவிதமான பூச்செடிகள் யார் வந்தாலும் தலையாட்டி வரவேற்று அழைத்தன. கொல்லைப்புறத்தில் எப்பொழுதும் பத்துப்பதினைந்து கோழிகள் திரிந்துகொண்டிருக்கும். கவர்ன்மெண்ட் குவார்ட்டர்ஸ் ஆகையால் வீடுகள் அனைத்தும் தூரம் தூரமாக இருந்தன.

                எனக்கு விவரம் தெரிந்தநாட்களில் எங்கள் பெரிய அக்கா, பெரிய அண்ணன் இன்டர் முடித்து எங்கள் காலனி பக்கத்தில் உள்ள எஸ்.கே.பி.ஆர் காலேஜில் டிகிரி படித்துக்கொண்டிருந்தார்கள். பெரிய அண்ணன் சூரியசேகர் ப்ரசாத் ஆரம்பத்திலிருந்து கல்லூரி மாணவர் யூனியனில் சேர்ந்து தீவிர உணர்வுகளைக் கொண்டிருந்தார். அப்படித்தான் எங்கள் வீட்டில் இடதுசாரி சித்தாந்தம் வந்து சேர்ந்தது. காலேஜில் படிக்கிற காலத்தில் அவர்களைத் தீவிர ரஷ்ய ‘பாய்ஸ்’ என்பார்கள். சுந்தரராவ் என்ற தீவிரவாத மாணவர் பெரிய அண்ணன் சிநேகிதர் ஆகையால் அடிக்கடி எங்கள் வீட்டிற்கு வந்து செல்வார். அவர் மாச்சர்லா அருகில் ஜம்முலமடகா என்ற ஊரினர்.

                வீட்டில் மூத்த அண்ணன்கள் இருவருமே எதிரெதிர் குணம் கொண்டவர்கள். மூத்த அண்ணன் அப்படி இருந்தால் இன்டர் படிக்கும் இரண்டாவது அண்ணன் கிருஷ்ண ப்ரசாத் பெரிய அண்ணனின் கருத்துக்களுக்கு முற்றிலும் எதிரானவர். பேருக்கு ஏற்றார் போல் கிருஷ்ணனே. எப்பொழுதும் போக்கிரி வேலைகளால் ஏதோ ஒரு பிரச்சனையை வீட்டுக்குக் கொண்டுவருவார்.

                எங்கள் தந்தையார் அலுவலகத்தில் சாதாரண குமாஸ்தா வேலை செய்தாலும்,வீட்டில் எது இருந்தாலும் இல்லாவிட்டாலும் விதவிதமான வார, மாத பத்திரிகைகள் வந்தன. பெரியர்களுக்கு ஆந்திர ஜோதி, ப்ரபா, ஆந்திர பத்திரிக்கா, போன்றன. சிறியவர்களுக்குச் சந்தமாமா. அந்த நாட்களில் எங்கள் வீட்டில் என் கண்களுக்குத் தெரிந்த இரண்டு புத்தகங்கள் கடைசியில் புஜ்ஜிபாபு மிஞ்சவில்லை, மற்றொன்று அல்லசானி பெத்தண்ணாவின் மனுசரித்திரம். இந்த இரண்டும் எங்கள் அப்பா மசூலிப்பட்டிணம் நேஷனல் காலேஜ்ல பி.ஏ படிக்கும்பொழுது வாங்கிய புத்தகங்கள். இரண்டாம் ஆண்டு காலேஜில் படிக்கிறபோது காலேஜ் பீஸ் கட்டமுடியாமல் அவர் படிப்பு நின்றுவிட்டதென்று ஒருமுறை சொன்னார். புத்தகங்கள் படிப்பது அவரிடமிருந்தே எங்கள் வீட்டில் பரம்பரையாக வந்தது என்று நினைக்கிறேன். இத்தனை பத்திரிகைகள், புத்தகங்கள்வீட்டிலிருந்தாலும்அவற்றைப் பற்றி அவர் எப்பொழுதும் எங்கள் எவருக்கும் பலான புத்தகம் படியுங்கள் என்றும், வேறு யாருடனாவது புத்தகங்கள் குறித்து விவாதியுங்கள் என்றும் சொன்னதை நான் எப்பொழுதும் பார்த்ததில்லை.

                பகல்முழுக்கப் பள்ளியிலோ கல்லூரியிலோ நேரத்தைச் செலவழிக்கிற நாங்கள், ஞாயிற்றுக்கிழமை வரும்போதும் மட்டும் வீட்டிலிருந்தோம். விடுமுறை நாட்களில் எங்கள் அண்ணன்கள்செடிக்குப் பாத்தி கட்டுவதோ, கோழிக்கூட்டைச் சுத்தம் செய்வதோ ஏதோ ஒரு வேலை செய்வார்கள். எங்கள் பெரிய அண்ணன் வீட்டுக்குப் பின்னால் இருக்கிற பெரிய வாகை மரத்தின் விசாலமான கிளை மீது குச்சியால் படுக்கைக் கட்டினான். வீட்டின் ஒரு பக்கத்தில் உள்ள தோட்டத்தில் நான் புதர்போல் இருக்கிற இலந்தைச் செடியைக் குடிசை போல உருவாக்கி உள்ளே தரையைச் சுத்தம் செய்து அதில் உட்காருவேன். அந்த நாட்களில் பாம்பு பற்றிய பயம் தெரியாது எனக்கு. அந்தச் செடியில் எப்பொழுதும் பாம்புகளைப் பார்த்ததும் கிடையாது.

                ஞாயிற்றுக்கிழமை மத்தியானம் சாப்பாடு ஆனதும் எங்கள் தந்தையார் சாய்வு நாற்காலியில் படுத்துக்கொண்டு ஆகாசவாணி வானொலி நாடகத்தை வைப்பார். ஒவ்வொரு ஞாயிறும் எங்கள் வீட்டில் நடக்கும் வழக்கம் இது. உள்ளே வேலைபார்த்துக்கொண்டிருக்கும் எங்கள் அம்மாவைத் தவிர நாங்கள் எல்லாரும் அமைதியாக அமர்ந்து அந்த நாடகத்தைக் கேட்போம்.

                வானொலியில் நாடகம் முடியும் வரைக்கும் சின்னக்காபாடப்புத்தகத்தை வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தால் பெரியக்கா கிழிந்துபோன உடைகளை ஊசி நூலால் தைத்துக்கொண்டே இருப்பாள். அவர்களின் இருவரின் காதுகளும் வானொலியைக் கேட்டுக்கொண்டிருக்கும். பெரிய அண்ணன் ஜன்னலின் அருகில் அமர்ந்து வெளியே மரங்களைப் பார்த்துக்கொண்டு அந்த நாடகத்தைக் கேட்பார்.

                மறுபடியும் ஞாயிற்றுக்கிழமை மத்தியானம் எப்பொழுதுவருமோவென்று நாடகத்தை எதிர்பார்த்திருப்போம். நாடகம் முடியும் நேரத்தில் பெரிய அமைதி வீடு முழுக்கப் பரவியிருக்கும். மதியத்தைக் கடந்து சூரியன் தன்னுடைய இளம் மஞ்சள் கதிர்களை வீட்டினுள் பாய்ச்சுவான். திறந்த ஜன்னலில் இருந்து மெல்லிய காற்று உள்ளே வரும். கனத்த இதயத்தோடு மாலைக்குள் எங்கேயோ ஒரு பக்கம் சென்றுவிடுவோம்.

                ஒருமுறை இரண்டாவது அண்ணன் சுவரில் சாய்ந்துகொண்டு ஏதோ எழுதிக்கொண்டு இருக்கும் பொழுது பார்த்தேன். நான் அருகில் வருவதைப் பார்த்து, “எதுக்குடா இதெல்லாம் உனக்கு… எல்லாம் உனக்கே வேணும். போ படி போ” என்று கடிந்துகொண்டார். என்னைத் திட்டினாரே தவிர காகிதத்தை மட்டும் என்னிடமிருந்து மறைக்கமுடியவில்லை. ஒருமுறை அவர் வெளியே சென்ற நேரத்தில் ரகசியமாக அந்தக் காகிதங்களை எடுத்துப் பார்த்தேன். தடித்த வெள்ளைக் காகிதத்தில் பென்சிலால் கிராமத்துப் பெண்களின் உருவங்கள். அழகான முகம். வட்டமான பெரிய நாசி. நீண்ட ஜடை. தோள்கள் மேல் மெல்லிய தாவணி. பிற்காலத்தில் அவையெல்லாம் கோபியர்களின் உருவங்களாக ஆக்கப்பட்டன. அப்படிப் படிப்படியாக எண்ணிலடங்கா ராதாகிருஷ்ண உருவங்களை வரைந்தார்.

                படம் வரைவதோடு கூடச் சின்ன அண்ணாவிற்குக் கதைகள் எழுதுகிற பழக்கம் கூட இருந்தது. சில காலத்திற்கு நாவல் ஒன்றை எழுதி பாதியில் நிறுத்தினார். அதன் பெயர் ‘காட்டில் ஒரு சிறுவன்”.

                எந்த மனிதனுக்கு அவனது விதி எப்படியிருக்குமோ தெரியாது இல்லையா. மனிதர்கள் நினைப்பதெல்லாம் நடந்தால் அது எப்படி வாழ்க்கையாகும். சின்ன அண்ணன் நெல்லூரில் ஐ.டி.ஐ முடித்ததும் ஏர்போர்ஸில் உத்தியோகம் வந்து சிறுவயதிலேயே சென்னைக்குச் சென்று விட்டார். எப்பொழுதோ வருடத்திற்கு இரண்டு மாத விடுமுறையில் வீட்டிற்கு வருவார்.

                ஒருநாள் பெரிய அண்ணன் கல்லூரி நூலகத்திலிருந்தது ஒரு புத்தகத்தை வீட்டுக்கு எடுத்து வந்தார்.

                அது மாக்ஸிம் கார்க்கி எழுதிய ‘தாய்’ நாவல். நான் கார்க்கி பேரைக் கேட்பது அதுவே முதல்முறை.

                அட்டைப் படத்தின்மேல் பழுப்பு நிற பிர்ச் மர ஓவியம்.

                இந்நூலை ரஷ்யாவில் உள்ள பிரகதி பப்ளிஷிங் ஹவுஸ் வெளியிட்டது.

                அப்போதுவரை ரஷ்யா என்றொரு நாடு இருந்ததாக நாங்கள் யாரும் கேள்விப்படவில்லை.

                எங்கள் அப்பா புத்தகத்தைக் கையில் எடுத்துக்கொண்டு, “புத்தகம் பார்ப்பதற்கு ரொம்ப நல்லா இருக்கு” என்றார்.

                அதன் பிறகு கார்க்கியின் மற்ற கதைப் புத்தகங்கள் வீட்டிற்கு வந்தன.

                முதல் இருவர்இப்படியென்றால், எங்கள் மூன்றாவது அண்ணன் ஹரனின் வேலைகள் இன்னொரு ரகமாக இருக்கும். எப்பொழுதும் அவன் உயர்நிலைப்பள்ளி நண்பர்களோடு சுற்றிக்கொண்டிருப்பான். அவனின் நடத்தை எப்பொழுதும் விசித்திரமாக இருக்கும் எனக்கு.

                எங்கள் இருவருக்கும் எப்பொழுதும் ஆகாது. எப்பொழுதும் கழுத்தைப் பிடித்துக்கொண்டு தரையில் விழுந்து உருண்டுகொண்டு அடித்துக்கொண்டிருப்போம்.

                அவன் என்னைப் பொருட்படுத்தமாட்டான். அவன் நண்பர்களோடு விளையாட விடமாட்டான்.

                அவனது எல்லாம் வேற ரகம்.

                ஒருநாள் அவனும் நானும் மாச்சர்லா சென்னகேசவசாமி திருவிழாவிற்குச் சென்றோம். “மக்கள் கூட்டம் அதிகமாயிருக்கு, ஜாக்கிரதையா போயிட்டு வாங்க” என்று வீட்டில் உள்ளவர்கள் சொல்லி அனுப்பினார்கள். ரயில் தண்டவாளத்திலிருந்து மணிக்கூண்டு வரை மக்கள் கூட்டம் அலைமோதியது. மெயின்ரோட்டிலிருந்து எல்லாத் தெருக்களும் மக்களால் நிறைந்திருந்தன. வழி தெரிந்த காரணத்தால் தொலைந்து போனாலும் வீட்டுக்குத் திரும்பி வந்துவிடமுடியும். நினைத்ததுபோலவேமணிக்கூண்டுக்கு அருகில் இருவரும் தொலைந்துபோனோம். அவன் கண்களுக்கு அகப்படுவானா என்று ஒரு வீட்டின் உயரமான சுற்றுச்சுவர்மீது  ஏறிப் பார்த்தேன். கண்ணுக்கெட்டிய தூரம் அவன் தெரியவில்லை. தேரோட்டத்தைப் பார்ப்போம் என்று எண்ணியவனை  மக்கள் கால்களால் தள்ளிக்கொண்டு கோயில்வரை போனார்கள். சென்னகேசவரை தேரில் ஏற்றிக்கொண்டிருந்தார்கள். தடித்த மனிதர்கள் பெரிய சங்கிலியைச்சரிபார்த்துக்கொண்டிருந்தார்கள். கத்திக்கொண்டிருக்கிற மக்கள் கூட்டம். அந்தத் தள்ளுமுள்ளுவில் அலறல்கள், கத்தல்கள். மறுபுறம் காற்றிலே வெளிச்சத் தீபாராதனைகள். கூட்ட நெரிசலில் என்னைப் பின்னே தள்ளினார்கள். இனி தேரோட்டத்தைப் பார்ப்பது கஷ்டம் என்று எப்படியோ கூட்டத்திலிருந்து வெளியேறி வீட்டை நோக்கி நடந்தேன்.

                ரயில்தண்டவாளத்தைக் கடந்ததும் அவன் தெரிந்தான். கையில் சிறிய அட்டைப் பெட்டி. அதில் ஏதோ பொம்மை இருக்கிறது.

                இருவரும் வீட்டுக்கு வந்து எவருக்கும் தெரியாமல் அறையின் மூலையில் சென்று அந்தப் பெட்டியைத் திறந்தோம்.

