கெவி

ந்ருவுக்கு ரெண்டு நிமிடங்களுக்கு முன்பு வரையிலும் கூட அந்த மங்கலான வெளிச்சத்தில் யாரோ இருப்பது போலத்தான் தெரிந்தது. யாரென்பதில் அப்போது இருந்த ஊர்சிதமும், திடமும், தூக்கம் களையும் போது சவலையாகிப்  போயிருந்தது. இழுத்துப் பெருமூச்சொன்று விட்டு நெருங்கிப் பார்த்திருக்கலாம். சட்டெனக் கண்களைத் திறக்க தூக்கச்சடவும், பயமும் இடங்கொடுக்கவில்லை. உரையாடும்போது திருத்தமான தோற்றமாக, ஒடுங்கி அழும்போது அந்த தோற்றத்தை ஒற்ற உருவமாக, தேற்ற முயலும்போது தரையோடு சரிந்த சாம்பலாக கலைந்து போயிருந்த, அந்த நொடி தான் கட்டுண்டு கிடந்ததுபோல இருந்த சந்ரு படுக்கையை விட்டு எழுந்திருந்தான்.

எழுந்தமரவேண்டும் என்ற எண்ணம் இவனுள் வந்ததற்கும், அவன் எழுந்ததற்கும் இடையில்தான் அத்துணையும் நடந்திருந்தது. அந்தக் குளிரிலும் மேலெல்லாம் வியர்வை. அறையில் ஒரு வடியான மயிர் பொசுங்கும் நெடி. எழுந்ததும் ரோமக்கால்களை குளிர் தீண்டியது. போர்வையை இழுத்து முகத்தைத் துடைத்துக் கொண்டான். மீண்டும் குளிர்.

வலதுபுறம் சுபாவினுடைய ஆழ்ந்த உறக்கம். எழுப்பத் தோன்றவில்லை. வெறும் கனவு. ஒரு உப்புக்கல்லுக்குப் பெறாத கனவு. எழுந்து போய் ஒரு டம்ளர் தண்ணீர் எடுத்துக் குடித்தான். கொஞ்சம் தேவலைதான். ஓரிருமுறை இழுத்து மூச்சு விட்டுக்கொண்டான். இருளைப் பிளந்துகொண்டு இறங்கும் காலைக்கதிர் இன்னமும் தரை தொடவில்லை.

நேற்றிரவே தோன்றியதுதான், உணவு கொஞ்சம் அளவு மீறுகிறது என்று. லேசான நெஞ்சுக்கரிப்பு வேறு, இரு ஜிண்டாக் மாத்திரை எடுத்துக் கொண்டிருக்கலாம். சரியாக ஜீரணம் ஆகவில்லை என்றாலும் வேண்டாத கனவுகள் வரும். மனம் தானாக கனவின் முகாந்திரத்திற்கு வழி தேடிக் கொண்டிருந்தது.

மெதுவாகப் படுக்கையறையில் இருந்து வெளியே வந்தான். வலுவிழந்த கால்கள் நடுக்கத்துடன் பின்னியது. அந்த ஓர்மையுடன் அடுத்து வைத்த ஒவ்வொரு எட்டிலும் நிதானம் கூடியது. பக்கத்து அறையில் பாதிக் கதவு திறந்திருக்க உள்ளே பெரியவன் சுரேஷ்சும், இளையவன் பிரதீப்பும் தூங்கிக் கொண்டிருப்பது தெரிந்தது. மனம் கொஞ்சம் தளர்ந்து, இலகுவாகி, நிம்மதி கொண்டது.

மீண்டும் அதே நெருடல். கனவுதானே! யாரிடமும் சொல்லி ஆகப்போவது என்ன? உண்மையாக இருந்தாலுமே, என்ன செய்துவிட முடியும்? மனம் இருள் உமிழும் நினைவுகளால் மண்டிக் கொண்டிருந்தது. இளையவன் மெல்லிய விசும்பலுடன் புரண்டு படுக்க, பார்வையை விலக்கி நகண்டான்.

இளையவன் வயதில் சந்ரு இருக்கும்போது இரவில் பயந்தெழுந்ததுண்டு. அவனை முருகன் படத்தின் முன்பு நிறுத்தி மணக்க மணக்க சித்தநாதன் விபூதியை நெற்றி நிறைய பூசி விட்டு “இனி ஒண்ணுங் பயப்புட வேண்டாங், என்ன கண்ணு?” என அம்மா தைரியம் சொல்வாள். அன்று போலவே இன்றும் கதறல் நெறிபட உடைந்து அழவேண்டும் போல இருந்தது.

