சமரசம் மலர்ஸ்

ன்னதான் இருந்தாலும் கொடியாள் ஆளொரு விண்ணிதான் என தன்னையறியாமல் உரத்துக் கூறிவிட்டதை உணர்ந்து, தான் கூறியதை  யாராவது கவனித்திருப்பார்களா எனத் திரும்பிப் பார்த்தார் உலகளந்தபிள்ளை.  குரல் கொட்டாவியோடு  கலந்திருந்ததாலோ என்னவோ ஒருவருக்கும் விளங்கியிருக்கவில்லை. மெல்லிய புன்னகையோடு  திருப்திப்பட்டுக்கொண்டார்.  இருந்தபடியே தோளில் கொழுவியிருந்த பைக்குள் கையைவிட்டு யாருக்கும் தெரியாமல் விரல்களை மடித்து எண்ணிப் பார்த்தார். திரும்பி  எங்கோ பராக்கு பார்ப்பவர் போலப் பாவனை செய்தபடி  மீண்டும் ஒருமுறை  மனதால் கணக்கிட்டார். மெதுவாகத் தலையாட்டி இதுவரை எல்லாம் சரியாகத்தான் போகிறது. ஆள் வந்தவுடன் காசைக் கொடுத்துவிட்டு  உள்ளுக்குள் போய்விட்டால் சரியெனத்  தனக்குள் சொல்லிக்கொண்டார்.

அமர்ந்திருந்த  இடத்திலிருந்து பார்க்கையில்  டிஸ்னிலாண்ட் வரவேற்புப் பலகையும், அதனோடு இணைந்திருந்த அறிவிப்புப் பலகையும் தெரிந்தது. நான்கு மொழிகளில் அறிவுறுத்தல்கள் எழுதப்பட்டிருந்தன. தமிழ் இருக்கிறதா எனத்தேடினார். இல்லை. என்ன எழுதியிருக்கிறதென அறியும் ஆவலில் மனைவியின் முகத்தைப் பார்த்தார்.  போனில் வீடியோ எடுத்துக்கொண்டிருந்த மலர்க்கொடியாள் நிமிர்ந்து அவரைப் பார்த்தார். அவளது அசைவுகள், நீ  அதை அறிஞ்சு என்ன கிழிக்கப்போறாய்  என்று கேட்பதுபோல இருந்தது. பேசாமல் பார்வையை வேறுபக்கம் திருப்பினார். அலவாங்கை விழுங்கிவிட்டு அருந்தண்ணி குடிச்சென்ன பலனென எண்ணிக்கொண்டார்.

உலகளந்தபிள்ளையின்  பயத்திலும், பவ்வியத்திலும் நியாயம் இருக்கத்தான் செய்கிறது. சாணேற முழம் சறுக்கிவிடும் அல்லது சறுக்கவிடுவார். அப்படித்தான்  போனதடவை ஈபிள்ரவர் சுற்றுலாவுக்கு தாங்களும்  வருவதாகச் சொல்லியிருந்த  இருவர், கடைசி நேரத்தில் காலைவாரிவிட,  அவர்களின்  நுழைவுச் சிட்டைகளுக்கான   பணத்தினை தானே பொறுப்பேற்றிருந்தார்.  அன்றுமுதல்தான் அவரை வெங்காயம் என்று திட்டும் வழக்கம் ஆரம்பித்தது. எப்பொழுதெல்லாம் மலர்க்கொடியாள்  ஈபிள்ரவரை காணுறாவோ அப்போதெல்லாம், “வெறும் வெங்காயம்” என்று திட்டுவதை மறக்காதிருந்தார். ஒருமுறை தொலைக்காட்சியில் ஈபிள்ரவருக்கு சுற்றுலாப் பயணிகளின் வரவு  அதிகரித்திருக்கிறது என்ற செய்தி காணொளியாக வந்தபோதுகூட திட்டு வாங்கியிருந்தார்.  இந்தச் சுற்றுலாப்  பயண ஒழுங்குகளை மேற்கொள்வது பற்றிய  உரையாடலின் போதும் “வெறும் வெங்காயம்” என்று   மலர்க்கொடியாள் திட்டியிருந்தார்.

உலகளந்தபிள்ளையும் சளைத்தவரல்ல. மனைவி வெங்காயம் என்று பேசும்  போதெல்லாம் தன்னைத் தானே திட்டிக்கொள்வார். அவர் தன்னைத்தானே திட்டிக்கொள்வதைப் பார்த்தவுடன், மலர்க்கொடியாள்  ஏசுவதை நிறுத்திவிடுவார். மனைவி அப்படி உருமாறி நிற்கும் வேளைகளில் மறந்தும் கூட சிரித்துவிடுவதில்லை.  ஒருதடவை திட்டும்போது “ஆண்டவன்      படைச்சான் எங்கிட்ட கொடுத்தான்” என்ற பாடலை கேட்டுக்கொண்டிருந்தார். அதன்பின் என்றுமே எந்தவொரு  பாடலைத் தன்னும் கேட்டதில்லை.

கடந்தமுறை நிகழ்ந்த தவறு இந்தமுறை நடந்துவிடக்கூடாது என்பதற்காக முழுப் பொறுப்பையும் மனைவியிடம்  விட்டுவிட்டார். அப்படியாக அவராக நினைத்துக்கொண்டார். உண்மையில் அவரிடம் இருந்து எல்லாப் பொறுப்புகளும் பறிக்கப்பட்டிருந்தன. அது அவருக்கும் புரிந்திருந்தது. நிம்மதியாக இருந்தால் காணும். பொறுப்புக்கள் யாருக்கு முக்கியம்.  கணவர்களே, உங்கள் மனைவியரை நேசியுங்கள். அவர்களுக்கு எதிராகவும் கொடுமையாகவும் இருக்கவேண்டாம் என்று புதிய ஏற்பாட்டிலேயே சொல்லியிருக்கிறது எனச் சொல்லிக்கொள்வார்.

