தூக்கு

 பர்மாவில் மழை ஈரம் கசிந்த ஒரு காலை நேரம்.  மஞ்சள் நிறத் தகடு போன்ற மெல்லிய ஒளி சிறைக்கூடத்தின் உயரமான சுவர்களைத் தாண்டி அதன் முற்றத்தில் சாய்வாக விழுந்துகொண்டிருந்தது. சிறிய விலங்குகளின் கூண்டினைப் போல இரட்டைக் கம்பிகள் வரிசையாகப் பொருத்தப்பட்டிருந்த தண்டிக்கப்பட்டவர்களின் சிறைக் கொட்டிலுக்கு வெளியே நாங்கள் காத்திருந்தோம். ஒவ்வொரு கொட்டடியும் பத்துக்குப் பத்து என்ற அளவிலும் மரப்படுக்கையும் ஒரு பானை குடிநீரும் வைப்பதைத் தவிர வேறு ஒன்றுக்கும் உதவாததாக இருந்தது. அவற்றில் சில அறைகளின் கம்பிகளுக்குப் பின்னால் மாநிற மனிதர்கள் போர்வையைப் போர்த்தியபடி குத்துக்காலிட்டு அமர்ந்திருந்தனர். இவர்கள் அடுத்த ஓரிரு வாரங்களில் தூக்கிலிடப்பட வேண்டிய தண்டனைக்குள்ளான மனிதர்கள்.

ஒரு சிறைக்கைதி அவரது கொட்டடியிலிருந்து வெளியே கொண்டுவரப்பட்டார். கலங்கிய கண்களுடனும் மொட்டையடித்து கூழையான மனிதராகவும் இருந்த அவர் ஓர் இந்து. படங்களில் வரும் காமிக் மனிதனின் மீசையைப் போல அவரது உடலுக்குப் பொருந்தாத பெரிய கட்டையான மீசை வைத்திருந்தார். தூக்கு மேடைக்கு அவரைத் தயார்ப்படுத்தும் விதமாக ஆறு உயரமான இந்திய சிறைக்காவலர்கள் அவரை காவல் காத்துக் கொண்டிருந்தனர். இரண்டு பேர் உடைவாள் சொருகிய துப்பாக்கியுடன் நிற்க மற்றவர்கள் அவருக்கு கைவிலங்கிட்டு அதன் வழியாக ஒரு சங்கிலியைக் கட்டி அதனை அவர்களது இடுப்புப் பட்டையில் கட்டிவிட்டு அவரது கைகளை உடலோடு ஒன்றாகச் சேர்த்து இறுக்கமாகக் கட்டினர். அவர் அங்கே தான் இருக்கிறார் என்பதை அவர்கள் உணர்கின்ற வகையில் ஜாக்கிரதையாக அரவணைத்தபடி அவரை நெருங்கிச் சூழ்ந்தனர். அது கழுவுகிற மீனில் நழுவுகிற மீனைக் கையாள்வது போலிருந்தது. என்ன நடந்தது என்பதைக் கவனிக்காதவன் போலத் தனது கைகளைக் கயிற்றுக்குக் கொடுத்துவிட்டு எவ்வித எதிர்ப்புமின்றி நின்றார்.

எட்டு மணி அடித்ததும் தொலைதூரப் பாசறையிலிருந்து அத்துவான காற்றில் எக்காள ஒலி மிதந்து வந்தது. எங்களிடமிருந்து தள்ளி நின்றபடி தனது பிரம்பால் சரளைக் கற்களை உந்திக் கொண்டிருந்த சிறைக் கண்காணிப்பாளர் நிமிர்ந்து பார்த்தார். கரகரத்த குரலும் தூரிகை போன்ற நரைத்த மீசையும் கொண்டிருந்த அவர் ஒரு ராணுவ மருத்துவர். “அடக் கடவுளே, வேகமாகச் செய் ஃபிரான்சிஸ்” என்றார் எரிச்சலுடன். “அந்த மனுசன் இந்நேரம் செத்துப் போயிருக்க வேண்டும். நீ இன்னும் தயாராகவில்லையா?”

