செல்லையா பண்டிதனுக்கு, தனது பரம்பரைத் தொழிலான வெட்டியான் தொழிலில்கூடச் சலிப்பு ஏற்படுவது, மயானத்துக்குச் சேர்ந்தாற்போல் ஒரு வாரத்துக்கோ இரண்டு வாரத்துக்கோ பிணமே வந்து விழாதபோதுதான். அந்த மாதிரிச் சமயங்களில், இதுவரையிலும் பரம்பரை பரம்பரையாகச் சோறு போட்டு வந்திருக்கிற தொழில் என்கிற நன்றி உணர்வெல்லாம் செல்லுபடியாகாது. “சவம், இது என்ன பொழப்பு? பொணத்தை எரிச்சு எரிச்சு என்னத்தைக் கண்டுட்டோம்? என்னம்போ இதுல கோடி கோடியா அள்ளிக்கிட்டுப் போகலாம்கிற மாதிரி, அப்பனும் பாட்டனும் பொணத்தை எரிச்சதுமில்லாம நம்மளையும் சுடுகாட்டைக் காக்கப் போட்டுட்டானுக. நம்ம எனத்தான் எவ்வளவு பேரு ஜோரா பார்பர் ஷாப்பு வச்சுக்கிட்டு நாலு பேர் தலையைத் தடவி காலத்தை ஓட்டிக்கிட்டிருக்கானுவ…” என்று சமயா சமயத்தில் தன் பத்தினி செல்லம்மாவிடம் ஒரு பாட்டம் அழுது தீர்ப்பான்.
செல்லையா பண்டிதன் வீட்டில் அடுப்பு எரிந்து இரண்டு மூன்று நாட்கள் ஆகிவிட்டன. நேற்றும் முந்தாநாளும், பட்டினிக்கும் பசிக்கும் சமய சஞ்சீவியாக உபயோகப்பட்டு வந்த மரச்சீனிக் கிழங்கும் இன்றைக்குக் காலையோடு சரி. ஊருக்குள்ளிருந்து அழுகைச் சத்தம் கேட்கிறதா என்று காதைத் தீட்டிக்கொண்டு பத்து நாட்களாகக் காத்திருந்தும் பார்த்தாயிற்று. ஊருக்குள் துஷ்டி விழுகிற பாட்டைக் காணோம். வாரத்துக்கு ஒன்றாவது மண்டையைப் போட்டால்தான் பண்டிதர்வாளின் கதை நடக்கும். செல்லையா பண்டிதனின் ஏகபத்தினியான செல்லம்மாளுக்கு, வயிற்றைக் கடிக்கிற கடியில் பண்டிதரய்யாவுக்கு மத்தியானம், சாமம் என்று நேரங்காலம் இல்லாமல் ‘கொடை’ கொடுத்துக்கொண்டிருந்தாள். இன்றைக்கு இவ்வளவு நேரமாகியும் ஊருக்குள் ஒரு பொட்டு பொடுசு கூட மண்டையப் போடக் காணோம். ‘அடப்பாவி மட்டையோ, எல்லாருக்கும் சாவே இல்லைன்னு ஆயிப் போச்சா?’ என்று அடிக்கடி தனக்குள் புலம்பிக்கொண்டான் பண்டிதன்.
வயிற்றுக்கில்லாத கொடுமையில் மிகவும் கசந்து போய், வீட்டுக்கு எதிரே சொள்ளமாடசாமி கோயிலுக்கு அடுத்தாற்போல், மாலைச் சூரியனின் அஸ்தமன ஒளியில் வெள்ளித் தகடாக மினுங்கிக்கொண்டிருக்கும் சுடுகாட்டு தகர ஷெட்டுகளைப் பார்த்துப் பெருமூச்சு விட்டவாறு அச்சலாத்தியாகத் தன் வீட்டுச் சாய்மானத் திண்ணையில் சாய்ந்து கிடந்தான்.