மலர்க்கொடியாள்  யார் யாரை ரூர்போக அழைப்பதென ஒரு பட்டியல் தயாரித்தார். அவர்களில்,   தங்களோடு வரக்கூடியவர்களாகவும்,  முக்கியமாகச் செலவு குறைவாகச் செய்பவர்களாகப் பார்த்துத்  தெரிவு செய்தார். அதிலிருந்தும் துல்லியமாக அலசியாராய்ந்து, எட்டுப்பேர்களைத் தெரிவு செய்து, அவர்களைத் தொலைப்பேசியில் அழைத்து  உறுதிப்படுத்தினார்.

இந்தமுறை உலகளந்தபிள்ளையை ஒருவருடனும் கதைக்க விடவில்லை மலர்க்கொடியாள். அவரும், அதுதான் வாய்ப்பு என்று பேசாமல் இருந்துவிட்டார். இரட்டைநாடி உடம்பு கொண்ட மலர்க்கொடியாளை, கொடியாள் என அழைத்துக் குத்திக் காட்டுவதில்  ஒருவித இன்பத்தை உணர்ந்து கொண்டதாலோ என்னவோ, எல்லோரும் மலர் என்று அழைக்க, அவர் மட்டும் கொடியாள்  என்றுதான் அழைப்பார். ஆளுயரக் கண்ணாடியில் தன் உருவத்தைப் பார்க்கும்  போதெல்லாம்  மலர்க்கொடியாள்,  ஊரில எப்படியொரு  அழகாக இருந்தனான். உந்த மனுசனால இஞ்சை வந்து கொழுத்துப் போனதுதான் மிச்சம் எனக் கேட்கும்படி வாய்விட்டுச் சொல்வார்.

பாரிஸிலிருந்து நாற்பது  கிலோமீற்றர் தூரத்தில் இருக்கும் புறநகர் செவ்ரோன்.  அங்கு  இருபது வருடங்களாக வசித்து வருகிறார்  உலகளந்தபிள்ளை. பதினொரு அடுக்குகள் கொண்ட மாடி வீட்டுத்தொகுதியில் ஆறாவது வீடு அவருடையது. உலகின் எல்லாப் பாகங்களிலும் வறுமையால் போரால் இன்னபிற உயிரச்சத்தால்  உழன்ற மக்கள், அங்கங்கிருந்து உயிரை மட்டும் சுமந்துவந்து குடியேறிய நகர் அது. தமிழர்களால் நிறைந்துபோன அந்த நகரத்திற்கு, தமிழர்கள் “சமரசம்” எனப் பெயர் வைத்திருக்கிறார்கள்.  “சமரசத்திற்கு எப்படி போறது” என்று கேட்டால்   நேற்றுப் பிறந்த தமிழ்ப்பிள்ளையும் அழைத்துக்கொண்டு போய்விடும். கஞ்சா முதல் மொரோக்கன் வீட்டு வடிசாராயம்வரை கிடைக்கும். பகலில் ஒரு முகமும், இரவில் ஒரு முகமுமாக இருக்கும் கிராமம் அது. இரவுகளில் பொலீஸ் அந்த கிராமத்துக்குள் வருவதேயில்லை. பொலீஸ் அலுவலகத்தில் அந்த கிராமத்தின் வரைபடத்தைச் சிகப்பு வட்டத்தால் குறித்து வைத்திருக்கிறார்கள். பிரஞ்சுப்பொலீசை மாதிரி ஒரு கேடுகெட்ட தொழில் இல்லையென்பது அங்கு வசிப்பவர்களின் கருத்து. சோளம் விற்ற பெண்ணொருவரை கைது செய்து கொண்டு சென்றதற்காக பெண்கள் கூடிச் சென்று தூமைத்துணிகளால் பொலிஸ்நிலைய வாசலை மூடியிருந்தார்கள். மூர்க்கமாக எதிர்ப்பைக் காட்டும் மக்கள் சொல்வதெல்லாம் ஒன்றுதான். அதிகாரத்தோடு வராதே. நண்பனாக வா. பழகு. நீயும் நானும் ஒன்று அவ்வளவுதான். அந்த கிராமத்தை அழித்துவிட வேண்டுமென்பது பிரஞ்சுக்காரர்களின் கருத்து. போனமாதம் நடந்த நகரசபை தேர்தலில் தீவிர வலதுசாரி வேட்பாளர் அந்த நகரத்தை அகற்றுவதாகக் கூறி வாக்கு கேட்டுப் படுதோல்வி அடைந்திருந்தார்.

இருபது வருடங்களாக அங்கு வசிப்பதால் நகரின் மூலை முடுக்குகளெல்லாம்  உலகளந்தபிள்ளைக்கு  தண்ணி பட்டபாடு. நீண்டகால வாடிக்கையாளர் என்பதால் கஃபே பார்கள், கடைகள் என எல்லாவற்றிலும் அவருக்குத்  தனி மரியாதையுண்டு. இரண்டு பிள்ளைகள். எதோ பெரிய படிப்பு படிப்பதாக மட்டும் தெரியும். ஆனால் அது டொக்ரரோ இஞ்சினியரோ இல்லை என்றும் சொல்லியிருக்கிறார்கள். அதுவுமெங்கோ தூர இடத்தில் தங்கியிருந்து படிக்கிறார்கள். அங்கால சுவிஸும் இஞ்சால ஜெர்மனியும் என்று ஒரு தடவை வந்திருந்தபோது சொல்லியிருந்தார்கள். டொக்ரர் இஞ்சினியர் இல்லாத படிப்பு  என்ன பெரிய படிப்பு. அதுவும் யாழ்ப்பாணத்தானுக்கு என்றுவிட்டு  அதோடு விட்டுவிட்டார். அதற்குமேல் என்ன விளக்கம் கேட்டாலும் கிடைக்காது என்பதும்  அவருக்குத் தெரியும். அவர்களே உழைத்து செலவுசெய்து படிக்கிறார்கள். அவர்களது  எல்லாக் கதைகளும் தாயோடுதான். எப்பவாவது வருவார்கள். மறக்காமல் தந்தையர் தினத்திற்கு வாழ்த்து அனுப்புவார்கள். அவரும் அதற்கு மேல் எதிர்பார்ப்பதில்லை.