                அது சாவிகொடுத்தால் மேளம் வாசிக்கும் கோமாளியின் வண்ணமயமான பொம்மை. எங்கள் வீட்டில் இருக்கிற பொருட்களுடன் ஒப்பிட்டால் அந்த வண்ணமயமான பொம்மை மிக விலையுயர்ந்ததாகத் தோன்றியது. அதன் புதுமை என்னைப் பயமுறுத்தியது. அந்தச் சமையலறையின் மங்கிய இருளில் அழுக்குச் சுவர்களுக்கு இடையில் பழைய பொருட்கள் மத்தியில் இப்படியொரு பொருளா என்று தோன்றியது.

                அவன் அதனை ஒருமுறை சாவி கொடுத்துத் தரைமேல் விட்டான்.

                அது “டிரிங்.. டிரிங்..” என்று தரையின் மேல் வட்டமாகச் சுற்றி மேளம் அடிக்கத் தொடங்கியது. அந்தச் சத்தத்திற்கு வீட்டில் இருப்பவர்கள் யாராவது வருவார்களோ என்று அவன் படார் என்று அதனை அழுத்தினான்.

                “இதை வாங்க பணம் எங்கிருந்து வந்தது?” என்று கேட்டேன்.

                அவன் பதில் சொல்லவில்லை. அந்தப் பொம்மையை அவன் வீட்டில் உள்ளவர்களுக்குக் காட்டவில்லை. பொம்மையைச் சமையலறையில் எங்கள் அம்மாவின் சேலை வைக்கிற டிரங்குப் பெட்டியில் மறைத்து வைத்துப் பின்பக்கமாக வெளியே போனான்.

                நான் முன்னறைக்கு வந்து பார்த்தால் முன்னறையில் பெரிய அண்ணனின் நண்பன் சுந்தர் ராவு நின்று ஸ்ரீஸ்ரீயின் மஹாபிரஸ்தானம் படித்துக்கொண்டிருந்தார். அவனுக்கு எதிரில் பெரிய அண்ணன் ஜன்னல் திண்டின்மேல் அமர்ந்து வெளியே பார்த்து ஆர்வத்துடன் கேட்டுக்கொண்டிருந்தார்.

                “….. புஷ்கின், நிகோலாய் கோகோல், செக்கோவ் டால்ஸ்டாய்

                தஸ்தாயெவ்ஸ்கி, கார்க்கி, குப்ரின்

                ஷில்பா சாம்ராட்டுக்களின் வாழ்க்கைக்குப் பிறகு

                பாப சேற்றிலிருந்து தாமரைப் பிறந்தது    

                ரஷ்யா தொழிலாளர்களின் ஒரு சொர்க்கம்!

                ரஷ்யா! ரஷ்யா! ரஷ்யா! ரஷ்யா!..”

எனக்கு அப்போது கார்க்கியின் பெயர் தெரிந்திருந்தாலும்டால்ஸ்டாய், தஸ்தாயெவ்ஸ்கிபோன்றவர்களை நான் அறிவேன், அதன் பிறகு என் வயதிற்கு இவர்களைப் பற்றிப் பேசுவது பெரிது.

                அந்த நாளிலே பெரிய அண்ணனுக்கு ஸ்டாப் செலக்ஷன் கமிஷனிலிருந்து கடிதம் வந்தது. மத்திய அரசாங்க உத்தியோகம் வந்து குண்டூரு போய்விட்டார்.

                அப்படி இரண்டு அண்ணன்களும் உத்தியோகம் வந்து போனபிறகு வீட்டில் மீதியிருந்தது அம்மா அப்பா தவிர இரண்டு அக்காக்கள், நானும் ஹரியும்.

                நான் ஆறாம் வகுப்பிலிருந்து ஏழாம் வகுப்பிற்குச் சென்ற பொழுது எங்கள் அப்பாவிற்குமாச்சர்லாவில் இருந்து பிரகாசம் ஜில்லா அத்தங்கிக்கு டிரான்ஸ்பர் ஆனது. தெரிந்து தெரியாத சிறுவயது நினைவுகளிலிருந்துவெளியுலகம் பிறக்கும் வயது அது. அதுவரை மாச்சர்லா தவிர வெளியுலகம் ஒன்று இருக்கிறது என்று தெரியாது எனக்கு.

                                                                                                -000-

                விபரம் தெரிந்த நாளிலிருந்து மாச்சர்லாவில் இருந்து பழகிவிட்ட எனக்கு வெளியுலகம் தெரியாது. வருடத்துக்கு ஒரு முறையாவது மாச்சர்லாவிலிருந்து ரயிலில் குண்டூரில் உள்ள ஆச்சியின் ஊருக்குப் போவதைத் தவிர வேறு ஊரைத் தாண்டியதில்லை. அப்படி ஆறாம் வகுப்பில் இருக்கும்போதே அத்தங்கிக்கு வந்த நான் மறுபடியும் பின்னால் திரும்பி எப்பொழுதாவது மாச்சர்லா செல்லுவோம் என்ற கற்பனையிலேயே இருந்தவன். அப்படிப்பயத்துடனே சில வருடங்களாக எனக்குள்ளாகவே முதிர்ச்சியடையாத குழந்தையாகவே இருந்துவிட்டேன். எப்பொழுதும் நான் சுற்றிய மரங்கள், வயல்வெளிகள், மாச்சர்லாவில் நாங்கள் இருந்த அந்த மூன்று அறை வீடு, அங்கே காற்றில் வரும் வாகைப் பூ வாசனை, கோடைக்கால வெயிலில் தகதகவென்று காற்றில் ஆடும் வாகைக் காய்கள், ஐந்தாம் வகுப்பு வரை நான் படித்த தகரக் கொட்டகை பள்ளிக்கூடம் அடிக்கடி நினைவுக்கு வரும். இலைப்பச்சைசாயங்காலத்தில்செந்நிற மலர்கள் கொண்ட குல்மொஹர் மரத்தின்மேல் ராமர்பச்சைக்கிளியின் கீச்சொலி தூக்கத்தைக் கெடுக்கும். அப்படி மாச்சர்லாவை மறந்துபோவதற்கு நீண்ட நாட்கள் பிடித்தன.

                வகுப்பில் ஹரி என்னைவிட மூன்று வகுப்புகள் முன்னாடி. நான் ஆறாம் வகுப்பில் இருந்தபொழுது அவன் உயர்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்தவன். நாங்கள் இருவரும் ஒரே பள்ளியில் படித்தாலும் இருவரும் ஒரேமுறையில் படிக்கவில்லை. நான் உயர்நிலைப்பள்ளியில் எட்டாம்வகுப்பு வந்தபொழுது அவன் இன்டர் படிப்பதற்கு ஜூனியர் காலேஜிக்குப் போய்விட்டான்.

                எட்டாம் வகுப்பில் உயர்நிலைப்பள்ளியில் சேர்ந்தபொழுது முதல்நாள் ஹிந்திமாஸ்டர் புத்தகம் பார்த்து ஹிந்தி படிப்பவர்கள் அனைவரையும் ஒவ்வொருவராகப் படிக்கவைத்து முன்வரிசையில் அமரவைத்து வந்தார். எனக்கு வந்தும் வராததுமான அரைகுறை ஹிந்தியைப் படித்ததன் மூலம் இரண்டாவது வரிசையில் சேர்ந்தேன். அப்பொழுது அங்கே அமர்ந்திருந்த காக்குமாணி ஸ்ரீனிவாசராவ் “வா… இப்படி உக்காரு” என்று பக்கத்தில் அமரவைத்துக்கொண்டான். அப்படி அறிமுகமான ஸ்ரீனிவாசராவ் இப்பொழுதும் என்னை விட்டு விலகவில்லை.

                அப்பொழுது எனக்கு வீட்டில் சந்தமாமா படிக்கிற பழக்கம் இருந்த காரணத்தால் அந்தப் பத்திரிகைப் படிக்கிற ஸ்ரீனிவாசராவ் இன்னும் நெருக்கமானான். இருவரும் சந்தமாமா மட்டுமல்லாமல் அந்த நாட்களில் வந்த பாலஜோதி, பாலமித்ரா கூட வாங்கிப் படித்தோம். படிப்படியாக எங்கள் வாசிப்புப் பத்திரிகையிலிருந்து சின்னச் சைஸ் நாட்டுப்புற நாவல்கள், பாக்கெட் புத்தகங்கள் வரைக்கு வளர்ந்தது. சில நாட்கள் துப்பறியும் புத்தகங்கள் படித்த அத்தங்கியில் கிளைநூலகம் மூலமாக எங்கள் இருவரின் பழக்கம் சிறுவர் நாட்டுப்புற இலக்கியத்திலிருந்து விரிந்து மாதப்பத்திரிகையில் மொழிபெயர்ப்புக் கதைகள் படிப்பதற்கு விரிவடைந்தது. எங்கள் கற்பனைகள்புத்தகங்களிலிருந்து கவிதை வரை காற்றில் பறக்க ஆரம்பித்தன. நான் நக்னமுனியின் மரக்குதிரை மீது விழுந்தால் அவன் இஸ்மாயில் மரத்தின் கவித்துவம் பக்கம் திரும்பினான்.

                ஒருமுறை நானும் ஸ்ரீனிவாசராவும் ஏதோ கதை குறித்துப் பேசிக்கொண்டிருக்கும் பொழுது, சாய்வு நாற்காலியில் அமர்ந்து கேட்டுக்கொண்டிருந்த எங்கள் அப்பா, “பாறைகள் நிறைந்த இடத்திலிருந்து வரும் நீரூற்று மிகவும் இனிமையானது. வாழ்க்கை என்பது பாறையை விடக் கடினமானது. மேலும் வாழ்க்கையிலிருந்து பிறக்கும் இலக்கியம் கூட அவ்வாறே இனிமையானது” என்று கூறினார். அவர் நாற்காலியின் அருகில் முழங்கால்மீது கைகளை ஊன்றி நின்று அவர் கறுப்புச் சட்டக கண்ணாடியால் ஏதோ படித்துக்கொண்டு குளிர்ந்த நிழலில் சொன்ன அந்த வார்த்தைகளை என் மனதுக்குள் பதித்துக்கொண்டேன்.

                நான் ஒன்பதாம் வகுப்பில் இருந்தபொழுது ஒருமுறை எங்கள் அப்பா எங்கள் ஹரியண்ணாவிற்கு ஏதோ புத்தகம் போஸ்டலில் வந்ததென்று அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு அந்தக் கவரைக் கொண்டுவந்தார். வீட்டில் உள்ளவர்களுக்குத் தபாலில் வந்த கவரை அவர் திறந்து பார்ப்பது இல்லை. எங்காளு கவரைத் திறந்து பார்த்தால் அது ஏதோ மாதப்பத்திரிகை. அதில் அவன் எழுதிய கதை வந்திருந்தது. கதையின் பெயர் “வேட்டை”. பி.ஹரிப்ரசாத் என்ற பேருக்குக் கீழே துப்பாக்கிப்பிடித்திருக்கிற மனிதனின் படம் போட்டிருந்தனர். வீட்டிற்குப் பத்திரிகை வரும். அவன் கதை எழுதுவான் என்பது யாருக்கும் தெரியாது. அந்த ஒரு கதையால் எங்கள் வீட்டில் மட்டுமல்லாமல் தெருவில் கூட ஒரு சிறந்த எழுத்தாளர் ஆகிவிட்டார். வீட்டில் உள்ளவர்கள் சந்தோசப்பட்டார்கள். எங்கள் அப்பா கதையைப் படித்து “கதை நல்லாயிருக்கு” என்று பாராட்டினார். ஒருவர் மாற்றி ஒருவர் போட்டிப்போட்டுக்கொண்டுகதையைப் படித்தோம். அந்த நாட்களில் பத்திரிகையில் அவன் பெயரைப் பார்ப்பது வித்தியாசமாகத் தோன்றியது.

                அவன் அவ்வப்பொழுது தன்னுடைய நோட்டுப்புத்தகத்திலிருந்து காலி தாள்களைக்கிழித்துக் கதைகள் எழுதுவதற்கு ஒரு புதிய புத்தகத்தைத் தைத்துக்கொண்டான். அதன்பிறகு ஒன்றிரண்டு கதைகள் எழுதினான்; ஆனாலும் அவை எதுவும் பத்திரிகையில் வரவில்லை.

                அதன் பிறகு அவன் கதை எழுதுவதை விட்டுவிட்டுக் கிரிக்கெட் மேல் ஆர்வத்தை வளர்த்துக்கொண்டு இரண்டு மூன்றுமுறை சப்ளிமெண்டரி தேர்வுகள் எழுதி மிகுந்த சிரமப்பட்டு இன்டர் முடித்தான்.

                அதன் பிறகு பெரிய அக்காவிற்குத் திருமணம் ஆகி சின்ன அக்கா கல்லூரிப் படிப்புக்காகக் குண்டூரு போனதால் வீட்டில் அம்மா, அப்பா, அவன், நான் மட்டும் மிஞ்சியிருந்தோம். அவன் எப்பொழுதும் நண்பர்களோடு, விளையாட்டு என்று வெளியே சுற்றிக்கொண்டிருப்பான். பெரிய அண்ணன் எப்பொழுதாவது சனி, ஞாயிறு தினங்களில் குண்டூருலிருந்து அத்தங்கி வருவார். இரண்டாவது அண்ணனுக்கு வருடத்திற்கு இரண்டு மாதங்கள் விடுமுறை. வீட்டுக்கு ஒருவர் வந்தால் இன்னொருவர் வருவது கிடையாது. வீட்டில் பண்டிகைகள், பூஜைகள்,சென்டிமென்ட் போன்றவை என்றோ போய்விட்டன. வருடத்தில் எல்லாரும் சேர்வது ரொம்பக் குறைவு. வீட்டில் மிஞ்சியிருப்பது நான் ஒருவன் தான். ஞாயிறு அன்று ப்ளாக் அண்டு ஒயிட் டீவி தூர்தர்ஷனில் இந்திய பிராந்திய சினிமா மாத்திரம் பார்ப்பேன். அது முடிந்ததும் மூன்று மணிக்கு வானொலியில் ஆகாசவாணி நாடகம். பெரிய அண்ணன், சின்ன அண்ணன் இல்லாத காரணத்தால் வீட்டில் ஞாயிற்றுக்கிழமை சந்தடி குறைந்து போனது.