அந்தச் சாய்மானத் திண்ணை பண்டிதனின் அன்றாட ஜீவிதத்தில் ரொம்பவும் முக்கியமான அம்சம். சேர்ந்தாற்போல் ஊருக்குள் காலராவோ, வைசூரியோ கண்டு, அடுத்த ஊரில் இருக்கிற தன்னுடைய சின்ன மச்சினனையும் துணைக்கு அழைத்துக் கொள்கிற அளவுக்கு ஊர்ப்பிணங்கள் வந்து குவிய, மடி நிறையச் சில்லறைகளும் நோட்டுகளும் வீட்டுக்குள் வரிசையாக அடுக்கி வைத்திருக்கிற காருகுறிச்சி மண்பானை அடுக்கிலும் உறங்கும்போது, மச்சினனைக் குஷிப்படுத்த அவனைப் பக்கத்து ஊர் டூரிங் கொட்டகைக்கு அனுப்பிவிட்டு, நிலா வெளிச்சத்தில் நாற்பத்திச் சொச்சம் வயசாகிவிட்ட செல்லையாவும் புளிபோட்டு விளக்கிய சொம்பைப் போல் தகதகக்கிற செல்லம்மாவும் உல்லாசமாய் உருளுவார்கள். அதே திண்ணையில்தான் இன்றைக்கும், புகையாத சுடுகாட்டு ஷெட்டுகளைப் பார்த்து பெருமூச்சு விட்டவாறு சாய்ந்து கிடக்கிறார் பண்டிதர்வாள். செல்லையா பண்டிதனின் பரம்பரைப் பாத்தியமாய்த் தொடர்ந்து வருவது சுடுகாட்டுக் குத்தகையும், இந்தச் சாய்மானத் திண்ணை போட்டுக் கட்டிய வீடும்தான்.
சாணம் போட்டு மெழுகி நாளாகிவிட்டதால் திண்ணையில் மண் திரைந்து, மண்ணுக்குள் விரவிக் கிடந்த ஓட்டாஞ்சில்லு, கரித்துண்டுகள், செங்காமட்டை எல்லாம் பல்லிளித்தன.
“ஏட்டி! வெறுவாக்கிலியத்தவளே! வீட்டை மொழுகினா என்ன? ஆக்கங்கெட்ட மூதேவி… ஒன் ஆக்கங்கெட்ட தனத்துக்கே குடிக்கக் கூழு கெடைக்காமப் போகுமேட்டீ… சவமே!” என்று தன் ஆங்காரத்தையெல்லாம் செல்லம்மாவின் மீது தாராளமாகவே கொட்டித் தீர்த்துவிட்டு, அழுக்கும் மயானப் புழுதியும் மண்டிப் போயிருந்த சிட்டைத் துண்டை சாய்மானத் திண்டில் நாலாக மடித்துப் போட்டுச் சாய்ந்துகொண்டான்.
செல்லம்மாவின் பாஷையில், ‘வீட்டில் வாக்கரிசி மூட்டிப் போகும்போது’ பெரிய ஞானக்கிறுக்கனைப் போல் இந்தத் திண்ணையில் சாய்ந்துகொள்வான். மழுமழுவென்று, தயிர்க்காரியின் சிரட்டையைப் போல் சிரைக்கப்பட்ட தலையின் மேல் இரண்டு கைகளும் பின்னிக்கிடக்கும். இன்றைக்கும் அதே மோனத் தவத்தில் ஆழ்ந்து, மனம் எங்கோ பழங்கனவுகளில் லயித்துக் கிடந்தபோதுதான் செல்லம்மாவின் குரல் ஆளையே அடிக்கிற மாதிரி பீறிட்டுக் கிளம்பிற்று.
“யோவ் மனுஷா! ஏதாவது மிச்சம் மிஞ்சாடி சொரணையாவது இருக்கா? பொணத்தைக் காத்துக் கெடந்து காத்துக் கெடந்து நீயும் பொணமாகிப் போயிட்டீயா? மயிரே… வீடு மொழுகலைன்னு ஆடுதீரே, மூணு நாளாகுது சோத்துப் பருக்கையைப் பாத்து. இன்னைக்கு எளவு விழும், நாளைக்கு எளவு விழும்னு பத்து பகல் பத்து ராத்திரிக்கு மேலே கழிஞ்சாச்சு. நம்ம பாவத்துல மண்ணு விழதுக்குன்னு ஊர்ல எளவே விழமாட்டேங்குது. வேற எங்கேயாவது போயி கடன் கிடன் பொறட்டீட்டு வாரும்ன்னாக்க… சீமைய வித்தவரு மான அவமானம் பாக்காரு… தூ… மயிரே.. சோறு போட வழியில்லை. ஒனக்குப் பொண்டாட்டி ஒரு கேடா? ஆசை வந்தா காலு, அரை கொடுத்து மாடத்தெருக்காரிகிட்டே போகக்கூடாது? இதுல பிள்ளையில்லன்னு வேறே பண்டிதருக்கு அச்சலாத்தியா இருக்கு… அட என் அதிகாரியே” என்று, சோத்துக்கு வழியில்லாத வெளத்தில் திருப்பிப் போடு போடென்று போட்டதும் இல்லாமல், ஏதோ ஒரு பாத்திரத்தை, ‘தொபீர்’ என்று தரையில் வைத்துவிட்டு, பெரிய திருப்தியுடன் பின்வாசலில் துப்பிவிட்டுச் சுவரோரமாக ஒதுங்கி நின்று சளசளவென்று பெய்தாள்.
