இரு மனைவியரும் ஒரு விதவையும்


காதல்நயம் மிக்க இரவொன்று வருடத்தில் உள்ளதென்றால்,

அது வேனிற்கால கதிரவன் கோடிநிலையெடுக்கும் முன்மாலையையுடைய நாளின் இரவுதாம். அற்புதமான இரவு அது

அன்றைய நள்ளிரவில், வெளியே தன்னந்தனியாகச் சென்று,

ஹாவ்தார்ன் புதர்வேலியின் பின்னிருந்த  பூங்காவினுள் நுழைந்தேன்.

மரக்கிளை ஒன்றிலிருந்து பறவையொன்று, உரத்துச் சிரிப்பதைப்போலப் பாடிக்கொண்டிருந்ததுமலர்களின் சுகந்தம் எங்கும் விரவியிருந்தது.

பனித்துளிகளால் புற்கள் ஈரமாயிருந்தன, வானம்பாடிகள் கூவிக் கொண்டிருந்தன.

காதலர்களுக்கான இரவு இது, நான் தனியனாக இருந்தேன்,

தனிமையில் இருந்தேன். பிறகு அங்கு சில குரல்களைக் கேட்டேன்.

உரத்துச் சிரித்தபடி, பூங்காவினுள் உரையாடும் சில குரல்கள்.

அதுவொரு விருந்து. யாருடைய விருந்து? அந்தப் புதர்வேலியின்

மீது ஏறினேன் (புதரின் முட்கள் பயங்கரமாகக் காயப்படுத்தியபோதும்)

கிளைகளின் வழியே உற்றுப் பார்த்தேன்.

 

        அங்கு மூன்று பெண்களைக் கண்டேன்,

மலர்கள் சூடியிருந்த நீண்ட, மஞ்சள்நிற, விரிந்த கூந்தல்

அவர்களின் தோள்களின் மீது புரண்டது. அவர்களின் பச்சைவண்ண ஆடைகளை

தம் நீண்ட வெண்ணிற விரல்களால் சுருக்கமற நீவினர்அத்தனை அழகானப் பெண்கள்,

அத்தனை இனிமையான, கனிவான முகங்களுடன். ரோஜாக்களுக்கும் லில்லிமலர்களுக்கும் இடையே

மூன்று மனித மலர்கள். அவர்களுள் இருவர் மணமாகியவர்கள், நான் அவர்களை முன்னரே அறிவேன்

மரியாதைக்குரியவர்கள், நாகரிகமானவர்கள், மற்றொருவர் விதவைப்பெண்,

போத்தல்களும், கண்ணாடிக்குவளைகளும் நிறைந்த மேசையின் முன்னர்

அவர்கள் அமர்ந்திருந்தனர், அங்கு அமர்ந்து பேசிக்கொண்டும், குடித்துக்கொண்டும் இருந்தனர்.

எத்தனை அதிகமாகக் குடித்தனரோ அத்தனை அதிகமாகப் பேசினர்.

சுதந்திரமாகப் பேசினர்.

      ஆம், சுதந்திரமாகப் பேசினர்.

 

      “இப்பொழுது”, எனக் கூறிய விதவைப்பெண் தொடர்ந்து, “பெண்கள் நாம் எல்லோரும் இன்று இங்கு கூடியிருக்கிறோம்,

நாம் இப்போது உண்மை பேசும் ஆட்டமொன்றை விளையாடுவோம்,

உண்மையைத் தவிர வேறெதையும் பேசக்கூடாது. கணவர்களைப் பற்றி,

நம் கணவர்களைப் பற்றி, நம் திருமணத்தைப் பற்றி.

 

     பள்ளிப்படிப்பை முடித்ததும் உங்கள் இருவருக்கும் திருமணம்

முடிந்திருந்தது; அதில் ஏதேனும் வருத்தங்கள் உண்டா?

அல்லது உங்கள் மணநாள் ஆடைகளோடு உங்கள் சந்தோஷங்களையும் கழற்றி வைத்துவிட்டீர்களா?

மணநாளின் இனிப்பு அப்பத்துடன் சேர்த்து துளியும் மீதமில்லாமல் 

அந்த மகிழ்ச்சிகளையும் உண்டு முடித்து விட்டீர்களா?

மற்ற ஆண்களைப் பற்றி என்ன எண்ணுகிறீர்கள்?

உங்களுக்கு வாய்ப்பு கிட்டினால், மற்றொருவரைத் தேர்வு செய்வீர்களா?

மேலும், “இறப்பில்தான் உன்னை விட்டு விலகுவேன்!” என்பதைப்பற்றி

என்ன நினைக்கிறீர்கள்?

 

நேர்த்தியாகத் தோற்றமளித்த ஒருத்தி, நாகரிமாகக் பேசத்துவங்கினாள்:

கல்யாணம்!” எனக் கூறிவிட்டு உமிழ்ந்தாள்.

