மண்ட்டோ படைப்புகள்


        சமூக, கலாச்சார மனதின் துயரங்களிலிருந்து மனிதத்துவ வாசல்களைத் திறந்து காண்பிக்கும் எழுத்துக்கள் 

   மனித கண்ணியத்திற்கான விழுமியங்களைத் தொடர் தேடல்களில் கண்டடைவதே கலை இலக்கியச் செயல்பாடுகளின் மிக முக்கியமான அம்சமாகவும், உள்ளார்ந்த அர்த்தங்களாகவும் ஆகிக்கொள்கின்றன. பெரும் துயரங்களிலிருந்தும், இருள் படிந்த மனதுகளின் ஆழத்திலிருந்தும் தேடி எடுப்பதற்கெனயிருக்கும் சிறு சிறு ஒளிக்கீற்றுகளின் நம்பிக்கைகளையே இவை உள்ளடக்கியிருக்கின்றன. அனைவரும் சமமான மனிதர்களாக நடத்தப்பட வேண்டிய அவசியத்தின் முதல் தத்துவமாகவும், இயங்கியலாகவும் இதுவே இருக்கிறது. சமூக மனதின் சிதைவுகளை எல்லையற்ற சாத்தியங்களின் வழியே அதன் மாபெரும் துயரங்களின் அழகுகளோடு, அதன் அந்தரங்கமான, தனித்தனியான மனித ரத்தங்களின், சதைகளின் வன்முறைகளோடு, அதன் நிர்வாணங்களைக் கலாச்சார அடையாளங்களற்றத் தன்மைகளோடு தன் காலத்தில் கதைகளாக விரித்துக் காண்பித்திருப்பவர் மண்ட்டோ. படைப்பாக்கத்தின் செயல் திறனில் அதுவரையிருந்த தூய்மை வாதங்களையும் போலி சார்புகளின் அழகுணர்வுகளையும், நீதியுணர்வுகளின் மாண்புகளையும் குறியீடுகளையும் முழுவதுமான கருத்தியல் ரீதியான நெருக்கடிகளுக்கு உட்படுத்தி அதன் அவலத்தின் மீது எந்தவிதமான பாசாங்குகளும், இரக்கங்களுமில்லாமல், வரலாற்றின் மூலமான நிர்பந்தங்களின் பாதைகளின் பின்செல்லாமல், அறம் சார்ந்த தேடல்களின் பொருளை உணர்த்துவதின் தன்மைகளான கதைகளாக, சொற்களாக அவைகளின் நிகழ்காலத்திலேயே பொது வெளியில் தொடர்ந்து வைத்து வந்தாரவர். மானுடத் தன்மையின் ஆதாரமான நெகிழ்வுகளின் சொற்களை வெறுமனே உணர்ச்சிகளின் காரணிகளைத் தேடுவதிலிருந்தும், அதன் புரிதலிலிருந்தும் எடுத்துக்கொள்ளாமல் அது தாங்கி வந்திருக்கும் தனித்தனியான உடல்களின் வலிகளிலிருந்தும், அனுபவ மனங்களின் நெருக்கடிகளிலிருந்துமே ஆதாரமாக எடுத்துக் கதைகளென தொகுத்திருக்கிறாரவர். அக்கதைகளின் சாரம்சங்களை உணர்வதற்கான வாசக இதயங்களின் பரிமாணங்களைத் தொலைநோக்குப் பார்வையில் தகவமைத்துக் காட்டியவர் அவர். தத்துவங்களின் இறுக்கங்களையும் நிலைப்பாடுகளையும் பொருட்படுத்திடாத எளிய மனிதயிருப்புகளையும் அதன் இடைவெளியில் நிரப்பிய படியிருக்கும் வெறுக்கப்பட்ட சகலத்தையும் சமூகத்தின் ஒட்டு மொத்த நம்பிக்கை பிறழ்ந்த மனதின் திசைகளுக்கு எதிராக சுயமான சிந்தனைகளெனும் அளவுகோலினால் மிகப் பெரிய வாசல்களை முழுவதுமாக திறந்து விட்டிருக்கிறாரவர். நிறுவப்பட்ட மத ரீதியிலான கருதுகோள்களையும், அதிகார வரம்புகளின் கருத்துருவாக்கங்களையும் ஒரு போதும் ஏற்றிடாத மறுதலிப்பின் நுட்பமான எதிர் அரசியல் தனித்தன்மைகளால் அவரது படைப்புகள் காலம் காலமாக வேறு வேறு அவதானிப்புகளையும் புரிதலுக்கான நோக்கங்களையும் தீவிரத்தன்மையையும் வாசிப்பவர்களிடத்திலும் இந்த சமூகத்திலும் ஏற்படுத்திக் கொண்டேயிருக்கின்றன. தேசப்பிரிவினையின் தீர்ந்திடாத வடுக்களையும், அப்பெருந் துயரத்தின் ரேகை படிந்த உடல்களையும் உண்மைகளின் நெருக்கமான பாதைகளின் வழியே இவரின் எழுத்துக்களைப்போல் அப்பட்டமாகச் சொல்லியவை வேறெதுவுமில்லை. இந்திய வரலாற்றின் தூய்மைக்காகச் செய்த சில இருட்டடிப்புகளையும், மறைமுகத் தரகு வேலைகளையும் அறிந்து கொள்வதற்கு மண்ட்டோவின் எழுத்துக்கள் காலத்தின் சாட்சியாக இருக்கின்றன. தான் வாழும் காலத்திலும் அதற்குப் பிறகான காலத்தின் சூழலிலும் அவரின் பார்வைகளும், கருத்துக்களும், கதைகளும் ஏற்கனவே தொகுக்கப்பட்டிருக்கும் சட்ட விதிகளுக்கு நேரெதிரானத் தன்மைகளையே பேசுபொருளாகக் கொண்டிருக்கின்றன. பெரும் கலவரங்களுக்குள்ளும், ஆபாசங்களுக்குள்ளும், நிர்வாணங்களுக்குள்ளும், குரூரத்திற்குள்ளும் ஒளிந்திருக்கும் அடையாளங்களற்ற மனிதத்தின் அதிர்வுகளையும், அளவற்ற நேசங்களையும், தேடல்களையும், எல்லையற்ற மனிதத்துவத்தையும் மிகத்தனித்துவமான மொழியில் சொல்லித்தருபவை அவரது படைப்புகள். 

  1. சிறுகதைகள் :

   மண்ட்டோ அவர்களின் சுமார் 250க்கும் மேற்பட்ட கதைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 24 கதைகள் இத்தொகுப்பில் இருக்கின்றன. கதாபாத்திரங்களின் விவரணைகளிலும், கதை கூறும் போக்குகளின் விதத்திலும், சொல் நேர்த்தியின் முறையிலும், அவரது தனித்தன்மை எங்கும் துருத்திக்கொண்டு செயல்படவில்லை. மன நெருக்கடிகளுக்கும், மனச்சோர்வுகளுக்கும், சிதறடிக்கப்பட்ட வாழ்விற்குள்ளும் நசுக்கப்பட்டுக் கிடக்கும் மனிதர்களே இவரின் கதைகளின் தீவிரத் தன்மையில் கலந்து தனிமையான உரையாடல்களைத் துவக்கி வைக்கின்றனர். பாலியல் தொழில் சார்ந்த கதைகளின் உலகில் வறுமையும், ஏமாற்றங்களும், துரோகங்களும், நஞ்சுகளும், பேரன்புகளும் போர்த்திய மனிதர்களையே காண்பிக்கிறார். மேலும் கதை நிகழும் சூழலும் இடமும் அளவு கடந்து வர்ணிக்கப்படுவதோ சொல்லப்படுவதோ எப்போதும் இருப்பதில்லை. அவரே கதைகளைச் சொல்லிச்செல்வது போல சில விவரணைகளையும் கவனிக்க முடிகிறது. 

சில கதைகளில் சில முடிச்சுகளையும், வெற்றிடங்களையும் வாசகனின் தனிமையான வாசிப்பையும் புரிதலையும் நோக்கியே விட்டிருக்கிறார். ஒரு பக்கம் சார்ந்த பார்வையின் அடிப்படையிலானது என்று இல்லாமல் மேலும் மோதிக் கொள்ளும் இரு பிரிவினர்களையும் சமன்படுத்தும் நோக்கம் கொண்ட போலி எழுத்து வகை போலல்லாமல் அம்மனிதத் துயரத்தின் இறுகிய வடுக்கள் நிறைந்த காயங்களையும் நிர்பந்தங்களையும், ஆன்மாக்களையுமே அவர் உண்மையான வரலாற்றில் பதிவு செய்திருக்கிறார்.    

