காவு

மலாவால் தூங்கவே முடியவில்லை. இரவெல்லாம், எதிர்காலமே இருண்டுபோன எண்ணங்களில் நித்திரை தொலைந்து போனது. அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த பிள்ளைகளை அணைத்தபடி அறையின் இருட்டையே பார்த்துக் கிடந்தாள்.  சூரியன் உதிக்காமலேயே பொழுது மெல்ல விடிந்தபோது, மழை இன்னும்கூட தூறிக்கொண்டே இருந்தது.

மழைக்குச் சனியன் பிடித்துவிட்டதென்று சலித்துக்கொண்டே எரியும் கண்களைக் கசக்கியபடி கமலா எழுந்தாள்! விடுமுறை எடுத்து வீட்டிலேயே இருந்துவிட வேண்டுமென்றே மனம் விரும்பியது. ஆனால், பார்த்து முடிக்கவேண்டிய கோப்புகள் சில அன்றைய கெடுவில் இருந்தன. வேலைக்குப் போயே ஆகவேண்டிய தலைவிதியில், கவலைகள் நிரம்பிய மனத்தின் பாரம் தலையில் கனக்க, அதிகாலையிலேயே (1)‘மீஞ்ஞாக் காப்பாக்’ எண்ணெய்யை நெற்றிப் பொட்டுகளில் தேய்த்து விட்டுக்கொண்டாள்.

நேற்று, பிள்ளைகளின் கண்ணெதிரிலேயே ‘அம்மா’ என்ற ஸ்தானத்தை அசிங்கமாய் சிதைத்துக்கொண்டு நின்றதில் அவளுக்கு ஒரு தெளிவு பிறந்திருந்தது. கோபி, வன்மத்துடன் அவமதித்துக் கத்திய வார்த்தைகள்  அப்படியே நெஞ்சில் குத்திக்கொண்டு துருத்தின. இதற்கு மேலும் அனுசரித்துக்கொண்டு போனால் பிள்ளைகள் சிதைந்து போவார்கள் என்ற பயம் பிடித்துக் கொண்டது. என்ன செய்வதென்று தடுமாறுவதற்குத் தேவையே இல்லாமல் ஒரே முடிவு, அது ஒன்றே முடிவாக உறக்கம் கெட்டுப்போன இரவில் அவளுக்குத் தோன்றியது.

கோபியைக் காணவில்லை!. அவன் எப்போது போனானென்றே தெரியவில்லை! அவன், இப்போதெல்லாம் முடி உதிரும் ரகசியத்தைப்போல் தனது நடவடிக்கைகளைச் செய்துகொள்ளத் தெரிந்து வைத்திருந்தான்.

கமலா, வழக்கம் போல் பெரியவர்கள் இருவரையும் பள்ளியில் இறக்கி விட்டு, மூன்றாவது மகளை ‘பேபி சிட்டர்’ வீட்டில் விட்டுவிட்டு வேலைக்குப் புறப்பட்டாள்.

தோழி, கல்யாணியைப் பார்க்க மனசு ஏங்கித் துடித்தது!. அவளின்  ஆலோசனையும்; ஆறுதலும் இவளுக்கு உடனடியாகத் தேவைப் பட்டது. கமலா, பார்க்கத்தான் மிகவும் தைரியமாகவும் ஒரு முடிவுடனும் இருப்பதுபோல் தோன்றினாலும் உண்மையில், மிகவும் குழம்பியே போயிருந்தாள். எதிர்காலத்தை நினைத்துப் பார்க்கவே அஞ்சியவளாய் சிந்தை சிதறிக் கிடந்தாள்.

‘அம்மாவின் அனுபவத்தில் அவனிடம் எதைக் கண்டாளோ! அவனைப் பார்த்த மாத்திரத்திலேயே பிடிவாதமாக வேண்டாமென்று எச்சரித்தாளே!..’

ஏனோ, அன்று தன் தாய் எச்சரித்தது இப்போது, மீண்டும் மீண்டும் நினைவுக்கு வந்து அவளை அலைக்கழித்தது. தாயைப் பகைத்துக்கொண்டு போய், அவனைக் கைபிடித்ததற்குத் தண்டனையா இது? அம்மா ஆத்திரத்தில் அவசரப்பட்டு, ‘நீ நாசமா போவ!..’ என்று ஏதும் சபித்துவிட்டாளோ?..

* * *

முதலில், ஒரு சந்தேகமாகவே கணவனின் நடவடிக்கைகளைக் கமலா கவனிக்கத் தொடங்கினாள். அதுவும், அவளாக வலிந்து அதைச் செய்யவில்லை! பாவி, அவனே அதற்கான சமிக்ஞையைக் காட்டினான்!.  கொஞ்ச நாட்களாகவே அடிக்கடி தனிமையை நாடினான். புதியதாக முளைத்த ஓர் உறுப்பைப்போல் கைப்பேசி, அவன் உள்ளங்கையிலேயே அடங்கிக் கிடந்தது.

அன்று, கமலா சமையலுக்கான வேலையினூடே சுவரில் மாட்டப்பட்டிருந்த கண்ணாடியில் தெரிந்த கணவனை ரகசியமாய்ப் பார்த்துக்கொண்டிருந்தாள். அவனும், அடிக்கடி சமையலறைப் பக்கமாய்ப் பார்த்து, எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்றிக்கொண்டிருந்தான். உதடுகளில் அவ்வப்போது நெளிந்த புன்முறுவலோ, நெருப்பைக் கிளறி விட்டுக்கொண்டிருந்தது. கமலா, கொதித்துக் கொண்டிருந்தாள். மூடி வைக்கப்பட்ட உலை பொங்கி வழிந்தது!…

“யாரது போன்ல?. எங்க, கொண்டாங்க பாப்பம்!..” என்று கத்தி, கைப்பேசியைப் பறிக்கப் போனாள்.

“ஏய், ஒனக்கென்னா (2)கீலாவா புடிச்சிரிச்சி?.. கையில உள்ள போன புடுங்குற!.” – அவன் ஆத்திரத்தில் திமிருடன் எழுந்து நின்றான்.

“ஆமா, எனக்கு கீலாதான் !.. இருக்கட்டும்!.. போன்ல யாரு? மொத அத சொல்லுங்க..”

“கூட்டாளி!..”

“கூட்டாளின்னா?.. ஆம்பளயா.. பொம்பளயா?…” – கமலாவுக்குச் சந்தேகமெல்லாம் இல்லை! அதனாலேயே பொறாமையில் தகித்துக் கொண்டிருந்தாள்.