“ரூர் போவமோ” என்று கேட்டபோது பதிலேதும் சொல்லாமல் அண்ணார்ந்து யன்னலால் வெளியில் பார்த்தார் உலகளந்தபிள்ளை. கடந்தமுறை பயணத்தில் கிடைத்த அனுபவங்கள் அப்படி. இருவரும் வேலைக்குச் செல்வதால் சந்திக்கும் நேரத்தில் அவசரஅவசரமாக  உரையாடிக் கொள்வார்கள். வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்ற தொனியில் தான் உரையாடல் இருக்கும். கல்யாணமான முதல் இரண்டு, மூன்று வருடங்கள் “அப்பா, இஞ்சையுங்கோ” என்றெல்லாம் குழைந்த மலர்க்கொடியாள் முதல் பிள்ளை பிறந்ததும் பெயரைச்சொல்லி அழைத்தார். பின் காலப்போக்கில் அதுவும் மறைந்துபோனது. இப்ப சமீபகாலமாக ரிக்ரொக் இல் பிரபலமான பின்னர், இரண்டே இரண்டுவகை உரையாடல்தான். ஒன்று  கேள்வி.  மற்றது செய்யவேண்டிய வேலை. தவிர வேறெந்த உறவுமில்லை. மனைவியும், பாயும் வந்த புதிதில் சிறப்பாய் இருப்பவை என்றுகூட வேலை செய்யும்  பிரெஞ்சுக் கிழவன் சொல்வதை நினைத்துக்கொள்வார்.

மேலதிகமாக ஏதும் தேவையென்றால் பொறுமையாகக் கேட்டுத் தெளிவு    படுத்திக்கொள்வார்.  கேட்டும் தெளிவான பதில் கிடைக்கவில்லை என்றால், எளிய தட்டுவாணி பறதியில போவாள் சந்திரிக்கா  சரியென்றால் எனக்கு ஏன் இப்படி நடக்குது என சந்திரிக்காவை திட்டுவார். சந்திரிக்கா ஜனாதிபதியாக இருந்தபோது ஆரம்பித்த  சூரியகதிர் இராணுவ நடவெடிக்கையோடுதான் ஊரிலிருந்து கிளம்பி அகதியாகப் பாரிசிற்கு வந்தவர்.

“ரூர்” என்றதும் என்ன சொல்வதென புரியவில்லை உலகளந்தபிள்ளைக்கு. ஏன் என்று எப்படித் திருப்ப கேட்பதென யோசித்தார். கடந்தகிழமை மலர்க்கொடியாள் ரிக்ரொக்கிலை பதிவேற்றிய வீடியோவில்  யாரோ ஒருவர்,  உங்களூரில் தானே டிஸ்னிலாண்ட் இருக்கிறது. போறதில்லையா. அங்கு போய் வீடியோ போடுங்களென எழுதியிருந்தார். அதற்கு, அடிக்கடி போவதால் வீடியோ எடுக்க  தோணியதில்லை. உங்களுக்காக  அடுத்த தடவை எடுத்துப் போடுகிறேன் எனப்பதில் எழுதியிருந்ததையும்  வாசித்திருந்தார்.  “சமரசம் மலர்ஸ்” என்ற பெயரில் மலர்க்கொடியாள் வீடியோ போடுவதைக் கண்டுபிடித்தவர் தானும் ஒரு கள்ள ஐடி திறந்து “சமரசம் மலர்ஸ்”-ஐ பின்தொடர்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

அவரது முகத்தைப் பார்த்ததும் புரிந்துகொண்ட மலர்க்கொடியாள், வீடெல்லாம் ஒரே பூச்சி.  மருந்து வைக்கவேண்டும். மருந்து வைத்தால்  அன்றையநாள் முழுவதும் வீட்டுக்குள் இருக்கமுடியாது. அதுதான் எங்காவது போய் நின்று, இரவு திரும்பலாம். நாளைக்கு  பூச்சி மருந்தை வாங்கி வாங்கோ.  அதற்குப் பிறகு எப்ப போறது. எங்க போறதென யோசிப்போம் என்றபடியே புறப்பட்டவர் திரும்பி, பூச்சி மருந்துக்கு காசு மேசையில் வைத்துக்கிடக்கு. பில் முக்கியம் என்று சொல்லிவிட்டுப் போனார்.

பில் முக்கியம் என்றதும் தேகமெல்லாம் பற்றிக்கொண்டு வந்தது.  அடக்கிக்கொண்டார். எவ்வளவு காசை இவளுக்கு கொட்டி இருப்பன். இப்ப காசை தந்திட்டு  பில்  பத்திரமாம். தனக்குள்ளேயே புறுபுறுத்துக் கொண்டார். தான் வீடியோ போடுறதுக்கு எப்படியொரு சாட்டு. தும்பிக்கு  பயந்து சிவபெருமான் சாரைப்பாம்பை கழுத்தில் போட்டுக்கொண்டாராம் என்கிற மாதிரியல்லவா இருக்கிறது. இத்தனை வருடமாக இல்லாத பூச்சியா இப்ப வந்திருக்கு. ஒவ்வொரு தடவையும் மைக்ரோஒவனை திறந்து உணவைச்  சூடாக்கும்போது பத்துப்பூச்சி என்றாலும் ஓடும். இவ்வளவு காலமுமில்லாமல் இப்ப பூச்சி மருந்து வைக்கப்போறாவாம். ரூர்போய் வீடியோபோட பூச்சி  சாட்டு. மனதிற்குள் திட்டிக்கொண்டார். சரி அப்படியாவது வீட்டில் பூச்சி அழிஞ்சுதென்றால் நல்லம்தான் என எண்ணிக் கொண்டார்.

