ஈவ் என்ஸ்லரின் கடிதம்


ஜைனா மோனலாக்ஸ் (Vagina Monologues) நாடகம் அறிமுகமாவதற்கு முன்புவரை ஈவ் என்ஸ்லர் என்ற பெயரை யாரும் அறிந்திருக்கவில்லை. தி நியூயார்க் டைம்ஸ் இந்த நாடகத்தை அந்தப் பத்தாண்டுகளில் வந்த மிகச்சிறந்த அரசியல் நாடகமாகக் குறிப்பிடுகிறது. இதுபோன்ற வரம்பு மீறும் (transgressive) ஒரு படைப்பை உள்ளபடியே அதன் பிரச்சனைகளுடன் அணுகி, பெண்ணியம் தொடர்பான உரையாடல்களில் முன்னெடுப்பது மிகவும் இன்றியமையாதது.  

மேலும், ஈவ் என்ஸ்லர் தன் சமீபத்திய புத்தகமான அபாலஜி (Apology) குறித்துப் பகிர்ந்த கருத்துக்களில் வெளிப்படுத்தும் சூழலியல் அக்கறையும் கவனிக்கப்பட வேண்டியது. இந்தப் புத்தகம், உள்ளபடியே சிறுவயதில் தன் தந்தை தனக்கிழைத்த பாலியல் வன்முறைகளைப் பதிவுசெய்து, அவர் இறந்த பிறகு தனக்கான நீதி என்பது என்ன என்ற கேள்வி அளித்த மன உளைச்சலுக்கு வடிகாலாக, தன் தந்தை தன்னிடம் ஒருவேளை கேட்டிருக்கக்கூடிய மன்னிப்பையும் பதிவு செய்திருக்கிறது. இப்புத்தகத்தை உலகெங்கும் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்படுகிற, அதற்கான நீதி கிடைக்கப்பெறாத, அல்லது அதற்காகப் போராடுகிற அனைத்துப் பெண்களுக்கும் சமர்ப்பிக்கிறார் என்ஸ்லர். ஆனால் தனக்கிழைத்த அநீதிக்கான மன்னிப்பைக் கற்பனையாகத் தன் தந்தையிடமிருந்து பெறும் அந்த நொடி, தான் இந்த மண்ணிடம், நாம் ஒவ்வொருவரும் இந்த மண்ணிடம் கேட்க வேண்டிய மன்னிப்பை அவருக்கு நினைவூட்டுகிறது. அந்த மன்னிப்பைக் கேட்கத் தவறிய குற்றவுணர்வில் புத்தகம் எழுதிய பிறகு அதன் இணைப்பாகத் தன் மன்னிப்புக் கடிதத்தை நம் நிலமெனும் தாய்க்கு எழுதிச் சமர்ப்பிக்கிறார். இதில் மட்டுமல்ல, தன் எழுத்துக்கள் அனைத்திலும் பெண்ணியக் கருத்தியலுக்கு இணையாகச் சுற்றுச்சூழலியலுக்கு முக்கியத்துவம் கொடுத்துவருபவர் ஈவ் என்ஸ்லர். எழுத்துடன் நிற்காது பலவித செயற்பாடுகளிலும் சூழலியல் பாதுகாப்பிற்காகத் தன்னை ஈடுபடுத்திவருபவர். ஈவ் என்ஸ்லரின் பெண்ணியக் கருத்துக்களும் சூழலியல் குறித்த அக்கறையை உள்ளடக்கியதாகவே இருக்கிறது.

வங்காரி மத்தாயிலிருந்து க்ரெட்டா துன்பர்க்வரை பலவித பின்னணியிலிருந்து இயங்கும் பெண்களும் சூழலியல் சீர்கேடுகள் நம்மீது எறியும் ஆபத்துகளை நமக்கு உணர்த்தி, அவற்றை எதிர்கொள்ளவும், நாம் செய்ய வேண்டியவற்றைக் காலம் கடக்கும் முன் செய்துவிடவும் வலியுறுத்தி வருவதையும் நாம் பார்க்கிறோம்.