“ஆம்பளதான்!.. அதுக்கின்னா இப்ப?” உண்மையை நிலைநாட்ட, உரக்கக் கத்த வேண்டும் என்று அவன் நம்பினான் போல!..

அந்த அபத்தத்தைக் கமலாவால் தாங்கமுடியவில்லை. அவனை அவமதித்து வன்மையாகப் புண்படுத்தும் ஆத்திரத்தில் வாய், வரம்பை மீறியது.

“ஓ, நீங்க எப்ப (3)பொண்டானா மாறினீங்க?..”

அந்த ஏளனத்தில் ஆண் என்ற அகங்காரம் வீறுகொண்டெழுந்தது. கேவலம், தன் மனைவியே அப்படிச் சொன்னதை அவனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

“என்னடீ சொன்ன?.. அஞ்ஜடிக்கார நாயே..” என்று, அவளின் கன்னத்தில் ‘நான் ஆண்!’ என்ற திமிரைப் பதிவு செய்தான்.

அந்த அறை, தம்மேல் விழுந்ததுபோல் பிள்ளைகள் மூவரும் ‘அம்மா..’ என்று அலறிக்கொண்டு வந்து, தாயைச் சூழ்ந்துகொண்டனர். கமலா, பொறி கலங்கிப்போனாள். கன்னத்தில் பதிந்திருந்த விரல்களின் தடயத்தைத் தடவ, கண்ணீர்  பெருகியது. இந்த பதிமூன்று வருடத் திருமண வாழ்க்கையில் இப்படியொரு வன்முறைக்கு அவள், ஆளானதில்லை! அதனால், மிகவும் வலித்தது. அவனை அவமதித்துக் காயப்படுத்தும் கோபத்தில் சொன்ன வார்த்தையாலேயே அவன் நிதானமிழந்து போனான் என்று சமாதானம் அடைந்தாலும், ‘இவ்வளவுக்கும் காரணமே அவன் தானே!.’ என்ற ஆத்திரம் நெஞ்சை அடைத்தது.  அது, வெறும் சபலத்தில் ஏற்பட்ட உறவாய் அவளுக்குத் தோன்றவில்லை. இப்போதெல்லாம் இரவில், அது அப்பட்டமாகவே தெரிந்ததே!.

‘இது என் முகத்தில் துப்பப்பட்ட எச்சில்!.. கணவன் என்ற உறவின் அபத்தம்!.. எங்கள் தாம்பத்தியத்தின் அவமதிப்பு!.’

சிறு சிறு சச்சரவுகளுக்கு உட்பட்ட வாழ்க்கைதான்!. ஆனால், என்றுமே அவை அவர்களின் திருமண பந்தத்தையே அசைத்துப் பார்க்கும் உக்கிரத்தைக் கொண்டிருந்ததில்லை!.  ஆனால் இது, அப்படிப்பட்ட ஒன்று இல்லையோ என்று அவளுக்கு அச்சமாய் இருந்தது. இருவரும் பேசியே  ஐந்து நாட்கள் ஆகிவிட்டிருந்தன!. கமலா, தணிந்து போகத் தயாராகவே இருந்தாள். ஆனால், கோபி முரண்டு பிடித்த ஒவ்வொரு நாளும் அவளின் வீம்பை, இன்னும் அதிகரிக்கவே செய்தது. மேசையில் வைக்கப்பட்ட உணவிற்கு முதலில் பிள்ளைகள் தூது போயினர். அவனோ அவர்களைச் சட்டைசெய்ததாகவே காட்டிக்கொள்ளவில்லை!. வீட்டில் சாப்பிடுவதையே தவிர்க்க ஆரம்பித்திருந்தான். கமலாவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை!. ஆயிரந்தான் என்றாலும்  அவனுக்காகத் தன் குடும்பத்தையே உதறிக்கொண்டு வந்த காதல் கணவன் அவன்!.

கமலா, இரங்கி வந்தாள்!

“சாப்பிடறீங்களா?..”

பதிலில்லை!. அவள் இன்னும் இரங்கி வந்தாள்.

“உங்களதான்லா (4)சாயாங்!. சாப்பாடு எடுத்து வெக்கிட்டா?.”

அவன் அங்கேயே இல்லை!. வேண்டுமென்றே கைப்பேசியில் ஒட்டிய கண்களுடன் குறுஞ்செய்தியைக் குத்திச் சிரித்துக்கொண்டிருந்தான். அவனுடைய உதாசீனத்தில் ஒரு நிர்ப்பந்தம் தெரிந்தது. அவளால் அந்த அவமதிப்பைத் தாங்க முடியவில்லை. கொந்தளித்துப் போனாள்!. சமரசத்திற்கு வரமுடியாத தூரத்திற்கு அவன், வலிய விலகிப் போவதாகத் தெரிந்தது. அந்த விலகலை உணர்த்தச் சீக்கிரமே அவன் மேற்கொண்ட செயலோ அவளை,  அவமானம் தாளாது துடிதுடிக்க வைத்தது.

நேற்றைய ஞாயிற்றுக்கிழமை, காலையிலிருந்தே அவன் வீட்டிலில்லை. இருவருக்கிடையே பேச்சு வார்த்தை இல்லாதது அவனுக்குச் சாதகமாய்  போனது.