அன்றே பூச்சி மருந்தினை வாங்கி பில்லோடு சேர்த்து மேசையில் வைத்துவிட்டார். பூச்சி  மருந்தைக் கண்டதும்  மலர்க்கொடியாள் அடுத்த கட்டத்திற்கு  நகர்ந்தார். எந்த நாளில் ரூர் போவது என்று முடிவு செய்வதற்காக கலண்டரை எடுத்தார். அந்த மாதத்தின் கடைசி சனி, ஞாயிறு தினங்களை  வட்டம் போட்டுக் குறித்தார். கணவரை அழைத்தார்.  ஈபிள்ரவர், வைற் சேர்ச், டிஸ்னிலாண்ட் இந்த மூன்று இடத்தில் எதற்கு போவம் என்று கேட்டார்.

உலகளந்தபிள்ளைக்குத்  தெளிவாகத் தெரியும் எல்லாம் தீர்மானிக்கப் பட்டுவிட்டதென்று. இருந்தும், எதுவும் சொல்லாமல் இருந்தால் அதற்கொரு கேள்வி வரும். அதைவிட ஏதாவதொரு இடத்தை சொல்லிவிடுவது நல்லம் என்று முடிவு செய்தவர், பாரிசில் அவருக்குத்தெரிந்த ஒரேயொரு இடமான நெப்போலியன் நடந்த தெருவுக்குப் போகலாம். செலவும் குறைவு என்றார். அதற்கு மலர்க்கொடியாள் “ம்ம்ம்” என இழுத்துவிட்டு, தெருத் தெருவாக அலையமுடியாது. அதுவும் உங்களையும் இழுத்துக்கொண்டு. வீட்டுக்கு பூச்சிக்கு  மருந்து வைத்தால் நாள் முழுக்க வீட்டிற்கு வரவுமேலாது. பேசாமல் டிஸ்னிலாண்டுக்கு போவம் என்று முடித்தார். தொடர்ந்து, டிஸ்னிக்கு போறதென்றால் ரிக்கெட் சரியான விலையாக இருக்கும். யாராவது அங்கு வேலைசெய்கிறவர்களைப் பிடித்தால் மலிவாக எடுக்கலாம். தெரிந்தவர்கள் இருந்தால் விசாரித்துப்பாருங்கள் என்று கூறினார். பொறுமையாகக் கவனித்துச் சொன்னதை உள்வாங்கிய உலகளந்தபிள்ளை, “எப்ப போறது” எனக் கேட்டார்.  சனி அல்லது ஞாயிறு தான் போகணும். சனி என்றால் நல்லம். வெள்ளிக்கிழமை அரைநாள்தான் வேலை. சமைத்து சோறும் எடுத்துக்கொண்டு போகலாம். சனி மருந்தை வைத்தால் ஞாயிறு வீடு கழுவித் துடைக்கவும் வசதி. சனிக்கிழமை போவம். ரிக்கெட் விசாரியுங்கோ என்று முடித்துவிட்டார்.

ரிக்கெட் விசாரியுங்கோ என்று சுலபமாகச் சொல்லிவிட்டாள், இனி அதற்கு என்னபாடு பாடுறதோ எனப் புறுபுறுத்தபடி போனை எடுத்தார். ஒவ்வொரு பெயராகத் தட்டி, அவர்கள் என்ன வேலை செய்கிறார்களென நினைவுக்குக் கொண்டுவந்தார். ஒருவரும்  தட்டுப்படவில்லை. போனை மூடிவைத்துவிட்டு யோசித்தார். முக்கூடல் தமிழ்க்கடைப்பொடியன்   நினைவுக்கு வந்தான்.    நாடுகடந்த தமிழீழ அரசில் வெளிவிவகார அமைச்சராக இருக்கும்  அவன்தான்  இதற்குச் சரியான ஆள் என்று முடிவு செய்தார். எவர்  என்ன பிரச்சனை என்றாலும் அவனிடம் போய் சொன்னால், அதற்கு அவனிடம் தீர்வு இருக்கும். நாலுபத்து விடயம் தெரிந்தவன். நாலுபத்துப்பேரோடு பிளங்குகிறவன். அமைச்சர் ஆகுவதென்றால் சும்மாவே. நின்ட இடத்திலேயே என்ன பிரச்சனையென்றாலும் முடித்துவிடுகிற வல்லமை கொண்டவன். நாரை அறியாத குளமில்லை என்பார்கள் இவனும் அதுபோலத்தான்.  வேறுவழியில்லை போய்க்கேட்பம் என்று கிளம்பினார்.

கடையில் அவனைப் பிடித்து, தம்பி எனக்கொரு உதவி என்று ஆரம்பித்து மலிவாக ரிக்கெட் எடுக்கும் விடயத்தைச் சொல்லி முடித்தார்  உலகளந்தபிள்ளை. உதுக்கே யோசித்தனியள், எனக் கேட்டுவிட்டு தொலைப்பேசியை  எடுத்து நம்பர் ஒன்றைக் கொடுத்தான். நாலுமணிக்குப் பிறகு அடிச்சு கதையுங்கோ. ஆளுக்கு நாலுமணிக்குத்தான் வேலை முடியும். என்னை சொன்னதாக சொல்லுங்கள். அவன் அங்கதான் வேலை செய்கிறான். எப்படியும் எடுத்துத்தருவான். மற்றது அண்ணை, வாறகிழமை சூமில் ஒரு கூட்டம் இருக்கு. இப்ப நாட்டு நிலைமை தெரியும்தானே. கோத்தாவை கிளப்பியாச்சு. அங்க நின்ட பொடியளுக்கு நாங்கள் தான் எல்லாம் செய்தது. மறக்காமல் வாங்கோ கூட்டத்திற்கு. சூமில் நீங்கள் எல்லோரும் வந்து சைன் போட்டால்தான் “ஐநா”க்கு எங்கட பிரச்னையைக் கொடுக்கலாம் என்றான். ஓம் தம்பி கட்டாயம் வருவன் என்றபடி நேரத்தைப் பார்த்தார். நேரம் கிடக்கு. இண்டைக்கு எப்படியும் இந்த அலுவலை முடிச்சுப் போடவேண்டும். கொடியாளிடம் விலையை அதிகமாகச் சொல்லி ஒருபத்து யூரோவை தட்டி எடுத்தால் இரண்டு மூன்று நாளைக்கு என்ர விருப்பத்திற்கு ஏதும் தின்னலாமெனத் திட்டமிட்டார். அமைச்சரான தமிழ்க்கடைப் பொடியனின் கையைப் பிடித்து நன்றி சொல்லிவிட்டு வேகவேகமாக வீட்டுக்குத்  திரும்பினார்.

