கற்ரை கசடற


“சிவசேகரம் என்னைக் கொண்டு போய் ஹொஸ்பிற்றலில விடும்”

கடுமையான தோற்றத்தோடு வார்த்தைகளை எறிந்தாள் சாரதா. இவ்வளவு நாளும் இல்லாது தடித்திருந்தது அவள் குரல். எறியப்பட்ட வார்த்தைகள் சுவர் எங்கும் தொங்கி ஆட்டம் காட்டின.

அதுதான் அவளது கடைசி வார்த்தைகளும் கூட.

கற்ரை பிரம்பனின் கால்கள் நிலத்தில் ஒட்டியது போல் நிலத்தை தேய்ந்து தேய்ந்து நகரும்.. கொஞ்சம் கூனல் போட்ட உடம்பில் எல்லாம் தொங்கின. விடிய ஆறுமணிக்கு “டாண்” என்று இன்றும் அவரால் எழும்ப முடிந்தது. எழும்பித் தன் சின்ன நடையில் அந்த உயர்மாடிக் கட்டிடத்திற்குள் நகர்ந்தபடியிருப்பார். விடிந்ததும் அவர் முதல் வேலை கடும் சாயத்துக்குள் பாலைச் சுண்டக்காய்ச்சி ஊற்றி, அளவாகச் சீனி போட்டு படுக்கையில் சாரதாவுக்கும் குடுத்து தானும் குடிப்பதுதான். சாரதா புன்னகையோடு அவரின் ஒற்றைக் கையைப் பிடித்தபடி தேனீரைக் குடிப்பாள்.

 

தற்போது கற்ரையை விட சாரதாவால் வேகமாக நடக்க முடிகின்றது. இருந்தும் கற்ரையின் வேகத்தோடு தானும் நடக்க அவள் தன்னைப் பழக்கிக் கொண்டாள். சாரதாவிற்கு தான் பிறந்ததிலிருந்து கற்ரையோடே வாழ்வது போலொரு பிரமை. அவனோடு ஒட்டியபடி எத்தனை ஆண்டுகள்? எண்ணிப் பார்ப்பதில்லை.

திருமண நாட்கள் வருடா வருடம் வந்து போகும். பி்ள்ளைகள் பேரப்பிள்ளைகள் வருவார்கள். சந்தோஷம். திருமணம் பேச்சுத் திருமணம் தான். பொம்மிளை பார்க்கின்ற கூத்தெல்லாம் நடக்கவில்லை. கற்ரையின் அம்மா அவருக்கு சாரதாவின் படத்தைக் காட்டும் போது, அம்மாவின் வாயோரச் சிரிப்பில் தெரிந்தது, அம்மாவுக்கு சாரதாவை நன்றாகப் பிடித்துப் போய்விட்டதென்று. கற்ரை அப்போது எதையும் சிந்திக்கும் மனநிலையில் இருக்கவில்லை. அப்பா இல்லாமல் வளர்ந்ததால்  அம்மாவின் ஆசையேனும் பூர்த்தி செய்யும் மனநிலைதான் அவருக்கு.. அத்தோடு வரப் போகும் பெண்ணை மனம் நோகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதில் திடமாகவுமிருந்தார்.

சாரதாவுக்கு தன்னைப் பிடித்திருக்கின்றதா என்று கேட்டு கடிதம் போட்டார், பதிலில் கற்ரைக்கு பிடித்த நாகரீகமிருந்தது. இவளோடு வாழ்க்கையை இணைத்துக் கொண்டால் வாழ்தலைக் கற்றுக் கொள்ளலாம் என்று அவர் நம்பியதைப் போல, அவளுக்கும் பட்டிருப்பது அவருக்கு திருப்தியைத் தந்தது. கோயில், கீயில் , சாத்திர சம்பிரதாயம் எல்லாம் இல்லாத “பேசப்பட்ட” அந்தக் கால புரட்சிகர  கலியாணம்.  பெரிசுகள் முகஞ்சுளித்தார்கள், சாரதா பெருமைப் பட்டாள்.  அன்றிலிருந்து இன்று வரை காலை ஆறுமணிக்கு பால் சுண்டக் காய்ச்சி, கடும் சாயத்துக்குள் ஊத்தி அளவாகச் சீனி போட்டு, சாரதாவுக்கு படுக்கையில் தேத்தண்ணி  கொடுக்கிறதில் தொடங்கும் கற்ரை பிரம்பனின் நாள்.

