ஜப்பானில் உள்ள பாரம்பரியவாதிகள் அவரது பெண்ணிய நாவலை வெறுத்தனர், ஆனால் ‘மார்பகங்களும் கருமுட்டைகளும்’ (Breasts and Eggs) மிகப் பெரிய அளவில் விற்பனையானது. ஆண்களுக்கான தனிச்சலுகை, கீழைத்தேய மிகைவழக்குச் சொற்றொடர்கள்… ஹருகி முரகாமி ஆகியவற்றைப் பற்றி எழுத்தாளர் பேசுகிறார்.
வாழ்க்கையின் “சீரற்ற தன்மையையும் நொதுமல் பண்பையும்” புத்தாய்வு செய்வதற்கே மியெகோ கவகமி பகுதியாக எழுதத் தொடங்கினார். ஆதலால், அவரது ‘மார்பகங்களும் கருமுட்டைகளும்’ நாவலின் வெளியீடு உலகளாவிய தொற்றுநோயால் தலைகீழாய்ப் போனதென்பது சற்று முரணானதே. தசாப்த காலமாக யப்பானில் விசுவாசமான வாசகர் தளத்தைக் கட்டியெழுப்பிய கவகமி, கோவிட் -19 இன் தாக்கத்துக்கு முன்னதாகவே உலகளாவிய ரீதியில் அதனை விஸ்தரிப்பதற்குத் தயாராகி, அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் நடைபெற்ற விழாக்களிலும் கலந்து கொண்டார். இன்னும், தனது இளவயது மகனுடன் வீடடங்கி இருப்பது அவரது பெண்ணிய ஆலைக்கு ஏராளமான தானியங்களை வழங்கி உள்ளதெனலாம்.
மேற்கு டோக்கியோவின் புறநகரில் உள்ள ஒரு ஓட்டலில் தேநீர் அருந்தியவாறே, “தாய்மார்கள் சுமையை ஏற்றுக்கொள்வார்கள் என்று வெகு சாதாரணமாகக் கருதப்படுகிறது,” என்று அவர் கூறுகிறார். “நம்மில் பலருக்குப் பணியிடத்திலும் வேலைகள் இருந்தாலும் – நாங்கள் குழந்தைகளைப் பார்த்துக் கொள்வோம், அவர்களுக்குக் கற்பிப்போம், உணவு தயாரிப்போம், எல்லா மேலதிக வேலைகளையும் செய்வோம்.” இந்த அழுகல், மேல்மட்டத்தில் இருந்து தொடங்குகிறது; அரசாங்கத்தின் முதலாவதும், முற்று முழுதாக ஆண்களைக் கொண்டதுமான கொரோனா வைரஸ் பணிக்குழுவின் விளம்பரப் புகைப்படத்தை அவர் நினைவு கூர்ந்தார்.
“நான் சற்று வாயடைத்துப் போனேன்” அவர் சிரிக்கிறார். “வைரஸ் எல்லாப் பெண்களையும் பூண்டோடு அழித்து விட்டதா? ஒரு தாயாக இருப்பது என்றால் என்ன என்பதைப் பற்றி அவர்கள் எப்படித் தெரிந்து கொள்ளக் கூடும்? அங்கே ஒரு சிக்கல் இருப்பதே அவர்களுக்குப் புரியவில்லை. ”
கவகமி யப்பானில் வாழும் பெண்ணியம் பேசுகின்ற எந்தவொரு படைப்பாளியை விடவும் தனது பெயரைச் சிறப்பாக ஆக்கிக் கொண்டுள்ளார். 2008 -ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட ‘மார்பகங்களும் கருமுட்டைகளும்’, முதன் முதலில் அவரது சொந்த இடமான ஒசாகாவின் எழுச்சி மிக்க பேச்சுவழக்கில் வலைப்பதிவாக எழுதப்பட்டது. இலக்கிய ஓரங்கட்டலில் இருந்து உழைக்கும் வர்க்கப் பெண்களை முன்னிழுத்தது. அதன் மையத்தில் முதுமை எய்தி வருகிற ஒற்றைப் பெற்றவளும், பார் ஹாஸ்டஸ்ஸுமான மக்கிகோவும், அவளது வசைப்பண்பு மிக்க, எழுத்து மூலம் மட்டுமே தாயுடன் தொடர்பு கொள்பவளான வளரிளம் பருவ மகள் மிடோரிகோவும் இருக்கின்றனர். ஆண் வர்க்கத்தின் இச்சையால் நிர்ணயிக்கப்படுகிற வேலைத்தல வரிசைமுறையில் இளம் பெண்கள் மக்கிகோவை இடம்பெயர்க்கத் தொடங்குகையில், அவள் தனது முலைக்காம்புகளிலும், தொய்ந்த மார்பகங்களிலும் தீவிர கவனம் செலுத்த ஆரம்பிக்கிறாள். ஒருவேளை மார்பக உள்வைப்புச் சிகிச்சை “பெண்களுக்கான இதழ்களில் காண்பதைப் போன்ற உடலமைப்பை” அவளுக்குக் கொடுக்கக் கூடும்.
