(பெண், நிலம் மற்றும் விதைகள்)
அந்திக்கு பிந்திய பொழுது. வானத்தினை அண்ணாந்து பார்த்தாள் உலகம். நட்சத்திரங்கள் ஒன்றன் பின் ஒன்றாக முளைத்துக்கொண்டிருந்தன. சற்று நேரத்திற்கெல்லாம் மண்பானையில் அனலில் கொட்டி துவட்டும் முத்துச் சோளத்தினைப் போலப் பூத்துவிட்டிருந்தது வானம். அளவில் கண்களுக்குப் பெரியதாய் தட்டுப்படும் நட்சத்திரங்கள் தீப்பிடித்து எரிந்து தனது தலைக்கு மேலாகச் சிதறி விழுவதைப் போல இருந்தது.
நிலத்தோடு உழன்று கிடப்பவள் உலகம். காய்ந்து கிடந்தாலும் அவளது நிலத்தினைப் பார்க்காமல் அவளால் இருக்க முடிந்ததில்லை. உலகத்தின் மகள் வெள்ளி. பூத்து நின்றாள். தன் வீட்டு ஆம்படையானைப் பற்றிய கதையினை அவளுக்கு நினைத்துப் பார்க்ககூட நேரமில்லை. அது பழங்கஞ்சு. தான், பிள்ளை, குடித்தனம், நிலம் என்றான பாடுகளுக்கே அவளுக்குப் பொழுது போதுமானதாக இருந்தது. ஒற்றையாக இருக்கும் தானும் மகள் வெள்ளியோடும் காலத்தினைத் தள்ளவேண்டும் என்றாகிவிட்டிருக்கும் நிலை. அழிங்ஞா மலைக்காட்டுப் பகுதியில் அவளுக்கு ஒருக்காணி நிலமிருந்தது. நிலம் கொத்துக் குடிக் கிழவன் காலத்திலிருந்து தொடர்ந்து வரும் அடையாளம். உலகம் தனது நிலத்தில் போடும் விதை எப்பொழுதும் தனித்துவமானது. தன்னையும் தன் நிலத்தினையும் அவளால் வேறுவேறாகப் பிரித்துப் பாரக்க முடிந்ததில்லை. தனக்குள் விழுந்த விதையினை ஏந்தி, ஈரங் சேர்த்து பிள்ளையாக மலர்த்திப் போடுவதைப் போலத்தான் மண்ணும் பூ, காய், கனி, கொட்டையென பிள்ளையாகப் பெற்றுப் போட்டு வைத்திருக்கிறது என்று நினைத்துக்கொள்வாள்.
கட்டக்காறு, புளுதிக்காறு, குறுவைக் களையான், மொட்டைக் குறுவை என ஒவ்வொரு பட்டத்திற்கும் ஒரு விதையினை மண்ணில் தூவியிருக்கிறாள். அழிங்ஞாவில் அவளிடம் மட்டும்தான் பூட்டன் காலத்து விதைகள் இருந்தன. மற்றவர்களிடம் நிலமே ஏடுமாறி விட்டிருந்தது. இருப்பவர்களிடம் அச்சி தரும் பட்டணத்தின் அசலூரு விதைதான். நீரோட்டம் அதிகமாக இருந்த தன்குடி கிழவனின் காலத்தில் அரை ஆம்பளை கழுத்து மட்டமாக வளரும் மடுமுழுங்கியைக் கூட பயிரிட்டிருப்பது அவளுக்குத் தெரியும். நெஞ்சைத் தளும்பத் தளும்ப முட்டும் தண்ணீரில் நின்றுகொண்டு அறுவடை செய்தது அவளுக்கு இன்னும் நினைவில் நிற்கிறது.