தங்கச் சட்டமிட்ட கண்ணாடி மற்றும் வெள்ளுடை அணிந்த பருத்த திராவிடரான தலைமை சிறைக் காவலர் ஃபிரான்சிஸ் தனது கரிய கையை அசைத்தார். “யெஸ் சார், யெஸ்ஸ் சார்” என்று பொங்கினார். “எல்லாமே திருப்திகரமாகத் தயாராகிவிட்டது. தூக்கிலிடுபவனும் காத்திருக்கிறான். நாம் தொடரலாம்”.

“நல்லது, வேகமாக நட. இந்த வேலை முடியும் வரை சிறைவாசிகள் யாரும் சிற்றுண்டி உண்ண முடியாது”.

தூக்கு மேடை நோக்கி நாங்கள் புறப்பட்டோம். தங்களது துப்பாக்கியை மேலே சாய்த்தபடி இரு சிறைக் காவலர்கள் அந்தக் கைதியின் இருபுறமும் அணிவகுத்தனர். இரு சிறைக் காவலர்கள் அவருக்கு எதிரே அவரது கை மற்றும் தோள்பட்டையை அழுத்திப் பிடிப்பது போலவும், தாங்கிப் பிடிப்பது போலவும் அணிவகுத்தனர். நீதிபதிகள் மற்றும் எங்களைப் போன்றவர்கள் அவரை பின் தொடர்ந்தோம். பத்து கெஜ தூரம் சென்றதும் அந்த ஊர்வலம் எந்த கட்டளையும் எச்சரிக்கையுமின்றி திடீரென நின்றது. ஒரு திகிலூட்டும் நிகழ்வு நடந்தது- ஒரு நாய், கடவுளுக்குத்தான் தெரியும்… எப்படி எப்போது முற்றத்தில் வந்தது என்று. மிகச் சத்தமாகக் குரைத்துக் கொண்டே எங்களிடையே பாய்ந்த அது, நிறைய மனிதர்களை ஒன்றாகப் பார்த்த களிப்பில் எங்களைச் சுற்றி வந்து முழு உடலையும் ஆட்டிக் கொண்டிருந்தது. மயிரடர்ந்த அந்த நாய் ஏர்டேல் டெர்ரியர் மற்றும் இந்திய இனக்கலப்பு கொண்டது. சிறிது நேரம் எங்களைச் சுற்றித் துள்ளிய அந்த நாய் யாரும் தடுக்கும் முன்பே அந்தக் கைதியின் மீது மோதி அவரது முகத்தை நக்குவதற்கு எம்பிக் குதித்தது. அந்த நாயைப் பிடிப்பதை விட்டுவிட்டு எல்லோரும் திடுக்கிட்டு நின்றனர்.

“இந்த வெறி நாயை யார் உள்ளே விட்டது?” என்று கோபமாகக் கத்திய கண்காணிப்பாளர், “யாராவது அதைப் பிடியுங்கள்” என்றார்.

ஒரு சிறைக்காவலர் பாதுகாப்பு அணியிலிருந்து விலகி, அந்த நாயை கன்னாபின்னாவென்று துரத்த, அவரிடமிருந்து போக்கு காட்டிய அது எல்லாமே விளையாட்டு என்பதுபோல நடனமாடியது. ஒரு இளம் ஐரோப்பிய சிறைக்காவலர் கைநிறைய கற்களை எடுத்து வீசி அந்த நாயை விரட்ட முயன்ற போது அவரை ஏமாற்றிவிட்டு மீண்டும் எங்களிடம் வந்தது. அதன் ஊளைச் சத்தம் சிறைக்கூடத்தில் எதிரொலித்தது. தூக்கிலிடும் போது இதெல்லாம் ஒரு சம்பிரதாயமோ என்பதைப்போல இரண்டு காவலர்கள் இடையில் நின்ற அந்தக் கைதி ஆர்வமின்றிப் பார்த்தார். அந்த நாயைப் பிடிப்பதற்குப் பல நிமிடங்கள் ஆகின. பின்னர் அதன் கழுத்துப் பட்டையில் கைக்குட்டை ஒன்றை நுழைத்து இழுத்துப் போன போது அந்த நாய் தேம்பி அழுவது போலச் சிணுங்கியது.