பூஜை அறையின் மணிக்கதவு துவாரத்தின் வழியே விடிபல்பு ஒளி கண் நெருட வைத்தது. அதனூடே மணக்க மணக்க சித்தநாதன் விபூதி தன் வாசம் பரப்பி அருகில் அழைத்தது. ஒரு எட்டு அதை நோக்கிக் கால் வைத்தவன் வேண்டாம் என்பது போல திரும்பிக் கொண்டான். உற்று உற்று கடிகார முள் பார்த்தான். நாலு மணியென்றிருந்தது. சிகிரெட் ஒன்றை எடுத்துப் பற்ற வைக்கத் தோன்றி, பின் வேண்டாமென்றானது. அதிகாலையில் எழுந்தால் சுகமாக மீண்டும் மறுதூக்கம் போடுவது தான் அவன் வழக்கம். அரவம் இல்லாமல் வந்து படுத்துக் கொண்டான். எங்கிருந்து இனி தூங்குவது? புத்திதான் விழித்துக் கொண்டதே!


பூர்வீக சொத்து பாத்தியதைகள் உள்ளவர்களுக்கே உண்டான மொகக்கலை அப்பாவிடம் உண்டு. வயது 35 இருக்கும்போது சொந்தமாக ஐந்து தறிச்செட்டுகள் வீட்டில் ஓடிக் கொண்டிருந்தது. மூன்று தறிச்செட்டுகளில் பொம்பளயாட்களை வேலைக்கு அமர்த்தியிருந்தார். மீதம் ரெண்டில் அப்பாவும் அம்மாவும் தறியோட்டினார்கள்.

அப்பா வருடாவருடம் திருச்செந்தூருக்கு அம்மாவையும் சந்ருவையும் அழைத்துக் கொண்டு போவார். அம்மா குறிப்பறியக் காத்திருந்தவளாக எந்த நேரமும் அப்பாவின் ஒவ்வொரு அசைவையும் கவனித்தபடி வருவாள். அப்பா என்றாலே பயம்தான் அவளுக்கு. சுருள் முடியும் தாதியுமாக நல்ல வாட்டசாட்டமான உடல் அப்பாவுக்கு. யாரிடம் இருந்து வந்ததென்றே சொல்ல முடியாத அளவிற்கு அதிகார நெடி எப்போதும் அவர் மேல் கசிந்து கொண்டே இருக்கும்.

அம்மா, அப்பாவின் மார்புயரம் தான். சொல்லப்போனால் சந்ருகூட அதிகம் அம்மாவின் சாயல்தான். அப்பாவின் நினைவு வரும் போதெல்லாம் சந்ருவுக்குக் கட்டுக்கடங்காத வெறுப்பும் சேர்ந்தே வரும். எப்போது அந்த வெறுப்புப் பற்றியது என்ற நாள் தெளிவில்லை. ஆனால் நிச்சயமாகத் தெரிந்த உண்மை, அது தீவிரம் கொண்டது என்னமோ அவர் இறந்த பின்பு என்பதுதான்.

ஏழு வருடங்களுக்கு முன்பு அம்மா தவறிய போதும் கூட காரணமேயின்றி அப்பாவின் மீதுதான் கோவம் குமிந்தது. அப்பா மீதான பயம் சந்ருவுக்கும் அவன் அம்மாவுக்கும் மட்டுமே உரித்தானதல்ல. “எலேய், ஏய்! சண்ட போடாம சேந்து உக்கார என்ன பேதியா எடுக்கு” எனும் குதிரை வண்டிக்காரர் சத்தம் கூட சந்ரு வீட்டு முன்னால் கொஞ்சம் இளந்து போய்த்தான் ஒலிக்கும்.

“மச்சாங் வீட்ல இருக்காலோ” என மெல்லிய குரலில் கேட்டு உறுதி செய்த பின்பு தான் மாமா வீட்டுக்குள் சகஜமாகவே வருவார்.


ன்ன, வெள்ளனே எந்திச்சாச்சு போல?”

“ம்ம்….. ஒரு மாறி தலைக்கனமா இருக்கு, காப்பி போடு” எழுந்து காலைக்கடன் முடித்து காப்பியோடு மேசையில் அமர்ந்தான்.

“என்ன, ஏதோ பெரிய யோசனையா இருக்கு?”

“யோசன என்ன யோசன?” சந்ரு இல்லையென்பது போல தலையசைத்துச் சிரித்தான்.

“இல்லையே, ஏதோ இருக்குதே! சொல்லிருங்க, இல்லாட்டி நானே கண்டுபுடிச்சுருவேன்.” கிட்ட வந்து சுபா முகத்தைப் பார்த்தாள்

“லூசு, ஒண்ணுமே இல்ல! போய் அவன எழுப்பு! பின்ன அய்யோ எம்மானு கத்திக்கிட்டு அவசரத்துல நிப்பாங்”

பெரியவனுக்கு 7 மணிக்கு ஸ்கூல் பஸ். தெரு முனையில் வந்து நின்றுவிடும். அடுத்த அரைமணி நேரத்தில் இளையவனுக்கு, அவனைத்தான் கொண்டு போய் விடவேண்டும். கொஞ்ச நேரத்தில் காலைப் பரபரப்பு வீட்டில் பற்றிக் கொண்டது. பெரியவனுக்கு ஐந்து வயதிருக்கும் போதுதான் டில்லியில் இருந்து ஊருக்கு வந்து விடலாம் என்று முடிவானது.

