ரவிசுப்பிரமணியனுக்கு வண்ணதாசன் எழுதிய கடிதங்கள்


ன்புமிக்க ரவிக்கு,​

வணக்கம். ​​

நீங்கள் பாடி நிறையக் கேட்டிருக்கிறேன். தளும்பத் தளும்ப​ இன்னும் மனதில் நிற்பது தேனருவித் தடாகத்தின்  அமிழ்ந்தபடி நீங்கள் பாடியவை.​​

என்னுடைய ‘ப்ரெய்லில் ஒரு பிரார்த்தனை’க்கு இப்படி ஒரு கொடுப்பினை. எனக்கு அந்த சர்ச், ராமச்சந்திரன், சுகுணா, செல்வகுமார் எல்லாம் ஞாபகம் வருகிறார்கள். எல்லோரின்  ஞாபகத்தை  அழிக்கிறதை  அரூபமாக்குகிறதை விட,எல்லோரையும் இப்படிப் பக்கத்தில் கொண்டுவந்து  உட்கார்த்துகிற,  ஒருத்தர் தோள் இன்னொருத்தரை  இடிக்கிற நெருக்கம் உண்டாக்குகிற  இந்த இசை பிடித்திருக்கிறது. அகலிகை கல் ஆனது சாபமோ என்னவோ, கல் அகலிகை ஆனது விமோசனம் என்று இப்போது நம்புகிறேன்.​​

உங்கள் இசை அந்தக் கவிதை வரிகளுக்கு விமோசனம்  அளித்து ஏகுகிறது. நீங்கள் நல்லா இருக்கணும் ரவி.​
​*​
நீங்கள் வருத்தப்படுகிற அளவுக்கோ,  சாம்ராஜ் கலக்கமுற்ற அளவுக்கோ அதில் ஒன்றுமில்லை.  இளையபாரதி சொன்னவுடன் ஒரு சிறு யோசனையும் இன்றி நான் அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டேன்.  நிகழ்வையும்  வைரமுத்து எந்த அரசியல் சாய்வும் சாயமும் இன்றியே மிகக் கவனமாக  நடத்தினார். எனக்கு  இந்த நிகழ்வில் கலந்துகொண்டதில் பெரிய மகிழ்ச்சியும் இல்லை, ​பெரிய  வருத்தமும் இல்லை.  நான் இதனால் தாழ்வுறவும்  இல்லை, பீடுறவும் இல்லை. அந்தத் தொண்ணூறு வயது  மனிதன் மட்டுமல்ல,  எந்தத் தொண்ணூறு வயது மனிதனுமே நமக்கு முக்கியம்தான்.​

இன்று காலை நானும் சங்கரியம்மாவும் எங்கள் அப்பா கூடப்பிறந்த  அத்தையைப் போய்ப் பார்த்து வந்தோம். அப்பாவுக்கு 89 என்றால் அத்தைக்கு 87 நிச்சயம்  இருக்கும்.  ஒரு வெளிறிய சாயம்போன  துணிபோல,   கட்டிலோடு கட்டிலாகக் கிடக்கிறாள். நாங்கள்  வந்திருப்பதே  தெரியாமல்,  இன்னொரு அறையின் கட்டிலில் கணபதி  அண்னன் வயதை ஒத்த நாராயண அத்தான் (அந்த அத்தையின் ஒரே மகன்) கடுமையான பார்க்கின்ஸன் நரம்பியல் தளர்வால் மாத்திரை  உறக்கத்தில் இருக்கிறார். அத்தை அவ்வளவு நிறம். அரியநாயகிபுரம்  பண்ணையாருக்கு வாழ்க்கைப்பட்டவள். சந்தன நிறம் இன்னும்  இருக்கிறது.  ஒரு பழந்துணி தவிர உடம்பில் வேறு எதுவும் இல்லை,  இன்னும் குறையாத வசதிக்கு மத்தியில்.  நான் அத்தை கையைப் பற்றியபடி அமர்ந்திருந்தேன். அன்றைக்கும் அவருடைய கையைப் பற்ற விரும்பினேன்.  என் கூச்ச இயல்பு தடுக்க,  ‘நல்லா இருங்கய்யா’ என்று மட்டும் சொன்னேன்.​
*​
நீங்கள் வருகிற சமயம் நான் ஊரில் இருக்க மாட்டேன்.​  21ல் சென்னையில் ஒரு உறவினர் இல்லத் திருமணம்.   கலந்துகொண்டு 23 புறப்பட்டு 24ல்தான் நெல்லை திரும்புவேன். உங்களைச் சந்திக்க முடியாது போகும்  சூழ்நிலைக்கு வருந்துகிறேன்.​
*​
என்னுடைய ஆவணப்படம் குறித்து என்ன அவசரம்?​ அது அவசியமே இல்லை என்கிற போது,  அது குறித்து   என்ன அவசரம்  வேண்டிக்கிடக்கிறது.​
*​
என் வரிகளை இசைபட வாழவைத்திருக்கிற உங்களுக்கு, இசையறியா என்னுடைய மகிழ்ச்சியும் நன்றியும்.​
நல்லா இருங்க.​​

சி.க.


ன்பு மிக்க ரவிக்கு,

வணக்கம். ​

​ சிவசைலம் வந்தால் தாக்கல் சொல்லுங்க ரவி.  அது எங்க அம்மாத்தாத்தா கல்யாணி ஆயானும், முத்தையா  ஆயானும் நடமாடின பூமி.