  ( I ) இத்தொகுப்பின் முதல் கதை ‘காலித்’ – தன் மகன் காலித் ஒரு வயது முடிவதற்குள் இறந்து விடுவான் என்று தந்தை மும்தாஜுக்குள் ஒரு குரல் சொல்லிக்கொண்டே வருகிறது. மனதிற்குள்ளும் அதற்கு வெளியிலும், குழந்தையின் நோய்மைக்கு மத்தியிலும் அக்குரலை முழுவதுமாக விரட்ட முடியாமல் மனச்சோர்வில் அவன் அமைதியிழந்து தவிக்கிறான். இறுதியில் இறந்து விட்ட தன் மகனிடம் ‘அந்தக் குரலையும் அழைத்துச் செல்லும் படி’ கூறும் போது அவன் தலையை அசைத்துச் சரி என்று சொன்னதாக சத்தியம் செய்கிறான் என்று முடித்திருக்கிறார். மனதின் எல்லையற்ற குரலின் உரையாடல்களே இக்கதை மேலும் மண்ட்டோ தன் மூத்த மகனின் இறப்பு குறித்து எழுதியது. ‘மூன்றரையனா’ கதை சிறைவாசிகளின் நல்ல அனுபவங்களைப் பேசுகிறது. மண்ட்டோ, நசிர் உரையாடலில் இணைந்து கொள்ளும் ரிஸ்வி – கொலைக் குற்றத்தில் அரசு சாட்சியாக மாறி சிறையிலிருந்து பின் விடுதலையானவன் – தன் நேரடி அனுபவங்களைச் சொல்கிறான், அதில் மூன்றரையனா திருடியதற்காக ஒரு வருட காலம் சிறையிலிருந்த பாகு – குப்பைகளை அள்ளுபவன் – நீதிபதி முன்பு கரீம் தனக்கு இரண்டு மாத சம்பளம் தரவில்லை, எனக்கு வயிறு இருக்கிறது அதற்குப் பசிக்கிறது அதனால் அவரிடம் திருடிவிட்டேன் என்று உண்மையைச் சொல்லியும் தண்டனை பெறுகிறான். நீதி தேவன்களின் நடவடிக்கைகள், மாண்புகள் என உரையாடல் நடந்தாலும், ரிஸ்வியின் நண்பனான ஜார்ஜி ரகசியமாகக் கொடுத்தனுப்பும் பீடிகள் ஒன்று குறையாமலும், கடைசியாக பாகிஸ்தான் பத்து ரூபாய் நோட்டையும் ரிஸ்வியிடன் சேர்க்கும் பாகு வின் நேர்மையான நடவடிக்கைகளும், உண்மையான மனித முகமும் தான் கதையின் அடிப்படையாக அமைந்திருக்கிறது. திருடர்களாக இருந்தாலும் அவர்களுக்குள்ளிருக்கும் தனித்த முகத்தின் மேன்மைகளையே – வைக்கம் முகம்மது பஷீர் மாதிரியே – மாண்ட்டோ சமூகத்திடம் காண்பிக்கிறார். ‘ஜானகி’ கதையில் மண்ட்டோ ஒரு பாத்திரமாக வருகிறார். பெஷாவரிலிருந்து தன் நண்பரான அஜீஸின் காதல் தோழி ஜானகி வேலை தேடி புனே வருகிறாள். மண்ட்டோ அவளை மும்பை திரைத்துறை நண்பர்களான சையது மற்றும் நரைனுக்கு அறிமுகப்படுத்துகிறார். அவள் சையதை தன் தோழனாக ஆக்கிக்கொள்கிறாள், குடிகாரனான அவனை நன்கு கவனித்துக் கொள்கிறாள். திருமணமான அஜீஸை எவ்வாறு கவனித்து வந்தாளோ அப்படியே இவனையும் கவனித்து வருகிறாள், அவ்வப்போது அஜிஸையும் நினைத்துக் கொள்கிறாள். நரைனை வெறுக்கிறாள். ஒரு கட்டத்தில் அஜிஸிற்கு அவள் சையதுடன் இருப்பது தெரியவே அவளை வெறுக்கிறான். சையதும் அவளை வெறுக்கவே தனிமையாக உணர்கிறாள். நோய்மையில் கிடந்த அவர்களை நன்கு கவனித்திருந்தாலும் நிமோனியாவால் அவள் கிடக்கும் போது நரைனும் மண்ட்டோவுமே அவளுக்கு உதவுகிறார்கள். இராணுவத்திலிருந்து திருடிவந்த பென்சிலின் ஊசிகளை அவளுக்குப் போட்டு அவளைக் காப்பாற்றுகிறான். இருவரும் நண்பர்களாகின்றனர். மண்ட்டோ இக்கதையில் சாட்சியாளனாக இருக்கிறார். ஜானகியின் தூய அன்பையும் நேசத்தையும் மனிதாபத்தையுமே இக்கதை விளக்குகிறது. ‘ஜுபைதா’ கதையில் இரண்டாம் தாரமாகத் திருமணம் செய்து கொடுக்கப்படும் ஜுபைதா மகிழ்ச்சியாகத் தனது வாழ்க்கையைத் துவங்குகிறாள் பிறகு குழந்தையில்லாமல் மிகவும் சிக்கலான மனப்பிறழ்வுக்கு உள்ளாகிறாள். அவளின் மன உலகில் எல்லாமுமே அவளது குழந்தையாகவே பாவிக்கத்துவங்குகிறாள். இறுதியில் அவள் கணவன் இலுமுதீன் தன் நண்பனிடமிருந்து எடுத்து வந்து தரும் குழந்தைக்காக தன் பாலற்ற மார்புகளைக் கத்தியால் குத்தி இரத்தம் வடிந்திடும் விரலைக் குழந்தையின் வாயில் வைத்த படியே இறந்து போகிறாள். மனச்சிதைவின் ஆழமான தழும்பை வாசிப்பவரிடத்தில் இக்கதை ஏற்படுத்தி விடுகிறது. ‘கழுவேற்றப்படுதல்’ மரணத்தின் தீர்ந்திடாத சிந்தனைகளின் படிமங்களையும் அதன் கோரமான முகங்களையும் பேசுகிறது. வாழ்விற்கும் மரணத்திற்கும் இடையிலிருக்கும் ஆன்மீக எல்லைகளை ஒரு புத்துணர்வோடு சொல்லிச் செல்கிறது. பஞ்சங்கள், யுத்தங்கள், அரசியல் நீட்சியான கலவரங்களில் மரணங்கள் எப்படி சந்தையாக்கப்பட்டு வருகின்றன என்பதைத் தொட்டுச் செல்கின்றன. வங்காளத்தில் ஐந்நூறு ரூபாயிற்கு விற்கப்படும் சகினாவை வாங்கியவன் கல்கத்தாவிலிருந்து லாகூருக்கு அழைத்து வந்து அவளைத் தொழிலில் ஈடுபட வைக்கிறான். அங்கு வரும் அழகான வாலிபனை நம்பி அவனோடு செல்கிறாள். அவனது தேவைகள் தீர்ந்த பிறகு அவள் லாகூரின் பஜாரில் பசியுடன் அலைகிறாள். திடீரென ஒரு வீட்டிற்குள் நுழைந்து உணவுகளைச் சாப்பிடுகிறாள். அந்த வீட்டிலிருந்த காசநோய் பாதித்த பேராசிரியர் அவளை மிகுந்த கரிசனம் கொண்டு நடத்துகிறார், அவளை விட்டு விலகியேயிருக்கிறார். ஆனாலும் உடல் நலிவுற்று இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு சகினாவிடம் ‘நீ வீட்டிற்கு வந்த நாள் முதல் நான் உன்னை நினைத்து ஏங்காத நிமிடங்களே இல்லை’ என்று தன் மனதில் உறுத்திக்கொண்டிருக்கும் பெரும் உண்மையைச் சொல்லிவிடுகிறார். மேலும் அதற்குப் பிறகு சகினா அவரை சந்தோசமாகவே வைத்திருந்திருக்கிறாள். மனித மனங்களில் எப்போதும் தங்கிக்கிடக்கும் எல்லையற்ற பொய்களையும் அதற்கும் உள்ளிருக்கும் தெளிந்த நற்பண்புகளையுமே இக்கதை உணர்த்துகிறது.