மாலையில், அவன் வீட்டிற்கு வந்தபோது கமலா கைப்பேசியின் கண்ணாடித் திரையைத் தேய்த்தபடி,  தேநீர் குடித்துக் கொண்டிருந்தாள். பிள்ளைகள் மூவரும் ஹாலில் டெலிவிஷன் பார்த்துக்கொண்டிருந்தனர். வந்தவன், நேராகக் குளிக்கப் போனான்.  அவளைக் கடந்து போகும்போது அவன்மேல் வீசிய ‘அத்தரின்’ வாசம், புதிதாக இருந்தது! ஆரம்பத்தில், முகம் சுழிக்க வைத்த வியர்வை நாற்றத்தையே  நாளடைவில் அவனுடைய அடையாளமாய்ப் பூண்டு, அவளைக் கிறங்கடித்தவன் அவன்!.    உடனே கமலா, ‘அந்த ‘பிட்ச்’ வாங்கி குடுத்திருப்பா போல..’ என்று பொறாமையுடன் நினைத்துப் பொருமினாள். ஆனால், வாசம் நாசிக்கு இதமாக இருந்தாலும் நெஞ்சில் நஞ்சைத் தூவியது. இப்படியெல்லாம் தானும் காதலைப் பரிமாறிக்கொண்ட  காலம், குழந்தை பிறந்ததோடு முடிந்து போனதைக் கழிவிரக்கத்தோடு நினைத்துக்கொண்டாள். கோபம் பாரிய உணர்ச்சிகள், கொதிநிலையில் தளும்பிக்கொண்டிருந்தன. நீண்ட குளியலுக்குப் பின்னர், கைலியை மட்டும் கட்டிக்கொண்டு வெற்றுடம்புடன் டெலிவிஷன் பார்க்க உட்கார்ந்தவன், பிள்ளைகள் பார்த்துக்கொண்டிருந்த கார்ட்டூன் சேனலை மாற்றினான். பிள்ளைகள் சலிப்புடன் எழுந்து தாயிடம் போயினர். ஒவ்வொரு சேனலாக மாற்றிக்கொண்டிருந்தவன், ‘ஆஸ்ட்ரோ அவானி’ சேனலில், உள்நாட்டு சிறுமிகள் இருவரின் மேல்முறையீட்டு வழக்கொன்றிற்கு உச்ச நீதிமன்றம் அளித்த பரபரப்பு தீர்ப்பு, அவனின் ஆர்வத்தை ஈர்த்தது. கும்பல் ஒன்று பதாகைகள் ஏந்தி, உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தது. அந்தப் பிள்ளைகளின் தாயோ பாவம், சாலையில் உருண்டு புரண்டு தலையிலும்; வயிற்றிலும் அடித்து அழுதுகொண்டிருந்தாள். அவளுடைய வழக்குரைஞர்களோ அவளை ஆசுவாசப்படுத்த முடியாமல் தவித்துக் கொண்டிருந்தனர். கமலா, அத்தாயின் புலம்பலைப் பார்க்கச் சகிக்காமல் முகத்தைத் திருப்பிக்கொண்டு, கோபியையே வெறிக்கப் பார்த்துக் கிடந்தாள். அவனோ, அந்தத் தாயின் புலம்பலில் அவ்வளவு பரவசம் அடைந்தவன் போல் அதில் லயித்துக் கிடந்தான்.

அப்போதுதான், கமலா அந்த அசிங்கத்தைப் பார்த்தாள்! ‘அவனுடைய சிவந்த மார்பு மற்றும் கழுத்தில் சிவந்து கன்றிப் போய்த் தெரிந்தவை என்ன, முத்த அடையாளங்களா?’ தனக்குத் தெரிய வேண்டும் என்பதற்காகவே அவன் வெற்றுடம்புடன் வந்திருப்பதாகத் தோன்றியபோது, அவள் நிதானத்தை இழந்தாள். அவனுடையத் திமிர், அவளை வெறி பிடிக்க வைத்தது. அந்தப் பற்குறியில் யாரோ ஒருத்தி, தன் தாம்பத்தியத்தில் அத்துமீறி நுழைந்திருந்த அசிங்கத்தைப் பார்த்துக் கொந்தளித்துப் போனாள்!.  அந்த அசிங்கத்திற்கு இடங்கொடுத்ததும் இல்லாமல்  அதை வேண்டுமென்றே பெருமையுடன் அப்பட்டமாகக்  காட்டிக்கொண்டு நின்ற அவனின் அராஜகம், அவளை வெகுண்டெழச் செய்தது. சற்று முன்னர், பணிந்துபோக நினைத்த எண்ணமெல்லாம் பாழாய்ப் போனது.

நேராக அவனெதிரே போய் நின்று, அவன் கழுத்தைக் காட்டிக் கத்தினாள்.

“ஏய், இதெல்லாம் என்ன அசிங்கம்?..” வேறு எப்படியும் அவனை அழைக்க அவளுக்குத் தோன்றவில்லை. நெஞ்சு படபடத்துத் துடித்தது. அந்த அலறலைக் கேட்டு பிள்ளைகள் மூவரும் திகைத்துப்போய் முழித்தனர். ‘அம்மா..’ என்று, தேம்பிக்கொண்டே அவளை அனுக முடியாமல் ஒதுங்கி நின்றனர்.

“அசிங்கமா?.. பழசெல்லாம் மறந்து போச்சா?.. இதெல்லாம் இப்ப அசிங்கமா போனது தாண்டி உன்னோட பிரச்சின..”

“அப்படின்னா, இதுக்கெல்லாம் என்ன அர்த்தமாம்?..”

“தெரியாது?.. வாய் இருக்குறது உன்ன மாரி நேரத்துக்கு கொட்டிகிறதுக்கும், இப்படி கீலா மாரி கத்தறதுக்கும் மட்டுமே இல்ல!..”

அந்த அவமானம் அவளை நிதானம் இழக்க வைத்தது. பிள்ளைகள், கண்ணெதிரிலேயே இருப்பதை ஒரு கணம் மறந்தே போனாள்!

“எந்த தேவடியாவப் …. .. ….. வரிங்க?.  அஞ்ஜடிக்கார நாயே!…த்தூ..”   என்று கையிலிருந்த தேநீரை அவன் முகத்தில் வீசியடித்து, அவன் மேல் காறித்  துப்பினாள்!..

கோபி அதைக் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை!.. இப்போது வெறி, ஆள் மாறியது! அவன், பாய்ந்து அவள் தலை முடியைப் பிடித்திழுத்து,

“இந்த மாரி வேலையெல்லாம் எங்கிட்ட வெச்சுக்காதடி பேப் …” என்று கத்தி, அவளின் பிடரியில் ஓங்கி அறைந்து, அவளை வன்மத்துடன் பிடித்துத் தள்ளினான். அவள், சுவரில் மோதி தரையில் விழுந்தாள். பிள்ளைகள் மூவரும் தாயைச் சூழ்ந்து, கைகளை உதறிக்கொண்டு ‘அம்மா.. அம்மா…’ என அழுது துடித்தனர்.

பிள்ளைகளை வாரி அணைத்துக்கொண்டாள்.. அவர்களின் முகங்களைப் பார்த்ததும் சற்றுமுன்னர் தான் பேசிய ஆபாசமான வார்த்தைகள்தாம் அவளுக்கு நினைவுக்கு வந்தன. தன்னால் இப்படியெல்லாம் கூட பேச முடியுமென்று அவள் நினைக்கவேயில்லை! மூத்தவளின் முகத்தைப் பார்க்க முடியாமல் அவமானத்தில் குறுகிப் போனாள்.

* * *

மலா, ஆபீசிற்குள் நுழைவதற்கு முன்பே காண்டீனில் தோழி கல்யாணியைப் பார்க்க நேர்ந்தது மிகுந்த ஆறுதலைத் தந்தது.