சரியாக நாலுமணிக்கு அலாரம் வைத்தார். மணிக்கூட்டுக்கு எதிரே அமர்ந்துகொண்டார். டிஸ்னி பெரு நகரமாக விரிந்தது. போட்டோக்களிலும், விளம்பரங்களிலும் மட்டும் பார்த்த இடம் அங்குலம் அங்குலமாக நகர்ந்தது.  எங்கு திரும்பினாலும் சனக்கூட்டம். இதென்ன வல்லிபுரக்கோவில் கடல் தீர்த்தத்திற்குப் போனமாதிரி சனக்கூட்டம். உந்த சனத்துக்குள்ளால் எங்க  போறது. எப்படி போறது.  எதற்கும் கொடியாளின் கையை பிடித்துக் கொள்ளுவமென்று கையை வீசியபோதுதான், சோபாசெற்றியிலேயே அசந்துபோயிருந்தது புரிந்தது. மணிக்கூட்டைப் பார்த்தார். நாலுமணி ஆகிவிடும்போல இருந்தது. எழுந்து சென்று முகத்தைக் கழுவினார். அலாரம் அடிக்கும் சத்தம் கேட்டது. முகத்தைத் துடைத்தபடி தொலைப்பேசியை எடுத்து தமிழ்க்கடைப் பொடியன் கொடுத்த நம்பரை அழுத்தி அழைப்பை ஏற்படுத்தினார்.

பதிலில்லை. தொலைப்பேசியை வைத்துவிட்டு முகத்தை அழுத்தித் துடைத்தார். இரண்டு நிமிடங்கள் கழித்து மீண்டும் அழைத்தார். கலோ எனப்பதில் கிடைத்ததும், வணக்கம் தம்பி, இங்கை செவ்ரோனில் முக்கூடல்கடை அமைச்சர் தம்பி உங்கட நம்பர் தந்தவர். நீங்கள் டிஸ்னிலாண்டுக்கு ரிக்கெட் எடுத்துக் கொடுக்கிறனீங்களென்று சொன்னவர். என்றதும், மறுபக்கத்திலிருந்து இடைமறித்து, ஒமண்ணை. போனில் இந்த விடையம் கதைக்க வேண்டாம். பின்னேரம் எட்டுமணிபோல அமைச்சரிட்ட வருவன். நேர வாங்கோ கதைப்பம் என்றதும்,  உலகளந்தபிள்ளைக்கு  மகிழ்ச்சி பொங்கியது. ஓம் தம்பி.  வாறன், மறக்காமல் வாங்கோ என்றபடி அழைப்பை துண்டித்தார். கொடியாள் வந்தவுடன், விளக்கமாகக் கதைத்துவிட்டு, பின்னேரம் போய் ரிக்கெட்டை மறிச்சுப்போட வேண்டுமென நினைத்துக்கொண்டார்.

எட்டுமணிக்கு முக்கூடல்தமிழ்க் கடையடிக்கு போனவரை, நீங்கள்தானே  டிஸ்னிக்கு போக ரிக்கெட் கேட்டது என விசாரித்தபடி வரவேற்ற பொடியனை மேலும் கீழுமாகப் பார்த்தார்.  தோற்றத்தைப் பார்த்து ஆளை எடை போட்டார்.  மனதுக்குள் திருப்திப்பட்டுக்கொண்டார். வேலை முடிந்துவந்த கொடியாள் சொன்ன எல்லாவற்றையும் திரும்ப ஒருமுறை நினைவுக்குக் கொண்டுவந்தார். முக்கியமா ஆளைப்பாருங்கோ. உந்த குரூப்பொடியள் மாதிரி நிண்டால் ரிக்கெட் வேண்டாம். கதைபேச்சு நல்லமாதிரி பண்பாடாக இருந்தால் கதையுங்கோ. சும்மா கண்ட நிண்டவங்களிட்ட உதவிக்குப்போய் கரைச்சல் படக்கூடாது. பிறகு குருட்டு  ஆந்தையைக் கூப்பிட்டு அடுப்பங்கரையில்  விட்டமாதிரிப்போடும்.  சோர்ந்துபோய் நின்றவனை மீண்டும் ஒருமுறை முழுதாகப் பார்த்தார். வேலைசெய்த களையோடு,  நெஞ்சுக்கூடுதள்ள, வாடிப்போய் நோஞ்சானாக நின்ற அவனின் தோற்றத்தைப் பார்த்ததும் தடுமாறிப் போனார்.  தம்பி ஏதும் குடிக்கிறீங்களா என்று உடனேயே கேட்டார். இல்லை வேண்டாம்.  அதெல்லாம் பிறகு பார்க்கலாம். நீங்கள் எப்ப டிஸ்னிக்கு போகப் போறிங்க. எத்தனை பேர் போக இருக்கிறீங்கள் என்று கேட்டான்.