‘All Roads lead to Rome’ என்று ஆங்கிலத்தில் ஒரு பதம் உண்டு. மனித நாகரிகத்தின் உறைவிடமாக ரோம் இருப்பதால் நம் பயணம் அத்திசையை நோக்கி இருப்பதாக நம்புகிறோம். சூழலியல் சவால்களையும் சமூகநீதிக்கான போராட்டமாகவே உலகம் முழுவதும் பலதரப்பட்ட அறிஞர்களும் ஏற்றுக்கொண்டாகிவிட்டது. இன்னும் தமிழ்ச் சிந்தனையில் அது வெறும்ஆர்வலச் செயல்பாடுகளாக உதிரியாக அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பிரிந்து நிற்கிறது. சூழலியல் குறித்துத் தொடர்ந்து தமிழில் எழுதி வரும் அறிஞர்களுடன் அறிவுத்தளத்தின் மற்ற பரிமாணங்களைச் சேர்ந்தவர்கள் இன்னும் தங்களை ஈடுபடுத்திக்கொண்டதாகத் தெரியவில்லை. இங்கும் அனைத்து சித்தாந்தங்களும், கருத்தியல்களும், கோட்பாடுகளும், குறிப்பாகப் பெண்ணிய செயற்பாடுகளும் சூழலியல் அக்கறையை உள்ளடக்கியதாகவே இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். உலகம் ரோம் நோக்கிச் செல்லத் தொடங்கியாகிவிட்டது. தமிழ்ச்சமூகமும் விரைவில் செல்ல வேண்டும் என்பதே என் வேண்டுதல்.

 

இனி ,

ஈவ் என்ஸ்லரின் கடிதம்

நிலமென்னும் அன்பு அம்மா,

2.9 பில்லியன் வட அமெரிக்கப் பறவைகள் காணாமல்போனது குறித்த கட்டுரையிலிருந்தே அனைத்தும் தொடங்கியது. 2.9 பில்லியன் பறவைகள் மறைந்துவிட்டன ஆனால் அதை ஒருவரும் கவனிக்கவில்லை. பிழைக்காத, இன்னும் பிறந்திராத, பறப்பதையும் பாடுவதையும் நிறுத்திய, தனித்துவமான தங்கள் கூடுகளைக் கட்டுவதை நிறுத்திய, தங்கள் அலகை இந்தக் கருப்பு ஈர நிலத்தில் கொத்தியிராத, அல்லது அந்த நிலத்தில் அமரக்கூட இல்லாத 2.9 பில்லியன் குருவிகள், கரிச்சாங்குருவிகள், மற்றும் தூக்கணாங்குருவிகள். பறவைகளிடமிருந்தே அது தொடங்கியது. ஜூன் மாதம் ஜேம்ஸும் நானும் அவை இப்பொழுது அருகிவிட்டன என்று குறிப்பிட்டோமல்லவா? ஒருவகையான அச்சமூட்டும் அமைதி இறங்கியிருந்தது. ஆனால் பிற்பாடு அவை திரும்பி வந்தன. கூட்டமாகத் திரண்டு வந்த தூக்கணாங்குருவிகளும் பெரிய அண்டங்காக்கைகளும் சரளைக் கற்கள் மீது ஒன்றன்பின் ஒன்றாக அமர்ந்தன. அப்பறவைகளைப் பற்றிக் கேள்விப்பட்ட அன்று மதியம்தான் நான் என் இருசக்கர வாகனத்தில் விபத்திற்குள்ளானேன் என்று எனக்குத் தெரியும். திடீரென்று விழுகிறேன், எதிரே தெரியும் ஆபத்தைத் தடுக்க முடியாமல், தடுப்புக் கருவியை அடைய முடியாமல், அல்லது அடைந்தும் அதைப் பயன்படுத்த முடியாமல், கீழே விழுவதை நிறுத்த முடியாமல் விழுகிறேன். நான் விழுந்து சுழன்றேன், விழுந்துகொண்டிருந்தேன் என்பதை உணர்ந்தேன், நாம் விழுந்துகொண்டிருக்கிறோம், நாமெல்லாம், காகங்களையும், ஊசியிலைக் காடுகளையும், பனிக் குமிழ்களையும், எதிர்பார்ப்புகளையும் சேர்த்துக்கொண்டு விழுகிறோம், விழுகிறேன், விழுகிறேன், நான் விழுந்துகொண்டே இருக்க விரும்புகிறேன். இங்கே அனைத்தும், விழுவதையும், தொலைவதையும், வெளுப்பதையும், எரிவதையும், மறைந்துபோவதையும், திணறுவதையும், என்றுமே பூக்க முடியாமல் போவதையும் காண நான் இருக்க விரும்பவில்லை. பறவைகளும் தேனீக்களும் கோடை இரவுகளை வெளிச்சமூட்டும் மின்மினிப் பூச்சிகளும் இல்லாமல் நான் வாழ விரும்பவில்லை. காட்டுமிராண்டிகளாக நம்மை மாற்றியிருக்கும் வேட்கையுடனும், நம் மூர்க்கத்தனம் நமக்களித்திருக்கும் கூர் நகங்களுடனும் நான் வாழ விரும்பவில்லை. மிக ஆழத்தில், இருண்டிருக்கும் நிலத்தில் விழுந்து, விழுந்து, அப்படியே இறந்து நான் அங்கேயே புதைக்கப்பட வேண்டும்.