நிமிர்ந்த ஆறடி உயர சிவசேகரம், வெள்ளை வேட்டி, நசனல்,  கையில் பிரம்பென பள்ளியை சுற்றிச், சுற்றி வருவார். சும்மா பிள்ளைகளை வெருட்டத்தான், பிரம்பு நுனிகூட பிள்ளைகள் மேல் படாது. தமிழ் வகுப்பில் ” கற்க கசடற”, வாயில் நுழையாது. “கற்ரை, கற்ரை”  என்பார். மாணவர்கள் அவருக்கு “கற்ரை பிரம்பன்” என்று  பட்டப் பெயர் கொடுத்து மகிழ்ந்தார்கள். மாணவர்களின் சேட்டைகளை சாரதாவோட சேர்ந்து  சமைக்கிற நேரம் கதை, கதையாச் சொல்லிச் சிரிப்பார்.

அன்றிலிருந்து சாரதாவும் அவரை கற்ரையென்று காதலோடு அழைக்கத் தொடங்கிவிட்டாள்.

தேத்தண்ணிக்குப் பின்னர் இரண்டு பேரும் சுருக்கு, சுருக்கெண்டு கையாட்டி ஒருமணித்தியாலம் ஊர் சுற்றி நடந்து வந்து, வெளிக்கிட்டுக் கொண்டு, ஆளுக்கு ஒரு பக்கமா வேலைக்கு போவார்கள். சாரதாவுக்கு வங்கியில் வேலை.

கனடா வந்து இருபது வருசமாகிவிட்டது. பிரம்பன் பழக்கத்தை மாற்றவில்லை. என்ன, குளிர் காலத்தில் மட்டும் தேத்தண்ணிகுப் பின்பு சாரதாவையும் இழுத்து வைத்துக்கொண்டு அரைமணித்தியாலம் யோகாசனம் செய்வார். சேர்கஸ்சில மிருகங்களப் பார்க்கின்ற கணக்காய் பேரக்குட்டிகள் சுத்தியிருந்து வேடிக்கை பார்க்கும்.

இத்தனை வருடங்களில் கற்ரை மாற்றிக்கொள்ளாத இன்னொரு விடையமும் இருந்தது. அதை சாரதாவிற்குத் தெரியாமல் பாதுகாத்து வந்தார். அதுதான் காமாட்சி கற்ரைக்கு எழுதிய காதல் கடிதங்கள். விடிய தேத்தண்ணியின் பின்னர் சாரதா எழுந்து தனது நாளை தொடங்கு முன்னர், தனியாகக் கற்ரைக்குக் கிடைக்கும் சில மணிநேரத்தில் தவறாமல் காமாட்சியின் ஒரு கடிதத்தை எடுத்துப் படித்துப் பார்ப்பார். எவ்வளவு முயன்றும் அவரால் இந்தப் பழக்கத்தை மாற்ற முடியவில்லை.

திருமணத்தின் பின்னர், வேலை நிமிர்த்தமாய் பல ஊர்களில் அவர்கள் வாழ்ந்து விட்டார்கள். போர் காரணமாக பல புலப்பெயர்வுகளையும் கண்டுவிட்டார்கள். அங்கெல்லாம் காமாட்சியின் கடிதங்களும் அவரோடு நகர்ந்தவண்ணமிருந்தன.

 

வெள்ளை வேட்டி, நசனலைக் கைவிட்டு நெஞ்சுயரத் தூக்கி பெல்ட் கட்டிவிட்ட கழுசாணும், உள்ளுக்க செருகிவிட்ட நீட்டுக்கை சேட்டும், கையில  ஊன்று கோலுமாக வலம்வந்தாலும் கற்ரை பிரம்பன் என்ற  அவர் பெயர் அவரை வீட்டுப் போகவில்லை.  கனடாவிலும் அவரிடம் படித்த மாணவர்கள் ”எப்பிடி இருக்கிறீங்கள் கற்ரை பிரம்பன் மாஸ்டர்?” என்றுதான் சுகம் கேட்டார்கள்.

 

எந்தக் குளிர், சறுக்கல் என்றாலும் முதியோர் கூட்டத்துக்கு சோடிகட்டிப் போவதும் தடைப்படாது. முதியோர் கூட்டத்தில் கற்ரை கவிதை வாசிப்பதும், ஆங்கில மருத்துவ குறிப்பை தமிழில் மொழிபெயர்த்து சாரதா கொடுப்பதும், முதியோருடன் சேர்ந்து கொண்டு டூர் போவதும் “லவ் பேட்சின்ர” முக்கிய பொழுதுபோக்கு. அது கற்ரைக்கும், சாரதாவும் கிடைத்த செல்லப் பெயர்.

