இன்பா கவிதைகள்

தையல்காரர்கள் வீதி

நடைபாதையின் ஓர் ஓரத்தில் அமர்ந்திருக்கிறார்கள்
கால் விரல்கள் தன்னிச்சையாய்
மிதித்துக்கொண்டே இருக்கின்றன
பெரும்பாலும் புதுத்துணிகளையே
தைக்க விரும்புகிறார்கள்
பழைய கிழிந்துபோன துணிகளை
யாரும் தைக்கக் கொடுப்பதில்லை
யாரும் தைத்துப் போடுவதையும் விரும்புவதில்லை
நறுக்கிப்போட்ட வானவில்லாய்
வார்த்தைத் துணிகள் வெட்டப்பட்டு
சுற்றிலும் சிதறிக் கிடக்கின்றன
தலைக்கு மேலே மெதுவாக வட்டமிடும்  காற்றாடி
அமோனிய மையின் முங்கிப்போன  முடிகளை
அலை அலையாய் விரித்துக்காட்டுகிறது
தையல்காரருக்கெனத் தனியாகக்
கடைகள் தேவைப்படுவதில்லை
ஏதோவொரு கடையின் மூலையில்
சாலையோரக் கடைகளுக்கு எதிரில்
ஓரத்தில் இடம்பிடித்துக் கொள்கிறார்கள்
ஒதுக்குப்புறமாக மூன்று சதுரங்கள் கிடைப்பதே
போதுமானதாய் இருக்கிறது
புத்தம்புதுத் துணியைக் கொடுத்தாலும்
உதறி, சுருட்டி, கட்டி, தூக்கி ஓரமாய்ப் போடுகிறார்கள்
நாள்தோறும் ஏதோவொன்றை நானும்
எழுதி, கிழித்து, தைத்துக்கொண்டுதான் இருக்கிறேன்
சேலைக்குத் தலைப்படிக்கச் சொன்னால்
பிளிட்ஸ் வைக்கச்சொல்கிறார்கள்

சின்னஞ்சிறு இழுப்பறைக்குள் கிடக்கும்
நூல் கண்டுகள் பிரிந்து சுருண்டுபோய்க் கிடக்கின்றன
எனது தையல் இயந்திரத்தின் சாய்ந்த காலடியை
இவர்கள் மிதிப்பதற்கு ஆசைப்படுகிறார்கள்
என்னுடைய சிறகுகளையும்
இவர்களே தைத்துக் கொடுக்க நினைக்கிறார்கள்
கைகளில் ஊசி குத்தி விட்டால் மட்டும்
எல்லாம் நடுநடுங்குகின்றன

மழையோடு நடத்தல்

கரும்பஞ்சு மேகங்களுக்கிடையில்
வானில் செருகிய ஐபோன் ஆப்பிளைப் போல்
கடிக்கப்பட்ட நிலவு மறைய
பெருந்தூறல் தொடங்கியது
எல்லோரும் பயந்து ஓடுகிறார்கள்
சாலையோரம் கிடந்த
தகரக் குவளையில் மீதமிருந்த
கோக்கோ கோலாவை
உறிஞ்சு குழல் போட்டுக்
குடித்துக்கொண்டிருந்தது மழை
மிதிவண்டிகள் சிணுங்கிக் கொண்டே கடந்தன
இலைகள் நீரில் மிதக்கின்றன
பெருங்கற்கள் மூழ்கின
மழை விட்டபாடில்லை
எந்தப் படகுக் காரும் அருகில் வந்து நிற்கவில்லை
மலர்கள் மலர்ந்து சிரிக்க
என் இதழ்களில் நீர் வழிந்தோடுகிறது
மழையோடு நடக்கிறேன்
இரண்டு கைகளையும் விரித்து

மழைக் கதிர்களைக்
கொத்தாக நெருக்கிப் பிடித்து
ஒரு பக்க நுனிகளை இறுக்கி முடிந்து
சாலையைக் கூட்டிக்கொண்டே நடக்கிறேன்
மழையை மிதித்துவிடாமல்

டைட்டானிக் கிழவி

கொஞ்சம் கூடுதலாய்க் குடியிருக்கிறது தனிமை
அவளுடைய காதலன்
மனத்துக்குள் உறங்கிக் கொண்டிருக்கிறான்
அசப்பில்
டைட்டானிக்  கிழவிபோலவே இருக்கிறாள்
மூன்று அறை வீடு
வியர்வையை உறிஞ்சியது
தோல் சுருங்கி
தசைகள் தொங்குகிறது
வரிவரியாகக்
கோடுகள் உடல் முழுவதும் திரிகின்றன

