முடிவில்லாத ஒரு கதை

நீண்ட நாட்களுக்கு முன்பு, ஒரு நாள் இரவு இரண்டு மணி கழிந்திருந்த போது, எதிர்பாராத விதமாய், என்னுடைய வரவேற்பறைக்கு ஓடி வந்த சமையல்காரி வெளிறிப்போய், பதற்றத்துடன், பக்கத்து வீட்டுச் சொந்தக்கார மூதாட்டி மிமோதி அம்மையார் எங்களுடைய  சமையலறைக்கு வந்திருப்பதாகக் கூறினாள். 

மூச்சிரைக்கச் சமையல்காரி சொன்னாள், “அவர்கள் வீட்டுக்கு நீங்கள் போக வேண்டுமெனக் கெஞ்சிக் கேட்கிறார் ஐயா”. “அவரது வீட்டில் குடியிருந்தவருக்கு ஏதோ மோசமாக நடந்து விட்டது. அவர் தன்னைத்தானே சுட்டுக் கொண்டாரோ, அல்லது தூக்கிட்டுக் கொண்டாரோ என்னவோ…”

“நான் என்ன செய்ய முடியும்?” என்று கேட்டேன். “மருத்துவரிடமோ அல்லது காவலரிடமோ அவர் போகட்டுமே !”

“அவர் எப்படி மருத்துவரைத் தேடிப் போக முடியும்! அவருக்கு மூச்சுவிடக் கூட முடியவில்லை, அவர் அடுப்படியில் ஒண்டிக் கிடக்கிறார், மிகவும் பயந்துபோய் இருக்கிறார். தாங்கள் போனால் நல்லது ஐயா!”

நான் என்னுடைய கோட்டையும் தொப்பியையும் அணிந்து மிமோதி அம்மையாரின் வீட்டிற்குச் சென்றேன். எந்தக் கதவை நோக்கி எனது கால்களை நான் வழிநடத்தினேனோ, அது திறந்திருந்தது. அதன் பக்கத்தில் சிறிது நின்று, என்ன செய்யவென்று உறுதியின்றி, வீட்டு அழைப்பு மணியைப் பொருட்படுத்தாமல் அவ்வளாகத்திற்குள் நுழைந்தேன். அந்த பாழடைந்த இருண்ட தாழ்வாரத்தில் கதவு பூட்டப்படவில்லை. நான் அதைத் திறந்து உள்நுழைந்தேன். அங்கே வெளிச்சத்திற்கான சிறு அறிகுறி கூட இல்லை, அடர்ந்த இருட்டு, மட்டுமில்லாமல் அங்கே ஒரு தனித்துவமான ஊதுபத்தியின் வாசனையும் இருந்தது. நான் அங்கிருந்து வெளிச் செல்ல வழி தேட, எனது முழங்கை இரும்பாலான எதிலோ மோதியது, இருட்டில் ஏதோவொரு பலகையில் நான் இடிக்க, அது ஏறத்தாழ தரையில் விழுந்துவிட்டது. கடைசியில் கிழிந்த கம்பளியால் மறைக்கப்பட்ட ஒரு கதவு தெரிந்தது,  நான் அதன் வழியாக அடுத்த அறைக்குள் நுழைந்தேன். 

இக்கணத்தில் நான் ஒன்றும் ஒரு தேவதைக் கதை எழுதவில்லை, மேலும் வாசகனை திகிலடையச் செய்யும் நோக்கமும் எனக்கு இல்லை, ஆனால் அங்கிருந்து  நான் கண்ட காட்சி அருமையாக இருந்தது, அது மரணத்தினால் மட்டுமே எழுதப்பட்டிருக்கக் கூடிய காட்சி! என் முன்னால் ஒரு சிறிய வரவேற்பறைக்குச் செல்லக்கூடிய ஒரு கதவிருந்தது. வரிசையாக நிற்கவைக்கப் பட்டிருந்த ஐந்து கோபெக் விலையுள்ள மெழுகுவர்த்திகள் மூன்று, மங்கிய அந்தச் சாம்பல் நிற காகிதம் ஒட்டப்பட்ட சுவரில் சிறிய வெளிச்சத்தைத் தெளித்தன. அந்தச் சிறிய அறையின் மையத்தில் இரண்டு மேசைகளுக்கு மேல் ஒரு சவப்பெட்டி இருந்தது. அந்த இரண்டு மெழுகுவர்த்திகளும் கூரிய மூக்குடன் பாதி திறந்த வாயுடனிருந்த ஒரு வெளிறிய மஞ்சள் முகத்தைச் சிறிதளவுதான் ஒளியூட்டப் பயன்பட்டன. முகத்திலிருந்து காலணி நுனி  வரையிலும் மெல்லிய பருத்தித் துணியில் ஒழுங்கின்றி பொதியப் பட்டிருந்தது. அப்பொதிவின் குறுக்காக ஒரு மெழுகு சிலுவையைப் பிடித்திருந்த இரண்டு வெளிறிய அசைவற்ற கைகள் வெளித்தெரிந்தன. அச்சிறிய வரவேற்பறையின் இருண்ட சோகமான மூலைகளும், சவப்பெட்டியின் பின்னிருந்த சின்னங்களும், அந்த சவப்பெட்டியும், சிறிது வெளிச்சம் தந்த விளக்குகளைத் தவிர மற்ற அனைத்தும் மரணத்தைப் போலவே இருந்தன, கல்லறையைப் போலவே இருந்தன. 

மரணத்தின் இவ்வெதிர்பாரா காட்சியைக் கண்டு வாயடைத்துப் போன நான் நினைத்தேன், “ என்ன ஒரு விசித்திரம்!”

