நடன விருந்துக்குப் பிறகு-லியோ டால்ஸ்டாய்

ருவன் நல்லது எது, கெட்டது எது என்பதைத் தானே சுயமாகப் பகுத்தறிய இயலாது என்றும் அவனுடைய சூழ்நிலைதான் அதை முடிவு செய்கிறது என்றும் நீங்கள் சொன்னாலும், தற்செயல் நிகழ்வுகளே எல்லாவற்றுக்கும் காரணம் என்பேன் நான். என்னுடைய விஷயத்தையே எடுத்துக்கொள்வோமே…”

ஒருவனுடைய சுய முன்னேற்றத்துக்கு முதல் படியாக, அவனுடைய புறச்சூழலில் மாற்றத்தைக் கொண்டுவருவது அவசியம் என்ற எங்கள் விவாதத்தின்போதுதான் எங்கள் மதிப்புக்குரிய நண்பர் இவான் வாசிலியேவிச் இவ்வாறு தன்னுடைய கருத்தைத் தெரிவித்தார். 

ஒருவன் நல்லது கெட்டதை சுயமாகப் பகுத்தறிய இயலாது என்று நாங்கள் யாரும் சொல்லவில்லை. ஆனால் இதுபோன்ற வாக்குவாதங்களின்போது அவருடைய சிந்தனையில் என்ன கருத்து உதிக்கிறதோ அந்தக் கருத்துக்கு வலு சேர்க்கும்பொருட்டு தன் சொந்த வாழ்க்கையிலிருந்து ஏதேனும் நிகழ்வைக் குறிப்பிடுவது இவான் வாசிலியேவிச்சின் வழக்கம். அந்த நிகழ்வை எதற்காகக் குறிப்பிடுகிறோம் என்பதே பல சமயம் அவருக்கு மறந்துபோய்விடும். இருப்பினும் பெரும் சிரத்தையோடும் உணர்வுப் பெருக்கோடும் அவர் அதை விவரிப்பார். இந்தத் தடவையும் அதுவே நடந்தது.  

“என்னுடைய விஷயத்தையே எடுத்துக்கொள்வோம். என் ஒட்டுமொத்த வாழ்க்கையும் வடிவமைக்கப்பட்டது, சூழ்நிலையால் அல்ல, ஆனால் அதை விடவும் முற்றிலும் மாறுபட்ட ஒன்றால்.”

“அப்படியா? என்ன அது?” நாங்கள் ஆர்வத்துடன் கேட்டோம்.

“ஆங்… அது ஒரு பெரிய கதை. உங்களுக்குப் புரியும்படி சொல்லவேண்டும் என்றால் நான் பல விஷயங்களை விவரமாகச் சொல்லவேண்டும்”

“சரி, சொல்லுங்களேன்”

இவான் வாசிலியேவிச் சற்றுநேரம் யோசித்துவிட்டு, தலையை ஆட்டினார்.

“என்னுடைய ஒட்டுமொத்த வாழ்க்கையும் ஒரே இரவில், சரியாகச் சொல்லவேண்டுமென்றால் ஒரு காலைப்பொழுதில் மாறிவிட்டது.”

“ஏன், என்ன நடந்தது?” ஒருவன் கேட்டான்.

“அப்போது நான் ஒரு பெண்ணின் மீது அளவுகடந்த காதல் கொண்டிருந்தேன். அதற்கு முன்பும் பல தடவை பல பெண்களிடத்தில் காதல் வயப்பட்டிருக்கிறேன். ஆனால் இந்தக் காதல் முன்பிருந்த யாவற்றையும் விட மிகத் தீவிரமானதாக இருந்தது. ஆங்… அதெல்லாம் பழைய கதை. இப்போது அவளுடைய மகள்களுக்கே திருமணமாகிவிட்டது. அவள் பெயர் வரீன்கா பா….” இவான் வாசிலியேவிச் அவளுடைய குடும்பப்பெயரைக் குறிப்பிட்டார்.

“ஐம்பது வயதிலும் கூட அவள் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு அம்சமாக இருந்தாள். ஆனால் இளமையில், அவளுடைய பதினெட்டாவது வயதில், அவள் பேரழகியாக இருந்தாள். நல்ல உயரம், மெலிந்த உடல்வாகு, நளினம், மிடுக்கு எல்லாம் இருந்தது. ஆமாம். மிடுக்குதான் சரியான வார்த்தை. தலையை உயர்த்தி, நெஞ்சை நிமிர்த்தி அவள் நடந்துவரும்போது அவளது ஒடிசலான தேகத்தையும் விஞ்சி, அந்த நடையில் ஒரு மகாராணியின் கர்வம் வெளிப்படும். அவளது உளப்பூர்வமான, உற்சாகமான புன்னகையும், கவர்ந்திழுக்கும் வசீகரப் பார்வையும், இளமையின் பொலிவும் இல்லையென்றால் அந்த மிடுக்கு எடுபடாமல் போயிருக்கும்.”  

“எவ்வளவு அழகாக வர்ணிக்கிறீர்கள், இவான் வாசிலியேவிச்!”

“வர்ணனைதான்! ஆனால் உங்களை வியப்பின் எல்லையில் ஆழ்த்தும் வகையில் எனக்கு அவளைச் சரியாக வர்ணிக்கத் தெரியவில்லை. அது ஒரு பொருட்டல்ல. நான் இப்போது சொல்லப்போவது நாற்பதுகளில் நடந்தது. அப்போது நான் மாகாணப் பல்கலைக்கழக மாணவனாக இருந்தேன். நல்லதா இல்லையா என்று தெரியவில்லை, அந்தச் சமயத்தில் எங்களிடம் அரசியல்ரீதியான குழுக்களோ, கொள்கை கோட்பாடுகளோ எதுவும் இல்லை. இளைஞர்களாய் இருந்த நாங்கள் ஒரு பக்கம் படிப்பு, இன்னொரு பக்கம் இளைஞர்களுக்கே உரித்தான கொண்டாட்டம் எனக் காலம் கழித்துக் கொண்டிருந்தோம். நான் வசதியானவனாக இருந்தேன். எந்தக் கவலையும் பொறுப்பும் இல்லாதவனாக, உல்லாச வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருந்தேன். என்னிடம் உயர்ரகக் குதிரை ஒன்று இருந்தது. குதிரை இழுக்கும் பனிச்சறுக்கு வண்டியில் இளம்பெண்களோடு செல்வதை வழக்கமாக வைத்திருந்தேன். அப்போது பனிச்சறுக்குக் கட்டைகள் பிரபலமாகவில்லை. அடிக்கடி என் நண்பர்களோடு கேளிக்கைக் கொண்டாட்டங்களுக்குப் போவேன். அப்போதெல்லாம் நாங்கள் ஷாம்பெய்னைத் தவிர வேறு எதையும் தொட மாட்டோம். ஷாம்பெய்ன் இல்லை என்றால் குடிக்கவே மாட்டோம். இந்தக் காலத்தில் குடிக்கிறார்களே, அது போல் நாங்கள் வோட்காவெல்லாம் குடிக்கவே மாட்டோம். மாலை நேரக் கேளிக்கைக் கொண்டாட்டங்களும், நடன விருந்துகளும்தான் எனக்கு மிகப் பிடித்தமான பொழுதுபோக்கு. நான் நன்றாக நடனம் ஆடுவேன், மேலும் நான் அவலட்சணமானவனும் இல்லை.”

