பையுங்-ஷூல் ஹான் : மிகச் சுருக்கமான அறிமுகம்

வதாராளவாத உலகில் ‘சுதந்திரம்’ என்பது என்னவாக இருக்கிறது என்பதை பல்வேறு சிந்தனையாளர்கள் கேள்விக்குட்படுத்தியுள்ளனர்.

அவர்களுள் முக்கியமானவர் பையுங் ஷூல் ஹான்

(Byung-Chul Han). சுதந்திரத்தின் வழியாகவே தற்போது கட்டுப்பாடு சாத்தியமாகிறது என்பார்.

தொழில்நுட்பங்களைச் சுவீகரித்துக்கொண்டு வளர்ந்த நவதாராளவாத அரசியலானது உளரீதியான ஒடுக்குமுறையை (psychopolitics)

பிரயோகித்த விதங்களை தன்னுடைய புத்தகங்களின் மூலம் முன்வைக்கிறார்.

நம்முடைய உலகமே பெரிய பான்-ஆப்டிகானாக (Panopticon) உருவெடுத்துள்ளது. புறவயம் என்பதே இல்லாமல் ஆகி விட்டது. வெளி மற்றும் உள் ஆகியவற்றை வித்தியாசப்படுத்திக் காட்டுவதற்கான சுவர் இல்லாமலாகிவிட்டது. மக்கள் அனைவரும் சுயமாகத் தங்களை பான்- ஆப்டிக்கிடம் சரணடைகின்றனர். உதாரணமாக இப்போது குடும்பத்தோடு யூட்டுப்பில் Vlog செய்வது வழக்கமாகிவிட்டது. அன்றாட வாழ்க்கையே பதிவாக்கப்பட்டு நுகர்வதற்குரிய பண்டங்களாக உருவெடுத்து நிற்கின்றன.

ஆகவேதான், இங்கு பாதிப்பு ஏற்படுத்துவோர் பாதிக்கப்படுவோர் என இருவரும் ஒருவரேதான் என்கிறார் ஹான். எனவே சுதந்திரம் என்பது கட்டுப்பாட்டிற்குரிய கருவியாகவும் செயல்படுகிறது.

இருபதாம் நூற்றாண்டின் இறுதிவரை நாம் ‘ஒழுங்குமுறை சமூகத்தில்’ (disciplinary society) வாழ்ந்து வந்தோம். ஆனால், இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் நாம் ‘சாதனை மைய சமூகத்தில்’ (achievement society) வாழ்ந்து வருகிறோம். ஒழுங்குகளைக் கடைப்பிடிக்கவேண்டிய தன்னிலையிலிருந்து

சாதனைபுரியவேண்டிய தன்னிலையாக (entrepreneurs of the self) வேண்டிய நிர்ப்பந்தங்களோடு  இருபத்தோராம் நூற்றாண்டு நம்மை வரவேற்கிறது. உபரி உற்பத்திக்கான உந்தமும் நெருக்கடியும் பண்பு மாற்றத்தை அடைந்துள்ளது. ‘நீ இதைச் செய்தாக வேண்டும்’ (should) என்கிற கட்டளையிலிருந்து ‘உன்னால் இதைச் செய்ய முடியும்’ (can) என்பதாக அதிகார அமைப்புகளின் கட்டளை மாற்றமடைந்துள்ளது. இம்மாற்றம் சாதனைமையச் சமூகத்தின் விளைவாய் இருப்பதாய் அடையாளங்காணலாம்.

கட்டுப்படுத்துவதன் வழியாக,

வெளியேற்றுவதன் வழியாக, ஒடுக்குவதன் வழியாக மட்டுமே அதிகாரம் செயல்படுவதில்லை ; சுதந்திரத்தினை கருவியாகக் கொண்டும் அதிகாரம் செயல்படலாம். இன்றைய அதிகாரம் கொடுங்கோலனைப்போலப் பயமுறுத்தும் வடிவிலானது மட்டுமில்லை ;

அதிகாரமென்பது நண்பனைப்போல உரையாடும் தன்மையையும் பெற்றமைகிறது. கல்லூரிப் பேராசிரியர்களின் அதிகாரம் பள்ளி ஆசிரியர்களின் அதிகாரத்திலிருந்து வேறுபடும் புள்ளி இதுவே. பள்ளி ஆசிரியரின் அதிகாரம் ஒழுங்குமுறை சமூகத்தினுடையது. தனியார் கல்லூரிப்  பேராசிரியர்கள் நண்பர்களைப் போலப் பழகுகின்றனர். பேராசிரியர்களின் அதிகாரம் ஒரு கார்ப்பரேட் கம்பெனியின் மேலாளரைப்போன்றது;

இவர்கள் சாதனைமையச் சமூகத்தின் பிரதிபலிப்புகள். ‘நீ இதைச் செய்தாக வேண்டும்’ எனும் ஒழுங்குமுறை சமூகத்தினுடைய கட்டளையில் ஒரு எல்லை இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட வேலை இருக்கிறது, அதை நீ செய்து முடிக்க வேண்டுமென்பதை வலியுறுத்துகிறது அக்கட்டளை.