தூக்கு மேடைக்கு நாற்பது கெஜ தூரம் இருந்தது. என் முன்னால் நடந்து செல்லும் அந்தக் கைதியின் மாநிறமான முதுகைக் கவனித்தேன். எப்போதும் நிமிராமல் ஓட்டமும் நடையுமாகச் செல்லும் ஓர் இந்தியனைப் போல தனது தடித்த கைகளை வீசியபடி நிதானமாகவும் மட்டித்தனமாகவும் அவர் நடந்து சென்றார். எட்டி வைத்த நடையில் அவரது தசைகள் அசைந்து அசைந்து அதன் இடத்தில் பொருந்தி நிற்க, உச்சிக் குடுமி மேலும் கீழும் என அசைந்தாடியது. ஈரமான சரளைக் கற்களில் அவரது பாதம் சுவடுகளைப் பதித்தது. அவரது தோள்களை அவர்கள் அழுத்திப் பிடித்திருந்தபோதும் கூட நடைபாதையில் குறுக்கிட்ட தண்ணீர் தேங்கியிருந்த குட்டையைத் தவிர்ப்பதற்காகச் சற்று ஒதுங்கி நடந்தார்.

அது ஆர்வமூட்டுவதாக இருந்தபோதிலும், ஒரு உணர்வுள்ள ஆரோக்கியமான மனிதனை அழிப்பது என்றால் என்ன என்பதை அந்தக் கணம் வரை நான் உணர்ந்ததில்லை.

பாதையில் குழி ஏற்படுவதைத் தவிர்க்கும் விதமாக அந்தக் கைதி நடந்ததைப் பார்த்தபோது முழு வேகத்தில் இயங்கும் ஒரு வாழ்வைப் பாதியில் துண்டிப்பது என்ற சொல்லொணா துன்பத்தின் மர்மத்தை உணர்ந்தேன். இந்த மனிதன் இறந்து கொண்டிருக்கவில்லை, நம்மைப் போல் வாழ்ந்து கொண்டிருந்தான். அவனது உடலின் எல்லா பாகங்களும் செயல்பட்டுக் கொண்டிருந்தன. குடல் உணவைச் செரிக்கிறது, தோல் தானே புதுப்பித்துக் கொள்கிறது, நகம் வளர்கிறது, திசு மாற்றமடைகிறது – அனைத்தும் முறைப்படியான முட்டாள்தனத்துடன் கடுமையாகச் செயலாற்றின. வாழ்வின் ஒரு கணப்பொழுதில் தூக்குமேடை பலகை விலகி காற்றில் விழும் நிலையிலுள்ள அக் கைதி தூக்குமேடையில் நிற்கும்போது கூட நகங்கள் வளர்கின்றன. அவரது கண்கள் மஞ்சள் கற்களையும் சாம்பல் நிற சுவர்களையும் பார்த்தன. அவரது மூளை இன்னும் அந்தப் பாதையில் ஏற்படும் குழிகளைப் பற்றிக் கூட பகுத்தாராய்கிறது. ஒன்றாக நடந்து செல்லும் அவரும் நாங்களும் இவ்வுலகத்தை ஒன்றாகவே கண்டு, கேட்டு, உற்றறிபவர்களாக இருக்கிறோம். இன்னும் இரண்டு நிமிடங்களில் சட்டென்று ஒரு நொடியில் எங்களில் ஒருவர் காணாமல் போயிருப்பார்.