“ஏ… சவமே, ஒனக்கு அண்ணங்காரன் வூட்ல போயி வழிச்சி நக்கணும்னு ஆசை இருந்தா ஓடிப் போயேன்… அதுக்கில்லாம மருவாதி கெட்டப் பேச்செல்லாம் எதுக்குட்டீ? ஏங்கூட மழையிலவும் நனையணும், வெயில்லயும் காயணும். இதெல்லாந் தெரிஞ்சுதானடி வாக்கப்பட்டே? இந்தப் புருசனுக்கு வயசாகிப் போச்சுன்னதும் கள்ளப் புருசனைத் தேடுதீயோ? ஒனக்கு ஊருமேல போகணும்னு ஆசையிருந்தாக்க என்னை எதுக்குட்டீ மாடத்தெருவுக்குப் போகச் சொல்லுதே? அட எம் பத்தினியே… மாடத்தெருவுக்குப் போக ஒங்கிட்ட என்னடி ரோசனை வேண்டிக் கெடக்கு… நாயே, ஏது, ஏது நானும் பாத்துக்கிட்டே இருக்கேன். ஒரேயடியாத்தான் வாய் நீளுது… நறுக்கிப் போடுவேன் நாக்கை… ஏடே…” என்று தன் திண்ணைத் தவநிலையைக் கலைத்து எழாமலேயே பதில் கொடுத்தான் பண்டிதன்.
இந்த மாதிரி ஒருவரை ஒருவர் பரஸ்பரம் ஊர்மேல் மேய விடுகிறது போல் பேசிக்கொள்வது அண்ணலும் அவளும் கைப்பிடித்த காலம் முதல் நடந்துவருகிற அன்றாடத் தொடர்கதை. இந்த விஷயங்களெல்லாம் அவ்வப்போது வயிற்றுக்கு மூட்டிப் போன நேரங்களில் தன் பிடரி மயிரைச் சிலுப்பிக்கொண்டு கிளம்பும். கிளம்பின வேகத்திலேயே சுவடு தெரியாமல் மறைந்தும் போகும். யார் சச்சரவை ஆரம்பித்து வைத்தாலும் கடைசியாக அழுதுகொண்டிருப்பது செல்லம்மாதான். பிறகு அவள் கண்ணீரை ஆதுரத்துடன் துடைத்து, “இப்பம் என்னள்ளா நடந்துபோச்சு?” என்பது போன்ற சமாதான மொழிகளைச் சொல்பவனும் செல்லையா பண்டிதன்தான். வழக்கம் போலவே இன்றைக்கும் இதெல்லாம் கிரமமாக நடந்தேறின. இரண்டு பேருமே அவ்வளவு வயசுக்கப்புறமும் இதுபோன்ற சண்டையையும் சமாதானத்தையும் வெகுவாக ரசித்தார்கள்.
சட்டென்று ஏதோ நினைவுக்கு வந்த மாதிரி செல்லம்மாவை விட்டு விலகி, மண்சுவரில் கதவு நிலைக்கருகே பம்பரக் கயிற்றில் கட்டித் தொங்கவிட்டிருந்த இரட்டைச் சங்கை எடுத்துக்கொண்டு வெளியே வந்தான் செல்லையா பண்டிதன். செல்லம்மாவின் அழுகையில் இப்போது முன்பை விடக் கொஞ்சம் சுரத்து இறங்கியிருந்தது. சாய்மானத் திண்டின் மீது கிடந்த சிட்டைத் துண்டை எடுத்து இரண்டு சங்குகளையும் துடைத்தான். நன்றாகத் துடைத்த திருப்தி ஏற்பட்டவுடன் முதுகிலும் மார்பிலுமாக இரண்டு சங்குகளையும் தோளிலிருந்து தொங்கவிட்டுக்கொண்டு சொள்ளமாடசாமி கோவிலைப் பார்க்க நடந்தான்.
