குதிரை மீது வில்லியம் ஃபோல்க்னர்

மூலம்: ஹாவியேர் மரியாஸ்

தமிழில்: சித்துராஜ் பொன்ராஜ்


கொஞ்சம் ரசனை குறைந்த பழைய இலக்கியக் கதை ஒன்று வில்லியம் ஃபோல்க்னர் தனது As I Lay Dying நாவலை ஆறே வாரத்தில், நிலக்கரி சுரங்கத்தினுள்ளே இரவு  நேரத்தில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் காகிதங்களைத் திருப்பிப்போட்ட ஒரு தள்ளுவண்டியின் மீது வைத்து, சேறு படிந்த தனது தலைக்கவசத்தில் பொருத்தப்பட்டிருந்த விளக்கிலிருந்து விழுந்த மங்கலான வெளிச்சத்தில் எழுதினார் என்கிறது. இந்தக் கொஞ்சம் ரசனை குறைந்த கதை ஃபோல்க்னரை மற்ற ஏழை, சுய அர்ப்பணிப்புள்ள, கொஞ்சம்போல் தொழிலாளர் வர்க்க எழுத்தாளர்களின் வரிசையில் சேர்க்க மேற்கொள்ளப்பட்ட முயற்சி என்பது தெளிவாகவே தெரிகிறது.

அந்த நாவலை எழுத வில்லியம் ஃபோல்க்னர் ஆறு வாரங்கள் எடுத்துக் கொண்டார் என்பது வரையிலும் உண்மைதான்.  ஒரு கோடைக் காலத்தின்போது ஃபோல்க்னர் தான் வேலை செய்த மின் தொழிற்சாலையில் தனது நேரடி மேற்பார்வையிலிருந்த பாய்லருக்குள் நிலக்கரியை அள்ளிப் போடும் நேரம் போக இடையில் கிடைத்த நீண்ட இடைவெளிகளைப் பயன்படுத்தி இந்த நாவலை எழுதினார். அந்த இடத்தில் யாரும் தன்னைத் தொந்தரவு செய்யவில்லை என்றும், இயந்திரத்தின் மெல்லிய உறுமல் மனதுக்கு இதமாக இருந்ததாகவும் அந்தச் சூழலே நல்ல கதகதப்பாகவும் அமைதியாகவும் இருந்ததாக ஃபோல்க்னர் பின்னால் சொல்லி இருக்கிறார்.

வாசிப்பிலும் எழுத்திலும் முற்றாக மூழ்கிவிடக் கூடிய ஆற்றல் ஃபோல்க்னருக்கு இருந்தது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. மிஸிஸிபி பல்கலைக் கழகத்தில் தபால் நிலைய உதவியாளர் வேலையிலிருந்து ஃபோல்க்னர் தூக்கப்பட்ட பிறகு ஃபோல்க்னரின் தந்தை அவருக்கு மின் தொழிற்சாலை வேலையை வாங்கித் தந்திருந்தார். பல்கலைக் கழக விரிவுரையாளர்களில் ஒருவர் ஃபோல்க்னருக்கு எதிராகப் புகார் தந்திருந்தார். ஃபோல்க்னர் பணியாற்றிய தபால் நிலையத்தில் பின் கதவுக்கு அருகில் இருக்கும் குப்பைத் தொட்டியில் கை விட்டுத் தேடித்தான் விரிவுரையாளரால் தனக்கு வந்த கடிதங்களைத் தேடி எடுக்க முடிந்ததாம். ஃபோல்க்னரின் பணிக்காலத்தின் போது திறக்கப்படாத கடித மூட்டைகள் குப்பைத் தொட்டியின் அருகில் கிடப்பது வழக்கமான காட்சியாக இருந்தது. யாரும் தனது வாசிப்புக்கு இடையூறாக வருவது ஃபோல்க்னருக்குச் சம்மதம் இல்லை. இதன் பயனாக தபால் நிலையத்தில் தபால் தலைகளில் விற்பனை அதிர்ச்சியளிக்கும் வகையில் குறைந்தது. தன்னிலை விளக்கமாக ஃபோல்க்னர் தனது குடும்பத்தாரிடம் தபால் நிலையத்துக்கு வருபவர்களை எழுந்து போய் விசாரிப்பது தனக்கு இஷ்டமில்லாத வேலை என்றும், தபால் தலை வாங்க இரண்டு காசு கொண்டுவருபவனுக்கு எல்லாம் தன்னால் சேவகம் செய்ய முடியாது என்று சொன்னார்.