                வயது அதிகரித்ததின் காரணமாக வேறுவேறு ஊர்களில் உத்தியோகம் செய்து தனியாக இருந்ததன் காரணமாக எல்லாருக்கும் சொந்த அபிப்ராயங்களும் ஆளுமைகளும் உருவாகின.

                பெரிய அண்ணன் குண்டூரிலிருந்த காரணத்தால் எப்பொழுதாவதுஅத்தங்கிக்கு வரும்பொழுது சுவஜன்னா, அருணாதாரா பத்திரிகைகளை வாங்கிக்கொண்டுவருவார். எங்கள் வீட்டில் கார்க்கியின் புத்தகங்களுக்குப் பல நாட்கள் பிறகு, கொடவாடிகண்டி குடும்பராவு, ராசகொண்ட விஸ்வநாத சாஸ்திரி, மிகைல் ஷோலகோவ், சேகுவாரா புத்தகங்கள் சேர்ந்தன.

                அப்படிப்பட்ட நாட்களில் ஒருமுறை குண்டூரிலிருந்து பெரிய அண்ணன், தேஜ்பூரிலிருந்து  சின்ன அண்ணன் வந்திருந்தார்கள்.

                அவர்கள் இருவர் இடையிலிருந்த கொஞ்சநஞ்ச பேச்சுகளும் குறைந்துவிட்டன. வீட்டிலிருந்தவரையிலும் முகம்கொடுத்துப் பேசவில்லை.

                அந்த ஞாயிற்றுக்கிழமை மத்தியானம் அவர்கள் இருவரும் வீட்டிலிருந்தபொழுதுதூர்தர்ஷனில்அடூர்கோபாலாகிருஷ்ணனின்“முகாமுகம்” மலையாள சினிமா வந்தது. நீண்ட காலங்களுக்குப் பிறகு இருவரும் வீட்டில்அமர்ந்து அந்தச்சினிமாவைப் பார்த்தனர்.

                ஒருவிதத்தில்அந்தச் சினிமா கம்யூனிஸ்ட் கட்சி மீது வைத்த ஒரு விமர்சனம். மொத்தம் ஸ்ரீதரன் என்ற தொழிற்சங்கத் தலைவனைச் சுற்றி நகர்கின்றது. கம்யூனிஸ்ட் கட்சியில் செயல்பட்ட ஸ்ரீதரன், தொழிற்சாலை உரிமையாளர் கொலைசெய்யப்பட்ட பிறகு தலைமறைவாகிறான். அவன் இறந்துவிட்டான் என்றே பலர் நினைத்தனர்.

                ஸ்ரீதரன் ஜெயிலிலிருந்து வெளியே வந்ததும் வெளியில் எல்லாம் மாறியிருந்தது. கட்சி சொல்வதற்கும் செய்வதற்கும் எந்தப் பொருத்தமும் இல்லை. கோட்பாட்டை நம்பி கட்சியை நம்பியவர்கள் குழப்பத்தில் உள்ளனர், விசித்திரம் என்னவென்றால் ஜெயிலிலிருந்து வெளியே வந்த ஸ்ரீதரன் யாரிடமும் பேசாமல் சும்மா உறங்கிக் கொண்டே இருக்கிறான். யார் என்ன பேசினாலும் பதில் சொல்வதில்லை. கேட்டுக்கொண்டே அப்படியே தூங்கிவிடுவான். அவனுக்கு பெருந்தூக்க வியாதி பீடித்திருந்தது போலும். கடைசியில்  வீட்டில் பணத்தைத் திருடிக் குடிக்கத் தொடங்கினான்.

                ஆரம்பத்திலிருந்துஸ்ரீதரனிடமிருந்து கட்சி சித்தாந்தங்களைஏற்றுக்கொண்ட சுதாகரன் என்ற நபர் கட்சியின் கொள்கைகளால் சோர்வடைந்து தன் கவலைகளை யாரிடம் சொல்வதென்று தெரியாமல், யாரை ஏற்றுக்கொள்வது என்று தெரியாமல் ஸ்ரீதரன் எதற்குச் சும்மாவே  தூங்குகிறானோ, எதற்கு தன்னை ஒரு பொருட்டாகக் கருதவில்லை என்று புரியாமல் மேலும் கீழும் யோசித்தான்.

                கடைசியில் சுதாகரனைக் கட்சி புறக்கணித்தது. ஸ்ரீதரன் கையில் ஒரு ஸ்டேட்மெண்ட் கொடுத்துக் கையெழுத்து வை என்று கேட்டனர். ஸ்ரீதரன் பதில் சொல்லாமல் அமர்ந்துவிட்டான். அன்றைக்கு இரவு ஸ்ரீதரன் கொலை செய்யப்பட்டான்.

                கடைசியில் தெருவில் கட்சித் தொண்டர்கள் கொடியைப் பிடித்துக்கொண்டு ஊர்வலம் சென்று “ஸ்ரீதரன் வாழ்க”, “தொழிலாளர்களின் ஒற்றுமை மலரவேண்டும்” போன்ற முழக்கங்களோடு சினிமா முடிகிறது.

                இந்தச் சினிமா சின்ன அண்ணனுக்குஎதற்கோநன்றாகப்பிடித்துப்போனது.

                எல்லாரும் சினிமா பார்த்துக்கொண்டிருக்கும் பொழுதே “இந்த ஸ்ரீதரன் என்றால் யாருமில்லை. கம்யூனிஸ்ட் கட்சிதான்” என்றார்.

                “உனக்கு ஏன் அப்படித் தோன்றியது?” என்றார் பெரிய அண்ணன்.

                கம்யூனிஸ்ட் கட்சி சுயவிமர்சனத்தைப்புறக்கணித்தது. அதற்கு அடூர் கோபாலகிருஷ்ணன் ஸ்ரீதரனின் அதிதூக்கம் அதன் வீழ்ச்சிக்கு உருவகமாகச் சொல்லியிருக்கிறார். பார்த்தால் யாருக்காயினும் எளிதாகப் புரிந்துவிடும்” என்றார்.

                பெரிய அண்ணன் அமைதியாக இருந்துவிட்டார்.

                சினிமா முடிந்ததும் அவர்கள் இருவரிடமும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்பொழுதே உள் அறையிலிருந்து வெளியே வந்த அப்பா “எதுக்கு இந்தச் சண்டை எப்ப பார்த்தாலும் ஒங்கரெண்டு பேருக்கும்?” என்று இருவரையும் ஒருசேரத் திட்டினார்.

                அவர் மறுபக்கம் சென்றதும் “நீ ஒழுக்கங்கெட்ட மனுசன். எல்லாம் உனக்கு அப்படித்தான் தெரியும்” என்றார் பெரிய அண்ணன்.

                சின்ன அண்ணன் முரட்டுத்தனமாக முன்னோக்கிச் சென்றான். அப்பொழுதுதான் உள்ளே சென்ற அப்பா மறுபடியும் ஏதோ வேலை நிமித்தமாக முன்னறைக்கு வந்து “என்னடா ஒங்க சண்டை?” என்றார் கோபத்துடன். அவர்களைப் பார்க்காமல் விட்டிருந்தால் அன்றைக்குப் பெரிய சண்டையாகியிருக்கும்.

                சின்ன அண்ணன் கோபத்தை அடக்கிக் கொண்டு வெளியே போனார்.

                இராத்தரி பத்து மணிக்குக் குண்டூரு செல்ல வேண்டிய பெரிய அண்ணன் பையை எடுத்துக்கொண்டு நாலு மணிக்கே பேருந்துநிலையத்திற்குக் கிளம்பினார்.

                அன்றைக்கு மத்தியானம் நாங்கள் வானொலி நாடகம் கேட்கவில்லை.

                அதன் பிறகு அவர்கள் இருவரும் பேசிக்கொண்டதை நான் எப்பொழுதும் பார்க்கவில்லை.

                விமானப்படையில் வேலை கிடைத்தபிறகுகிருஷ்ணய்யா படம் வரைவதைவிட்டுவிட்டார். அவர் எழுதிய “காட்டில் ஒரு சிறுவன்’ நாவல் எங்கேயோ போய்விட்டது. வீட்டில் எவ்வளவு தேடினாலும் எனக்குத் தென்படவில்லை.

                                                                                                -0000-

                வீட்டில் ஒருவர் பின் ஒருவராகக் காலேஜ் படிப்புக்கு நுழைந்த காரணத்தால் எங்கள் அப்பா ‘எம்ப்ளாயின்மெண்ட் நியூஸ்’ வரவைத்தார். அந்த நாட்களில் தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (JNU) வெளிநாட்டு மொழிகளில் ஐந்து ஆண்டுகள் எம்.ஏ கோர்ஸ் இருந்தது. எம்ப்ளாயின்மெண்ட் நியூஸில் அந்தக் கோர்ஸ்கள் பற்றிய நோட்டிபிகேசன் வந்தது. அதன் படி பல்கலைக்கழகத்தில் பிரஞ்சு, ஜெர்மன், ரஷ்யன், ஜப்பானிஷ் மொழிகளைப் படிப்பதற்கு அந்தக் கோர்ஸ்களில் சேரமுடியும்.

                சும்மா முயன்று பார்க்கலாம் என்று பெரிய அண்ணன் விண்ணப்பத்தைக் கொண்டுவந்து ஹரியின் கைகளில் கொடுத்தார். நுழைவுத்தேர்வு எழுதிய சில நாட்களில் ஹரி தேர்வு அடைந்தான் என்று பல்கலைக்கழகத்திலிருந்து கடிதம் வந்தது. பெரிய அண்ணன் ரஷ்யன் மொழியைக் கற்க வற்புறுத்தினார். அவருக்குக் கம்யூனிஸ்ட் சோவியத் ரஷ்யா என்றால் விருப்பம்.

                அண்ணன் சொன்னதுபோலவே ஹரி எம்.ஏவில் ரஷ்யன் மொழி, இலக்கியங்களை எடுத்துக்கொண்ட பிறகு விரைவில் சேர்க்கைக் கடிதம் எடுத்துக்கொண்டு தில்லிக்குப் போனான்.

                இன்டர்மீடியட் வரை அப்படியே இருந்த அவனின் கல்வி, தில்லியில் பல்கலைக்கழகத்தில் சேர்ந்ததும் நிறையவே மாறிப்போனது. வகுப்பில் அவனே மெரிட்ஸ்டுடண்ட். அவனுக்கு ரஷ்ய மொழி சொல்லிக் கொடுக்கும் பேராசிரியர் நன்றாக நெருக்கமானார்.

                பல்கலைக்கழகத்தில்முதலாண்டு முடிந்ததும் தில்லியில்சோவியத் ரஷ்ய எம்பஸிகாரர்கள்ரஷ்யன் கற்கிற சில மாணவர்களைத் தேர்வு செய்து அழைத்துச் செல்வதற்குப் பல்கலைக்கழகத்தில் பேச்சுவார்த்தை நடத்துகிறது என்றும் அந்தப் பட்டியலில் ஹரி பேர் கூட இருக்கிறது என்று தெரிந்தது. இந்த விசயம் தெரிந்ததும் வீட்டில் சந்தோசப்பட்டனர்.

                ‘தம்பி கம்யூனிஸ்ட் ரஷ்யாவிற்குப் போகப்போகிறான் என்று’ பெரிய அண்ணன் கொண்டாடினார்.

                அவன் மாஸ்கோ சென்ற ஒரு வாரத்தில் அவனிடமிருந்து இன்னொரு கடிதம் வந்தது. அவர்கள் அனைவரும் மாஸ்கோ சென்றதும் அங்கிருந்து சில மாணவர்களை மறுபடியும் தேர்வு செய்து சோவியத் ரிப்பப்ளிக்கில் இருந்து பலதரப்பட்ட பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைத்தனர். அதன் ஒருபகுதியாக அவனை உக்ரைன் ப்பளிக் தலைநகரான கீவ் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பிவைத்தனர். அவன் கீவ்விலிருந்தே கடிதம் எழுதினான்.

                சிலகாலங்கள் கழித்துத் தபாலில் எங்களுக்குக் கீவ் பல்கலைக்கழகப் போட்டோக்கள் வந்தன. எங்கள் அப்பா அந்தப் போட்டோக்கள் ஒவ்வொன்றையும் எடுத்துக் காட்டிக்கொண்டிருந்தபொழுது நாங்கள் ஆவலுடன் பார்த்தோம். நான் இதுவரை பார்த்திராத தொலைதூர நகரத்தில் எடுக்கப்பட்ட அந்தப் புகைப்படங்களைப் பார்ப்பதே ஒரு விந்தை. போட்டோவில் அவன் ஒரு பஜாரில் மக்கள் கூட்டத்துக்கு நடுவில் நின்றிருந்தான். மேலே ஆகாயம் மேகமூட்டத்துடன் இருப்பது போல் தெரிந்தது. அதில் காணப்பட்ட மனிதர்கள் எல்லாரும் குளிர் அங்கி அணிந்துகொண்டு தலையில் தடித்த தொப்பியும் அணிந்துகொண்டிருந்தனர். தடித்த அந்தக் காகிதப் புகைப்படங்களைப் பிடித்துக்கொண்டு பார்ப்பதே நம்பமுடியாததாக இருந்தது. அப்பொழுதிலிருந்து எனக்குத் தபாலில்சோவியத்ஸ்டாம்புகள், போஸ்ட் கார்டு சைஸில் இருக்கிற புஷ்கினின் ஓவியங்களுடன் வாழ்த்து அட்டைகள் வந்தன. அவைகளை நான் என் நண்பர்களிடம் காட்டிப் பெருமைப்பட்டுக்கொள்வேன்.

                என் நண்பர்கள் “உன் ரஷ்ய அண்ணன் என்ன செய்கிறார்” என்று கேட்பார்கள். அது என்னமோ நானே ரஷ்யா போனது போலப் பார்ப்பார்கள். அமெரிக்கா சென்றவர்களைக் கண்ணுக்குத் தெரிந்த அளவுக்கு மற்ற நாடுகளுக்குச் சென்றவர்கள் குறித்துத் தெரியாது. என் நண்பர்களுக்கு என்ன சொல்லவேண்டுமோ எனக்குத் தெரியவில்லை. அந்த நாட்களிலே சிறுபிராயத்தில் பார்த்த கார்க்கியின் ‘தாய்’ நாவலைப் படித்து முடித்தேன். கார்க்கி நாவலை விட அவர் எழுதிய சுயசரிதை, கதைகள் எனக்கு அதிகம் பிடித்திருந்தது.