அது ஆசீர்வதிக்கப்பட்டதென்று கூறுவர், ஆனால் அது ஒரு நரகம் என நான் கூறுவேன்.

எனக்கு வாய்ப்பு கிடைத்தால் நாளையே அவனை விட்டுவிலகிவிடுவேன்!

மாற்றமென்பது ஓய்வைப்போல நல்லது எனக் கூறுவர்;

திருமணத்தில் இருந்தும் கட்டாயம் நமக்கு ஓய்வு தேவை.

ஒரு வருடத்திற்கும் மேலாய் எதற்கு திருமணபந்தம் நீடிக்கிறது?

எந்நேரமும் எதிர்த்திசைகளில் இழுபட்டுக்கொண்டிருக்கும் இரு நபர்கள்

எதற்காக ஒன்றாக அதன்மூலம் கட்டப்பட்டிருக்க வேண்டும்?

உங்களுக்கு ஒரு பழங்கதை தெரியுமா? –

ஒவ்வொரு வருடமும் பறவைகள் எப்படி        

புதுத் துணையைத் தேர்ந்தெடுக்கின்றன என்பதைப் பற்றியது அது.

பறவைகள் மதிப்புகள் அறிந்தவை!

நாம் விரும்பும் போதெல்லாம் 

நல்லதொரு புத்தம்புது காதலனை நம்மால் தேர்வுசெய்துகொள்ள முடிந்தால்,

நமக்குத் திருப்தியளிக்க முடியாதவர்களின் பின்புறத்தில் உதைத்து விரட்டிவிட முடிந்தால்,

பெண்களாகிய நமக்கு எத்தனை வசதியாக இருக்கும்!

, நான் முதல்தரமான ஆடைகளை உடுத்திக்கொண்டு, மகிழ்வுடன், திரையரங்குகளுக்கு, கச்சேரிகளுக்கு, விருந்துகளுக்கு சென்றபடி,

என்னை நானே காட்சிப்படுத்திக் கொண்டு, அனைத்து இளைஞர்களும் ஏங்கும்படி மயில்போல் நடமாடுவேன். அவர்களுள்என்னை இரவுகளில் கதகதப்பாக வைத்துக்கொள்பவருக்காக, பரிசுப்பொருட்கள் வாங்குவேன், பின்னர் அடுத்த வருடம் தேர்வாகவிருக்கும் இளைஞனுக்காகக் கடையிலுள்ள பொருட்களை பார்த்து வைத்துக்கொள்வேன்.

தற்போதைய காதலனால் இயலாத இரவுகளில் இவன் அவனுக்குப் பதிலாக செயலாற்றலாம்.

இளைஞர்களை, அழகான ஆண்களைத் தேடி நான் செல்வேன், ஆனால்,

அவர்கள் திறமையுடையவர்களாக இருக்க வேண்டும்.

அவர்களின் எலும்புகளும் நொறுங்கும்வண்ணம் முற்றிலுமாக அவர்களைக்

கடித்து விழுங்கிவிடுவேன்.

 

பேசுவதைத் தவிர யாதொன்றும் செய்ய இயலாத, பறட்டைத்தலையையுடைய ஒரு குருட்டுக் கிழவனுக்கு, ஒரு புழுவிற்கு, ஒரு நிழலுக்கு நான் கட்டிவைக்கப்பட்டுள்ளேன்.

அவன், கோழை நிரம்பிய ஒரு பை, அவ்வளவே.

அவனுடைய கால்சராய்களைக் கூட அவனால் சுத்தமாக வைத்துக்கொள்ள முடியாது.

எப்போதும் தன்னைத்தானே சொறிந்து கொண்டிருப்பான், உடலின் அனைத்துப் பகுதிகளிலும் சொறிந்து கொள்வான்,

அவனுக்கு வெட்கமே கிடையாதுஅருவருக்கத்தக்கவன்.

அவன் என்னை முத்தமிடும்போது, வெடித்து அழுதுவிடத் துடிக்கிறேன்.

பன்றியின் தோல் போல் குத்திட்டு நிற்கும், அவனது ஐந்து மணித்தியால நிழல்.

(ஆனால் கவனத்தைக் கவருமாறு அமையும் ஒரே விஷயம் இது மட்டும்தான்நான் கூறுவதன் பொருளைப் புரிந்துகொள்ளுங்கள்)

     அவன் எப்போதும் பேசிக்கொண்டே இருப்பான்

, அவனால் இரவு முழுவதும் கூட உளற முடியும். ஆனால் அவற்றைச் செயலாற்ற முயலும்போதோ, அது படுதோல்வியில்தான் முடிந்துவிடுகிறது.

அவன் என்னைப் அணைக்கும்போது, வேசியின் மகனொருவன் என் மீது தாவி ஏறுவதைப்போல் அருவருப்பாகத்தான் உணர்கிறேன்.

ஆனால் என்னால் அவனை விட்டு விலக முடியாது.

     கிறித்துவே!