‘மம்மி’ கதை, சினிமா கம்பெனியுடனான தகராறு காரணமாக பம்பாயிலிருந்து தன் மனைவியுடன் மண்ட்டோ புனே சென்று சில காலம் தன் பழைய நண்பர்களுடனும் மேலும் புதிய சில நண்பர்களுடனும் சேர்ந்திருந்த தினங்களின் ஊடாக கண்டடைந்த திருமதி. ஸ்டெல்லா ஜேக்ஸன் என்ற கருணையும் அன்பின் உருவமுமான மம்மியைப் பற்றியது. கணவர் ஜேக்ஸனை முதல் உலகப்போரில் பறிகொடுத்து விட்டு அவருக்கான ஓய்வூதியத்தைப் பெற்று புனேவில் வசித்து வருபவர். எல்லோரையும் அரவணைத்துக் கொள்ளும் அவரின் அளவில்லாத நேசங்களையும், மனித மாண்புகளையும், எல்லைகள் மீறிடாத அவரின் மதுக்கொண்டாட்டங்களையும், அவரைச் சுற்றியிருந்த ஆண்களின் மனதிலிருந்து தீயவைகளை வெளியேற்றிக் கண்ணியங்களைக் கற்றுத்தரும் தீர்க்கமான பார்வைகளையுமே மண்ட்டோ நமக்குக் கடத்துகிறார். மண்ட்டோவால் உருவாக்கப்பட்டிருக்கும் பெண்கள் – ஜானகி, சகினா, மோஸல், சுகந்தி, சுல்தானா, மம்மி – சமூகம் சார்ந்த அடிப்படைகளின் மீது தீவிரமான சுயமான பிரக்ஞைகளைக் கொண்டிருந்தனர். ஏமாற்றங்களையும் அதற்குள்ளிருக்கும் மனிதர்களையும் தெரிந்து வைத்திருந்தனர் மேலும் மனிதத் தன்மை குறித்த சிறந்த கேள்விகளை அவர்களின் செயல்களால் மற்றவர்களுக்கு உணர்த்திக் கொண்டிருந்தனர். அன்பின் எல்லையற்ற உணர்வுகளையும் தருணங்களையுமே எப்போதும் நம்பிக்கொண்டிருந்தனர். ‘சஹாய்’ கதையில் மதக்கலவரங்கள் பின்னப்பட்டிருந்தாலும் அதன் அடியாழத்தில் தனித்துக்கிடந்த மனிதத்துவத்தையே வெளிக்கொண்டுவருகிறது. நான்கு நண்பர்களுக்குள்ளான உரையாடலின் வடிவமான இக்கதையில், லாகூரில் மதக்கலவரத்தில் அவன் மாமா இறந்ததை அறியும் ஜூகல் இங்கு கலவரம் வந்தால் அவன் நண்பர்களுள் முஸ்லீமான மும்தாஜை அதற்கு பழிதீர்ப்பதற்காக கொல்வேன் என்று சொல்லிவிடுகிறான். ஆழ்ந்த பொருளும் துயரமும் நிரம்பிய அவ்வலியால் மும்தாஜ் பாகிஸ்தானுக்கு சென்றுவிடுவதற்கு முடிவுசெய்கிறான். மேலும் மனிதற்குள்ளிருக்கும் இந்த மதங்களை எந்த கருவியாலும் அழிக்கவே முடியாது என்கிறான். மேலும் சஹாய் என்ற பாலியல் தரகனின் மனது தான் இங்கு எல்லாவற்றையும் விட மிகவும் சுத்தமானதாகவும் உயர்வானதாகவும் சொல்கிறான். சஹாயிடம் தொடர்பிலிருக்கும் பெண்களை அவன் மிகுந்த கண்ணியத்துடனும். மதிப்புடனும் நடத்துவதாகவும் சொல்கிறான். சஹாய் கலவரத்தில் தாக்கப்பட்டு சாகும் தருவாயில் தான் சந்திக்க நேர்ந்த போதும் அவனின் சட்டைப்பையிலிருந்து கொஞ்சம் நகைகளையும், பன்னிரண்டு ரூபாய்களையும் பாலியல் தொழிலாளியான சுல்தானா விடம் சேர்க்கச் சொல்லிவிட்டே இறந்து போனதாகவும் சொல்கிறான். இறுதியில் ஜுகல் சஹாயின் ஆன்மாவாக இருக்க விரும்புவதாகச் சொல்கிறான். உயரிய பண்புகளெனப்படுவது மத்திய தர வர்க்கத்திற்கு மட்டுமேயானது என்ற குறியீட்டை மண்ட்டோ – ஏறக்குறைய எல்லாக்கதைகளிலும் – தகர்த்து எறிகிறார். ‘கடவுளின் கடமையைச் செய்தல்’ கதை குஜராத்திலிருந்து பாகிஸ்தானுக்குக் குடிபெயர்ந்துவிடும் ஏமாற்று வியாபாரி ஒருவனின் மனநெருடல்களின் குரல் தான். ஏழை மக்களின் இருப்பையும், அவர்களின் இறப்புகளையும் எள்ளி நகையாடும் எதிர் விமர்சன வகையிலானது இக்கதையின் வடிவம். ‘ஒரு நாள்’ கதை ஏழை நெசவாளியும் நாடோடிப் பாடகனுமான கபீர் தன்னை சூழ்ந்திருக்கும் மக்களிடத்தில் அழுதுகொண்டும் சிரித்துக் கொண்டும் சொல்வது மிகுந்த அர்த்தங்கள் நிறைந்த வரிகளால் சூழப்பட்டிருக்கிறது.

   மண்ட்டோ தன் காலத்தின் பாதைகளிலிருந்த முட்களையும், பூக்களையும் ஒருசேர எழுதினார். பூக்களின் வாசனைகளைப் போலவே முட்களின் இருப்பையும், அதற்கான தேவையையும், அதிலிருந்த கடினம் மிகுந்த அதன் ஆன்மாக்களின் நிலைகளையும் நம் பரப்பிற்கு அருகினில் எடுத்து வந்து காட்டியிருக்கிறார்.  