                அந்த இடைப்பட்ட காலங்களில் அத்தங்கிக்கும், குண்டூருக்கும் இரண்டு மூன்றுமுறை போய்வர வேண்டியிருந்தது. அப்படி ஒருமுறை குண்டூரில் பெரிய அக்காவின் வீட்டுக்குப் போனால் பெரிய அண்ணன் அங்கே இருந்தார். அவரோடு கூட இன்னொருவர் இருந்தார்.

                நான் சென்றதும் அண்ணன் உள்ளே அழைத்துச் “சின்னவனே… இதுதாண்டா உன் மதினி” என்றார்.

                நான் அவளைப் பார்த்து “ஓஹோ… அப்படியா” என்றேன். அதற்குமேல் அதிகமாக அவளிடம் பேசவில்லை. நான் எப்பொழுதும் அவளை மதினி என்று கூட அழைத்தது இல்லை. அதில் எந்த அவமரியாதையும் எதுவும் இல்லை. கொஞ்சபேரு அப்படித்தான். அதில் நானும்.

                அவர்களது காதல் திருமணம் இல்லை. சாதிகளுக்கிடையிலான திருமணம். அவனுக்கும் அவளுக்கும் யார் மூலமாகவோ அறிமுகம். அவளுக்கு மத்திய அரசு பணியில் உத்தியோகம். திருமணம் ஆனதும் ஹைதராபாத் போனார்கள்.

                நான் இன்டர் முடித்ததும் படிப்பு சீராக அமையவில்லை. நான் சீராலா காலேஜில் பி.எஸ்ஸி படிக்கிறேன் என்று சண்டையிட்டேன். குறைந்தபட்சம் ஓங்கோலிலாவது படிக்கிறேன் என்று வலியுறுத்தினேன். என் வீட்டில் உள்ளவர்கள் அத்தங்கி அருகில் உள்ள சிங்கரகொண்டா டிகிரிகாலேஜில் பி.ஏ படி இல்லையென்றால் படிப்பை நிறுத்திக்கோ என்றனர். நான் கோபத்தில் எங்கும் சேராமல் நாகார்ஜூனாபல்கலைக்கழகத்தில்தொலைதூரப்படிப்பில்பி.ஏ தத்துவம் ஓர் ஆண்டு மட்டுமே படித்தேன். இதற்கிடையில் டைப்ரைட்டிங் லோயர் முடித்துச் சுருக்கெழுத்தில் சேர்ந்தேன்.

                ஏறக்குறைய தொண்ணூறுகளில் என் வாழ்க்கை முழுக்க அலைச்சலில் தாறுமாறு ஆகிவிட்டது. எங்கள் அப்பாவிற்கு அத்தங்கியிலிருந்து கிருஷ்ணா ஜில்லா குட்லவல்லேருக்கு மாற்றல் ஆன காரணத்தால் விருப்பம் இல்லாவிட்டாலும் அத்தங்கியைவிட்டுச் செல்லவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. முதலிலிருந்து விசாலமான அரசு குவாட்டரசில் வளர்ந்த நாங்கள் குட்லவல்லேரில் பஜாரில் இறுக்கிப்பிடித்த வீடுகள் மத்தியில் வசிக்கவேண்டியிருந்தது. அங்கிருந்துகொண்டேசுருக்கெழுத்துலோயர்தேர்ச்சிபெற்றேன்.

                இதற்கிடையில் சோவியத் ரஷ்யாவில் கோர்பசேவ் அதிகாரத்தில் பெரெஸ்ட்ரோயிகா மற்றும் கிளாஸ்டோஸ்ட் சீர்திருத்தங்களின் விளைவாகப் பல மாற்றங்களைக் காணத் தொடங்கின. கிழக்கு ஐரோப்பாவில் சோவியத் யூனியனில் நடக்கிற விளைவுகளைப் பார்த்து உலகம் முழுவதும் உள்ள கம்யூனிஸ்ட்டுகள் பீதியடைந்த காலமது.

                1990 ஆகஸ்ட்டில் உக்ரைனில் லெனின் சிலையைக் கிரேனால் இடித்தார்கள் என்று டீவியில் நாங்கள் எல்லாரும் பார்த்துக்கொண்டிருந்தோம்.

                வரலாற்றின் போக்கு யார் கைகளிலும் இல்லை என்றார் டால்ஸ்டாய் போரும் அமைதியும் நாவலில். ‘சரித்திரம் தன் வழியில் தான் செல்கிறது. மனித இயல்புடன் அதற்கு வேலை இல்லை. பொருளாதார, அரசியல் நிலவியல் சாஸ்திர தர்மத்தோடு விண்ணப்பிப்பது வரலாற்றுத் தர்மத்துக்கு முரண்பாடானது’ என்கிறார் அவர்.

                1991 கிறிஸ்துமஸ் பிறகு ரிப்பப்ளிக்குகள் சுதந்திரப் பிரகடனம் அறிவித்தபடியால் சோவியத் யூனியன் உடைந்துவிட்டது. சோவியத் ரிப்பப்ளிக்குகள் வரிசையாகச் சுதந்திரத்தைப் பிரகடனப்படுத்தின. கீவ்வைத் தலைநகராகக் கொண்டு உக்ரைன் சுதந்திர தேசமானது.

                சோவியத் யூனியன் வீழ்ச்சிக்குப்பிறகு பெரிய அண்ணனிடம் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டன. வயதில் இருக்கின்ற குறைந்தபட்சம் எழுகிற ஆசைகள் கொஞ்சம் வயதானதும் மறைந்துவிடும். அவர் படித்த புத்தகங்கள், இலக்கியங்களைவிடச்சிறுவயதிலிருந்து அவர் பார்த்த வறுமை அவரை நன்றாகப் பாதித்திருக்க வேண்டும். அந்த வறுமையின் மேல் அவர் பகையைத் தீர்த்துக்கொள்ளத் தொடங்கினார். பெரிய அண்ணனின் கல்லூரி நண்பர் சுந்தரராவ் தற்கொலை செய்துகொண்டார் என்று தெரிந்தது.

                அந்தநாளிலே என் கைகளுக்கு டால்ஸ்டாய் புத்தகங்கள் வந்தன. முதலில் கதைகள் அல்லாமல் அவர் எழுதிய ‘அன்னா கரீனினா’ தொடங்கினேன். டால்ஸ்டாய் அர்த்தம் செய்து கொண்ட வாழ்க்கை விரிவானது, முழுமையானது என்று உணர்ந்துகொண்டேன். அந்த நாவலில் லெவின் என்ற பாத்திரத்தின் வழியாக வாழ்க்கையின் சாராம்சத்தைக்காட்டுவதற்கு முயன்றார் என்று தெரிந்தது. அவரின் எழுத்தின் வடிவ அடிப்படையில் கலைரீதியாக, சாராம்சத்தில் ஆன்மீகம் தெரிந்தது.

                படிப்படியாகக் கார்க்கி மறைந்து டால்ஸ்டாய் முன்னுக்கு வந்தார். மரக்கிளைகள் வளர்ந்து விசாலமான ஆகாசத்தைநோக்கி ஊடுருவியதுபோல் வாழ்க்கை விதவிதமான பரிமாணங்களில் விரிவடைகிறது. விசாலமாகிக் கொண்டிருந்தது. அதன் பிறகு ‘இவான்இலிச் மரணம்’, ‘இரவு உணவுக்குப் பிறகு நடனம்’ கதைகள் படித்தபிறகு மரணத்திலிருந்து பார்த்தால் மனித வாழ்க்கையில் இருக்கிற வரம்புகள், இருப்பிலிருந்து பார்த்தால் இயற்கையில் காணப்படும் முடிவிலி தன்மைகள் இன்னும் அதிகம் புரிந்தது.

                ஹரி கீவ் சென்ற நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு எங்கள் இரண்டாவது அண்ணனின் திருமணம் ஏற்பாடானது. திருமண வேலைகளுக்கு எல்லாம் நானே திரியும் படியாக வந்தது. இதற்கிடையில் மற்றொரு நல்ல செய்தி கிடைத்தது. கீவிலிருந்து எங்கள் ஹரி திருமணத்திற்கு இந்தியாவிற்கு வருவதாகப் பேச்சு வந்தது. வீட்டில் சின்ன அண்ணனிற்குத் திருமணம், முன்னால் இருந்ததுபோல எல்லாரும் மறுபடியும் ஓரிடத்தில் சந்திப்பது, வாழ்க்கை அழகாக, முழுமையாகத் தோன்றியது. முழுமையையும் உணர்த்தும் ஒன்று, இன்னும் கொஞ்சம் அதிகமாகத் தெளிவாகத் தெரிந்தது. இதையெல்லாம் பார்க்கும்பொழுது டால்ஸ்டாய் இன்னும் அதிகமாக நெருங்கினார் போல் தோன்றியது.

                ஒரு பக்கம் வீட்டில் திருமணத்திற்கான பரபரப்பு. இன்னொருபக்கம் மாஸ்கோவிலிருந்து தில்லி வரை ஹரியின் பயணம். அவன் தில்லியை அடைந்த பிறகு நாடு முழுவதும் பாரத் பந்த் தொடங்கியது. அவன் ஏதோ ஒருவகையில் தில்லியிலேயே ப்ளைட் பிடித்து ஹைதராபாத் வந்தான். ஹைதராபாத்திலிருந்து காரில் குட்லவல்லேருக்குப் பயணம். பெரிய அண்ணன் விஜயவாடா வரை ஏதோ ஒரு வகையில் சென்று அவனோடு காரில் வந்தான்.

                ஏறக்குறைய ஏழெட்டு வருடத்திற்குப் பிறகு அவனைப் பார்ப்பது. முழுதாக ஒல்லி ஆகிவிட்டான். புதிதாக மீசை எடுக்கிற பழக்கம் வந்தது.

                பெரிய அண்ணன் அவன் வந்த நாளில் ராத்திரி முன்னறையில் பாய் மீது படுத்துக்கொண்டு தேம்பித் தேம்பி அழுவதைப் பார்த்தேன். தெரிந்தது என்னவென்றால் ஹரி கீவி பல்கலைக்கழகத்தில் அவனின் ஜூனியர் பெண் யாரையோ விரும்பினான். இங்கே திருமண ஆகிப்போனதும் அவன் உக்ரைனுக்குத் திரும்பப் போகவேண்டும். போன பிறகு இனி இந்தியா வரமாட்டான். அதற்காகவே பெரிய அண்ணன் கவலைப்பட்டார்.

                அவன் மறுபடியும் வந்து பின் செல்லப்போகிறான் என்பதைத் தெரிந்த எங்கள் அப்பா, ‘படிக்கணும்னு போனவன், சொன்னது என்ன செய்யுறது என்ன? என்னடா இதெல்லாம்? என்று கோபப்பட்டார். அதுவரைக்கும் அவருக்கு அவனின் காதல் விவகாரம் தெரியாது.

                அவன் அவரின் பேச்சைக் கேட்காதது போலப் பதில் சொல்லவில்லை.

                “அப்புறம் அங்கேயே இருக்கப்போறயா? இங்க வரமாட்டாயா?

                “…. …. … …..”

                “அங்கயே இருக்கணும்னு நினைக்கிறவன் எதுக்கு இங்க வந்த? வராம அங்கயே இருந்திருக்க வேண்டியதுதானே. இனி எங்கக்கிட்ட என்ன வேலையிருக்கு உனக்கு? என்று எங்கள் அப்பா கோபத்தோடு வெளியே போய்விட்டார். எங்கள் அம்மாவின் கண்களில் கண்ணீர் வடிந்தது.

                அந்த வேளையில் எங்கள் அனைவரையும் அமரவைத்து அவன் சொன்ன விசயம் என்னவென்றால் அவன் திருமணம் செய்ய இருக்கக் கூடிய பெண்ணின் பெயர் விக்டோரியா பாபநோவா. பல்கலைக்கழகத்தில் அவனுக்கு ஜூனியர். அவளைப் பற்றி வீட்டில் உள்ளவர்களுக்குச் சொன்னபொழுது ‘விகா’ என்று சொன்னான். அவர்கள் இருப்பது கீவுக்குத் தூரத்தில் இருக்கின்ற க்ரமென்ஸ்க்கீ(Khemelnitsky) என்ற ஒரு நகரம். அவளுக்குத் தந்தையில்லை. தாய் இருந்தாள். அந்த வயதான அம்மாவிற்குக் கொஞ்சம் அரசாங்க பென்சன் வந்துகொண்டிருக்கிறது என்றும். அதனை ஆதாரமாகக் கொண்டு அவர்களின் குடும்பம் நடக்கிறது என்றும் சொன்னான்.

                சிறிய அண்ணன் திருமணத்திற்குப் பிறகு உறவினர்களோடும் நண்பர்களோடும் சுற்றுவதற்கே நேரம் சரியாகிப்போனது. எனக்கோ அவனோடு அமர்ந்து எத்தனையோ விசயங்களைப் பேசவேண்டும் போலிருந்தது.

                எனக்குத் தெரிந்த கார்க்கி, டால்ஸ்டாய் படைப்புகளை அவன் வாங்கிவரவில்லை. ஒருமுறை நான் ‘டால்ஸ்டாய்’ என்றபொழுது வாய்மீது விரலை வைத்துக்கொண்டு தப்பு என்றவாறு ‘தோலுஸ்தாய’; என்று சரிசெய்தான். இன்னொருமுறை செகோவ் குறித்துப் பேச்சை எடுத்ததும் ‘செகோவ் இல்லை… சேகோவ்’ என்று சொல்லவேண்டும் என்று சொன்னான். என்னைச் சிரித்த முகத்துடன் ஆச்சரியமாகப் பார்த்து அலெக்சாண்டர் புஷ்கின் கவித்துவத்தைப் படிப்பது இன்னும் பெரிய அனுபவம் என்று, அவைகளை ரஷ்யனிலிருந்துஆங்கிலத்தில் மொழிபெயர்ப்புச் செய்வது கஷ்டம் என்று, இனி எந்த ரஷ்ய நாவலாகயிருந்தாலும் தெலுங்கைவிட அூங்கிலத்தில் படிப்பது நல்லதென்று சொன்னான்.

                நான் புஷ்கின் பேரைக் கேள்விப்பட்டிருக்கிறேனே தவிரப் படித்தது இல்லை.