தாய்மார்களான பெண்களின் விருப்பத் தேர்வுகள் யாவை ? அவர்கள் ஏன் உடல் தொடர்பிலான நியாயமற்ற எதிர்பார்ப்புகளுடன் பிணைக்கப்படுகின்றனர்?
இந்த நாவல் ஆண்களே அதிகமுள்ள ஜப்பானிய புனைகதைகளின் உலகில் ஒரு வெடிகுண்டைப் போல வீழ்ந்தது, கனதியான கேள்விகளை அதன் எழுச்சியான, சுற்றி வளைத்துச் சொல்கிற பாணியில் கடத்தியது. தாய்மார்களான பெண்களின் விருப்பத் தேர்வுகள் யாவை? எவ்வாறாகினும் அவர்கள் குழந்தைகளை விரும்பும்படி செய்வது யாது? அவர்கள் ஏன் உடல் தொடர்பிலான நியாயமற்ற எதிர்பார்ப்புகளுடன் பிணைக்கப்படுகின்றனர்? பாரம்பரியவாதிகள் இயல்பாகவே அதனை இகழ்ந்தனர். டோக்கியோவின் ஆளுநரும், முன்னாள் நாவலாசிரியருமான ஷின்டரோ இஷிஹரா அதனை “விரும்பத் தகாததும், சகிக்க முடியாததும்” எனக் குறிப்பிட்டார். பழமைவாத ஜப்பானிய அரசியலின் கீர்த்திமிகு தலைமையின் விமர்சனம் அந்நாவலின் 250,000 பிரதிகள் விற்பனையாவதை நிறுத்தவில்லை.
கவகமி அதன் பிற்பாடு ஜப்பானில் புனைகதை, கவிதை, சிறுகதைகளுக்கான பரிசுகளை அள்ளிக் கொண்டுள்ளார். தயாராகி வரும் ஒரு டஜனுக்கும் மேற்பட்ட மொழிபெயர்ப்புகளுடன், ஏன் அது இத்தனை பிரபல்யமானது என்பதை வெளிநாட்டு வாசகர்கள் விரைவில் கண்டறிய உள்ளனர். ஹெவன் (2009) 2021 -ஆம் ஆண்டில் ஆங்கிலத்தில் வெளியிடப்படவுள்ளது. அதைத் தொடர்ந்து தி நைட் பெலோங்ஸ் டு லவ்வர்ஸ் (2013) 2022 -இல் வெளியிடப்படும். கவகமி, ஜப்பானின் மிகவும் பிரபலமான நாவலாசிரியரான ஹருகி முரகாமியிடமிருந்து பாராட்டைப் பெற்றார்; வானுயர வளருகின்ற ஒரு விருட்சத்தைப் போல, கடலைத் தேடி ஓடுகின்ற நதியைப் போல, கவகமி “இடையறாது உயர்கிறார், படிவளர்ச்சியுறுகிறார்” என்கிறார் முரகாமி.