ஒரு வேளை ஃபோல்க்னர் கடிதங்களிடம் காட்டிய பாராமுகத்துக்கும் வெறுப்புக்கும் அவருடைய தபால் நிலைய அனுபவமே தொடக்கப்புள்ளியாக இருக்கலாம். ஃபோல்க்னர் இறந்தபோது வாசகர்கள் அனுப்பி வைத்த, கடிதங்களும், பார்சல்களும், எழுத்துப் பிரதிகளும் திறக்கப்படாத நிலையில் குவியல் குவியலாக அவருடைய அறையில் கண்டெடுக்கப்பட்டன. உண்மையில், பதிப்பகத்தாரிடமிருந்து வந்த கடிதங்களை மட்டும் அவர் திறந்து பார்த்தார். அதுகூட மிகவுன் ஜாக்கிரதையாகவே செய்தார். முதலில் தபால் உறையின் ஓரத்தில் ஒரு சின்ன ஓட்டையை ஏற்படுத்தி உறைக்குள் காசோலை இருக்கிறதா என்று உறையை ஆட்டிப் பார்ப்பார். காசோலை இல்லை என்று தெரிந்தவுடன் அந்தக் கடிதமும் மற்ற திறக்கப்படாத கடிதங்கள் உள்ள குவியலைப் போய்ச் சேரும்.

ஃபோல்க்னருக்கு எப்போதும் காசோலைகள் மீது அதீத ஆர்வம் இருந்தது.  ஆனால் இதை வைத்து அவர் பேராசைக் காரர் என்றோ கஞ்சன் என்றோ யாரும் முடிவு செய்துவிடக் கூடாது. உண்மையைச் சொல்லப் போனால் அவர் நல்ல செலவாளியாக இருந்தார். சம்பாதித்த பணத்தை மிக வேகமாகச் செலவழித்துக் காலி செய்து விடுவார். அதன் பிறகு அடுத்த காசோலை வரும் வரைக்கும் கடன் வாங்கிய காசில் வாழ்வார். காசோலை வந்தவுடன் பழைய கடன் பாக்கிகளை அடைத்துவிட்டு மறுபடியும் குதிரைகள், சிகரெட்டுகள், விஸ்கி என்று செலவு செய்வார். ஃபோல்க்னரிடம் அதிகமான உடுப்புக்கள் இருந்ததில்லை. ஆனால் அவரிடம் இருந்த உடுப்புக்கள் அத்தனையும் விலை உயர்ந்தவையாக இருந்தன. அவருக்குப் பத்தொன்பது வயதாக இருந்த போது அவருடைய ஆடம்பரமான உடுப்புக்கள் அவருக்கு ‘துரை’ என்ற புனைப்பெயரை வாங்கித் தந்தன. இறுக்கமான கால்சட்டைகளை அணிவதுதான் வழக்கம் என்றால் ஃபோல்க்னரின் கால்சட்டைகள் அவர் வாழ்ந்த மிஸிஸிபி மாநிலத்தின் ஆக்ஸ்போடு நகரத்தில் மிகவும் இறுக்கமானவையாக இருக்கும். அவர் 1916ல் அந்த நகரத்தை விட்டு கனடாவின் ரொரொண்டோ நகருக்குப் போய் பிரிட்டிஷ் விமானப் படையில் சேரப் பார்த்தார். இதற்கு முன்னால் அமெரிக்க விமானப்படை அவருக்குப் போதிய படிப்பில்லை என்று சொல்லி ஃபோல்க்னரை நிராகரித்து இருந்தது. பிரிட்டிஷ்காரர்கள் அவர் மிகவும் கட்டையாக இருப்பதாகச் சொல்லி அவரை நிராகரிக்கப் பார்த்தார்கள். தன்னை ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் தான் ஜெர்மானிய விமானப் படையில் சேரப் போவதாக ஃபோல்க்னர் மிரட்டியவுடன் அவரை ஏற்றுக் கொண்டார்கள்.