தம்பி வாற சனிக்கிழமை. நாங்கள் எட்டுப்பேர். உங்களுக்கு ஓகே என்றால் இண்டைக்கு காசைத் தல்லாம். எத்தனை யூரோ என்று சொல்லுங்கள் என்றார் உலகளந்தபிள்ளை. காசு பிரச்சனையில்லை அண்ணை. சனிக்கிழமை அங்கை வைச்சு தாங்கோ. எட்டுப் பேர் என்றால் மூன்று “சொட்” அடிக்கவேண்டும். ஒரு ஆள் குறையுது அதுதான் யோசிக்கிறன் என்றவனிடம், என்ன தம்பி சொல்லுறியள் ஒன்றும் விளங்குதில்லை. விளக்கமாக சொல்லுங்கோ. சொட் அடிக்கிறது என்றால் என்ன. ஏன் மூன்று சொட். காசு ஏதும் குறைவோ. அப்படி சொட் அடிச்சுப் போனால், எங்களுக்கொரு பிரச்சனையும் வராதுதானேயென்று பதட்டத்துடன் கேட்டார்   உலகளந்தபிள்ளை.

அதெல்லாம் பிரச்சனை இல்லையண்ணை. “சொட்” என்றால் எங்களுக்கு வேலைசெய்யுற இடத்தில் தருகின்ற ரிக்கெட்டில் ஒருதடவையில் மூன்று பேரை உள்ளுக்குள்ள விடலாம். அதுதான் மூன்று சொட் என்றால் ஒன்பதுபேர் உள்ளுக்கு போகலாம். நீங்கள் எட்டுப் பேர் என்று சொல்லுறீங்கள், ஒரு ஆளுந்த காசு வீண்தானே. நீங்கள் யாரையாச்சும் ஒருத்தரகூட கூட்டிவாங்கோவன். ஒரு சொட்-க்கு எண்பது யூரோ படி “மூன்று சொட்”க்கும் தந்தீங்களென்றால் சரி.  ஒரு கணம் யோசித்தார். மூன்றுபேருக்கு எண்பது யூரோ. பயங்கர லாபம். இல்லாட்டி ஆளுக்கு எண்பது யூரோ வேண்டும்.      கையூண்டாமலேயே கரணம் போடலாம்போல இது. வேற கதை இனிக் கதைக்கக் கூடாதென முடிவு செய்தவர் சரி தம்பி. சனிக்கிழமை அங்க சந்திப்பம். வெள்ளிக்கிழமை பின்னேரம் உங்களுக்கு கோல் பண்ணுறன். இப்ப அட்வான்ஸ் ஏதும் தரவோ என்று கேட்டார்.

இல்லையண்ணை. இப்ப வேண்டாம். சனிக்கிழமை எட்டுமணிக்கு டிஸ்னியில் நிப்பன். அதில வைச்சுத்தாங்கோ. வரமாட்டியளென்றால் புதன்கிழமைக்கு முதல் அடிச்சு சொல்லுங்கோ. எங்கட ஆக்கள் கனபேர் ரிக்கெட் கேட்டவை.  எங்கட அமைச்சர் சொன்னதால் உங்களுக்கு ஓகே பண்ணியிருக்கிறேன். சரி அண்ணை சந்திப்பம் என்றபடி கிளம்பியவன் கண்ணிலிருந்து மறையும் வரைக்கும் பார்த்துக்கொண்டு நின்றார்.

நல்ல பொறுமையான பிள்ளை. என்ன கேட்டாலும் ஆறுதலாக, விளக்கமாக சொல்லுறான். பிள்ளையென்றால் இப்படியல்லவா   இருக்கவேண்டும். எனக்கும்  இருக்குதுகள் இரண்டு. நாளைக்கு எந்த அனாதை இல்லத்தில் தள்ளிவிடுதுகளோ தெரியாது. கைகால் ஆடிக்கொண்டிருக்கும் போதே போய்ச் சேர்ந்திடனும்  என நினைத்தபடி  வீடு திரும்பினார். நடந்ததை மனைவியிடம் விபரித்தார்.  ஒன்பதுபேருக்கும் ஒரேகாசு  என்றால் இன்னொருவரை அழைக்கலாம் என்றவரை,  என்ன ஏது என்பதுபோலப் பார்த்தார் கொடியாள். பின்பு குரலையடக்கி, இனி ஆள் சேர்க்கிற வேலையை விட்டுட்டு எட்டுப்பேருக்கும் அந்தக்காசை பிரிச்சு எடுப்பம். மற்றவைக்கு சொல்லாமல் விட்டால் சரி என்றார் மலர்க்கொடியாள்.  தலையை குனிந்தபடி, சனிக்கிழமை  எட்டுமணிக்கு அங்கு நிற்கவேண்டும் என்றபடி நகர்ந்தார் உலகளந்தபிள்ளை.

வெள்ளிக்கிழமை இரவே பூச்சி மருந்துகளை வைக்கவேண்டிய இடங்களைக் குறித்து வைத்துவிட்டார். குசினிக்குள் மட்டும் இரண்டு மருந்து குப்பிகளை உடைக்கவேண்டுமென்று நினைத்திருந்தார். பெரும்தாக்குதல் ஒன்றுக்குத்  தயாராகுவதுபோல தன்னைத் தயார்ப்படுத்திக்கொண்டார்.  உடுப்புக்களை அள்ளி அலமாரிகளுக்குள் வைத்துப் பூட்டியபின் மீண்டும் வீட்டினை  நோட்டமிட்டார். குசினிக்குள் பீடா கிடக்கு எடுக்க மறந்துபோனேன். முதல்ல அதை எடுத்து வாங்கோ  என வாசலில் கொடியாளின் குரல் கேட்டது. வேகமாகக் குசினிக்குள் நுழைந்தார்.