ஜப்பானியப் புனைகதை நட்சத்திரங்களுள் ஒன்றிடம் இருந்து கிடைத்த அங்கீகாரம் குறித்து கவகமி பெருமகிழ்ச்சியடைந்தார். ஆனால் 2017 ஆம் ஆண்டில் இருவரும் தொடர் நேர்காணல்களில் சந்தித்தபோது கவகமி முற்றிலும் சுமுகமாக நடந்து கொள்ளவில்லை. முரகாமியின் புனைகதைகளுக்குள் மறைந்திருக்கும் பாலியல் தன்மையை அவர் மரியாதையுடன், ஆனால் உறுதியாக அலசி ஆராய்ந்தார். “ஒரு பாலியல் செயல்பாட்டை நிறைவேற்றுவதற்காக மட்டுமே சிருட்டிக்கப் பட்டுள்ள ஏராளமான பெண் கதாபாத்திரங்களைப் பற்றி நான் பேசுகிறேன்” என்று அவர் கூறினார், அவரது கதைகளில் ஆண் கதாபாத்திரங்களுக்காக பெண்கள் அதிகளவில் “தியாகம் செய்யப்படுகிறார்கள்” என்பது குறித்து வருத்தம் தெரிவித்தார்.
இந்தக் குற்றச்சாட்டுக் குறித்துச் சற்றுத் திகைப்புற்றவர் போல் தோன்றிய முரகாமி பதிலளிக்கையில்: “நான் தனிப்பட்ட கதாபாத்திரங்கள் குறித்து அலட்டிக் கொள்வதில்லை. இது ஆண், பெண் இருசாராருக்கும் பொதுவானது.” ஆயினும் அது பாதுகாவலரை மாற்றுவதற்கான அறிகுறியாய் இருந்தது: ஜப்பானிய இலக்கிய நிலப்பரப்பின் கீழ் மைதானம் வரப்போகிறது என்றால், சில ஆண்கள் நெளியப் போகிறார்கள். முரகாமியின் படைப்புகளைத் தான் விரும்புவதாக இப்போது கவகமி அழுத்திச் சொல்கிறார். ஆனாலும், தான் எழுப்பிய வினா குறித்து விடாப்பிடியாக எதிர்வாதம் புரியும் அவர்: “இதைப் பற்றிக் கேட்பது முற்று முழுதாக எனது வேலையென நான் நம்பினேன்” என்கிறார்.
ஜப்பானின் இலக்கிய உலகம் ‘இன்னமும் நொதுமலானதும், கவர்ச்சிகரமானதும், சற்று மர்மமானதும்’ ஆகும். அதன் கவலைகள் சிறிய அளவின: ‘ஆனால், நாங்கள் அப்படியொன்றும் இல்லை’.
அவரது பிறிதொரு வேலை, பல தசாப்தங்களாக ஜப்பானைப் பற்றிய புனைகதைகளைப் புதிரானவையாக்கும் கீழைத்தேய மிகைவழக்குச் சொற்றொடர்களை விடுவிப்பதற்கு விரைந்து செயலாற்றல் என அவர் சொல்கிறார். முரகாமியைத் தவிர்த்து, எழுதப்பட்ட நியதி – அவர் யுக்கியோ மிஷிமா, யஸ்னரி கவபட்டா ஆகியோரை எடுத்துக்காட்டுக்களாகக் குறிப்பிடுகிறார் – “கெய்ஷா மற்றும் மவுண்ட் ஃபுஜி”யின் கையிருப்புப் படங்கள் நிறைந்தவை என்று.
“20 ஆண்டுகளுக்கு முன்பே எல்லாம் போய்விட்டது என்று நினைத்தோம், ஆனால், அப்படியல்ல” என்கிறார் கவகமி. ஜப்பானின் இலக்கிய உலகம் ‘இன்னமும் நொதுமலானதும், கவர்ச்சிகரமானதும், சற்று மர்மமானதும்’ ஆகும். அதன் கவலைகள் சிறிய அளவின. “ஆனால், நாங்கள் அப்படியொன்றும் இல்லை. அந்தப் படிவத்தை நிலைபெறச் செய்கின்ற நூல்களை எழுத நான் விரும்பவில்லை. உண்மையான மனிதர்களைப் பற்றி எழுதவே நான் விரும்புகிறேன்.”
