குறும்புனைவு: ‘தெரெசா’ எனக் கூவிய மனிதன்

எழுதியவர்:– இடாலோ கால்வினோ 

தமிழில்: பிரவீண் பஃறுளி

நான் நடைபாதையிலிருந்து  கீழிறங்கினேன். சில அடிகள் திரும்பி நடந்தேன். வீதியின் நடுவே  நின்று மேலே பார்த்தபடி, கைகளை உதடுகளிடம் குவித்து ஒலிபெருக்கி போல செய்தேன். அந்த  குடியிருப்பு அடுக்கின் மேல்தளத்தைப் பார்த்து ” தெரெசா…” எனக் கூவி அழைத்தேன். நிலவொளியில் என் நிழலுரு அதிர்ந்து காலடியில்  மண்டியது. வீதியில் யாரோ ஒருவன் நடந்து வந்தான். “ தெரசா…” என மீண்டும் அழைத்தேன். அந்த மனிதன் என்னை நெருங்கி “நீ உரக்க அழைக்கவில்லை என்றால்  அவளுக்குக் கேட்காமல் போகலாம். நாம் இருவரும் சேர்ந்து அழைப்போம். எனவே மூன்று வரை எண்ணுவோம் , மூன்றின் போது இருவரும் ஒன்றாக விளிப்போம்.” என்றான். பின் அவனே தொடங்கினான் “ ஒன்று, இரண்டு, மூன்று” இருவரும் உரக்கக் கத்தினோம்

 ”தெர்ர்ர்ர்…ரெ..சா..” 

திரையரங்கிலிருந்தோ உணவகத்திலிருந்தோ வீடு திரும்பிக் கொண்டிருந்த  ஒரு நண்பர்கள் கூட்டம் எங்களைப் பார்த்தது. “ நாங்களும் உங்களுக்கு உதவுகிறோம்” என அவர்களும் எங்களோடு சேர்ந்துகொண்டார்கள். முதலாமாவன்  எண்களைச் சொல்ல, ’மூன்று’ என்றபோது , எல்லோருமாக சேர்ந்து உரக்கக் கூவினோம் ”தெர்ர்ர்ர்…ரெ..சா..”

தெருவில் போய்க்கொண்டிருந்தவர்கள் வேறு சிலரும் எங்களோடு சேர்ந்துகொண்டார்கள். அடுத்த ஒரு கால்மணி நேரத்தில் அங்கு  இருபது பேராவது கூடிவிட்டிருப்பார்கள். போகப்போக புதிதாகப் பலர் சேர்ந்துகொண்டிருந்தார்கள். எங்களுக்குள் ஒழுங்குபடுத்திக்கொண்டு எல்லொரும் ஒரே நேரத்தில் ”தெ..ர்ர்ர்..ரெ..சா” எனக் அழைப்பது  எளிதாக இருக்கவில்லை. மூன்று சொல்லப்படுவதற்கு முன்பாகவே ஒருவராவது முந்திவிடுவதும் அல்லது பிந்திவிடுவதுமாக இருந்தாலும் ஒருமித்த குரலில் அழைப்பதை மெல்லப் பழகிக் கொன்ண்டோம்.

’தெ’  என்பதை தாழ்வான குரலில் நெடிதாகவும், ’ரெ’ வை உச்சத்திலும்    நீட்டியும் ‘சா’ என்பதை தாழ்வாகவும் விரைந்தும் ஒலிக்க வேண்டும் எனத் திட்டமிட்டுக் கொண்டோம்.  அது சரியானதாக இருந்தது.

யாராவது கூட்டத்தில் இருந்து  சென்றுவிடும்போது அவ்வப்போது ஒரு  சின்ன பூசல் மட்டும். அதனை சரிசெய்துகொள்ள நாங்கள் தொடங்கும்போது , ஒருவன், அவனது குரலைக் கேட்டால்   தவிட்டு நிற தேமல்முகம் கொண்டவனாக இருந்திருக்க வேண்டும், “ அவள் வீட்டில் இருக்கிறாள் என உறுதியாகத் தெரியுமா” என்றான். 

 நான் ”தெரியாது’ என்றேன்.
”இது மோசம்”  என்ற இன்னொருவன் “ ஒருவேளை சாவியை மறந்துவிட்டாயா?” எனக் கேட்டான்.

“ உண்மையில்.. சாவி என்னிடம்தான் உள்ளது “ என்றேன்.

சிலர் கேட்டார்கள் ”அப்படியென்றால்…நீயே ஏன் மேலே செல்லக்கூடாது “ 

நான் இங்கு வசிக்கவில்லை.. நகரின் மறுகோடியில் வசிக்கிறேன்”  என்றேன்.

“நல்லது!..எனது கேள்விஆர்வத்தைப் பொறுத்துக்கொள்”…“ பின் யார் இங்கு வசிக்கிறார்கள்” என்றது தவிட்டுத் தேமல் முகம்.

“ எனக்கு உண்மையில் தெரியாது “ .. என்றேன். 

கூட்டத்தினரிடம் சிறிது எமாற்றம்.  ”அப்படியென்றால் … உன்னால் கொஞ்சம் விளக்கிக் கூற முடியுமா “ பற்கள்புலனாக ஒருவன் கேட்டான். “ நீ ஏன் இங்கு நின்று தெரெசா என விளித்துக் கொண்டிருக்கிறாய்”

 நான் கூறினேன்.. ”என்னைப் பொறுத்தவரையில்…உங்களுக்குப் பிடித்தால்… நாம்  வேறு பெயரையும் அழைக்கலாம்; வேறெங்காவதும் முயற்சி செய்யலாம்… ” 

மற்றவர்கள் கொஞசம் எரிச்சலடைந்தார்கள்.  தவிட்டுத் தேமல் முகம், சந்தேகத்துடன் கேட்டான் “நீ எங்களை வைத்து எதும் தந்திரம் செய்யவில்லையே …”

”என்ன?!..“ நான் கொஞ்சம் சினந்தேன்.  எனது நம்பிக்கைக்கு ஏற்பிசைவை எதிர்பார்த்து மற்றவர்களைத் திரும்பிப் பார்த்தேன்.. அவர்கள் மௌனமாய் இருந்தார்கள். ஒரு கணம் அசௌகரியம் சூழந்தது.

“ பார்…” ஒருவர் நல்லெண்ண உணர்வுடன் கூறினார்… “ நாம் ஏன் இன்னும் ஒருமுறை தெரசா என அழைத்துப் பார்க்கக் கூடாது.. பின்பு கலைந்து செல்லலாம் “

எனவே மீண்டும் ஒருமுறை அதைச் செய்தோம் “ ஒன்று, இரண்டு, மூன்று, தெரசா” ஆனால் அது ஒழங்காக வரவில்லை.  பிறகு கூட்டத்தினர் கலைந்து வீடு கிளம்பினார்கள் . சிலர் ஒரு திசையில், சிலர் வேறு பக்கம். நான் ஏற்கனவே அந்த இடம் நீங்கி தெருமுனைக்கு வந்துவிட்டிருந்தபோதும்  ஒரு குரல் மட்டும் தொடர்ந்து இன்னும் அங்கு “ தெ..ர்ர்ர்..ரெ..சா..” என அழைத்துக்கொண்டிக்கக் கேட்டேன். யாரோ ஒருவர் , மிகப் பிடிவாதமானவர் அங்கேயே நின்றுவிட்டிருக்க வேண்டும்.  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.