சித்துராஜ் பொன்ராஜ்

ஒரு நாள் ஓர் இளைஞன் ஃபோல்க்னரைப் பார்க்கப் போனான். ஃபோல்க்னர் அணைந்து போன பைப்பை ஒரு கையிலும் மறுகையில் தனது மகள் ஜில் அமர்ந்திருந்த இளம் குதிரையின் கடிவாளத்தைப் பிடித்தபடியும் நின்றிருந்தார். பேச்சுக் கொடுக்கும் ஆசையில் இளைஞன் ஃபோல்க்னரிடம் அவருடைய மகள் நீண்ட நாளாய்க் குதிரையேற்றம் பயில்கிறாளா என்று கேட்டான். ஃபோல்க்னர் உடனே பதில் சொல்லவில்லை. பிறகு “மூன்று வருடங்கள்” என்று சொன்னவர், “உனக்குத் தெரியுமா ஒரு பெண்ணுக்கு மூன்று விஷயங்கள் செய்யத் தெரிந்தால் மட்டும் போதும்” என்றார். மீண்டும் கொஞ்சம் மௌனம். “உண்மையைச் சொல்வது, குதிரைச் சவாரி, காசோலையில் கையெழுத்துப் போடுவது.”

ஃபோல்க்னரின் மனைவி எஸ்டெல் ஏற்கனவே வேறொருத்தருக்கு மனைவியாக இருந்தவக். ஃபோல்க்னரைத் திருமணம் செய்வதற்கு முன்னால் அவளுக்கு இரண்டு குழந்தைகள் இருந்தார்கள். ஜில் அவர்களுக்குப் பிறந்த முதல் மகள் இல்லை. அவர்களுக்குப் பிறந்த முதல் பெண் குழந்தை பிறந்து ஐந்து நாட்களிலேயே இறந்து போனது. அந்தக் குழந்தையின் பெயர் அலபாமா (அமெரிக்க மாநிலம் ஒன்றின் பெயர்). எஸ்டெல் பிள்ளை பெற்ற பிறகு பலவீனமாக இருந்ததால் குழந்தை இறந்த போது படுக்கையிலேயே இருந்தாள். ஃபோல்க்னரின் சகோதரர்களும் ஊரில் இல்லாததால் அவர்களும் குழந்தையைப் பார்க்கவில்லை. செத்துப்போன குழந்தைக்கு ஈமச் சடங்குகள் செய்வது அர்த்தமில்லாததாக ஃபோல்க்னருக்குப் பட்டது.  ஐந்து நாட்களே ஆன ஒரு குழந்தை வெறும் நினைவே அன்றி முழு மனுஷி இல்லை என்று அவர் கருதினார். ஆக, அந்தக் குழந்தையை ஒரு குட்டிச் சவப்பெட்டிக்குள் வைத்துச் சவப்பெட்டியைத் தன் மடியில் வைத்தபடி அதை மயானத்துக்கு எடுத்துச் சென்றார். யாருக்கும் சொல்லாமல், யார் துணையும் இல்லாமல் அவளைக் சவக்குழியில் அடக்கம் செய்துவிட்டுத் திரும்பினார்.