அப்பா இறந்துபோன பின் எல்லாருடைய கண்ணிலும் தெரிந்த இளக்காரத்தை உணர சந்ருவுக்கு அதிக காலம் பிடிக்கவில்லை. ஆளாளுக்கு நியாயமும், நாட்டாமைத்தனமும் அக்கறையென்ற பெயரில் செய்தார்கள். அதை சகிக்க முடியாமல் எழுந்த தீவிரம்தான் இருபது வயதில் பாலிடெக்னிக் முடித்த கையோடு டெல்லிக்கு வண்டியேறச் சொன்னது. உணவு பதனிடும் தொழிற்சாலையில் அவன் துறைசார்ந்து உயரப் போராடச் சொன்னது. 

கல்யாணமான புதிதில் சுபா-வுடன் அப்பாச்சி வண்டியில் டில்லி வீதியில் சுற்றும் போதும் சரி, பின் வேலை முடிந்தவுடன் ஒரு “ஸ்மிர்னப்” அடித்துவிட்டு வீதி உலா வரும்போதும் சரி, சந்ரு கண்ணில் தான் இளக்காரப் பார்வை வந்தது.

முப்பத்தைந்தில் கொஞ்சம் நிமிர்ந்து விட்டோம் என்று தோன்றியது. பெரியவனுக்கு ஐந்து வயதாகும் போது டெல்லியும் போதுமென்று பட்டது. சரியாக வருமா என்ற யோசனையுடனே தொடங்கினாலும் இந்த ஐந்து வருடத்தில் சந்ரு தொடங்கிய ஹார்ட்வேர் கடை நன்றாகவே ஓடுகிறது.

“போலாமாப்பா?” இளையவன் ஷூவை மாட்டிக்கொண்டு சந்ரு அருகில் வந்து நின்றான்.


நாதியற்று நட்டாற்றில் விட்டது போலத் தான் இருந்தது அம்மாவிற்கு, அரசல்புரசலாகக் கேட்டது தான். மாமா மனசுக்கு மீறி அம்மாவிடமே சொல்லியும் இருந்தார். “சரியா தெரியலையேடா” என்று! அப்பா வெளியூர் போன ஒரு நாள் மாலையில் வாசல் கூட்டிக் கொண்டிருந்த அம்மா நிமிரும் போதுதான் அப்பா அந்தப் பெண்ணை அழைத்துக் கொண்டு வந்திருந்தார். கையில் ஆறு மாசக் குழந்தையுடன். அவர்கள் மூவரையும் பார்த்ததும் அம்மாவுக்கு இருண்டு கொண்டு வந்து விட்டது. முட்டுக்குக் கீழ் கூடிக்கொண்டே போன நடுக்கம் அம்மாவை விழுத்தாட்டிவிட்டது.

அத்தை வந்து சந்ருவை அணைத்துப் பிடித்துக்கொண்டாள். ரெண்டு பொம்பளைகள் சேர்ந்து அம்மாவைத் தூக்கி நிறுத்தினார்கள். அழுகை இறுகஇறுக அம்மாவுக்கு பல் கட்டிக்கொண்டது.

“ஏம்மா, பல்லு கெட்டிக்கிடுச்சு, வத்த இருந்தாக் கொண்டாங்க” கோமதி மதினி சமயக் கட்டிற்கு ஓடினாள். சிரட்டை ஒன்றை எடுத்து உடைத்து, சாம்பிராணி தட்டில் எரியவிட்டு கங்கு வந்ததும் வத்தலை அதில் கிள்ளிப்போட்டு “வெலகுங்கம்மா, மத்தாளுகத் தூர வெலகுங்க” என சொல்லிக் கொண்டே, புகைந்த கரண்டியை அம்மாவின் முகத்தருகே நீட்டினாள். ரெண்டு மூன்று இருமல் வந்து அம்மா முகம் தளர்ந்தது. பஞ்சடைத்த கண் மெல்லத் தெளிந்தது. அம்மா பார்க்கும்போது, அப்பா திண்ணையில் அவருடன் வந்த பெண்ணை உக்காரும்படி சைகை செய்து கொண்டிருந்தார்.


“மச்சாங்! வீட்டுக்கு வந்ததும் போங்களேன்” என பல்லை கடித்துக் கொண்டு இருந்துவிட்டுப் பொறுக்க முடியாமல் அப்பாவிடம் மாமா பேசி அவர் வீட்டுக்கு அழைத்துச் சென்றார்.

“இது மொறயில்ல மச்சாங், இல்லாதபய வீட்டுலதான பெண்ணெடுத்துருக்கம்னு இந்த எடுப்பெடுத்துருக்கீக? புடிச்சோ புடிக்காமையோ இவள கட்டி ஒரு புள்ளையப் பெத்துட்டீக. வீடான வீட்டுல இப்புடி எங்கிருந்தோ ஒருத்தியக் கொண்டாந்துக் குடிவைக்கறது உங்களுக்கே நல்லா இருக்கா?” என மாமா சொன்னதற்கு,

“அவ இங்கனதாங் இருப்பா” என அப்பா தீர்மானமாக பதில் சொன்னார். “நீங்க பெரிய சண்டியரா இருந்தா இருந்துட்டு போங்க! ரெண்டு பேரக் கட்டி சவரட்டன போடுவீக, நாங்க சும்மா இருக்கணுமோ?” மாமாவுக்குக் கோவம் தலைக்கேறியது.