( II )  தேசப் பிரிவினையின் போது நிகழ்ந்த சம்பவங்களின் அடிப்படையிலான கதைகளான ‘திற’ கதையில் குடல் தனியே கிடக்க இறந்து கிடந்த மனைவியை விட்டு விட்டு சிராஜூதீனும் அவள் மகள் ஷகினாவும் வெறும் காலோடு அம்ரித்சரை விட்டு ஓடிக்கொண்டிருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் தொலைந்து விடும் ஷகினா கடைசியில் நினைவிழந்து முகல்புரா மருத்துவமனையில் கிடக்கும் போது மருத்துவரின் ‘திற’ என்ற சொல்லைக் கேட்டு மெதுவாக அசைந்து அவளின் சல்வாரை அவிழ்த்திடும் கணத்தில் இந்த தூய்மை சமூகம் வெட்கித் தலைகுனிகிறது. அவளின் தந்தை சிராஜூதீன் என் மகள் உயிரோடிருக்கிறாள் என்று கத்திக்கொண்டு வருவது தான் மனிதத்துவத்தின் மீதியாக இச்சமூகத்திற்குச் சொல்கிறார். உடல்கள் மீது ஏற்படுத்தப்பட்டிருக்கும் வன்முறைகளை வெறுமனே காட்சிப்படுத்தாமல் அதன் அர்த்தங்களைச் சொல்லியே பிரிவினையின் போது சூறையாடப்பட்ட ஒட்டு மொத்த மக்களின் வாழ்வுகள், இழந்த உறவுகள் குறித்த பெரும் கேள்விகளையே இந்த சமூகத்திடம் கேட்டுக்கொண்டிருக்கிறார். ‘குருமூக்சிங்கின் கடைசி விருப்பம்’ கதை அம்ரித்சர் நகரம் மதக்கலவரத்தினால் பற்றியெரிந்த துயரத்தை உள்ளடக்கியது. நீதிபதி மியான் அப்துல் ஹாயி விடம் உதவி பெற்ற குருமூக்சிங் அவரிடம் மிகுந்த நன்றிக்கடன் பட்டவராகயிருந்தார். கடந்த பத்தாண்டுகளாக ரமலான் பண்டிகையில் இனிப்பான ‘சவாயான்ஸ்’ ஸை ஹாயி வீட்டிற்கே எடுத்து வந்து கொடுத்துக்கொண்டிருந்தார். ஆனால் இந்த ரமலானில் நகரம் எரிந்து கொண்டிருக்கிறது, ஓய்வு பெற்ற துணை நீதிபதி மியான் அப்துல் ஹாயி பக்கவாத நோயினால் படுத்திருக்கிறார். அவரது மகளும் மகனும் வயதான வேலைக்கார கிழவரும் பயந்தபடியே வீட்டினுள்ளே இருக்கிறார்கள். குருமூக்சிங் இறந்து விட்டதால் மகன் சந்தோஷ் ஓய்ந்திடாத கலவரத்திலும் இனிப்பான ‘சவாயான்ஸ்’ எடுத்து வந்து தருகிறான். கடைசியில் ஜட்ஜ் ஹாயி வீட்டை நோக்கி – தாடியைப் பாதுகாப்பு கவசம் கொண்டு கட்டியிருந்த – நாலு பேர் கைகளில் எரிந்து கொண்டிருந்த தீப்பந்தங்களுடனும், மண்ணெண்ணெய் டின்கள் மற்றும் வெடி மருந்துகளுடன் முன்னேறுகின்றனர். சந்தோஷ் அவர்களிடம் ‘உங்கள் இஷ்டம்’ என்று நடக்கத்துவங்குகிறான். கதை முடிகிறது வாசகன் அதன் அர்த்தத்தை உணர்ந்து கொள்ளவதற்கென விட்டு விடுகிறார். ‘கடவுள் மீது சத்தியமாக’ கதை முழுவதும் பிரிவினையில் தொலைந்துவிட்ட, கடத்தப்பட்ட, மற்றும் காதலர்களோடு சென்றுவிட்ட பெண்களின் அவலங்கள் பற்றியும் அவர்களைத் தேடிக்கொண்டிருக்கும் உறவுகளின் அக மனம் சார்ந்த நெருக்கடிகளையும் பேசுகின்றன. ‘மீட்டெடுக்கப்பட்ட பெண்கள் வந்து கொண்டிருக்கிறார்கள், மீட்டெடுக்கப்பட்ட பெண்கள் போய்க்கொண்டிருந்தார்கள்’ என்ற வரியில் விரிந்திடும் துயரங்கள் தான் பிரிவினையின் போது நிகழ்ந்த கொடுமைகளைப் புரியவைக்கின்றன. வயது முதிர்ந்த ஒருவள் தன் எல்லாவித இயலாமைகளுடனும் அவள் மகளைத் தேடியபடியே இருக்கிறாள். கடைசியில் தன் அழகு நிறைந்த மகளை சீக்கியனுடன் பார்க்கும் போது அவள் தன் தாயைத் தவிர்த்துவிட்டுச் செல்லும் அத்துயரத்தில் அந்த வயது முதிர்ந்த கிழவி அதிர்ச்சியில் செத்து விழும் கணத்துடன் முடிகிறது. ‘ஷரிபான்’ கதையில் வன்முறையினால் தன் மனைவியை இழந்து மேலும் வீட்டின் முற்றத்தில் தன் மகள் ஷரிபானின் உயிரற்ற நிர்வாண உடலைப் பார்த்து வெறிகொண்டு திரியும் காசிம் கோடாலியுடன் கண்களில் படும் எதிரிகளை இரக்கமில்லாமல் வெட்டிச் சாய்க்கிறான். இறுதியில் ஒரு இந்து வீட்டிற்குள் நுழைந்து அதிலிருந்த பெண்ணைப் பழிதீர்க்கிறான். அசைவற்றுக் கிடக்கும் அவளின் நிர்வாண உடலைப் பார்த்து கண்கள் திறக்க முடியாமல் நடுங்கிப் போய் போர்வையை எடுத்து அவளை மூடுகிறான். கையில் வாளுடன் உள்ளே நுழைந்திடும் மனிதன் காசிமை  யாரெனக் கேட்கிறான், காசிமோ கைகளை நீட்டி ‘ஷரிபான்’ எனச் சொல்லி வெளியேறுகிறான். அந்த மனிதன் பாய்ந்து அப்போர்வையை நீக்கி அந்த உடலைப்பார்த்து வாளைக் கீழே போட்டு விட்டு ‘பீம்லா..பீம்லா..’ என்று கத்திக்கொண்டே வெளியே ஓடுகிறான். வன்முறைகளும் அதன் எதிர்வினைகளும் மனித மனங்களில் ஒரு கட்டத்திற்கு மேல் இறுக்கமான பைத்தியத் தன்மைகளையே உருவாக்கி விடுகின்றன. அதற்கு மேல் அதில் ஒன்றுமே இருப்பதில்லை. ‘மோஸல்’ கதையில் தீர்க்கமான மத நம்பிக்கைகளின் அடிப்படைக் கூறுகளை அதன் அடையாளங்களை அறம் சார்ந்த கேள்விகளால் தொடர்ச்சியான நெருக்கடிக்கு உள்ளாக்கியிருக்கிறார் மாண்ட்டோ. மதக்குறியீடுகள் கதை முழுவதும் இருந்தாலும் அவைகளை வாசகனுக்கு வெறுமனே அதன் நம்பிக்கைகள் சார்ந்த சிறிய அளவுகோலின் வட்டமாகச் சுருக்கிச் சொல்லாமல் அதனுள்ளிருக்கும் சிதறுண்ட மனித மனங்களின் இருளையும், மனிதத்துவத் தன்மைகளையுமே பொதுமைப்பட்ட ரத்த சாட்சியாக விவரித்திருக்கிறார். பஞ்சாபில் நடந்து கொண்டிருந்த வெறியாட்டங்களுக்காகப் பம்பாயில் தொடர்ந்த மதக் கலவரத்தில் நிகழ்ந்திடும் துயரம் மிகுந்த இச்சம்பவங்களுக்குள் ஒளிந்திருந்த அன்புகள் நிறைந்த, கருணை மிகுந்த ஒரு பரப்பை மண்ட்டோ இக்கதையில் காண்பித்திருக்கிறார். ‘இது 1919-ல் நடந்தது’ கதை ரயிலில் சக பயணி மண்ட்டோவிடம், 1919ல் நடந்த ஜாலியன் வாலாபாக் படுகொலையின் பின்னணியிலிருந்த நிகழ்வுகளைச் சாட்சியாக மாறி சொல்வது தான். ஆனாலும் அந்த கலவர தெருக்களில் இறங்கி நடந்து செல்வது போலவும் அத்துயரமான சம்பவங்களைக் கண்களின் வழியே பார்த்துக்கொண்டிருப்பது போலவும் மண்ட்டோ காட்சிகளை நுட்பமாகச் செதுக்கியிருக்கிறார். தய்லா கஞ்சிர், மற்றும் அவரது தங்கைகளான ஷம்ஷாத், அல்மாஸ் – விலை மாதுவின் குழந்தைகள் – எவ்வாறு ஆங்கிலேயர்களுக்கு எதிரான இக்கலவரங்களில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டார்கள் என்றும் பிறகு ஏன் அவர்கள் எந்தத் தியாகிகளின்  பட்டியல்களிலும் வரமுடியாமல் போனார்கள் என்ற கேள்விகளின், இருட்டடிப்புகளின் சாரம்சமே இக்கதை. வெள்ளைச் சிப்பாய்களின் தோட்டாக்களை வாங்கியும் முன்னேறிச்சென்று இறந்துபோகும் தய்லா கஞ்சிரும், இறுதியில் வெள்ளையருக்கான கொண்டாட்டத்தில் தங்கள் உடல்களையே ஆயுதங்களாக்கி, அவர்களின் முகத்தில் காறி உமிழும் தய்லாவின் சகோதரிகளும் எப்போதும் மனதில் தங்கி விடுகின்றனர். ‘சுதந்திரத்திற்காக..’ கதையில் சுதந்திரப் போராட்டங்களின் பின்னணியில் சாதாரண மனிதனுக்குள் நிகழ்ந்திடும் மனமாற்றங்களையும், தலைவர்களின் நம்பிக்கைத்தன்மையற்ற நிலைகளையும் மேலும் பாபாஜியின் ( பாபுஜி என அழைக்கப்பட்ட காந்தியை, மண்ட்டோ அவரின் தியானம், ஆசிரமம், பஜனைகள் போன்றவற்றின் எதிர்-அரசியல் சார்ந்தே பாபாஜியாக கதையில் நிலைநிறுத்துகிறார்.) கள அரசியல் மற்றும் ஆசிரம அரசியல் சார்ந்த நிலைப்பாடுகள் சாதாரண மனிதர்களுக்குள் தொடங்கிவைக்கும் நுட்பமான மாற்றங்களையும் அதன் விளைவுகளையும் தீர்க்கமாகச் சொல்லிச் செல்கிறார். மேலும் கதையின் மையமான குலாம் அலி மற்றும் நிகார் திருமண நிகழ்விற்குப் பிறகான இயற்கையான உடல் சார்ந்த தேவைகளின் அடிப்படையிலான விஷயங்களால் எவ்வாறு மாற்றங்கொண்டு அப்பாதைகளிலிருந்து விலகுகிறார்கள், மேலும் அவன் நேசித்த பாபாஜியின் உடல் சார்ந்த சிந்தனைகளை எவ்வாறு அவன் கேள்விக்குட்படுத்துகிறான் என்ற நுட்பமான பதிவுகளைக் காணமுடிகிறது. இயற்கைக்கும், உடலுக்கும், காதலுக்குமான உறவில் இரப்பர் உறைகளின் தேவையற்ற இருப்பை கச்சிதமாக, பாபாஜியின் உடலரசியல் கொள்கைக்கு எதிர்-அரசியல் விமர்சனமாக மண்ட்டோ கலைப்படைப்பாக்கியிருக்கிறார். மேலும் ஜாலியன் வாலாபாக் பூங்காவில் அப்படுகொலையின் துயரங்களுக்குப் பிறகான சில வருடங்களில் சமூக மன மாற்றங்களை ஒரு குறியீடு போல கதையில்  உள்செலுத்தியிருக்கிறார் மண்ட்டோ. ‘சில்லிட்டுப் போன சதைப் பிண்டம்’ கதையில் நடந்து கொண்டிருக்கும் வன்முறைகளின் ஊடாக குறியீடுகள் நிறைந்த மனிதர்களின் கௌரவங்கள், சிதைக்கப்பட்ட மனிதர்களின் வழியிலும் எவ்வாறு தொடர்ச்சியாகப் பாதுகாக்கப்பட்டு வந்திருக்கிறது என்ற அவலத்தைப் பேசுகிறது. ஆறு எதிரிகளைக் கொன்றுவிட்டு அவ்வீட்டிலிருந்து அழகிய பெண்ணொருத்தியை தூக்கி வரும் ஐஷர்சிங் அவளை  சில்லிட்ட சதைப் பிண்டமாகும் வரை அனுபவிக்கிறான். பிறகு தன் மனைவி குல்வந்த் கௌர் உடன் உடலுறவு கொள்ள முடியாத நிலையில் அவன் வேசியுடன் தான் தொடர்பு வைத்திருப்பதாக நினைத்து தன் வாளால் அவன் கழுத்தை அறுக்கிறாள். மரணம் தழுவிக்கொண்டிருக்கும் போது நடந்தவைகளை சொல்லி அவளின் கைகளைக் கேட்கிறான். அவள் ஐஷர்சிங்கின் கையைத் தொடும் போது அது சில்லிட்டிருக்கிறது.    

‘கடைசி சல்யூட்’ கதை ஒரே தேசத்தின் மக்களாக இருந்து முதல் உலகப்போரில் பொது எதிரியிடம் சண்டையிட்ட – ஒரே ரெஜிமென்ட்டை சேர்ந்த – நண்பர்களான ரப் நவாஸ் மற்றும் ராம்சிங் இருவரும் பிரிவினைக்குப் பிறகு காஷ்மீருக்காகத் தங்களது படையுடன் எதிரெதிராக மோதிக்கொள்ளும் துரதிர்ஷ்டவசமான சந்திப்புகளின், உரையாடல்களின் ஆன்மா தான். நவாஸ் பாகிஸ்தானுக்காகவும், ராம்சிங் இந்தியாவிற்காகவும் எதிரெதிரே நிற்கின்ற இடத்திலும் அவர்களின் நட்புகளின் ஆழத்திலிருந்த தூய்மையான நம்பிக்கைகளையே மண்ட்டோ மிகத்திறமையாக வெளிக்கொணர்கிறார். 