“கமலா, என்னாச்சிடி உனக்கு? மூஞ்சி ஏன் இப்படி இருக்கு? அழுதியா?..” என்று கல்யாணி கேட்ட அக்கறையில், இவள் உடைந்து போனாள்.

சுவர் ஓரமாய் மறைந்துகொண்டு, கைக்குட்டையால் அழுகையை வாயிற்குள்ளேயே பொத்திக்கொள்ளப் பார்த்தாள். வாயிற்குள் அடைக்கப்பட்ட அழுகை, கண்களில் பொத்துக்கொண்டு  தாரை தாரையாய் வழிய ஆரம்பித்தது. நடந்ததைக் கேட்டு தோழி, பதைபதைத்துப் போனாள். கமலாவின் கஷ்டம் இப்போது, கல்யாணியையும் பற்றிக் கொண்டது. கமலா, பரிதாபமாய் கல்யாணியைப் பார்த்தாள்.

“கமலா, உன்னோட கோவம் எனக்கு புரியுது. ஞாயமும்கூட. ஆனா, நீ இப்ப தனி ஆளு இல்லியேடி!. மூனு பிள்ளைங்கள வெச்சிக்கிட்டு ஒண்டியா உன்னால சமாளிக்க முடியுமா!.  உங் குடும்பத்த பகைச்சிக்கிட்டு செஞ்ச கல்யாணம் வேற!.. உங்கம்மாவோட ஆதரவு கெடக்கிமா? எதுக்கும் உம் மாமியா கிட்ட பேசி பாக்கலாமேன்னு எனக்கு தோனுதுடி…”

தோழி சொன்னதைக் கேட்கக் கலவரமாய் இருந்தது. தன் ஒருத்தியின் வருமானத்தில் சமாளிக்க வேண்டியிருந்த மாதச் செலவுகளைத் தோழி நினைவூட்டியபோது, இவள் மிரண்டு போனாள்.

‘ஆத்தரத்துல நாந்தான் ரொம்ப அவசரப்பட்டுட்டேனோ?.. கெட்ட வார்த்தையெல்லாம் பேசி மொகத்துல வேற காறித்துப்பிட்டேனே?.. அதுவும் சொந்த பிள்ளிங்க முன்னாடியே!.. எந்த அப்பனாலதான் அந்த அவமானத்த பொறுத்துக்க முடியும்?..’

கோபியின் துரோகத்தை நினைத்து மனம் கொந்தளித்தாலும் தனது அநாகரிகமான செயலால் அவளுக்கு அவன் மேல் இப்போது, இரக்கமே சுரந்தது. கொஞ்சம் நிதானத்துடன் இதை அனுகியிருக்கலாமோ என்று மனசு உறுத்தியது.

உடனே கணவனின் கைபேசிக்கு அழைத்தாள். அழைப்பு கிடைக்கவில்லை. மன்னிப்பு கேட்டு குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பி வைத்தாள். பட்டுவாடா ஆகாமல் அந்தரத்திலேயே இருந்தது.

கமலாவால் வேலையில் கவனம் செலுத்தவே முடியவில்லை! வீட்டிற்குப் போகத் துடித்தாள். கணவனிடம் நயமாய்ப் பேசி, மன்னிப்பு கேட்கத் தவித்தாள். அவனை நம்பி குடும்பத்தையே உதறிவிட்டு வந்த அவளுக்கு, அவன் செய்வது பச்சை துரோகம் என்பதை அவன் உணரும்படி எடுத்துச் சொல்ல வேண்டுமெனத் தீர்மானித்துக்கொண்டாள். உதவிக்குத் தோழி சொன்னதுபோல்,  மாமியாரை அழைத்துக்கொள்ளும் ஆலோசனை ஆறுதலைத் தந்தது.

கணவனின் அவமதிப்பு, அவளைத் தன்னிரக்கம் கொண்டு மறுக வைத்தது. ‘மூன்று பிள்ளைகளைப் பெற்றெடுத்ததால் தன்னிடம் ஏற்பட்டுப் போன மாற்றந்தான் என்ன?’ கமலா, கழிவறைக்குப் போனாள்!  ஆளுயரக் கண்ணாடியில் தன்னைப் பார்த்துக்கொண்டாள். முதுமையின் தடயம் ஏதும் தெரிகின்றதா எனத் தேடினாள்!. ‘நாற்பத்தைந்து வயதிலேயே ஒருத்தி முதுமை எய்திவிடுவாளா என்ன?.’ கூந்தலில் ஆங்காங்கே எட்டிப்பார்த்த வெள்ளை முடிக்கு ‘டாய்’ அடித்திருந்ததால், அது கவர்ச்சியையே சிமிட்டியது!. முகம், முலைகள், வயிறு என்று அங்க வாரியாகப் பார்த்துக்கொண்டு நின்றாள். இன்னொரு பெண்ணை அவன் தேடிப் போவதற்குத் தான் இழந்துவிட்ட கவர்ச்சிதான் என்ன என்று தேடினாள். முகம் சற்றுத் தளர்ந்து மெலிந்து போயிருந்தாலும் அழகாகவே இருந்தது. பிற ஆண்களின் ‘தின்றுவிடும்’ பார்வையே அதற்குச் சாட்சி!  ஆனால், மூன்று பிரசவங்களைக் கண்ட தடயம் மட்டும் வயிற்றுப் பகுதியில் விகாரமாய்ச் சரிந்து கிடந்தது. அந்த சரிவெல்லாம் கட்டியக் கணவனுக்குத்தான் இடைஞ்சல் போல! உடல் சற்றுப் பருமனாகிப் போனதில் இப்போது, முலைகளின் மதர்ப்பு எடுபடவில்லைதான்!. ஆயினும், மூன்றாவது பிரசவம் வரையிலும்கூட அம்மணத்தில் அவனின் ஆர்வத்தை முதலில் தூண்டியவை அவையாகத்தானே இருந்தன!

அப்போதுதான்,

கைகளைக் கழுவக் குழாயைத் திறந்தபோது பீய்ச்சியடித்த தண்ணீர், முகத்தில் தெரித்ததுபோல் அந்த எண்ணம், அவளுடையக் கருத்தில் தெறித்து, சிந்தனையைத் தூண்டியது.

– மூன்றாவது மகளின் பிரசவத்தில் கமலா கர்ப்பப்பையை நீக்கியிருந்தாள். குழந்தைக்குத் தாய்ப்பால் ஊட்டியதால் குழந்தையுடனேயே படுக்கை!. உடல் வேறு தேற வேண்டியிருந்தது!  அவளின் பக்கத்திலேயே மற்ற பிள்ளைகளும் படுத்துக்கொண்டிருந்தனர். கோபி, இன்னொரு அறையில் தனியாளாகப் படுக்கத் தொடங்கியிருந்தான்.