அந்த அசுத்தமான முதிய பிசாசிற்கு சில வெறுக்கத்தக்கப் பழக்கங்கள் வேறு உள்ளன.

அவன் தன் விழிகளில் காதலின் ஒளியேற்றி, என்னைப்பார்த்து இளிக்கத் துவங்கினால் (சீழ் வடியும் பெரிய புண்கள் அவனது விழிகளைச் சுற்றிலும் இருக்கும்) அவன் உடல் முழுவதும் வாந்தியெடுத்துவிடத் தோன்றும் எனக்கு.

அம்மைநோய் பாதித்த வண்டிக்குதிரை, பெண்குதிரையை மோப்பம் பிடிப்பதுபோல், அவன் அசட்டுச்சிரிப்புடன் பரபரப்பாகுவான்.

ஆனால், நடுக்கமுறும் அந்த முதிய முட்டாள், எதையேனும் செய்ய சிறிதளவே கற்பனை செய்யத் துவங்கினாலும்,

நான் உண்மையிலேயே ஆணவம் கொள்ளத் துவங்குவேன், ஆம் அப்படித்தான் செய்வேன்.

அவனுடைய ஒரு கையை, அவனது கால்சராய் பைக்குள் நுழைத்துக் கொண்டு,

தடுமாறியபடியே அவனது மற்றொரு கையால் என் கால்களின் இடையே தடவுவான்.

என் படுக்கையில் அவனால் சிறிதும் நல்ல முறையில் செயலாற்ற முடிந்ததே இல்லையெனினும்,

தொடரும் காலையில் அவனது காசோலைப் புத்தகத்தில் இருந்து நான் என் நிறைவை அடைந்துவிடுகிறேன்.

அவனுக்கு இதில் மிகுந்த ஆர்வமெனினும், நல்ல பட்டுக் கழுத்துப்பட்டியோ, அழகான புது ஆடையோ அல்லது ஒரு மோதிரமோ போன்ற பரிசுப்பொருள் ஒன்றை அவன் வாங்கித்தருவதாய் உத்தரவாதம் அளிக்கும்வரை, அவனை என்னருகில் வரவே விடமாட்டேன்.

இல்லையெனில், அவன் வேண்டியது அவனுக்குக் கிடைக்காமலே போகக்கூடும்.

எனினும், இவையனைத்தையும் கடந்து பார்த்தோமெனில், மோசமானதொரு பேரத்தில் வாங்கப்பட்ட பொருள்தான் அவன்,

அவன் எப்போதும் அரைகுறை வேலைகளையே செய்பவன்.

பொறாமை பிடித்தவனும் கூட, வன்மம் நிறைந்தவன்.

நான் ஏதேனும் சூழ்ச்சி செய்து அவனுக்குத் தீங்கு விளைவித்துவிடுவேனோ

என எப்போதும் என்னைக் கண்காணித்தபடியே இருப்பான்.

அவன் ஆர்ப்பாட்டமான மனிதன், அனைத்துத் தந்திரங்களும் அறிந்தவன்.

என்னை அவற்றுள் ஏதொன்றிலேனும் சிக்கவைக்கப் பாடுபடுகிறான்.

இளையவர்களைத்தாம் இளையவர்கள் விரும்புவர்(அனைவரும் கூறுவதுபோல்) என்பதை அவன் முன்னரே அறிவான்

வருடம் முழுவதுமோ, அதற்கும் கூடுதலாய் ஒரு நாளுமோகூட அவனை

உரசிக்கொண்டிருந்தாலும்,

அது நிகழப்போவதில்லை.

 

எனக்கு வாய்த்த கணவன் போல் உங்களுக்கும் அமைந்துவிடக் கூடாது என

இறைவனைப் பிரார்த்தியுங்கள் பெண்களே!”

 

அவள் பேசி முடித்ததும் அவர்கள் பலமாய் சிரித்தார்கள்,

மற்றுமொரு சுற்று மது அருந்தினார்கள்.

விதவைப்பெண் தன் வாயைத் துடைத்தபடி அடுத்தப் பெண்ணைப் பார்த்துக் கூறினாள்,

நீ எப்படியம்மா வாழ்கிறாய்?

கேவலமான செய்திகளை எங்களுக்குக் கூறாதே!

உனக்குப் பிறகு நான் சாட்சிக்கூண்டில்

ஏறி அனைத்தையும் கூறுவேன்!”

 

என் விவகாரங்கள் குறித்துப் பேசாமல் நீ அமைதியாக இருஎன்றாள் இரண்டாமவள்.

இவற்றை எவரிடமும் கூறியதில்லை! இறைவனுக்கு நன்றி, ஒட்டுக் கேட்பவர்கள் எவரும் இங்கில்லை.

சரி, விஷமனைத்தையும் கக்கப் போகிறேன், அதுதான் எனக்கும் நல்லது.

என் கணவர் சலிப்பேற்படுத்துபவன், கசடு நிறைந்தவன்;

நான் அவனை வெறுக்கிறேன், ஆம், நிஜமாய் அவனை வெறுக்கிறேன்.