      இங்கும் அங்கும் உருவாகித் தவித்த இலட்சக்கணக்கான அகதிகளின் பெருந்துயரங்களையும் அவர்கள் மீது கவிழ்ந்திருந்த மோசமான இருளையுமே மண்ட்டோ ஆவணப்படுத்தினார். இருட்டடிப்பு செய்யப்பட்ட  வரலாற்றின் பக்கங்களை அவர் சுக்குநூறாய் கிழித்து எறிந்தார். மானுட வாழ்வில் நிகழ்ந்த, சொல்லிடவே முடிந்திடாத பெரும் கோரத்தின் ஒவ்வொரு பகுதிக்குள்ளிருந்த காயங்களையும், ஆபாசங்களையும் பொதுவெளிக்குக் கொண்டுவந்தார். மேலும் அவ்வுடல்களுக்குள்ளிருந்த மானுடத் தன்மையின் பண்புகளையே தன் படைப்பின் ஆதாரமான செயல்பாட்டு வடிவமாக நிரூபித்துக்காட்டியிருக்கிறார்.

     பாலியல் தொழிலாளிகளின் கதைகளான ‘அவமானம்’ கதையில் சுகந்தி ஒருவரின் பணத்தேவைக்கு உதவுவதற்காகவே சேட்டுடன் செல்வதற்கு முயல்கிறாள் ஆனால் அவனோ அவளைப் பிடிக்கவில்லையென்று சொல்லிச் செல்வதை நினைத்து ஆத்திரமடைகிறாள். இருளில் பஜாரில் அவள் தனியாக நிற்கும் காட்சி அவள் மனதின் தனிமையான இரகசியத்தையும் வெறுமையையுமே பிரதிபலிக்கிறது. ‘ஹமீதின் குழந்தை’ யில் நாயகி லதா மங்லோகர் திடீரென கர்ப்பமாகிறாள். அவளுடைய அழகில் மயங்கி நீண்ட நாட்களாக அவளுடன் தொடர்பிலிருக்கும் ஹமீது இதனால் கலக்கமடைகிறான், லதாவோ இதற்கு யார் காரணம் எனத் தெரியவில்லை என்கிறாள். எல்லாக் கணக்குகளையும் போட்டுப் பார்த்து அவன் தான் இக்குழந்தைக்குத் தந்தை என ஹமீது முடிவிற்கு வருகிறான். சதை வியாபாரத்தில் இருக்கும் ஒருத்தியின் வயிற்றில் தன் குழந்தை வளர்வதை நினைத்து வெட்கப்படுகிறான், சில நாட்களுக்கு முன் அவளின் அழகை நேசித்தவன் இப்பொழுது முழுவதுமாக வெறுக்கிறான். மனித மனதின் மிகுந்த நஞ்சுகள் நிறைந்த இந்த மாற்றங்களையே இக்கதை சொல்கிறது. மேலும் கடைசியாக அக்குழந்தையின் முகத்தைப் பார்த்துவிட்டுச் சிரித்துக்கொண்டே அதைக் கொல்லாமல் அந்த இடத்திலே விட்டு விட்டுச் செல்வதில் தான் மனித ஆன்மா மிச்சமென இருக்கிறது. ‘கருப்பு சல்வார்’ கதையில் அம்பாலா கண்டோன்மென்டில் தன் தொழிலால் நல்ல முறையிலிருந்த சுல்தானவும் குதாபக்‌ஷும் டெல்லிக்கு வந்த பிறகு வருமானமில்லாமல் வறுமையில் இருக்கின்றனர். சுல்தானா முகரத்திற்காக புதிய கறுப்பு நிற சல்வாருக்காக ஏங்கிக் கொண்டிருக்கிறாள். அந்த ஏரியாவில் சுற்றிக்கொண்டிருக்கும் சங்கர் அவளைப்போன்ற பெண்களிடம் பேசியே ஏமாற்றுபவன். அவளின் கவரிங் கம்மலை வாங்கிச் செல்பவன், கடைசியில் சல்வார் கொடுத்து அவளை சந்தோசப்படுத்துகிறான். அவள் தோழி முக்தரின் காதுகளில் அந்த கம்மலை பார்த்து எதுவும் பேச முடிந்திடாத நிலையில் கதை முடிகிறது. உடல்களை அனுபவித்துவிட்டு உடைமைகளைக் கை மாற்றிவிடும் சங்கர் போலான மனிதர்களையே இக்கதை பேசுகிறது. ‘சாந்தி’ கதையில் விரிந்திடும் மக்பூல் மற்றும் சாந்தி இடையிலான உரையாடல்களும், ரம்மியமான அன்புகள் நிறைந்த செயல்பாடுகளும் மண்ட்டோ என்ற ஈரம் நிறைந்த மனிதனின் தூய்மையான எண்ணங்களையே பிரதிபலிக்கின்றன. ஏமாற்றப்பட்ட பெண்ணின் மன அலைச்சல்களையும், பாலியல் சந்தோசங்களையும் இவ்வளவு பிரக்ஞைப் பூர்வமாக, கலைப்படைப்பாகக் காண்பித்திருப்பது தான் மண்ட்டோவை தனித்துக் காண்பிக்கிறது. மண்ட்டோ மனித மனங்களின் படிந்திருந்த இருண்ட உணர்வுகளின் ஆபாசங்களைத்தான் எழுதியிருக்கிறாரே தவிர ஒருபோதும் போலியான உடல் சார்ந்த ஆபாசங்களுக்காக ஒரு வரி கூட எழுதியதில்லை. ‘குஷியா’ கதையில் பாலியல் தொழிலாளியான காந்தாவை ஏறக்குறைய நிர்வாணமாகப் பார்த்து விடும் தரகன் குஷியாவின் மனதிற்குள் தோன்றிடும் எண்ணற்ற கேள்விகளும், ஆண்மைத்தனம் சார்ந்த சுயபரிசோதனை இடைவெளிகளுமே இறுதியில் வேறொரு ஆள் வைத்து காந்தாவையே தனக்கு ஏற்பாடு செய்து காரில் அழைத்துக் கொண்டு செல்ல வைக்கிறது. ‘நூறு விளக்குகளின் வெளிச்சம்’ கதையில் பிரிவினையின் யுத்தங்கள் முடிந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கல்கத்தாவின் கைஸர் பாக் – செல்வச் சீமான்களுக்குச் சகல சந்தோசங்களையும் கொடுத்துக்கொண்டிருந்த – பகுதிக்கு வரும் ஒருவன் தன் நண்பனுக்காகக் காத்திருக்கும் நேரத்தில் தரகனால் அழைத்துச் செல்லப்படுகிறான். தரகன் ஒரு தொழிலாளியைத் தூக்கத்திலிருந்து எழுப்பிக் கூட்டி வருகிறான். அவளோ தனக்கு ஓய்வுவேண்டும் என்ற மனநிலையில் இருக்கிறாள். அழைத்துச்செல்பவன் அந்தத் தரகனில் தலையில் பெரிய கல்லைத்தூக்கிப் போட்டுக் கொல்லவேண்டுமென்று சொல்லியபடியே அவளை அழைத்துச்செல்கிறான். ஹோட்டலில் அவளைத் தூங்கச் சொல்கிறான், அவனின் இரக்கத்தை அவள் விரும்பவில்லை. திருப்பிகொண்டு விட்டுவிடுகிறான். அவன் நண்பனிடம் எல்லாவற்றையும் சொல்கிறான். பின்னர் பிரிகிறார்கள். அவனின் நண்பன் அவளைத் தேடிய படி அந்த கட்டிடங்களுக்குள் நுழைகிறான். பெரும் வெளிச்சங்களுக்கிடையிலும் அவள் தூங்கிக்கொண்டிருக்கிறாள் அருகில் அந்தத் தரகனின் தலை முழுவதும் நசுக்கப்பட்டுக்கிடக்கிறான். அவனின் அருகில் இரத்தக்கறையுடன் ஒரு செங்கல் கிடக்கிறது. கதையில் பரந்திருக்கும் வெளிச்சம் ஒரு குறியீட்டைப் போல நம்முள் படர்ந்து நம் கண்களைக் கூசச்செய்கிறது.     

   பாலியல் தொழிலில் பெண்கள் உடல் ரீதியான சித்திரவதைகளை அனுபவிப்பதாகவே அவர் சொல்கிறார். 

ஒவ்வொரு கதையிலும் சோகத்தின், ஏமாற்றத்தின் ஆழத்தில் இருக்கும் அப்பெண்களின் கண்களைக் காட்சிப்படுத்துவதற்கு மண்ட்டோ தவறுவதில்லை. அதுவே அவர்களைச் சுற்றியிருக்கும் உறவுகளின், உலகத்தின் நேசங்களற்றத் தன்மையைக் குறிப்பால் உணர்த்துகிறது. இதுவே அவரை மூன்றாம் தர மஞ்சள் இலக்கியவாதி என்று அப்பட்டமாக விமர்சிப்பவர்களுக்கான சிறந்த பதிலாகவும் ஆகிக்கொள்கிறது.