அழிங்ஞா மலைக்காட்டின் களங்காடு என மூட்டைப் பிடித்து யேவாரத்திற்கு வந்துகொண்டிருந்தவன் அச்சி. மூட்டைக்கு அவன் வைப்பதுதான் விலை. பேச்சில் உடல் தினவை எக்கச்சக்கமாய் காட்டுவான். காட்டோடு கிடக்கும் வெள்ளந்திகளுக்கு மூட்டைக் கட்டிக்கொண்டு வண்டி பிடித்து சந்தைக்குப் போய் நின்று நிலைத்து யேவாரம் செய்ய முடிவதில்லைதான். விளைவித்தவனின் வெள்ளாமைக்கு விலை நிர்ணயம் செய்ய முடியாத வெட்கக்கூத்து அழிங்ஞா மலைக்காட்டில்தான் இருந்தது. ”கெடக்கிற ரெண்டு மூட்டைய வண்டிக் கட்டிக்கிட்டு எங்க போறது? எதோ ரெண்டு பணம் கம்மியா இருந்தாலும், களத்து மேட்டுல ஏவாரம் நடந்தா சரி போவட்டும் போ” என்று அச்சி கொடுக்கும் விலைக்குத் தானியங்களை மாற்றிக்கொண்டார்கள். ”இந்தா பெரியாளு! இன்னும் எத்தன நாளக்கிதாங் புளுதிக்காறு நெறத்துலயே இடுப்புல வேட்டிய சுத்திக்கிட்டுக் கெடப்ப! உடம்பு காய்ச்சலுக்கு வெள்ள மாத்திரை நெறத்துல மேலுடம்புக்கு பளிச்சின்னு துணிமணிய எந்த காலத்துலதான் உடுத்துறது? கஞ்சிக்குங் தண்ணிக்குங் அல்லாடிக்கிட்டுக் கெடக்குற பொழப்பா பொழக்கிறியே! இந்தா இத வெதச்சிப் பாரு! அடுத்த வருசமே மச்சிவூடு கட்டிப்புடலாங்” என மூட்டை மூட்டையாய் அசலூருப் பட்டணத்தின் விதைகளை அச்சி கொடுத்தான். அழிங்ஞா மலைக்காடுகளில் அச்சியின் விதைகள்தான் ஏகத்திற்கும் மண்ணில் விழுவதாய் இருந்தன.
அச்சியின் பருப்பு உலகத்திடம் வேகவில்லை. உலகம் தன்னிடம் வெள்ளாமையைக் கொடுத்து யேவரம் செய்வதில்லை என்பதையும் கடந்து, தன்னுடைய அசலூருப் பட்டணத்தின் விதைகளை வாங்கிக்கொள்வதில்லை என்பதில்தான் வேக்கோலமாக இருந்தான். அழிங்ஞாவில் இருந்து தான் வெள்ளைச்சட்டை உடுத்திக்கொண்டு வண்டிபிடித்து அசலூருக்கு போய்வருவதில் அர்த்தம் இல்லாமல் மட்டுப்பட்டுப் போவதாக நினைத்துக்கொண்டான். ”ஒரு பொட்டச்சி இம்புட்டு ஆட்டங் காட்டி தண்ணிக் காட்டறதுக்கு,எங்கேயிருந்து இம்புட்டு தெனவு வந்ததுன்னுட்டுத் தெரியிலியே? கழுத முண்டைய என்னா சேதின்னு கேக்காம உட்றதுல்ல!” என அச்சியின் மனமெங்கும் ஆர்ப்பாட்டமாகவே இருந்தது. அப்படியும் இப்படியுமாக அவளிடம் இருந்த மற்ற விதைகளெல்லாம் சேரசேரயாக அத்துவலியாகிவிட்டிருக்கிறது என்பது அவனுக்கும் தெரியும். மிச்சமாக இருக்கும் விதையான மொழிக் கருப்பனை கைப்பற்றிவிட வேண்டும் என்பதுதான் குறி. உலகத்திற்கும் மிச்சமாக இருக்கும் மொழிக் கருப்பனை அச்சியிடமிருந்து காப்பாற்றிவிட வேண்டும் என்பதுதான் குறி. தன்னிடம் யேவாரம் செய்யவில்லை, தன்னுடைய விதைகளை வாங்கிக்கொள்ளவில்லை என்பதெல்லாம் அவனுக்கு இரண்டாவதுதான். அவனுடைய யோசனையெல்லம் ஆண், பெண் மற்றும் விதை என்பதைப் பற்றியே இருந்தது. ஆனால் உலகத்தின் யோசனையெல்லாம் பெண், நிலம் மற்றும் விதைகள் என்பதாக இருந்தது.