அவருக்கு அருகிலிருந்த பெண்மணி குறுக்கிட்டாள், “இதில் தன்னடக்கம் எதற்கு? நாங்கள் உங்களுடைய பழைய புகைப்படத்தைப் பார்த்திருக்கிறோம். நீங்கள் அவலட்சணம் கிடையாது என்பது மட்டுமல்ல, நல்ல அழகனும் கூட.”

“அழகனா? சரி, அப்படியே வைத்துக்கொள்ளுங்கள். ஆனால் விஷயம் அதுவல்ல. அவள் மீதான என் காதல் உச்சத்திலிருந்த தருணம், தபசுக்காலத்துக்கு[1] முந்தைய திருவிழாக் கொண்டாட்டத்தின் இறுதிநாளன்று நான் ஒரு நடன விருந்தில் கலந்துகொண்டேன். நல்ல மனிதரும், செல்வந்தரும், விருந்தோம்பும் நற்பண்புடையவரும் ராணுவ உயரதிகாரியுமான மார்ஷலின் இல்லத்தில் அந்த நடன விருந்து நடைபெற்றது. அவரைப் போலவே நல்ல மனம் படைத்த அவருடைய மனைவி விருந்தினர்களை வரவேற்று உபசரித்துக் கொண்டிருந்தாள். பேரரசர் பீட்டரின் மகளும், ரஷ்யப் பேரரசியுமான எலிசபெத்தைப் போன்று, அவள் தனது கொழுத்துத் தளர்ந்த முன்கழுத்தும் தோள்பட்டைகளும் வெளித்தெரியும் வகையில் அரக்குநிறத்தில் கவுன் அணிந்திருந்தாள். வைரம் இழைத்த சிறு கிரீடமும் சூட்டியிருந்தாள்.  

அது ஒரு அற்புதமான நடன விருந்து. இசைக்குழுவுக்கெனப் பிரத்தியேக மேடையுடன் அந்த நடனக் கூடம் விசாலமாக இருந்தது. அப்போது பிரபலமாகவும், இசையார்வமிக்க நிலக்கிழார் ஒருவரின் பண்ணையாட்களாகவும் இருந்த இசைக்குழுவினர் இசைத்துக் கொண்டிருந்தனர். சிற்றுண்டிகள் பிரமாதமாக இருந்தன. ஷாம்பெய்ன் ஆறாக ஓடிக்கொண்டிருந்தது. எனக்கு ஷாம்பெய்ன் பெருவிருப்பம் என்றாலும் அன்று நான் குடிக்கவில்லை. காரணம் மதுபோதைக்குப் பதிலாக அன்றைய தினம் நான் காதல் போதையால் ஆட்கொள்ளப்பட்டிருந்தேன். ஆனால் அதை ஈடு செய்யும் வகையில், களைத்துக் கீழே விழும் வரை வால்ட்ஸ் மற்றும் போல்கா நடனங்களைத் தொடர்ச்சியாக ஆடிக்கொண்டிருந்தேன். முக்கியமாக, வரீன்காவுடன் இணைந்து ஆடுவதற்கான வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் அவளுடன் இணைந்து ஆடினேன். அவள் இளஞ்சிவப்பு நிற அலங்கார நாடாவுடன் கூடிய வெள்ளைநிறக் கவுனும், வெள்ளைநிறக் காலணிகளும், வெள்ளைநிறக் கையுறைகளும் அணிந்திருந்தாள். இளம்செம்மறித் தோலினால் தயாரிக்கப்பட்ட அந்தக் கையுறைகள் கிட்டத்தட்ட அவளது மெலிந்த, கூரான முழங்கைகள் வரை நீண்டிருந்தன. அனிசிமோவ் என்ற பாழாய்ப்போன பொறியாளன் ஒருவன் – அவனை இன்றுவரை என்னால் மன்னிக்கவே முடியாது – மஸூர்கா நடனத்தின்போது அவளை என்னிடமிருந்து கவர்ந்துகொண்டான். அவள் நடனமாடத் தயாரானதுமே அவளைத் தன் இணையாக ஆடுமாறு அழைப்பு விடுத்துவிட்டான். நான் கையுறைகளை வாங்குவதற்காகச் சிகையலங்கார நிலையத்துக்குப் போய்வந்ததால் தாமதமாகிவிட்டது. அதனால் அவளுக்குப் பதிலாக என் கவனத்தை அவ்வளவாக ஈர்த்திராத ஜெர்மானியப் பெண்ணொருத்தியோடு அந்நடனத்தை ஆடவேண்டியதாயிற்று. ஆனால் அப்போது அப்பெண்ணிடம் நான் தன்மையாக நடந்துகொள்ளவில்லையோ என்றெண்ணி இப்போது வருந்துகிறேன். நான் மிக அரிதாகவே அப்பெண்ணின் முகத்தை ஏறெடுத்துப் பார்க்கவும் பேசவும் செய்தேன். அந்த நடன வேளை முழுவதும் என் பார்வை, நாணிச் சிவந்த அழகிய முகமும், கன்னக்குழிகளையும், கனிவும் இனிமையும் ததும்பும் கண்களையும் கொண்டிருந்த, இளஞ்சிவப்பு நாடாவுடன் கூடிய வெள்ளைநிறக் கவுன் அணிந்து, உயரமாகவும் ஒல்லியாகவும் இருந்த உருவத்தின் மீதே பதிந்திருந்தது. நான் மட்டுமல்ல, அங்கிருந்த ஆண்கள், பெண்கள் அனைவருமே, அவளது பேரழகை விழிகளால் விழுங்கிக்கொண்டிருந்தனர். அவளை ரசிக்காமலிருக்க எவராலும் இயலவில்லை.