‘அப்போதுதான் அவன், வேறொரு உறவைத் தேடிக்கொண்டானோ!..’  கமலாவிற்கு ‘பகீர்’ என்றது. ‘நானே அதற்குக் காரணமாகிப் போனேனோ’ என்று பதற்றமடைந்தாள். பிள்ளைகள் மூவரும் தூங்கிய பின்னரும் கணவனின் நினைப்பே இல்லாது போனதே!. ஆரம்பத்தில் அறுவைசிகிச்சையால் ஏற்பட்டுப்போன சோர்வு; மூன்று பிள்ளைகளைப் பராமரிக்க வேண்டிய பளு; மூன்றாவது மகளுக்குத் தாய்ப்பால் கொடுத்துக்கொண்டிருந்த அசௌகரியம் ; உத்தியோகக் களைப்பு; வீட்டு வேலைகள் என இவற்றுக்கு மத்தியில், தாம்பத்திய உறவைப்பற்றியெல்லாம் நினைக்க எங்கே  முடிந்தது? ஆனால், உடல் தேறிய பின்னரும் அதுவே வழக்கமாகிப் போனதே பிழையாகிப் போனதோ! ‘பாவி! அதனால்தான்  அவனும், ஒரு சமிக்ஞைகூட காட்டாமல் அப்படியே  அடங்கிப் போனானோ?’ அவளுக்கு ‘சுருக்’கென்று தைத்தது. முதுமையை எங்கோ தோற்றத்தில் தேடியவள் அது, தன் தலைக்குள்ளேயே இருப்பதாக அவளுக்குத் தோன்றியது. ‘எல்லாமே என்னால் தானோ!.’ என்று தன்னிரக்கம் கொண்டு கலங்கினாள்.

கணவனைப் பார்க்க வேண்டும் போல் ஏக்கமாய் இருந்தது. அவனுடைய பலஹீனத்தை அவள் நன்றாகவே அறிவாள். தேவை, பிள்ளைகள் அயர்ந்து தூங்கிப்போகும் ஒரு தருணம். ‘உனக்கு வாய் இருப்பது கொட்டிக்க மட்டுந்தான்..’ என்று அவன் செய்த அவமானம், இன்னும்கூட வலித்தது. அது உண்மையில்லை என்பது அவனுக்கு நன்றாகவே தெரியும்!. முன்பெல்லாம் அவன், அவளிடம் வேண்டிய ஆரம்ப சரசமே அதுவாகத்தானே இருந்தது!.

* * *

மாலைவரை பெய்த மழையால் வழியெல்லாம் ஒரே வாகன நெரிசல்!. சிந்தை முழுக்க கோபியே நிறைந்திருந்தான். அவள் அனுப்பிவைத்த குறுஞ்செய்தியைப் பார்த்திருந்தான். ஆனால், பதில் சொல்லாதது கவலையைக் கொடுத்தது. ‘அவனிடம் மனம் விட்டுப் பேசவேண்டும்!. இன்றிரவு, அவனுடன் கலந்துறவாட வேண்டும்..’ என்ற எண்ணத்திற்கு மழை தந்த குளிர்ச்சி, இதமாகவே இருந்தது. அகங்காரம் பார்க்காமல் முதல் நகர்வைத் தானே செய்வதென்று தீர்மானித்துக்கொண்டாள்.

வழக்கம்போல் பிள்ளைகளைப் பெற்றுக்கொள்ள ‘பேபி சிட்டர்’ வீட்டிற்குப் போனாள். அங்கே, ஆச்சரியம் காத்துக் கிடந்தது.

“வாம்மா!.. புள்ளிங்கள மொதல்லியே உம் புருஷன் கூட்டிக்கிட்டுப் போயிட்டாரேம்மா!..”

கமலாவிற்கு சந்தோஷம் பிடிபடவில்லை!

‘அவன் நல்லவன்தான்! என்ன, என் படுக்கையைப் பங்கு போட்டுக்கொள்ள எந்த ‘நாய்க்கோ’  இடங்கொடுத்ததால் எனக்கு வெறி பிடித்து விட்டது..’

கமலா, அவசரமாக வீட்டிற்குப் போனாள். இருவருக்கிடையே அவ்வப்போது மனஸ்தாபம் ஏற்படும் போதெல்லாம் கோபி, இப்படித்தான் பிள்ளைகளை அழைத்துப்போய் சமாதானத்திற்குத் தூது விடுவான். அவள் மிகவும் மனம் நெகிழ்ந்து போயிருந்தாள்.

வீட்டையடைந்தாள்!

“அம்மா..” என்று இளைய பிள்ளைகள் இருவரும் கதவைத் திறந்துகொண்டு ஓடி வந்தனர். அவர்களைத் தன்னோடு அணைத்துக்கொண்டு ஆவல் பொங்க,

“அப்பா எங்கடீ?..” என்றாள்.

“தெரியலம்மா! எங்கள வீட்டுக்குள்ளியே இருக்கச்சொல்லிட்டு, அக்காவ மட்டும் கூட்டிக்கிட்டு வெளிய போனாரும்மா.” இரண்டாம் மகள்தான் சொன்னாள்.

(4)சா சியு பாவ் வாங்க ஏதும் போயிருக்காங்களோ?.” என்று கேட்டாள். மூத்த மகள் அடிக்கடி விரும்பிச் சாப்பிடும் உணவு அது!.

“இல்லம்மா!.. போறப்ப கையில ஒரு பேக்கோட அக்காவ கூட்டிட்டு போனாரும்மா..”

வெளியில் மழை மட்டுமே பெய்தது. ஆனால், இடிக்காத இடியொன்று அவள் தலையில் விழுந்ததுபோல் அவள் நிலைகுலைந்து போனாள். உடனே கோபியின் கைப்பேசியைத் தொடர்பு கொண்டாள். அது, ‘ஸ்விட்ச் ஆஃப்’ செய்யப்பட்டிருந்தது!. அவளுக்கு உடலெல்லாம் நடுங்கிப் பதறத் தொடங்கியது. சிந்தை மரத்துப் போனதுபோல் ஒரு கணம், செய்வதறியாது குழம்பி நின்றாள். அறைக்குச் சென்று அலமாரியைத் திறந்து பார்த்தாள். அவளின் பயம், அலமாரிக்குள் அலங்கோலமாய் அப்பிக் கிடந்தது. மாலதியின் உடைகள் சிலவற்றைக் காணவில்லை! படுக்கையில், மாலதியின் பள்ளிச் சீருடையும் உள்ளாடைகளும் சிதறிக் கிடந்தன. நின்றுகொண்டிருப்பது கீழே விழுந்துவிடும் பயத்தைக் கொடுத்தது. விரைந்து சென்று சோபாவில் உட்கார்ந்து கொண்டாள். அம்மாவின் முகத்தைப் பார்த்துக் கலவரம் அடைந்த பிள்ளைகள், அழுவதற்குத் தயாராய் அவளை அணைத்துக்கொண்டு ஆளுக்கொரு பக்கம் உட்கார்ந்தனர்.