, அவன் இளமையானவன், ஆம், வசீகரமானவன், ஆம்

ஒரு பெண்ணிற்கான உயர்ந்த ரக ஆணாக அவன் இருக்கக்கூடும்,

ஏதேனும் ஆசைநாயகியொருத்தியின் படுக்கையில் புரள்பவனாய் இருக்கக்கூடும்.

ஆனால் அது நான் அவனைச் சந்திப்பதற்கும் முன்னர்.

முடிவாக, அவன் முற்றிலுமாய் உறிஞ்சியெடுக்கப்பட்டு, வறண்டு விட்டான்!

நடந்து நடந்து அறுந்துபோன பழைய காலணிகள் போல்,

அவனுடைய பொருள் உபயோகமற்று, தேய்மானம்கொண்டு பழுதுபட்டுவிட்டது.

! மருத்துவர்களை, உடல் உருவி மசாஜ் செய்தலை, மாத்திரைகளை, இயக்குநீர் சுரப்பிகளை, மனோவியலைக் கூட முயன்றுவிட்டோம்ஆனால் மகிழ்ச்சியேயில்லை.

நீங்கள் நம்புவீர்களா, அவன் தொடர்ந்து முயன்றுகொண்டுதான் இருக்கிறான்!

உறவுக்கான சில துவக்க வேலைகளை 

என் படுக்கையிலேயே அவன் முயல்வதையும்

நான் கண்டிருக்கிறேன்.

 

அவனுக்கு இனி அதற்கான வாய்ப்புகளே இல்லை. எனினும் அவன் மிக நன்றாக உடுத்திக் கொள்வான், மங்கையர் விரும்பிடும் நிஜமான ஆண்போல் நடந்துகொள்வான்அவன் எந்நேரத்திலும் நமக்காய் தயாராய் இருப்பதாய் நாம் நம்புமாறு நடந்துகொள்வான். இடைவெளியே இல்லாமல், ஒரு பெண்ணை தொடர்ச்சியாய் பத்துமுறை உச்சமடைய வைத்ததைப் பற்றி எப்போதும் தற்பெருமை பேசிக் கொள்வான்.

வார்த்தைகள், அனைத்தும் வெறும் வார்த்தைகள்.

சிறுநீர் கழிக்க விருப்பமில்லையெனினும், புதர்களை முகர்ந்து கொண்டே சென்று தன் காலைத் தூக்குவதை தவிர்க்கமுடியாத நாயைப் போன்றவன் அவன். ஆனால், முன்னரே நான் கூறியதுபோல், அவன் வசீகரமானவன்

உயரமானவன், கருத்தவன், கவர்ச்சியானவன்பேரழகன், பார்வைக்கு.

நாங்கள் திருமணம் முடித்தபோது நான் மிக இளமையானவள், எனக்கு ஒரு இரத்தினக்கல் கிடைத்தது போல், அணிகலன் கிடைத்ததுபோல் எண்ணினேன்ஆனால் பிரகாசிக்கும் ஒரு குப்பையாகத்தான் அவன் இருந்தான்.

 

    ஆம், வேலண்டைன் தினத்தன்று பறவைகள் எவ்வாறு தமது புதிய துணைகளைத் தேர்வு செய்கின்றன எனப் பலர் கூறுவதை  நினைவுகூர்கிறேன், எத்தனை பிரமாதமல்லவா அது.

என்னாலும் அவற்றைப் போலச் செய்ய முடிந்தால், பிப்ரவரி மாதம் வரை நான் காத்திருக்க மாட்டேன்எனது கால்களை, எனது புதிய ஆணின் இடையில் இட்டுக் கட்டிக் கொள்வேன், அக்கம்பக்கத்தினர் கூறுவது குறித்து யாருக்கென்னக் கவலை?

 

என்னுடைய குடும்பத்தினர்தாம் என்னை இதனுள் தள்ளினார்கள், அவர்கள் அனைவரையும் நான் வெறுக்கிறேன்

என் இன்பங்கள் குறித்து வெகு ஆர்வமாகவும், ஏதுமறியாதவளாகவும்

இருந்தேன் (யார்தான் அவ்வாறு இருக்கமாட்டார்கள்? அது மனித இயல்பு!)

ஏக்கத்தினால் என்னால் உறங்க முடிந்ததில்லை. சிலநேரங்களில்

நான் அழுவேன். அப்போது என்னை அவன் தன் கரங்களில் ஏந்திக்கொள்வான்

( இறையே, அவனிடம் தளர்வுற்று இருக்கும் அவன் பொருள், என்னைக் குத்துவதை என்னால் உணரமுடிகிறதே!) பின் அவன் கூறுவான்:

பாவம் நீ என் அன்பே! உன்னால் உறங்க முடியவில்லை போலிருக்கிறதே?” 