மஸூர்கா நடனத்தின்போது நான் அவளுடைய நடன ஜோடியாகப் பெயரளவில் இல்லை என்றாலும் பெரும்பான்மையான நேரம் அவளுடைய ஜோடியாகவே ஆடிக்கொண்டிருந்தேன். அவள் என்னைத் தேர்ந்தெடுக்கும் பொருட்டு அந்த விசாலமான கூடத்தில் என்னை நோக்கி அவளே துணிந்து முன்வருவாள். நானோ, அவள் என்னைத் தெரிவு செய்யும்வரை காத்திருக்காமல் பாய்ந்து சென்று அவள் முன்னால் நிற்பேன். என்னுடைய உள்ளுணர்வை மெச்சும்விதமாகப் புன்னகையோடு நன்றி சொல்வாள். ஆரம்பத்தில் என்னைத் தவறாகக் கணித்து, வேறொருவரோடு கரம் கோர்த்த பிறகு என்னைப் பார்த்து தனது மெல்லிய தோள்களைக் குலுக்கி முறுவலோடு வருத்தம் தெரிவித்திருந்தாள். மஸுர்க்கா நடனத்தில் சுழற்சிமுறை நடனம் வரும்போதெல்லாம் நான் மூச்சு வாங்கியபடியும், புன்னகைத்தபடியும் அவளுடன் அதிக நேரம் சுழன்று நடனமாடினேன். அவள் ‘மீண்டும்’ மீண்டும்’ என்று கேட்டுக்கொண்டிருந்தாள். நான் இந்த உலகத்தில் இருப்பதையே மறந்து மீண்டும் மீண்டும் சுழன்று சுழன்று ஆடிக்கொண்டிருந்தேன்.”

“அதெப்படி உங்கள் கைகளால் அவள் இடையைப் பற்றியிருக்கும்போது நீங்கள் உங்களை மறப்பீர்கள்? நீங்கள் உங்களுடைய இருப்பை மட்டுமல்ல, அவளுடைய இருப்பையும் நினைவில் வைத்திருக்கவேண்டுமே” எங்களுள் ஒருவன் கேட்டான்.

இவான் வாசிலியேவிச்க்குக் கோபம் தலைக்கேறிவிட்டது. உரத்த குரலில் சொன்னார், “இந்த நவநாகரீக உலகம் இப்படிதான் இருக்கிறது. இந்தக் காலத்தில் உங்கள் எல்லோருக்கும் உடலைப் பற்றிய சிந்தனை மட்டும்தான் இருக்கிறது. எங்கள் காலத்தில் அப்படிக் கிடையாது. எவ்வளவுக்கு எவ்வளவு எனக்கு அவள் மீது காதல் உணர்வு பெருகியதோ, அவ்வளவுக்கு அவ்வளவு அவளது அங்க அவயங்கள் மீதான கிளர்ச்சி குறைந்துவிட்டது. இப்போதெல்லாம் நீங்கள் கால்கள், கணுக்கால்கள் இன்னும் என்னென்னவோ அளவுகளை மதிப்பிடுகிறீர்கள். நீங்கள் காதலிக்கும் பெண்ணை நிர்வாணமாக்கிப் பார்க்கிறீர்கள். ‘நான் காதலித்தவள் எப்போதும் வெண்கலத்தாலான மேலங்கியை அணிந்திருந்தாள்’ என அல்ஃபோன்ஸ் கர் – அவரொரு அருமையான எழுத்தாளர் –  சொல்வது போலத்தான் என் பார்வையும். நாங்கள் மாறுபட்டு யோசித்ததே கிடையாது. நோவாவின் நல்ல மகன்களைப் போல[2] நாங்கள் எங்கள் காதலிகளுடைய நிர்வாணங்களைத் திரைபோட்டு மறைக்க முயன்றோம். ஆங்… அதெல்லாம் உங்களுக்குப் புரியாது.”  

“அவன் சொல்வதையெல்லாம் பொருட்படுத்தாதீர்கள், மேலே சொல்லுங்கள்” ஒருவன் சொன்னான்.

“நான் அவளோடு தொடர்ச்சியாக நடனமாடிக் கொண்டிருந்ததால் நேரம் போனதே தெரியவில்லை. இசைக்குழுவினரும் மஸூர்க்கா இசையை மீண்டும் மீண்டும் இசைத்துக் கிட்டத்தட்ட சலிப்பின் எல்லைக்குப் போயிருந்தார்கள். அது நடன விருந்து முடியப்போகும் நேரம் வேறு. சீட்டாட்ட மேசைகளிலிருந்து விடுபட்டுப் பெற்றோர்கள் உணவு பரிமாறப்படும் அறைக்கு ஏற்கனவே சென்றுவிட்டார்கள். பணியாட்கள் அங்கும் இங்கும் ஓடித் தேவையானவற்றைத் தருவித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது கிட்டத்தட்ட மணி மூன்றாகிவிட்டது. மிச்சமிருக்கும் சொச்ச நேரத்தையும் வீணாக்காமல் பயன்படுத்த எண்ணினேன். மறுபடியும் மஸூர்க்கா நடனத்துக்கு அவளைத் தேர்ந்தெடுத்தேன். நாங்கள் நூறாவது முறையாக அந்தக் கூடத்தில் நடனம் ஆடினோம்.

“உணவுக்குப் பிறகு க்வாட்ரில் நடனம் என்னுடன்தான்” நான் அவளை அவளுடைய இடத்தில் விட்டுவிட்டுச் சொன்னேன்.

“நிச்சயமாக, என்னை எங்கள் வீட்டுக்கு அழைத்துக்கொண்டு போகாவிட்டால்” அவள் புன்னகையோடு சொன்னாள்.

“அப்படி நடக்கவிடமாட்டேன்”

“சரிதான், என்னுடைய விசிறியைக் கொடுங்கள்”.

“எனக்கு இதைப் பிரிய மனமே இல்லை” வெள்ளை நிறத்திலிருந்த அந்தச் சாதாரண இறகு விசிறியை அவளிடம் கொடுத்தபடி சொன்னேன்.

“அப்படியென்றால் ஆசைக்கு இதை வைத்துக்கொள்ளுங்கள்” என்று விசிறியிலிருந்து ஒரு இறகைப் பிய்த்து என்னிடம் கொடுத்தாள். 

என்னால் எனது நன்றியையும் பரவசத்தையும் கண்களால் மட்டுமே காட்ட இயன்றது. நான் மகிழ்ச்சியும் மனநிறைவும் மட்டுமல்ல, பூரிப்பும் புளகாங்கிதமும் உற்றிருந்தேன். அப்போது நான் நானாகவே இல்லை, இந்தப் பூமியின் தீக்குணம் எதுவும் அறிந்திராத வேற்றுக்கிரகவாசியைப் போல இருந்தேன். அந்த இறகை என்னுடைய கையுறைக்குள் மறைவாகச் சொருகிவைத்தேன். அவளை விட்டுவிலக மனமில்லாதவனாய் அவள் கூடவே நின்றேன்.

“அங்கே பாருங்கள், எல்லோரும் என் அப்பாவை நடனமாடச் சொல்லி வற்புறுத்திக் கொண்டிருக்கிறார்கள்”

தோள்பட்டையில் வெள்ளிச்சங்கிலிகள் தொங்கும் ராணுவச் சின்னத்தோடு கூடிய சீருடை அணிந்து, கூடத்தின் கதவருகில் சீமாட்டிகளோடு கம்பீரமாக நின்றுகொண்டிருந்த மனிதரைச் சுட்டினாள்.