அவருக்கு 1950ல் இலக்கியத்துக்கான நோபல் பரிசு கிடைத்தபோது ஃபோல்க்னர் முதலில் அதைல் பெற்றுக் கொள்ள ஸ்வீடனுக்குப் போகத் தயங்கினார். இறுதியில் ஸ்வீடனுக்குப் போனது மட்டுமில்லாமல் அமெரிக்க அரசின் அதிகாரப்பூர்வப்ன்பிரதிநிதி என்ற சாக்கில் ஐரோப்பா, ஆசியா எல்லாம் பார்த்துவிட்டு வந்தார். அங்கே அவருக்கு தரப்பட்ட முடிவில்லாத விருந்துபசரிப்புக்களை அவர் ரசிக்கவில்லை. அவருடைய நூல்களைப் பிரஞ்சு மொழியில் பதிப்பித்த காலிமார்ட் நிறுவனத்தார் ஏற்பாடு செய்திருந்த ஒரு விருந்தில் கலந்து கொண்ட ஃபோல்க்னர் நிருபர்கள் கேட்ட ஒவ்வொரு கேள்விக்கும் ஓரடி பின்னால் எடுத்து வைப்பாராம். அப்படி பின்னால் நகர்ந்த் நகர்ந்து அவர் கடைசியில் சுவரை அடைந்த பிறகுதான் நிருபர்கள் அவர்னீது பரிதாபப்பட்டோ அவர் தேறாத ஆள் என்று நினைத்தோ அவரை விட்டார்களாம். ஃபோல்க்னர் கடைசியில் அந்த இடத்திலிரிந்த தோட்டத்தில் தஞ்சம் புகுந்தார். சில பேர் அங்குப் போய் ஃபோல்க்னருடன் பேச முயன்றார்கள். அவர்கள் உடனேயே ‘வெளியே மிகவும் குளிராக இருக்கிறது’ என்று சொல்லி மறுபடியும் வீட்டுக்குள் வந்துவிட்டார்கள். ஃபோல்க்னர் அதிகம் பேசுவதை வெறுத்தார். வாழ்க்கை முழுவதும் ஐந்து முறைதான் அவர் நாடகம் பார்க்கப் போனார். ஹாம்லெட்டை மூன்று முறை பார்த்தார். A Midsummer Night’s Dream என்ற ஷேக்ஸ்பியரில் மற்றொரு நாடகத்தை ஒரு முறையும் Ben-Hurஐ ஒரு முறையும் பார்த்தார். அவ்வளவுதான். அவர் ஃபிராய்டை (Freud) படித்ததே இல்லை. அப்படித்தான் ஒரு முறை சொன்னார். “நான் அவரொ படித்ததே இல்லை. ஷேக்ஸ்லியர் கூடத்தான் அவரைப் (ஃப்ராய்டை) படித்ததில்லை. ஹெர்மான் மெல்விலும் அவரைப் படித்திருக்க மாட்டார் என்றுதான் நினைக்கிறேன். நிச்சயமாக மோபி டிக் (மெல்வில்லின் நாவலில் வரும் திமிங்கலம்) அவரைப் படித்திருக்க வாய்ப்பில்லை”. ஃபோல்க்னர் ஒவ்வொரு வருடமும் செர்வாண்டெஸின் டாம் கிஸோட் நாவலைப் படித்தார்.