செல்லையா, அந்தச் சங்குகள் இரண்டையும் வாயில் வைத்து மூச்சடக்கி, ‘துஷ்டி’ விழுந்த வீட்டிலிருந்து புறப்பட்டுவிட்டால் சுடுகாட்டை அடைவதற்கு முன்னால் ஒரேயொரு தடவைதான் இடையே நிறுத்தி மூச்சை இழுப்பான். அப்படி ஒரு திறமை வாய்த்திருந்தது அவனுக்கு. ‘செல்லையா பண்டிதன் சங்கைத் தொட்டால் எட்டு ஊருக்குக் கேட்கும்’ என்பது, ஊர்க்காரர்கள் மனமுவந்து சொன்னது. அந்தச் சங்கொலியில் மனசையே கரைத்து விடுகிற மாதிரி, மனைவி, மக்கள், தாய், தந்தையர், கணவன் என்று எல்லோருடைய சோகத்தையும் ஊதிக் காட்டுகிற வித்தையும் அவன் பாட்டன் அப்பன் வழியாக அவனை வந்தடைந்திருந்த பூர்வீகச் சம்பாத்தியம்தான்.
கருகருவென்று இருட்டு இறங்கிக் கொண்டிருந்தது. அக்கரைக்குப் போகிற வண்டிமாடுகளை ஆற்றுக்குள் போகும்போது வண்டிக்காரர்கள் ஏக காலத்தில் பல குரல்களில் அதட்டுகிற சப்தம் மேலைக் காற்றோடு மிதந்து வந்தது.
சுடுகாட்டுச் சொள்ளமாடசாமி ரொம்பத் துடியான சாமி என்ற கீர்த்தி பெற்றவர். அந்தச் சாமிக்கு அப்படியொரு துடிப்பைக் கொடுத்ததில், வஞ்சனையில்லாமல் வெறுங்களிமண் பொம்மைக்கு உயிர் கொடுத்த பாண்டிய வேளாளருக்குப் பாதிப் பங்கு சேரும்.
சொள்ள மாடசாமியைப் பற்றி அந்த ஊருக்குள் வண்டி வண்டியாகக் கதைகள் வழங்கி வருகின்றன. ஆனால், இந்தக் கதைகளுக்கெல்லாம் பயப்படாத ஊர் சின்னஞ்சிறுசுகள் கள்ளத்தனமாய்ச் சந்தித்துக் குலாவி மகிழ, வசதியாக இருப்பது சொள்ளமாடசாமி வீற்றிருக்கிற இருண்ட பெரிய ஆலமரத்தடிதான். சாமியின் தலைக்கு மேலே மரத்தில் ஆணியடித்த தகர உண்டியலும் தொங்கிக் கொண்டிருக்கும்.
பண்டிதனின் குலதெய்வம் சொள்ளமாடசாமி. ரொம்பவும் கஷ்டம் வரும்போது அந்தச் சங்குகள் இரண்டையும் வாயில் வைத்து, சொள்ளமாடசாமியின் சந்நிதியில் நின்றுகொண்டு ஆங்காரத்துடன் அவன் ஊதுகிறது உண்டு. இந்தச் சங்கொலியில் தாங்க முடியாத சோகம் கவிந்து மனசையே அலசிப் பிழிகிறபோது, ‘சுடுகாட்டு வெட்டியானுக்கு ரொம்பக் கஷ்டம் போலிருக்கே. அதனாலதான் சாமிகிட்ட மொறையிடுதான்’ என்று ஊர் முழுக்கப் பேச்சு நடக்கும்.