ஆழ்வார்குறிச்சி ரயில்வே ஸ்டேஷன்ல சிவசைலத் தாத்தாவின் வண்டி வந்து நிக்கும். தாத்தாதான்   வண்டியடிச்சுக்கிட்டு வருவா. வழி பூராவும் ஆலம் பழம் சிவப்பு சிவப்பா. குறுக்க ரெண்டு இடத்தில  தாம்போதியில பளிங்கு கணக்கா ரோட்டுக்குக் குறுக்க தண்ணி ஓடும்.​ தாத்தா வீட்டில இருந்து பார்த்தா அடுக்கடுக்கா மலை கூப்பிடும்.  நீலம்ணா அப்படி ஒரு நீலம். ராத்திரில அப்படியே தீப் புடிச்சு மலையில  எரியும். மாலை போட்ட மாதிரி இருக்கும். தீ மாலை. தீ சர்ப்பம். அப்படியே சரசரண்ணு மலையில நகரும்.  இன்னும் அந்த மலைத் தீ​ என் ஞாபகத்தில அணையலை. இருக்கு. நான்  மலை பளிஞன். யான மிதிச்சுத்  செத்தா நல்லா இருக்கும். எந்தோள்ல கிடந்த கருங்கம்பளி போதும் அடையாளத்துக்கு மத்ததெல்லாம் கூழாப்போனாலும் சரிதான்.​

சி.க​

22.12. 2010 ​


வி,​​

எனக்கு அனுப்பி ஒரு மணி நேரம் இருக்கும். அந்த வீடியோவை இரண்டு மூணு தடவை பார்த்தும் கேட்டும்  ஆச்சு. விஷ்ணுபுரம் விருது ஞாபகம் வந்தது.  யானை வந்து கோவில் வாசலில் உட்காந்து இருக்கிறவனுக்குப்  போடுகிறது மாதிரி தான் எனக்கு ஒவ்வொரு விருதும். நீங்களும் பாண்டியராஜீம் கொடுத்த இந்த விருது  ‘பளிங்குக் குளம்’.  ​​

பாண்டியராஜும் எவ்வளவோ உயரத்துக்குப் போயிருக்க வேண்டிய பையன். நெத்தி ரொம்பப் பெரிசு. ஆனா,   எழுதினது ரெண்டு விரக்கடை கூட இல்லை. இதிலேயும் நிறைய மாயம் எல்லாம் செய்திருக்காப்ல. நிறைய  விஷுவல்ஸ். சில பேரு கையைப் பூப்போல பிடிப்பாங்க. சில பேரு விலா எலும்பு தெறிக்கிறது போல இறுக்கி அப்படியே மூச்சுத் திணறப் பண்ணீட்டு, சிரிப்பாங்க. நல்லா இருங்க ரெண்டு பேரும். ​

சி.க​

(வாட்ஸ் அப்பில் அனுப்பியது. )


ணக்கம் ரவி.​​

‘நீங்கள் விரும்பியதுதான் நடந்தது’ உங்களின் மிக முக்கியமான கவிதை. உங்களின் பத்து நல்ல  கவிதைகளைத் தெரிவு செய்யும் எவராலும் தவிர்க்க முடியா ஒன்று.​

எழுதுகிறவனிடம் படிந்துவிடும், அவனுக்கே உரிய விருப்பச்  சொற்கள்,  சொந்த சாயல் எதுவுமற்ற ஒன்று.​​

எனக்கு இன்னொரு கவலையும் உண்டாகிறது. மிகுந்த நெருக்கடிகளும் மன உளைச்சலும் மிக்க  வாழ்பருவத்தை  நீங்கள் இப்போது கடந்துகொண்டிருக்கும் வாதையில் உழல்கிறீர்களோ என்று. இவ்வளவு  பிசிறற்ற சுருதி சுத்தம் அப்போதே சாத்தியம். வாழ்க. நல்லா இருங்க. பேனாவை மட்டும் வைத்துவிடாதீர்கள்.​​

– அண்ணன் கல்யாணி.

(வாட்ஸ் அப்பில் அனுப்பியது.)


நன்றி: கவிஞர் ரவிசுப்பிரமணியன்

மேற்கண்ட கடிதங்களில் ஒன்றை தவிர மற்ற மூன்று கடிதங்கள் எழுதப்பட்ட தேதி, வருடம் குறித்தான விபரங்கள் கிடைக்கப் பெறமுடியவில்லை.

Previous articleஇரு மனைவியரும் ஒரு விதவையும்
Next articleஏதேன் காட்டின் துர்க்கந்தம்
ரவிசுப்பிரமணியன்
ரவிசுப்பிரமணியன் (Ravisubramaniyan) இவர் ஓர் தமிழக எழுத்தாளரும், கவிஞரும், ஆவணப்பட இயக்குனருமாவார். பன்முகம் கொண்ட படைப்பாளியான இவர் கும்பகோணத்தைச் சேர்ந்தவர். தற்போது சென்னையில் வசித்து வருகிறார். கவிதைத் தொகுப்புகள், கட்டுரைகள், ஆவணப்படங்கள் என்ற நிலையில் இவரது பங்களிப்புகள் உள்ளன. சிறுகதைகளும் எழுதிவருகிறார். பாவலர் இலக்கிய விருது, சாரல் இலக்கிய விருது, அகல் இலக்கிய விருது, சென்னை இலக்கியத் திருவிழா விருது போன்ற விருதுகள் வழங்கும் குழுவிலும் உறுப்பினராக உள்ளார். பல தமிழ்க்கவிஞர்களின் கவிதைகளுக்கு இசையமைத்துள்ளார். 80க்கு மேற்பட்ட நவீனக் கவிதைகளுக்கு இசை வடிவம் தந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.