சாரதாவிற்கு வயிற்றுக் கான்சர் என்று  கண்டுபிடிக்கப்பட்டது. இப்ப மூன்று வருசமாச்சு கண்டு பிடிச்சு. அவளில் மாற்றமில்லை. பிரம்பனின் நெருக்கம் தான் அவளுக்கு மருந்து. அவன் எதைக் காய்ச்சிக் குடுத்தாலும் மறுக்காமல் குடிப்பாள். கேரளாவிலிருந்து எண்ணெய் எடுப்பிச்சு சாரதாவின் உடம்பு முழுக்கத் தேச்சு நீவி விடுவார் பிரம்பன்.  சாரதா “கற்ரை, கற்ரை” என்று கூப்பிட்டு அவனுடன் ஒட்டிக் கொண்டாள். சாரதாவுக்கு  எப்போதும் அவன் தொடுகை தேவைப்பட்டது. அவன் தொடுகை தன்னை உயிரோடு வைத்திருக்கும் என்று அவள் நம்பினாள். அவனும் தான்.

பிள்ளைகள் பேரப் பிள்ளைகளோடு இருப்பது ஒரு சுகம் என்றாலும், கற்ரைக்கு திடீரென்ற ஒரு ஆசை. தானும் சாரதாவும் மட்டும் தனியாக ஒரு இடத்தில் வாழவேண்டும் என்று. அதை சாரதாவிடம் சொன்னார். அவளுக்கும் பிடிச்சிருந்தது. பிள்ளைகளிடமும் சொன்னார். அவர்கள் எதிர்க்கவில்லை. அப்பாவின் குணத்தைப் பார்த்து வளர்ந்தவர்கள் அவர்கள். ஒரு அறை அப்பார்ட்மண்ட், மூத்த மகளுக்கு பக்கமாக எடுத்துக் கொண்டு நகர்ந்து விட்டார். அதன்  பிறகு முதிய நண்பர்களையும் கூப்பிட்டு வைத்துக் கொண்டு  சமையல் சாப்பாடும், பாட்டும் கூத்தும் தான். இப்பிடியும் சிலவருடங்கள் கழிந்தன. சாரதாவுக்கு கான்சர் என்பதை  கற்ரை மட்டுமல்ல மருத்துவர்களும் மறந்து போனார்கள்.

அன்று கடும் குளிர். நாடும், வீடும் என்றுமில்லாத மௌனத்தில் ஆழ்ந்திருந்தது. கற்ரை வழமைபோல் எழும்பி, மெல்ல மெல்ல குசினிக்குள் போய் கடும்சாயத்துக்குள் பாலைச் சுண்டக் காய்ச்சி ஊத்தி அளவாகச் சீனி போட்டு சாரதாவுக்கும் கொண்டு வந்து கொடுத்துவிட்டு, கட்டிலிருந்து ஊதி, ஊதி உறிஞ்சிக் குடிக்கத் தொடங்கினார்.  சாரதா மௌனமாகத் தேத்தண்ணியைக் குடித்து முடித்துவிட்டு, எழுந்த சென்று குளித்து உடைமாற்றிவிட்டு வந்தாள். அன்றைய அவள் நடத்தையில் ஒரு விறைப்பிருந்தது. கற்ரை அதைக் கவனிக்கத் தவறிவிட்டான். தேத்தண்ணிக் கோப்பைகளை எடுத்துக் கொண்டு கற்ரை குசினிக்குள் போய் அதனைக் கழுவிக்கொண்டிருக்கும் போது, ஒரு சிறு பையுடன் சாரதா வந்து சாப்பாட்டு அறையின் ஒரு கதிரையில் அமர்ந்துகொண்டாள். கற்ரை கோப்பைகளைக் கழுவிவிட்டு காலை உணவிற்கு கஞ்சி காய்ச்சுவதற்குப் பொருட்களை வெளியில் எடுக்கும் போது,

”சிவசேகரம் என்னைக் கொண்டு போய் ஹொஸ்பிட்டலிலை விடும்”

சாரதாவின் குரல் அசைவுகள் எதுவுமின்றி மிகவும் தட்டையாக இருந்தது. கற்ரைத் திடுக்கிட்டு முகம் நிமிர்த்திப் பாரத்தார். தட்டுத் தடுமாறி சாரதா அருகில் ஓடிவந்து

