நீலக்கண்கள்-ஐசக் தினேசன்

நூறு வருடங்களுக்கு முன்னால் எல்சினொரில் வாழ்ந்த ஒரு படகுத்தலைவன் தன் அழகிய இளம் மனைவி மேல் பெருங்காதல் கொண்டிருந்தான். காலப்போக்கில் தன்னுடைய முனைப்பாலும் உழைப்பாலும் நல்லதிருஷ்டத்தாலும் தனக்கென ஒரு கப்பல் வாங்கியபோது அதற்கு “அழகிய பெட்ரீனா” என்று அவள் பெயரையே சூட்டினான். அந்தக் கப்பலின் முனையில் அவள் தோற்றத்தையுடைய ஒரு பதுமையைச் செய்து பூட்டினான். மாதியேரா துறைமுகத்திலிருந்து அவன் அவளுக்காக ஆசையாக வாங்கி வந்திருந்த நீளங்கியின் அதே நிறங்களை – இளஞ்சிவப்பு, நீலம் – அந்தப் பதுமைக்கும் அளித்தான். மனைவி எப்போதும் தன் சிறிய வெள்ளைநிறத் தொப்பிக்கடியில் அடக்கமாகச் சுருட்டி மறைத்து வைத்திருந்த நீள் கூந்தல் ,பதுமையில் அவளுக்குப் பின்னால் காற்றில் பறப்பதுபோல் பிரகாசமான மஞ்சள் வண்ணத்தில் எழுந்து நீண்டு அலைந்தது.

படகுத்தலைவனுக்கு பதுமையின் மேல் பெரிய மோகம், நிறையப் பெருமை. “அம்சமாக இருக்கிறாள் அல்லவா?” என்று மனைவியிடம் கேட்டான். “எப்போதும் எனக்கு முன்னால் செல்பவள். என்னை வழிநடத்துபவள். அலைகளை நாட்டியம் என்பதுபோல் ஆடிக் கடப்பவள். என்ன காற்று அடித்தாலும் எவ்வளவு பெரிய புயல் வந்தாலும் நிமிர்ந்து நிற்பாள். உப்புத்திரைக்குள் நின்று சிரிப்பாள். அடங்காக் கடல் பட்சிகள் அவள் விளையாட்டுத்தோழிகள். ஆழ்கடலுக்குள் வரத் துணியாத கிட்டிவாக்கே பறவைகூட அவள் தலைமேல் அமர்ந்து வருவதை நான் ஒருமுறை பார்த்தேன்.”

ஆனால் மனைவிக்கு அந்தப் பதுமையைக் கண்டு பொறாமை மூண்டது. “ஆண் என்பவனே இப்படித்தான்,” என்றாள். “அவனை நிராகரிக்கும் பெண்ணை அவனை ஓடவிடும் பெண்ணை அவன் விரும்புவான். அவள் பின்னால் போவான். ஆனால் அவனை விரும்புபவளை, அவன் காலுறைகளின் ஓட்டைகளைத் தைத்தபடி இல்லத்தின் நெருப்புகளை பராமரித்துக்கொண்டு வீட்டில் காத்துக்கிடக்கும் மனைவியை – அவளை மட்டும் அவன் புரிந்துகொள்ளவே மாட்டான்.”

“கண்ணே, உள்ளும் புறமும் எல்லாம் புரிந்துவிட்ட பெண்ணை மனைவியாகக் கொண்டு நான் என்ன செய்வேன், சொல்? நான் இவளை ஏன் விரும்புகிறேன் என்றால் இவள் உன்னை மாதிரி இருக்கிறாள். உன்னை ஏன் விரும்புகிறேன் என்றால் நீ இவளை மாதிரி இருக்கிறாய். ஆணின், அதிலும் குறிப்பாக ஒரு மாலுமியின் உள்ளம் அவன் முஷ்டியைப் போலவே பெரியது, கரடுமுரடானது. அவன் தாராளமாக அதில் இரண்டு பெண்களைத் தாங்கிக்கொள்வான். ஆனால் என் அழகிய இனிய செல்ல பெட்ரீனா, என்னை மகிழ்வுறச் செய்யும் விஷயம் என்னவென்றால் உன் உள்ளமோ மிகமிகமிக நுண்ணியது. சிறியது, செல்லமானது. அதில் ஒரு ஆணுக்குமேல் கொள்ள இடம் இல்லை என்று எனக்குத் தெரியும். அதுவும் முழுமையாக அல்ல. அவனது ஏதோ பாகம் வெளியே நீட்டிக்கொண்டிருக்கும். அதைக்கண்டு நீ ‘அவனிடம் அது மட்டும் இல்லாதிருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்’ என்று நினைப்பாய். என்னை எட்டி நின்று முறைத்துப் பார்த்துக்கொண்டிருக்கும் என் கண்ணே… சரி, இந்தப் பேச்செல்லாம் இருக்கட்டும். நான் எல்சினோருக்குத் திரும்பி வந்தவுடன் உன் முத்தத்தைத் தான் முதலில் எதிர்பார்ப்பேன் என்று நீ அறிவாய். என் முத்தத்தைப் பெற்றுக்கொள்ள உனக்கு ஆசை இருக்கிறதா இல்லையா என்பதை முதலில் சொல்.”