அவன் எதையேனும் முயன்று விடுவானோ என நான் அஞ்சினேன்

நீங்கள் அறிவீர்களா? – மற்ற அனைத்து முயல்வுகளும் தோற்றுவிடின் அது இயற்கைக்கு மாறாக அமைந்து விடக்கூடும், எனவே நான் கூறினேன்,

இல்லை, அன்பே, என்னைத் தொடாதீர்கள், எனக்கு நெஞ்செரிச்சல் உள்ளது.”

    மிகவும் உண்மை.

என் இதயத்தில் நெருப்பு இருந்தது.

ஆனால், என்னால் அவனைப் பொறுத்துக்கொள்ள முடியாவிடினும், இளித்தபடி அவனைத் தாங்கிக் கொள்ள வேண்டும்.

தன் தாய் கூறியதைப் போலஅதுவலிக்கும் எனவெண்ணி, அதனை அஞ்சி விலகும் பெண்ணொருத்திதான் அவனுக்குச் சரியானப் பெண்ணாக இருக்க முடியும்

அவளுக்கு எக்காலத்திலும் கவலையே இராது! அவ்வப்போது அவன் தரும் சிறு தொடுதலின் இன்பங்களிலேயே மகிழ்வுறும் பெண்ணைத்தான் அவன் மணந்திருக்க வேண்டும், அப்போது நான் கரகரப்பான குரலினையுடைய ஒரு முரடனுடன் என் படுக்கையின் மீது ஏறுவேன்!”

 

அவள் பேசி முடித்தபோது மீண்டும் ஒருமுறை அப்பெண்கள் வெடித்துச் சிரித்தனர்

தமது துயரங்களை பசும் இலைகளுக்குள் புதைத்தபடி.

உண்மையான பாவ மன்னிப்பு கேட்பதற்கான என் முறைஎனக் கூறினாள் விதவைப்பெண்.

பெண்களே! இப்போது நான் கூறப்போவதைக் கேளுங்கள்,

ஆண்களைக் கையாள்வது குறித்து நான் கூறுவேன், நான் கூறவருவது என்னவெனில்,

நானும் ஒழுங்கீனமானவள்தான், ஆனால் அதை மறைக்க எனக்குத் தெரியும்!

ஆண்கள் மணந்துகொள்ள விரும்பும் ஒரு பெண்ணாகத்தான் நான் இருந்தேன்,

நான் கூறவருவதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள் தானே.

நல்ல பெண், குடும்பப் பாங்கானவள்,

முட்டாள்கள்!

 

       எனது அறிவுரையை எடுத்துக்கொள்ளுங்கள்

தவறுகளில் இருந்து விலகியிருங்கள். “லிட்டில் வுமன்போல இருங்கள்.

செய்யச் சொன்னவற்றைச்  செய்யுங்கள்குரலை  உயர்த்தாதீர்கள்உங்கள் எண்ணங்களை  உங்களோடே  வைத்துக்கொள்ளுங்கள்

பின்னர்  உங்கள்  கணவனை  நீங்கள்  அடக்கி  ஆளலாம். அவனுடைய வாழ்வைத் துயர்மிகுந்ததாக நீங்கள் மாற்றுவீர்கள், எனினும் அவன் உங்களை மேலும் காதலிப்பான். உங்கள் தோற்றத்தை மேம்படுத்துங்கள், நன்றாக உடுத்துங்கள்உங்கள் கணவர்தாம் இவற்றுக்கான செலவுகளை ஏற்கப்போவதால், உங்களுக்கு எந்தச் செலவுமில்லை

     எனக்கு இரு கணவர்கள் இருந்தனர், இருவரும் என்னைக் காதலித்தனர்

நான் அவர்களைப் புறக்கணித்தபோதும், அது அவர்களுக்குத் தெரியவில்லை.

     முதலாமவன், இறப்பிற்கு அருகிலிருந்த ஒரு முதியவன். பழைய பஞ்சாங்கம் என நான் அவனை அழைப்பேன். முதுமைத் தளர்ச்சிக்கே உரிய அழுகலின் உருவகம் அவன். பலமாக இருமி, சுயகட்டுப்பாடின்றி, கோழையை எங்கும் துப்புவான், ஆனால் நான் என்ன நினைக்கிறேன் என்பதை அவன் அறிந்ததேயில்லை. எப்போதும் நான் அவனை முத்தமிட்டுக் கொண்டும், அவனது வாதநோய் பாதிப்பிற்காய் களிம்புகள் தடவிக்கொண்டும், அவனது கேசத்தை வாரிக்கொண்டும் (அங்கே மிச்சமென்ன உள்ளது?) இருப்பேன், அமைதியாக அவனைக் கிண்டல் செய்தபடியே. இதுகுறித்த பலத்த சிரிப்பை அவனுக்கு பின்புறம் சென்று சிரிப்பேன். இம்முதிய முட்டாளைப் போல வேறு முட்டாள் இல்லை. அவனது தோல் சுருக்கங்களை நான் அன்புடன் வருடுவதாகவே அவன் எண்ணியிருந்தான்.