ஆனால் அம்மா, உங்களிடம் வேறு யோசனைகள் இருந்திருக்கின்றன. நான் விழுந்தபொழுது, என் வண்டி புல்லிலும் புழுதியிலும் விழுந்தது. பத்து வயதான நான் சாலையில் விழுந்ததால் என் முட்டிகளில் சிராய்த்து ரத்தம் வந்தது. இயற்கையும் எனக்கு அந்நியமானது, தயவற்றது, என்னைக் காயப்படுத்தும் அல்லது காயப்படுத்தக்கூடிய ஒன்று என்றும் உணர்ந்தேன், ஏனெனில் இதுவரை நான் அறிந்திருந்த, நான் விரும்பிய, மிகப்பிரம்மாண்டமான, சக்தி வாய்ந்த, அழகான எதுவொன்றும் எனக்கு அந்நியமாகி, என் மீது தயவற்று இறுதியில் என்னைக் காயப்படுத்தின. இருந்தும், காடுகளிலிருந்து என்றென்றைக்குமாக வெளியேற்றப்பட்டவளாக இருந்தேன், அல்லது நான் அவ்வாறாக உணர்ந்தேன். நான் உடைந்தவர்களைச் சேர்ந்தவள், மாசடைந்தவர்களைச் சேர்ந்தவள், இறந்தவர்களைச் சேர்ந்தவள்.

என் முட்டியிலும் முழங்கையிலும் ஏற்பட்ட கூர்மையான வலியினால் இருந்திருக்கலாம், அல்லது என்னுடைய புதிய சட்டையில் பதிந்த அழுக்கினால் இருந்திருக்கலாம், நான் அடைந்த அதிர்ச்சியினாலோ, என் நெஞ்சில் அடர் கரியாக உறைந்திருந்த துக்கத்தைக்காட்டிலும் மரணமே மேல் என்று நான் நினைத்ததாலோ, என் சைக்கிளின் கம்பிகள் தனிமையில் சடசடவென்று நான் இல்லாமல் அதன் சக்கரம் சுழன்றுகொண்டிருந்ததாலோ இருந்திருக்கலாம். எதுவாகத்தான் இருக்கட்டுமே. அது உடைந்தது. அது உடைந்தது. நான் அதன் ஊளையைக் கேட்டேன்.