                சோவியத் யூனியன் வீழ்ச்சியடைந்தது பற்றி அவன் ஏதாவது சொல்வானோவென்று பலமுறை கேட்பதற்குமுயன்றேன். அவன் இருக்கிற நாடு எப்படி இருக்கிறதோ, அங்கே மக்கள் எப்படி இருக்கிறார்களோ … இப்படி எத்தனையோ விசயங்களைக் கேட்டுத் தெரிந்துகொள்ளவேண்டும் என்பது என் விருப்பம்.

                ஹரி சீக்கிரமே உக்ரைன் சென்றுவிட்டான். அதன் பிறகு அவன் எப்பொழுது பல்கலைக்கழகத்தில் படிப்பை முடித்து விக்டோரியாவைத் திருமணம் செய்துகொண்டானோ தெரியாது. சில காலங்களுக்குப் பிறகு அவனுக்கு மகன் பிறந்தான் என்றும், மகனுக்கு ‘விஜய்’ என்று பேர் வைத்தான் என்றும் கடிதம் எழுதினான். அதன் பிறகு எப்பொழுதாவது தடிமனான கடிதங்களோடு குழந்தையின் புகைப்படங்களும் சேர்ந்து வரும்.

                அவன் இந்தியாவிலிருந்து திரும்பி உக்ரைனுக்குக் கிளம்பிப்போன இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு எங்கள் அப்பா குட்லவலேரிலேயே ஓய்வு பெற்றார். அங்கிருந்து அவரின் ஓய்வு வாழ்க்கைத் தொடங்கியது. அவர் ஓய்வு பெறுவதற்கு முன்பே ஹைதராபாத் வந்தேன். அங்கிருந்து என் வாழ்க்கை கடினமாகத் தொடங்கிவிட்டது. எங்கள் அம்மாவும் அப்பாவும் ஹைதராபாத் வந்து என் பெரிய அண்ணனுடன் தங்கியிருப்பது எனக்குப் பிடிக்கவில்லை.

                நான் ஹைதராபாத் வந்த தொடக்கத்தில் மத்திய பலக்கலைக்கழக விடுதியில் என் நண்பன் காக்குமாணி ஸ்ரீனிவாசராவுடன் இருந்து அங்கிருந்த தட்டச்சுப் பயிலகத்தில் ஜாப் வொர்க் செய்வதற்காகத் தினந்தோறும் அபிட்ஸ் வருவேன். அதன்பிறகு கொஞ்ச நாட்களுக்குப் பிறகு வித்யாநகரில் ஒரு வழக்கறிஞரிடம் ஸ்டெனோவாகப் பணிசெய்து உஸ்மானியா பல்கலைக்கழகத்துக்கு அருகில் குயவர் காலனியில் வீடு வாடகைக்கு எடுத்துக்கொண்டு இருந்தேன். அந்தப் பகுதிநேர உத்தியோகத்தில் தாக்குப்பிடிக்க முடியாமல் ராமோஜி பிலிம் ஸ்டுடியோவில் இரண்டு மூன்று மாதங்கள் பணி செய்து அங்கே இருக்க முடியாமல் இரண்டு மூன்று உத்தியோகங்களுக்குப் பிறகு உப்பல்லாவில் கங்கப்பா தொழிற்சாலையில் சேரும் வரை எல்லாம் மேடு பள்ளம்தான். என் வாழ்க்கையில் என்றைக்கும் பார்க்காத பசி, தரித்திரம் அந்த நாட்களில் அனுபவித்தேன்.

                அதற்குள் ஹரியைப் பார்த்து இரண்டு மூன்று வருடங்கள் கடந்துபோனது. விஜய் பிறந்த நான்கைந்து வருடங்களுக்குப் பிறகு இன்னொரு மகன் கூடப் பிறந்தான் என்று தெரிந்தது. அந்த இரண்டாமவனின் பெயர் ‘தியோடர்’ என்று வைத்தது தெரிந்தது.

                அதற்குள் அவன் இந்தியாவிலிருந்து போய் ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டன.

                அந்த நாட்களில் இந்தியாவிலிருந்து ரஷ்யாவிற்குச் சென்றவர்களின் சங்கதி எதாவது இருந்தாலும் தெரிந்ததே தவிர, உக்ரைனில் இருக்கிற இந்தியன் பற்றிச் சரியாகத் தெரிவதில்லை.

                ‘திருமணமாகிவிட்டது அல்லவா. சம்சாரத்தில் விழுந்து வீட்டுக்குக் கடிதம் எழுதுவதைக் கூட மறந்துவிட்டான்’ என்று நினைத்துக்கொண்டோம். குறைந்தபட்சம் ஃபோன் செய்து பேசலாம் என்றால் அந்த நாட்களில் மொபைல் போன் கிடையாது. எங்களிடம் லேண்ட்லைன் கிடையாது. நாங்கள் செய்யலாம் என்று நினைத்தால் அவன் இருக்கிற வீட்டில் போன் இருக்கிறதோ இல்லையோ தெரியாது. இருந்திருந்தால் ஏதோ ஒரு வகையில் பேசாமல் எப்படியிருப்பான்?

                எங்கிருந்தாலும் நலமாக இருந்தால் போதும் என்று இருந்துவிட்டோம்.

                ஏறக்குறைய ஆறேழு வருடங்களாக அவனைப் பற்றி எதுவும் தெரியாமல் கழிந்துவிட்டது.

                2006 ஆகஸ்டில் எங்கள் அம்மா காலமாகிவிட்டார். ஓர் இருள்சூழ்ந்த மாலையில் அமர்ந்திருந்தவர் அமர்ந்திருந்தபடியே கண் மூடிவிட்டார்.

                அவனுக்குத் தகவல் கிடைக்கவில்லை.

                அந்த விசயத்தைச்சொல்வதற்கு எங்களிடம் அவனின் முகவரி இல்லை. தகவலைச் சொல்வதற்கு ஃபோன் இல்லை.

                அவன் இல்லாமலே எங்கள் அம்மாவின் ஈமக்கிரியைகள் நடந்தேறின.

                                                                                                -000-

                அதற்குள் அவனைப் பார்த்துப் பத்துவருடங்கள் ஆகிவிட்டன. கடைசியாகப் பார்த்தது 1993இல்.

                என்ன ஆச்சு அவனுக்கு? அவன் எங்கே இருக்கிறான்? அவன் பிள்ளைகள் எப்படி இருக்கின்றனர்? ஏதாவது உத்தியோகம் செய்துகொண்டிருக்கிறானா? குடும்ப வாழ்க்கையை அவன் எப்படி நடத்துகிறான்?

                உண்மையில் உயிரோடு இருக்கிறானா?

                எங்களுக்கு எப்படித் தெரியும்?

                சில வருடங்களாக எங்கள் அனைவருக்கும் இதே யோசனைகள். வீட்டில் இதே விவாதங்கள்.

                அப்பொழுது உலகம் முழுவதும் மின்னஞ்சல் புழக்கத்திற்கு வந்தது. அனைவரும் யாகூ மெயில் பயன்படுத்தினர். ‘அவன் குறைந்தபட்சம் மின்னஞ்சலில் அவன் எங்களோடு தொடர்பில் இருக்கலாம் அல்லவா’ என்று தோன்றியது.

                உலகத்தில் உக்ரைன் அப்பொழுது ஓர் அறியப்படாத தேசம். அந்தத் தேசம் குறித்து எங்களுக்குத் தெரிந்தது மிகக் குறைவே. எல்லாருக்கும் தெரிந்த அமெரிக்கா, ரஷ்யா போல் இல்லை. ஐரோப்பாவை ஒட்டியுள்ள வழக்கமான தேசம். அவன் தேசத்தின் தலைநகரான கீவ்வில் இருக்கிறானா? இல்லையென்றால் அவன் மனைவியின் ஊரான கெமன்ஸ் நகரத்தில் இருக்கிறானா?

                ஒருமுறை அந்தத் தேசத்தில் செர்னோபில் என்ற பகுதியில் அணு உலை விபத்து ஏற்பட்டது. அந்த விபத்தில் அநேகம்பேர் உயிரிழந்தனர். இப்போதுவரை மக்கள் அதனால் அவதிப்படுகின்றனர். உலகிலேயே மின் அணு உலைகள் அதிகம் உள்ள நாடு அது. சோவியத் ஒன்றியத்தில் இருக்கின்றபொழுது மொத்தம் (USSR)க்கும் அது ஓர் அணுகுண்டு தொழிற்சாலையாக இருந்தது.

                நான் வேலைச் செய்யும் அலுவலகத்தில் எனக்குக் கணிப்பொறியோடு சேர்ந்த இணைய இணைப்பும் இருந்ததால் இணையத்தில் அவனைப் பற்றித் தேடத் தொடங்கினேன்.

                தேடும்போது முதலில் புரிந்த விசயம் என்னவென்றால் அந்தத் தேசத்தில் உருளைக்கிழங்கு அதிக அளவில் விளைவிக்கிறார்கள். காலையிலிருந்து மாலைவரை வயலில் வேலை செய்தால் கூலியாக ஒரு மூட்டை உருளைக் கிழங்கே வழங்கப்படும். அப்பொழுது அதுதான் அந்தத் தேசத்தின் நிலை.

                இணையத்தில் தேடிப் பார்த்துத் தெரிந்த ஒவ்வொரு உக்ரைன், ரஷ்யன், அரசாங்க வெப்சைட்டிலிருந்து தொடர்பு விவரங்களைப் பெற்றுக்கொண்டு அவர்கள் அனைவருக்கும் ஆங்கிலத்தில் மின்னஞ்சல் அனுப்பினேன். எங்கள் அண்ணன் படிப்பதற்காக வந்தான் என்றும், அங்கேயே உக்ரைன் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டான் என்றும், கடந்த பத்தாண்டுகளாக அவனுக்காக இங்கே வயதான தாய், தந்தையர் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்று அவனைப் பற்றிய விவரங்கள் அனைத்தையும் அனுப்பினேன். உக்ரைனில் இருக்கிற இந்தியன் எம்பஸிக்கு, வெளிவிவகாரத்துறைக்கு, கடைசியாக உக்ரைன் வானொலியில் அவனைப் பற்றிப் பிரகடனப்படுத்துங்கள் என்று கூட அவர்களிடம் கோரிக்கை வைத்து மின்னஞ்சல் அனுப்பினேன்.

                ஆறு மாதங்கள் அப்படி முயன்றபொழுது கீவில் இருக்கிற இந்தியன் எம்பஸியிலிருந்து மின்னஞ்சல் வந்தது. அவன் நலமாகவே இருக்கிறான் என்று.

                ‘அப்பாடா’ என்று நினைத்துக்கொண்டேன்.

                மின்னஞ்சலில் அவனுடன் பேசுவதற்கு ஒரு ஃபோன் நம்பரும் கொடுத்தனர்.

                அவர்கள் கொடுத்த ஃபோன் நம்பருக்கு என் அலுவலகத்திலிருந்து ஐ.எஸ்.டி கால் செய்தால் யாரோ பெண் ஒருத்தி போனை எடுத்தாள். பெயர் சொன்ன கொஞ்சநேரத்தில் அவளுக்கு நினைவுக்கு வந்தது. அது அவளின் பக்கத்து வீட்டினிரின் நம்பர் என்று புரிந்தது. அப்பொழுது அந்தக் குளிர் தேசத்தில் நேரம் என்ன ஆகிறதோ தெரியாது. ஃபோனை பக்கத்தில் வைத்த சத்தம் கேட்டது. தூரத்திலிருந்து வீதியிலே யாரோ ஒரு பெண்ணின் குரல் கேட்டது. அதன் பிறகு அதே மனுஷி மறுபடியும் வந்து ஏதோ சொன்னாள். அவளின் பேச்சு எனக்குப் புரியவில்லை. அவளுக்கு ஆங்கிலம் வரவில்லை. அவள் பேசியது ரஷ்யனோ, உக்ரைன் மொழியோ தெரியாது. எனக்கு அவள் பேசுவது புரியாமல் போனதால் கடைசியில் ஃபோனை வைத்துவிட்டேன்.

                அதன்பிறகு பலமுறை அதே நம்பருக்கு முயற்சி செய்தபின் மாக்சிம் சோபோலேவ் என்ற ரஷ்யன்லைனில் வந்தான். அவன்; ஹரிக்கு நண்பன். அவன்சொன்னதை வைத்துப் பார்த்தால் அவன் கீவில் இல்லை. உக்ரைனின் துறைமுகம் ஒடேசாவில் இருக்கிறானாம்.

                மாக்சிம் வேறொரு நம்பரைக் கொடுத்தார்.

                அந்த நம்பருக்கு டயல் செய்ததும் கிடைத்தான். சில ஆண்டுகளுக்குப் பிறகு.

                நான் கேட்ட எதற்கும் பதில் சொல்லவில்லை. எல்லாவற்றுக்கும் ‘எல்லாம் நன்றாகவே இருக்கிறது’ என்றான்.

                இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு பேசினாலும் அவனிடம் எந்த உத்வேகமும் இல்லை.

                ஒவ்வொருமுறையும் போனில் பேசுவது கஷ்டமாகத் தோன்றி கடைசியில் அவனுக்காக நானே ஒரு மின்னஞ்சல் ஐடி க்ரியேட் செய்து அதன் பாஸ்வேர்டை அவனுக்குச் சொல்லி மின்னஞ்சல் அனுப்பச் சொன்னேன்.

                அப்படிச் செய்த இரண்டாவது நாளிலேயே மின்னஞ்சல் செய்தான். அப்பொழுதிலிருந்து அவனோடு தொடர்பு தொடங்கியது.

                அவன் சொன்னதை வைத்துப் பார்த்தால் படிப்புப் பத்து வருடங்களுக்கு முன்பே முடிந்தது. விகாவிற்காக, குழந்தைகளுக்காகக் கீவிலேயே இருக்கவேண்டி வந்தது. திருமணம் ஆன சில ஆண்டுகள் வரை குழந்தைக்குட்டிகளுடன் நன்றாகவே இருந்தான். பிறகு சரியான உத்யோகம் இல்லாததால் வாழ்க்கையில் கஷ்டங்கள் தொடங்கின.

                நீண்டகாலமாக ஓர் உத்யோகம் இல்லை. ஸ்திரத்தன்மை இல்லை.