எந்தப்புள்ளிய புடித்தது என்பது சந்ருவுக்கு நினைவில்லை. நினைவில் இருப்பதெல்லாம் அம்மா சுவரில் முட்டிக்கொண்டு அழுததுதான். யாரோ போல அதை அப்பா வேடிக்கைப் பார்த்தது பொறுக்காமல் மாமா முதலில் கைநீட்டி சண்டை வலித்ததாக அம்மா பின்னாளில் சொன்னதுண்டு.

வீட்டில் கட்டவுத்திரம் போட்ட நடுவரைக்கு நேர்மேலே, மாடியில் வேய்ந்த கிடுகும். அவசரமாகக் குழைத்துப் பூசிய அடுப்பும் – திண்டும், வாசலாக விட்டுருந்த வெளியை அடைத்துப் போடப்பட்ட அளிப்பாய்ச்சிய கதவும், தங்க ஏதுவான ஒரு இடமாக அமைந்தது. அப்பா அழைத்து வந்த பெண்ணையும், அவர்கள் குழந்தையையும் அங்குதான் ரெண்டு நாட்களாகத் தங்க வைத்திருந்தார். தாத்தா இருந்த காலத்தில் அவர் படுத்திருந்த கால் தோய்ந்த கட்டில் ஒன்று உண்டு. திரும்பிப் படுக்கும் போதெல்லாம் உப்புத்தாள் உரசும் ஒலி எழுப்பிக்கொண்டு, அசைக்கவே ரெண்டாள் தயவு வேண்டும். அப்பா ஒரு ஆளாகவே அதை மாடிக்கு ஏற்றியிருந்தார்.

“அவுக ஆன பலங்கொண்ட மனுஷரே” எனக் கையை முறுக்கி, உடலை நிமிர்த்தி, முகத்தில் கம்பீரக்களை படர அப்பா பற்றி அம்மா தன் காலமட்டுக்கும் சொல்ல உதவிய உதாரணங்களில் அதற்கு பிரதான இடம் உண்டு.


சின்னச்சின்ன விசியங்களுக்குக் கூட அப்பாவின் கோவம் கைநீள்வதிலேதான் முடிந்திருக்கிறது. முதுகிலும் இடுப்பிலும் வார்வாராக பெல்டடி தழும்புகளுடன் நடமாடினாலும், விளிம்பு வரை நிறைந்த கண்ணீருடன் நிப்பாளே ஒழிய அம்மா அழுததேயில்லை.

“எய்யோவ், அவகளுக்கு வெளங் வந்துட்டா! யாரு என்னனு பாக்கது கிடையாது…. தாட்பூட்….. தாட்பூட்…னு தான் எல்லாங்” கையை மேலும் கீழும் ஆட்டி அவளும் சந்ருவும் தனித்திருக்கும் பொழுதுகளில் சிரித்துக் கொள்வாள். 

ஆனால் அப்பா அந்தப் பெண்ணோடு வந்த நான்கு நாட்களாகவே அம்மா அழுதுகொண்டேதான் இருக்கிறாள். அன்றிரவு சந்ரு எழும்போதே அம்மாவைத் துணைக்கு அழைக்கலாம் என்ற எண்ணம் எழாமலில்லை. நீர்பூத்துப் போயிருந்த தரையின் குளுமை அந்த இரவுக்கு மேலும் கனமேற்றியிருந்தது. கண் திறக்காமல் ஒன்னுக்கை அடக்கியபடியே இனியும் படுக்க முடியாது என எழுந்தபோது எங்கோ ஓர் இடுவலின் வழியே தீனமானதொரு முனங்கல் ஒலி வந்துகொண்டேயிருந்தது.

எரிந்தடங்கிய கரியாகச் சுவரில் படர்ந்திருந்தது அம்மாவின் நிழல். அனலை உள்ளடங்கிய நிழல். சன்னமாகத் திரி திருவிய சிம்னி விளக்கின் ஒளி காற்றில் அசைந்து நிழலின் ஜீவனை நினைவுறுத்தியது. தேக்கங்கட்டையில் உத்திரம் போட்ட மேத்தளத்தின் பிளவுகளின் வழி ஏதோ தெரிவது போல, அதையே அம்மா வெறித்துப் பார்த்தபடி இருந்தாள். தாரை தாரையாகக் கண்ணீர் இறங்கி நனைத்திருந்த கன்னக் கதுப்புகளில் கத்தையான மயிர்கற்றைகள் ஒட்டியிருந்தன.