அடர்ந்து கிளைத்துக் கிடந்த முட்புதர்களுக்கு இடையே சிறைக்கூட மைதானத்தை விட்டு விலகி இருந்த சிறிய முற்றத்தில் நின்றிருந்தது அந்தத்  தூக்குமேடை. செங்கற்களால் கட்டப்பட்ட மூன்று பக்கச்சுவர் கொண்ட கொட்டாரத்தின் மீது பலகை அமைக்கப்பட்டு அதன் இருபக்கமும் உள்ள தூண்களின் மீது வைக்கப்பட்ட குறுக்குச் சட்டத்தின் மையத்தில் ஒரு கயிறு ஆடிக் கொண்டிருந்தது. சிறைச்சாலையின் வெள்ளைச் சீருடையில் நரைத்த தலைமுடியுடன் இருந்த தூக்கிலிடுபவர் அவரது இயந்திரத்திற்குப் பின்புறம் காத்திருந்தார். நாங்கள் நுழைந்தபோது அவர் தாழ்ந்து பணிந்து வணங்கி வரவேற்றார். ஃபிரான்சிஸின் ஒற்றை வார்த்தையைக் கேட்ட இரு சிறைக் காவலர்களும் அந்தக் கைதியை இப்போது முன்னை விட மேலும் நெருக்கமாகப் பிடித்தவாறு தூக்கு மேடையை நோக்கித் தள்ளிக்கொண்டே அவர் ஏணியில் ஏறுவதற்குத் துணை புரிந்தனர். பின்னர் தூக்கிலிடுபவர் அந்தக் கைதியின் கழுத்தில் சுருக்குக் கயிற்றைப் பொருத்தினார்.

ஐந்து கெஜ தூரத்திற்கு அப்பால் நாங்கள் காத்து நின்றோம். சிறைக்காவலர்கள் தூக்கு மேடையைச் சுற்றி ஏறத்தாழ வட்ட வடிவில் நின்றனர். பின்னர் கயிற்றின் சுருக்கை இறுக்கியவுடன், அந்தக் கைதி கடவுளை நோக்கி அழத் தொடங்கினார். அது உதவிக்காக அழுவது போன்றோ அல்லது அவசரமாகவும் அச்சத்துடனும் பிரார்த்தனை செய்வது போலவோ இல்லாமல், நிதானமாகவும் ஒரு மணி ஒலிப்பது போலத் தாள லயத்துடன் உச்சஸ்தாயியில் “ராம்! ராம்! ராம்!” என உச்சாடனம் செய்வதைப் போன்றும் இருந்தது. அந்த ஒலிக்கு நாய் ஊளையிட்டு பதிலளித்தது. தூக்கு மேடையில் நின்றிருந்த தூக்கிலிடுபவர், பருத்தியாலான துணிப் பையால் கைதியின் முகத்தை மூடினார். அந்த சத்தம் அந்தத் துணிப் பையால் அமுக்கப்பட்டாலும் “ராம்! ராம்! ராம்! ராம்! ராம்!” என விடாப்பிடியாக மேலும் மேலும் ஒலித்துக் கொண்டிருந்தது.

தூக்கிலிடுபவர் கீழிறங்கி வந்து நின்று இயந்திரத்தின் நெம்புகோலைப் பிடித்துக் கொண்டார். நிமிடங்கள் கடந்து கொண்டிருந்தன. எதற்கும் அசையாத அந்தக் கைதியின் அமுக்கப்பட்ட அழுகையினூடே ஒரு நொடி கூட தளராமல் “ராம்! ராம்! ராம்!” என்ற ஒலி  தொடர்ந்து கொண்டே இருந்தது. தலை கவிழ்ந்து நின்றபடி தனது பிரம்பால் தரையைக் குத்திக் கொண்டிருந்தார் கண்காணிப்பாளர். ஒருவேளை அந்தக் கைதியின் அழுகையை ஐம்பது அல்லது நூறு வரை எண்ணிக் கொண்டிருந்திருப்பார். எல்லோரும் வெளிறிப் போய் இருந்தனர். இந்தியர்கள் ஒரு மோசமான காபி போன்று சாம்பல் நிறத்திலிருக்க ஓரிரு உடைவாட்கள் தடுமாறிக் கொண்டிருந்தன. முக்காடிடப்பட்டு உடல் கட்டப்பட்ட அந்த மனிதனை நோக்கியபடி அவரது அழுகையைக் கவனித்துக் கொண்டிருந்தோம்- ஒவ்வொரு புலம்பலும் வாழ்வதற்கான பிரயாசை; எங்கள் அனைவரின் மனதிலும் ஒரே எண்ணமே இருந்தது: “அய்யோ சீக்கிரம் கொல்லுங்கள், சகிக்க முடியாத அந்த சப்தத்தை நிறுத்துங்கள்!”