சாதனையை மையச் சமூகத்தின்

‘உன்னால் இதைச் செய்ய முடியும்’ எனும் கட்டளையானது குறிப்பிட்ட ஒரு வேலையைச் சுட்டாமல் ஒரு முடிவிலா தன்மையைப் பெற்றமைகிறது. சாதனைமையச் சமூகத்தின் கீழுள்ள தன்னிலையானது, தன்னைத் தானே அதீத சுரண்டலுக்கு உட்படுத்திக் கொள்கிறது. இங்கு, சுதந்திரம் என்பது கட்டுப்பாட்டின் ஒரு அங்கமாகப் பயன்படுத்தப்படும் விதங்களை பையுங் ஷூல் ஹானின் சிந்தனைகளின் வழியாகக் காணலாம்.

சமகால அழகியல் தர்க்கங்கள் குறித்து Saving Beauty புத்தகத்தில் பின்வரும் கேள்வியை முன்வைக்கிறார்.

மென்மையான அல்லது மிருதுவான ஒன்று ஏன் அழகான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது? ஒவ்வொரு அழகியல் விளைவுக்குப் பின்னும் சமூக வெளிப்பாடு அல்லது தத்துவார்த்த தர்க்கம் இருக்கும். அவ்வகையில் நாம் தினந்தோறும் இன்ஸ்டாகிராமில் எதிர்கொள்ளும் பிரபல புகைப்படக் கலைஞர்கள் எடுக்கும் புகைப்படங்களில் ஏன் மாடல்களின் முகங்கள் யதார்த்தத்தையும் மீறிய மிருதுவான (smoothness) தன்மையோடு காணப்படுகின்றன? ஏனெனில், மிருதுவாக இருக்கும் ஒன்று காயப்படுத்தாது; எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காது – the smooth object deletes it’s Against.

விஜய் படத்தில் ஒரு விஷயம் இடம் பெறுகிறதெனில் அவ்விஷயம் சமூகப் பொதுமனநிலையின் பிரதிபலிப்பாக இருக்குமென எடுத்துக்கொள்ளலாம். அவ்வகையில் ‘நெகட்டிவிட்டியெல்லாம் தள்ளி வை பேபி’ என்று விஜய்யே பாடுகிறார். “பாசிட்டிவிட்டியும்.. நெகட்டிவ்விட்டி” என்ற சொற்கள்தான் உளநிலையை விளக்கும்போது நாம் பிரயோகிக்கும் சொற்களில் முதன்மையானவையாக இருப்பவை. ஆனால்,

இயங்கியல்படி negative-வின் வழியே தான் நாம் மற்றமையை எதிர்கொள்கிறோம். மற்றமையோடு தொடர்பு ஏற்படுத்திக்கொள்ளாத பட்சத்தில் நம்முடைய புறத்தெறிவுகள் மட்டுமே புற உலகை நிரப்புபவையாக – அதைத்தான் நார்ஸ்ஸிஸம் என்கிறோம் –

இருக்கும். அலென் பதேயூ ‘In Praise of Love’ – இல் காதல் என்பது மற்றமையின் இருப்பைப் பூரணமாக உறுதிப்படுத்தி முன்னகரும் இயல்நிகழ்வு என்கிறார். சமகாலத்தில் காதல் மேலோட்டமானதாகவும் உயிரற்ற ஒன்றாகவும் இருப்பது மிகப்பெரிய சமூக அவலம். அது குறிப்பிட்ட கலாச்சார மாற்றத்தை அறிவிக்கிறது. சமூக வலைத்தளங்களில்

மற்றமையை எதிர்கொள்ளும் தருணங்களே மிகக் குறைவு. காதலில் ‘விழுவதிலிருந்து’ தடுப்பதற்கு செக்யூரிட்டி கம்பெனிகள் போல டேட்டிங் ஆப்கள். காதல், நார்ஸ்ஸிஸமிலிருந்து நகரும் நிலையாக அல்லாமல் நார்ஸ்ஸிஸமை அதிகப்படுத்தும்படியான வெளிப்பாட்டைத் தான் நம்முடைய சமகால கலாச்சாரம் உறுதிப்படுத்துகிறது. ஆகையால் தான் ஹான் சமகால உலகில் காதல் சாத்தியப்படுவதற்குரிய தருணங்கள் மிகக் குறைவாக உள்ளன என்கிறார். மற்றமைக்கான வெளி முற்றிலும் அழிந்து கொண்டு வருகிறது. ஆகையால் காதலும் அழிவு நிலையில் உள்ளதென்கிறார். ஏனெனில், காதல் சாத்தியப்படுவதற்கு நம்மைத்தாண்டிய மற்றமையின் இருப்பு அவசியமாகிறது.

பையு ஷூல் ஹான் தான் பேசும் விஷயங்களைப் பற்றி விரிவாக ஆய்வுமுறையில் எழுதக்கூடியவரல்ல. ஆனால், கூர்மையான பல அவதானிப்புகளையும் கேள்விகளையும் முன்வைக்கக் கூடியவர். அவருடைய சிந்தனைத் தெறிப்புகளை விரிவாக்கிக் கொள்வதன் பொறுப்பு வாசகர்களிடமே உள்ளது.

Previous articleஇன்பா கவிதைகள்
Next articleதூக்கு
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments