கெட்ட செய்தி
நல்ல செய்தி
1.
உங்கள் வாசற்படியில் என்னை
அடித்துக் கொன்றார்கள்
நீங்கள் அழைக்கப்படாத
ஊர்த் திருவிழாவிற்குப்
பலியிடப்பட்ட
என் விலா துண்டொன்றை
உங்கள் மௌனத்திற்கான
கொடையாகப் பெற்றுக் கொண்டீர்கள்
கெட்ட செய்தி
நான் சாகவில்லை
உங்கள் கழுத்தில்
தெறிகுண்டின் சில்லென
புடைத்துக் கொண்டிருக்கும் என் குரலைக்
குணப்படுத்தத் துடிக்கிறீர்கள்
உங்கள் தோலில்
குத்திய பச்சையெனப்
படர்ந்து கொண்டிருக்கும் என் எழுத்தை
அழுந்தித் துடைக்கிறீர்கள்
எதைப் பாதுகாத்தீர்களோ
அதுவே உங்கள்
ஆழ் நரம்பின் அறுதி
ரத்த நாளக் கட்டாக
இறுக்குகிறது
அதற்கு மருந்தென்னவோ
கலை மட்டும் தான்
நல்ல செய்தி
நான் சாகவில்லை
2.
அந்தச் சிறுமி
வானம் துப்பியவள்
அவள் நட்சத்திரத்திற்கும் களிமண்ணிற்கும்
இடையில் குகை குடைந்து வளர்ந்தாள்
வண்ணங்களை முயங்கிய களைப்பில்
பெருமரக் கிளைகளில் உறங்கினாள்
வேர்களைத் தின்று மழையைப் பிரசவித்தாள்
உங்களைக் காண நேர்ந்த கணத்தில்
உன்மத்தமாய் பாடினாள்
நீங்களோ அவள் மீது உமிழ்ந்தீர்கள்
அவள் உடுத்தியிருந்த பூக்கள் அதில் எரிந்தன
பறந்து போனவளை
மேகங்களை அறுத்துத் தேடினீர்கள்
பகல்கள் மலைகளை விழுங்கின
இரவுகள் கடலில் இறங்கின
பருவங்கள் பிறழ்ந்து
வெள்ளத்தில் நிலங்கள் புரண்டன
தேடுவதை மட்டும்
உங்களால் நிறுத்த முடியவில்லை
நீங்கள்
உங்கள் முதுகெலும்பிற்குத் திரும்பும்போது
ஒருவேளை அவள் அகப்படக்கூடும்
3.
அங்கு தான் ஒரு தரம் மூழ்கினேன்
எனக்கு நீந்தத் தெரிந்தும் முடியவில்லை
கரையில் நின்றவர்கள் வேடிக்கை பார்த்தார்கள்
என் உடல் நீலம் பாரித்தது
மீன்கள் என்னைத் தின்றன
மிச்சமிருந்த முகத்தைத் தாங்கி மிதந்தேன்
சூரியக் கதிர்கள் என் எலும்புகளை மீட்டிப் பாடின
கதை கேட்ட காற்று திசை காட்டியது
இலைகளும் மலர்களும் தோலாகின
ஆற்றுச் சந்தியில் இடப்பட்ட தீபங்கள்
தேவதையைக் கண்டு கொண்டதுபோல்
என்னை நோக்கி வருகின்றன
4.
உங்கள் கடவுளர்களுக்கு
இங்கு அனுமதியில்லை
பிரார்த்தனைகள்
அண்டாத நிலமிது
எந்தக் குறிக்கோளுமின்றி
பூக்களின்
இதழ்களை,
தண்டுகளை,
மகரந்தக் காம்புகளை,
சூலக முடிகளை,
மஞ்சள் ஒளிக்கற்றைகளை,
பனித் திவலைகளை,
எண்ணிக்கொண்டே
உயிர்விடலாம்