“ஏன் இந்த அவசரம்? இந்தக் குடியானவனுக்குத் தூக்கிட்டுக்கொள்ளவோ தன்னைத்தானே சுட்டுக்கொள்ளவோ கூட சரியாக நேரம் இருந்திருக்காது, அதற்குள்ளாகவே இங்கே இந்த சவப்பெட்டி வைக்கப்பட்டிருக்கிறதே!”

நான் சுற்றுமுற்றும் பார்த்தேன். இடப்புறத்தில் கண்ணாடிச் சட்டத்தோடிருந்த ஒரு கதவு இருந்தது. வலதுபுறத்தில் ஒரு கந்தலான கம்பளிக் கோட்டு தொங்கவிடப்பட்ட ஒரு மெல்லிய தொப்பித் தாங்கி இருந்தது…

தண்ணீர் …” ஒரு முனகலை நான் கேட்டேன். 

அம்முனகல் இடது புறத்திலிருந்த கண்ணாடிச் சட்டத்தோடிருந்த கதவுக்குப் பின்னாலிருந்து வந்தது. நான் அக்கதவைத் திறந்து ஒரு சிறிய இருண்ட அறைக்குள் நுழைந்தேன், அதன் ஒற்றைச் சன்னலின் ஊடாக வெளியிலிருந்த தெருவிளக்கின் மங்கிய ஒளி விழுந்தது. 

“யாராவது இருக்கிறீர்களா?” நான் கேட்டேன்.

பதிலுக்குக் காத்திராமல் நான் ஒரு தீக்குச்சியைப் பற்ற வைத்தேன். அது எரிந்தபோது நான் அந்தக் காட்சியைப் பார்த்தேன். என் காலடியிலேயே இரத்தக்கறை படிந்த தரையில் ஒரு மனிதன் உட்கார்ந்துகொண்டிருந்தான். நான் ஒரு நீண்ட அடி எடுத்து வைத்திருந்தால் அவனை நிச்சயம் மிதித்திருந்திருப்பேன். அவன் தன் கால்களை முன் நீட்டி, கைகளைத் தரையில் அழுத்தி, அடர்கருப்பு தாடியுடன் கூடிய சவக்களையுடனிருந்த வெளிறிய அழகான தன் முகத்தைத் தூக்க முயற்சித்துக் கொண்டிருந்தான். எனை நோக்கி உயர்ந்த அவனது பெரிய கண்களில் ஒரு சொல்லவொண்ணா துயரத்தையும், வலியையும், ஒரு வேண்டுதலையும் நான் உணர்ந்தேன். பயத்தில் அவனது முகத்திலிருந்து பெரிய வியர்வைத்துளிகள் வழிந்தன. அவ்வியர்வையும், அவன் முகத்திலிருந்த உணர்ச்சியும், அவன் ஊன்றியிருந்த கைகளின் நடுக்கமும், அரிதான சுவாசமும், இடுக்கிய பற்களும், அவனால் தாங்க முடியாத அளவுக்கு அவன் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தான் என்பதைக் காட்டின. அவன் வலது கைக்குப் பக்கத்தில் இரத்தக்குளத்தில் ஒரு துப்பாக்கி கிடந்தது.

“போகாதீர்கள்,” ஒரு தெளிவற்ற குரலை என் தீக்குச்சி அணைந்தபோது நான் கேட்டேன். “அந்த மேசையில் ஒரு மெழுகுவர்த்தி இருக்கிறது.”

மெழுகுவர்த்தியைப் பொருத்தி அடுத்து என்ன செய்யவென்று தெரியாமல் அந்த அறையின் மையத்தில் நான் அசைவற்று நின்றேன். தரையில் கிடந்த அம்மனிதனைப் பார்த்தேன், இவனை இதற்கு முன்னால் பார்த்திருக்கிறேன் என்று எனக்குத் தோன்றியது. 

வலி தாங்கமுடியவில்லை!” அவன் முனகினான், “என்னை மறுபடியும் சுட்டுக்கொள்ள சக்தி என்னிடமில்லை, துணிவுமில்லை, ஒன்றும் புரியவில்லை.”

நான் என் கோட்டை வீசியெறிந்து விட்டு, பாதிக்கப்பட்ட அம்மனிதனிடம் சென்றேன். ஒரு குழந்தைபோல அவனைத் தரையிலிருந்து தூக்கி, அமெரிக்கத்–தோலுறை இடப்பட்ட இருக்கையில் கிடத்தி, அவன் ஆடைகளை அவிழ்த்தேன். அவன் ஆடைகளைக் களைந்தபோது அவன் குளிர்ந்து நடுங்கிக் கொண்டிருந்தான். அவன் நடுக்கத்திற்கோ, அவன் முகத்திலிருந்த உணர்ச்சிக்கோ பொருந்தாத வகையில்தான் அவனது காயம் இருந்ததை நான் பார்த்தேன். அது ஒரு சிறிய காயமே. அவனது இடப்புற ஐந்தாவது மற்றும் ஆறாவது விலா எலும்புகளுக்கிடையே தோலையும் சதையையும் அத்தோட்டா துளைத்துச் சென்றிருந்தது. அவனது கோட்டின் பின்புற பாக்கெட்டின் அருகிலிருந்த மடிப்பில் அத்தோட்டாவைக்கூட  நான் பார்த்தேன். ஒரு தலையணை உறையையும், ஒரு துண்டையும், இரண்டு கைக்குட்டைகளையும் வைத்து ஒரு தற்காலிக கட்டுப்போட்டு, என்னால் முடிந்த அளவு இரத்தப் போக்கை நிறுத்தி, காயப்பட்ட அம்மனிதனுக்கு நான் சிறிது தண்ணீர் கொடுத்து, அவ்வறையில் தொங்கிக்கொண்டிருந்த ஒரு கம்பளிக் கோட்டால் அவனைச் சுற்றி மூடினேன். கட்டுப்போடும்போது எங்களிருவரில் ஒருவரும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. நான் என் வேலையைச் செய்ய, அசைவற்று அவன் படுத்திருக்க, தன்னைத்தானே சுட்டுக்கொள்ளக் கூட முடியாமல் போனதற்கும் எனக்கு இத்தொந்தரவைத் தந்ததற்கும் அவமானப் பட்டு அவன் கண்கள் வருந்தி நோக்கின. 