“மனைவியைக் கேட்க வேண்டிய கேள்வியா இது?” என்று அவள் சொன்னாள். “நீங்கள் என்றுமே, ஆம் என்றுமே என்னைப் புரிந்துகொண்டதில்லை!”

பின்பு ஒரு முறை, இந்தியாவின் கடலோரப்பகுதிக்கு வியாபாரத்துக்காகச் சென்ற போது, அங்கே ஒரு முதிய அரசரை அவருக்கெதிராகச் சதி செய்து தகர்க்க முயன்ற குடிகளிடமிருந்து எல்சினோரின் படகுத்தலைவன் பல தீரச் செயல்களை நிகழ்த்திக் காப்பாற்ற நேர்ந்தது. அரசரை மீட்டு அவரை மற்றொரு தீவில் வாழ்ந்த அவர் மகளிடமும் மருமகனிடமும் பத்திரமாக ஒப்படைத்தான் அவன். வயதால் தளர்ந்த முதியவர் மீண்டும் தன் பிரியத்திற்குரிய நண்பர்களையும் விசுவாசமான உதவியாட்களையும் அடைந்த பெருமகிழ்வில், கன்னத்தில் கண்ணீர் வழிந்தோடத் தன்னைக் காப்பாற்றிய படகுத்தலைவனுக்கு இரண்டு விலைமதிப்பில்லாத நீலக்கற்களை அன்பளிப்பாக அளித்தார். ஒவ்வொரு கல்லின் நீலமும் மாக்கடலைப்போல் தெளிவும் ஆழமும் கொண்டிருந்தன. அவற்றை எல்சினோரின் படகுத்தலைவன் தன் கப்பலின் முகப்புப் பதுமையின் முகத்தில் இரு கண்களாகப் பொருத்தினான்.

“என் அருமைச் செல்வமே, எல்லாப் பெருமையும் கொண்டவளே. இப்போது நீ அழகு பெட்ரீனாவாக முழுமை கொண்டுவிட்டாய். ஆகவே எந்தச் சேதமும் இல்லாமல், எத்தனை விரைவாக முடியுமோ அத்தனை விரைவாக என்னை எல்சினோருக்குக் கொண்டு செல் பார்ப்போம்,” என்று அவளிடம் சொன்னான். அந்தமுறை அவன் முன்னெப்போதையும் விட அதிவிரைவாகப் பயணித்து இல்லம் சென்று சேர்ந்தான்.

மனைவியிடம் பதுமைக்கு அந்த நீலக்கற்கள் எத்தனை பொருத்தமாக அமைந்திருந்தன என்று படகுத்தலைவன் காட்டிக்காட்டி மகிழ்ந்தான். “இப்போது இவளும் உன் நீலக்கண்களை அடைந்துவிட்டாள். இவளோ கண்களை மூடுவதேயில்லை. நாங்கள் வந்த வழியில் இவள் தனக்கு மிகமிக அருகே மீன்கள் கடலிலிருந்து துள்ளிக் குதித்து அமிழ்வதைக் கண்டிருப்பாள். வானத்தில் நட்சத்திரங்கள் வால் முளைத்துப் பறப்பதைப் பார்த்திருப்பாள்.”