இரவிரவாக எட்டுப் பேருக்குமாக புரியாணி செய்திருந்தார் கொடியாள். அதை புரியாணி என்றும் சொல்லாம் கோழிப்புக்கை என்றும் சொல்லாம். இரண்டுக்கும் நடுவிலொரு வகையான உணவாக ஆகியிருந்தது. எட்டுப் பார்சல்கள், வெங்காயச்சாம்பல்,  யாழ்ப்பாணத்து மிளகாய்த்தூளில்  உறைப்பான கோழிக்குழம்பு, தேநீர்ப்போத்தல், தண்ணீர்ப்போத்தல்கள்  என பைக்குள் அடக்கியிருந்தார் மலர்க்கொடியாள். ரெஸ்மச்சுக்கு போகிறவர்கள் கொண்டு செல்வதுபோல அந்தப்பை வீங்கிப்போயிருந்தது.  மேலதிகமாக, போறவழியில் லாசெப்பலில் ரோலும், வடையும், வாய்ப்பானும் வாங்க வேண்டுமென்றும் திட்டமிருந்தது. இன்னொருவர் மாலை உணவுக்கு புட்டும் ஆட்டிறைச்சிக்கறியும் கொண்டுவருவதாக சொல்லியிருந்தார்.  பொதுவாகக் காலை உணவினை இங்கு  தமிழர்கள் உண்பதில்லை என்பதால்  இரண்டுவேளை உணவினையும்  இரண்டுபேர்கள் செய்துவருவதாக முடிவு செய்திருந்தார்கள்.

பீடாப்பார்சலை எடுத்துக் கொடுத்துவிட்டு, உள்ளேசென்று  மூன்று      அறைகளின் யன்னல்களும் நன்றாகப் பூட்டியிருக்கிறதாவென்று பார்த்துவிட்டு சமையலறைக்குச் சென்றார். இரண்டு பூச்சிமருந்துக் குப்பிகளை உடைத்தார். சமையலறைக் கதவினை இறுகப் பூட்டினார். அவ்வாறே அறைகளுக்குள்ளும்  குப்பிகளை உடைத்துவிட்டு வெளியேறி பிரதான வாசல் கதவினைப் பூட்டிவிட்டு மனைவியை பெருமிதத்தோடு நிமிர்ந்து பார்த்தார். பார்வையின் அர்த்தத்தைப் புரிந்துகொண்ட மலர்க்கொடியாள் வாயால் ஒரு சுழிப்பு சுழித்துவிட்டு, எதோ பெரிய வேலைசெய்து புடுங்கிக்கொட்டிவிட்டதுபோல நினைப்பு வேறு என்று கேட்கக்கூடியதாகவே சொன்னார். கேட்டும் கேளாததுபோல பெரிய பையைச் சுமந்தபடி ரெயின் ஸ்ரேசன்  நோக்கி நடக்கத்தொடங்கினார்   உலகளந்தபிள்ளை.

லாசெப்பலில் ரோல், வடை, கடலை, சுண்டலெல்லாம் பார்சல் செய்துகொண்டு கிளம்பியவர்கள் சரியாக ஏழரை மணிக்கு டிஸ்னிலாண்ட்க்கு போய்ச்சேர்ந்தார்கள். ரெயினால் இறங்கியதும், போனில் அழைப்பெடுத்து தங்கள் வந்திருப்பதை உறுதிப்படுத்தினார். அருகில் பார்வையாளர்கள் இருப்பதற்கென அமைக்கப்பட்ட   சீமெந்து கதிரையில் அமர்ந்துகொண்டார்.

இதோ வாறன் என்றவன் ஒரு மணிநேரம் கடந்தும் வரவில்லை. கொடியாள் முறைத்த முறைப்பில் எல்லாம் மறந்து இருந்த இடத்திலிருந்து எழுந்து, ரெயின் ஸ்ரேசன் வாசலை நோக்கிப் போனார் உலகளந்தபிள்ளை. அங்குமிங்கும் பார்த்துக்கொண்டு நிற்க, அண்ணை மன்னியுங்கோ என்றபடி ரிக்கெட்டுடன் ஒட்டமும் நடையுமாக அவரை நெருங்கினான். வாங்கோ தம்பி என்றபடி அவனை அழைத்துக்கொண்டு கொடியாளிடம் ஓடினார்.  அண்ணை பொறுங்கோ ஒரு சின்ன சிக்கல் என்றவனை நின்று திரும்பிப்பார்த்தார்.  நீங்கள் எட்டுப்பேர்தானே. உங்களோடு ஒரு ஆளை சேர்த்து அனுப்பிவிடுறன். குறை நினைக்கதையுங்கோ என்றான். தம்பி பொறும் எதற்கும்  மனைவியை கூப்பிடுறேன் கதையும் என்றுவிட்டு மலர்க்கொடியாளை அழைத்து அவனோடு கதைக்க விட்டுவிட்டு மெதுவாக விலகினார்.

“அக்கா, உங்களுடன் ஒரு ஆளை சேர்த்து அனுப்புறன். உங்களுக்கு பிரச்சினை இல்லைதானே. பாவம் அவர்கள். புதிதாகத் திருமணம் செய்து இங்கு வந்த பிள்ளையும் புருசனும். உங்களுடன் அந்தப் பெண்பிள்ளை வருவார்.  பொடியனை அடுத்த சொட்டில சேர்த்து அனுப்புகிறேன். குறைநினைக்காமல் கூட்டிக்கொண்டு போங்க அக்கா” என அழுவாரைப்போல கெஞ்சினான். மலர்க்கொடியாள் திரும்பி உலகளந்தபிள்ளையை  பார்த்தாள். வெறும் வெங்காயம் என்று சொல்லிவிட்டு சரி  என்றார்.