இப்போது நான் உங்களை அசைவற்று படுத்திருக்கச் செய்யவேண்டும்…” கட்டுப்போட்டு முடித்ததும் நான் சொன்னேன், “நான் மருந்தகத்திற்கு ஓடிப்போய் ஏதேனும் வாங்கி வருகிறேன்..”

“தேவையில்லை!” கண்களை அகலத் திறந்து, என் சட்டையைப் பற்றி அவன் முணங்கினான். 

நான் அவன் கண்களில் பயத்தைப் பார்த்தேன். நான் போய் விடுவேனென அவன் பயந்தான்.

“தேவையில்லை! இன்னுமொரு ஐந்து நிமிடங்கள் இருங்கள்…முடிந்தால் பத்து நிமிடம், உங்களுக்கு அருவருப்பாக இல்லையென்றால் இருங்கள், நான் வேண்டிக் கேட்கிறேன்.”

எனைக் கெஞ்சிக்கொண்டிருக்கும்போது அவன் நடுங்கினான், அவன் பற்கள் கிட்டித்தன. நான் ஒத்துக்கொண்டு இருக்கையின் ஓரத்தில் அமர்ந்தேன். அமைதியில் பத்து நிமிடங்கள் கழிந்தன. நான் அமைதியாக அமர்ந்து எதிர்பாராத விதமாக விதி என்னைக் கொண்டுவந்திருந்த அந்த அறையை பார்த்துக் கொண்டிருந்தேன். என்ன வறுமை! அழகான, பெண்மை கூடிய ஒரு முகத்திற்கும், அபரிமிதமான நன்றாகப் பேணப்பட்ட தாடிக்கும் சொந்தக்காரனாக இருந்தாலும், இந்த மனிதனின் இருப்பிடத்தைப் பார்த்து  எந்தவொரு மானமுள்ள உழைக்கும் மனிதனும் பொறாமைப் பட்டிருக்க மாட்டான். கிழிந்து தோலுரிந்த அமெரிக்கத்-தோலுறையிடப்பட்ட இருக்கை, ஒரு கச்சிதமான அழுக்கடைந்த நாற்காலி, சில காகிதங்கள் பரப்பப்பட்ட மேசை, சுவற்றிலிருந்த சிதிலமடைந்த நகல் எண்ணெய் ஓவியம், இவைதான் நான் பார்த்தவை. பிசுபிசுப்பு, இருட்டு மற்றும் துயரம். 

“என்னவொரு காற்று!” காயப்பட்ட மனிதன் கண்களைத் திறக்காமல் சொன்னான், “எப்படி அது ஊளையிடுகிறது!”

“ஆமாம்,” நான் சொன்னேன். “உங்களை எனக்குத் தெரியுமென நான் நினைக்கிறேன், ஜெனரல் லுகாட்சேவின் மாளிகையில் சென்ற வருடம் சில தனியார் நாடகங்களில் நீங்கள் பங்கெடுத்தீர்கள் இல்லையா?”

“அதற்கென்ன?” விரைவாகக் கண்களைத் திறந்து அவன் கேட்டான்.

அவன் முகத்தின் மீது ஒரு மேகமூட்டம் கடந்து சென்றது.

“நான் நிச்சயமாக உங்களை அங்கு பார்த்தேன். உங்கள் பெயர் வாசில்யேவ் இல்லையா?”

“அப்படியிருந்தால், அதனாலென்ன? என்னை உங்களுக்குத் தெரிந்திருந்தாலும் எதுவும் ஆகப்போவதில்லை.”

“இல்லை, நான் சும்மாதான் கேட்டேன்”

வாசில்யேவ் கண்களை மூடி, புண்பட்டதுபோல, இருக்கையின் பின்புறம் நோக்கித் தன் முகத்தைத் திருப்பினான். 

“உங்கள் ஆர்வத்தை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை!” அவன் முணுமுணுத்தான். “எது என்னைத் தற்கொலை செய்துகொள்ளத் தூண்டியது என்று அடுத்து நீங்கள் கேட்பீர்கள்!”

ஒரு நிமிடம் கழிவதற்குள், அவன் எனை நோக்கி மீண்டும் திரும்பி, கண்களைத் திறந்து தழுதழுத்த குரலில் சொன்னான்: 

“அப்படிப் பேசியதற்காக என்னை மன்னித்துக் கொள்ளுங்கள், ஆனால், நான் சொன்னது சரிதானென்று நீங்கள் ஒத்துக்கொள்வீர்கள். ஒரு குற்றவாளியைப் பார்த்து அவன் எப்படி சிறைக்குள் வந்தான் என்று கேட்பதோ, அல்லது தற்கொலைக்கு முயன்றவனிடம் ஏன் அவன் தன்னைத்தானே சுட்டுக்கொண்டான் என்று கேட்பதோ பெருந்தன்மை அல்ல..அநாகரிகம். இன்னொரு மனிதனின் சுயமரியாதையைப் பணயம் வைத்து உங்கள் வெற்று ஆர்வத்தை திருப்திப்படுத்திக்கொள்ள நினைத்தல்.”

“நீங்கள் உணர்ச்சிவசப்படத் தேவையில்லை..உங்கள் நோக்கங்கள் குறித்து கேள்வி கேட்க எனக்கு ஒருபோதும் தோன்றவில்லை.”