“ஐயோ, என்ன அசட்டுத்தனம் இது!” என்றாள் மனைவி. “யாராவது இத்தனை அருமையான கற்களை மரத்தாலான ஒரு பதுமையின் முகத்தில் வைப்பார்களா? அதை என்னிடம் கொடுத்திருந்தால் எனக்காவது ஒரு புதிய ஜோடி கல்தோடு கிடைத்திருக்கும். எல்சினோரின் மற்ற படகுத்தலைவர் மனைவியர் அனைவரும் பொறாமைப் பட்டிருப்பார்கள்.”

“என் செல்ல குஞ்சே, நீ கேட்பதை என்னால் கொடுக்க முடியாது,” என்றான் படகுத்தலைவன். “ஆம், அதை மட்டும் என்னால் கொடுக்கவே முடியாது. அதை நீ என்னிடம் கேட்கவும் கூடாது.”

“சரி போகட்டும். உங்களுக்குத்தான் என்னைப் புரிந்துகொள்ள விருப்பமே இல்லையே,” என்றாள் அவள்.

அதன் பிறகு அவன் வீட்டிலிருந்த நேரமெல்லாம் அவள் பதுமையின் கண்குழிகளுக்குள் இருந்த நீலக் கற்களைப் பற்றி மட்டுமே எண்ணலானாள். தன்னை மகிழ்ச்சியற்ற மனைவியென எண்ணி உள்ளம் வெதும்பினாள். பிறகு அவள் கணவன் மீண்டும் கப்பலேறிச் செல்லவிருந்த நாளைக்கு முந்தைய இரவு, எல்சினோரின் படகுத்தலைவர் குழு அவனுக்காக ஒரு பெரிய விருந்தை ஏற்பாடு செய்திருந்தார்கள். விருந்தில் அவன் கொண்டாடிக்கொண்டிருந்த வேளையில் பெட்ரீனா எல்சினோர் நகரத்தின் கண்ணாடி கைவினைஞனை வரவழைத்து, அவனுடன் ரகசியமாகப் படகுத்துறைக்குச் சென்றாள். அங்கே அவளே விளக்குப் பிடிக்க அந்த நிபுணன் பதுமையின் கண்களிலிருந்த தெளிவான நீரோட்டமுடைய நீலக்கற்களைப் பெயர்த்தெடுத்து, அதன் இடத்தில் அதே நிறத்தையொத்த நீலக்கண்ணாடி கற்களின் இரண்டு துண்டை மாற்றி வைத்தான். நீலக்கற்களை பெட்ரீனா ஒரு சிறிய பேழையில் போட்டுத் தன் ஆடைக்குள் மறைத்து வைத்துக்கொண்டாள்.

அவள் கணவன் அந்த மாற்றத்தைக் கவனிக்கவில்லை. ஏதும் அறியாதவன் மனைவியை ஆதுரமாக முத்தமிட்டு அவளிடமிருந்து விடை பெற்று ஆப்ரிக்காவின் கோல்ட் கோஸ்ட் பகுதிக்குப் புறப்பட்டான். அவன் புறப்பட்ட மறுநாளே அவன் மனைவி நீலக்கற்களைப் பொற்கொல்லரிடம் ஒப்படைத்துத் தோடுகளாக மாற்றிக்கொண்டாள். ஆனால் விரைவிலேயே அந்த இளம் பெண் தன் கண்பார்வை மங்குவதை உணரலானாள். கடலில் பெரிய சிறிய மீன்களைப்போல அவள் கண்முன்னால் கரிய படலங்களும் புள்ளிகளும் தோன்றலானது. ஊசிக்கண்ணில் நூல் கோர்க்க முடியாமல் போனது. அச்சமடைந்து அவள் அந்நகரில் வாழ்ந்த ஃபின்லாந்து நாட்டைச் சேர்ந்த மூதாட்டியை அணுகினாள். அந்த மூதாட்டிக்குக் குறைந்தது நூறு வயதென்று சொல்லப்பட்டது. நள்ளிரவிலும் சூரியன் எரியும் ஃபின்லாந்தைச் சேர்ந்த மக்கள் விசித்திரமான மனிதர்கள். பல நூறு வருடங்கள் வாழ்பவர்கள். மறைந்த நான்காம் ஃபிரெட்ரிக் மன்னரின் காலத்தில் எல்சினோருக்கு வந்தவர்கள்.