சந்ரு எழுந்து அமர்ந்து பேந்தப் பேந்த முழித்தான். பதட்டம் படிய முழித்த சந்ருவின் முகத்தைப் பார்த்தவுடன் சேலை முந்தானையில் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு,

“எய்யா… என்னப்பா மொகமெல்லாங் வெளிறிபோயிருக்கு யென அதே சேலை முந்தானையில் துடைத்து விட்டாள். சந்ருவுக்கு அழுகை வந்தது. சேர்ந்து அணைத்துக்கொண்டாள். அம்மாவின் பார்வை மேலேயே நிலைகுத்தியபடி இருந்தது. அம்மாவின் அணைப்பின் பத்திர உணர்வோடு இந்த முறை சந்ருவும் மேலே பார்க்கும் போது சீரான இடைவெளியில் வந்த உப்புத்தாள் உரசும் சத்தத்தை கேட்க முடிந்தது.


ந்ரு இன்று வழக்கத்தை விட அதிக நேரம் குளியலுக்குச் செலவிட்டான். பூசையறையில் நின்று கண்களை மூட, மனம் கனத்துக் கொண்டே போனது. கால் வலியெடுக்கவும் சுதாரித்துக் கொண்டான். மூடிய கண்களைத் திறக்க, மெலிதாக இமைகளில் ஈரம் கோர்த்திருந்தது. திருநீர் கொப்பரையில் இருந்து, விபூதியை எடுத்துப் பூசிக்கொண்டான்.

“சாப்பாடு வைக்கட்டுமா? சமயலறையில் இருந்து சுபா கேட்டாள். “சரியென்று மேசையின் முன்னால் நாற்காலியை இழுத்துப் போட்டுக்கொண்டு அமர்ந்தான். பசிக்கான அறிகுறியே இல்லை. வெறுமனே கை தட்டில் அலைந்து கொண்டிருந்தது. “எப்பா, பசியே இல்ல, எடுத்துவையி பாதியில் எழுந்து கொண்டான்.

எதுவும் சொல்லாமல் கைகழுவிக் கொண்டு வாசலுக்கு இறங்கியவன் நிலையில் கைவைத்தபடி “சுபா……. சாவி யென்று முடிப்பதற்குள், சாவி கையில் தட்டுப்பட்டது.

“என்னாச்சு? காலைல இருந்தே ஒரு மாதிரி இருக்கீங்க. உடம்பு ஏதும் சரியில்லையா?

“நெஞ்சுக்கரிப்பு மாதிரி இருக்கு, சரியா தூக்கம் வராதது வேற என்னமோ மாறி இருக்கு

“ஒரு நாள் கடைக்கு லீவு வெண்ணாப் போடுங்களேன், நாங் மணிட்ட வேலை இல்லன்னு கூப்புட்டுச் சொல்லிக்குறேன். நீங்க டேபிலேட் போட்டு ரெஸ்ட் எடுங்க

“கடையத் தொறந்துட்டு கொஞ்ச நேரம் இருந்தம்னா சரியாயிரும். அப்பறமும் சரியா வரலைன பெறவு பாப்பம்

“பழைய வீட்டுச் செவரு சாஞ்சு போய்க் கெடக்கு, இன்னைக்கு எடுத்துக் கட்ட ஆள் வரும்னீக! பெறவு கடைக்கு போறம்கீக

“நம்ம இருந்தென்ன செங்கசிமிண்டா தூக்கிச் செமக்கப் போறோம்? நம்ம ஆள் ஒருத்தர் அங்க இருக்கணும் அவ்ளோதான், நீயே போய் இரு. தேவைன்ன கூப்புடு, மணி மட்டுந்தான் கடைக்கு வருவாங். மூர்த்திய இங்க அனுப்பி விடுறேன், பாத்துக்கோ

மேற்கொண்டு எதுவும் கேட்க விடாமல் வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.


ழக்கமாக அம்மாதான் சந்ருவை எழுப்புவாள், அன்று மாமா எழுப்பினார். எழுந்தபோது தெளிவுற்றிருந்த சத்தங்கள் அத்துணையும் நொடிப்பொழுதில் அர்த்தப் படத்துடங்கியது.

வீட்டின் முற்றத்தில் நீலம்பாரித்த இரு உடல்கள்.

“நேத்து ராத்திரி எவ்ளோ நேரம் நாய்க ஊளையிட்டுகிட்டு கெடந்ததுங்க! எனக்கு அப்பமே கெதக்கு, கெதக்குனு தான் இருந்திச்சு. நான் கூட அந்த சுப்பக்கா மாமியா ஒடம்பு சொகமில்லாம ரொம்ப நாளாக் கெடக்கவும் அங்கனதாங் போலன்னு நெனச்சேன் என்று எல்லா இழவு வீட்டிலும் வேறு ஒரு ஆளை எதிர்பார்த்ததாகச் சொல்லும் வேலு வீட்டுக்காரி கூட வார்த்தைகள் தொலைத்தவளாக ஓர் மூலையில் ஓய்ந்து சாய்ந்திருந்தாள். அம்மாதான் முதலில் ஏதோ சரியில்லாததாக உணர மேலே போய்ப் பார்த்திருக்கிறாள். அப்பாவும், அவர் அழைத்து வந்த பெண்ணும் வாயில் நுரை தள்ள இறந்து கிடக்க, உடன் இருந்த குழந்தை தொட்டிலில் இருந்து அப்போதுதான் விழித்திருந்தது. வெடித்து அழுத அம்மாவின் சத்தம் கேட்டுத்தான் பக்கத்து வீட்டில் இருந்து மாமா ஓடி வந்தார்.