“நீங்கள் கேட்டிருப்பீர்கள்…மக்கள் வழக்கமாக அதைத்தான் செய்கிறார்கள். அதைக் கேட்பதால் எந்த பலனும் இல்லாவிட்டாலும் கூட. நான் சொன்னால் நீங்கள் நம்பவோ புரிந்துகொள்ளவோ மாட்டீர்கள்…அது எனக்கே கூட புரியவில்லை என்று நான் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்..காவல்துறை அறிக்கைகளிலும் செய்தித்தாள்களிலும் இந்த மாதிரிக் கூற்றுகள் உபயோகப் படுத்தப்படுகின்றன: ‘திருப்பியளிக்கப் படாத காதல்’ மற்றும் ‘பயங்கர வறுமை’, ஆனால் காரணங்கள் தெரியாது…அவை எனக்கோ, உங்களுக்கோ, ‘ஒரு தற்கொலையின் நாட்குறிப்பை’ எழுதும் அகம்பாவம் பிடித்த அச்செய்தித்தாள் அலுவலகங்களுக்கோ கூட தெரியாது. தன்னைத்தானே மாய்த்துக்கொள்ளும்போது அம்மனிதனின் ஆன்மாவின் நிலை கடவுளுக்கு மட்டுமே புரியும்; ஆனால் மனிதர்களுக்கு அதைப்பற்றி எதுவும் தெரியாது.”

“அது சரி!” என்றேன் நான், “ஆனால் நீங்கள் இப்போது பேசக்கூடாது….”

ஆனால், என் தற்கொலையாளன் நிறுத்தவில்லை, அவன் கைமுட்டியில் தலையைச் சாய்த்தான், ஒரு சிறந்த பேராசிரியரின் தொனியில் தொடர்ந்தான்:

“தற்கொலைக்கான உளவியல் சூட்சுமங்களை மனிதன் ஒருபோதும் புரிந்துகொள்ள மாட்டான். எப்படி ஒருவர் காரணங்களைப் பற்றி பேச முடியும்? இன்று அக்காரணம் ஒருவனை ஒரு துப்பாக்கியைத் தூக்கச் செய்கிறது, அதே காரணம் நாளை ஒரு கூமுட்டை அளவு கூட மதிப்பின்றித் தெரிகிறது. இதெல்லாம் பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட கணத்தில் ஒரு தனி மனிதனின் குறிப்பிட்ட நிலையைப் பொறுத்து அமைகிறது….என்னையே உதாரணமாக எடுத்துக்கொள்ளுங்கள். அரை மணி நேரத்திற்கு முன்பு, எனக்கு மரணத்திற்காக ஒரு தீவிர விருப்பம் இருந்தது, இப்பொழுது இந்த மெழுகுவர்த்தி பொருத்தப்பட்டதும், நீங்கள் என்னருகில் இருக்க, நான் மரணத் தருவாயைக் குறித்து நினைக்கக் கூட இல்லை. உங்களால் முடிந்தால் இந்த மாற்றத்தை விளக்குங்கள். நான் என்ன நன்றாக ஆகி விட்டேனா? இல்லை சாவிலிருந்து என் மனைவி எழுந்துவிட்டாளா என்ன? இது என் மேலான இந்த வெளிச்சத்தின் தாக்கமா? அல்லது ஒரு வெளியாள் இருப்பதாலா?”

“வெளிச்சம் நிச்சயமாக ஒரு தாக்கத்தைக் கொண்டிருக்கிறது…”ஏதோ பேசவேண்டுமே என்பதற்காக நான் முணுமுணுத்தேன். “உயிரினத்தின் மீதான வெளிச்சத்தின் தாக்கம்…”

“வெளிச்சத்தின் தாக்கம்…ஒத்துக் கொள்கிறேன்..ஆனால் மெழுகுவர்த்தியின் அருகிலேயே மனிதர்கள் தங்களைச் சுட்டுக்கொள்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? மெழுகுவர்த்தி போன்ற பொருட்டற்ற ஒரு விஷயம் திடீரென கதையின் போக்கை மாற்றுவதென்பது உங்கள் நாவல்களின் கதாநாயகர்களுக்கு உண்மையில் ஒரு அவமானம் தானே. ஒருவேளை இந்த முட்டாள்தனங்கள் விளக்கப்படக் கூடும், ஆனால், நம்மால் அல்ல. ஒருவன் புரியாத விசயங்களைப் பற்றி கேள்வி கேட்பதோ விளக்க முற்படுவதோ பயனற்றது…”

“எனை மன்னியுங்கள்,” நான் கூறினேன், “ஆனால்…உங்கள் முகத்தின் உணர்ச்சியைக் கணிக்கும்போது, இந்தக் கணத்தில் நீங்கள் பாவனை செய்வதாக எனக்குத் தோன்றுகிறது.”

“ஆமாம்!” திகைத்த வாசில்யேவ் கூறினான். “அது மிகவும் சாத்தியம்தான். இயல்பாகவே நான் ஒரு உதவாக்கரை, ஒரு முட்டாள்தான். நல்லது! முகங்களைக் கணிக்கும் உங்கள் சக்தியில் உங்களுக்கு நம்பிக்கை இருப்பின், விளக்குங்கள், அரை மணி நேரத்திற்கு முன்பு எனை நானே சுட்டுக்கொண்டேன், இப்போது நான் நடித்துக் கொண்டிருக்கிறேன்..உங்களால் முடிந்தால் இதை விளக்குங்கள்.”