ஆம்பளை துணையில்லாதவள் உலகம். எதற்கும் அவள்தான் முன்னின்று வாள் சுற்ற வேண்டும். அவளுக்குக் கொஞ்சமாக இருக்கும் காணி நிலமும் அதற்கான விதையினையும் பொத்திக் காத்திட வேண்டும் என்ற நிலை. முந்தைய பட்டத்தில் கையிலிருந்த அத்தனை விதைகளையும் நிலத்தில் தூவிவிட்டிருந்தாள். அச்சி இரவோடு இரவாக அவற்றின் மீது பூச்சிமருந்தினைத் தெளித்து அத்தனையையும் முளையிலேயே கொன்றுவிட்டிருந்தான். மண்ணை முட்டிக்கொண்டு தலையினைத் தூக்கிப் பார்த்துக்கொண்டிருந்த விதைமொட்டுக்கள் அனைத்தும் தலை திருகப்பட்ட கோழிக் குஞ்சியினைப் போலக் கழுத்து ஒடிந்து கிடந்தன.பயிர்க்கொலைகள்தான்.
மொழிக் கருப்பன் மட்டும் ஒரு வல்லம் அலாக்கு என அடுக்குப் பானையில் கிடந்தது. பத்துப் பாத்திகளைக் கட்டி ஒரு வறட்டு நீர் பாவித்து பிடிங்கி ஓட ஓட நட்டால் போதும். தளைத்து வந்துவிடும். குடியின் முதல் கிழவனின் பெயரினை மட்டுமே தெரிந்து வைத்திருக்கும் உலகத்திற்கு, அதற்கு முன்னதாகவே தன் குடிப் பயிராக நிலத்தில் தூவப்படும் மொழிக் கருப்பனின் வயதினை அவளால் தெரிந்துகொள்ள முடியவில்லை. மாத்து உலக்கையில் நடுவில் தேய்ந்து குழிந்து தொய்வாக இருக்கும் தன் கொத்துக்குடியின் பொதுக் குந்தாணியின் வயது இருக்கும் என அவளது நம்பிக்கை. தன் கொத்துக்குடி பல தலைக்கட்டுகளாகப் பிரிந்து தனிக் குடித்தனம், விதைப்பு, வெள்ளாமை என்று ஆகிவிட்டிருந்த போதிலும், நடையில் கிடக்கும் குந்தாணி கம்பு தீட்டுவதற்கும், சோளத்தைத் துவைப்பதற்கும் இன்னும் பொதுவாகத்தான் இருப்பதைப் பார்த்துக்கொண்டிருக்கிறாள் உலகம். அந்த நம்பிக்கையில்தான் அவள் மொழிக் கருப்பனின் வயதினை அதனோடு ஒப்பிட்டுப் பார்க்க முடிந்தது.
வறண்டு கிடக்கும் பொட்டல் மண்ணின் ஒரு பகுதிதான் உலகத்தின் ஒருகாணி நிலம். மழைப் பொய்த்துப் போனாலும் மொழிக் கருப்பன் விதை தூவியவர்களை கைவிட்டதில்லை. ”பொட்டச் சிறுக்கி மவளுவயெல்லாம் மொழிக் கருப்பன கையில அள்ளி நெலத்துல தூவுற காலம் வந்துட்டுது” என்று பொறணிப் பேச்சை ஊரெங்கிலும் அள்ளி விதைத்துவிட்டிருந்தான் அச்சி. ஒரு பேச்சை பேச தொடங்கிவிட்டால் போதும். அது முளைத்து விளைந்து களத்திற்கு வெள்ளாமையாக வந்துவிடும். யாரும் நீர் பாவிக்க வேண்டியதில்லை. மூட்டைப் பிடித்துப் போட்டுவிடலாம். மொழிக் கருப்பனை ஆம்படையான்கள் மட்டுமே தொடவேண்டும். பெண்டுமார்கள் தீண்டுதலில் ஊரில் மழை நின்றுபோகும் என்று நிலம் கடந்து பாலைவன பகுதியிலிருந்து ஆடுகளையும் மாடுகளையும் மேய்ப்பதற்கு மேய்ச்சல் நிலத்தினை தேடிவந்து கற்பிதம் கொடுத்தவன் காடு போய் சேர்ந்துவிட்டிருந்தான். ஆனால் அவனின் தொடர்ச்சியாக அழிங்ஞா மலைக்காடுகளில் அச்சி முளைத்துவிட்டிருக்கிறான். அநேகமாக அவர்கள் தோல் பையால் ஆன குடுவையில் சேகரம் செய்து வைத்திருந்த தண்ணீரின் ஒருச் சொட்டு தட்டுப்பட்டு தலைமுறை கடந்து அச்சின் வாயில் உதிர்ந்திருக்க வேண்டும். அதனின் ஈரம்தான் ஆண் – பெண் – விதை என்ற புளித்த கற்பிதத்தினை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி அவற்றை அவனால் கையில் எடுத்துக்கொள்ள முடிந்திருக்கிறது.