“அம்மா, அக்காவ அப்பா எங்கம்மா கூட்டிட்டுப் போயிருக்காரு?..”

அந்தக் கேள்வியை எந்த மகள் கேட்டாள் என்பதுகூட கமலாவிற்கு உறைக்கவில்லை! அதற்குள், அழுகையில் வெடித்துக் குலுங்கினாள். பிள்ளைகள் இருவரும் ‘அம்மா.. அம்மா..’ என்று புலம்பிக்கொண்டே அவளுக்குள் ஒடுங்கினர்.

திடீரென்று, உயிர்த்தோழி கல்யாணிதான் நினைவிற்கு வந்தாள். உடனே கைப்பேசியில் அழைத்தாள்!

“கல்யாணி, நான் மோசம் போயிட்டேண்டி!. எம் மூத்த மவ மாலதிய காணோம்டீ!.. அந்த நாயிதான் அவள கூட்டிக்கிட்டு வெளிய போனதா ரெண்டாவது மவ சொல்றா!.. எனக்கென்னமோ பயமா இருக்குடீ..” என்று கதறியழுதுகொண்டே சொன்னாள்.

வெளியே, மொட்டு மலரான மாயத்தைப்போல் அந்திமாலை இரவாகியிருந்தது. அப்போது, ‘மக்ரிப்’ தொழுகையின் அழைப்பு கம்பீரமாய் ஒலிக்க,  வீட்டில் இருள் கெட்டி தட்டத் தொடங்கியது. அந்தப் பிரக்ஞையே இல்லாமல் கமலா, சோபாவில் சாய்ந்து கிடந்தாள். இரண்டாவது மகள் காமினிதான் ‘ஸ்விட்சைத்’ தட்டி, வெளிச்சத்தைப் போட்டுவிட்டு, சாமியறையிலும் விளக்கை ஏற்றி வைத்தாள்.

கொஞ்ச நேரத்திலேயே கல்யாணி வந்து சேர்ந்தது கமலாவிற்கு மிகுந்த ஆறுதலைத் தந்தது. அவள், இவளை அணைத்துக்கொண்ட மறுகணமே இவள் மீண்டும் அழுகையில் உடைந்து தேம்பினாள்.

“ஐயோ கல்யாணி, இப்ப நான் என்ன செய்வேன்! எங்கேன்னு போய் அவள தேடுவேன்?.  எந்த நேரத்திலும் அவ பெரிய மனுஷி ஆவுற வயசாச்சே!…”

“நீ ஏண்டீ, நடக்காததையெல்லாம் நினைச்சி சங்கடப் படற!. மாலதி சாப்பிட ஏதாவது வேணுன்னு கேட்டிருக்கலாம். அத வாங்கிக் குடுக்க கூட்டிட்டுப் போயிருக்கலாமில்லியா!..”

“நானும் மொதல்ல அப்பிடிதாண்டி நெனச்சேன்!. ஆனா, அதுக்கு அவ துணிமணியெல்லாம் எதுக்குடீ எடுத்துட்டுப் போவணும்?..”

ஆறுதல் சொல்லிய கல்யாணியிடம் அதற்குப் பதிலில்லை! இப்போது அவளும் எதையெல்லாமோ நினைத்துப் பயம் கொள்ளலானாள். அதை வெளியில் காட்டிக்கொள்ளாமல் மாமியாருக்குப் போன் போடச் சொல்லி ஆலோசனை தந்தாள். கமலாவிற்கு உடனே ஒரு நம்பிக்கை பிறந்தது. மாமியாருக்கு போன் போட்டாள். விஷயத்தைச் சொல்வதற்குள்ளாகவே அழுகைப் பிடித்துக்கொண்டது.

“கமலா, என்ன ஆச்சி?. ஏம்மா அழுவுற?.. கோபிக்கு ஒன்னுமில்லியே!..” என்று மாமியார் மகனை நினைத்துக் கலங்கியது கமலாவிற்கு ஆத்திரத்தையே மூட்டியது.

“ஆவுரு ஏதும் வீட்டுக்கு வந்தாராம்மா?..”

“இல்லியே!.. ஏன், என்னாச்சிம்மா?..”

“எம் பெரிய மவள காணோம்! அவுருதான் மாலதிய கூட்டிக்கிட்டு, அவளோட உடுப்புங்கள கொஞ்சம் எடுத்துக்கிட்டு வெளிய போனதா காமினி சொல்றா. போன் அடிச்சா கெடக்க மாட்டீங்கிது. நீங்க ஒரு தடவ போன் போட்டு பாருங்களேன்!..”

மகன் மேல் ஏதோ அபாண்டத்தைச் சுமத்திவிட்டதுபோல் மாமியார் மௌனமாகிப் போனாள். ஆத்திரத்தில் ’சட்’டென்று முகத்தைத் திருப்பிக்கொண்டதுபோல், ‘படக்’கென்று தொடர்பைத் துண்டித்தாள்..

கொஞ்ச நேரமாகியும் மாமியாரிடமிருந்து எதிர்பார்த்த அழைப்பு வராதபோது, மாமியாரின் முகச்சுழிப்பை இவளால் உணர முடிந்தது. கமலாவே மீண்டும் மாமியாருக்கு போன் செய்தாள்.

“போன அடைச்சி போட்டமாரி தெரியுது. எனக்கும்கூட கெடக்கிலம்மா. அவனுக்கு என்ன ஆச்சோ தெரியிலியே!…”

இன்னும்கூட அவளுக்கு, மகனின் பாதுகாப்பே பிரதானமாய் இருந்தது, கமலாவிற்கு வெறுப்பைத் தந்தது. ‘அட, ச்சீ..’ என்று மாமியாருக்கு கேட்கும்படியாகவே சலித்து, அழைப்பைத் துண்டித்தாள்.

‘இன்னும் இரண்டு நாட்களுக்குப் பார்த்துவிட்டு, தகவல் இல்லாவிட்டால் போலீசில் புகார் கொடுப்பதே நல்லது!..’ என்று கல்யாணி அபிப்பிராயப்பட்டாள். கமலாவிற்கும் அதுவே சரியென்று பட்டது.