திடீரென அந்தக் கண்காணிப்பாளர் தயாரானார். நிமிர்ந்து நின்ற அவர் தனது பிரம்பை விருட்டென அசைத்து, “சலோ!”  என மூர்க்கமாகக் கத்தினார். அப்போது நொறுங்கும் சத்தம் எழ, மரண அமைதி நிலவியது. அந்தக் கைதி காணாமல் போக கயிறு மட்டும் முறுக்கிக் கொண்டிருந்தது. அந்த நாயை நான் அவிழ்த்துவிட, அது வேகமாகத் தூக்கு மேடைக்குப் பின்புறம் பாய்ந்தோடியது. அங்கு போனதும் சட்டென நின்ற நாய், குரைத்துவிட்டு, முள் புதர்களுக்குள் புகுந்து முற்றத்தின் ஓரத்திற்கு ஓடிச் சென்று நின்று எங்களை நடுக்கத்துடன் பார்த்தது. கைதியின் உடலை ஆய்வு செய்வதற்காக நாங்கள் தூக்குமேடையைச் சுற்றி வந்தோம். அவரது பாதங்கள் கீழ்நோக்கி நேராகத் தொங்கியபடி இருக்க ஒரு கல்லைப் போல மெதுவாகச் சுழன்று கொண்டிருந்தார்.

கண்காணிப்பாளர் அருகே சென்று தனது பிரம்பால் அவரது உடலைக் குத்திச் சோதிக்க அது மெதுவாக அசைந்தாடியது. “அவன் சரியாக இருக்கிறான்” என்றார் கண்காணிப்பாளர். தூக்குமேடையின் அடியிலிருந்து மேலே வந்த அவர் பெருமூச்சு விட்டார். அவரது சிடுசிடுப்பான முகம் சட்டென மாறியிருந்தது. அவரது கைக் கடிகாரத்தைப் பார்த்தார். “எட்டு மணி எட்டு நிமிடம் ஆகிறது. நல்லது, இந்தக் காலைப் பொழுதிற்கு அவ்வளவுதான். நன்றி கடவுளே” என்றார்.

சிறைக்காவலர்கள் துப்பாக்கியிலிருந்து உடைவாளைக் கழட்டிவிட்டு அணிவகுத்துச் சென்றனர். அந்த நாய், தான் தவறாக நடந்து கொண்டதை உணர்ந்ததைப் போல அமைதியடைந்து நழுவிச் சென்றது. நாங்கள் தூக்குமேடை தளத்திலிருந்து நடந்து வந்து தண்டனைக் கைதிகள் அடைக்கப்பட்டுள்ள சிறைக் கொட்டில்களைக் கடந்து சிறைச்சாலையின் மைய முற்றத்துக்கு வந்து சேர்ந்தோம். லத்திகளைக் கையில் வைத்திருக்கும் சிறைக் காவலர்களுக்குக் கட்டுப்பட்ட குற்றவாளிகள், ஏற்கனவே அவர்களுக்கான சிற்றுண்டியை பெற்றிருந்தனர். நீண்ட வரிசையில் குத்துக்காலிட்டு அமர்ந்திருந்த அவர்களிடம் தகரத் தட்டு கையில் இருக்க, இரண்டு சிறைக் காவலர்கள் வாளியுடன் நடந்து வந்து சோறிட்டனர். தூக்கிலிட்ட பின்னர் அது ஒரு குதூகலமான விருந்தோம்பல் போன்றிருந்தது. அந்த வேலை முடிந்தது என்பதில் நாங்கள் மாபெரும் ஆறுதல் அடைந்தோம். ஒவ்வொருவரும் பாடுவதற்கும் நமட்டுச்சிரிப்பு சிரிப்பதற்கும் துடித்தனர். எல்லோரும் ஒரே நேரத்தில் மகிழ்ச்சியாக அரட்டையடித்தனர்.