“வரீன்கா, இங்கே வா!” வைர மணிமுடியும் எலிசபெத் மகாராணியைப் போன்று தோள்பட்டைகளை மறைக்காத கவுனும் அணிந்திருந்த, உபசரிப்பாளினி, வரீன்காவை உரத்தக் குரலில் அழைத்தாள். வரீன்கா சென்றாள். நானும் பின்னால் சென்றேன்.

“உன்னுடன் மஸூர்கா நடனமாட உன் அப்பாவை ஒத்துக்கொள்ளச் சொல், கண்ணே!” அவள் வரீன்காவிடம் சொல்லிவிட்டு, கர்னலின் பக்கம் திரும்பி, “தயவுசெய்து நடனமாடுங்கள், பீட்டர் விளாடிஸ்லாவோவிச்” என்றாள்.

வரீன்காவின் தந்தை நல்ல நிறத்துடனும், முதலாம் நிக்கோலஸ் போன்று முறுக்கு மீசையும், மீசையைத் தொடும் வெள்ளை நிற கிருதாவும் வைத்து, வயதுக்கேற்ற கம்பீரத்துடன் அழகாக இருந்தார். அவரது முடி முன்னெற்றி வரை வழித்துச் சீவப்பட்டிருந்தது. அவருடைய மகளைப் போலவே அவருடைய உதடுகளிலும் கண்களிலும் பளிச்சென்ற புன்னகை தவழ்ந்துகொண்டிருந்தது. பதக்கங்கள் அலங்கரிக்கும் ராணுவச் சீருடை தாங்கிய பரந்த மார்பும், திடமான தோள்களும், நீண்ட மெலிந்த கால்களையும் கொண்டு மிடுக்காகத் திகழ்ந்த அவர், பேரரசர் முதலாம் நிக்கோலஸின் மேன்மையான கட்டுப்பாடு மிக்க ராணுவத்தின் மிகத் தேர்ச்சி பெற்ற பிரதிநிதியாகக் காட்சியளித்தார். 

நாங்கள் அங்குச் சென்றபோது கர்னல், ‘இப்போது அதெல்லாம் மறந்துவிட்டது’ என்று சொல்லி நடன அழைப்புக்கு மறுப்புத் தெரிவித்துக்கொண்டிருந்தார். ஆனால் மகளைக் கண்ட அடுத்த நொடியே புன்னகையோடு, ஒயிலாகத் தன் வலக்கையை இடப்பக்கம் கொண்டு சென்று உடைவாளை உறையிலிருந்து உருவி, அவரருகில் பணிவுடன் நின்றுகொண்டிருந்த இளைஞனிடம் ஒப்படைத்துவிட்டு, இளம்செம்மறித் தோலால் ஆன கையுறையை வலக்கையில் நாசுக்காக அணிந்தார்.

“எல்லாமே விதிகளுக்கு உட்பட்டு இருக்கவேண்டும்” புன்னகை மாறாமல் சொன்னார். பிறகு மகளின் கையைப் பற்றிக்கொண்டு, கால்வட்டமடித்துத் திரும்பி, நடன இசை துவங்குவதற்காகக் காத்திருந்தார்.

மஸூர்க்காவின் முதல் இசை இசைக்கத் தொடங்கியதும் அவர் முதல் அடியை நேர்த்தியாய் எடுத்துவைத்தார். பிறகு அடுத்த அடி. ஆரம்பத்தில் அடிமேல் அடியெடுத்துவைத்து மெதுவாகவும் நயமாகவும் ஆடத் தொடங்கிய அவர்,  பிறகு டக் டக் என்று ஒலிக்கும் பூட்ஸ் சத்தத்தோடு துள்ளலுடனும் வெறியுடனும் அந்த நடனக்கூடம் முழுவதையும் சுற்றிச் சுற்றி வந்து ஆடினார். வரீன்கா அவருக்கு ஈடுகொடுத்தபடி, தன் வெள்ளை நிற சாட்டின் காலணிகள் அணிந்த சிறிய பாதங்களை எட்டவும் கிட்டவும் அடியெடுத்து வைத்துத் தாள லயத்துடன் அழகாகவும், இலகுவாகவும் ஆடினாள்.

நடனமாடிய அனைவருமே அவர்கள் இருவருடைய நடன அசைவுகளைப் பின்பற்றி ஆடினர். நான் அவர்களை ஆராதித்தது மட்டுமின்றி அளவுகடந்த அபிமானத்தால் ஈர்க்கப்பட்டிருந்தேன், முக்கியமாக, அந்த வயதான கணவானின் பூட்ஸ்களால். கூர்முனை கொண்ட நவீன கால பூட்ஸ்களைப் போல் அல்லாமல், தட்டையான முனையுடன் மலிவான தோலால் ஆன அவை படைப்பிரிவைச் சேர்ந்த செம்மாரால் உருவாக்கப்பட்டவை என்பது கண்கூடாகத் தெரிந்தது. தன்னுடைய மகள் அலங்கார உடையுடுத்தி சமூகவெளியில் வலம்வரவேண்டும் என்பதற்காக, தான் நவநாகரீக பூட்ஸ்களை வாங்காமல் உள்ளூர் தயாரிப்பினை அணிந்திருப்பதாக நான் எண்ணினேன். அந்தத் தட்டை முனை பூட்ஸ்கள் என்னை நெகிழ்ச்சியில் ஆழ்த்தின.

அவருடைய இளமைக் காலத்தில் அவர் தேர்ந்த நடனக்காரராக இருந்திருப்பார் என்பது தெள்ளத்தெளிவாகத் தெரிந்தது. ஆனால் இப்போது உடலின் எடை கூடிவிட்டதால், அவர் என்ன முயற்சி செய்தாலும் அவரால் சுலபமாக, அவர் விருப்பத்துக்கு இணங்க, கால்களை எடுத்துவைத்து ஆட இயலவில்லை. அப்படி இருந்தும், அவர் இரண்டு தடவை நடனக் கூடத்தை வட்டமிட்டு வந்துவிட்டார். இறுதியாக, கால்களை அகற்றி நிற்க முயன்றபோது, கால்கள் நொடித்துவிட, சட்டென்று நிலைதடுமாறிவிட்டது. முழந்தாளிட்ட நிலையில் சமாளித்து நின்றுவிட்டாலும் சற்று பலமாகவே அடிபட்டிருக்கும் என்று தோன்றியது. ஆனால் அவளோ, கவுனை சரிசெய்தபடியும் புன்னகையோடும் அவரைச் சுற்றி வந்து வெகு அழகாக நடனமாடி, அனைவரின் பாராட்டையும் பெற்றாள். 