கவகமி ஒசாகாவில் ஏழையாக வளர்ந்தார். அவருக்கு இருந்தது பெரும்பாலும் இல்லாதிருந்த தந்தையுடனான “கடினமான” உறவு என்று விவரிக்கிறார். அவர் தனது குடும்பச் சுமைக்குத் தோள்கொடுப்பதற்காகத் தனது பதினான்காவது வயதில் ஹீட்டர்களையும் மின் விசிறிகளையும் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிய ஆரம்பித்தார். “ஆனால் நான் எப்போதும் வேறுபட்ட, வளர்ந்து விட அவசரப்படுகிற, தத்துவஞானம் மிக்க ஒரு குழந்தையாகவே இருந்தேன்.” பின்னர், அவரது நாவலில் வருகிற மகிகோவைப் போல ஒரு பார் ஹாஸ்டஸ்ஸாக இருந்தார், உழைக்கும் வர்க்கச் சிறுமிகளுக்கு வறுமையிலிருந்தும், முன்னேற வழியற்ற தொழில்களில் இருந்தும் தப்பிக்க இது ஒரு தற்காலிக செல்வழி. இது அவரது சமகாலத்தவர்களான பல முன்னணி ஜப்பானியப் பல்கலைக்கழகங்களின் பட்டதாரிகளின் வாழ்க்கையிலிருந்து வெகு தொலைவில் இருந்தது.
வேறுபட்டதொரு வாழ்க்கையில் அவர் ஒரு முழுநேரப் பாடகியாய் இருந்திருப்பார். சில ஆல்பங்களை அவர் எழுத முனைந்திருந்த போதிலும், தனது கட்டுப்பாட்டில் பெரிதாக ஏதுமில்லை என்றுணர்ந்து, கைவிட்டுவிட்டார். “எனது சொந்தப் பாடல் வரிகளை எழுதுவதற்குக் கூட எனக்கு அனுமதியில்லை” என்று கூறுகிறார். பழமைவாத இலக்கிய உலகிற்குத் திருட்டுத்தனமாகச் செல்வது அவ்வளவு சிறந்த யோசனையாகப் படவில்லை. இருந்தாலும், அவரது முதல் வலைப்பதிவுகள் பாலியல், குடும்பம், பெண்மை குறித்து ஒளிவு மறைவின்றி அலசி ஆராய்ந்தன. உணர்ச்சி வசப்படாத, பணிந்து போகாத புதிய பெண் குரல் ஒன்றுக்காய்ப் பசித்திருந்த இரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தன. வலைப்பதிவிடுதல், ஆண்கள் மட்டுமே நடத்தி வந்த (இலக்கிய) முயற்சியைத் தவிர்த்துத் தனது வாசகர்களை நேரடியாகச் சென்றடைவதற்கான சுதந்திரத்தைக் கொடுத்தது.
கவகமி கூறுகையில் ஆரம்பத்தில் பெண்ணியம் குறித்த அவரது பிம்பம் “தொலைக்காட்சியில் பொங்கி எழும் வயதான பெண்கள்.. ஆனால், வயதாகும் போது பெண்களே பெண்ணியவாதிகளாய் இருப்பது தெளிவாகத் தெரிகிறது” என்கிறார். பெண்களின் உடல் குறித்துப் புரிந்துகொள்ள ஆண்கள் சிரமப்படுகிறார்கள், என்கிறார். “அவர்கள் கர்ப்பத்தின் போதான அல்லது பிரசவத்தின் பின்னரான மனச்சோர்வை ஒரு தடவை கூட அனுபவிப்பதில்லை.” ஆணாதிக்கத்துக்கு எதிரான போராட்டம் சோர்வளிப்பது; அது வீட்டிலேயே தொடங்குகிறது. அவர் நகைத்தவாறே சக எழுத்தாளர் கசுஷிகே அபேயுடனான தனது திருமணத்தை “ஒரு யுத்தத்திற்கு” ஒப்பிடுகிறார்.