பண்டிதனுக்கு ஏழெட்டு வயதிருக்கும்போது இந்த மாதிரி, இதே சொள்ளமாடசாமியின் முன்னால் நின்று அவன் தகப்பன் ஊதினதைப் பார்த்திருக்கிறான். அதன்பின் அவன் சாகும்வரை இப்படி முறையீடு செய்ததே இல்லை. தகப்பன் செத்துப்போன பிறகும் இவ்வளவு வருஷங்களுக்கு இடையில் செல்லையா பண்டிதன் இப்போதுதான் முறையீடு செய்யப்போகிறான். அவர்களுக்குள், அப்படிச் சாமி முன்னால் நின்று இழவுச் சங்கெடுத்து ஊதுவது ரொம்பவும் கேவலமானதுதான். பண்டிதனுக்கோ வேறு வழியில்லை. தன் கஷ்டத்தை ஊர்க்காரர்களுக்குத் தெரிவிக்க, அவன் குல வழக்கப்படி இதுதான் கடைசி முயற்சி. நாளைக்காலை ஊர் பெரிய மனிதர்கள் எல்லோரும் அவன் வீட்டுக்கு வந்து அவனுக்கு ஏதாவது பணமோ தானியமோ கொடுத்து உதவுவார்கள்.
ஆலமரத்தடியை நோக்கி நடக்கும்போது பண்டிதனுக்குக் கண் கலங்கிவிட்டது. அந்தக் கருக்கல் அமைதியில் சருகுகள் காலில் பட்டுச் சரசரக்க, சாமியின் முன்னால் போய் நின்றான். ஆலமரத்தின் பின்னால், உயரமாக வளர்ந்துகிடக்கும் எருக்கஞ்செடிகளினூடே தகர ஷெட்டுகள் தெரிந்தன. கண் இமைக்காது சாமி சிலையையே பார்த்துக்கொண்டிருந்தவன், ‘பாண்டி வேளாளன்னா பாண்டிய வேளாளன்தான். உசிரோட நேரா நின்னு, ‘என்னடா வேணும்’னு கேக்க மாதிரி என்னம்பா துடிப்போட செஞ்சிருக்கான்’ என்று மெதுவாகத் தனக்குள் சொல்லிக்கொண்டான்.
“சாமி எங்கஷ்டத்தைத் தீருமையா…” என்று சத்தம் போட்டு ஆலமரமே அதிர்ந்து விழுகிற மாதிரி கத்திவிட்டு, தோளில் கிடந்த சங்குகளை எடுத்து வாயில் வைத்து மூச்செடுத்து ஊதினான். மரத்திலிருந்த நாரைகள், கிளைகள் முறிவது போல் சடசடவென்று இறக்கைகளை அடித்துக்கொண்டு பறந்தன. அக்கரை ஏறிவிட்ட வண்டிக்காரர்கள் வண்டியை நிறுத்திவிட்டுத் திரும்பிப் பார்த்துக்கொண்டார்கள். வயிற்றுப் பசியையெல்லாம் வாய் வழியே காற்றாக்கி சங்குகளை ஊதினான். செல்லம்மா வீட்டு வாசலுக்கு வந்து எட்டிப் பார்த்து அப்படியே நின்றுவிட்டாள். பண்டிதனின் சங்கொலி ஆற்றங்கரை மணல், ஆற்றுத் தண்ணீர், அக்கரையில் உள்ள பச்சை வயல் வெளிகள், வண்டிப்பாதை சுற்றிக்கொண்டு போகிற வெள்ளிமலைக் குன்று இதையெல்லாம் தொட்டுத் தாண்டிப் போய்க்கொண்டே இருந்தது. அன்றைக்கு ரொம்ப அபூர்வமாக, ஒரு சங்கீதக்காரனைப் போன்ற கம்பீரத்துடன் மூச்சடைக்க, கண்களில் நீர் வழிய வழிய ஊதினான். மனசில் கொட்டிக் கிடந்த ஆவேசம் தீரும் மட்டும் ஊதிவிட்டு நிறுத்தினான்.
கொஞ்ச நேரத்துக்குச் சாமியையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான். ஆலமரத்தடியில் முழுவதுமாக இருட்டு கவிந்துவிட்டது. திடீரென்று சாமியின் முன்னால் நகர்ந்துபோய், ஆலமரத்தில் தொங்கிக் கொண்டிருந்த சிறிய தகர உண்டியலைப் பிடுங்கி, இடுப்பில் வேஷ்டி முந்தியில் கட்டிக்கொண்டு, ஆலஞ்சருகுகள் சரசரக்க வீட்டை நோக்கி நடந்தான்.
(தாமரை 1970)