இக்கடைசி வார்த்தைகளை வாசில்யேவ் தெளிவற்ற, வலுவிழந்த குரலில் உச்சரித்தான். அவன் மிகவும் சோர்ந்து அமைதியில் மூழ்கினான். ஓர் இடைவெளி நீடித்தது. அவன் முகத்தை நான் ஆராயத் தொடங்கினேன். அது ஒரு இறந்த மனிதனைப் போல வெளிறியிருந்தது. அவனிடமிருந்து ஆன்மா பெரும்பாலும் போய்விட்டது போலவே தோன்றியது, அந்த உதவாக்கரை, முட்டாள் மனிதன் அனுபவித்துக் கொண்டிருந்த துயரத்தின் அறிகுறிகள் மட்டுமே அவன் உயிர் நீடித்திருந்ததை வெளிப்படுத்தின. எனக்கே அந்த முகத்தைப் பார்க்க மிகவும் வருத்தமாக இருந்தது, ஆனால், இன்னும் கூட விவாதிப்பதற்கும் நடிப்பதற்கும்  சக்தியோடிருந்த அவனுக்கு எவ்வளவு வலித்திருக்கும்.

“இருக்கிறீர்களா?…நீங்கள் இங்கே இருக்கிறீர்களா?” தன் முழங்கையை ஊன்றி எழுந்துகொண்டே திடீரென கேட்டான். “கடவுளே!.. கவனியுங்கள்!”

நான் கவனிக்கத் தொடங்கினேன். ஒரு நிமிடம் கூட நிற்காமல் மழை அந்த இருண்ட சன்னலில் ஆக்ரோஷமாக அடித்துக் கொண்டிருந்தது. காற்று சோகமாகவும் சோர்ந்துபோயும் ஊளையிட்டது. 

“நான் பனியைக் காட்டிலும் வெள்ளையாக இருப்பேன், மேலும், என் காதுகள் சந்தோசத்தையும் மகிழ்ச்சியையும் கேட்கும்.” திரும்பி வந்திருந்த மிமோதி அம்மையார் குரலை உயர்த்தாமலும் தாழ்த்தாமலும் சலிப்பூட்டும் மந்தமான தொனியில் சோகமான வலுவற்ற குரலில் வரவேற்பறையில் வாசித்துக் கொண்டிருந்தார். 

“கேட்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது, இல்லையா?” பயந்துபோன அவனது கண்களை எனை நோக்கித் திருப்பி வாசில்யேவ் ரகசியமாகக் கூறினான். “கடவுளே, மனிதன் பார்க்கவேண்டிய, கேட்க வேண்டிய விஷயங்கள்! எவரேனும் இக்குழப்பத்தை இசையாக்க முடிந்தால்! ஹேம்லெட் சொல்வதைப் போல, 

“அறியாதவர்களைக் குழப்பும், உண்மையில் ஆச்சர்யப்படுத்தும், இந்தக் கண்கள் மற்றும் காதுகளின் திறன்.”

“அப்படியாயின் அந்த இசையை எவ்வளவு நன்றாக நான் புரிந்திருக்க வேண்டும்! எப்படி நான் அதை உணர்ந்திருக்க வேண்டும்! நேரம் என்ன இப்போது?”

“மூன்று ஆக ஐந்து நிமிடங்கள்.”

“காலை இன்னும் வெகு தொலைவில் இருக்கிறது. மற்றும் காலையில் இறுதிச் சடங்கு இருக்கிறது. என்ன ஒரு காட்சி! மழை மற்றும் சகதியினூடாக ஒருவன் அந்த சவப்பெட்டியைத் தொடர்கிறான். அவன் மேகமூட்டமான வானத்தையும் மந்தமான இயற்கைக் காட்சியையும் தவிர வேறெதையும் பார்க்காமல் கூடவே நடக்கிறான். சேறு படிந்த தடுப்புகள், சத்திரங்கள், அடுக்கப்பட்ட மரக்கட்டைகள்…அவனது கால் சட்டை முழங்கால் வரை நனைந்திருக்கிறது. ஒருபோதும் முடியாத தெருக்கள். அழிவற்றதைப் போல நீடித்துக் கொண்டிருக்கும் காலம், கரடுமுரடான மக்கள். இதயமோ கல், கல்!”

சிறிது இடைவெளிக்குப் பிறகு அவன் திடீரெனக் கேட்டான், “ஜெனரல் லுகாட்சேவை நீங்கள் பார்த்து ரொம்ப காலம் ஆயிற்றா?”

“போன கோடைக்காலத்திற்குப் பிறகு அவரை நான் பார்க்கவில்லை.”

“அவர், தான் முன்னோடியாக இருக்கவே விரும்புவார், ஆனால் அவர் ஒரு இனிய முதிய நண்பர். அப்புறம், நீங்கள் இன்னும் எழுதிக்கொண்டிருக்கிறீர்களா?”

“ஆமாம், கொஞ்சமாக.”

“ஆஹ்…உங்களுக்கு ஞாபகமிருக்கிறதா, நான் ஜினாவை காதலித்துக் கொண்டிருந்தபோது அந்தத் தனியார் நாடக அரங்குகளில் எப்படித் துள்ளித் திரிந்தேன், ஒரு ஊசிமுனை போல, ஒரு ஆர்வக்கோளாறு கழுதை போல? அது முட்டாள்தனம் தான், ஆனாலும் அது நன்றாக இருந்தது, அது வேடிக்கையாக இருந்தது…அதைப் பற்றிய ஒரு சிறிய ஞாபகம் கூட ஒரு வசந்த கால நறுமணத்தைக் கொண்டு வருகிறது….ஆனால் இப்பொழுது! என்ன ஒரு கொடூரமான காட்சி மாற்றம்! உங்களுக்கொரு கதைக்கரு கிடைத்திருக்கிறது. ஆனால், ‘ஒரு தற்கொலையின் நாட்குறிப்பை’ மட்டும் எழுதி விடாதீர்கள். அது கொச்சையானது, மரபானது. நீங்கள் இதைப்பற்றி ஏதேனும் நகைச்சுவையாக எழுதுங்கள்.”