  1. சொற் சித்திரங்கள் :

   ‘கருப்பு கட்டங்கள்’ என்ற இத்தொகுப்பை 1947ல், அவன் செய்த தீய செயல்களை விவரித்தவன், ‘ஒரு வயது முதிர்ந்த பெண்மணியைக் கொன்ற போது ஏதோ கொலையே செய்து விட்டதைப் போல் உணர்ந்தேன்’ என்று மண்ட்டோவிடம் சொன்னவனுக்குச் சமர்ப்பணம் செய்திருந்தார். இம்மொழிபெயர்ப்பில் சொற்சித்திரங்களாகச் சேர்க்கப்பட்டுள்ள இவற்றில் பிரிவினையின் போது நிகழ்ந்துகொண்டிருந்த கணக்கற்ற வன்முறைகளின், மதக்கலவரங்களின் ஊடாக நடைபெற்ற திருட்டுக்களையும், உடைமைகள் எரிப்புகளையும், பசிக்கென அலைந்து கொண்டிருந்த எளிய மக்களின் நிராதரவான நிலைகளையும் பிரக்ஞைப் பூர்வமான சொற்களாக வெளிப்படுத்தியிருக்கிறார் மண்ட்டோ. தன் கதைகளின் வழியே படர்ந்திருந்த ரத்த சாட்சிகளான உடல்களிலிருந்து இதில் வெறும் உடைமைகளைப் போலவே அங்கு மீதியிருந்த, வாழ்விற்காகப் போராடிக்கொண்டிருந்த உடல்களைக் கலவரக்காரர்கள் பார்த்துக் கொண்டிருந்ததையே சிறு சிறு குறிப்பால் மண்ட்டோ உணர்த்தியிருக்கிறார். அதனால் தான் ‘ஏதோ கொலையே செய்து விட்டதைப் போல் உணர்ந்தேன்’ என்று சொன்னவனுக்கு இதைச் சமர்ப்பித்திருக்கிறார். அரிசி மூட்டைகளையும் சீனி மூட்டைகளையும் பசிக்கென திருடிச்செல்பவர்களும், தங்கம் மற்றும் விலையுயர்ந்த பொருட்களைக் கொள்ளைப் பசிக்கென திருடுபவர்களையும் சமூக அதிகாரம் ஒன்றாகவே பாவித்து வைத்திருப்பதை அவர் வெளியேற்றுகிறார். ரோட்டில் கத்தியால் குத்தப்பட்டு இறந்து போன தள்ளுவண்டியில் ஐஸ் விற்றவனின் உறைந்த இரத்தத்தை  ‘ஜவ்வு மிட்டாய்’ என்று உலகத்திற்குச் சொல்லும் குழந்தையை, ‘சீக்கியனாக மாறுவதற்குச் சம்மதிக்க மாட்டேன் என் சவரக்கத்தி எனக்குத் திரும்ப வேண்டும்’ என்று கேட்பவனை, ‘என்னை கொலை கூட செய்யுங்கள் ஆனால் என் பணத்தைத் தொடாதீர்கள்’ என்பவனை ‘ஹலால்’ முறையில் இல்லாமல் ‘ஜட்கா’ முறையில் கழுத்தைத் துண்டாக்குபவனை, வலுக்கட்டாயமாகத் தாடியும் முடியும் சிரைக்கப்பட்டதால் தன் நம்பிக்கைக்காகத் தற்கொலை செய்துகொள்பவனை, ஆழமாக இறக்கப்பட்ட கத்தி தொப்புளுக்குக் கீழிறங்கி பைஜாமா நாடாவும் வெட்டப்பட்டு அது இறங்கியவுடன் அதைப் பார்த்து ‘தவறு செய்து விட்டேன்’ என்றவனையும் இன்னும் நிறைய குறியீடுகள் சார்ந்த கோர முகங்களை நமக்குக் காண்பிக்கிறார். மேலும் ‘அவன் சாகவில்லை, இன்னும் கொஞ்சம் உயிர் இருக்கிறது’ என்பவனிடம் ‘என்னால் முடியவில்லை, எனக்கு அசதியாக இருக்கிறது’ என்ற வரிகளிலிருந்து, இந்த சமூகம் தம் மக்களை கொலைசெய்வதற்காக எத்தனை சுய அக்கறையோடு, வெறியோடு இந்தக்காலம் பனித்திருக்கிறது என்பதையே அவர் உணர்த்தியிருக்கிறார்.      

சாதத் ஹசன் மண்ட்டோ
  1. நினைவோடைகள் மற்றும் ஹிப்டுல்லா :

   பிரபலங்களைப்பற்றிய நினைவோடைக் குறிப்புகளில் மிகவும் உயிரோட்டம் கொண்ட உண்மையான விஷயங்களையும் அதன் ஆழத்தில் மறைந்திருந்த நெகிழ்ச்சியான தன்மைகளையும் பட்டவர்த்தனமான நேர்மையின் அணுகுமுறையிலே அவர் எழுதியிருக்கிறார். பிரபலங்களுக்குள்ளிருந்த, அவர்களின் பலவீனங்கள் என ஏற்றுக்கொண்டிருந்தவைகளையும் அல்லது அவைகளுக்கு எதிராக அவர்கள் தங்களை சமப்படுத்திக் கொண்டவற்றையும் பக்குவத்தின் அடிப்படையில் சுயமான பலம் நிறைந்த தன்மையாகவே அவர் விவரித்திருக்கிறார். மேலும் அவர்களைச் சுற்றியிருந்த புகழின் போர்வைகளைக் களைந்து அதற்குள்ளிருந்த மனிதத்தன்மைகளின் மீதான நம்பிக்கைகளையும், இருப்பிற்கான போராட்டங்களையும், இருண்மைகளின் முகத்தையும் பொதுவெளிக்குக் காண்பிக்கிறார். ‘முகமது அலி ஜின்னா’ குறித்த ஆசாத்தின் சொற்களில் மண்ட்டோ கடத்தும் வெளி மிகப்பெரியது. பிரிவினைக்குப்பிறகான சூழலில் வருமானமற்ற நடிகனான ஆசாத் தன் ஏழ்மை நிலையிலும், தான் பெரும் மதிப்பு கொண்ட ஜின்னா அவர்களின் இறப்பிற்காக வருந்தும் சொற்கள் வாசகனைக் கண்ணீர் விட வைத்து விடும். ‘குலாம் பாரி எனும் பாரி அலிக்’ பற்றிய நீளும் வரிகளில் காலனிய ஆதிக்கத்திற்கெதிரான புரட்சிகளுக்கான எழுத்தின் அடிப்படை வடிவத்தை மண்ட்டோ அவரிடமிருந்து பெற்று வந்திருக்கிறார் என்ற போதும், அந்த எளிய மனிதனின் தொடர் தேடல்களையும், சீர்திருத்தக் கருத்துக்களுக்காக அவர் சுற்றியலைந்து செய்தவைகளுக்குப் பிறகு கடைசிக் காலத்தில் கிழக்கிந்திய கம்பெனி எஜமானர்களுக்காக செலவிட்டதையும் சொல்லியே முடிக்கிறார். பாகிஸ்தானின் பெரும் புகழ் நிரம்பியிருந்த, எல்லோரும் ஏங்கிக்கொண்டிருந்த நடிகையும் பாடகியுமான ‘நூர்ஜஹான்’ பற்றிய நினைவுகளில் அவளின் தெளிந்த குரலும், காதல்களும், அவளின் செயற்கைத்தனமான நடவடிக்கைகளையும் பழக்கவழக்கங்களையும் குறிப்பிடுகிறார். தொடர்ந்து அலைக்கழிக்கப்பட்ட அவள் வாழ்வின் பிரிதொரு பக்கத்தையும் ரகசியங்களையும் அவளின் காலத்திலே பொது வெளியில் கவனப்படுத்தியிருக்கிறார். ‘நர்கிஸ்’ஸின் துயரம் கவிழ்ந்த கண்களையும், சிறு வயதின் அவளின் அலாதியான குணங்களையும், அவர் வீட்டுப் பெண்களுடன் அவள் பழகிக்கழித்த சிறந்த நாட்களையும், பிறகு திரைத்துறையில் அவளது அபார வளர்ச்சி மாற்றங்களையும், நடிப்பின் நுட்பங்களைக் கற்று அவள் ஜொலித்த விதங்களையும் சொல்லிச்

