மந்திர அடுப்பு – சிறார் கதை


ரு ராஜா அரண்மனையில் ஒரு மந்திர அடுப்பு இருந்தது. ராணி அதில்தான் சமையல் செய்வாள்.

 “அடுப்பே டும் டும்

சமைத்து வை.

அரசர் விருந்து

படைத்து வா”

இந்தப் பாட்டை ராணி பாடினால் போதும். உடனே, அடுப்பு சமைத்துவிடும். ராஜாவுக்கு வேண்டியபடி சாப்பாடு தயாராகும். ராஜாவுக்கு வட்டித்துவிட்டு, ராணியும் உண்ணுவாள்.

ஒரு நாள் ஒரு ராட்சசன் வந்தான். ஒருவருக்கும் தெரியாமல் அரண்மனைக்குள் புகுந்தான். மந்திர அடுப்பைத் திருடிக்கொண்டு போய்விட்டான்.

அன்று ராணி சாதாரண அடுப்பில் சமைத்தாள். சாப்பாடு ராஜாவுக்குப் பிடிக்கவில்லை. ராணியை ராஜா கோபித்துக் கொண்டார்.

 “சாப்பாடு ஏன் நன்றாக இல்லை?: என்று கேட்டார்.

“மந்திர அடுப்பை எவனோ திருடிக்கொண்டு போய் விட்டான். நான் என்ன செய்வேன்?” என்றாள் ராணி.

“சாப்பாடுதான் சுகமில்லை. கொஞ்சம் பாட்டாவது கேட்கிறேன். அந்த ரேடியோவைத் திருப்பி வை”என்றார் ராஜா.

ரேடியோவை ராணி திருகினாள். ரேடியோ பாடவில்லை. பேச ஆரம்பித்தது.

“ஹல்லோ நான் தான் சோர கம்பீர ராட்சச மார்த்தாண்டன் பேசுகிறேன். மந்திர அடுப்பில் வேலை செய்யத் தெரிந்த ஆள் தேவை. யாருக்காவது தெரிந்தால், நம்மிடம் வரலாம். அவர்களை இம்சிக்க மாட்டேன். அவர்களுக்குச் சம்மானமும் தருகிறேன்” என்று ரேடியோவில் ராட்சசன் சொன்னான்.

“பார்த்தாயா, இந்த அயோக்கியப் பயலை. நம் அடுப்பை திருடியதுமில்லாமல், ஆளும் வேண்டுமாமே. என்ன துணிச்சல்” என்று பல்லைக் கடித்தார் ராஜா.

“அப்பா, நான் போகிறேன். ராட்சசனை ஏமாற்றுகிறேன். அடுப்பைக் கொண்டுவந்து விடுகிறேன்” என்றான் ராஜகுமாரன்.

ராணி பயந்தாள். “ஐயோ, ராட்சசன் பொல்லாதவன் ஆச்சே நீ போகப்படாது” என்றாள்.

“பயப்படாதே, அம்மா” என்று ராஜகுமாரன் தைரியம் சொன்னான். பிறகு தன் ஏரோப்ளேனில் ‘கும்ம்’ என்று கிளம்பினான். ராட்சசன் வீட்டில் போய் இறங்கினான்.

“நீ யார்?”  என்று கர்ஜித்தான் ராட்சசன்.

“நான் ஓர் எஞ்சினீயர். மந்திர அடுப்பில் வேலை செய்வேன். அதற்காகவே வந்தேன்” என்றான் ராஜகுமாரன்.

ராட்சசன் சந்தோஷம் அடைந்தான். ‘அடுப்பு அதோ இருக்கிறது. சமையல் செய். பார்க்கலாம்” என்றான்.

ராஜகுமாரன் அடுப்பின் கிட்டப் போனான்.

“அடுப்பே டும் டும்

சமைத்து வை.

அரக்கன் தின்னப்

படைத்து வை.”

என்று மெல்லிய குரலில் பாடினான்.

உடனே, அருமையான பட்சண, பலகாரங்கள் அடுப்பிலிருந்து வெளியே வந்தன. அவைகளை ராட்சசனுக்கு வட்டித்தான். ராட்சசன் தின்றான். ஆனந்தம் கொண்டான். அப்படியே தூங்கிப் போனான்.

‘இதுதான் சமயம் என்று ராஜகுமாரன் நினைத்தான். அடுப்பைத் தூக்கிக் கொண்டான். சந்தடி செய்யாமல் வெளியே கிளம்பினான்.

வாசற்படியில் ராட்சசனின் நாய் இருந்தது. அது  ‘லொள் லொள்’ என்று குரைக்கத் தொடங்கியது.

‘இது ஏதடா சனியன். ராட்சசனை எழுப்பிவிடும் போல் இருக்கிறதே என்று பயந்தான் ராஜகுமாரன்.

 “அடுப்பே டும் டும்

சமைத்து வை

 அரக்கன் நாயை

மயக்கி வை”

 என்று பாடினான்.

உடனே, அடுப்பில் பலவகை மாமிசத்துண்டங்கள் வந்தன. மாமிசம் என்றால்தான் நாய்க்குக் கொண்டாட்டம் ஆச்சே. அது குரைப்பதை நிறுத்திவிட்டது. மாமிசத்தை ஆவலாய்த் தின்னத் தொடங்கியது.

ராஜகுமாரன் ஓட்டமாய் ஓடினான். ஏரோப்ளேனில் அடுப்பை வைத்தான். தானும் ஏறிக்கொண்டான். ‘கும்ம்ம்’ என்று புறப்பட்டு, அரண்மனை போய்ச்சேர்ந்தான்.


– தி.ஜானகிராமன்

 

குறிப்பு:    தி.ஜானகிராமன் எழுதிய இந்தச் சிறார் கதை  இரா.காமராசு மற்றும்  கிருங்கை சேதுபதி ஆகியோரால்  தொகுக்கப்பட்ட  “சிறுவர் கதைக் களஞ்சியம்” எனும் நூலில் இடம் பெற்றிருக்கிறது.

 நன்றி  :  சிறார் இலக்கிய எழுத்தாளர் கொ.மா.கோ. இளங்கோ . இச்சிறார் கதை குறித்து  கனலி -க்கு தெரியப்படுத்தி உதவியமைக்கு அன்பும் நன்றியும் !


 

1 COMMENT

  1. 50 வருடங்களுக்கு முன் தி.ஜா. எனக்கு எங்கள் ஊர் மேட்டுபாளையம் நூலகம் மூலம் அறிமுகம். அவரின் படைப்புகள் எனக்கு எத்துனை ஆத்மபூர்வமானது என்பதை சொல்ல வார்த்தைகள் இல்லை. என்னை போன்று நிறைய வாசகர்கள் அப்படி உள்ளார்கள் என்பதை அறிவேன். அறுபது வயது தாண்டிய பிறகும் அவரின் படைப்புகள் மூப்பெய்தாத எழுத்தாகவே உணர்கிறேன். சிரஞ்சீவி அவர். அவரின் சிறார் கதை (“மந்திர அடுப்பு”) உங்கள் மூலமே எனக்கு அறிமுகம். அதற்காக பிரத்யோகமாக நன்றி. நூற்றாண்டு மலருக்காக அவரின் வாசகனாய் அநேககோடி நன்றிகள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.