சற்றுப் பிரயாசையுடன் எழுந்துநின்ற அவர், மகளின் முகத்தை இரு கைகளாலும் பிரியத்தோடு ஏந்தி, அவளுடைய முன்னெற்றியில் முத்தமிட்டார். மஸூர்கா நடனத்தின்போது நான்தான் அவளுடைய ஜோடி என்று கணித்தவர் போல் அவளை என்னிடம் அழைத்துக்கொண்டு வந்தார். ‘நான் இல்லை’ என்றேன். “சரி, பரவாயில்லை. அவளோடு ஒரு சுற்று ஆடு” என்று புன்னகையோடு சொல்லிவிட்டு, உடைவாளைப் பெற்று மீண்டும் உறைக்குள் இட்டுக்கொண்டார்.   

கவிழ்க்கப்பட்ட புட்டியிலிருந்து முதல் சொட்டைத் தொடர்ந்து ஒட்டுமொத்தத் திரவமும் கடகடவென வெளியேறுவதைப் போல் வரீன்கா மீதான என் காதல், எனக்குள் இருந்த ஒட்டுமொத்தக் காதல் உணர்வையும் பிரவாகமாய் வெளிக்கொணர்ந்துவிட்டது. அது அவளைச் சுற்றிச் சூழ்ந்து, பிறகு இந்த உலகம் முழுமையையும் வியாபித்தது. நான் என்னைச் சுற்றியிருந்த அனைவரையும் நேசிக்கலானேன். வைரக்கிரீடம் சூடி, எலிசபெத் மகாராணியைப் போல உடையணிந்திருந்த உபசரிப்பாளினியை, அவளது கணவரை, அவர்களுடைய பணியாட்களை, அவ்வளவு ஏன், என்னிடம் எரிந்துவிழும் அந்தப் பொறியாளன் அனிசிமோவைக் கூட நேசித்தேன். எளிமையான உள்ளூர்த் தயாரிப்புப் பூட்ஸ்களை அணிந்து, வரீன்காவைப் போலவே கனிவாகப் புன்னகைக்கும் அவளுடைய தந்தையின்பால் எனக்கு ஒருவிதமான ஈடுபாடும் இளக்கமும் உண்டானது.

வாக்களித்திருந்தபடி, இரவு உணவுக்குப் பிறகு அவளோடு சேர்ந்து க்வாட்ரில் நடனமாடினேன். ஏற்கனவே அளப்பரிய மகிழ்ச்சியில் இருந்தேன் என்றாலும் அதன் பிறகும் கூடக் கணத்துக்குக் கணம் என் மகிழ்ச்சி பெருகிக்கொண்டே போனது. நாங்கள் காதலை வார்த்தைகளால் சொல்லிக்கொள்ளவில்லை. அவள் என்னைக் காதலிக்கிறாளா என்று அவளைக் கேட்கவில்லை. என்னையே கூட நான் அந்தக் கேள்வியைக் கேட்டுக்கொள்ளவில்லை. நான் அவளைக் காதலிக்கிறேன் என்பதே எனக்குப் போதுமானதாக இருந்தது. அப்போது எனக்கிருந்த ஒரே பயம், என்னுடைய அந்த மகிழ்ச்சிக்கு எந்த ஒரு இடையூறும் வந்துவிடக்கூடாதே என்பது மட்டும்தான்.

நான் வீட்டுக்குச் சென்று, உடைமாற்றிவிட்டு, தூங்க நினைத்தபோது, அது முற்றிலும் சாத்தியமில்லை என்பது புரிந்தது. அவளுடைய விசிறியிலிருந்து உருவித் தந்த ஒற்றை இறகையும், அவளுடைய கையுறை ஒன்றையும் என் கையில் வைத்திருந்தேன். அவள் அம்மாவுடன் குதிரை வண்டியில் ஏற, நான் உதவியபோது அவள் அதைக் கழற்றிக் கொடுத்தாள். நான் அவற்றையே பார்த்துக்கொண்டிருந்தேன். இரண்டு பேரில் ஒருவரைத் தேர்ந்தெடுக்கவேண்டிய சூழலில், என் உட்கிடக்கையை யூகித்தவள் போல் என்னைத் தேர்ந்தெடுத்து, தன்னுடைய இனிமையான குரலில், “பெருமை! சரிதானே?” என்று கேட்டுவிட்டு, தன் கரத்தை என் முன் நீட்டிய அந்தக் காட்சி இப்போது, என் கண்ணெதிரில் தெரிந்தது. இரவு உணவின்போது, ஷாம்பெய்ன் அருந்தியபடி, பார்வையால் என்னை வருடிக்கொண்டிருந்தாள். ஆனால் எல்லாவற்றை விடவும் அவள் அப்பாவோடு நடனமாடியதும், அவருக்கு ஈடுகொடுத்துச் சுழன்றாடியதும், ஆர்ப்பரித்து வியந்த பார்வையாளர்களைத் தன் பொருட்டும் தன் தந்தையின் பொருட்டும் பெருமிதத்தோடும் மகிழ்ச்சியோடும் பார்த்ததும்தான் என்னை மிகவும் ஈர்த்திருந்தது. என்னை அறியாமலேயே என் உள்ளத்தில் அவர்கள் இருவர் மீதும் உணர்வுவயமான நெருக்கம் உண்டானது.

நான் அப்போது என் சகோதரருடன் தங்கியிருந்தேன். இப்போது அவர் உயிரோடு இல்லை. பொதுவாகவே அவருக்கு வெளியில் செல்லப் பிடிக்காது. நடன நிகழ்வுகளுக்கு ஒரு நாளும் அவர் போனதே இல்லை. மேலும், அப்போது அவர் பல்கலைக்கழகத்தின் இறுதித் தேர்வுகளுக்காகத் தன்னைத் தயார்படுத்திக்கொண்டு நெறிவழுவாத வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருந்தார். நான் வீட்டுக்குச் சென்றபோது அவர் தூங்கிக்கொண்டிருந்தார். தலையணையில் தலை வைத்து போர்வையால் பாதி மூடிய நிலையில் உறங்கிக்கொண்டிருந்த அவரைப் பார்த்தேன். நான் அவரைப் பரிவோடும் பரிதாபத்தோடும் பார்த்தேன். என்னுடைய அந்த நேரத்து மகிழ்ச்சியை அவரோடு பகிர இயலாமல் போனதற்காக, அவரால் அதை அறிந்துகொள்ள இயலாமல் போனதற்காகப் பரிதாபப்பட்டேன். என்னுடைய உடைகளைக் களைவதற்கு உதவி செய்வதற்காக, மெழுகுவர்த்தியோடு வந்த எங்கள் பணியாள் பெட்ருஷாவை, வேண்டாமென்று திருப்பி அனுப்பினேன். தூக்கக் கலக்கத்தோடு இருந்த அவனது கண்களையும் அலங்கோலமாயிருந்த தலைமயிரையும் பார்த்தபோது எனக்குப் பாவமாக இருந்தது. சத்தம் எழுப்பாமல் நுனிக்காலால் நடந்து என்னுடைய அறைக்குச் சென்று படுக்கையில் அமர்ந்தேன். இல்லை, என்னால் தூங்க முடியாது. நான் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்தேன். மேலும், அறைக்குள் மிகவும் வெக்கையாக இருந்தது. என்னுடைய சீருடையைக் களையாமல் நேராகக் கூடத்துக்குச் சென்றேன். மேலங்கியை எடுத்து அணிந்துகொண்டு, முன்கதவைத் திறந்து, தெருவில் இறங்கி நடந்தேன்.