    எனக்கும் காதலிற்கான ஒரு பகுதி இருந்தது.

அவனுடைய வாயை எப்படி மூடிக்கொண்டு இருப்பது என்பதையும் அவன் அறிவான்.

முதியவனின் விஷயங்கள் மிகக் கடினமாக ஆகிய பொழுதுகளில்,

எனக்குரிய இன்பத்திற்கான ஒரு பகுதி, அருகிலேயே இருந்தது.

நான் புத்திசாலியாக இருந்தேன். எனக்குரியவற்றை நான் பெற்றேன், அனுபவிக்கவும் செய்தேன்.

மேலும் எனது கணவர், அவர்தாம் என் சிறிய மகனைத் தோற்றுவித்தவர் எனவும் எண்ணிக் கொண்டிருந்தார்.

 

    அவனுக்குப் பிறகு, நான் ஒரு வியாபாரியைத் திருமணம் செய்தேன்.

அவன் நடுத்தர வயதினன், நடுத்தர உயரமானவன்எல்லாமே நடுத்தரமானவன்.

அவனது பணத்தைத் தவிர வேறெதுவும் அவனிடம் தனிச்சிறப்புடன் இல்லை,

அதன் மீது வெகு விரைவிலேயே என் கரங்களை படர விட்டேன்.

நான் எப்போதும் அவனுக்கு இடைஞ்சல் அளித்தபடியே இருந்தேன், அவன் அதனை நினைவில் வைத்திருக்குமாறும் செய்தேன்.

    நாகரிகமற்று அவன் ஒலிக்கும் ஒவ்வொரு நாட்டுப்புறத்தனமான வார்த்தைமீதும் மீதும் நான் பாய்ந்தேன்.

மேசைக்கைக்குட்டையை அவன் பிரிட்டன் வழக்குமொழியில் கூறும்போதும்,

என்னுடன் இருக்கும்போது அவன் பெரிதாய் ஏப்பம் விட்டபோதும்

என்னிடம் நன்றாக வசை வாங்கினான். சாதாரணன் அவன்

பழங்கால வழக்கங்களையுடைய கடைச் சிப்பந்தியிடம் வேறென்ன எதிர்பார்க்க முடியும்?” என நான் கூறுவேன்

 

     எனது முதல்கணவருடன் சேர்த்து, எனது நல்பழக்க முறைகளையும் புதைத்து விட்டேன். எனது முதல் கணவனைப் பற்றி நான் நிறைய பேசுவேன்இவனைத் தாழ்த்துவதற்கெனவே. அவனை நான் திருமணம் முடித்திருப்பதின் மூலம், அவனுக்கு நான் எத்தனைப் பெரிய உபகாரத்தைச் செய்திருக்கிறேன் என்பதை அவனிடமே நேரடியாகக் கூறியிருக்கிறேன், எனது இதயத்திலிருந்த அன்பினால் மட்டுமே அவனை ஏற்றுக்கொண்டதாயும் கூறினேன். என்னிடம் இந்த ஒரு புதிய வரி இருந்தது. அவன் அதில் விழுந்துவிட்டான். அவன் எனது முழு ஆளுகையின் கீழ் இருந்தான். என்னை திருப்தியடையச் செய்வதற்காய் எதையும் கொணரவோ, தாங்கிக்கொள்ளவோ செய்வான்ஆனால் எதையும் அவன் ஒழுங்காகச் செய்ததில்லை.

 

     இது வேடிக்கையான விஷயம்தான்.

நானே தலைவியாகவும் எஜமானியாகவும் இருந்தேன், நானே காட்சிகளை நிகழ்த்தினேன். அவனை அடக்கியாள என்னை அனுமதித்த அவனை நான் புறக்கணித்தேன்!

எப்படி என்னால் அவனை மதிக்க இயலும்?

எனினும், அவனுடைய மனைவி மூலம் அவனுக்குப் பிறந்த குழந்தைகளுக்கு ஏதும் தராமல், எழுத்துப்பூர்வமாய் எனது குழந்தைகளை அவனுடைய வாரிசுகளாக்கும் வரை, அவனை நான் முழுமையாக நிராகரிக்கவில்லை.

 

     பின் அவனை நான் ஓடவிட்டேன்,

அவனை வீட்டில் இருக்க வைத்து, வீட்டின் வேலைகளைச் செய்யவைத்து,

அவனது வியாபாரத்தை நான் மேற்கொண்டேன்.

அவன் கேலிக்குரிய பொருளானான்.

பாரீஸ் உடைகள், வாசனைத் திரவியங்கள், நகைகள் என அனைத்துவிதமான சிறந்த பரிசுகளை மட்டுமே கொடுத்து, என்னை விலைக்கு வாங்க அவன் முயன்றான், அவற்றை வேண்டாம் என நான் சொன்னதேயில்லை.