ஆனால் அவர் எப்போதுமே உண்மையைச் சொன்னதில்லை என்று ஃபோல்க்னரே சொல்லியிருக்கிறார். அவர் பெண் இல்லை என்பதால் உண்மையைச் சொல்ல அவருக்கு எவ்விதமான கட்டாயமும் இருக்கவில்லை. ஆனால் காசோலைகள் மீதும் குதிரைச் சவாரிகள் மீதும் ஒரு பெண்ணுக்கு இருக்கும் விருப்பம் அவருக்கு இருந்தது. ஃபோல்க்னர் பொருளாதார ரீதியில் தனது மிக வெற்றிகரமான நாவலான Sanctuaryஐ காசுக்காக எழுதியதாகச் சொல்லியிருக்கிறார். “நல்ல குதிரை ஒன்றை வாங்க எனக்குப் பணம் தேவைப்பட்டது.” அங்கெல்லாம் குதிரையில் போக முடியாததால் அவர் பெரிய நகரங்களுக்குப் போவதில்லை என்று ஃபோல்க்னர் சொல்லியிருக்கிறார். அவருக்கு வயதான போதுகூட மருத்துவர்கள் குடும்பத்தார் அறிவுரைகளை மீறி குதிரையில் சவாரி செய்வதையும் குதிரையின் மீதிருந்த படியே வேலிகளைத் தாண்டுவதையும் தொடர்ந்தார். இதனால் பல முறை விழுந்து காயம்பட்டது. அவர் கடைசி குதிரைச் சவாரியும் இப்படித்தான் முடிந்தது. ஃபோல்க்னரை ஏற்றிக் கொண்டு போன குதிரை அவர் இல்லாமல் வீட்டுக்கு வந்ததை கண்ட அவர் மனைவி டாக்டர் ஃபெலிக்ஸ் லிண்டரைத் துணைக்கு அழைத்து அவரைத் தேடிப் போனார். ஃபோல்க்னரை சுமார் அரை மைல் தூரத்தில் நொண்டிக் கொண்டு நடந்து வருவதை அவர்கள் பார்த்தார்கள். குதிரை அவரைக் கீழே தள்ளிவிட முதுகு பதிய தரையில் விழுந்த ஃபோல்க்னர் குதிரையில் மீண்டும் ஏற முடியாமல் இருந்திருக்கிறார். இறுதியில் ஃபோல்க்னர் சிரமப்பட்டு எழுந்து நின்ற போது குதிரை திரும்ப வந்து அவரைத் தன் மூக்கால் தொட்டிருக்கிறது. ஃபோல்க்னர் குதிரையின் கடிவாளத்தைப் பிடிக்கப் பார்த்திருக்கிறார், ஆனால் முடியவில்லை. அதன் பிறகு குதிரை தனியாய் வீட்டிற்கு வந்திருக்கிறது.

பலமான காயங்களோடு பெரும் வலியோடு ஃபோல்க்னர் கொஞ்ச நாள் படுக்கையில் கிடந்தார். காயங்கள் முழுவதும் ஆறுவதற்கு முன்னரே செத்துப் போனார். பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தபோது ஃபோல்க்னரின் சாவு நிகழ்ந்தது. ஆனால் இலக்கிய மரபு அவர் குதிரையிலிருந்து விழுந்ததால் இறந்தார் என்பதை நம்ப மறுக்கிறது. மூளையில் உள்ள ரத்த நலம் ஒன்று வெடித்து 1962ம் ஆண்டு ஜூலை மாதம் 6ம் தேதி ஃபோல்க்னர் இறந்தார். அப்போது அவருக்கு அறுபத்து ஐந்து வயதுகூட ஆகியிருக்கவில்லை.

அவர் காலத்தில் வாழ்ந்த தலை சிறந்த அமெரிக்க எழுத்தாளர்களைச் சொல்லச் சொன்ன போது ஃபோல்க்னர் அவர்கள் எல்லோரும் தோற்றுப் போனவர்கள் என்றும், தோல்வியடைந்தவர்களில் தாமஸ் வூல்ப்ஃ (Thomas Wolfe) தலைசிறந்தவர் என்றும் தானே தோற்றவர்களில் இரண்டாவத் தலைசிறந்தவர் என்றும் ஃபோல்க்னர் சொன்னார். இந்தக் கருத்தைத் தன் வாழ்நாள் முழுவதும் பல முறை ஃபோல்க்னர் சொல்லியிருக்கிறார். ஆனால் இதில் கவனிக்க வேண்டியது ஒன்று உள்ளது: தாமஸ் வுல்ப்ஃ 1938ல் இறந்திருந்தார். ஃபோல்க்னர் மேற்சொன்ன பதிலைக் கொடுத்த வருடங்களில் அமெரிக்க எழுத்துலகில் ஃபோல்க்னர் மட்டுமே உயிருடன் இருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.