ரொம்ப வருஷங்களுக்கு முன்பு ஒரு நாள் இலுப்பை வனத்திலுள்ள பறவைகள் விலங்குகள் எல்லாம் பரபரப்பாக என்னமோ கூடிக் கூடிப் பேசிக் கொண்டு இருந்தன. அந்த நேரத்தில் காட்டிலிருந்த மரங்களுக்கு ஒன்றுமே புரியவில்லை என்னவாயிற்று இந்த பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் என்று மரங்களும் தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தன.
அந்த நேரத்தில் அங்கு வந்த பாபி முயலிடம் “என்னவாயிற்று உங்கள் எல்லோருக்கும் ஒரே பரபரப்பாக இருக்கிறீர்களே” என்று ஆலமரம் கேட்டது. ” அடடா! உங்களுக்கு விஷயமே தெரியாதா பக்கத்து கிராமத்தில் புதிதாக வந்த வெட்டுக்கிளிகள் இனம் கிராமத்திலுள்ள செடிகளையும் பயிர் வகைகளை அழித்துக் கொண்டிருக்கின்றன” என்றது பாபி முயல். அதற்கு ஆலமரம் “அடடா! அவைகள் திரும்பவும் வந்து விட்டனவா” என்றது.
“என்ன சொல்றீங்க? திரும்பவுமா? எனக்கு புரியலையே? என்றது” பாபி முயல். ரொம்ப வருடங்களுக்கு முன்பு நான் சிறுவனாக இருந்த பொழுது மனிதர்கள் மரங்களை அதிகமாக வெட்டினார்கள். மரங்களின் எண்ணிக்கை குறைய ஆரம்பித்தது. இதை எண்ணி நாங்கள் அனைவருமே கவலைப்பட்டோம். இதைப்பார்த்த எங்களின் நண்பனான மேகங்கள் போகும் இடங்களில் எல்லாம் எங்கள் கவலைகளைப் பகிர்ந்தன.
அப்படித்தான் மேகங்கள் பாலைவனத்தின் வழியாக பயணம் செய்த பொழுது சோகமாக சென்று கொண்டிருந்தன. சோகமாகச் சென்று கொண்டிருந்த மேகங்களைப் பார்த்த ஈச்ச மரங்கள் “ஏன் மேகங்களே மிகவும் சோகமாகச் சென்று கொண்டிருக்கிறீர்கள்?”என்று கேட்டது. மனிதர்கள் மரத்தை வெட்ட ஆரம்பித்து விட்டார்கள் மரங்களின் எண்ணிக்கை குறைய ஆரம்பித்துவிட்டது.
“உங்கள் இனம் விரைவில் அழிந்து விடும் என்று எனக்கு கவலை அளிக்கிறது நண்பனே” என்றன மேகங்கள். இதைக் கேட்ட ஈச்ச மரங்கள் எல்லாம் அழுதன. அவைகளின் அழுகையின் மூலம் வந்த கண்ணீர் பாலைவன மணல்களில் விழுந்தன. பாலைவன மணலில் அதுவரை புதையுண்டு வாழ்ந்து வந்த பெரிய வெட்டுக்கிளிகள் ஈச்ச மரங்களிடம் ஏன் அழுகிறீர்கள் மரங்களே? என்று கேட்டன.
“மனிதர்கள் மரங்களை வெட்ட ஆரம்பித்து விட்டார்கள் இதை எப்படித் தடுப்பது என்றும் தெரியவில்லை. எங்கள் இனமே வருங்காலத்தில் அழிந்து விடுமோ என்று பயமாக உள்ளது” என்றன ஈச்ச மரங்கள்.
ஓஹோ!அப்படியா சரி சரி கவலைப்படாதீர்கள் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்றன வெட்டுக்கிளிகள். பொறுத்திருந்து பாருங்கள் என்று கூறிய வெட்டுக் கிளிகள் மனிதர்கள் வாழும் விளைநிலங்களைச் சாப்பிட்டு அழித்தன. மனிதர்களால் அதைக் கட்டுப்படுத்த முடியவில்லை பெரும் பஞ்சம் ஏற்பட்டது. அந்த நேரத்திலே பாலைவனத்தைக் கடக்க வந்த இருவர் ஈச்ச மர நிலத்தில் அமர்ந்து வெட்டுக்கிளிகளைப் பற்றியும் அவைகள் விளைநிலத்தை அழிப்பது பற்றியும் பஞ்சத்தில் மனித இனமே அழிந்து விடுமோ என்ற அச்சத்திலும் பேசிக்கொண்டிருந்தார்கள்.
அந்த நேரத்தில் ஈச்சமரம் மிகவும் மகிழ்ச்சி அடைந்தன. ஆனால் யாரும் அழியக்கூடாது அழிப்பது தவறு என்று எண்ணியது. அந்த மனிதர்களிடம் ஈச்சமரம் பேச ஆரம்பித்தது ” மனிதர்களே !மனிதர்களே! நீங்கள் எங்களை அழிக்க நினைத்தீர்கள் ஆனால் இயற்கை உங்களை என்ன செய்தது பார்த்தீர்களா!” என்றது ஈச்சமரம். மரம் பேசியதைக் கண்டு வியப்படைந்த மனிதர்கள்.
இனிமேல் இப்படி செய்ய மாட்டோம் உங்களை வளர்க்கப் போகிறோம் என்று கூறி அங்கிருந்து கிளம்பினார்கள்.
அதன் பிறகு நிறைய மரக்கன்றுகளை வைத்து வளர்க்க ஆரம்பித்தார்கள். இதைக் கவனித்த மேகங்கள் மகிழ்வோடு இருந்தன. இதைக் கவனித்த ஈச்ச மரங்கள் மகிழ்விற்கான காரணத்தைக் கேட்டது. “மனிதர்கள் மரம் வளர்க்க ஆரம்பித்து விட்டார்கள்” என்றன. மகிழ்ந்த ஈச்ச மரங்கள் மேகங்களிடம் “வெட்டுக் கிளிகளை திரும்ப வரச் சொல்லும்படி” சொன்னது.
மேகங்களும் வெட்டுக்கிளிகளிடம் கூற வெட்டுக் கிளிகள் பாலைவனத்திற்கே திரும்பின. இது தான் நடந்தது. இந்த முறை மனிதர்கள் என்ன செய்யப் போகிறார்களோ என்றது ஆலமரம்.
- சரிதாஜோ
அழகான கதை..குழந்தைகளை கவரும் வித்தையை தெரிந்து வைத்திருக்கிறது இந்த எழுத்து நடை..வாழ்த்துக்கள் :-))
சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை உண்டாக்கும் அருமையான கதை. வாழ்த்துகள்.