அம்மா, பறவைகள் காணாமல் போனதற்கு நான்தான் காரணம். சால்மன் மீன்கள் முட்டையிடமுடியாமல், பட்டாம்பூச்சிகள் வீடடைய முடியாமல் போனதற்கும் நானே காரணம். வெளுத்திருக்கும் உயிரற்ற பவளப்பாறைகளும், மீத்தேன் கொந்தளிக்கும் கடலும் நானேதான். வறண்ட நிலங்களிலிருந்தும் தீக்கிரையாகும் காடுகளிலிருந்தும் நீரில் மூழ்கும் தீவுகளிலிருந்தும் ஓடும் லட்சக்கணக்கானவர்கள் நான்தான். நான் உன்னைப் பார்க்கவில்லை, அம்மா. நீ எனக்கு ஒரு பொருட்டல்ல. என் காயம் எனக்குள் ஏற்படுத்திய கர்வமும் லட்சியமும் துரிதமாகத் துடித்துக்கொண்டிருக்கும் நகரத்தை நோக்கி என்னைச் செலுத்தின. கனவைத் துரத்திக்கொண்டு, பரிசைத் துரத்திக்கொண்டு, என் சாதனைகள், நான் மோசமில்லையென்றோ, முட்டாளில்லை என்றோ, பயனற்றவள் இல்லையென்றோ, என் பிழை எதுவுமில்லையென்றோ இறுதியில் நிரூபிப்பதற்காக. அம்மா! உன் மீதுதான் எத்தனை இளக்காரம் இருந்திருக்கிறது எனக்கு! கருத்துக்களுக்கும் சாதனைகளுக்குமான சந்தையில் என் மதிப்பை நான் பெறுவதற்கு நீ என்ன கொடுத்திருக்கிறாய்? நிராயுதபாணியான உன் மரங்கள் கொடுக்க முடிவது என்ன, குளிர்காலத்தின் நடுங்கும் தனிமையையும் அல்லது நான் வாங்கவோ தாங்கவோ முடியாத அதன் பசுமைகளையும் தவிர்த்து? உன்னை வெறும் தட்பவெப்ப நிலையாகச் சுருக்கிவிட்டேன், ஓர் அசௌகரியமாக, என் வழியில் குறுக்கிட்ட ஏதோவொன்றாக, என் விலை மதிக்கமுடியாத நாகரிகக் காலணிகளை நாசம் செய்த மண் சகதியாக. உன் அழைப்பை நிராகரித்தேன், உன் பெருந்தன்மையை இகழ்ந்தேன், உன் அன்பைச் சந்தேகித்தேன். உன்னைப் பயன்படுத்திய, நாசப்படுத்திய முறைகள் அனைத்தையும் நான் கண்டுகொள்ளவில்லை. நீ எங்களை அழித்துவிடாமல் இருக்க உன்னைப் பணியவைத்து, கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும் என்று என் தந்தையர்கள் உன்னைப் பற்றிக்கூறிய கதைகளை நம்புவதாகப் பாவனை செய்தேன்.

காயமடைந்த என் உடலை, மூச்சை உள்ளிழுத்துக்கொண்டும் வெளியேற்றிக்கொண்டும், உன் புல் மெத்தையின் வயிற்றில் அழுத்துகிறேன். நான் உனக்காக ஏங்குகிறேன், அன்னையே. உன்னைவிட்டு வெகுகாலம் தள்ளியிருந்துவிட்டேன். நான் வருந்துகிறேன். நான் வருந்துகிறேன்.

