1.அதிகரிக்கும் சிறுபொழுது.
காடுறை உலகில் மேகங்கள் இறங்கவில்லை
நிலத்தின் தலைமக்கள் மரம் சுமக்கிறார்கள்
சுமை மனிதனாக இருக்கும் தலைவன்
லாரி டயர்களுக்கு இடையே கண்ணயரும் தருணம்
குளம்படிச் சத்தம் கேட்டு தூக்கம் அழிகிறான்
எல்லைக்கு அப்பாலுள்ள அவன் வரும் நாள் தெரியவில்லை
இங்கு, சிறுபொழுதின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது தோழி!
2.முள் தீண்டிய சதை.
மேலாண்மையைச் சற்றே தவறவிட்ட ஊரார்
ஊற்று தோண்டும் ஆறு வழியே
குட்டியானையில் தொற்றிக்கொண்டு
நிலக்கரி அள்ளப் போகும் வளநாட;
இருமருங்கிலும் இருக்கும் கரிவேலிகள் கிழித்துவிடக்கூடும்
உடலைக் குறுக்கி உள்ளே இழுத்துக்கொள்
முள் தீண்டிய சதையின் எரிச்சல் கொடியது
எலும்பைச் சுடும் இவ்வெய்யிலில்
பருத்தியெடுக்கும் எனது
உப்பூறிய உடலில் அவ்வாதையை நான் அறிவேன்.
3.’பவர் ஜெல்’ பாலை
தீயின் கனிந்த முத்தம் பட்டதும்
பற்றிக்கொண்டு சுண்ணாம்புப் பாறைக்கு ஓடும்
திரியைக் கொளுத்தி விடுவதற்காக
இவ்விரவின் இரண்டாம் சாமத்தில் காத்திருக்கும் நம் தலைவன்
புராதன அடையாளத்தோடு கிடக்கும்
மாட்டு எலும்புகளின் துவாரங்களின் வழி
காற்று வெளியேறும்போது
கற்களைத் தழுவிக் கிடப்பான்
சாமந்திக் காடுகளை பேராசைக்குப் பலிகொடுத்த நம் பாவங்கள்
குறுகிய காலத்தில் பாலையாகிவிடுமென்று அவனுக்குத் தெரிந்திருக்கிறது
“நம் நிலத்தில் உதிரும் கள்ளிப் பூக்கள்
நாட்டு வெடிமருந்தின் நெடியோடு இருக்கின்றன ” என்று
தூக்கத்தில் அவன் அனத்தும்போது
அவனது மார்பில் தலை வைத்துப் படுத்திருக்கும் எனக்கு
உயிர் நடுங்கும்
இப்பிரிவு அந்நடுக்கத்தை மேலும் அதிகரிக்கிறது.
4.தாழிச் சில்லுகள் கிடக்கும் பாதை
தானியங்கள் விளையாடிய நிலம்
வெறும் கற்களாகவும் புழுதியாகவும் பறக்கும் ஆலைக்கு
பாதங்களை எரிக்கும் கருப்பு சப்பாத்துகளோடு
கடைநிலைப் பணிக்குச் செல்கிறான் நம் தலைவன்
உடைந்த தாழிச் சில்லுகள் கிடக்கும்
வழியே
நடந்து செல்லும்போதெல்லாம்
நடுகற்களின் அழுகை சத்தம் கேட்கிறதென்று
அவன் சொல்லக் கேட்டிருக்கிறேன்
தன் தாயையும் தந்தையையும்
ஒரு கேடு காலத்தில் தூக்கிக் கொடுத்துவிட்டவனுக்கு
இந்தப் பூமியில் அவர்களின்
எலும்புகள் கூட ஆழ்ந்து உறங்காது
என்ற துயரம் இருக்கிறது
இனிய தோழியே
என் வருத்தமெல்லாம் இதுதான்
இந்தப் பாலை நிலம்
இன்னும் எத்தனை மனக்குறைகளால்
அவனைக் கொல்லப் போகிறதோ?
5.காமம் ஒரு தனி நிலை
எவ்வழி நோக்கினும் சிறுமைக்குரியது சாதி
காற்றாலைக் கம்பத்தைப்போல் பெரிதிவள் காமம்
தென்னந்தோப்பில் எனக்கென ஆறடி ஒதுக்கினார் அப்பா
நிலம் முறைமையில் திரிந்த காலத்தில்
ஈரமற்ற மலைச்சரிவில் எதிரொலித்தது என் கேவல்
திணைப் பண்பின் நிமித்தம் காது கொடுக்கும் கடலோடியே
என் தலைவனின் பறை
இந்தக் கதையோடுதான் நெய்தலில் அதிர்கிறது.
–மெளனன் யாத்ரீகா.
அருமை தோழர்