1)அணுக்கம்
எனது
ஆயுள் பரியந்தம்
நீந்தினாலும்
கடக்கமுடியாத
கடலுக்கு அப்பால்
அக்கரையில்
நிற்கிறாய்
நீ
நினைத்தால்
நிமிடங்களில்
நீர்மேல் நடந்துவந்து
காணும்படிக்கு
இதோ
இக்கரையில்தான்
இருக்கிறேன்
நான்.
2) பிராயம்
அப்படியேதான் இருக்கிறாய்
என்பது அம்மா
எவ்வளவோ மாறிவிட்டேன்
என்கிறாள் மனைவி
தொட்டுப்பேசக் கூசுகிறான்
வளர்ந்துவிட்ட மகன்
நீயே பார்த்துக்கொள் என்று
காதோர நரையைக் காட்டுகிறது
கண்ணாடி
இடுப்பிலிருந்து
இறங்கப் பார்க்கும் கால்சட்டையை
ஒரு கையால்
இழுத்துப் பிடித்தபடி
மறுகையால்
பையில் உருளும்
கண்ணாடி கோலிகளைத்
தொட்டெண்ணும்
சிறுவன் எனது
விரலுக்குச் சிக்கியும்
மனதுக்குத் தப்பியும்
நடுவில் சில
நழுவிப்போய்விட
முழுதாய் ஒருமுறையும்
பின்னமின்றி எண்ணி
முடிக்கவில்லை
இன்னமும் நான்.
3) கொள்முதல்
திறந்த பிறகுதான்
தெரிந்தது
உடல்
வெறும் கதவுதான் !
முட்டி மோதி
முகமிழந்த பிறகுதான்
புரிகிறது
மனம்
ஊடுபரவவியலாதவொரு
சவ்வு.
க.மோகனரங்கன்
வளர்ந்துவிட்ட ஒவ்வொருவருக்குள்ளும் ரகசியமாகவே வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் கடந்துவந்த பருவங்களின் கதாநாயகர்கள். யாருமறியாமல் அவ்வப்போது எட்டிப் பார்த்து நம்முடன் உரையாடி, நினைவுகளைக் கிளறி நெகிழ்த்தி.. சில போது கவிதைகள் படைக்கக் காரணமாகவும் இருக்கிறார்கள்.
முழுதாய் ஒருமுறையும் பின்னமின்றி எண்ணி முடிக்கமுடியாத கவிஞன் க.மோகனரங்கன்.
இவரில் கடல்தாண்டுதலையும் கதிர்பாரதியில் ஆறுதாண்டுதலையும் ஒப்பிட்டு நெஞ்சுபெருகினேன்.
ஊடுபரவயியலாத ஒரு ஜவ்வு மனம்
மோகனரங்கன்
இதோ இக்கரையில் தான் இருக்கிறேன் நான்