அவரது பிரதான இலக்கிய ஈடுபாடு பெண்களின் வாழ்க்கை என்றால், மற்றையது குழந்தைகள். அவர் தனது குழந்தைப் பருவத்தை “நரகம்” என விபரிக்கின்றார். அவரது படைப்புகளில் குழந்தைகள் பெரும்பாலும் போராடும், மகிழ்வற்ற பெற்றோர்களதும், இடையறாது ஒலிக்கின்ற அவர்களது தனிமையான, குறையேற்புக் குரல்களதும் பலியாடுகளாக ஆகிவிடுகிறார்கள். அண்மையில் லூயிஸ் ஹீல் கவாய் மொழிபெயர்ப்பில் ஆங்கிலத்தில் வெளியான மிஸ் ஐஸ் சாண்ட்விச் என்ற குறுநாவலில், இளம் கதைசொல்லியின் தந்தை இறந்துவிட்டார். சுயவெறித்தனமான தாயார், மகன் உள்ளூர் சூப்பர்மார்க்கட் கவுண்டரில் பணிபுரியும் இளம் பெண் மீது கொண்ட பருவக்கவர்ச்சியைக் கவனிக்கத் தவறிவிடுகிறார்.
“குழந்தைகள் உலகை எப்படிப் பார்க்கிறார்கள் என்பதை நான் அவர்களது கண்ணோட்டத்தில் எழுத முயற்சிக்கிறேன்”, என்கிறார் கவகமி. “நீங்கள் உயிருடன் இருக்கிறீர்கள் என்பதை உணர்ந்துகொள்வது ஒரு அதிர்ச்சியாகும். ஒரு நாள், எந்த எச்சரிக்கையும் இல்லாமல் வாழ்க்கைக்குள் தள்ளப்படுகிறோம். ஒரு கட்டத்தில், நாம் ஒவ்வொருவரும் இறந்துவிடுவோம். இது புரிந்துகொள்வதற்குக் கடினமானதொன்று.” புரிந்து கொள்ள இயலாமையால் தோன்றும் அதிர்ச்சி, பயம், விலகல் போன்றவையே தனது எழுத்துக்களின் மையமாக விளங்குகிறது என்கிறார். “மரணம் நித்தியமானது என்று நாங்கள் அடிக்கடி பேசுகிறோம். பிறப்பு அதனிலும் குறைவானதன்று என என்னால் சிந்திக்காதிருக்க முடியவில்லை.”
தாய்மை என்பது நம் இருப்பின் மையத்தில் உள்ள மர்மத்தை ஆழமிகுதி உள்ளதாக்குகிறது. “இன்னொரு மனிதனை உருவாக்குவதில் அழகும், கூடவே வன்முறையும் இருக்கிறது” என்கிறார் கவகமி. “நீங்கள் ஒரு வாழ்க்கையை உருவாக்குகிறீர்கள். ஆனால் அது மரணத்திலேயே முடியும் என்பதை அறிவீர்கள். தன் மகன் வளர்ந்து வருவதைப் பார்க்கும் போது அவர் இதை இன்னும் ஆழ்ந்து சிந்திக்கிறார். “நான் அவனைத் தூக்கத்தில் பார்க்கும்போது, அவனது எதிர்காலத்தைப் பற்றிச் சிந்திக்கும் போது, அவன் நோய்வாய்ப்பட்டு, வலியை அனுபவிக்க நேர்ந்தால்…என்று எண்ணும்போது, உண்மையில் அவனது வாழ்க்கையைத் தொடக்கி வைத்த நபர் நான் என்பதை உணர்கிறேன். நான் தான் இதைத் தொடங்கினேன் – அது என் இச்சையின் மூலமே நிகழ்ந்தேறியது.”