நாங்கள் வந்த வழியில் எனக்குப் பின்னால் வந்த ஐரோப்பிய வம்சாவளியைச் சேர்ந்த சிறுவன் என்னைப் பார்த்துப் புன்னகையுடன் தலையசைத்தான்: “உங்களுக்குத் தெரியுமா சார், நமது நண்பர் (இறந்த அந்த மனிதரைக் குறிப்பிடுகிறான்) அவரது மேல் முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டதை அறிந்து பயத்தில் அவரது கொட்டடி தரையில் சிறுநீர் கழித்து விட்டார்”. “எனது சிகரெட்டுகளில் ஒன்றைத் தயவு செய்து எடுத்துக் கொள்ளுங்கள் சார். எனது புதிய வெள்ளி சிகரெட் பெட்டியைப் பாராட்டமாட்டீர்களா சார்? ஐரோப்பிய பாணி வடிவமைப்பைக் கொண்ட இதை இரண்டு ரூபாய் எட்டணாவுக்கு வாங்கினேன்”.

நிறையப்பேர் சிரித்துக் கொண்டிருந்தார்கள் – ஏனென்று தெரியவில்லை.

கண்காணிப்பாளருடன் பேசிக் கொண்டே வந்தார் ஃபிரான்சிஸ். “நல்லது சார், எல்லாமும் மிக நிறைவாக நடந்து முடிந்துள்ளது. எல்லாமும் சொடக்கு போடும் நேரத்தில் முடிந்துவிட்டது. இது எப்போதும் இப்படி நடக்காது.! சில நிகழ்வுகளில் மருத்துவர் தூக்கு மேடைக்குக் கீழே சென்று கைதியின் கால்களை இழுத்துப் பார்த்து இறந்துவிட்டானா என உறுதிப்படுத்த கடமைப்பட்டவர் போல் நடந்து கொள்வார் என்பதை அறிந்துள்ளேன். விரும்பத்தகாத விஷயம் அது!”

“திருகிப் பார்ப்பதா? அது மோசமானது” என்றார் கண்காணிப்பாளர்.

“ஆமா சார், அதுவும் அவர்கள் பிடிவாதமாக இருந்தால் மிகவும் மோசமானது! எனக்கு ஒன்று நினைவுக்கு வருகிறது: ஒரு கைதியை வெளியே கொண்டுவர முயன்றபோது அவன் தனது சிறைக் கம்பிகளை இறுகப் பற்றியபடி இருந்தான். ஒவ்வொரு காலுக்கும் மூன்று பேர் என ஆறு சிறைக் காவலர்கள் அவனைப் பிடித்து இழுத்து வர வேண்டியதாகிவிட்டது”. “எங்களுக்கு நீ தரும் பிரச்சினையையும் வலியையும் நினைத்துப் பாருய்யா” என்று நாங்கள் சொன்னோம். ஆனால் அவன் கேட்கவில்லை. அவன் மிகவும் தொந்தரவாக இருந்தான்!”

நான் சத்தமாகச் சிரிப்பதை உணர்ந்தேன். எல்லோரும் சிரித்துக் கொண்டிருந்தார்கள். கண்காணிப்பாளர் கூட சகித்துக் கொண்டு சிரித்தார். “நீங்கள் எல்லோரும் வெளியே வந்து குடியுங்கள்” என்று மகிழ்ச்சியுடன் கூறினார். “நான் எனது காரில் ஒரு போத்தல் விஸ்கி வைத்துள்ளேன். அதை நாம் குடிக்கலாம்” என்றார்.

சிறைச்சாலையின் பெரிய இரட்டைக் கதவுகளைத் தாண்டி நாங்கள் சாலைக்கு வந்தோம். “அவன் காலை பிடித்து இழுப்பார்களாம்!” ஒரு பர்மிய நீதிபதி குபீரென சிரித்தபடி கூறினார். நாங்கள் எல்லோரும் மீண்டும் சிரிக்கத் தொடங்கினோம். அந்த நேரத்தில் ஃபிரான்சிஸ் கூறிய கதை அசாதாரணமான வேடிக்கையாக இருந்தது. ஐரோப்பியர்களும் உள்ளூர்க்காரர்களும் மிக இணக்கமாகச் சேர்ந்து குடித்தோம். இறந்தவன் நூறு கெஜ தூரத்தில் கிடந்தான்.

(The Adelphi, August 1931 | Reprinted in The New Savoy, 1946 வெளியான கட்டுரையின் தமிழாக்கம்.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.