Wednesday, Aug 17, 2022

ஜிபனானந்த தாஸ் கவிதைகள்


வங்காள மூலம் : ஜிபனானந்த தாஸ்

ஆங்கிலம் : சிதானந்த தாஸ் குப்தா

தமிழில் : கு.அ.தமிழ்மொழி


  • எனக்குப் பெயரிடுங்கள்

எனக்குப் பெயரிடுங்கள்
சிறந்த, எளிய, வான் போல் பரந்த சொல்லால்
எனக்குப் பெயரிடுங்கள்
அந்தச்சொல்
நான் என்றென்றும் நேசிக்கும் பெண்ணின்
நன்கறிந்த கைபோல இருக்க வேண்டும்
கறை படிந்த, செல்லரித்த, வரலாற்றோடு
யாவரும் சோர்வுற்று, காயமடைந்து,
செரித்துப் போன அதன் உட்பாகங்களைக்
குருதியில் கழுவியாயிற்று
பசியுற்று இருக்கும் விலங்குகளுக்கென
மீதமிருந்த உணவைப் புசித்தவர்களின் குருதி அது

காற்றால் அலைக்கழிக்கப்படும் விண்மீன் ஒளி இரவு போல்
ஆவலுடன் எல்லாப் பறவைகளின்
மொத்தத் தாகத்தையும் பார்க்கக்கூடிய
எந்திரப் பொறி இறக்கைகள் கொண்ட பறவையாய்
அணையும் மெழுகுபத்தி, இறுதியாய் உமிழும்
தீ நாக்கைப் போன்ற ஒரு நாள் அது

ஜிபனானந்த தாஸ்


  • பூனை

அந்த நாள் முழுக்க அந்தப் பூனையைச் சந்தித்தபடி இருந்தேன்
மர நிழலில், கதிரவ ஒளியில்,
இலைகளின் அடர் நிழல் இடையில்,
சில மீன் முட்கள் கிடைத்த வெற்றிக்குப் பின் ,
தேனீக் கூட்டம் போல தன்னுள் குறுகி
வெள்ளெலும்பு நிறப் பூவுலகை அணைத்தபடி கிடந்தது
ஆனாலும் அது குல்மொகர் மரத்தின்
தண்டுப்பகுதியைப் பிறாண்டுகிறது
பரிதியைப் பின்தொடர்ந்து நடக்கிறது
ஒரு கட்டத்தில் அது அங்கே…
அடுத்து மறைந்துவிட்டது
மெதுமெதுப்பான தன் வெண்ணிறப்
பாதங்களால் வருடுவதை
இலையுதிர்காலப் மாலைப்பொழுதொன்றில் கண்டேன்
சிறியப் பந்துகளாய், ஒவ்வொன்றாய் அதன்
பாதங்களால் குத்திப் பறிப்பது போல்
முதலில் அந்த கருஞ்சிவப்புக் கதிரவன் பிறகது
இருளையும் ஒன்றுசேர்த்து
இவ்வுலகம் முழுதும் பரவச் செய்கிறது


  • ஆரஞ்சு

நான் ஒருமுறை இறந்துவிடின்
மீண்டும் இவ்வுலகிற்குத் திரும்பி வர இயலுமா?

அப்படியே நான் வருவதென்றால்
ஒரு பனிக்கால இரவில்
இறந்துபோன ஒருவரின் அருகிலே
மேசை மேல் வைக்கப்பட்டுள்ள
வலுவிழந்த, பாதி உண்ணப்பட்ட
ஆரஞ்சு பழத்தின் குளிர்ந்த தசையாக இருக்கச் செய்வேன்.

கு.அ.தமிழ்மொழி


  • நிலத்தின் உச்சியில் நிலா

நிலா என்னை உற்றுப்பார்க்கிறது
என்னைச் சுற்றிப் பயிரிடாத நிலங்கள் படுத்திருக்கின்றன
பனித்துளியைக் கொள்ள அவற்றில் பிளவுகள்
கதிர் அரிவாளைப் போல வளைந்து, கூராக..
முடிவிலா இரவுகளால்
ஏதோ செய்து முடித்துவிட்டதைப் போல்
பார்க்கிறது நிலா

என்னிடம் நிலா சொன்னது:
அறுவடை முடிந்துவிட்டது
அரிவாள் முனையும் மழுங்கிவிட்டது
வைக்கோல் திரட்டப்பட்டிருக்கிறது
வயல்கள் காலியாய் இருக்கின்றன
நிலத்தின் வெடிப்புகள் முழுக்க பனித்துளிகளால் நிரம்பி இருக்கின்றன
பிறகேன்
நீ
இங்கே தனியாக நின்றுப் பார்த்துக்கொண்டிருக்கிறாய் ?