நிலத்தில் தண்ணீரின் புழக்கம் அடித்து சாய்ந்து கொண்டிருந்த குடிக்கிழவனின் காலமாக இருக்கும். உலகம்தான் பொலியில் தென்னம்பிள்ளைக்காகத் தோண்டப்பட்ட குழியில் விதையினை இட்டாள். அது ஒரு கைப்பிள்ளைக்காரியின் தாய்பாலைப் போல இன்னும் தாகத்தினைத் தணித்துக் கொண்டிருக்கிறது என்பதினை அழிங்ஞா மலைக்காடுகளில் இப்பொழுது யாரும் அறிவார் இல்லை. தன் அழிங்ஞா நிலத்தில் இருக்கும் வேலிப்பழங்களுக்கு அத்தனை சுவையும் நிரம்பியிருப்பதற்கு, நிலத்தில் களையெடுத்து வேலிகட்டியது, திரண்டு வந்திருக்கும் தன் பெண் பிள்ளை வெள்ளியின் தீண்டல் என்பது கூட யேவாரி அச்சிக்குத் தெரியாது.
அழிங்ஞா மலைக்காட்டுப் பகுதியில் துண்டுப்பட்டுக் கிடக்கும் அத்தனை காடுகளுக்கும் அச்சிக் கொடுத்த அசலூருப் பட்டணத்தின் விதைகள்தான் நிலத்தில் விழுந்திருந்தன. நிலத்தில் விதை விழுவதும், பூச்சி முளைத்து வருவதும் வெள்ளாமையினைக் காவு வாங்குவதுமாக இருந்தன. விதைகளோடு பூச்சிகளின் உற்பத்தியினையும் ஒன்றாய் சேர்ந்து செய்யும் அதிசயம் மினுமினுப்புச் சட்டைப்போடும் அச்சிக்கு தெரிந்துவிட்டிருக்கிறது. உடலையும் உடலுக்கு வெளியேயும் தீட்டை சமைத்து பங்கிடும் பக்குவம் அது. புதைந்துபோன மேய்ச்சல் நிலங்களின் கற்பிதங்களை பேசுவதற்கு ஒவ்வொரு நிலத்திற்கும் ஒரு அச்சி முளைத்துவிடுகிறான். விதைக்குள்ளாக பசியினை அரித்துத் தின்னும் பூச்சிகளை சேர்த்து மலரச் செய்யும் அழிச்செயலை அழிங்ஞா மலைக்காடுகளில் பரப்பும் யேவாரியாக அச்சி இருந்துகொண்டிருக்கிறான் என்பதை உலகத்தைத் தவிர யாருக்கும் தெரிந்திருக்கவில்லை.
அழிங்ஞா மலைக்காடுகளில் பூச்சிகளோடும் பூச்சி மருந்துகளோடும் அல்லாடிப் போனார்கள். பூச்சிகள் அவர்கள் விதைக்கும் விதையிலிருந்தேதான் தோன்றுகிறது என்பதை அவர்களால் புரிந்துகொள்ள முடிவில்லை. பெண்டு நிலம் பாவிப்பதால்தான் பூச்சி பெருக்கம் அடைந்துவிட்டதாக அவர்கள் நினைத்துக்கொண்டார்கள். மண்ணையும் வெளிச்சத்தையும் கையெடுத்துக் கும்பிடும் வெள்ளந்திகள் அழிங்ஞா மலைக்காட்டு மனிதர்கள். மண்ணிற்கு எதிராக விழும் சொல் எதுவென்றாலும் அவர்கள் நம்பிவிடுவார்கள். உலகம்தான் மாந்திரீகம், செய்வினை செய்துவிட்டிருக்கிறாள் என்ற புதுப்பேச்சியினையும் அச்சி விதைத்துவிட்டிருந்தான். ஒரு பேச்சிக்கு மறுப்பேச்சி இல்லையென்றால், அது அருகம்புல் கணுக்களில் ஆயிரம் வேர்கள் முளைப்பதைப் போலதான். ஆழம் காண முடியாது. மனிதர்களைக் கடந்து அழிங்ஞா மலைக்காட்டிலிருக்கும் உலகத்தின் வேர்குடியிருப்பை அச்சி கரையான்களைப்போல அரித்துக்கொண்டிருந்தான். உலகத்தின் கரிசல் மண்ணிம் மீதும் ஏடக்குறுக்காக அசலூருப் பட்டணத்தின் உயிர்க்கொல்லி மருந்தினை இரவோடு இரவாகச் சென்று அச்சி தெளித்துவிட்டு வந்துவிடுவான்.