                உத்தியோகத்திற்காகத் தேசத்தை விட்டுவிட்டு அசர்பைஜான் போனான். அங்கே சில ஆண்டுகள் மருந்தகப் பிரதிநிதியாகப் பணிசெய்தான்.

                மனைவி, குழந்தைகளைப் பார்த்து நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்பொழுது அவர்கள் எப்படி இருக்கிறார்களோ அவனுக்குக் கூடத்தெரியாது.

                இதனை எப்படிப் புரிந்துகொள்ளவேண்டுமோ தெரியவில்லை எனக்கு. ஒருவேளை அவன் விகாவை விட்டுப் பிரிந்துவிட்டானோ என்னமோ, அந்த விவரங்கள் எதுவும் தெரியவில்லை.

                மாக்சியம் வழியாகத் தெரிந்த விசயம் என்னவென்றால் அவன் உக்ரைனில் நீண்ட காலம் கையில் பணம் இல்லாமல் மிகுந்த வறுமையை அனுபவித்தான். குழந்தைகளுக்குப் பால் டப்பா வாங்கிட கைக்கு வந்த எல்லா வேலைகளையும் செய்தான். ஆங்கில டியூசன் எடுத்தான். செய்வதற்குப் பணி கிடைக்காத நேரத்தில் வீடுகளுக்குச் சுண்ணம் அடித்தான்.

                மருந்தகப் பிரதிநிதியாகப் பணியாற்றிய பிறகு இரசாயனத் தொழிற்சாலையில் சேர்ந்து படிப்படியாக ஒடெசா துறைமுகத்தின் மையமாகச் செயல்படும் இறக்குமதி ஏற்றுமதி கம்பெனியில்ரஷ்யன்மொழிபெயர்ப்பாளராகச்சேர்ந்தான். அந்த வரிசையில் அவன் உக்ரைனைத் தாண்டி விதவிதமான வேலைகள் செய்துகொண்டு அசர்பைஜான், துர்க்மெனிஸ்தான், உஸ்பெகிஸ்தான் தேசங்களில் அலைந்து கடைசியில் கஜகஸ்தான் சேர்ந்தான்.

                அங்கே இரசாயனம், பவுல்ட்ரி பொருட்களை ஏற்றுமதி செய்யும் ஒரு ரஷ்யன்கம்பெனியில் உத்யோகம் கிடைத்தது. அந்தக் கம்பெனிக்கு இந்தியாவில் கிளைகள் உள்ளன. அவன் இந்தியன் ஆகையால் சில ஆண்டுகளுக்குப் பிறகு பெங்களூரில் இருந்து பணி செய்யும் வாய்ப்பு வந்தது.    

                முதல்முறை என்னிடம் போனில் பேசிய நேரத்தில் கஜகஸ்தானிலிருந்து இந்தியாவிற்கு வருவது என்று உறுதி செய்யப்பட்டது.

                                                                                -000-

                அவன் கஜகஸ்தானிலிருந்து தில்லி வந்து ஹைதராபாத் வராமல் அங்கிருந்து கிட்டத்தட்ட பெங்களூரு சென்றான். அங்கேயே அவன் வேலைசெய்கிற கம்பெனி கார்ப்பரேட் அலுவலகம் இருந்தது. பெங்களூரு ஹோட்டலில் இறங்குகிறேன் என்றும் அங்குப் பார்த்துவிட்டு ஹைதராபாத் வருகிறேன் என்றும்  சொன்னான்.

                அவன் பெங்களூருக்கு வருகிறான் என்று தெரிந்து எங்கள் அப்பா அவனைப் பார்ப்பதற்குப் பெங்களூரு கிளம்பினார். அவரோடு கூடச் சேர்ந்து எங்கள் மூத்த அக்கா பையன் பாலு கூட அவனைப் பார்ப்பதற்குச் சென்றான். பெங்களூருவில் அவன் எங்கேயோஅலுவலகப் பணிநிமித்தம் தங்கினானாம்.

                இவர்களைப் பார்த்து “நானே வாரக்கடைசியில் ஹைதராபாத் வருவன்ல. எதுக்குக் கஷ்டப்பட்டு இவ்வளவு தூரம் வந்தீங்க” என்றான்.

                அப்படியே சொன்னவாரே அவன் வாரக்கடைசிக்குப் பிறகு பெங்களூருவிலிருந்து ஹைதராபாத் வந்தான்.

                அத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு அவனைப் பார்த்ததும் எனக்கு உள்ளே இருந்து துக்கம் பொங்கி வந்தது. அவனைக் கட்டிப்பிடித்து அழவேண்டும் போல் தோன்றியது.

                அவனிடம் எத்தனையோ விசயங்களைப் பேசவேண்டும் போல் தோன்றியது. இத்தனை ஆண்டுகளாக நான் அடைந்த துக்கம்… அனுபவித்த கவலை, அவனைத் தேடுவதற்கு எடுத்துக்கொண்ட முயற்சி… எந்தப் பேச்சும் வராமல் அவன் முன்பு ஊமைபோல் நின்றுவிட்டேன்.

                அவனிடம் இருந்து என்னைப் பாதித்த விசயம் என்னவென்றால் அவனுக்குச் சம்பந்தப்பட்ட எந்த விசயத்தையும் என்னோடு பகிரவில்லை. எதையும் சொல்லமாட்டான்.         

                அவன் எப்பொழுதும் என்னைச் சிறியவன் போலவே, ஒரு தம்பி போலவே பார்த்தான். அதே எங்கள் இருவர் மத்தியிலிருந்த இடைவெளியாகத் தோன்றியது.

                சந்தோசம் தந்த விசயம் என்னவென்றால் அவன் இந்தியாவிலேயே இருப்பேன் என்ற நிர்ணயித்தான்.

                காக்கிநாடா அருகில் ரிலையன்ஸ் கேஸ் பைப் லைன் நடக்கிறது என்றும் அதில் பணிசெய்கிற ரஷ்யன்பொறியாளர்களுக்குத் தெலுங்கு மொழிபெயர்ப்பாளராகச்சேர்ந்திருப்பதாகச் சொன்னான். ரஷ்யன் கற்றுக்கொள்ளவேண்டும் என்று கம்யூனிஸ்ட்டு ரஷ்யா போய் வந்தவன் இந்தியா வந்து இப்படி ரிலையன்ஸிலேசேருவது ஒரு விசித்திரம்.

                காக்கிநாடாவிலிருந்து ஓரிரு முறை ஹைதராபாத் வந்தபொழுதுஅவனின்குடிப் பழக்கம் வெளியே தெரிந்தது.

                நான் எப்பொழுதாவது குடிப்பேன். ஜாலிக்காக, நண்பர்களோடு சேர்ந்திருக்கும் பொழுது ஏதோ ஒன்று… சில நாட்கள் இடைவெளி ஏற்பட்டால். அது ஓரிரு பெக்குகள் மட்டுமே.

                அவன் குடிப்பது அப்படி இப்படிக் கிடையாது. அது என்னவோ வழக்கமாகக் குடிப்பது இல்லை. மனுசன் கீழவிழுற வரை குடிப்பது. எவ்வளவு குடித்தாலும் தின்பது இல்லை. சும்மாவே குடிப்பது, குடிக்கும்பொழுது ஒன்றிரண்டு சிகரெட்டுகள் இழுப்பது. பாக்கெட்டில் பணம் காலியாகும் வரை குடிப்பது. இவ்வளவு போதை இவனுக்கு எப்படி வந்ததோ தெரியாது.

                காக்கிநாடாவில் எங்கே இருக்கிறானோ தெரியாது. எப்பொழுது ஃபோன் செய்தாலும் வேலையாக இருக்கிறேன்டா என்பான். சேற்றில் ஆழமாக முழங்காலில் இறங்கி ரஷ்யன் பொறியாளர்களோடு நடப்பது, அவர்கள் சொல்வதைத் தெலுங்கிலே மொழிபெயர்த்துத் தொழிலாளிகளுக்கு, இதர தெலுங்கு பொறியாளர்களுக்குச் சொல்வது இவனின் பணி.

                இது இப்படியிருக்க இதற்கிடையில் அவன் திருமணம் செய்து கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டதாகத் தெரிந்தது. அவனுக்கு அந்தச் சம்பந்தம் யார் ஏற்படுத்திக்கொடுத்தார்களோ அவர்கள் எப்படி அறிமுகமானார்களோ எங்கள் யாருக்கும் தெரியாது. உக்கிரைனில்அவனுக்குக் குழந்தைகுட்டிகள் இருக்கிறார்கள் என்ற சங்கதியை அவர்களிடம் சொன்னானோ இல்லையோ என்று சங்கடப்பட்டோம். விகாவுடன் விவாகரத்து ஆகிவிட்டதா இல்லையா என்றும் எங்களிடம் சொல்லவில்லை.

                அவள் பெயர் ‘சாரா’. அவர்களது ராஜமந்திரி அருகில் ஏதோ ஒரு கிராமம். அவள் கிறிஸ்டியன்.

                காக்கிநாடாவில் சேர்ந்து பணி செய்கிற கொலிக்ஸ் எவரோ அந்தச் சம்பந்தத்தைக் கொண்டு வந்தார்.

                திருமணத்திற்கு ஹைதராபாத்திலிருந்து யாரும் செல்லவில்லை. விஜயவாடாவில் இருக்கிற சிறிய அக்கா தவிர.

                அதன் பிறகு வெளிநாட்டு மொழி மொழிபெயர்ப்பு நிறுவனத்தில் யாரோ ஒரு நபர் அறிமுகமானார். காக்கிநாடாவில் இருந்தபோது அவரின் வழியாக ரஷ்யனிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கும் திட்டங்கள் கொஞ்சம் கிடைத்தன. அதன் பிறகு அவனுக்கு EFLU (English and Foreign Languages University) பல்கலைக்கழகத்தில்ரஷ்யன் மொழி சொல்லிக்கொடுக்கும் பஞ்சாபி பேராசிரியர் எவரோ அறிமுகம் ஆனார்.

                அவரின் மூலமாக EFLU வில் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பம் செய்தான்.

                பரீட்சைகள், நேர்முகத்தேர்வுகள் முடிந்தன. அதற்கு அவனுடைய பதினைந்து வருட வனவாசம் நன்றாக வேலைச் செய்தது. ரஷ்யன் கூட தெலுங்குபோல அவனுக்குத் தாய்மொழி ஆனது. கடைசியில் அவனுக்கு வேண்டிய உத்தியோகம் கிடைத்தது. உக்ரைனில் இத்தனை ஆண்டுகளாகக் கிடைக்காத உத்தியோக வாய்ப்பு இப்பொழுது இந்தியாவில் கிடைத்தது. அதுவும் தனக்கு விருப்பமான பேராசிரியர் உத்தியோகம்.

                திருமணமாகி, உத்தியோகம் வந்து பணப்பிரச்சனைகள் தீர்ந்தாலும், குடிப்பழக்கம் மட்டும் நீங்கவில்லை. பலமுறை மொபைல் போனைத் தொலைத்துவிட்டான். சிலசமயம் ராத்திரிவேளை வீட்டிற்கு வராமல் எங்கெங்கேயோ விழுந்துகிடந்து காலையில் வீட்டுக்கு வருவான்.

                இந்தப் போதைக்குக் காரணம் அவன் மனைவி குழந்தைகளை விட்டுப் பிரிந்து இருப்பதே என்று தோன்றியது.

                இந்தியா வந்தபின் அவன் ஒருமுறை கூட மனைவியுடனோ, பிள்ளைகளுடனோ ஃபோனில் பேசவில்லை. ஒருமுறை மட்டும் விஜய்க்கு உடம்பு சரியில்லையென்று விகா மின்னஞ்சல் அனுப்பினாள். பையனுக்கு ஆப்ரேஷன் செய்வதற்குப் பணத்தை அனுப்பி வைத்தான். அதன் பிறகு எப்பொழுதும் அவர்களைப் பற்றி எங்களிடம் பேசியது இல்லை. அழுத்திக் கேட்டால்; “அவங்கல்லாம் நல்லா தான் இருக்குறாங்க” என்று தாராளமாகப் பதில் சொல்வான்.

                உத்தியோகத்தில் சேர்ந்ததும் சில காலத்திற்குப் பின் பல்கலைக்கழகக் குடியிருப்புக்கு மாறினான்.

                சாரா எவ்வளவு முயன்றாலும்அவனின்குடிப்பழக்கத்தை மட்டும் நிறுத்தமுடியவில்லை. சில சமயம் ஆட்டோக்காரர்கள் ஆட்டோவில் தூக்கிப்போட்டு வீட்டில் படுக்க வைத்துச் செல்வார்கள். சிலசமயம் ராத்திரி வீட்டுக்கு வருவதும் கிடையாது. பல்கலைக்கழக மாணவர்கள் எங்காவது ஹாஸ்டல் அறையில் படுக்க வைத்து இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

                அன்றைக்கு என் வாழ்க்கையில் வேதனையான நிகழ்வுகள் சில நடந்தன.

                ஒரு சாய்ந்தரம் வேலை மருந்துக்கடைக்குக் கிளம்பின எங்கள் அப்பா வெகுநேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை ஃபோன் செய்தால் வேறு எவரோ ஃபோன் எடுத்து, “இந்தப் பெரியவர் கீழ விழுந்துட்டாரு யாரோ மருத்துவமனையில் சேர்த்துருக்காங்க’ என்று சொன்னார். நாங்கள் எல்லாரும் அந்த மருத்துவமனைக்குச் சென்று பார்த்தால் அவர் அப்பொழுது கோமா நிலைக்குச் சென்றுவிட்டார். ஹரியும் நானும் அவரின் சடலத்தை இறுதியாகக் காரில் அவரின் வீட்டிற்கு எடுத்துச் சென்றோம். ஓர் இரவு முழுக்கப் பயணம். அவன் உக்கிரைனில் இருந்தபொழுது ‘என் உயிர் போறதுக்குள் அவனைப் பார்க்கணும்” என்று பிணாத்திக்கொண்டிருப்பார். அவர் இருக்கும் பொழுதே அவன் இந்தியா வந்தான். அவர் இறந்த பிறகும் கூடச் சுயமாக அவரின் இறுதிச்சடங்குக்காக அவர் ஊருக்கு கொண்டுசென்றான். அந்த ராத்திரிப் பிரயாணத்தில் அதே விசயத்தை அவனிடம் கூறினேன். அவரின் மரணம் நீண்ட நாட்கள் என்னை ஆட்டிப்படைத்தது.