பெற்றவளாயிருப்பது அவரது ஆக்கத்திறனளவைக் குறைத்து விட்டது – ஆனால், பெண்களுக்காக வாதாடும் அவரது பேரார்வத்தை அல்ல – தற்போது அவர் நாளொன்றுக்கு மூன்று மணி நேரமே எழுதுகிறார். மாற்றம் வரும் என்று நம்புகிறார். வாடிக்கையாளர்களுக்கு ‘குளிர் உணர்ச்சி விளைவை” ஏற்படுத்தியதால் ஜப்பானியப் பெண்கள் உயர்குதிக் காலணிகளை அணிவதைக் கட்டாயப்படுத்தும், கண்ணாடி அணிவதைத் தடைசெய்யும் பணியிட விதிகளுக்கெதிரான குறித்த சமீபத்திய ஆர்ப்பாட்டங்களை மேற்கோள் காட்டி, “பெண்கள் இனிமேலும் வாய்மூடி மௌனியாய் இருப்பதற்கில்லை” என்கிறார். இருப்பினும், இன்னும் வெகு தொலைவு செல்ல வேண்டி இருக்கிறது என விசனம் தெரிவிக்கிறார். “எனது அவதானிப்பில், என் போன்று குறித்த அந்தஸ்துடைய, நாற்பதுகளில் உள்ள பெண்கள் தாக்கப்படுவதில்லை; ஆனால், இருபதுகளில் உள்ள பெண்கள் தாக்கப்படத்தான் செய்கிறார்கள். பாடம் இங்கு என்னவெனில், ஆண்கள் தங்கள் தனிச்சலுகைகளை அவ்வளவு எளிதாக விட்டுவிட மாட்டார்கள். அவர்கள் “வலுவாக இருங்கள்; அழக்கூடாது” என மூளைச் சலவை செய்யப்படுகிறார்கள். ஆனால் எல்லோரும் வயதாகிற போது பலவீனமாக இருப்பது என்பது என்ன என்பதைப் புரிந்துகொள்கிறார்கள். அந்தப் பழைய விஷயங்கள் அனைத்தும் கேள்விக்குள்ளாக்கப்பட வேண்டிய இடத்தில் நாங்கள் இருக்கிறோம்.”
நேர்கண்டவர் : டேவிட் மக்நீல்
தமிழாக்கம் : தமிழ்க்கிழவி
நன்றி: த கார்டியன்.காம் (18.08.2020)
தமிழ்க்கிழவி
பிரித்தானியாவில் சுதந்திர பட்டய (Chartered) மனித வள ஆலோசகராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றுகிறார். லண்டன் மிடில்செக்ஸ் பல்கலைக்கழகத்தின் மனிதவள முதுகலைமாணி. இலங்கையில் வடக்கு கிழக்கு மாகாணத் திறைசேரியிலும், பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சிலும் முகாமைத்துவ உதவியாளராகவும், பிரித்தானியாவில் பிரபல நிறுவனம் ஒன்றில் தமிழ்/ஆங்கில, ஆங்கில/தமிழ் நேர்முக உரைபெயர்ப்பாளராகவும் இருந்தவர். இலங்கை அரச உத்தியோகத்தர்களுக்கு இடையிலான இலக்கிய நிர்மாணப் போட்டிகளில் கவிதை, சிறுகதை, மொழிபெயர்ப்பு ஆகியவற்றுக்கான பரிசில்களைப் பெற்றவர். கவிதை, சிறுகதை எழுதுவதில் ஆர்வமுள்ளவர். ‘தமிழ்க்கிழவியின் கிறுக்கல்கள்’ இவரது முதல் கவிதைத் தொகுப்பாக வெளிவந்துள்ளது.
வாழ்த்துக்கள் சகோதரி, சிறப்பான மொழியாக்கம் !
உணர்வு பிறழாமல் மொழியாக்கம் செய்வது என்பது சிக்கலான, கடினமான செயலும் கூட.
அதை கச்சிதமாக, சிறப்புற செய்திருக்கும் அன்புச் சகோதரி தமிழ்க்கிழவி அவர்களுக்கு இனிய வாழ்த்துப் பூக்கள்.