நடனவிருந்தை விட்டு நான் கிளம்பியபோது மணி நான்குக்கு மேல் ஆகிவிட்டது. வீட்டுக்குச் சென்று, அங்கே இரண்டு மணி நேரம் போல் இருந்திருப்பேன். எனவே நான் வெளியில் வந்தபோது கிட்டத்தட்ட பொழுது விடிந்துவிட்டது. மூடுபனி, சாலையெங்கும் பனி உருகுவதால் உண்டாகும் ஈரத்தின் நசநசப்பு, வீடுகளின் மேற்கூரைகளிலிருந்து சொட்டும் நீர் என அது ஒரு வழக்கமான குளிர்காலக் காலை.

வரீன்காவின் குடும்பம் ஊர்க்கோடியில் உள்ள பெரிய திடலை ஒட்டி இருந்தது. திடலின் ஒரு பக்கம் அணிவகுப்பு மைதானமும் மறுபக்கம் இளம்பெண்களுக்கான உள்ளுறைப் பள்ளியும் இருந்தன. ஆளரவமற்றிருந்த எங்களுடைய சிறிய தெருவைக் கடந்து பிரதான சாலைக்கு வந்தபோது, பாதசாரிகளையும், மரக்கட்டைகளை ஏற்றிக்கொண்டு, சாலையைத் தேய்த்துக்கொண்டு விரையும் பனிச்சறுக்கு வண்டிகளையும் பார்த்தேன். பளபளக்கும் நுகத்தடிகளின் கீழே பூட்டப்பட்டிருந்த குதிரைகள் சீரான வேகத்தில் தலையை மேலும் கீழும் அசைத்தபடி விரைந்துகொண்டிருந்தன. அவற்றின் தலைகள் மட்டும் மழையில் நனைந்திருந்தன. முதுகுப்பகுதி கோரைப்பாயால் மூடப்பட்டிருந்தன. கனத்த பூட்ஸ்களை அணிந்திருந்த வண்டியோட்டிகள், சகதி தெறிக்க, வண்டியை அடுத்தாற்போல் ஓடிக்கொண்டிருந்தனர். மின்னும் நுகத்தடியின் கீழ் தங்கள் ஈரத்தலைகளை அவ்வப்போது சிலுப்பிக்கொள்ளும் குதிரைகள், பென்னம்பெரிய பூட்ஸ்களை அணிந்து வண்டியுடனேயே ஓடிவரும் வண்டியோட்டிகள், சாலையின் இருமருங்கிலும் மூடுபனியால் மூடப்பட்டு நெடிதுயர்ந்து தெரியும் வீடுகள் யாவும் என்னைப் பெருமளவு கவர்ந்து புத்துணர்வைத் தூண்டின.

வார்னீகாவின் வீட்டருகில் உள்ள திடலை நெருங்கியபோது, அணிவகுப்பு மைதானத்தின் பக்கம் கருப்பாய் பெரியதாய் ஏதோ தெரிந்தது. அங்கிருந்து  படைவீரர் வாசிக்கும் குழல் ஓசையும் முரசு அறையும் சத்தமும் கேட்டது. என் மனம் முழுவதும் இனிமையான இசையும் பாடல்களுமே நிரம்பியிருந்ததால் முதலில் அதை மஸுர்கா இசை என்றுதான் நினைத்தேன். ஆனால் அந்த இசை காதுக்கு இதமானதாக இல்லை. மிகவும் கர்ணகடூரமாக இருந்தது.

“என்னவாக இருக்கும்?” சத்தம் வரும் இடத்தை நோக்கித் திடலின் குறுக்கே வழுக்கலான சேற்றுப்பாதை வழியாகச் சென்றேன். நூறு அடி தூரம் சென்றதுமே, மூடுபனிக்குள் தெரிந்த கருப்பு உருவங்கள் என்னவென்று புரிந்துவிட்டது. அவர்கள் படைவீரர்கள். “அணிவகுப்புப் பயிற்சி போலும்” நான் நினைத்தேன்.  

அந்தப்பக்கம் வந்த கருமானோடு சேர்ந்து நானும் அந்த இடத்தை நோக்கிச் சென்றேன். அழுக்கு மேலங்கியும் ஏப்ரானும் அணிந்திருந்த கருமான், கையில் எதையோ தூக்கிக்கொண்டு வந்தான். அணிவகுப்பு மைதானத்தில் கருப்பு நிறச் சீருடை அணிந்திருந்த வீரர்கள் இரண்டு அணிகளாகப் பிரிந்து எதிரெதிராக நின்றிருந்தனர். ஆடாமல் அசையாமல் நின்றிருந்த அவர்கள் முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லை. துப்பாக்கிகளைத் தளர்வாகப் பிடித்திருந்தனர். அவர்களுக்குப் பின்னால் படைக்குழாமின் குழல் ஊதுபவனும் முரசு அறைபவனும் மீண்டும் மீண்டும் அதே கர்ணகடூர இசையை வாசித்தபடி நின்றிருந்தனர்.

“அவர்கள் என்ன செய்கிறார்கள்?” நான் கருமானிடம் கேட்டேன்.

“தார்த்தாரியன் ஒருவன் படையை விட்டுப் போக முயற்சி செய்ததால் அணியினரால் அடித்துத் துவைக்கப்படுகிறான்.” கருமான் அணிவகுப்பின் மறுமுனையில் பார்வையை ஊன்றியபடி, ஆத்திரத்தோடு சொன்னான். அவன் பார்த்தத் திக்கில் நானும் பார்த்தபோது, கொடுமையான ஒரு காட்சி என்னை நோக்கி வந்துகொண்டிருந்தது. அரை நிர்வாணமாய் ஆக்கப்பட்ட ஒருவனை இரண்டு சிப்பாய்கள் தங்கள் நீள்துப்பாக்கியின் முனைகளில் கயிற்றால் கட்டி இழுத்துக்கொண்டு வந்த காட்சிதான் அது. அவனுக்குப் பக்கத்தில் மேலங்கியும் தொப்பியும் அணிந்து நடந்துவந்த அதிகாரி ஏற்கனவே எனக்குப் பரிச்சயமானவரைப் போன்று தோன்றியது. இரண்டு வரிசை வீரர்களிடமும் மாறி மாறி அடிவாங்கி அவனுடைய உடல் கன்றித் துவண்டிருந்தது. நேராக நிற்க இயலாமல் அவனுடைய கால்கள் பனியில் இழுபட்டுக்கொண்டு வந்தன. அவன் பின்பக்கமாகச் சரிந்தான். அவனை இழுத்துக்கொண்டு வந்த வீரர்கள் அவனை முன்னோக்கி இழுத்தார்கள். அவன் முன்பக்கமாகக் கீழே விழுந்தபோது அவர்கள் அவனை மேல் நோக்கி இழுத்து எழவைத்தார்கள். அந்த உயரமான அதிகாரி, அவனுக்கு அருகில் பதற்றத்தோடும் அழுத்தத்தோடும் நடைபோட்டு வந்தார். இளஞ்சிவப்பு நிற முகத்துடனும் வெள்ளை மீசையுடனும் காணப்பட்ட அவர், வரீன்காவின் தந்தை.