“மீண்டும் நீங்கள்……பாவனை செய்கிறீர்கள்,” நான் கூறினேன், “நீங்கள் இப்போது இருக்கும் நிலையில் நகைச்சுவை எதுவும் இல்லை.”

சிரிப்பதற்கு எதுவுமில்லையா? சிரிப்பதற்கு எதுவுமில்லையென்றா சொல்கிறீர்கள்?” வாசில்யேவ் எழுந்து அமர்ந்தான், அவன் கண்களில் கண்ணீர்த்துளிகள் மிளிர்ந்தன. அவன் வெளிறிய முகத்தில் ஒரு கசப்பான துயரத்தின் வெளிப்பாடு தோன்றியது. அவன் நாடி நடுங்கியது.

“விசுவாசமற்ற மனைவிகள் மற்றும் ஏமாற்றுகிற குமாஸ்தாக்களின் வஞ்சகத்தைப் பார்த்து நீங்கள் சிரிப்பீர்கள்.” அவன் கூறினான், “ஆனால் என் விதி என்னை ஏமாற்றியதைப் போல எந்தவொரு குமாஸ்தாவோ, விசுவாசமற்ற மனைவியோ ஏமாற்றியதில்லை! எந்தவொரு வங்கி வாடிக்கையாளரோ, எந்தவொரு போலிக் கணவனோ  இதுவரையிலும் ஏமாற்றப் பட்டதை விட, நான் தான் ஏமாற்றப் பட்டிருக்கிறேன்! எவ்வளவு அபத்தமான ஒரு முட்டாளாக்கப்பட்டிருக்கிறேன் நான்! சென்ற வருடம் உங்கள் கண் முன்னால் நான் என் சந்தோசத்தில் என்ன செய்யவென்றே தெரியாமல் இருந்தேன். ஆனால், இப்பொழுது உங்கள் கண் முன்னால்…..”

Courtesy : Kavan the Kid

வாசில்யேவின் தலை தலையணைக்குள் புதைத்திருந்தது, அவன் சிரித்தான்.

“இத்தகைய ஒரு மாற்றத்தை விட அபத்தமான, முட்டாள்தனமான வேறெதையும் கற்பனை பண்ண முடியாது. அத்தியாயம் ஒன்று: வசந்தம், காதல், தேன் நிலவு…..நிஜமாகவே, தேன் போன்றவள் ….அத்தியாயம் இரண்டு: ஒரு வேலை தேடுதல், அடகுக்கடை, நோய், மருந்துக்கடை, பின்னர்…..சகதியினூடே இடுகாட்டிற்கான நாளைய காட்சி”

அவன் மறுபடியும் சிரித்தான். நான் மிகவும் தர்மசங்கடமாக உணர்ந்தேன், போய்விட முடிவு செய்தேன். 

“நான் சொல்வதைக் கொஞ்சம் கேளுங்கள்..” நான் சொன்னேன், “நீங்கள் படுத்திருங்கள், நான் மருந்தகத்திற்குப் போகிறேன்.”

அவன் பதில் சொல்லவில்லை. நான் என் கச்சிதமான கோட்டை அணிந்து அவன் அறையை விட்டு வெளியேறினேன். அறையைக் கடக்கும்போது, நான் அந்த சவப்பெட்டியையும் அதனருகே வாசித்துக் கொண்டிருந்த மிமோதி அம்மையாரையும் ஓரக்கண்ணால் பார்த்தேன். என் கண்கள் வீணாகப் பிரயத்தனப் பட்டும், வெளிறிய மஞ்சளான ஜினாவின் முகத்தில் லுகாட்சேவின் நிறுவனத்தின் அந்த உயிரோட்டமான, அழகான வெகுளிப் பெண்ணை என்னால் அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை.”

Sic Transitநான் நினைத்துக்கொண்டேன். (உலகத்தின் மகிமை இப்படித்தான் கடந்து போகும்)

அத்துடன் நான்  வெளியே சென்றேன், துப்பாக்கியை மறக்காமல் எடுத்துக்கொண்டு, மருந்தகத்தை நோக்கிச் சென்றேன். ஆனால் நான் போயிருக்கக் கூடாது. நான் மருந்தகத்திலிருந்து திரும்பி வந்தபோது வாசில்யேவ் இருக்கையில் விழுந்து மயங்கிக் கொண்டிருந்தான். கட்டுக்கள் ஏறத்தாழ கிழிந்துவிட்டன, திறந்திருந்த காயத்திலிருந்து இரத்தம் கசிந்து கொண்டிருந்தது. அவனைப் போதத்திற்குக் கொண்டு வருவதில் நான் வெற்றியடைவதற்குள் பகல் பொழுதாகி விட்டது. பகல் வந்ததிலிருந்து அந்த அறையை ஒன்றும் புரியாத கண்களால் பார்த்துக் கொண்டு, நடுங்கியபடி அவன் பிரமையில் பிதற்றிக் கொண்டிருந்தான், இறந்து போனவருக்கான இறுதிச் சடங்குப் பிரார்த்தனைகளை வாசித்துக்கொண்டிருந்த பூசாரியின் கனத்த குரல் எங்களுக்குக் கேட்டது.