ஃபின் மக்கள் பலரைப்போல் மூதாட்டியின் தந்தை மாயமந்திரங்களில் கை தேர்ந்தவர். மாலுமிகளுக்குப் பையில் அடைத்து காற்றை விற்றார். பையின் ஒரு முடியை அவிழ்த்தால் கப்பல் துள்ளிச்செல்ல நல்ல புதிய இளங்காற்று வெளிவரும். பையின் இரண்டு முடிகளை அவிழ்த்தால் அதன் வேகம் கூடித் திரையில் ஓட வலுவான காற்று அடிக்கும். மூன்று முடிகளையும் அவிழ்த்தால் புயற்காற்று எழுந்து கப்பலை நுரை பொங்கும் அலைகள் மேல் அள்ளித் தூக்கி எல்சினோரின் துறைமுகத்திலேயே கொண்டு நிறுத்திவிடும். சன்னிவா என்ற அந்த மூதாட்டிக்கும் அந்த மாய மந்திரங்களெல்லாம் தெரியும். அவள் மருத்துவத்திலும் கைதேர்ந்தவள். இளம் மனைவியின் கண்களில் வெவ்வேறு ஜலங்களும் தைலங்களும் லேபனங்களும் இட்டுப் பார்த்தாள். எதுவுமே பயனளிக்கவில்லை. கடைசியில் அந்தக் கிழவி முடியாது என்பதுபோல் தலையை அசைத்து, “நான் உதவிக்கழைக்கும் சக்திகள் எதுவுமே இன்று நமக்கு உதவத் தயாராக இல்லை. இந்த வழக்கை அவைகள் அறிந்துள்ளன. நமக்கு எதிராக நிற்கும் சக்திகளையே அவை ஆதரிப்பதாக என்னிடம் சொல்கின்றன. ஒரு பெரிய அநீதி நிகழ்ந்துள்ளது. அது சரி செய்யப்படவேண்டும். அப்படியென்றால் உன் பார்வை பறிபோகத்தான் வேண்டும். வேறு வழியே இல்லை.”

இளம் பெண் கைகளைப் பிசைந்தாள். பாதிக் குருடான அவள் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. “ஐயோ! அழகிய பெட்ரீனா மட்டும் எல்சினோரின் துறைமுகத்தில் இப்போது நின்றிருந்தால் கண்ணாடிச்சில்லுகளைப் பெயர்த்தெடுத்து நீலக்கற்களை அவை இருக்க வேண்டிய இடத்தில் வைத்திருப்பேனே!” அவள் மூதாட்டியின் கைகளை அழுத்திப்பிடித்து கண்ணீர் மல்க மன்றாடினாள். “சன்னிவா, என்னைக் கடல் முனைக்குக் கூட்டிப் போ. அதோ அங்கே தொடுவானத்தில் ஒரு மகத்தான அருள்பாலிக்கும் காட்சி மட்டும் உன் கண்ணுக்குத் தெரிகிறதா என்று சொல். ஒரு பாய்மரம்! அது என்னிடம் மீண்டு வரும் என் தலைவன். அவன் வந்தவுடன் அவனிடம் சொல்வேன். உன் கோப்பையைப் போல் உன் உள்ளத்தையும் எவ்வளவு வேண்டுமென்றாலும் நிறைத்துக்கொள் என்று.”

ஆனால் கப்பல் திரும்பி வரவில்லை. கப்பலுக்குப் பதிலாக போர்ச்சுகல் நாட்டின் போர்டோ தூதரகத்திலிருந்து ஒரு கடிதம் மட்டும் வந்தது. நடுக்கடலில் கப்பல் சிதைவுற்று  மூழ்கியதென்றும் அதனுடன் அனைத்து மாலுமிகளும் கடலுக்கடியில் சென்றுவிட்டார்கள் என்றும் செய்தி தெரிவித்தது.

அதில் மிகவும் விசித்திரமான பயங்கரமான விஷயம் என்னவென்றால் பட்டப்பகலில், சூரிய வெளிச்சம் பொழிந்துகொண்டிருந்த நடு மத்தியான வேளையில், கடலாழத்திலிருந்து எழுந்த பெரிய செங்குத்தான பாறை மீது கப்பல் நேருக்கு நேராகச் சென்று மோதியிருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.