அனைத்தையும் எடுத்துக்கொள், எதையும் கொடுக்காதேஎன வடக்கில் சொல்வார்களே, அவன் பணத்தில் வாங்கிய உடைகளுடன், ஒரு விளம்பரப்பட நாயகி போல் பரவசமாய் உணர்ந்தேன், புது காதலர்களைக் காண வெளியே சென்றேன், அவர்களை கண்டும் பிடித்தேன்.

 

     அவனுடன் படுக்கையில் இருக்கும்போது,

வேறு எவனோவொரு ஆண் என் உள்ளினுள் திணிப்பதாய்

நான் பாசாங்கு செய்துகொள்வேன்.

இல்லையெனில்,

வேறு என்னவிதமான இன்பத்தை அவனிடமிருந்து

நான் பெற்றுவிட இயலும்?

அவனொரு நூற்சுற்றி வைக்கும் கம்பு மட்டுமே.

 

     நல்லது, அவன் இறந்துபோய் இந்நேரம் அழுகியும் போயிருப்பான்

நான் எனது வழியில் இனி அமைதியாக இன்புறலாம்.

தற்போதும் நான் துயரப்படுகிறேன் என

உலகம் எண்ணுகிறது. கருப்பு உடையணிந்து, வெளிறிப் போயிருக்கும் என்னை

விருப்பமுடையவளாய், சஞ்சலம் கொண்ட ஆண்கள் கண்டடைகிறார்கள்.

நான் பக்திப்பழமாக இருக்கிறேன்.

தேவாலயத்திற்குச் செல்கிறேன். எனது பிரார்த்தனைப் புத்தகத்தின் பின்னே மறைந்து கொண்டு, அங்கிருக்கும் அனைத்து அழகான இளைஞர்களையும் பார்வையால் கொத்துவேன்,

எப்போதும் எனது செய்தி அவர்களைச் சென்றடைந்து விடுகிறது.

எனது கணவரின் நண்பர் என்னைக் கண்டால், உடனே சில கண்ணீர்த்துளிகளைச் சிந்துவேன். எனக்காக எத்தனை வருந்துகிறார்கள் அவர்கள்! “அவள் எத்தனைத் துயருற்று இருக்கிறாள் எனப் பாருங்கள்!”

அனைத்தும் சரியாக இருப்பதாய் தோன்றச் செய்யவே நான் விரும்புகிறேன்.

அதுதான் ரகசியம்விஷயங்கள் சரியாய் இருப்பதாய் தோன்றச் செய்யுங்கள்.

உங்களின் நிஜ எண்ணங்களை வெளிக்காட்டிக் கொள்ளாதீர்கள், எச்சரிக்கையுடன் இருங்கள்.

எச்சரிக்கை!

     பாவப்பட்ட என்னை உத்வேகப்படுத்த என ஒரு காதலன் இருக்கிறான், எனினும் நான் நல்லதொரு பெண்மணி என நாடே நம்புகிறது, அற்புதமான விஷயமில்லையா இது?

     ஆனால் அனைத்திலும் சிறந்தது விருந்துகளில் தான் உள்ளது.  

     

அவர்கள் என்னைச் சுற்றிக் கூட்டமாக வருவார்கள்

நானொரு வெகுமதி, நல்லதொரு வேட்டைப்பிடி.

அவர்கள் மிக நன்றாகப் பேசுவர், சின்னஞ்சிறு பரிசுப்பொருட்களை எனக்காய் கொணர்வர்,

பிரசங்கிப்பர், போலியாய் புகழ்வர், இங்கே ஒரு முத்தம், அங்கே ஒன்று

சிலர் உணர்ச்சித்துடிப்புடன் இருப்பர்,

கொடூரமானவர்கள்,

மரப்பலகை போல விறைத்திருக்கும் அவர்களுடைய பொருளை என் கைக்குள் திணிக்க நெருக்கியடித்து வருவார்கள்!

அல்லது என் பின்புறத்தில் அவை அழுந்துவதை என்னால் உணரவும் முடியும்.

நான் கருணையுடையவள், நான் அன்பானவள், காயப்படுத்துவதை நான் விரும்புவதில்லை

எனக்கு அருகில் இருப்பவனை நான் கிள்ளுவேன், வேடிக்கையாகத்தான்,

பின்னால் நிற்பவனின் மீது அழுத்தமாகச் சாய்வேன், மற்றொருவனுடனோ கால்களால் தொட்டு விளையாடுவேன். எதிலிருந்தும் வெகு விலகியிருப்போரைக் கண்டுப் புன்னகைப்பேன்.

     சிறிதளவு ஊக்குவிப்பு எந்தத் தீங்கையும் உண்டாக்குவதில்லை.

     ஒருவனைத் தேர்ந்தெடு அனைவரையும் தேர்ந்தெடுஏன் கூடாது?

எனக்கு நானே எஜமானி.