                அதிலிருந்து மீண்டுவருவதற்குள் என்னையும், ஒன்பதுவயதான என் மகனையும்அனாதையாக்கி என் மனைவி இறந்து போனாள்.

                என் வாழ்க்கையில் கஷ்டங்கள் மறுபடியும் தொடங்கின.

                என் மகனை விஜயவாடாவில் அவனின் அம்மம்மாவிடம் (அம்மாவின் அம்மா) விட்டு நான் அமீர் பேட் ஹாஸ்டலுக்கு மாறினேன்.

                இன்னும் மூன்று வருடங்களுக்கு ஹாஸ்டல் வாழ்க்கை கூட ஒத்துவராமல் ஒன்றிரண்டு நண்பர்களோடு சேர்ந்து அமீர்பேட்டையிலேயே அறை எடுத்துக்கொண்டேன்.

                திருமணமானாலும் ஹரியிடம் மாற்றம் வரவில்லை. அவனுக்கு மறுபடியும் குழந்தைகள் பிறக்கவில்லை.

                அவன் மனதிலே என்ன இருக்கிறதோ யாருக்குத் தெரியும். அவன் இரண்டு இரண்டு மகன்களையும் சிறுவயதிலேயே உக்ரைனில்  விட்டு விட்டு வந்துவிட்டான். சின்னச் சின்ன வேலைகள் செய்து ஒரு நாட்டை விட்டு இன்னொரு நாட்டைத் தாண்டி கடைசியில் சொந்த நாட்டிற்கு வந்தான்.

                பிள்ளைகளைப் பார்த்து சில வருடங்கள் கழிந்துவிட்டன. வீட்டிற்கு ஃபோன் செய்வதுகூடக் கிடையாது. கணவன் மனைவிக்கு இடையே என்ன நடந்ததோ தெரியாது. ஒருவேளை பிரிந்திருந்த அந்த விசயத்தைஎங்களுக்குத்தெளிவுபடுத்தவில்லை.

                உண்மையில் எந்தக் காரணமும் இல்லையென்று கூட மற்றொரு பயம். காரணம் என்று இருக்கிற போதையை விட எந்தக் காரணமும் இல்லாத போதை ஆபத்தானது.

                என்னடா இது நீ செய்யுற வேலை என்று கேட்டால், “என்னயிருக்குடா… இப்ப செத்துப்போனா நாளையோட இரண்டுநாள் அப்படின்னு நினைப்பாங்க” என்றான்.

                அவனின் குடிக்கிற பழக்கம் எனக்குப் பயத்தை ஏற்படுத்தியது. கடைசியில் இவன் என்ன ஆவானோ என்ற பயம்.

                அவன் என்னை இன்னும் எதுவும் தெரியாத தம்பியாகவே சின்னவனாகவே பார்ப்பது மூலமாக அந்த இடைவெளியைக் குறைக்க முடியவில்லை. அதற்கு மேல் அவனைக் கண்டிக்க வாய்ப்புக் கூடவில்லை.

                அவன் எனக்கு “டேய்” என்று கூப்பிடுவதற்கு அனுமதிக் கொடுத்திருக்கிறான்.

                இதையெல்லாம் பார்க்கும்பொழுது அந்த நாட்களில் மேற்படிப்புக்காகத் தில்லி போகாமல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே என்று தோன்றியது.  போனாலும் அந்தப் பல்கலைக்கழகத்தில் அந்த ரஷ்யன் மொழி இல்லாமல், ஒரு பிரஞ்சோ, ஜப்பானிய மொழியை எடுத்திருந்தால் நன்றாகயிருந்திருக்கும். உண்மையில் அது கூட இல்லையென்கிற பட்சத்தில் மட்டுமே.. இங்கே எங்களுடன் இருந்து ஏதோ ஒன்று பார்த்துக்கொண்டு இருந்திருப்பான் அல்லவா என்று தோன்றியது.

                எனக்குப் படிப்பு வராதபோது எங்கள் அப்பா திட்டியபோது அம்மா குறுக்கிட்டுச் “சின்னவனைச் சும்மாவே திட்டாதீங்க படிப்பு வரலன்னா என்ன, ஏதோ கடைவச்சாவது பொழச்சுக்குவான்” என்பாள்.

                அவன் கூட இப்படி ஏதோ ஒரு வகையில் எங்களோடு இருந்திருப்பான் என்று நினைத்தேன்.

                முன்னோக்கி நடந்தபொழுது வாழ்க்கை “நினைப்பது போல் எளிதானது அல்ல” என்பதை உணர்ந்தேன்.

                அந்த நாட்களிலேயே விசாலந்திராவில் (பதிப்பகம்) தஸ்தாயெவ்ஸ்கியின் “குற்றமும்தண்டனையும்” ஆங்கிலப் புத்தகம் கண்ணில் பட்டதும்வாங்கிப் படித்தேன். அந்த நாவலில் ரஸ்கல்னிகோவின் குற்றம் நிலையான காரணங்களைக் காட்டிலும் அவனது நிலையற்ற மனநிலையே காரணம் என்று தோன்றியது. அண்ணனின் வாழ்க்கைக்காகத் தியாகம் செய்யலாம் என்று நினைத்த அவன் தங்கை தூனியா, குடும்பத்தைக் காப்பாற்றுவதற்கு விபச்சாரத்தைத் தேர்ந்தெடுத்த சோனியா  ரஸ்கல்னிகோவிடம் பிரச்சினையைக் கிளப்புகிறார்கள். நெப்போலியனைப் போலச் சக்திவாய்ந்த மனிதன்  ஆகவேண்டும் என்று நினைத்தான். ஆனால் கொலையின் கனத்தை அவனால் தாங்கமுடியவில்லை. சோனியாவின் தயை, கருணை, காதல் அவனைக் குற்றத்தை ஒப்புக்கொள்ள வைக்கிறது. தஸ்தாயெவ்ஸ்கி போலவே வாழ்க்கையில் உள்ள முரண்பாடுகளையும் அதில் உள்ள சோகங்களையும் யாரும் சொல்லவில்லையென்று தோன்றியது.  வெளிநாட்டில் இருந்தபொழுதுதஸ்தாயெவ்ஸ்கி சூதாட்டத்தில் ஈடுபட்டதாகவும் தன்னுடைய அதிர்ஷ்டத்தைச் சூதாட்டத்தின் மூலம் சோதித்தார் என்றும் எங்கேயோ படித்தேன். இத்தகைய முரண்பாடு தஸ்தாயெவ்ஸ்கியிடமும்இருந்ததோ என்னவோ. அவர் எழுதிய ‘தி காம்ப்ளர்’ என்ற ஆங்கிலப் புத்தகம் குறித்துத் தெரிந்தது ஆனாலும் எங்கேயும் கிடைக்கவில்லை.

                நான் முன்பு கார்க்கியுடையது இல்லாமல் தஸ்தாயெவ்ஸ்கியைப்படித்திருந்தால் எப்படி இருந்திருக்கும்? அந்த வயதில் தஸ்தாயெவ்ஸ்கி எனக்குப் புரிந்திருப்பாரா?

                                                                                -0000-

                ஒரு நாள் காலையில் ஹரிக்கு நெஞ்சுவலி வந்ததென்று, அந்தநேரத்தில் செகந்திராபாத் யசோதா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதாகவும் சாரா ஃபோன் செய்தாள்.

                அதற்குமுன்பு அவனுக்கு இப்படிப்பட்ட பிரச்சனை வந்ததில்லை.

                ‘காலையிலேயே இருந்தாற்போல இப்படிப்பட்ட செய்தி எதற்கு? என்று நினைத்துக்கொண்டு கவலையோடு அலுவலகத்திலிருந்து மருத்துவமனைக்கு ஓடினேன்.

                அங்கு சென்றபொழுது அவர்கள் எமர்ஜென்சி வார்டில் காணப்பட்டனர். ஹரி கட்டிலில் படுத்துக்கொண்டிருந்தான். அவனுக்கு எந்தக் கவலையும் இல்லை. இதெல்லாம் வழக்கமானதுதான் என்பது போலப் பார்த்தான். அருகில் வாவென்று அழைத்து “நீ மறுபடியும் கல்யாணம் பண்ணிக்கோடா” என்று கெஞ்சுவது போல் சொன்னான்.

                சாரா டாக்டர்களுக்காக அங்கேயும் இங்கேயும் கவலையோடு நடந்துகொண்டிருந்தாள்.

                அந்தவேளையில் அவனின் இதயத்தில் இரண்டு அடைப்புகள் இருக்கின்றன என்று டாக்டர்கள் சொன்னார்கள்.

                அன்றைக்கு மத்தியானம் அவனின் இதயத்தில் இரண்டு குழாய்களைப் பொருத்தினர்.

                மூன்று நாட்களுக்குப் பிறகு அவசர சிகிச்சைப் பிரிவிலிருந்து பொது வார்டுக்கு மாற்றினார்கள்.

                பொது வார்டுக்குமாற்றிய அன்று சாயந்திரம் அலுவலகத்திலிருந்துமருத்துவமனைக்குச் சென்றேன்.

                கொஞ்சம் சோர்வாகக் காணப்பட்டான்.

                இரவு ஒன்பது மணிக்குச் சரி போய்வருகிறேன் என்று எழுந்து நின்றால் கட்டிலில் திரும்பி கைவைத்து ‘இன்னைக்கு ராத்திரி இங்க தூங்குடா?’ என்றான்.

                ‘ஆபிஸிலயிருந்து நேரடியாக வந்தேன், நாளையில இருந்து படுத்துக்கிறன்’ என்றேன்.

                ‘சரிடா… பை” என்றான் என்னைப் பார்த்து.

                அதுதான் அவன் என்னோடு பேசிய கடைசி வார்த்தை. அதே கடைசிப் பார்வை. எல்லாம் சுமுகமாக நடக்கும் என்ற நம்பிக்கையோடு இருந்தேன் அப்பொழுது வரை.

                 ஏதோ ஆலோசித்துக்கொண்டே பாட்னி அருகில் பஸ் ஏறி அமீர் பேட்டையில் இறங்கினேன்.

                அக்டோபர் மாதம் குளிர் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. அறையில் பாயின் மேல் கலைந்த நித்திரை. எப்பொழுது படுத்தேனோ தெரியாது. தூக்கத்தில் ஃபோன் அடித்தது. யார் என்று பார்த்தால் ஜான்பாபு. அவனின் மச்சான். அயர்ந்த தூக்கத்தில் ஃபோனை எடுத்தேன். அப்பாலிருந்து அடைக்கிற தொண்டையில்…

                “ப்ரசாத் அத்தான்… எல்லாம் முடிஞ்சது சர்.. அவர் இனி இல்லை” என்ற அழுகை…

                அவன் சொன்னது கொஞ்சங்கொஞ்சம் புரிந்தது. பிறகு சொல்வதைக் கேட்காமலே ஃபோனைத் துண்டித்தேன்.

                ‘அவன் இனி இல்லை’; இருளில் இன்னும் இருள் சூழ்ந்தது.

                ஹரி இனி இந்த உலகத்தில் இல்லை.

                அப்படி நினைத்தபொழுதே கண் முன்பு கருப்பு மழை… எல்லாம் கருப்பாக… கசங்கியதுபோல்…

                அவன் பிறந்த நாற்பத்தாறு வயதுக்குள், சோவியத் யூனியன் வீழ்ச்சியடைந்த இருபத்தைந்து ஆண்டுகளுக்குள், அவன் குடும்பத்தை விட்டு வந்த பதினைந்து வருடங்களுக்குள் அவன் இந்த உலகத்திலிருந்து, எங்கள் குடும்பத்திலிருந்து, என்னிடமிருந்து என்றென்றும் தூரமாகிவிட்டான்.

                ஒருநாள் முன்பு எதுவும் இல்லை எல்லாம் நன்றாகவே இருக்கிறது என்று நினைத்தவன்…

                இன்னும் வாழ்வேன் என்று நினைத்தவன்… இருந்தாற்போல மாயமாகிவிட்டான்.

                எழுந்து போர்வையை ஒருபுறம் எறிந்துவிட்டு ஆடை அணிந்துகொண்டு வெளியே நடந்தேன்.

                அதற்குள் நடுராத்திரி தாண்டி ஒரு மணி ஆனது. அந்த இருள் குளிரில் அமீர்பேட்டை மைத்திரிவனம் அருகில் வந்து ஏதாவது வாகனம் கிடைக்குமா என்று நின்றிருந்தேன். உயரமான மெட்டேரா பில்லர்களின் மேலிருந்து தொழிலாளர்கள் வெல்டிங் பணி செய்துகொண்டிருந்தனர். மேலே அவர்களின் கைகளில் டார்ச் லைட்டுகள், ஒளிருகின்ற தீப்பொறிகள் அந்த இருண்ட வானத்தில் ஒளி முத்துக்களாகத் தெறித்தன. அவைகளை நீண்டநேரம் பார்த்துக்கொண்டு இருந்துவிட்டேன்.

                மருத்துவமனைக்குப் போனவுடனேயே சிறிய அக்கா, பெரிய அண்ணன் வரவேற்பறையில் அமர்ந்திருந்தனர். சிறிய அக்கா கண்ணீர் வடித்து, வடிந்த கண்ணீரைக் கர்ச்சிப்பால் துடைத்துக்கொண்டு பெஞ்சுமீது நடுங்கிக் கொண்டிருந்தாள். தூரத்தில் பெரிய அண்ணன் கைகளைப் பின்னால் கட்டிக்கொண்டு நின்றுகொண்டிருந்தார். உப்பலாவிலிருந்து வரவேண்டிய சின்ன அண்ணன் இன்னும் அங்கே வந்து சேரவில்லை. நடுராத்திரி தாண்டிய காரணத்தால் மருத்துவமனையில் ஜனம் இல்லை. கொஞ்சநேரம் கழித்து மருத்துவமனைப் பின் பக்கத்திலிருந்து ஸ்ட்ரெச்சர் மேல் ‘சடலத்தை’ எடுத்து வந்தனர். அவனை அப்படிப் பார்த்ததும் பெரிய அண்ணன் கண்களைத் துடைத்துக்கொண்டார்.  ஸ்ட்ரெச்சர்ரோடு ஊசலாடுகிற அவனின் உயிரற்ற சரீரத்தை அசைவற்று நின்று பார்த்துக்கொண்டிருந்தேன்.