செல்கிறார். பாம்பே டாக்கீஸில் ஆய்வுக்கூடத்தில் பயிற்சியாளராகயிருந்த ‘அசோக்குமார்’ பல வெள்ளி விழா மற்றும் தங்கவிழா கொண்டாடிய படங்களின் கதாநாயகனாக உருவெடுத்த சம்பங்களையும், அதன் கிளைக்கதைகளான காதல் கதைகளையும், திரைத்துறையில் கவனிக்கத்தக்க எல்லா துறையின் விசயங்களிலும் அவருக்கிருந்த பெரும் ஈடுபாடுகளையும், நுட்பமான அறிவையும் வரிசைப் படுத்துகிறார். தன் மிகச்சிறந்த நண்பனான ஷியாம் மரணத்தின் போது மண்ட்டோ உடலளவிலும், மனதளவிலும் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தார். ஷியாமின் மரணத்தை அவர் மனம் ஏற்கவில்லை. ஷியாம் நிறைய அழகிகளுடனும், குடியுடனும் இருந்தாலும் அவனுக்குள்ளிருந்த தீர்க்கமான அன்பின் வெளிச்சத்தை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறார் மண்ட்டோ. லாகூரில் ‘தண்டாகோஷ்’ – தமிழில்: சில்லிட்ட சதைப்பிண்டம்- கதைக்கான வழக்கில் கீழ் நீதிமன்றத்தால் கிடைத்த தண்டனைகளால் அவர் பெரும் வேதனையில் எல்லாவற்றின் மீதும் பெரும் சலிப்பும், சோர்வும், அவநம்பிக்கையும், நிலையின்மையும் கொண்டிருந்தார். வருமானம் ஏதுமின்றியிருந்த அந்த நாட்களில் ஷியாம் கொடுத்தனுப்பிய ஐந்நூறு ரூபாயைப் பெற்றுக் கொண்டவுடன் தன் கண்களில் நீர்க்கசிந்ததை நன்றியோடு நினைவு கூறுகிறார் மண்ட்டோ. மேலும் பாம்பே டாக்கீஸ், வாச்சா, இன்னும் எண்ணற்ற நண்பர்கள் மற்றும் ஷியாமுடனும் இருந்த நட்பையும் தொடர்புகளையும் விட்டு விட்டு தேசப் பிரிவினைக்குப் பிறகு பாகிஸ்தான் சென்ற தன் பெரும் துயரத்தை, எளிதில் புண்படக்கூடிய, நெகிழ்ச்சியான இதயம் கொண்ட மண்ட்டோ தன் மீதி வாழ்நாள் முழுவதும் நினைத்துக்கொண்டேயிருந்தார். திரைத்துறை சார்ந்த திரைமறைவு குதிரை பேரங்களையும், தரகு வேலைகளையும், ஏமாற்றங்களையும், காதல் துரோகங்களையும் தன் கதைகளிலும், நினைவோடைகளின் சில பத்திகளிலும் கவனிக்கத்தகுந்த அளவில் குறுக்கீடாகச் சொல்லிஇருக்கிறார் மண்ட்டோ.

   ஹமீத் ஜலால், மண்ட்டோவின் சிறுகதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து 1956-ல் வெளியிட்ட ‘BLACK MILK’ – இதன் பிரதிகளை ஏறக்குறைய பாகிஸ்தான் அரசு கைப்பற்றிக் கொண்ட குறிப்பும் உள்ளது –  தொகுப்பிலிருந்த கட்டுரையின் தமிழ் வடிவம் ‘ஹிப்டுல்லா’ பிரிவில் இணைக்கப்பட்டுள்ளது. மண்ட்டோவின் சகோதரி மகனான ஹமீதின் பார்வையில், அவருடன் குலுங்கிக் குலுங்கிச் சிரித்துக்கொண்டிருந்த பொழுதுகளையும், குணாதிசயங்களில் மற்றவர்களிடமிருந்து வேறுபட்டுக்கிடப்பதற்கான தீவிரமானத் தூண்டுதல்களுடனும், தனித்தன்மைகளை அவர் தொடர்ந்து தகவமைத்து வந்த விதங்களையும், மனப்பிறழ்வின் வழியே நோய்மைகளுடன் படுக்கையிலிருந்த துயரங்களையும் அதற்குப் பிறகு மீண்ட நினைவுகளையும், அவருக்குப் பின்னாலிருந்த குடும்பம் அவரை எந்தளவு நேசித்துக் கொண்டிருந்ததென்பதையும், மேலும் அவரின் கடைசி நிமிடங்களையும் பொது வெளியில் பகிர்ந்து கொடுத்திருக்கிறார். நவீன உருது இலக்கியத்தின் முக்கியமான பெண் எழுத்தாளரான ‘இஸ்மத் சுக்தாய்’ மண்ட்டோவுடனான தன் சந்திப்புகளின் தருணங்களின் நீண்ட உரையாடல்களையும், மதிப்புமிக்க அவரின் எழுத்துக்கள் பற்றிய நுட்பமான சில விமர்சனங்களையும், அவரின் மனைவியான சஃபியாவின் மனநிலை குறித்த சொல்லாடல்களையும் பகிர்ந்திருக்கிறார். 

   ‘அங்கிள் சாம்’-க்கு எழுதிய ஒன்பது கடிதங்களிலும் அமெரிக்கா – பாகிஸ்தான் இடையேயான அரசியல் காய் நகர்வுகளையும், ஆயுத கொள்முதல்களின் விவரங்களையும் இன்னும் அதிகமான இறக்குமதிகள் சார்ந்த கூர்மையான அரசியல் நிலைப்பாடுகளையுமே நகையுணர்வின் பார்வையில் வெளிப்படுத்துகிறார். மேலும் சர்வதேச அரசியல் சார்ந்த புரிதல்களின் அடிப்படையில் இந்த நெருக்கங்கள் யார் யாருக்கு எதிரானதாக இருக்கும், சாதகமாக அமைந்திடும் என்பதையும் குறிப்பிடுகிறார்.   

தன் குழந்தைகளுடன் மண்ட்டோ.

   பம்பாயிலிருந்த மிகுந்த சந்தோசமான நாட்களின் மீதி கற்பனைகளையே நிகழ்காலம் என்று நம்பிக்கொண்டிருந்த, லாகூரில் எதுவும் பிடித்திடாத வறட்சியின் கடைசியான நாட்களின் துயரங்களிலிருந்த அந்த இதயத்தின் பெரும் வலிகளை எல்லா இழப்புகளின் அடையாளமாகத்தான் நான் பார்க்கிறேன். மேலும் சாகும் தருவாயிலும் அவரிடமிருந்த உண்மையான மனப்பக்குவமும் பதற்றமற்ற தன்மையுமே அவர் கவனமாகச் சேகரித்து வந்த மன அமைப்பை முழுமை பெறவைக்கின்றன. சிலர் சொல்வதைப்போல அவர் தனக்குத்தானே ஏமாற்றிக்கொண்டிருந்தவராகவும், இன்னும் சிலர் சொல்வது போல் நிறைய சம்பாதித்த காலத்தில் மிகச் சாதாரண மனிதனைப் போல் தன்னைச் சுற்றியிருப்பவருக்காக எல்லாவற்றையும் சேர்த்து வைத்திருக்கத் தவறியவராகவும் ஒரு போதும் அவரால் வாழ்ந்திருக்கவே முடியாது ஏனெனில் மண்ட்டோ அத்தகைய ஏமாற்றுக்காரனல்ல, அவனின் ஆன்மாவின் சிறந்த உண்மைக்கு மட்டுமே எப்போதும் அவன் மிக நேர்மையானவனாகவும், நெருக்கமானவனாகவுமிருந்தான்.      

  இத்தகைய மொழிபெயர்ப்பு மற்றும் தொகுப்பிற்கான தொடர் தேடல்கள், தீவிர வாசிப்பையும், நீண்ட கால உழைப்பையும், நேர்த்தியையும், மனப் பொறுமையின் திடமான தன்மையையும் பின்னணியாகக் கொண்டிருப்பவை. அதுவே நம் காலத்தின் இந்த மிகப்பெரிய அடையாளமான ஒரு கலைஞனை அறிந்து கொள்வதற்கு நாம் கொடுக்கப்பட வேண்டிய அதிகபட்சமான மதிப்புமிகுந்த விலையாகயிருக்கிறது. அத்தனை நுட்பமானத் தேடல்களுக்கும், சமூகப் புரிதல்களுக்கும் இத்தொகுப்பு வாசகனை இழுத்துச் செல்லும் என தீர்மானமாக நம்புகிறேன். சீனிவாச ராமாநுஜம் – பாரதி புத்தகாலயம் நண்பர்கள் ஆகியோருக்கு மிகுந்த வாழ்த்துக்களும், நன்றிகளும்.