வேண்டாம் எனக் கூறுமளவு நான் முரட்டுத்தனம் கொண்டவள் அல்ல

 

     இதுவே எனது கதை நீங்கள் கதையின் நீதி மீது கவனம் செலுத்த வேண்டும்!”

அவள் எத்தனை நல்லதொரு ஆசிரியை எனப் பெண்கள் கூறினர்: எதிர்காலத்தில், அவள் கூறியதுபோலவே அவர்கள் செய்யக்கூடும்.

ஜூடாஸ் போல முத்தமிட்டு வருடி, இனிமையுடனும் விவேகத்துடனும் அவர்கள் அவர்தம் கணவர்களுக்கு துரோகமிழைத்து தம் விதவைக்கோலத்திற்காய் காத்திருப்பர்.

இடையில், அவர்களின் தொண்டைகள் மிகவும் வறண்டுவிட்டிருந்தன!

எனவே, அவர்கள் குடித்தனர்.

அவர்களது இனிய இரவின் பின்பொழுது புலர்ந்தது

வானம்பாடிகள் பாடல்படிக்க, மென்மையும் புத்துணர்வும் கொண்ட காலைவேளை உருகியோட, பனி கரைந்து விலகியது. வயல்களில் மணப்புற்கள் பெருகின, வானம் முழுக்கப் பறவைகள் கூட்டமாக சந்தோஷப்பாடல் பாடின. புற்களின் நறுமணமும், ஓடைகளில் நீர்பாயும் ஓசையும் தெளிவாக ஒலித்த அழகிய அந்தக் காலைவேளை

துயருற்றுள்ளோருக்கும் நம்பிக்கையை மீட்டுத் தருவதாக இருந்தது.

அழகியப் பெண்களுக்கான படுக்கைநேரம் அது. மலர்களின் இடையே , கொட்டாவி விட்டபடி வீட்டினை நோக்கி அவர்கள் சென்றனர்.

நீங்கள் இதுவரை செவியுற்ற அவர்களின் உரையாடலை எழுத நான் அமர்ந்தேன்.

 

அன்பார்ந்த வாசகரே, உங்களிடம் ஒன்று கேட்க வேண்டும்.

இவர்களில் ஒரு பெண்ணை நீங்கள் திருமணம் செய்வதுகொள்வதாக இருந்தால்

எவரைத் தேர்வு செய்வீர்கள்?


(மத்திய ஸ்காட்லாந்தைச் சேர்ந்த கவிஞர் வில்லியம் டன்பர் அவர்களின் கவிதையின் நவீன வடிவம்) – (லண்டன் மேகசின் – 1966)

ஏஞ்சலா கார்டர்

தமிழில்: சசிகலா பாபு

 

ஆசிரியர் குறிப்பு:

ஏஞ்சலா கார்டர்: (1940 – 1992)

  இங்கிலாந்தைச் சேர்ந்த ஏஞ்சலா கார்டர், ஆங்கில நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர், கவிஞர், பத்திரிகையாளர் எனப் பன்முகங்கள் கொண்டவர். பெண்ணியக் கருத்துகள், மாய எதார்த்தவாதம், துணிகரமும் தர்க்கரீதியான செயல்பாடுகளும் கொண்ட கதைமாந்தர்களைக் கொண்ட புனைகதை வகைமையும் இவர் எழுத்தின் பிரத்யேக அம்சங்களாய் விளங்குகின்றன.

சசிகலா பாபு:
உயிர்மை வாயிலாக ”ஓ.ஹென்றியின் இறுதி இலை”, காலச்சுவடு வாயிலாக “மறையத் தொடங்கும் உடல் கிண்ணம்” ஆகிய கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். “கல்குதிரை”, “காலச்சுவடு” ஆகிய இதழ்களில் இவரது மொழிபெயர்ப்புகள் வெளியாகியுள்ளன.
”பெர்சியாவின் மூன்று இளவரசர்கள் – ரோகிணி சவுத்ரி”,
“வார்த்தைகளில் ஒரு வாழ்க்கை – இஸ்மத் சுக்தாய்”,
“பாஜக எப்படி வெல்கிறது – பிரசாந்த் ஜா”,
“சூன்யப் புள்ளியில் பெண் – நவல் எல் சாதவி”,
“குளிர்மலை – ஹான் ஷான்”
ஆகிய இவரது மொழிபெயர்ப்பு நூல்கள் எதிர் வெளியீடு வாயிலாக வெளியாகியுள்ளன.

1 COMMENT

  1. பெண்களின் ஏக்கங்கள் நிறைந்த எதிர்பார்ப்பு ! ஆண்கள் இயலாமை குறித்த வெளிப்படைத்தன்மை!

    தங்கள் மொழிபெயர்ப்பு மூல எழுத்துக்களிலிருந்து அருமையாக நம் தமிழுக்கு பயணப் படுத்தி உள்ளீர்கள்.. மேடம் நன்றி தொடர்க தங்கள் எழுத்துக்களுடன் உலா வரும் கடை நிலை வாசகன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.