நான் விடையளித்தேன்:
அளவிலா பயிர்கள் வளர்ந்துவிட்டன
அறுவடையும் வீட்டிற்குச் சென்றாயிற்று
இவ்வுலகைப் போல் உனக்கும் முதுமை வந்துவிட்டது
அரிவாளின் முனை பன்முறை மழுங்கிவிட்டது
நிலத்தின் வெடிப்புகள் பனித்துளிகளால் நிரம்பி இருக்கின்றன
வைக்கோல் பண்பட்டுவிட்டது
பிறகேன்
நீ
இந்தப் பயிரிடாத நிலங்களின் உச்சியில்
தனியே நின்று பார்த்துக்கொண்டிருக்கிறாய் ?


ஆசிரியர் குறிப்பு:

ஜிபனானந்த தாஸ்:

1899 பிப்ரவரி 17 இல் பிறந்த ஜிபனானந்த தாஸ் கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் முதுகலை ஆங்கில இலக்கியம் கற்றார். இவரின் தாயார் குசும்குமாரி தாஸ் வங்காள இலக்கியத்தில் குறிப்பிடத்தக்க பாவலர். தந்தை சத்யானந்த தாஸ் பள்ளி ஆசிரியரும், சமூக செயல்பாட்டாளரும் ஆவார் . 12 ஆம் அகவையிலேயே வங்க மொழியில் பா எழுதத் தொடங்கிய ஜிபானானந்த தாஸ் பின் ஆங்கிலத்திலும் எழுதினார். முதல் பாத் தொகுப்பு JHARA PALAK ( FALLEN FEATHERS ) 1927 ஆம் ஆண்டு வெளியானது இவருடைய தொடக்கக் காலப் பாடல்கள், வங்காளத்தின் கிராம மற்றும் இயற்கை எழில் குறித்தும், பிந்தையவை நகர வாழ்க்கையின் மனச்சோர்வு, எண்ணக்குலைவு, தனிமை இவையும் கருப்பொருளாக அமைந்தது. புதினங்கள், சிறுகதைகளில் திருமண வாழ்வின் சிக்கல்கள், பாலியல் உறவுகள் மேலும் அவர் வாழ்ந்த கால சமூக அரசியல் ஆகியவற்றை அலசியது.                  

ஷ்ரேஷ்த கவிதா ( SHRESHTHA KAVITA ) என்ற தொகுப்புக்காக 1955 ஆம் ஆண்டு சாகித்ய அகாதெமி விருது இவருக்கு வழங்கப்பட்டது. இரவீந்திரநாத் நினைவு விருதை  பனலதா சென் ( BANALATA SEN ) என்ற நூலுக்காகப் பெற்றார் பாடல்கள் மட்டுமன்றி கட்டுரைகள், புதினங்கள் மற்றும் சிறுகதைகளையும் இயற்றியவர்.               தாகூர், நஸ்ருல் இஸ்லாம் ஆகியோர் போல பேசப்படவேண்டிய சிறந்த பாவலர். 29.10.1954 இல் சாலை நேர்ச்சியால் மறைந்தார்.

கு..தமிழ்மொழி:

கு..தமிழ்மொழி கவிஞர், பண்பலை தொகுப்பாளர், மொழிபெயர்ப்பாளர். புதுச்சேரியைச் சேர்ந்த இவர் தன்னுடைய  ஆம் அகவையில் எழுதத் தொடங்கியவர்.  12 ஆம் அகவையில் “சிறகின் கீழ் வானம்” என்ற துளிப்பா நூலை வெளியிட்டார்அவருடைய எழுத்தாற்றலைப் பாராட்டி நடுவண் அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை 2007 ஆம் ஆண்டுக்கான “தேசியக் குழந்தை விருது” அளித்து சிறப்பித்தது. “கல்நில்! வெல்!”, “திரி திரி பந்தம்” ஆகிய இரு சிறார் பா நூல்களையும், “புத்தனைத் தேடும் போதிமரங்கள்” என்ற துளிப்பா நூலையும், “நினைவில் வராத கனவுகள்” என்ற புதுப்பா நூலையும் இயற்றியுள்ளார். அண்மையில் “பறக்கும் பூந்தோட்டம்” என்ற சிறார் கதைகள் நூலும் வெளியாகி உள்ளது.

பகிர்:
No comments

leave a comment

error: Content is protected !!