இடது கையில் வால் போன்ற
சுருக்குப்பை மாட்டியிருக்கிறாள்
ரோலக்ஸ் கடிகாரம்
ரேபான் கண்ணாடி  சகிதமாக
முத்து மணியை அணிந்துகொண்டு
குழந்தைபோல வெளியே வருகிறாள்
குடையை ஊன்றியபடி நடந்துசென்று
புளோக்கிற்குக் கீழே அமர்ந்துகொள்கிறாள்

கடந்து போகிறவர்களிடம்
ஹலோ சொல்லித் தலையை ஆட்டி ஆட்டி
புன்னகையைக் காற்றில் கரையவிடுகிறாள்

கண்கள் சுருங்கிப் படபடப்புடன்

எனக்கு இருபத்தியொரு ஆண் நண்பர்கள்
இருந்தார்கள் என்று அங்கலாய்க்கிறாள்

நான் கைவிட்டவர்களை விட
என்னை விட்டுச் சென்றவர்கள்
அதிகம் என்கிறாள்

ஏடிஎம்மில் பணமெடுக்க வேண்டும்
எழுத்துகள் மறைக்கிறது
உதவ முடியுமா என்கிறாள்

டைகர் பாம் பிளாஸ்டரை
முதுகில் ஒட்டிவிட முடியுமா
கை எட்டவில்லை  என்கிறாள்

பழைய வண்ணம் பூசிய
கட்டிடச் சுவர்கள் அவளை விழுங்குகின்றன
பசியில் வயிறு குழைகிறது
செருகி விழுகிறாள்

கடந்து போன
வாழ்வின் பாடல்
காற்று வெளியை  நிரப்ப
காலியான மனத்துடன்
இருட்டில்  உறங்குகிறாள்

அவளுக்குப் பௌர்ணமியை
அறிமுகப்படுத்தி வைத்தேன்
ஒளிக்கீற்றுகளோடு கைகுலுக்குகிறாள்

வேலை வேலையென அலைந்து
சிங்கிளாகவே இருக்க ஆசைப்பட்டேன்
தலைக்கு மேலிருந்த குருவிக்கூடு போன்ற
கூந்தலைக் கோதியபடி ஒயிலாகச் சிரிக்கிறாள்

ஆழ்கடலில் மூழ்கிக் கரையொதுங்கிய
இந்த கேட் வின்ஸ்லெட்டின் கதையை
எனக்கு மட்டுமே சொல்ல முடியும்.

Previous articleராஜன் ஆத்தியப்பன் கவிதைகள்
Next articleபையுங்-ஷூல் ஹான் : மிகச் சுருக்கமான அறிமுகம்
Avatar
இன்பா கவிஞர் எழுத்தாளர்,திணைகள் இணைய இதழின் ஆசிரியர். பொறுப்பு:   கவிமாலை, சிங்கப்பூர்த் தமிழ்க் கவிஞர் இயக்கத்தின் தலைவராகப் பொறுப்பு வகிக்கிறார். வெளியிட்ட நூல்கள் மூங்கில் மனசு மழை வாசம் ஙப் போல் நிமிர் ஞயம்படச் சொல் யாதுமாகி –  சிங்கப்பூர்  50 பெண் கவிஞர்களின் 200 கவிதைகள் தொகுப்பு நூல் லயாங் லாயங் குருவிகளின் கீச்சொலிகள் பரிசுகள்/விருதுகள் மூங்கில் மனசு சிறுகதைத் தொகுப்பு நூலுக்கு தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக் கழகத்தின் கரிகாற்சோழன் விருது (2018)  பெற்றது அயலகத் தமிழ் எழுத்தாளர்களுக்கான தமிழக அரசின் பரிசு கவிதைப் பிரிவில் சிறந்த நூலாக ( 2018) “மழைவாசம் “ கவிதை நூல் பரிசு பெற்றது பொதிகைத் தமிழ்ச்சங்கத்தின் கவிதை நூல்  போட்டி 2019ல்   ‘ஙப் போல் நிமிர்’   நூலுக்கு முதல் பரிசு. கவிமாலை நடத்திய சிறந்த கவிதை நூல் போட்டி 2019ல் ‘ஞயம்படச் சொல்’  கவிதை நூலுக்கு தங்கப்பதக்க விருது. தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டிலிருந்து சிங்கப்பூருக்குக் குடியேறி 18 ஆண்டுகள் ஆகிறது.
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments