முத்தத்துக்கு..

லது பக்கம் மேல் உதட்டு ஓரத்தில் மறைந்திருந்த மீசையின் வெள்ளை முடியை நறுக்கினேன். வெள்ளையான பிறகு முடிகளுக்கு இத்தனை மினுமினுப்பு எங்கிருந்து வருகிறதோ.. உள்ளங்கையில் வைத்துப் பார்த்து.. ’ப்பூ..’ என ஊதி விட்டேன். பெரிய சுமையொன்றை காற்றில் கரைத்துவிட்டதைப்போல ஒரு வெற்றி உணர்வு. 

சலூன் கடைக்கு சென்று மீசையை திருத்தவேண்டும் என்றுதான் நினைந்திருந்தேன். சலூன் கடைக்காரர் உடனே டை அடித்துக்கொள்ளச் சொல்வார் என்பதாலேயே போகாமல் இருந்துவிட்டேன். தலையில் இருக்கும் கண்ணுக்குத் தெரியும் வெள்ளை முடிகளை கூடுமானவரை நறுக்கிவிட்டேன், காலையில் எழுந்தவுடனே மீசையில் வெள்ளையைப் பார்த்தவுடன் இன்னதென்று சொல்லமுடியாத சோகம் முகத்தில் அப்பிக்கொண்டது. தூரத்தில் இருந்து பார்த்தால் மீசையின் வெள்ளை முடிகள் ஒன்றும் தெரியப்போவதில்லைதான்.. ஆனால் அருகில் நெருங்கிப் பார்த்தால் நிச்சயமாகத் தெரியும்! இன்று அவளுக்கு முத்தம் கொடுத்துவிட வேண்டும் என்று நேற்று இரவு  தீர்மானித்ததிலிருந்தே எனது தோற்றத்தைப் பற்றிய கவனமே மனதில் ஓடிக்கொண்டிருக்கிறது.

இன்று அவள் வந்தவுடனே வேறெதுவும் பேசப் போவதில்லை. கரங்களை வளைத்து அவள் அசரும்படியாக முத்தமிடப் போகிறேன். அவள் கன்னங்களிலெல்லாம் கொடுக்கப் போவதில்லை.. நேரடியாக அவளது உதடுகளிலேயே கொடுத்துவிட வேண்டியதுதான். 

நான்கு மணிக்கு வருவதாக சொல்லியிருந்தாள். அரை மணி நேரம் கடந்துவிட்டது, கடிகாரத்தை அடிக்கடி பார்த்துக் கொண்டேன். சிறிய முள் வேகமாக சுற்றிக் கொண்டிருந்தது. அவள் ஏன் இன்னும் வரவில்லை என்ற தவிப்பு அடி வயிற்றிலிருந்து எழும்பி குரல்வளையை அடைத்தது. எப்போது வேண்டுமானாலும் நெற்றியைப் பொத்துக்கொள்ளும் என்பதுபோல உள்ளூர எழும்பிய கோபத்தை மாடியிலிருந்து கீழே சாலையை வேடிக்கைப் பார்த்து தணித்துக் கொண்டிருந்தேன். 

மெல்லிய கால் தடத்தின் சத்தம் கேட்டது. அவ்வளவு நேரம் இருந்த தவிப்பெல்லாம் பரபரப்பாய் உருமாறிவிட்டது. அவள் முகத்தை பார்த்த நொடியில் அவள் மேல் தோன்றிய கோபமெல்லாம் அற்ப ஆயுளில் நான் நின்றுகொண்டிருந்த இரண்டாவது மாடியிலிருந்து விழுந்து நொறுங்கியது.

மஞ்சள் நிறத்தில் நான் இரண்டு மாதங்களுக்கு முன் அவளது பிறந்தநாளுக்காக வாங்கிக் கொடுத்திருந்த உடையைத்தான் அணிந்து வந்திருந்தாள். நானே அந்த உடையில் அவளை அருகில் பார்க்க வேண்டும் என கற்பனை செய்து  வைத்திருந்தேன். வழக்கமாக பின்னல் போட்டிருக்கும் முடியை அழகாக தலை உச்சியில் கொண்டை போட்டிருந்தாள். முடியற்ற அவளது பின் கழுத்தை இன்றுதான் முதன்முறையாக பார்க்கிறேன். இதுவரை நான் காணாத ஒருத்தியாக இன்று முற்றிலும் புதிதாகத் தெரிந்தாள். கடுகு அளவில் பூதக்கண்ணாடி கொண்டுதான் தேட வேண்டும் என்பதைப்போல ஒரு கறுப்பு பொட்டு வைத்திருந்ததால் அவளது நெற்றி முன்னைவிடவும் அகலமாகத் தெரிந்தது, விநாடிக்கு விநாடி அங்கும் இங்கும் ஓடும் அவளது கருவிழிகளை எப்போதுமே எதிர்கொள்ளத் தயங்குவேன் என்றாலும் ஒருவாறு   தயக்கத்தை மறைத்துக்கொண்டு பார்த்தேன்.. இடது கண் ஓரத்தில் மட்டும் லேசாக கரைந்த மையை சரி செய்திருப்பாள் போலிருக்கிறது. வியர்வையில் கன்னங்களிலும் கழுத்திலும் திட்டுத்திட்டாய் பவுடர் ஒட்டியிருந்தது தெரிந்தது. நூலளவே ஆன கழுத்துச்சங்கிலி மாலை நேரத்து சூரிய ஒளியில் கழுத்தை மேலும் மினுக்கிக் காட்டியது.

சம்பிரதாய பேச்சுகளுக்கு அடுத்ததாக நிகழும் மவுனத்தின் இடைவெளியில் இட்டு நிரப்ப என்னிடம் வார்த்தைகள் இருந்தும் அதை எங்கிருந்து ஆரம்பிப்பது என புரியவில்லை. என்ன பேசவேண்டும் என்பதெல்லாம் நினைவில் இருக்கிறது அவை வார்த்தையாக உருபெறாமல் கருவிலே கரைந்த குழந்தையென உள்ளுக்குள் கரைந்துகொண்டிருந்ததை நன்றாகவே உணர்ந்தேன்.

பல நாட்களாக மனதில் ஊறிக்கிடக்கும்  இந்த ஆசையை இன்று வெளிப்படுத்திவிடுவது என முடிவெடுத்துதான் அவளை வரச்சொல்லியிருந்தேன். வெளியில் சொன்னால் வெட்கக்கேடு. என் வயது நண்பர்களெல்லாம் திருமணமாகி அவர்களின் பிள்ளைகளை பள்ளிகளில் சேர்த்துவிட்டார்கள். இந்த முப்பத்து ஒன்பது வயதில் (நாற்பது என்பதை சொல்லத் தயக்கத்தில்) ஒரு இருபத்தொன்பது வயது பெண்ணிடம் நான் ஒரு முத்தத்திற்காக ஏங்குவதைச் சொன்னால் என்ன நினைப்பார்களோ?  போன வாரம் என்னுடன் கல்லூரியில் படித்த தோழியின் மகள் வயதுக்கு வந்துவிட்டதாக என் நண்பன் சொன்னான். இந்த முத்தம் பற்றிய விஷயங்களை எல்லாம் யாரிடமும் பகிர முடியாத நிலையில் இருக்கிறேன். என் உற்ற நண்பன் பாபுவிடம் பகிரலாம் ஆனால் அவன் “இருபது வருஷத்துக்கு முன்னாடி நான் என் காதலிக்கு முத்தம் கொடுத்துட்டேன்னு சொன்னேன் நீ என்னடான்னா இத்தன வருஷம் கழிச்சு வந்து உன் அனுபவத்தை சொல்றியா?” என்று பலமாக சிரிப்பான். 

வயது கடந்துபோன பின்பு கிடைத்த முதல் காதலை புனிதமாக்க நானும் எவ்வளவோ பிரயத்தனப்பட்டாலும் சில நாட்களாகவே முத்தம் பற்றிய நினைவுகள் தலையைச் சுற்றும் பொன்வண்டுபோல துரத்துகின்றன. அந்த ஆசை எனும் பொன்வண்டை மற்றவர்களிடம் இருந்தும் அவளிடமிருந்தும் நான் மறைத்தாலும் எனக்கு முன் எப்போதும் அது விஸ்வரூபம் எடுத்து நின்றுகொண்டிருக்கிறது.

இதற்குமுன் முயற்சி செய்யாமலும் இல்லை. இரண்டு மாதத்திற்கு முன்பு ஒருநாள் இரவு அவளை அவள் வீட்டில் இருசக்கர வாகனத்தில் கொண்டுவிடப்போகும்போது முகத்தில் அடித்த சாரல் காற்றும், இரவின் நிசப்தமும் முத்தம் பற்றிய எண்ணத்தை கிளறியது மனதுக்குள் அடித்துக்கொண்டே இருந்தாலும் தயக்கமும், பயமும் சேர்ந்து கைகூடாமல் அவளை வழி அனுப்பி ஒரு புன்னகையை மட்டும் உதிர்த்துவிட்டு திரும்பினேன். இப்படி பலமுறை முயற்சி செய்வதற்கு முன்னரே தோல்வியடைந்திருந்ததால் எனக்கு அன்று பெரிய ஏமாற்றம்  எதுவுமில்லை, ஆனால் உள்ளுக்குள் சுய பச்சாதாபம் அதிகமானது.

இன்றைய நாளைப்போல சரியான சந்தர்ப்பம் கிடைப்பது அரிது, நான் குடியிருக்கும் வீட்டின் உரிமையாளர் குடும்பத்தோடு வெளியூர் சென்றிருப்பதால் மொட்டை மாடிக்கு துணி காயப்போடக்கூட கீழ்வீட்டிலிருந்து யாரும் வரப்போவதில்லை. இருந்தாலும் கைகளைத் தூக்கி சோம்பல் முறிப்பதைப்போல அடிக்கடி படிக்கட்டுகளை பார்த்துக் கொண்டேன்.

மாடிப்படியின் ஓரம் ஓங்கி வளர்ந்த வேப்ப மரத்திலிருந்து காகம் ஒன்று விருட்டென பறந்து சென்றது. இருந்த ஒரே சாட்சியும் பறந்ததில் நிம்மதியாக இருந்தது.  மரம் எங்கேயும்போய் சாட்சி சொல்லப்போவதில்லை என்பதில் ஒரு சிறிய ஆறுதல். 

மயக்கமும் குழப்பமும் மட்டுமே துணை நிற்க நிழலிடமிருந்தும் தனித்துவிடப்பட்டவனாக முதல்முறையாக அவளோடு முத்தம் குறித்து பேசினேன்.. இல்லை பேச தயங்..கி…னேன், இல்லை தயங்கி பேசினேன். உண்மையில் பேச நினைத்தேன்! வேறெந்த விஷயத்துக்கும் உடனே திறந்துவிடும் வாய், முத்தம் என்றால் மட்டும் எல்லா வார்த்தைகளையும் உள்ளே தள்ளிவிடுகிறது. காற்றுகூட வரத் தயங்கிய வாயை மூடியிருப்பதே உத்தமம் .

ஆரம்பத்தில் முத்தம் பற்றிய ஆசை உருவாகும்போதெல்லாம்  பெருங்குழப்பம் ஒன்று திரண்டு எழும். ‘இப்போது முத்தம் கொடுக்கவா? கேட்கவா?” கொடுப்பதை விடவும் கேட்பதில்தான் அச்சம் என்பதை அறிந்துகொண்டபிறகு முதலில் கொடுப்பது என்று தீர்மானிக்கவே ஏழு மாதங்கள் ஆகிவிட்டது. 

காதலிக்கத் துவங்கிய ஏழு மாதத்துக்கு பிறகுதான் அவளது சிறு சிறு அழகியல் செய்கைகளுக்கெல்லாம் முத்தம் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குத் தோன்ற ஆரம்பித்தது. 

உரையாடல்களுக்கிடையே தான் சொல்லும் விஷயங்களுக்கெல்லாம் ஆச்சர்யப்பட்டு அகல விரியும் கன்னங்களும், உயரும் புருவங்களுமாக சிறுமியாக அவள் மாறும் சமயங்களில் எல்லாம் அவளை அப்படியே அள்ளி மடியில் வைத்து கொஞ்சி முத்தமிடவேண்டும் எனத் தோன்றியிருக்கிறது.

ஒருமுறை பேசிக்கொண்டே இருக்கும்போது காய்ச்சல் அடிக்கிறதா பார் என்று அவளே கையைப் பிடித்து நெற்றியில் வைத்து தொட்டுப்பார்க்கச் சொன்னாள். புறங்கையால் நெற்றியைத் தொட்ட கணத்தில் என் உள்ளங்கையில் ஏற்பட்ட வியர்வை அன்று முழுவதும் எனது கைகளில் இருந்தது. அப்படியொரு பொன்னான கணத்தில் முத்தமிடத் தவறியதை நினைத்து பலமுறை வருத்தப் பட்டிருக்கிறேன்.

இருசக்கர வாகனத்தில் ஏறும்போதும் இறங்கும்போது லேசாக எனது தோளை அழுத்தியே இறங்குவாள். அதன் மூலம் என்னவோ பெரும் வலியை எனக்குக் கொடுத்துவிட்டதைப்போல அதற்கு வருத்தமும்  தெரிவிப்பாள். அந்த நொடியே இருக்கும் இடத்தை மறந்துவிட்டு முத்தம் கொடுத்தால் என்னவென்று தோன்றும். 

இது போன்ற  சமயங்களில் எல்லாம் நினைவுகள் மட்டும் வீழ்படிவாய் தங்கியதே ஒழிய முத்தம் கொடுக்கத் தோன்றிய எண்ணம் உருவான  வேகத்திலேயே நீர்க்குமிழிகளாய் உடைந்துவிடும்.

சில சமயங்களில் மனதில் இருக்கும் தைரியத்தையெல்லாம் திரட்டி பேச்சில் வெளிப்படுத்த முயற்சித்திருக்கிறேன். 

“அது..அது வந்து முத்தம் குடுத்தா தான் குழந்தைக்கில்லாம் நம்ம கிட்ட பாசம்  இருக்குமாமே..உண்மையாப்பா?” 

“முத்தம் குடுத்தா கொழந்த பொறக்கும்னு சின்ன வயசுல பயந்துட்டே இருப்பேன்” 

என தேவையே இல்லையென்றாலும் உரையாடல்களின் ஓரத்தில் எல்லாம் ‘முத்தத்தை’ தொட்டு வைத்தேன்.

நமுட்டுச் சிரிப்போடு உரையாடலை மடைமாற்றிவிடுவாள்.  ஒருநாளும் முத்தம் பற்றிய எந்த சமிக்ஞையும் அவளிடத்தில் இல்லை என்றபோது சோர்வுதான் மிஞ்சியது. 

தொடர்ந்து கேட்டால் எங்கே தவறாக எண்ணிவிடுவாளோ என்ற பயம் மனதைக் கவ்வும் போதெல்லாம் முத்த ஆசையை தூங்க வைத்துவிடுவேன்.  

உள்ளுக்குள் விருப்பமும், தயக்கமும் மல்யுத்தம் நடத்திக் கொண்டிருக்க வெளியே போர் நிறுத்ததிற்கு வந்த தேவாலய பாதிரியாரைப்போல சாந்தமாக முகத்தை வைத்துக் கொண்டு நின்றிருந்தேன். கண்கள் சும்மாயிருந்தாலும் மனம் பல சமயங்களில் அதை சும்மாயிருக்க விடுவதில்லை. பிடியிலிருந்து திமிரும் கைப்பிள்ளையைப் போல மனம் நழுவிக்கொண்டே இருந்தது. சமநிலையாக்க அவள் பக்கமிருந்து விலக்கி வேறு வேறு இடங்களில் பார்வையை செலுத்தினேன்.

சூரியன் கரைந்துகொண்டிருந்த நேரம் ஒன்றுகலந்திடும் மேகங்களில் அவள் முகம் தேடிக்கொண்டிருந்தேன். என் காதுகளைத் திருகி ‘அங்கு என்ன பார்வை? நான் இங்கிருக்கும்போது?’ என்பது போல செல்லமாக மண்டையில் தட்டினாள். இதுதான் சந்தர்ப்பம் என எங்கிருந்து மனபலம் வந்ததோ.. அருகில் நெருங்கி தட்டிய அவளது கைகளைப் பிடித்துக் கொண்டேன்.. வெகுநேரமாக விரட்டி தும்பியை பிடித்துவிட்ட சிறுவனின் மனநிலை. மனதுக்குள் இஷ்ட தெய்வத்தை எல்லாம் துணைக்கு அழைத்தேன். 

பால்யத்தின் முடிவில், இளமை துளிர்விடும்போது முத்தமிட ஆசைப்பட்டவன், ஒரு வழியாக இளமை கிளைபரப்பி  இருக்கும்போது அவளை நெருங்கி முத்தமிடுவதற்கு துணிந்து விட்டேன். நிகழ்ந்து கொண்டிருப்பது கனவா அல்லது நினைவா என்பதை யூகிப்பதற்கு முன் அவளது வெட்கச்சிரிப்பு உள்ளுணர்வை  என்னவோ செய்துவிட, நரம்புகளுக்குள் ஊடுருவிய ஏதோ ஒன்று பாடாய் படுத்தியது.  

உடலின் ரோமங்களெல்லாம் சிலிர்த்து நிற்க.. தயக்கமா, நடுக்கமா எனத் தெரியாமல் துடிக்கும் தொடைகளை பூமியில் கால்களை அழுத்தி ஊன்றுவதன் மூலம் கட்டுப்படுத்தினேன்.

வாழ்க்கையில் முதன் முறையாக ஒரு பெண்ணை முத்தமிடப் போகிறோம் என்ற பிரக்ஞையும், பயமும், பரவசமும், மோகமும் ஒன்று கலந்து ஏதேதோ உணர்வை உண்டாக்கியது. 

உண்மையில் முத்தம் பற்றிய பல்வேறு கனவுகளை   நான் பருவம் மாறத் துவங்கியதிலிருந்தே காணத் துவங்கியிருந்தேன். சிறு பிராயத்தில் ஒளிந்து விளையாடும் நாளொன்றில், பத்தாயத்துக்குள் எல்லோரும் ஒளிந்திருக்க என் நண்பனின் அண்ணன் மூர்த்தி அவன் தோழி ரூபிணிக்கு முத்தம் கொடுத்ததை கண்டிருக்கிறேன். அப்போதிலிருந்து முத்தத்திற்கு ‘நெல்’வாசனை இருக்கும் என நினைக்கத் தொடங்கியிருந்தேன்.

எனது சித்தப்பா வெளிநாட்டில் இருந்து வந்த நாளில் சித்தப்பாவிடம் சாக்லேட் வாங்க வீட்டில் இருந்த பிள்ளைகள் எல்லாம் அவரது அறைக்கதவை திறந்தோம்.  அப்போது சித்தப்பா சித்தியை மடியில் படுக்கவைத்துக்கொண்டு சித்திக்கு முத்தம் கொடுத்துக் கொண்டிருந்தார். வெளிநாட்டு சாக்லேட்டை விடவும் முத்தம் சுவையானது போல என்று அப்போது  நினைத்துக் கொண்டேன். முத்தம் ‘சாக்லேட்’ சுவையிலிருக்கும் என நினைத்த காலம் அது.

பிற்பாடு பத்தாவது படிக்கும்போது  ‘காதலுக்கு மரியாதை’ பாட்டு புத்தகம் வாங்கி தந்ததற்காக மாம்பழம் வெட்டிய கையோடு இருந்த சுஜாதா அத்தாச்சி பிசுபிசுப்போடு கொடுத்த முத்தம், நினைவில் மாம்பழ சுவையோடு இருக்கிறது. இன்னும் சில நொடிகளில் இவளுக்கு நான் கொடுக்கப் போகும் முத்தம் எந்த வாசனையை நினைவுகளில் பொத்திவைத்துக் கொள்ளுமோ என உள்ளுக்குள் ஆனந்தமாக இருந்தது.

அருகில் செல்ல செல்ல முத்தத்தின் சுவை என்னவாக இருக்கும் என யோசித்தவன் காலையில் சாப்பிட்ட பூரி மசாலை நினைவுபடுத்திக் கொண்டேன். வெறும் வயிற்றில் பால் மட்டும் குடித்துவிட்டு வந்திருக்க வேண்டும் எனத் தோன்றியது. ‘பூரி அவளுக்கு பிடித்த உணவுதான்’ என என்னை நானே சமாதானம் செய்து கொண்டேன். சட்டைக் காலரை முகர்ந்து பார்த்துக்கொண்டேன். குளிக்கிற சோப்பையும் கொஞ்சம் தேய்த்து துவைத்திருந்தபடியால் மணமாகவே இருந்தது. நண்பனிடம் கேட்டு கொஞ்சம் வாசனை திரவியம் அடித்துக் கொண்டு வந்திருக்கலாம் என்பது குற்ற உணர்வாக இருந்தது.

இது வரையிலும் பார்த்திருந்த பல்வேறு ஆங்கிலப்படங்களின் முத்தங்கள், நண்பர்கள் பகிர்ந்துகொண்ட முத்த அனுபவங்கள் என பல கற்பனைகளை மனதில் விதைத்து வைத்திருந்தேன். 

அப்படியான கற்பனைகள்  எதுவுமே இப்போது நினைவில்லை, உண்மையில் சுயநினைவு அற்றவனாக இதோ அந்த முதல் முத்தத்தை அவளது கன்னத்தில்  பதித்து விட்டேன். ஆம் பலவிதமான யோசனைகளும் மண்டைக்குள் மோதியதில் குழம்பிய மனம் ஏவி விட்டதில் இதோ உதட்டுக்கு குறிவைத்த முத்தம் மெல்ல அவள் கழுத்தைத் திருப்பிக் கொண்டதால் காதுக்கும் கழுத்துக்கும் இடைப்பட்ட பகுதியில் பதிந்தது. 

அதுவரை தரையில் பதிந்திருந்த என் பாதங்கள் பூமிக்குள் அமிழ்ந்து, யாரோ எனது இரு கால்களையும் பிடித்து உள்ளே இழுப்பது போலிருந்தது.  முகத்தில் அச்சம் தெரிந்துவிடக் கூடாதென கன்னத்தசைகளை விரித்து புன்னகைக்க முயற்சி செய்தேன், முகம் விரிக்க முடியாததாய் எந்தவித அசைவும் இல்லாமல் உறைந்து புன்னகைக்க மறுத்தது. படபடவென இதயத்துடிப்பு வேகமெடுத்தது. முகமெல்லம் வெப்பம் பரவியது.   ஒரு கணம் முத்தமெல்லாம் கொடுக்காமலே இருந்திருக்கலாம் என்று கூட தோன்றியது.

இருபது வயது.. இல்லை பதினாறு வயதிருக்கும் பையன் ஒருவன் இதைக் கேட்டாலே ”இதெல்லாம் ஒரு மேட்ராண்ணா?” எனச் சொல்லி சிரிப்பார்கள்.  இப்போதைய தலைமுறைக்கு எல்லாமே மிக எளிதாக இருக்கிறது. இதை வெளிப்படையாகச் சொன்னால் பொறாமையாகக் கூடத் தோன்றும். ஆனால் என் தலைமுறைக்கு இது பெரும் சவாலாகவே இருக்கிறது. இது ஏதோ சுய பச்சாதாபமோ, புலம்பலோ இல்லை. இதுதான் என்னைப் போன்றவர்களுக்கு நிகழ்ந்திருக்கும் நிதர்சனம்.

காலம்தான் மாறிவிட்டதே எல்லாமும் எளிதாகிவிட்டதே என சொன்னாலும் மனசு அதே பழைய மனசுதானே அதை எப்படி புதுப்பித்துக்கொள்ளலாம் எனத் தெரிந்தால் ஒருவேளை நானும் முன்னரே..  சரி உன் சம வயதுக் காரர்களே காதல், திருமணம் என சரியான வயதில் செட்டில் ஆகவில்லையா? என்ற கேள்வியும் தோன்றாமல் இல்லை.. ஆனால் என் வாழ்க்கை அவர்களுடையது இல்லையே?

இளமைப் பொங்கி நிற்கும் காலத்தில் எல்லாம் வீட்டுச் சூழ்நிலையும், தம்பி, தங்கைகளின் எதிர்காலம் பற்றி மட்டுமே கனவு கண்டுவிட்டு இப்போது நாற்பதை நெருங்கும்போது கிடைத்த காதல் கரங்களில் இருந்து தவறி விழுந்ததாய் நெஞ்சம் பதறி உதடுகள் துடித்தது. வயதை மீறி அவளிடம் மன்னிப்பு கேட்கும் நிகழ்வை நினைத்துப் பார்க்கக் கூட முடியவில்லை. ஏனென்றே தெரியாத பெருமூச்சும் பயமும் சேர்ந்து அழுத்த இப்போது என்ன பேசினாலும் உளறிவிடுவேன் என பயந்து அவள் முகம் பார்க்க பயந்து தலையை நிமிர்த்தாமலே தரையை பார்த்தபடியே நின்றிருந்தேன். 

பின் ஒருவாறு தலை தூக்கிப் பார்த்தேன். கூசிய கண்கள் மங்கலாக மங்கலாக, அவள் விரைந்து போய்க் கொண்டே இருந்தாள். அவள் என்னைப் பற்றி என்ன நினைத்திருப்பாள். வயதும், அனுபவங்களும் தந்த தேர்ந்த சொற்களை மட்டுமே அவளிடத்தில் இதுவரை பேசி வந்திருக்கிறேன்.. அது என்னைப் பற்றிய மேன்மையான பிம்பத்தையே அவள் மனதில் ஏற்படுத்தியிருக்கும். அதை எல்லாம் சில நொடிகளில் உடைத்துக்கொண்டேன்.  இனி அவள் என்னை சந்திக்க நினைப்பாளா..? என்னுடன் பேச விரும்புவாளா..? பல்வேறு கேள்விகள் மனதிற்குள் எழும்பிய வண்ணம் இருந்தது.

வீட்டுக்கு திரும்ப வந்தும் குற்றவுணர்வு அப்பிய நிலையில் இருந்து சிறிதும் விலகாதவனாய் இருந்தேன். உடல் முழுதும் ஒருவகையான வெப்பம் சூழ்ந்திருப்பதைப்போல இருந்தது.

அலைபேசியை எடுத்து அவளுக்கு அழைக்கலாமா என யோசித்தேன் முகப்பு படமாக அவள் மனதைத் திறந்து சிரிப்பும் வெட்கமுமாக இருந்த புகைப்படத்தை வைத்திருந்தேன். ஈறுகள் தெரிய, கண்களுக்கு கீழே திரண்ட கன்னங்கள் ஜொலிக்க இவளால் எப்படி இவ்வளவு அழகாக சிரிக்க முடிகிறது? சிரிக்கும்போதேல்லாம் பெண்ணுக்கு அழகெல்லாம் இரட்டிப்பாக்கிவிடுகிறது போலும்.

அவளது புகைப்படத்தையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்ததில் ஒரு விஷயம் தோன்றியது.. என்னைப்போலவே அவளுக்கும் இதுதானே முதல் முத்த அனுபவம்! அவளும் முத்தத்தின் சுவையை இப்போதுதானே உணர்ந்திருப்பாள். அவளது உள்ளத்தில் என்னைவிடவும் கலவையான உணர்வுகள் அதிகமாகக்கூட தோன்றியிருக்கக் கூடும். என் முத்தம் படும்போது அவளது இரண்டு பாதமும் ஐஸ்கட்டி மீது நிற்பதுபோல தோன்றியிருக்குமா?. அவளுக்கு முத்தத்தின் வாசனை பூரிமசாலின் வாசனையைக் கொண்டிருக்கும். பின்னொரு காலத்தில் உப்பியிருக்கும் கன்னங்களில் சுருக்கம் விழுந்து, தலைமுடியின் நிறம் வெள்ளையாகி, பற்களெல்லாம் உதிர்ந்த காலத்தில் அவளது பேத்தியோ, பேரனோ கொடுக்கும் முத்தத்தில் அவள் எனது முத்தத்தை  நினைத்துக்கொண்டால் தனக்குள்ளேயே நினைத்து சிரித்துக் கொள்வாளா? கோபப்படுவாளா? அல்லது இது நினைப்பிலேயே இருக்காதா? அவளுக்கு இது நினைவிலேயில்லாமல் இருப்பதும் நல்லதுதான் . அது சரி.. அவளுக்கும் இதுதான் முதல் முத்தமாக இருக்கும் என்பது என்ன நிச்சயம்… அப்படி இல்லாவிட்டால்தான் என்ன?

கையில் திடீரென ஏற்பட்ட அதிர்வில் யாரோ ‘வெடுக்’கெனப் பிடித்து இழுப்பதைப்போலத் தோன்றியதில் வலது கையை உதறினேன். அலைபேசி மலையிலிருந்து தள்ளிவிடப்பட்ட காதலனைப் போல கீழே விழுவதைப் பார்த்தும் காப்பாற்ற முடியாத காதலியாக நின்றிருந்தேன். அவள்தான் அழைக்கக் கூடும் என சுதாரித்து விரைந்து போனை எடுத்தேன்.. திரையில் தோன்றியது மூன்று இலக்க தொலைபேசி நிறுவன அழைப்பு எரிச்சலுற்று போனை அணைத்து மேசையில்  வைத்துவிட்டு வெளியே வந்தேன். 

இதற்குமுன் சிறுவனாக இருந்தபோது அம்மா, அப்பாவுக்கும், ஊருக்குப் போகும்போதெல்லாம் தங்கையின் குழந்தைகளுக்கும், வளர்ந்த பிறகும் பாட்டிக்கும் என  முத்தங்கள் கொடுத்திருந்தாலும்.. அந்த முத்தங்களில் இவ்வளவு பதட்டம் இல்லையே.. பரிதவிப்பு இல்லையே இவளுக்குக் கொடுத்த முத்தம் ஏன் இவ்வளவு பதட்ட உணர்வுகளைத் தோற்றுவிக்கிறது. ஒருவேளை இந்த முத்தத்தில் கலந்திருக்கும் காமம் இப்படியெல்லாம் எண்ணச்செய்கிறதா? இந்த தவிப்பையும் தோற்றுவிப்பது காமம் எனில் அந்த முத்தத்தில் காதலே இல்லையா? காமம் கலக்காது காதலிக்கு முத்தமிடுவது சாத்தியமில்லையா? 

ஐயோ.. இந்த மனம் ஏன் என்னென்னவோ யோசிக்கிறது? 

நினைப்புகளில் இருந்து வெளிவர முடியாததால்.. அறைக்குள் இருந்து வெளியே வந்தேன்.

இழுத்து பெருமூச்சு விட்டபடி வேப்ப மரத்தின் அடியில் சென்று நின்றேன். வேகமாக அடித்த காற்றுக்கேற்ற, கிளைகளின் நடனத்தில் உடலில் பட்ட மெல்லிய குளிர்ந்த காற்று அந்த மனநிலைக்கு இதமாக இருந்தது. மனம் சமநிலை அடைய மரத்தடி காற்று போதும் எனத் தோன்றியது. 

முதல் முத்த அனுபவத்தை பலர் சொல்ல கதைபோல கேட்டிருக்கிறேன் ஆனால், என் இந்த முதல் முத்த அனுபவத்தை யாரிடமும் சொல்ல முடியாத நிலையில் இருக்கிறேன் சந்தோஷமாக பகிர்ந்துகொள்ள நண்பர்கள் வயது கடந்துபோய் விட்டார்கள். ஒருவகையில் மனம் ஏதோ பருமனை இறக்கி வைத்ததைபோல ஓர் உணர்வு. ஆனாலும் ஏதோ ஒன்று அழுத்துகிறது. சொல்ல முடியாத சந்தோஷமும் துயரமும் கலந்த இந்த உணர்வு எனக்கு பதினைந்து வருடத்திற்கு முன்பு வரவேண்டிய மனநிலை அல்லவா? ஒருவேளை அப்போது நான் யாரையேனும் முத்தமிட்டிருந்தால் இதே போன்ற உணர்வுகள் இன்னும் உற்சாகமாக குற்றவுணர்வின் கலப்பில்லாமல்  தோன்றியிருக்கக்கூடும். என் முதல் முத்தத்தைப் போலவே முதல் முத்த அனுபவத்தையும் நான் சில வருடங்கள் கழித்துதான் யாரிடமாவது பகிர முடியும் என்பதை நினைக்கும்போது கண்கள் பொங்கிக் கொண்டு வந்தது.

கிளைகள் அசைந்த சத்தம்கேட்டு பறந்து சென்ற காக்கைகள் கூட்டுக்கு வந்திருக்குமா என யோசித்துக்கொண்டிருக்கும்போது ஏதோ ஒரு வாசனையை உணர்ந்தேன், அவள் பயன்படுத்தி இருந்த பவுடரின் வாசனை!  உதட்டின் ஓரத்தில் ஒட்டி இருந்த பவுடரை விரல்களால் தொட்டுப்பார்த்துக் கொண்டேன். இதுதான் என் முதல் முத்தத்தின் வாசனை எனத் தோன்றியது. அப்பிக்கொண்டால் சில மணிகளில் அழியக்கூடிய பவுடர்தான் ஒரு முத்தத்தால் இனி எப்போதும் அழியாமல் நினைவில் படிந்து இருக்கப்போகிறது.


– செந்தில் ஜெகன்நாதன்

6 COMMENTS

 1. கதையில் ஆங்காங்கே வரும் “அவளை”ப் பற்றிய வர்ணணையிலேயே மனம் லயித்துக் கிடக்கிறது..

  நவீன காலம் போல் அல்லாமல், ஒரு குறிப்பிட்ட கலாச்சார காலகட்டத்தில், முத்தத்திற்கு தயாராவது என்பது கிட்டத்தட்ட ஒரு உலகப்போருக்கு தயாராவது போலத் தான்.

  செந்தில் ஜெகன்நாதன் அவர்களின், அப்பாவின் நிழல் கதையைப் போல இந்த படைப்பும் மனதில் பட்டாம்பூச்சி வந்து அமர்ந்து எழுந்து போனதைப் போல இருக்கிறது..

  வாழ்த்துக்கள்.

  • மன்னிக்கவும்…

   அப்பாவைப் பற்றிய அந்த கதையின் பெயர், “அன்பின் நிழல்”

 2. சிறந்த பதிவு…
  அறிவுணர்வார்ந்த திறனாய்வுரை…
  இனிய பாராட்டுக்கள் பேராசிரியர்…!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.