ஒவ்வொரு அடியின்போதும் அம்மனிதன் அதிர்ந்து, வலியால் முகம் சுழித்து, அடி விழும் பக்கமாகத் தன் முகத்தைத் திருப்பி, தன் வெண்ணிறப் பற்கள் தெரியுமாறு மீண்டும் மீண்டும் எதையோ சொல்லிக்கொண்டே வந்தான். அவன் எனக்கு அருகில் வந்தபோதுதான் அவன் என்ன சொன்னான் என்று தெளிவாகக் கேட்டது. அவன் அவர்களிடம் எதுவும் சொல்லவில்லை, இறைஞ்சிக்கொண்டிருந்தான், “சகோதரர்களே… என்மீது இரக்கம் காட்டுங்கள்… சகோதரர்களே… என்மீது இரக்கம் காட்டுங்கள்…” ஆனால் எந்தச் சகோதரனும் அவன் மீது இரக்கம் காட்டவில்லை. அவன் அருகில் வந்தபோதுதான் கவனித்தேன், எனக்கு எதிரில் நின்றிருந்த ஒரு சிப்பாய் அழுத்தமான அடி வைத்து முன்னேறி, தன் கையிலிருந்த லத்தியை விர்ரென்ற ஓசையோடு ஓங்கி, அம்மனிதனின் முதுகில் இறக்குவதை. அடிதாங்க முடியாமல் அவன் முன்பக்கமாகத் துவண்டு விழுந்தான். ஆனால் இழுத்துவந்த வீரர்கள் அவனைப் பின்னோக்கி இழுத்து நிமிர்த்தினர். மறுபக்கத்திலிருந்து அடுத்த அடி விழுந்தது. பிறகு இந்தப் பக்கத்திலிருந்து, பிறகு அந்தப் பக்கத்திலிருந்து. கர்னல் தன் காலடியை ஒரு பார்வை, அம்மனிதனை ஒரு பார்வை என அவன் கூடவே கடுநடைபோட்டு வந்தார். காற்றை ஆழமாய் உள்ளிழுத்துக் கன்னங்களில் உப்பி நிரப்பி, புடைத்த உதடுகளின் ஊடாக வெளியிட்டார். அவர்கள் என்னைக் கடந்தபோது இரண்டு வீரர்களுக்கு இடையில் கிடைத்த இடைவெளி வழியாக அம்மனிதனின் முதுகைப் பார்த்தேன். சொல்லவியலாத நிறங்களில், சொதசொதவென்று, செங்குருதி வழிய, இயல்புத் தன்மையற்றுக் காணப்பட்ட அதை மனித உடல் என்று சொன்னால் யாருமே நம்ப மாட்டார்கள்.  

“ஐயோ, கடவுளே!” கருமான் முணுமுணுத்தான்.

அந்த ஊர்வலம் மேலும் முன்னோக்கி நகர்ந்தது. சுருண்டு கீழே விழும் அந்தப் பரிதாபகரமான ஜீவன் மீது தொடர்ச்சியாக அடி விழுந்துகொண்டே இருந்தது. ஊதுகுழல் ஊதுபவன் உச்சஸ்தாயில் ஊதிக்கொண்டிருந்தான். முரசு அறைபவன் தொடர்ந்து அறைந்துகொண்டிருந்தான். கர்னலின்  உயரமான கம்பீரமான உருவம் முன்பு போலவே அம்மனிதனுக்குப் பக்கத்தில் நடந்துகொண்டிருந்தது. சட்டென்று கர்னல் நின்றார். வரிசையில் நின்றிருந்த ஒரு வீரனை நோக்கி வேகமாகச் சென்றார்.

“அவனை எப்படி அடிக்க வேண்டும் என்று நான் உனக்குக் கற்றுத்தருகிறேன்” அவருடைய ஆவேசக் குரல் எனக்குக் கேட்டது. பூஞ்சையான தேகத்துடனும் மிரட்சியுடனும் காணப்பட்ட அந்த வீரன், தாத்தாரியனின் இரத்த விளாறான உடலில் தன்னுடைய லத்தியை ஓங்கி இறக்கவில்லை என்பதால், “அவனை அடிக்கச் சொன்னால் இப்படிதான் தட்டிக் கொடுப்பாயா? ம்? இப்படிதான் தட்டிக் கொடுப்பாயா?” என்று சொல்லிக்கொண்டே, மிருதுத்தோல் கையுறை அணிந்திருந்த தன்னுடைய முரட்டுக் கரங்களால் அவனைத் தாக்கினார்.

“புதிய லத்திகளைக் கொண்டுவாருங்கள்” கத்திவிட்டு சுற்றுமுற்றும் பார்த்தபோது என்னைப் பார்த்துவிட்டார். என்னைச் சற்றும் அறியாதவர் போல, ஆத்திரமும் ஆவேசமுமாக முகத்தைத் திருப்பிக்கொண்டார். நான் முற்றிலும் அவமானப்படுத்தப்பட்டவனாக உணர்ந்தேன். எனக்கு இப்போது என்ன செய்வது, எங்கே பார்ப்பது என்று தெரியவில்லை. கீழ்த்தரமான செய்கையில் நான் ஈடுபட்டிருக்கும்போது கையும் களவுமாகப் பிடிபட்டதைப் போல மனம் கூசியது. என் பார்வையைத் தாழ்த்திக் கொண்டு, விடுவிடுவென்று வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். வழியெல்லாம் ஊதுகுழல் சத்தமும் முரசு அறையும் சத்தமும் காதுக்குள் நாராசமாய் ஒலித்துக்கொண்டே இருந்தன. “சகோதரர்களே… என்மீது இரக்கம் காட்டுங்கள்… சகோதரர்களே… என்மீது இரக்கம் காட்டுங்கள்…” என்ற ஓலமும், “இப்படிதான் தட்டிக் கொடுப்பாயா? ம்? இப்படிதான் தட்டிக் கொடுப்பாயா?” என்ற ஆவேசக் குரலும் மாறி மாறி ஒலித்தன. என் மனம் முழுவதும் அருவருப்பு மண்டி, குமட்டிக்கொண்டு வந்தது. வழி நெடுக ஆங்காங்கே நின்று நின்று வந்தேன். என் கண்முன்னால் நடைபெற்ற அந்தக் குரூரக் காட்சியால் உடலும் மனமும் ஒருசேர பாதிக்கப்பட்டிருந்தேன். உண்மையிலேயே உடம்புக்கு முடியாமல் போய்விடுமோ என்று அஞ்சினேன். வீட்டுக்கு எப்படி வந்து சேர்ந்தேன், எப்போது படுக்கையில் விழுந்தேன் என்று எனக்கு நினைவில்லை. ஆனால் தூக்கத்தில் ஆழ்ந்த அந்த நொடி, மீண்டும் அந்தக் கொடுமையான காட்சி கண்முன் தோன்றியது, நாராசச் சத்தம் காதைக் கிழித்தது. நான் படுக்கையை விட்டுத் துள்ளியெழுந்தேன். 