உடனேயே போனில் அவர்களை அழைத்தான். அவர்களும் வந்தவுடன், அக்காவுடன் நீங்கள் போங்கோ. இவரை அடுத்த ஆட்களுடன் அனுப்பிவிடுறன் என்று கூறினான். வந்தவர்களை ஏறிட்டுப்பார்த்தாள் மலர்க்கொடியாள்.  கழுத்தில் தாலிக்கொடி மடங்காமல் திமிறிக்கொண்டு நின்றது. நெற்றியில், உச்சந்தலையில், கழுத்தில் என  குங்குமப்பொட்டு. டெனிம் ஜீன்ஸ்.  தலையை வாரி இழுத்து அழகாய் தானிருக்கிறாள். என்ன நிறம்தான் என்னைவிடக் கொஞ்சம் குறைவு. நல்ல பிள்ளை போலத்தான் கிடக்கு. வந்த புதிதில் நானும் இப்படித்தானே இருந்தேன் என நினைத்தபடி, நேரம் போகிறது வாங்கோ போவமென அழைத்தார்.

நான் தனியாக போகல. நீங்களும் வாங்கோ என கணவனின் கையைப் பிடித்து சிணுங்கினாள் அந்தப்பெண். அவன், அவளைச் சமாதானப்படுத்தும் நோக்கில்  சொல்லுறதை கேளும். நீங்கள் இவையோடு போங்கோ பின்னால் நான் வந்திடுவன் என்றபடி, அவளின்  தலையைத்  தடவி கையை இறக்கி  காது மடலை  வருடினான். பின் நாடியை நிமித்தி அவளது கண்களைப் பார்த்தான்.  அதைப் பார்த்த கொடியாளுக்கு உடல் புல்லரித்து அடங்கியது. சட்டெனப் பார்வையைத் திருப்பினார்.

இருவரும் ஒன்றாய் போறதென்றால் உள்ளுக்குள் போவம் இல்லாட்டி திரும்பி வீட்ட போவம் வாங்கோ என்ற அவளது குரல் கொஞ்சம்  சிணுங்கலாகவும் அழுகையாகவும் கேட்டது. ரிக்கெட் பொடியனைப் பார்த்தார் மலர்க்கொடியாள். அவன் ஏதாவதுசெய்து அவர்களில் ஒருவரை அனுப்பிவிடும் முயற்சியில் இருந்தான். புதுக் குடும்பம். அதைவிட அந்தப் பெண் ஊரிலிருந்து இப்பதான் பிரான்சுக்கு வந்திருக்கிறா. அதுதான் பயப்படுறா என இடையில் விளக்கம்வேறு கொடியாளுக்கு சொன்னான். அவர்கள் விலகி நின்று மாறி மாறி ஒருவரை ஒருவர் சமாதானப்படுத்திக்கொண்டு நின்றனர்.

நேரத்தைப் பார்த்தார் மலர்க்கொடியாள். ஒன்பதுமணி.  உலகளந்தபிள்ளையை  அழைத்தார். நீங்கள் நில்லுங்கோ. நாங்கள் இவையளோட உள்ளபோறம். அடுத்துவாற ஆட்களோடு நீங்கள்  வாங்கோ. என்றுவிட்டு ரிக்கெட்கார பொடியனிடம், தம்பி அவை இரண்டுபேரையும் சேர்த்து எங்களோடு அனுப்புங்கள். இவர் வெளியாலை நிப்பார். உங்கட மற்ற ஆக்கள் வந்தவுடன் சேர்த்து உள்ளுக்கு அனுப்பி விடுங்கோ என்று கூறிவிட்டு மளமளவென  டிஸ்னிலாண்ட் வாசலை  நோக்கி நடக்கத்தொடங்கினார்.

ரொம்ப நன்றி அண்ணன் என்று ரிக்கெட்காரப்பொடியன் சொல்லியும், புதிதாக வந்த ஜோடிகள் இருவரும் சேர்ந்து “மெர்சிபுக்கு” என்று சொல்லியும், அவர்கள் எல்லோரும் டிஸ்னி வாசலை நோக்கிப் போவதையும் ஒன்றும் புரியாமல் பார்த்துக்கொண்டு நின்றார் உலகளந்தபிள்ளை. என்ன நடக்கிறதென எதுவுமே பிடிபடவில்லை. இரண்டு கைகளையும் இறுக மூடிக்கொண்டார்.

அண்ணை, உந்த மரத்தடியில் இருங்கோ. மற்ற ஆட்கள் வந்தவுடன் கூட்டிக்கொண்டு வாறன் என்ற, குரல் கேட்டுத்தான் சுயநினைவுக்கு வந்தார். ஓட்டமும் நடையுமாகப் போய்க்கொண்டிருந்தவனை ஒன்றும் பேசாமல் பின் தொடர்ந்தார். அவன் மிகவேகமாகச் சென்று மறைந்ததும், அவன் சுட்டிக்காட்டிய பெரிய மரத்தின்கீழ்  அமைதியாக நின்றுகொண்டார்.

இப்ப என்ன செய்வது. வீட்டுக்கும் திரும்பிப் போக முடியாது. எந்த ரெயின்  எடுப்பது. எங்கே இறங்கி மற்ற ரெயின் எடுப்பதென ஞாபகம் வருவதில்லை. அதைவிட வீட்டுக்குள் நுழைய முடியாது மருந்து வைச்சிருக்கு. ஆட்களை அழைத்துவருவதாகப் போனவன் எப்ப வருவானோ. வந்தாலும் உள்ளுக்குள்போய்  எப்படித்தான் கொடியாளை கண்டுபிடிப்பது.    தந்தையார், வல்லிபுரக்கோவில் திருவிழாவில் இதில் நில்லுங்கோ மகன். கூட்டத்துக்குள்ள  நீங்கள் வந்தால் நெரிச்சுப் போடுவாங்களென்று சொல்லி, பிடித்திருந்த கையை விலக்கிவிட்டுவிட்டு ஐஸ்கிரீம் வாங்கப்போனபோது எழுந்த அழுகை தொண்டைக்குள் முட்டிக்கொண்டு நின்றது.

samarasam-malars

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.