அச்சியின் இந்த அழிக்கூத்தினை யாரிடமும் சொல்லி முறையிட முடியவில்லை. பிறப்பில் பெண்டு. அவளது பேச்சி எப்படி அம்பலம் ஏறும்? குமட்டிக்கொண்டு கிடந்தாலும் நிலம் தன்னை கைவிடாது என்ற நம்பிக்கை அவளிடம் இருந்தது. செம்மண் பூசப்பட்டு அடுக்குப் பானையில் வைத்திருக்கும் தானியங்களைப் பத்திரமாகத் தன் பாடாகவே வைத்திருந்தாள் உலகம். மொழிக் கருப்பனும் ஒரு அடுக்கில் இருந்தது. ஒருப் பக்கம் பொண்டுகள் நிலம் பாவிக்க கூடாது என்றும், மறுப்பக்கம் தான் கொடுக்கும் விதையினைதான் நிலத்தில் பாவிக்கவேண்டும் என்றும் வாதையினைக் கொடுக்கும் அச்சியிடமிருந்து தனது மொழிக் கருப்பனை காப்பாற்றிக்கொள்வது உலகத்திற்கு பெரும்பாடாகி விட்டிருந்தது. நிலத்தின் உயிரினைக் கொலைவாள் கொண்டு அறுப்பதினைப்போல அரலூருப் பட்டணத்தின் மருந்தினை அச்சி தெளித்திருந்தாலும், தினையும் கேழ்வரகும்தான் பால் பிடித்து நின்றுகொண்டிருந்தது. காற்றில் பறந்துவரும் பூச்சிகள் உலகத்தின் கதிர்களையும் சப்பி காவு கொள்ளத் தொடங்கிவிட்டிருந்தது.
தான் குடிக்கும் சீமை சாராயத்தினைத் தெரு நாய்களின் வாயைப் பிளந்து ஊற்றிவிடும் அச்சி, நிலம் பாவிக்கும் ஒரு பெண்டுவின் தூமைத் துணியினை முகர்ந்து பார்த்து அதில் படிந்திருக்கும் இரத்தத்தினை நக்கியதில்தான் தெருவின் நாய்களுக்குப் பைத்தியம் பிடித்துவிடுகிறது என்றான். அவனுக்கு மொழிக் கருப்பனை உலகத்தின் கையிலிருந்து முழுவதுமாக கைப்பற்றிவிடவேண்டும். உலகத்தின் கையிருப்பில் இருப்பதைத் தவிர, அழிங்ஞா மலைக்காடெங்கிலும் மொழிக் கருப்பன் அத்துவலியாகி விட்டிருந்தது. ஒரு வல்லம் அல்லது இரண்டு மரக்காவென உலகத்திடம் மிச்சமாகவிருக்கும் அவற்றினை மீண்டுகொண்டுவிட்டால் போதும் என்று அச்சி முனைப்போடு அசலூருப் பட்டணத்தின் அத்தனை குற்றேவல்களையும் செய்துகொண்டிருந்தான். அவனுக்கு அழிங்ஞா மலைக்காட்டினை மருந்துக் காடென்றும், பூச்சிக் காடென்றும் மாற்றிவிட்டால் போதும்.