                அப்படி நவம்பர் 1, 2015இல் அவன் கண் மூடினான். அப்பொழுது அவனுக்கு அதிக வயதொன்றும் ஆகவில்லை. நாற்பத்தேழு வயது கூட முழுதாக முடியவில்லை.

                அன்றைக்கு இரவு ஆம்புலன்ஸில்அவனின்சரீரத்தைப்பல்கலைக்கழகக் குவாட்ரசுக்கு எடுத்துக்கொண்டுவந்தோம். வீட்டின் உள்ளே கட்டில் மேல் படுக்கவைத்தார்கள் அவனை. தலை மட்டும் தெரிவதுபோல் போர்வையால் போர்த்தினர்.

                காலையிலேயே அவனின் மாணவர்கள், உடன் பணிபுரியும் பேராசிரியர்கள் ஒவ்வொருவராக வந்து போனார்கள்.

                ஜன்னலில் இருந்து விழுகிற சூரிய உதயத்தில் அவன் முகத்தைப் பார்த்தேன். எல்லாவற்றையும் மறந்துபோய்க் கண்களை மூடிக்கொண்டு அமைதியாகத் தூங்கிக்கொண்டிருந்தவன் போலிருந்தான். முதல்நாள் கடைசியாக மருத்துவமனையில் பார்த்து வந்தபொழுது ‘குட் பை டா’ என்ற மனிதன் –

                இப்படி நிரந்தரமாகக் குட்பை சொல்லிவிட்டான்.

                அருகில் சென்று நெற்றியின் மேல் கையை வைத்தேன். குளிர்ந்து கிடந்தது. உயிரற்ற சடலம். அவனே.

                அவனின் இறுதிச்சடங்குகளை எந்த மத முறைப்படி செய்ய என்ற கேள்வி கிளம்பியது. நாங்கள் இந்துக்கள். இங்கே அவன் கல்யாணம் செய்துகொண்ட மனைவி கிறிஸ்டியன். எனக்குத் தெரிந்து அவன் எந்தக் கடவுளையும் வணங்கியது இல்லை. எங்கள் வீட்டில் சடங்குகள் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. எங்களுக்கு ஈமக்கிரியை விவகாரங்கள் தெரியாதென்பதால் ஊரிலிருந்து எங்கள் உறவினர்களை அழைத்து  வந்தோம்.

                எல்லாரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும்பொழுது அவனின் மாமா அனந்தராவ் “அவர் நல்ல மனுசன், எங்களைப் பாத்துக்கிட்டாரு. மருமகனா இருந்தாலும் மகன் மாதிரி. எங்க மதச் சம்பிரதாயப் படியே ஈமக்கிரியைகளைச் செய்வோம்” என்றார்.

                எந்த மதத்தையும் பின்பற்றாத எங்கள் குடும்ப உறுப்பினர்கள் அவர் சொன்னதற்கு ஆட்சேபனையும் செய்யவில்லை.

                அதன்படியே தர்னாவிற்கு அப்பால் இருக்கிற மௌலாலி கிறித்தவ மயானத்தில் அவனை அடக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.

                ஏற்கனவே உடல் உறைந்து விறைப்பாக இருந்ததால் அவனைக் குளிப்பாட்டியதும் உடல்மேல் கிடந்த அங்கியைக் கழற்ற முடியவில்லை.

                கடைசியில் அவனை வீட்டிலிருந்து வெளியே கொண்டுவந்து  சவப்பெட்டியில் வைத்தார்கள். வாங்கி வந்த புதுத்துணியை அப்படியே அவன் உடல்மேல் விரித்தனர்.

                அவனிருந்த பல்கலைக்கழகத்தின் குவாட்டரஸிலிருந்து சவப்பெட்டியைக் கொஞ்ச தூரம் தூக்கிக் கொண்டுவந்து வேனில் ஏற்றினோம். உள்ளே இரண்டு மனிதர்களோடு கூட நானும் ஏறினேன்.

                முன்னும் பின்னும் அசைந்த நடுக்கத்தால் சவப்பெட்டியின் முன் பாதியை என் மடியில் வைக்கவேண்டியிருந்தது. அதுவே அவனைக் காப்பாற்றியதுபோலிருந்தது. என் இரண்டு கைகளுக்கு நடுவே சிலுவை அடையாளம். இப்பொழுதுவரை எனக்குத் தெரிந்தவரை, எங்கள் குடும்பத்தினரையோ, சுற்றத்தவர்களையோ சவப்பெட்டியில் வைத்துப் புதைத்ததில்லை. எங்களிலிருந்து அவனை வேறுபடுத்திய சவாலான அம்சங்களில் இதுவும் ஒன்று. ஒரேயடியாக விவரம் தெரிந்ததிலிருந்து அவனின் நினைவுகளின் கணம் சூழ்ந்தது. அவன் எப்பொழுதும் அப்படித்தான். சிறுபிராயத்தில் மாச்சர்லா திருவிழாவில் வாங்கிய வண்ண பொம்மையிலிருந்து கடைசியாக இப்படி என் கைகளில் மிஞ்சியிருக்கிற சவப்பெட்டி வரை அவன் வாழ்க்கையில் எல்லாம் விசித்திரமே.

                இது எதுவுமே இல்லாமல் எல்லாரையும் போல மிக எளிமையாகவும் சாதாரணமாகவும் வாழ்ந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்.

                அவன் அவனாகவே எங்களுக்கு மிஞ்சியிருப்பான்.

                உண்மையில் இவன் இங்கேயே இப்படி இவ்விதமாகச் செத்துப்போவதற்கு ஏன் அத்தனை தேசங்களைத் தாண்டி வந்தான்?

                அதென்னவோ அங்கேயே அவன் காதலித்துத் திருமணம் செய்துகொண்ட பெண்ணோடோ, இரண்டு மகன்களோடோ அங்கே செத்துப்போகக் கூடாதா… இதெல்லாம் எதற்கு.. எனக்குக் கைகளில் சுமை எதற்கு… தாங்கமுடியாத சுமை எனக்கு ஏன்…

                அநேக மரணங்களுடன் துண்டுதுண்டாகி வாழ்கிற நான் இவனின் மரணத்தைக் கூட வாழ்நாள் முழுவதும் தாங்கவேண்டுமா… அவனின் வாழ்க்கையோடு தொடர்புடைய இங்கே எனக்கு நினைவிலிருக்கிற ஞாபகங்கள் வேறு எவருக்கு நினைவிருக்கிறது. எதற்கு எனக்கு இவ்வளவு வலியை விட்டுச் சென்றான்?

                வேனின் பின்பக்க கதவு திறந்ததால் இறங்கவேண்டிய இடம் வந்தது என்று தெரிந்தது. அப்பொழுது வரை சவப்பெட்டியைப் பிடித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தேன். உடல்மேல் ஆடைகள் நனைந்துவிட்டன. அப்பொழுதுவரை எதிராக அமர்ந்திருந்த மனிதர் எவரோ என்னைச் சோகமாகப் பார்த்துக்கொண்டிருந்தார்.

                சவப்பெட்டி குழியில் இறக்கப்பட்டுக் கடைசியாக ஒரு பார்வைக்காகத் திறக்கப்பட்டது.

                பாஸ்டர் பிரார்த்தனையைத் தொடங்கினார். எங்கள் எல்லாருக்கும் அது புதிது… எப்பொழுதும் பார்த்ததும் இல்லை. கேட்டதும் இல்லை.

                “கிருபையும் சமாதானமும் கொண்டிருக்கும் எங்கள் அன்பான பரலோக பிதாவே, இதோ தந்தையே, உலக யாத்திரையை முடித்துக்கொண்டு உம்மிடம் வரும்போது அவரை உங்கள் பிள்ளையாக ஏற்றுக்கொண்டு ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். நல்லது பின்னோக்கி பூமிக்குத் திரும்பும் என்று உங்கள் சாஸ்திரங்களில் நீங்கள் கூறியது போல, இந்த அடியவனின் உடல் மண்ணில் புதைக்கப்படும். நாங்கள் உங்களுக்குச் சொல்லுகிறோம். அவர் மீண்டும் எழுந்து நம்மில் ஒருவராக இருப்பார் என்று நாங்கள் நம்புகிறோம். அவரது ஆதரவை இழந்த குடும்பத்திற்குத் தந்தையே நீரே நிழலாக இருக்கும்படி இயேசுவின் நாமத்தில் உம்மை வேண்டுகிறோம். ஆமென்.

                கடைசியாகச் சவப்பெட்டி மூடப்பட்டது. அவனை அப்படி எவ்வளவு பார்த்தாலும் அது போதாது. அதுவே அவனைக் கடைசியாகப் பார்ப்பது. தலைக்கு ஒன்றாகப் பிடி மண்ணை அந்தக் குழியில் போட்டோம்.

                கடைசியில் அவனை அப்படி அடக்கம் செய்தோம்.

                இதற்குள் அநேக நினைவுகள் ஒரேயடியாகச் சூழ்கின்றபொழுது ஒன்றின் மேல் ஒன்று நினைவுக்கு வந்து  எது முன்னே எது பின்னே என்று தெரியாமல் தடுமாற்றமாய் பயத்தை ஏற்படுத்துகிறது. எனக்கு உண்மையில் ரஷ்யா போய் வந்த அண்ணன் ஒருவன் இருந்தான் என்று சொன்னால் இப்பொழுது நண்பர்கள் யாரும் நம்புவது இல்லை.

                அவன் இறந்துபோனதும் சாரா பல்கலைக்கழகக் குவாட்ரஸ் காலி செய்து அவர்களின் அண்ணன் தம்பிகள் இருக்கிற ராஜமந்திரிக்குச் சென்றுவிட்டாள்.

                அவனை அடக்கம் செய்த இடத்தில் சிமெண்டு கட்டடம் எதுவும் நாங்கள் கட்டவில்லை. ஒவ்வொரு வருடமும் ஒருநாளாவது அங்கே சென்று கொஞ்சம் மலர்களை வைத்து மௌன அஞ்சலி செலுத்துவது என்பது வழக்கம், யோசித்துப் பார்த்தால் இந்த மாதிரி மோசமான விசயம் எங்கள் வாழ்க்கையில் இதுவரை நடந்ததில்லை. இப்பொழுது அந்தக் கல்லறைத் தோட்டத்திற்குப் போனால் அந்தச் சமாதி எங்கிருக்கிறதோ என்று கூட ஞாபகம் வராது. எதிர்காலத்தில் அவனது உறவினர்கள் வந்து பார்ப்பார்கள் என்ற நம்பிக்கை கூட இல்லை.

                அவனை அவனது குடும்பத்தினர் உட்பட எல்லாரும் மறந்துபோனார்கள்.

                இந்த உலகத்தோடும் வேறு யாரோடும் தொடர்பில்லாமல் அமைதியாக மௌலாலி சமாதித் தோட்டத்தில் ஓர் அறியப்படாத கல்லறையில் அவன் அமைதியாகக் கண்கள் மூடிக்கொண்டு உறங்குகிறான்.

பி.அஜய் ப்ரசாத் :

பி.அஜய் ப்ரசாத் :

                சமகாலத் தெலுங்கு இலக்கியத்தில் 2005 முதல் தற்போது வரை பி.அஜய்பிரசாத் பயணித்து வருகிறார்.. குண்டூரு மாவட்டம் நகரிகல்லுவில் 1972இல் பாதர்ல தசரதராமையா, ராகவம்மா தம்பதிக்கு ஜூன் 9 அன்று பிறந்தார். தெற்கு கடலோர ஆந்திராவில் உள்ள குண்டூர், மாச்சர்லா, அத்தங்கி, குண்டலவலேரு போன்ற நகரங்களில் வளர்ந்தார். வாழ்க்கைப் போராட்டத்தில் பல ஏற்ற இறக்கங்களுக்குப் பிறகு வேலையில்லாமல் ஹைதராபாத் பெருநகருக்குள் நுழைந்தார். ஒரு தனியார் நிறுவனத்தில் சுருக்கெழுத்தராகச் சேர்ந்து வாழ்க்கையை நடத்திவருகிறார்.

                எட்டாம் வகுப்பிலிருந்து கதைகளை எழுதத் தொடங்கிய அஜய் ப்ரசாத் ஆரம்பக் காலத்தில் பல புனைப்பெயர்களில் பல கதைகள் எழுதினார். 2005இல் அவர் எழுதி வெளிவந்த முதல் கதையான  ‘மறுபூமி;’ மூலம் எழுத்தாளராக அங்கீகரிக்கப்பட்டார். இப்பொழுதுவரை இவரின் ஐம்பதிற்கும் மேற்பட்ட கதைகள் பல பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. அவைகளில் முப்பது கதைகளைத் தொகுத்து ‘லோயா, காலிபொரலு’ என்று இரண்டு சிறுகதைத் தொகுப்புகளாக வெளிவந்திருக்கின்றன. அவர் எழுதிய கதைகளில் பல அந்தந்த வருடாந்திரத்தின் சிறந்த கதைகள் என்று தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றன. சில கதைகள் ஹிந்தி, ஆங்கிலம், வங்காளம் மற்றும் கன்னட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. கதை எழுதுவதோடு கூடப் பல்வேறு இலக்கிய இதழ்கள் மற்றும் நாளிதிழ்களில் தனக்கு விருப்பமான டால்ஸ்டாய், தஸ்தாயெஸ்கி, முசனோபு புகுவோகா படைப்பாளர்கள் குறித்து வெளியிடப்பட்ட இலக்கியப் பக்கங்கள், பகுப்பாய்வுக் கட்டுரைகள் அஜய் ப்ரசாத்தை ஒரு விமர்சகராக அங்கீகரிக்க வைத்தது. சமீபத்தில் இவருடைய சக எழுத்தாளர்களின் நிஜவாழ்க்கைக் கதைகளை வைத்து எடுக்கப்பட்ட ‘ஓகே வெல்லிப்போவாலி;’ திரைப்படத்திற்காக வசனம் எழுதி அதில் நடித்தார்.

                இவரின் எழுத்துக்கள் சமகால அடித்தள, விளிம்புநிலை மக்கள் வாழ்க்கைக் கூறுகளை அவர்களின் பக்கத்தில் நின்று பேசியிருப்பதுதான் முக்கிய அடையாளம் ஆகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.