மூதாட்டிகளும், இறுதிச் சடங்கு செய்பவர்களும் வாசில்யேவின் அறையில் நிறைந்திருந்தபோது, வளாகத்தை விட்டு அந்த சவப்பெட்டி வெளியே கொண்டு செல்லப்பட்ட போது, அவனை வீட்டிலேயே இருக்குமாறு நான் வலியுறுத்தினேன். ஆனால் அவன் கேட்கவில்லை, வலியையும், மந்தமான, மழை பெய்திருந்த காலையையும் பொருட்படுத்தாமல், அவன் வெறும் தலையுடன், மெளனமாக, ஒரு காலடிக்குப் பின் மற்றதை எடுத்து வைக்கக்கூட  முடியாமல், அடிக்கடித் துடித்து தன் காயப்பட்ட பக்கத்தைப் பிடித்துக்கொண்டு, சவப்பெட்டியின் பின்னால் கல்லறை வரையிலும் நடந்தான். அவன் முகம் முழுக்க விரக்தி. ஒரே ஒருமுறை நான் ஏதோ ஒரு முக்கியமற்ற கேள்வியைக் கேட்டு அவனைச் சோர்விலிருந்து வெளியே இழுத்தபோது, அவன் கண்களை அந்த நடைபாதை மற்றும் சாம்பல்நிற வேலியின் மேலாகத் திருப்பினான், ஒரு கணம் அவற்றில் வெறுப்பின் கோவம் ஒளிர்ந்தது. 

“மரச் சக்கரங்களைப் பழுதுபார்ப்பவர்” அவன் ஒரு பெயர்ப்பலகையை வாசித்தான். “அறியாமையிலுள்ளவர்கள், படிப்பறிவில்லாத மக்கள், அவர்களைச் சாத்தான் கொண்டுபோகட்டும்!”

கல்லறையிலிருந்து அவனை நான் வீட்டிற்குக் கூட்டிச் சென்றேன். 


அந்த இரவு கழிந்து ஒரு வருடம்தான் ஆகியிருந்தது, சகதியினூடாக அவன் மனைவியின் சவப்பெட்டியின் பின்னே அவன் அணிந்து நடந்த காலணிகள் தேய்ந்து போவதற்குக் கூட அவனுக்கு நேரமிருந்திருக்காது. 

இப்பொழுது நிகழ்காலத்தில் நான் இக்கதையை முடிக்கும்போது, அவன் என் வரவேற்பறையில் இருக்கிறான், பியானோ வாசித்துக்கொண்டு, அப்பகுதிப் பெண்கள் எப்படி உணர்ச்சிமயமான பாடல்களைப் பாடுகிறார்கள் என்பதைச் சில பெண்களுக்கு விளக்கிக் கொண்டிருக்கிறான். அப்பெண்கள் சிரித்துக் கொண்டிருக்கிறார்கள், அவனும் சிரித்துக் கொண்டிருக்கிறான். அவன் மிக மகிழ்ச்சியாக இருக்கிறான். 

நான் அவனை என்னுடைய வாசிப்பறைக்கு அழைக்கிறேன். அவனுக்குப் பிடித்த நட்பு வட்டத்திலிருந்து அவனைப் பிரிப்பது பிடிக்காமல், நேரத்தை வீணடிக்கவே முடியாத ஒரு மனிதனின் தோரணையில் என்னிடம் வந்து என் முன்னே நிற்கிறான். நான் அவனிடம் இக்கதையைக் கொடுத்து வாசிக்கச் சொல்கிறேன். எப்போதும் என் எழுத்து குறித்த ஒரு மேதாவித்தன விமர்சனத்துடன் இருக்கும் அவன், ஒரு பெருமூச்சை அடக்கி (ஒரு சோம்பேறி வாசகனின் பெருமூச்சு) ஒரு நாற்காலியில் அமர்ந்து வாசிக்கத் தொடங்கினான். 

“அடக் கொடுமையே! என்ன ஒரு பயங்கரம்!” அவன் ஒரு புன்னகையுடன் முணுமுணுக்கிறான். 

ஆனால், அவன் மேலும் வாசிக்க, அவன் முகம் தீவிரமடைகிறது. இறுதியில், வலி மிகுந்த ஞாபகங்களின் அழுத்தத்தில் அவன் மிகவும் வெளிறிப்போகிறான், அவன் எழுந்து நிற்கிறான், பின் நடந்துகொண்டே வாசிக்கிறான். அவன் முடித்ததும் ஒரு மூலையிலிருந்து இன்னொரு மூலைக்கு நடக்கத் தொடங்குகிறான். 

“இது எப்படி முடியும்?” நான் அவனிடம் கேட்டேன்.

“இது எப்படி முடியும்? ம்ம்..”

அவன் அந்த அறையை, பின் என்னை, பின் தன்னைத்தானே பார்க்கிறான்…அவன் தன் நாகரிகமான ஆடைகளைப் பார்க்கிறான்..பெண்களின் சிரிப்பொலியைக் கேட்கிறான். பின்னர்…நாற்காலியில் விழுந்து, அந்த இரவில் சிரித்ததைப் போலச் சிரிக்கத் தொடங்குகிறான்.

“இதெல்லாம் அபத்தமென்று நான் உங்களிடம் சொன்னது சரிதான் இல்லையா? கடவுளே, ஒரு யானையின் முதுகை உடைக்கும் அளவுக்குச் சுமைகளை நான் தாங்கியிருக்கிறேன், நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன் என்பது சாத்தானுக்குத் தான் தெரியும்..வேறு யாரும் அதைவிட அதிகம் கஷ்டப்பட்டிருக்க முடியாதென நான் நினைக்கிறேன், ஆனால் அதற்கான தடயங்களை எங்கே? இது ஆச்சர்யமானது தான். துன்பங்கள் ஒரு மனிதனில் தோற்றுவிக்கும் தழும்புகள் எப்போதும் நிலைத்திருக்கும், ஒருபோதும் துடைத்தெடுக்கவோ ஒழிக்கவோ முடியாது என ஒருவன் நினைத்திருப்பான். இருந்தபோதிலும், அத்தழும்பு ஒரு மலிவான காலணியைப் போலச் சீக்கிரமே தேய்ந்து போகிறது. எதுவும் மிச்சமிருப்பதில்லை, ஒரு துண்டு கூட. நான் அந்நாட்களில் துன்பப்பட்டுக் கொண்டிருக்கவில்லை, மசூர்கா நடனம் ஆடிக்கொண்டிருந்தேன் என்பது போலல்லவா தோன்றுகிறது. இந்த உலகில் எல்லாமே நிலையற்றது, ஆனால் அந்த நிலையற்றதன்மை அபத்தமானது! நகைச்சுவைக் கலைஞர்களுக்கு இது நல்ல ஒரு தளம். ஒரு நகைச்சுவையான முடிவையே வைத்து விடுங்கள், நண்பரே!”