“என்ன செய்வேங் நாங்? என்ன செய்வேங்? ஊர்ப்பய கேக்கட்டும் ஆயிரம்! ஒரு வார்த்த நாங் கேட்டிருப்பனா? உங்க புள்ளையக் கூடவா நினையாமப் போனீக அம்மா அழுது புரண்டாள். குழந்தை மேலும் கத்தியழுதது. அழுது கொண்டே வந்த சந்ருவையும், அந்த குழந்தையையும் அம்மா அணைத்துக்கொண்டாள். உலகத்தின் உஷ்ணத்தையெல்லாம் அவள் உடல் வாங்கி கொண்டது போல, அம்மாவின் மேலெல்லாம் கொதித்தது.

“போலீஸ்ல சொல்லி அவன எழுதி வைக்கலாமாம்மா? என்னதாங் ஆவட்டுமே! ஏதோ கூடக்கொறையா ஆனாலும் வீட்டுல வச்சுப் பேசுனா வெவகாரம் தீருமா, இல்ல நடுரோட்டுல விட்டு இப்படி அடிச்சு இழுத்துட்டு போக வச்சா தீருமா? முக்குத் தெருவுல இருந்து அடிச்செல்ல போலிசு அவன அன்னைக்கு இழுத்துட்டுப் போச்சு

“அதுக்கு! அவங் தங்கச்சிக்காரி அவன் கிட்ட அடிபடக்கூட நம்ம மச்சான்காரங் கூறு அவளொதாம்னு பொறுத்துதான போனாங்! அததாங் சாக்குன்னு எங்கனாப் பட்டவளையோ கொண்டாந்து வச்சுகிட்டு மணியம் பண்ணுனா புள்ளயக் குடுத்த அண்ணங்காரங் எம்புட்டுத்தாங் பொறுப்பாங்? அவங் சிநேகிதக்காரப்பய போலீசா இருக்கவும் எழுதி வச்சுட்டன்

“அடிபட்டாலும் வந்ததே சரின்னு மாடிக்கு ஓடி இளையகுடியாளையும், புள்ளையும் பாத்துட்டு நல்ல இருக்காகனு தெரிஞ்சதுந்தான உயிரே வந்தமானிக்கு திரும்பி வந்து பெருமூச்சு விட்டுக்கிட்டே வாசல்ல உக்காந்தானாம்.

“பிரஞ் சொல்லுத! அப்பம் கவனமும் நெனப்பும் அங்கனதாங் இருக்கு

“எம்மா, அன்னைக்கு வெவகாரமானது மட்டும் எப்புடிங்க? மச்சினங்காரன் எந்தங்கச்சி வாழ்க்கைய சீரளிச்சுட்டீக, ஆச்சு பூச்சு குதிச்சும் ஒரு வார்த்த பேசலியே! மத்த நேரம் யாரும் அவன்கிட்ட பேச முடியுமா? இருந்தாப்புல அவங் வார்த்தைய விடவும் கட்டி உருண்டுட்டானுக! ஆளுக போய் விலக்கலனா கூடக் கொறையா ஆயிருக்கும்

“அவனும் அப்புடி சொல்லக் கூடுமா? நீ எத்தன நாளைக்கு காவக்காத்துருவ, அங்கிட்டு இங்கிட்டு நகண்டதும், அவளவும், அந்த புள்ளையவும் கழுத்தருக்கலன்னா என்னனு பாருங்கவுந்தாங் மல்லாயி போச்சு! என்ன இருந்தாலும் இளையகுடியா முன்னாடியே சொன்னா சுருக்குனு பட்டுப்பேவுமே நம்ம ஆம்பளைகளுக்கு,

என தன் போக்கில் கூட்டத்தினுள் சுழண்ட பேச்சுக்களிடையே “அவுக வீட்டுளவும் சொல்லி விட்ருங்க என்று அந்தப் பெண்ணைக் காட்டி அம்மா சொன்னாள்.


“என்னண்ணே, லேட் ஆயிருச்சி? உங்களுக்குத்தான் போன் போடணும்னு எடுத்தேன், கரட்டா வந்துட்டீக கடையில் வேலைக்கு நின்ற மணி கேட்டான்.

“தல லேசா கனமா இருந்திச்சு, இப்பம் தேவல எனச் சாவியை நீட்டியபடி சொன்னான் சந்ரு. சுத்தம் செய்த மேசையில் மீண்டும் ஒருமுறை துணியைப் போட்டு துடைத்துக் கொண்டான்.

“மணி! ரெண்டு சிகிரெட் வாங்கீட்டு வா சட்டையைத் தொட்டுப் பார்த்து பின் மேசையின் கீழ் உள்ள பெட்டியைத் திறந்து பணம் எடுத்துக் கொடுத்தான்.