“என்னம்மா செய்யுது” என்று கேட்டுக்  கட்டிப்பிடிக்கப்போன பிரம்பனின் கையை சுருக்கென்று தட்டிவிட்டாள் சாரதா. அவன் தவிச்சுப் போனான். நாலு துணியை பாக்கில் அடைச்சு வைத்துக் கொண்டு கதிரையில திமிரா இருந்தாள். அவளைச் சுற்றிக் கந்தக வளையம். கற்ரைக்கு பயமா இருந்தது. பயத்தில் அவர் கைகள் அம்புலன்ஸ் நம்பர்களை அழுத்தின. மகளுக்கும் தகவல் சொன்னார். சாரதா அசையவில்லை. அம்புலன்ஸ் வந்து அவளைக் கொண்டு செல்லும் போது சாரதாவின் பார்வை கற்ரை பிரம்பனின் கண்களோடு நிலைத்து நின்றது. அதில் தீராத வெறுப்பை கண்டார் கற்ரை.

இரண்டாம் நாள் சாரதா ஆஸ்பத்திரியில் இறந்து போனாள். தன் தொடுகை விடுபட்டதால் அவள் இறந்தாளென அவர் நம்பினார். இரண்டு நாட்களின் பின்னர் அவளின் உடலை திரும்பவும் ஒருதரம் இறுக கட்டிப்பிடித்தார் கற்ரை. அது கல்லாய் கிடந்து மறுப்புக் காட்டியது.

வீட்டில் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், உறவுகள், நண்பர்களின் ஆரவாரம். நெஞ்சு, செமியாத சாப்பாடாய் சாரதாவின் கடைசித் தோற்றம் பாடாய்ப் படுத்த கட்டிலில் வந்தமர்ந்த கற்ரை பிரம்பன் விம்மினார். சுருங்கிப் போன நடுக்கும் கைகளால் கட்டிலில் சாரதாவின் பக்கத்தை நீவி விட்டார். என்றும் சூடுமாறாத அவள் பக்கம் சில்லென்றிருந்தது. நீவி, நீவி தலையணையின் கீழே சென்றது கைகள்.  தலையணை அடியில் காகிதம் தட்டுப் பட எடுத்துப் பார்த்தார். 1945ஆம் ஆண்டு காமாட்சி, சிவசேகரத்திற்கு எழுதிய காதல் கடிதங்களும், அவர்கள் ஒன்றாகச் சேர்ந்து எடுத்துக் கொண்ட பல படங்களும் நிறம்மாறிக் கிடந்தன. இத்தனை வருடங்களாகத் தன்னோடு பயணித்த இக்கடிதங்களும், படங்களும் சாரதாவின் கைகளில் எப்படி அகப்பட்டது என்ற தெரியாது தடுமாறிப் போனார் கற்ரை. தன் பக்குவமின்மை தனக்கு பிடித்த இரண்டு பெண்களின் சாவுக்கு காரணமாகிப் போன வாழ்வின் விந்தையை அவர் புரிந்து கொள்ள முயலவில்லை. ஒருத்தி தான் தொட்டதால் கொல்லப்பட்டாள், இன்னொருத்தி தன் தொடுகையை மறுத்து போய்ச் சேர்ந்தாள். கற்ரையின் விம்மல் நின்று போக அசையாதிருந்தார் கற்ரை.


-கறுப்பி சுமதி

1 COMMENT

  1. அந்நியோன்யம் மிக்க ஒரு தம்பதியருடைய வாழ்க்கையின் சில நிகழ்வுகள் அழகாக விளக்கப்பட்டுள்ள ஒரு கதை ! இருப்பினும் கணவனின் கடந்தகால நிகழ்வு ஒன்று ரகசியமாகவே பின்னிலையில் ஊர்ந்து கொண்டிருந்து, இறுதியில் ஒரு விபரீதத்தை விளைவிப்பதுவே கதை ! அழகான இலங்கைத் தமிழ் துள்ளி விளையாடுகிறது. கணவனின் தினசரி நடவடிக்கைகள், நோயாளி மனைவிக்குக் கணவன் செய்யும் பணிவிடைகள், மலரும் நினைவுகளாக அவர்களது புரட்சிகரக் கல்யாணம் போன்ற பல செய்திகள் மனதுக்கு ரம்மியத்தைத் தருகின்றன. எனக்குப் புரிந்தவரை இந்த கதை தரும் பாடம், ‘தம்பதியருக்குள் ரகசியம் கூடாது’ என்பதுவே . விறுவிறுப்பாகக் கதையை கொண்டு செல்லும் பாணி, நயமான எழுத்து இவை பாராட்டத்தக்கவை ! மொத்தத்தில் நல்ல ஒரு கதை !

    கி.பாலாஜி
    19.11.2019

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.