காத்திருந்த இரண்டு நாட்களும் கமலாவின் கைப்பேசிக்கு அடையாளம் தெரியாத எண்ணிலிருந்த வந்த ஒவ்வொரு அழைப்பும் அவனிடமிருந்து வந்த அழைப்பாகவே அவளை அலைக்கழித்தது. படபடக்கும் இதயத்துடன் அழைப்பை எடுப்பாள். குரலைக் கேட்ட மறுகணமே அந்த நம்பிக்கை, தண்ணீர் தெளிக்கப்பட்ட உலையைப்போல் அடங்கிப் போகும். வீட்டில் சமைப்பது குறைந்துபோனது. அதற்கான உற்சாகமே சற்றும் இல்லாததால் நாக்கு செத்துக்கொண்டிருந்தது. (5)’செவன் இலெவனில்’ வாங்கப்பட்ட  (6)‘வார்ரொட்டி’ முக்கிய உணவாகிப் போனது. அதுவும் பிள்ளைகளுக்கே தேவைப்பட்டது. ‘இந்த ஒடம்புக்கு சாப்பாடு ஒரு கேடா?..’ என்று கமலா தனக்குள் கேட்டுக்கொண்டு பட்டினி கிடந்தாள். ஏதேதோ விபரீதத்தையெல்லாம் நினைத்து நிம்மதி கெட்டாள். கல்யாணி, இரண்டு நாட்களுக்கு இருந்துவிட்டு, ‘தைரியமா இருடீ..’ என்று சொல்லிவிட்டு பாவி, தைரியத்தைத் தன்னோடு எடுத்துக்கொண்டு போனாள்.

தோழியும் இல்லாது போன தனிமையில் கமலா, தனது நிராதரவை எண்ணி கலக்கம் கொண்டாள். இரண்டு நாட்களுக்குப் பின்னர், பிள்ளைகள் பள்ளிக்குப் போகத் தொடங்கியிருந்த வெறுமையில், அவ்வப்போது அவளுக்கு உயிர் வாழ்தல் அர்த்தமற்றதாகத் தோன்றத் தொடங்கியது.

மாலதியின் இழப்பு வீடெல்லாம் வியாபித்து, வீட்டிலிருந்தோரை  ஊமைகளாக்கிவிட்டிருந்தது. குளிப்பது; சாப்பிடுவது; பள்ளிக்குப் போவது எல்லாமே ஆகக் குறைந்த பேச்சுவார்த்தைகளுக்கிடையே செய்து முடிக்கப்பட்டன. கனவில், தங்கைகளில் ஒருத்தி வேறு அவ்வப்போது அக்காளுடன் பேசி, அனைவரையும் அழ வைத்துக்கொண்டிருந்தாள்,

* * *

காலம், காயத்தை ஆற்றாவிட்டாலும் நெருப்பை மறைத்த  நீறாய் அதன் மேல் பூத்துப் படிந்தது. போலீசில் செய்த புகாருக்கும் இதுவரை எந்த பதிலும் இல்லை. தகவல் கேட்டு போலீசுக்குப் போன ஒவ்வொரு முறையும், ‘ஏதும் தகவல் இல்லை..’ என்பதைச் சொல்வதற்கு, சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டர் வர வேண்டுமெனப் பல மணி நேரங்கள் காத்திருக்க வைத்தனர்.   அவநம்பிக்கையில் கமலா, தீராச் சோகத்தையே தனது வாழ்க்கையாய் வாழ்ந்து கொண்டிருக்க ஆரம்பித்தாள்.

அன்று, வழக்கம் போல் வேதனையில் தொலைந்து போன ஒரு மாலைப்பொழுது. பிள்ளைகள் இருவரும் ஏதோ செய்துகொண்டிருந்தனர். கமலாவிற்கு நினைவெல்லாம் மாலதியே நிறைந்திருந்தாள். எந்நேரமும், மகள் ஏதேதோ இக்கட்டில் இருப்பதாக நினைத்துக்கொண்டு அவளுக்காக இவளும் அந்த இன்னலை அனுபவித்துக் கொண்டிருக்கத் தலைப்பட்டாள். இப்படி, பெற்ற அப்பனாலேயே கடத்தப்பட்ட பிள்ளைகளின் இன்னல்களைப் பத்திரிக்கையில் நிறையவே படித்திருந்ததால், அந்த இன்னல்களில் மாலதியையும் பொருத்தி, பீதிக்குள்ளாகித் துவண்டாள். .

அப்போது,

வாசலில் காமினி, “அம்மா..!” என்று கத்தி, அப்படியே ஸ்தம்பித்து நின்றாள். கமலாவிற்கு உடனே கோபியின் ஞாபகந்தான் வந்தது. இவளையும் கடத்திப்போக வந்துவிட்டானோ என்று பதறிப் போனாள்.

“ஐயோ காமினி, என்னம்மா ஆச்சி? சுருக்கா வீட்டுக்குள்ளார ஓடிவந்துருடீ..” என்று கத்திக்கொண்டே வாசலுக்கு ஓடி, மகளை வாரி அணத்துக்கொண்டு, சாலையைப் பார்த்தாள்.

‘யாரது!..’

பரிட்சயமில்லா உடையில் தனது அடையாளத்தை இழந்து, எடுத்து வைத்த ஒவ்வொரு அடியிலும் ஏதோ ஒரு பிராண அவஸ்தையை உணர்ந்த வேதனை,  நடையிலும் முகத்திலும் தெரிய, நொண்டிக்கொண்டு வந்தவளை ஒரு கணம் கமலாவிற்கு யாரென்றே தெரியவில்லை!

“அம்மா, அக்காம்மா!..” இரண்டாவது மகள்தான் கத்தினாள்.

“ஆ.. மாலதி!.. ஐயோ என் கண்ணே!. என்ன கோலம்டீ இது?..” என்று அலறிக்கொண்டு ஓடிப்போய் அவளை வாரி அணைத்து, முத்தத்தால் முகத்தை ஒத்தி எடுத்தாள். ஆனால், பெற்ற மகளேயானாலும் இப்போது, சுதந்திரமாகத் தடையேதும் இல்லாமல் முகமெல்லாம் முத்தமிட தாயால் முடியவில்லை! அவளை ஒரு குழந்தையைப் போல் தூக்கிக்கொண்டு வீட்டிற்குள் ஓடி வந்தாள். தங்கைகள் இருவரும், ‘அக்கா..’ என்று அவளைத் தாயோடு சேர்த்து அணைத்துக்கொண்டு அழத் தொடங்கினர். மாலதி, கண்களில் தெரிந்த சோகத்தை; முகத்தில் உலர்ந்து கிடந்த வலியைச் சொல்ல வார்த்தைகளற்றவள்போல் தாரை தாரையாய்  கண்ணீர் விட்டுக்கொண்டிருந்தாள். கமலா, அவளின் நிலையைப் பார்க்கச் சகிக்காமல் வாயைப் பொத்திக்கொண்டு கண்ணீரில் உருகிக்கொண்டிருந்தாள்.