அப்பாவுக்கு சிகிரெட், தண்ணியென்று என எந்த பழக்கமுமில்லை என்பது தற்செயலாக நியாபகம் வந்தது. கைப்பேசியை எடுத்து தம்பியின் எண்ணைத் தேடிப்பிடித்தான். அழைக்கப் போய், பின் துண்டித்துக் கொண்டான். அப்பா இறந்து ஆறு ஆண்டுகள் இவர்களோடேதான் தம்பி இருந்தான். “அவ ஒட்டும் உறவும் இத்தோட முடிஞ்சுது எனப் போன அந்த வீட்டுக்காரர்கள், “எங்களுக்கு நாளப்பின்ன ஒரு ஆதரவுக்கோ, நல்லதோ, பொல்லதோ வந்தா எடுத்துச் செய்ய அந்த பயதாங் இருக்காங் என்று வாசலில் நின்றபடியே கேட்டுத் தம்பியை அழைத்துச் சென்றனர்.

எவர் தடுத்தும் கேட்காமல் “என்ன இருந்தாலும் அவுக ரெத்தமில்லன்னு ஆகுமா, என அவனுக்கு ஒரு பங்கை, நொடித்துப் போன பிறகும் அம்மா பிரித்துக் கொடுத்தாள். எப்போதாவது அம்மா சொல்வது கூட உண்டு, “தம்பிக்கு காது, அப்பாவ எங்கனு இருக்குல்லயென்று. பல வருடங்களுக்குப் பின் சமீபத்தில் தான் அவனோடு சந்ரு தொடர்பை ஏற்படுத்திக் கொண்டிருந்தான். உடனே இதைச் சொல்ல மனம் வரவில்லை.

“கடைல தான்ணே 10 ரூவா பாக்கி நிக்கி, பெறவு கழிச்சுகிட சொன்னாரு சிகிரெட்டை மேசையில் வைத்தபடி மணி நின்றான். கடைக்கு மேலே ரெண்டு அறைகள் உண்டு. ஒன்று சரக்குகளை இருப்பு வைக்க, மற்றொன்று கழிவறையுடன் கூடிய காலியறை.. ரெண்டு நாற்காலிகள் மட்டும் போடப்பட்டு இருக்கும். சட்டரை கால்வாசி மட்டும் துறந்து கொண்டு சந்ரு உள்ளே சென்றான்.

பற்ற வைத்த சிகிரெட்டின் புகை கொஞ்ச நேரத்தில் அறை முழுவதும் புகைந்து நிறைந்தது. மயிர் பொசுங்கும் நெடியுடன் இந்த புகையே இன்று காலையிலும் வந்தது. கலைந்திருந்தக் கனவின் சித்திரம் இப்போது நேர்படத் துடங்கியது.

காலையில் மூச்சழுத்தும் போது அடர்ந்த புகைதான் முதலில் தரைபாவ துடங்கியது. டைல்ஸ் கல் தரையை அகற்றி, நீர்பூத்த செங்கல் தரைவிரிப்பு ஒன்று உருவானது. மேலெழுந்த புகை சுவர்பற்றி ஏறி இடைவெளியுடன் தேக்கங்கட்டைகளை உத்திரமாகப் பதித்துச் சென்றது. புகைவிலக, கருத்துருண்ட சவுக்கு மர நிலைத்தூணில் சாய்ந்தபடி அப்பா தலை கவிழ்ந்திருந்தார். அதே இறுக்கம் குறையாத முகம்.

சந்ரு வாயெடுக்க திணறி, ஏதோ உளறினாலும் சொல்ல வந்தது தோராயமாக இதுதான்.

“எவங் சேத்துக்கிடல உம்ம காலத்துல இன்னொரு பொண்ண? பெரிய இவம்னு உம்மா எத்தனபேரு என் நெனவு தெரியச் சொல்லிக் கேட்ருக்கேன். இந்தப் பிரச்சனையத் தாக்காட்டி கொண்டு போகக் கூடவா முடியல? எங்கள இப்புடித் தட்டழிய விட்டுட்டு போய்டீயளே

வார்த்தைகள் அவனுள் ஒடுங்கியொலித்தது. இருவருக்கும் பொதுவாய் இருளும் – மௌனமும். கூடுடைவது போல, இம்மௌனத்தை ஒரு விசும்பல் கலைத்தது. அப்பாவினுடையதுதான்.

“என்ன? கலவரமான குரலில் சந்ரு கேட்டான்.

“உங்காலமெல்லாங் என்ன வெறுத்துருக்க, நான் கொணங்கெட்டவனா இருக்கலாம், ஒரு நா உன்கிட்ட அதக் காட்டிருக்கனா? அவளப் புடிச்சுத்தான் ரெண்டாந்தாரமா கட்டிக்கிட்டேன், இல்லங்கல! அதுக்காண்டி, உங்களத் தெராட்டுல நிறுத்தனும்னு நாங் ஒரு நாளும் நெனச்சதுல்ல

திரண்டு வந்த ஆத்திரம், விரத்தி ரெண்டும் ஏதேதோ சொல்லச் சொன்னது. உக்கிக் குருகவேண்டும், அதுவும் ஒரே கேள்வியில்! எண்ணம் மனதில் எழும்போது கேள்வி வந்தது.