     பசித்தவனுக்காகக் கோதுமைகளின் நேசத்தைப் பகிர்ந்து கொடுத்தவர் மண்ட்டோ. வெறுக்கப்பட்ட, வெறும் சதைகளென கீழ்மைபடுத்தப்பட்ட மனிதர்களின் இதயங்களையும் நேசிப்புகளையும் பெற்று அவர்களினூடே வாழ்ந்து வந்தவரவர். தனிமனிதனின் முற்றான கலாச்சார அடையாளங்களை மதத்திலிருந்தும், செய்யும் வேலைகளிலிருந்தும், அதிகார வர்க்கத்தினரால் எழுதப்பட்டிருந்த நாகரீகங்களிலிருந்தும் உடைத்து உண்மையான சுதந்திரத்தின் தீவிரத்தை அனுபவிப்பதற்கான எல்லைகளை தன் படைப்புகளில் வரைந்து காண்பித்தவர் மண்ட்டோ. சமூக மன அமைப்பின் சட்ட திட்டங்களைக் கொடுமையான நோய்களென கேலி செய்து நிறைய பத்திகளை அவர் எழுதியிருக்கிறார். தனிமைபட்டுக் கிடந்த மனிதர்களின் எளிமையான வாழ்விற்கும் தேடல்களுக்கும் இடையே நடந்துகொண்டிருந்த மனதின் கணக்கற்றப் போராட்டங்களை அதன் அழுக்குகள் சேர்ந்திருந்த மொழியின் நுட்பத்துடன் எதிர்ப்பின் தீவிரமான சொற்களாக மாற்றிக் காண்பித்தவர் அவர். அதன் மூலம் மதம், தேசபக்தி, நிறுவன அமைப்புகள், கலாச்சாரம், இனம், அரசியல், சமூகம் சார்ந்த அடிப்படைவாதிகளின் போலியான உருவகங்களின், அடையாளங்களின் குறியீடுகளை நிர்வாணமாக்கி அவைகளின் பன்முகத்தன்மை சார்ந்த கேள்விகளை பொதுவெளியில் தன் காலத்தில் தொடர்ந்து வைத்துக் கொண்டே வந்தார். மண்ட்டோ உருவாக்கி வைத்திருக்கும் மனிதர்களின் உண்மை முகங்களும் எளிய இதயங்களும் வலிகளை வலிகளாக ஏற்றுக்கொண்டிருந்தனர், வரலாறுகளின் இருட்டடிப்புகளுக்குள் வாழ்ந்து கொண்டிருந்தனர், தூய்மைகளின் பிரசாரங்களிலிருந்து வேறுபட்டு சமூக அழுக்குகளின், அவலங்களின் இணைபிரியாதவர்களாக தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டிருந்தனர். தேசத்தின் நம்பகத்தன்மையின் மீது எப்போதும் சந்தேகத்தை எறிந்து கொண்டிருந்தனர். மனசாட்சியின் வடிவங்களாகச் சிலரின் நம்பிக்கைகளை கேள்வி கேட்டுக் கொண்டிருந்தனர். இலட்சியவாத மனங்களின் தூக்கத்தைக் கெடுத்துக்கொண்டிருந்தனர். ஒவ்வொரு நாளும் புண்பட்டுக் கொண்டிருந்த வேளைகளிலும் ஒரு போதும் தங்களது ஆதாரமான மனிதத்துவ இருப்பையும், கண்ணியத்தையும் கைவிடாதவர்களாக இருக்கின்றனர். ரத்தமும் சதையுமான உடலிலிருந்து கலாச்சார சமூக மன அமைப்பின் எல்லா அடையாளங்களையும், குறியீடுகளையும் அகற்றி வெற்றுடலாகக் காண்பிக்கும் ஒற்றைப் புள்ளியின் மீது கருணைகளேதுமற்ற வடிவில் மண்ட்டோ வின் படைப்புலகச் செயல்பாடுகள் முழு அர்த்தம் பெறுகின்றன. நவீனத்துவ எழுத்துக்களின் பிரம்மாண்ட வரலாறுகளில் படிந்திருக்கும் எதிர்- அரசியல் சார்ந்த நெருக்கமான சொற்களின் வரிசையில் மண்ட்டோவின் எழுத்துக்கள் மிகக் காத்திரமானவை மேலும் சமூக மன அவலங்களின் மீது நுட்பமான பிரக்ஞையும் தேர்ச்சியும் கொண்டிருந்தவை. வீழ்ந்து கிடந்த மனித உடலிலிருந்து சொல்லப்படுவதற்கென இருந்த எளிய அறத்தின் தனிமையையே மண்ட்டோ தன் ஒவ்வொரு எழுத்திலும் காண்பித்திருக்கிறார். மற்றவர்களைப் போல அம்மனிதர்களின் இருப்புகளை மறைத்து வெறும் கழிவிரக்கங்களுக்கான சொற்களை அவர் உருவாக்கவில்லை. அவர்கள் மீது செலுத்தப்படும் வன்முறைகளை விட இந்த இருட்டடிப்புகளுடனான கழிவிரக்கங்கள் இன்னும் ஆபத்தானவை என்பதே மண்ட்டோ எழுத்துக்களின் சாராம்ச வாதமுமாக இருக்கிறது. வாழ்ந்து கொண்டிருக்கும் நிலத்தின், அரசியலின், கலாச்சார அடையாளங்களின் மற்றும் மதங்களின் அமைப்பியல் ரீதியான குறியீடுகளின் முன்பாக மனிதர்கள் சந்திக்கும் சுதந்திரங்களற்ற,  மனநெருக்கடிகளையும், அவர்களுக்குள் நிறைந்திருந்த வன்முறைகளின் வழியே அவற்றை எதிர்த்து நிற்பதுமான கள யதார்த்தங்களையும், அதன் போதாமைகளையும், பெரும் துயரங்களையும் வரலாற்றின் பக்கங்களில் ஏற்றி வைத்திட்ட அற்புதமான வேலைகளையே அவரின் எழுத்துக்கள் செய்திருக்கின்றன. மனித மனம் பிரபஞ்சத்தின் எண்ணற்றத் துளிகளின் பரிமாணங்களை அடிப்படையாகக்கொண்டவை என்றும் அதன் முழு வீச்சும், சுதந்திரமான சிந்தனைகளுமே எந்த குறியீடுகளுமற்ற மனிதத்துவத்தைத் திறந்து காண்பிக்கும் மிகப்பெரிய ஆற்றலும் வலுவும் கொண்டவை என்பதையே மண்ட்டோ அவர்களின் எழுத்து நமக்கு உணர்த்திக் காண்பிக்கிறது. உண்மையில், வெறும் சதைகளென காட்சிப்படுத்தப்பட்ட மனிதக் கூட்டங்களை அந்த நேர்மையற்ற பார்வைகளிலிருந்து திருப்பி அவர்களனைவருக்குள்ளுமிருக்கும் சிறிய இதயங்களின் பேசிடாத துயரங்களையும், காதல்களையும், மேன்மைகளையும் தன் சொற்களின் வழியே உலகிற்கு எடுத்துக் காட்டியவர்களில் மண்ட்டோ அவர்களே முதன்மையானவராகவும் முழுமை பெற்றவராகவும் திகழ்கிறார்.

கதைகள், திரைக்கதைகள், கட்டுரைகள், வானொலி நாடகங்கள், நினைவோடைகள் எனத் தன் இருபது வருட இலக்கிய வாழ்வில் ஏராளமான படைப்புகளைக் கொடுத்திருக்கும், இந்தியத் துணைக் கண்டத்தின் மிகச் சிறந்த எழுத்தாளனான, நூற்றாண்டு விழா கொண்டாடிய மண்ட்டோ அவர்களை நோக்கிய தேடல்களைத் துவங்குவதற்குத் தமிழில் இத்தொகுப்பு மிக முக்கியமான காரணியாக எப்போதும் இருந்திடும்.

 

குறிப்புகள் :-

  1. இத்தொகுப்பை முன்பு வெளியிட்ட நிழல் (2005 & 2008) மற்றும் புலம் (2009 & 2013) பதிப்பக நண்பர்கள்

  எப்போதும் ஞாபகத்துக்கும் நன்றிகளுக்கும் உரியவர்கள்.

  1. உருது மொழியிலிருந்து மண்ட்டோவின் எழுத்துக்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த, காலித் ஹசனின்    ‘A WET AFTERNOON’ (2001) – இத்தொகுப்பு ‘THE END OF KINGDOM AND OTHER STORIES (1989) / PARTITION AND OTHER STORIES (1990) / MOTTLED DAWN (1997) / STARS FROM ANOTHER SKY (1998) ஆகிய தொகுப்புகளை உள்ளடக்கியது – ஹமீத் ஜலாலின் – ‘BLACK MILK’ (1956), ‘SAADAD HASAN MANTO – SELECTED STORIES: MADAN GUPTA’ (1997), ‘BLACK BORDERS’ – RAKSHANDA JALIL (2003) மற்றும் ‘BLACK MARGINS – SELECTED BY M.ASADUDDIN ஆகிய நூல்களை அடிப்படையாகக் கொண்டு தொகுக்கப்பட்டிருக்கிறது இத்தொகுப்பு.

2 ( I ) காலித் ஹசனின் ஆங்கில மொழிபெயர்ப்பு ஒப்பீட்டளவில் சிறந்த ஆங்கிலத் தன்மையைக் கொண்டிருந்ததாக நிறைய வாசகர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தாலும் மண்ட்டோவின் படைப்புகளிலிருந்த உண்மையின் நெகிழ்ச்சி மிகுந்த பக்கத்தின் கணமான தீவிரத்தன்மையைக் கொண்டிருக்கவில்லை. நிறைய பத்திகளின் விடுபடல்களும், சில திசைதிருப்பல்களும் இருக்கின்றன. மேலும் மண்ட்டோவின் கதைகள் மிகவும் தட்டையான செயலாக்க அடிப்படை கொண்டதாகக் காண்பிக்கவே முற்பட்டது. இது குறித்த மேலும் தகவல்களுக்கு பார்க்க – ‘MANTO FLATTENED : AN ASSESSMENT OF KHALID HASAN’S TRANSLATIONS”- M. ASADUDDIN.  

  1. இத்தொகுப்பில் பின்னிணைப்பாகச் சேர்க்கப்பட்டுள்ள மண்ட்டோவின் எதிர்வினைகளும், பல்வந்த் கார்கி மற்றும் ராமநுஜம் அவர்களின் கட்டுரைகளும் மண்ட்டோவின் படைப்பு மனதின் பன்முகத்தன்மையை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துகின்றன.

  • ஜீவன் பென்னி

நூல் : மண்ட்டோ படைப்புகள் – சாதத் ஹசன் மண்ட்டோ தேர்ந்தெடுத்த படைப்புகள்

தொகுப்பும் மொழிபெயர்ப்பும்: சீனிவா ச ராமாநுஜம்

பதிப்பகம் :பாரதி புத்தகாலயம்

-விரிவுபடுத்தப்பட்ட இரண்டாம் பதிப்பு – 2018

விலை : ₹495/-

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.