ஒருபக்கம் பூச்சி, பூச்சிமருந்து என்றிருந்தாலும் அச்சி கொடுத்த விதைகளை நிலத்தில் பாவித்திருந்த அந்தப் பட்டத்தில் வெள்ளாமை களத்தில் பெரும் மூட்டைப் பிடித்துக் கிடந்தது. அழிங்ஞா மலைக்காட்டிற்குப் பூச்சிமருந்து விற்பனை செய்வதற்கு அசலூரிலிருந்து வண்டி பிடித்து ஆட்கள் வர தொடங்கினார்கள். அழிங்ஞா மலைக்காடுகளில்தான் அதிகமான பூச்சி மருந்து விற்பனையாவதாக அவர்கள் கூடி பேசிக்கொண்டார்கள். இதுவரை பூச்சிமருந்தினை தன்னுடம்பில் பூசிக்கொள்ளாத நிலமாக இருந்த அழிங்ஞா மலைக்காட்டின் நிலை மாறிவிட்டிருந்தது. வௌவால்கள் தலைகீழாகத் தொங்குவதைப் போலத்தான். தேனீக்கள் யாவும் மடிந்து போனதாகவும், ராப் பஞ்சாயத்தினைக்கூடக் குடிகளைச் சேர்த்துப் பேசினான் அச்சி. இரும்பும் பித்தளையும்கூட துருப்பிடித்துவிடுவது பெண்டுகள் நிலத்தில் விதையினை தூவுவதால்தான் என்று அவதூறுகளை அள்ளிவீசும் அச்சின் வார்த்தைகளில் அழிங்ஞா மலைக்காடுகளும் கூட நிலம் புரண்டு சாய்வதைப்போல இருந்தது. உலகத்தின் கையில் இருக்கும் விதைகள்தான் அவளைக் காடாள வைக்கிறது. அவற்றினை அவளது கையிலிருந்து அப்புறப் படுத்திவிட வேண்டும் என ராப்பஞ்சாயத்தில் திண்ணமாக இருப்பது உலகத்தின் காதுகளுக்கு எட்டியது. ஊரும் அழிங்ஞா மலைக்காடும் அவளிடமிருந்து அன்னியப்பட்டு போவதாக இருந்தது. விதையினைத் தாங்கும் நிலமாகப் பரந்து கிடக்கும் ஒரு பெண்ணிடமிருந்து விதையினை எப்படி பிரிக்க முடியும் என்பதுதான் தெரியவில்லை.
விதைகளைத் தனக்குள்ளே வாங்கிக்கொள்ளும் மண், கணநேரம் கூட கண்ணயர ஓய்வெடுத்துக் கொள்வதில்லை. தன் மீது விழும் விதைகளுக்குக் கொஞ்சம் தெம்பு தேட்டையிருந்தாலும் போதும். அவற்றைத் தன் மடியில் கிடத்தி, முலையை தேய்த்து உருண்டு திரளும் பாலை சங்கில் குதுக்கி, கடைவாயை பிழந்து வாயூட்டி, பின்னர் அதன் புட்டத்தினைப் பிடித்து முட்டுக் கொடுத்து, மண்ணுக்கு மேலே ஏற்றிவிட்டுவிடும். ”போ! போயி பொழச்சிக்க! எம்மேல பொல்லாப்பு வரக்கூடாது!” என்பதைப் போலதான். சாவதும் பிழைப்பதும் அதற்குப் பின்னதாக அது மண்ணின் முலைப்பாலைச் சங்கில் ஊட்டிக்கொண்ட விதையின் பாடு. உலகத்திற்கு ஒரு யோசனை வந்தது. கையிலிருக்கும் மொழிக் கருப்பனை இன்னும் பாதுகாப்பாய் பத்திரப் படுத்திவிடவேண்டும். என்பதுதான். தானிருக்கும் ஒற்றை விட்டக்கடை வீடு அதற்குப் போதுமானதாக இருக்காது என்பது அவளுக்குத் தெரியும்.