“பியோதர் நிகலோவிட்ச், நீங்கள் சீக்கிரம் வருகிறீர்களா?” பொறுமையிழந்த அப்பெண்கள் என் கதாநாயகனை அழைத்தார்கள். 

ஒரே நிமிடம்” கழுத்துப் பட்டையை நேராக்கிக் கொண்டே பதிலளித்தான் இந்த “உதவாக்கரை, முட்டாள்” மனிதன். “இது அபத்தமும் இரங்கத்தக்கதும் தான், இரங்கத்தக்கது, அபத்தம், ஆனால் என்ன செய்ய? Homo Sum. (நானும் ஒரு மனிதன் தானே). மேலும், பொருட்களின்  இந்த நிலைமாற்றத்திற்காக இயற்கை அன்னையை நான் புகழ்கிறேன். நம் நினைவில் எப்போதும் நீடித்து இருக்கிற, நாம் சந்திக்க வேண்டி வந்த எல்லா பயங்கர அனுபவங்களும் ஒருபுறம் இருக்கட்டும், நமக்கு ஏற்பட்ட தாங்க முடியாத ஒரு பல்வலியின் ஞாபகம் இப்போது நமக்கு வந்தால், பாவப்பட்ட ஜென்மங்களான நமக்கு அதை நினைக்கும்போதெல்லாம் இந்த வாழ்க்கை நரகம் தான்.”

அவனது புன்னகைக்கும் முகத்தை நான் பார்க்கிறேன், ஒரு வருடம் முன்பு அந்த இருண்ட சன்னலைப் பார்க்கும்போது அவன் கண்களில் நிரம்பியிருந்த திகிலையும் விரக்தியையும் நான் நினைத்துப் பார்க்கிறேன். அவனுக்குப் பழக்கமான, ஒரு அறிவார்ந்த வாயாடியின் கதாபாத்திரத்திற்குள் அவன் நுழைவதை நான் பார்க்கிறேன், பொருட்களின் நிலைமாற்றம் போன்ற அவனது பிரயோஜனமற்ற கோட்பாடுகளைப் பற்றிப் பீற்றிக் கொள்வதற்கு என் முன்னால் தயாராகிறான், ஆனால் அதே நேரத்தில், வருத்தத்துடன் கெஞ்சும் கண்களுடன் ஒரு இரத்தக் குளமான தரையில் உட்கார்ந்திருந்த அவனை நான் நினைத்துப் பார்க்கிறேன். 

“இந்தக் கதை எப்படி முடியும்?” என்னை நானே சத்தமாகக் கேட்கிறேன். 

சீட்டியடித்துக் கொண்டே தன்னுடைய கழுத்துப் பட்டையை நேராக்கிக் கொண்டிருந்த வாசில்யேவ் வெளியேறி வரவேற்பறைக்குச் செல்கிறான், அவனைப் பார்க்கும்போது வருத்தமாக இருக்கிறது. ஏதோ காரணத்திற்காக அவனது கடந்தகாலத் துயரங்களுக்காக நான் வருந்துகிறேன், அந்த பயங்கர இரவில் அந்த மனிதனுக்காக நான் அனுபவித்த அனைத்தையும் நினைத்து நான் வருந்துகிறேன் . இது ஏதோ எனக்கே ஏற்பட்ட இழப்பு போல இருக்கிறது.


-அந்தோன்  செகாவ்

தமிழில்:  சுஷில் குமார் 


ஆசிரியர் குறிப்பு:

அந்தோன் செகாவ் (1860-1904)
இரஷ்ய இலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவர். சிறுகதை எனும் வடிவத்தின் தந்தையாகவும் போற்றப்படுகிறார். சிறுகதை எனும் வடிவத்தை மிகச் சிறப்பாக செதுக்கியவர்.

ஆன்டன் செகாவ் தன் வாழ்நாளில் எழுதிய 50-க்கும் மேற்பட்ட  சிறுகதைப் படைப்புகளில் தலைசிறந்த சிறுகதைகளில் ஒன்று ‘வேட்டைக்காரன்’

சுஷில் குமார் 

சுஷில்குமார்  கல்வி புலத்தில் பணிபுரிகிறார்.  மாற்றுக்கல்வி சார்ந்தும், எளிய குழந்தைகளின் வாழ்வியில் சார்ந்தும் தொடர்ந்து இயங்கி வருபவர். சொல்முகம் எனும் மாதாந்திர வாசகர் குழுமத்தை நண்பர்களோடு கோவையில் ஒருங்கிணைக்கின்றார்.

3 COMMENTS

  1. இயல்பான நடை .தடுமாற்றமில்லாமல் வாசிக்க முடிந்தது.ஆண்டன் செகோவ் மீண்டும் மனதிற்கு நெருக்கமாகிறார்.வாழ்த்துகள் சுஷில் அண்ணா .குழுவினருக்கும் நன்றிகள் .

  2. புதிய வாசகர்களுக்கு எளிதில் புரியும் விதத்தில் மிகவும் இயல்பான மொழி நடையுடன் இருந்தது தங்களின் மொழிபெயர்ப்பு. வாழ்த்துக்கள். இடைநிருத்தமின்றி தொடர்க.

  3. மனதை அப்படியே வசப்படுத்துகிற மொழிநடை. மொழிபெயர்ப்பு என்ற உணர்வையே தராதவகையில் இயல்பாக எழுதப்பட்டிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.