மகளிடம் கேட்க தாயிற்கு ஓராயிரம் கேள்விகள் இருந்தன. ஆனால் அதற்கு முன், அழுது தீர்க்க வேண்டிய வேதனை இருவரின் நெஞ்சங்களிலும் நிறைந்து கிடந்ததால் அழுதுகொண்டிருந்தனர்.

மாலதியின் தோற்றம் வீட்டை விட்டுப் போனதிலிருந்து ஒரு வேளையே சாப்பிட்டவள் போல் நரங்கிக் கிடப்பதைப்  பார்க்கச் சகிக்காமல்,  தாய் கேட்டாள்.

“தாயே, ஏதாவது சாப்புட்டியாடி?.. என்னாச்சு? ஏண்டீ இப்படி எளச்சி கெடக்குற?..”

“அம்மா, ரொம்ப பசிக்குது! ‘சா சியூ பாவ்’ சாப்புட ஆசையா இருக்கும்மா!.. “ மாலதி கேட்கவில்லை; கெஞ்சினாள்!

“அய்யோ மவளே!.” என்று மகளை அணைத்துக்கொண்ட கமலா,

“இப்ப நான் என்னடீ செய்வேன்?” என்று தலையில் அடித்துக்கொண்டு அரற்றினாள். கோபியின் மேல் கொலைவெறி கொண்டு கொந்தளித்தாள். “மொதல்ல இத சாப்புடுடி..” என்று காப்பியும் (8)‘நைஸ் ரொட்டியும்” கொடுத்தாள்.

ரொம்ப நேரமாக நின்றுகொண்டிருந்ததில் தாங்கவொண்ணா வலியை உணர்ந்தவள் போல் மாலதி, கால்முட்டிகள் இரண்டிலும் கைகளை ஊன்றி மெல்ல குனிந்து, கால்கள் நடுங்க “ரொம்ப வலிக்குதும்மா…” என்று தேம்பி அழுதுகொண்டே சோபாவில் சாய்ந்து உட்கார்ந்தாள்.

“அடி வயிறு வலிக்குதா?.. இருடி, கஷாயம் செஞ்சி குடுக்கிறேன்..” என்று மகளைப் பாசத்துடன் தேற்றினாள். அந்த அரவணைப்பு மகளை இன்னும் அதிகமாக அழுகையில் உடைந்து போக வைத்தது. தாயின் கழுத்தில் கைகளைக் கோர்த்துக்கொண்டு, உரக்கப் பேசினால் எங்கே வேதனைத் தாங்க முடியாமல் போகுமோ என்பதுபோல், காதிற்குள் ரகசியமாய் தன் வலியின் காரணத்தை அழுதுகொண்டே சொன்னாள். அதைக் கேட்ட  தாய், தலையில் இடி விழுந்ததுபோல் அப்படியே உணர்ச்சிகள் உறைந்து போய் நின்றாள்.

“ஐயோ என் தங்கமே! இந்த கொஞ்ச நாள்லியே எவ்ளோ வலியடி அனுபவிச்சிட்ட..” என்று மகளின் வலியையும் அழுகையையும் பங்கிட்டுக்கொள்வதுபோல் அவளை அணைத்துக்கொண்டு குலுங்கி அழுதாள். கோபியின் பேடித்தனத்தை எண்ணி உடல் பதறித் துடித்தாள்.

“பாவம், நீ என்ன தப்புடீ செஞ்சே?” என்று தலையில் அடித்துக்கொண்டு கதறியழுத தாயின் வேதனைப் புரியாது, மற்ற இரண்டு மகள்களும் ‘அம்மா.. அம்மா..’ என்று கதறினர்.

அப்போது,

‘மக்ரீப்’ தொழுகைக்கான அழைப்பு, அருகிலிருந்த மசூதியிலிருந்து அதிகாரத்துடன், மிகக் கம்பீரமாய்க் கேட்டது. தாயும், பிள்ளைகளும் பிறந்ததிலிருந்தே தினமும் தவறாமல் கேட்டுப் பழகிப்போன அழைப்புதான்!. அந்த அழைப்பின் வாசகங்கள் மாலதிக்கு மனப்பாடமே ஆகியிருந்தன. சமயத்தில், அந்த வாசகங்களை அவள் உடன்சேர்ந்து ஒப்புவிப்பதும் உண்டு. வீட்டிலிருந்தவரை தினமும், பூஜை அறை விளக்கைக்கூட மாலதி, ‘மக்ரீப்’ அழைப்பைக் கேட்ட பின்னரே ஏற்றி வைத்தாள்!. ஆனால் இப்போதோ, அந்த அழைப்பைக் கேட்ட மாத்திரத்திலேயே மாலதி, மிகவும் பதற்றத்திற்குள்ளாகிப் பயந்து, ‘அம்மா… அம்மா..’ என்று பினாத்திக்கொண்டே நடுங்கித் துடித்தவளாய், தாயைக் கட்டிப்பிடித்து, அவளுள் புகுந்து ஒளிந்துகொள்ள முயன்றாள்

வட்டாரச் சொல் விளக்கம்

(1)‘மீஞ்ஞாக் காப்பக்’    –       உள்ளூர் அம்ருதாஞ்சன் தைலம் (கோடாரி சாப் எண்ணெய் – மலாய்)

(2)கீலாவா                         –        பைத்தியமா (மலாய்)

(3) பொண்டான்              –         Gay

(4)சாயாங்                          –        அன்பே (மலாய்)

(5)சா சியு பாவ்                 –        சீனர்களால் உள்ளே பன்றி இறைச்சி வைத்துச் செய்யப்படும் பாவ்

(6)செவன் இலெவன்   –         24 மணிநேர Convenient ஸ்டோர்

(7)வார்ரொட்டி              –        ‘டோஸ்ட்’ செய்ய உபயோகிக்கப்படும் வெட்டப்பட்ட ரொட்டித் துண்டுகள்

(8)நைஸ் ரொட்டி         –         Cream crackers biscuit

Times of India: Unilateral Conversation in Malaysia

Al Jazeera: Malaysia’s Female Genital Mutilation Practice

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.