ஒரு உதிரப்போக்கின் நாளுக்காகக் காத்துக் கொண்டிருந்தாள் உலகம். வானத்தில் கட்டில் போட்டுத் தூங்கும் உலக்கத்தடி மீன்களை வடக்குப் பக்கமாகச் சிப்பாய்கள் கடத்திக்கொண்டு போனதாக கட்டிலின் கால்கள் திசைமாறியிருந்தது. பெண் மகவு வெள்ளி, உதிரப்போக்கின் குறியாக அடிவயிற்றில் கைகளை வைத்துக்கொண்டு முனகிக்கொண்டிருப்பதைப் பார்த்தாள். கையிருப்பில் இருக்கும் மொழிக் கருப்பனை ஒரு சாக்கில் மூட்டையாகக் கட்டிக்கொண்டாள் உலகம். தெருவில் வந்து பார்த்தாள். நிலம் தெரியவில்லை. வெள்ளியோடு அழிங்ஞா மலைக்காட்டுக்கு வந்திருந்தாள் உலகம். மண்ணைக புரட்டிக் கிடந்த நிலம், பனியின் ஈரத்திற்கு நன்றாக நமத்து கிடந்தது. பொலியில் ஒரு காவல் குற்சியினை நட்டு இடுப்பில் சுற்றி வைத்திருந்த தூமைத்துணியினை அதில் சுற்றிக் கட்டினாள். அவை நிலத்திற்கும், தன் குடிக்கும் காவலாக இருக்கும் என்பது அவளின் நம்பிக்கை. கிழக்குப் பக்கமாக மெனை பிடித்து வெள்ளியை நிற்க வைத்தாள். மூட்டையிலிருந்து கொட்டிய ஒரு வல்லம் மொழிக் கருப்பனை விதைப் புட்டியில் வைத்துக்கொண்டாள் உலகம். முன்னத்தி ஏரினைப்போல வெள்ளி நடந்து கொடுத்தாள். மெனயெங்கும் செந்நீர் துளிகள் உதிர்ந்தன. ஒரு விரிந்த மடலில் தோய்ந்திருக்கும் பனித்துளி, வருடும் மெல்லிய காற்றுக்கு நழுவி மண்ணில் லாவமாக சாய்வதைப்போலதான். அதன் பின்னத்தியாக உலகம் தனது விதைப்புட்டியிலிருந்த மொழிக் கருப்பனை ஊன்றிக்கொண்டே போனாள். தன்னிடம் இருந்த கடைசி விதையினை மண்ணிற்குக் கொடுத்துவிட்ட நிறைவோடு வேலிப் பழங்களைப் பறித்து தனது மடியில் நிரப்பிக்கொண்டாள்.
தெரு நாய்களுக்கு வாயில் ஊற்றப்படும் நொதித்த கருவேலம்பட்டைச் சாராயத்தின் விசம் தன்னுடம்பின் உள்ளும், தன் மகவு வெள்ளியின் உடம்பிற்குள்ளும் கூட ஒரு ஆண்குறியின் தடிமனில் விசமாகச் செலுத்தப்படலாம் என்ற அச்சம் அவளிடம் இருந்தது. ஆனாலும் தனது நிலம் பிழைத்துக் கிடக்கும்தான். தன்குடியின் விதையினை செந்நீர் துளிகளின் ஈர நப்போடு பாதுகாப்பாக மண்ணில் பத்திரப்படுத்திவிட்டதை நினைத்தது மனதிற்கு ஆறுதலாக இருந்தது. ஒரு புள்ளியாகக் கரைந்து போன தன்குடியோடு, வெள்ளியும் தானும் மொழிக் கருப்பனைப் போல முளைவிடுவோம் என்பது உலகத்தின் நம்பிக்கை. வெள்ளியின் உதிரப்போக்கினைப் போல முப்பதாம் நாள் சூல்கட்டி கதிர் பிடிக்கத் தொடங்கும் மொழிக் கருப்பனும் அழிங்ஞாவின் மகவிற்கெல்லாம் முலைப்பால் ஊட்டும் நாள் தொடங்கும் என்பது உலகத்திற்குத் தெரியும்.
உலகமும் வெள்ளியும் ஒளிக்கற்றை முளைத்துவரும் திசைநோக்கி நடை நடையாய் நடந்தார்கள். நிலத்தில் புரண்டு வந்த கிளுவை மரத்தினைத் துளிர்க்க வைக்கும் கீழக்காற்று அவர்களையும் தீண்டிவிட்டுப் போனது. நிலம் மொழிக் கருப்பனின் உடம்பினைப் பற்றி பற்களால் கீறும் கவிச்சியடித்தது. அது உலகத்தின் மகவு வெள்ளியின் உயிர் வாசம்தான்.