“உம்ம கட்டுன காலத்துல இருந்து சன்னச் சீரழிவா எங்கம்மா சீரழிஞ்சா! கல்யாணம் பண்ணி அவகூட குடும்பமும் நடத்திப் புள்ளையப் பெத்துட்டு, செவத்த தோலுக்காரியக் கண்டதும் கறிக்கலஞ்ச நாய் மாதிரி மூச்சிரைத்து கொண்டே தொடர்ந்தான்.

“அந்தக் கொள்ளையும் எவ தாலியத்தா எனக்கு என்னனு பொழுதடையப் பெருக்காமதான மச்சில கூத்தடிச்சீரு. அத நெனச்சு அவ நொந்து அழுத நாளு இன்னமும் என் கண்ணுல இருக்கு

“உங்க குடும்பத்தக் கெடுக்கணும்னு நாங் வரல. அந்த பாவமும் எனக்கு வேண்டாம். நானும் எம்புள்ளையும் எங்காச்சுத் தூரதொலவு போய்ச் சாவுதோம்னு கைபுள்ளைய தூக்கிட்டு கெளம்புனா… நீ வளந்த பய, நாலு விசியம் தெரிஞ்சபய, குடும்பம் கொழந்தனு இருக்கவேங். உன்கிட்ட சொல்ல எனக்கு தயக்கமெல்லாங் கெடயாது! அந்த நேரத்துக்கு எனக்குத் தெரிஞ்சபடி சமாதானப் படுத்துனே. உடச்சே சொல்லுதனே! அப்போதைக்கு அந்தப் பேச்ச அமத்துனேன். அதுக்கு என்ன செய்யணுமோ அத செஞ்சேன்

“உம்ம தெனவுக்கு இன்னைக்கீ எங்கிட்டிருந்தோ ஒரு வியாக்கியானத்த தூக்கீட்டு வந்து நட்டுதீக, என்ன? அம்மா உங்களுக்கு என்ன கொறவச்சுட்டா?

“………..

“பதிலே காணமே சந்ரு குரல் ஏறியொலித்தது.

“ஒரு கொறையும் வைக்கலய்யா………… அன்னைக்கு ராத்திரி சாப்பாடு கூட உங்கம்மாதாங் கொண்டாந்து குடுத்தா

“…………..

“எனக்கு குடுத்தா சரி, நம்புனமே, இந்த காரியம் செஞ்சுட்டானேனு குடுத்தா. அவளுக்கும்? அந்தப் புள்ள பச்ச மண்ணு, அம்மாவ விட்டுட்டு சீரழியணும்னு என்ன இருக்கு? அந்த புள்ளைக்கும் ஏதும்னா? எனக்கு ரெண்டும் புள்ளதான அப்பா சத்தம் குறைந்து அழுகை மேலிட்டது. சந்ரு எழும்போது எல்லாம் கலைந்தது.


சிகரெட் கங்கு விரலைச் சுடவும் தூக்கி எறிந்தான். இன்னொரு சிகிரெட்டைப் பதட்டத்தோடே எடுத்துப் பற்ற வைத்தான். மேலே பார்த்தபோது ஓரங்களில் புழு நெளிவாக உப்புத்தாள் உரசும் ஒலி நெளிந்தபடியே தரையிறங்கிக் கொண்டிருந்தது. சிகிரட்டை விட்டேறிந்துவிட்டு வேகமாக கடையில் வந்த பேனுக்கு நேராக அமர்ந்தான். வேர்வை தணிந்தது. கொஞ்சம் ஆசுவாசப்பட்டு சேரில் சாயும்போது சுபாவிடம் இருந்து அழைப்பு வந்தது.

“சொல்லுப்பா….பரண்லையா? சாக்குல கட்டிக்கெடந்ததோ….. அப்பா போட்டோ….. ம்ம்…………. சொல்லு…. போட்டோலையா? தேதி போட்டுருந்துச்சா……….. சரி, சரி.. இரு வாறன். உடனே வாரேன்.. வை வாரேன் போனை துண்டித்து விட்டு, “மணி நாளைக்கு பாப்பம், கடைய ஒதுங்க வைய்யி சந்ரு எழுந்து இழுப்பறையை அடைத்துப் பூட்டினான். வேகமாக சட்டரை இறக்கும் போது மணி கேட்டான்.

“என்னண்ணே, எதும் பிரச்சனையா? நாவேணா கூட வரட்டா?

“இல்ல, வேற ஒண்ணுமில்ல. இன்னைக்கு எங்க அப்பாவுக்கு நெனவு நாளு சந்ரு வண்டியை நோக்கி வேகமாக நடக்கத் துடங்கினான்.


-இரா.சிவசித்து

Previous articleமுத்தத்துக்கு..
Next articleஉணர்வு
Avatar
கனலி - கலை இலக்கியச் சூழலியல் இணையதளம். www.kanali.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.