நான் புழுதியாலும், மண்ணாலும், நட்சத்திரங்களாலும், நதிகளாலும், தோலாலும், எலும்புகளாலும், இலைகளாலும், மீசைகளாலும், கூர் நகங்களாலும் ஆனவள். நான் உன்னில், இதனில் ஓர் அங்கம், வேறொன்றுமில்லை. நான் பூசணம், இதழ் விரிந்த யோனி, மற்றும் மகரந்தக் கேசரம். நான் கிளை, கூடு, தண்டு, மற்றும் கல். நான் இத்தனை நாட்களாக இங்கிருந்த ஒன்று, இனி வரப்போவதுகூட. நான் சக்தி, நானே புழுதி. நான் அலை, நான் ஆச்சரியம். நான் உந்துவிசை, நானே உத்தரவு. வாசனை கொண்ட வெண்சிவப்பு மலர்களும், மரங்களற்ற ஆப்பிரிக்கப் புல்வெளிகளின் ஒற்றைக் குடை மரமும் நானே. நான் நீல வண்ணப்பூ, மஞ்சள் செடி, டெய்சி, டாலியா, பிரபஞ்சம், சூரியகாந்தி, பான்சிச் செடி, ரத்தம் கசியும் இதயம் மற்றும் ரோஜா. இதுவரை பெயர் சூட்டப்பட்டவைகளும் சூட்டப்படாதவைகளும் நான். ஒன்றாக இணைந்திருக்கும் ஒன்றும் தனியாக விடப்பட்ட ஒன்றும் நானேதான். உங்களிலிருந்து மறைந்த அனைத்து உயிரினங்களும், இன்னும் பிறக்காத இனிய பறவைகளும் நான்தான். நான் புதல்வி. நான் காவற்பணியாள். நான் உக்கிரமான பாதுகாவலர். நான் விசனப்படுபவள். நான் கொள்ளைக்காரி. நான் குழந்தை. நான் மண்டியிட்டு இறைஞ்சுபவள். நான் இப்பொழுது இங்கிருக்கிறேன், அம்மா. நான் உன்னுடையவள். நான் உன்னுடையவள். நான் உன்னுடையவள்.


-விலாசினி ரமணி. 

நன்றி :Brain pickings. 

 

மொழிபெயர்ப்பு ஆசிரியர் குறிப்பு:

விலாசினி ரமணி: எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், பதிப்பாளர், பிரக்ஞை பதிப்பகம் வழியே இதுவரை பதினைந்து புத்தகங்களை((ஆங்கிலம் 2 மற்றும் தமிழ் 13) வெளியிட்டிருக்கிறார்.  தற்போது சொந்தமாக திரைக்கதை எழுதி, குறும்படம் இயக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறார்.

3 COMMENTS

  1. இந்த கடிதத்தின் வரிகள் உடலையும் , மனதையும் மிகுந்த பாரமுடையதாக மாற்றுகிறது 💚 குற்றவுணர்ச்சியை ஏற்படுத்துகிற வரிகள் இவை…

  2. எவ்வளவு வீரியமிக்க வரிகள். மனித குலத்தின் பிரதிநிதியாக இயற்கையன்னையிடம் பாவமன்னிப்பு கேட்பது போல் எழுதப்பட்டிருக்கும் இக்கடிதம் எவ்வளவு வலியை உள்ளடக்கியிருக்கிறது. இயற்கை மீதான வாஞ்சையும், அதன் அழிவு குறித்த ஆற்றாமையும், இயற்கையை வஞ்சித்த குற்றவுணர்வும், அதை அலட்சியப்படுத்திய வேதனையுமாக விரியும் இக்கடிதம், இறுதிப் பரிகாரமாக புல், பூண்டு, பூ, பறவை, இயற்கை, பூமி, பிரபஞ்சம் யாவும் நானே என்னும் தற்செருக்கோடு, தன்னம்பிக்கையின் கிளைப்போடு, நெஞ்சார்ந்த சிலிர்ப்போடு முடியும்போது உள்ளோடும் உணர்வுக்கலவையை வெளிப்படுத்த வார்த்தைகளில்லை. அற்புதமான மொழிபெயர்ப்பு. ஈவ் என்ஸ்லர் பற்றி அறியத் தந்த விலாசினி ரமணி அவர்களுக்கு நன்றியும் பாராட்டும்.

  3. அருமையாக மொழி பெயர்த்துள்ளீர்கள் விலாசினி1 வாழ்த்துக்கள்!
    சுற்றுசூழல் குறித்த உணர்வு பூர்வமான எழுத்துக்கள் இப்போது அவசியம் தேவை!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.