“எனக்குத் தெரியாத ஏதோ ஒன்று கர்னலுக்குத் தெரிந்திருக்கலாம். அவருக்குத் தெரிந்த அந்த விஷயம் என்னவென்று எனக்கும் தெரிந்தால், ஒருவேளை, நான் கண்ட காட்சியைப் புரிந்துகொள்ள முடியும். அதன் பின்னாலிருக்கும் நியாயத்தை ஏற்றுக்கொள்ளவும் முடியும். அப்போது இந்த அளவுக்கு எனக்கு அது துன்பம் தருவதாய் இருக்காது.” ஆனால் என்ன யோசித்தும், நான் கண்ட காட்சியின் பின்னணியில் கர்னல் அறிந்திருக்கக்கூடிய அந்த ஏதோ ஒன்று எதுவென்று என்னால் யூகிக்க இயலவில்லை. யோசித்து யோசித்து நான் தூங்குவதற்கு அன்று மாலை நேரம் ஆகிவிட்டது. அதன் பிறகு ஒரு நண்பனைச் சந்திக்கச் சென்று மட்டையாகும்வரை மதுவருந்தினேன்.

ஆகவே, நான் கண்ட அக்காட்சி அநியாயம், அக்கிரமம் என்ற முடிவுக்கு நான் வந்திருப்பேன் என்று நினைத்தீர்களானால் அதுதான் இல்லை. அவ்வளவு உறுதியாகவும், ஒவ்வொருவராலும் தவிர்க்க இயலாததாகவும் அச்செயல் நடைபெற்றிருக்கிறது என்றால், எனக்குத் தெரியாத ஏதோ ஒன்று அவர்களுக்கு உறுதியாகத் தெரிந்திருக்கிறது. அது என்னவாக இருக்கும் என்று நானும் யோசித்துப் பார்த்தேன். ஆனால் அப்போது மட்டுமல்ல, அதற்குப் பிறகும் கூட என்னால் அது என்னவென்று புரிந்துகொள்ள இயலவில்லை. அந்தக் காரணம் என்னவென்று என்னால் புரிந்துகொள்ள இயலாமையால், முன்பு நான் ஆசைப்பட்டது போல் இராணுவத்தில் சேர முடியவில்லை. இராணுவப்பணியில் மட்டுமல்ல, குடிமைப்பணியிலும் கூட நான் சேரவில்லை. நான் எங்குமே பணி புரியவில்லை, உங்களுக்கே தெரியும், எந்தப் பணியிலுமே என்னைப் பொருத்திக்கொள்ள என்னால் இயலவில்லை.”

“போகட்டும், நீங்கள் எப்படிப்பட்ட உதவாக்கரை என்று எங்களுக்குத் தெரியும். நீங்கள் இல்லையென்றால் இங்கு எத்தனை பேர் உதவாக்கரையாக இருந்திருப்பார்கள் என்பதையும் சொல்லுங்கள்.” எங்களுள் ஒருவன் சொன்னான்.

“ஆங்… அதெல்லாம் வீண் பிதற்றல்” இவான் வாசிலியேவிச் உண்மையான கோபத்தோடு சொன்னார்.

“சரி, உங்களுடைய காதல் என்ன ஆனது?” நாங்கள் ஆர்வத்துடன் கேட்டோம்.

“காதல்? அது அன்றிலிருந்து குறைய ஆரம்பித்துவிட்டது. அவள் எப்போதும் போலவே புன்னகை தவழும் முகத்துடன் என்னைச் சந்தித்தாள். உடனேயே எனக்கு அணிவகுப்பு மைதானத்தில் நான் பார்த்த கர்னலின் உருவம் நினைவுக்கு வந்து சங்கடத்தையும் அசௌகரியத்தையும் உண்டாக்கும். நான் அவளுடனான சந்திப்புகளைத் தவிர்க்க ஆரம்பித்தேன். கொஞ்சம் கொஞ்சமாக என் காதலும் ஒரு முடிவுக்கு வந்துவிட்டது. இப்படிதான் தற்செயலாய் அமையும் சில சந்தர்ப்பங்கள் ஒருவனுடைய ஒட்டுமொத்த வாழ்க்கையையும் மாற்றவும் திசைதிருப்பவும் செய்துவிடுகின்றன. ஆனால் நீங்களோ…”

அவர் தன் கருத்தை மீண்டும் சொல்லி முடித்தார்.


[1] தபசுக்காலம் – இயேசு கிறிஸ்து உயிர்த்தெழும் ஞாயிறு (ஈஸ்டர்)க்கு முன்பாக கிறிஸ்தவர்கள் உபவாசம் பேணும் நாற்பது நாட்கள்.

[2] விவிலியக் கதையின்படி நோவா என்பவர் ஊழிவெள்ளம் வருவதற்கு முன் இருந்த இறுதிப் பெருந்தந்தை ஆவார். சேம், காம், எப்பேத்து ஆகிய மூவரும் அவரது மகன்கள். ஒரு நாள் நோவா, புளித்த திராட்சை ரசத்தைப் பருகியதால், நினைவிழந்து, ஆடை விலகியது கூடத் தெரியாமல் கூடாரத்தில் உறங்கிக்கொண்டிருந்தார். அப்போது தந்தையைப் பார்க்க வந்த காம், அவரது நிலையைப் பார்த்துச் சிரித்து தன் சகோதரர்களிடம் சொன்னான். அவர்கள் இருவரும் வேறொரு ஆடையை எடுத்து இருபக்கமும் பிடித்தபடி, பின்பக்கமாகவே சென்று தங்கள் தந்தையின் நிர்வாணத்தை மறைத்தனர்.    

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.