ஆராயி – சிறுகதை

இப்படியே இருந்தா இதுக்கு என்னதான் முடிவு? இவ பாட்டுக்கு வந்து பத்து நாளா எதுவும் சொல்ல மாட்டீங்கறா. இவள கூப்பிடவும் மாப்ள வீட்டிலிருந்து யாரும் வரல. என்ன சடவுன்னும் வாயத் தொறந்து சொல்ல மாட்டீங்கறா. கலியாணம் ஆகி ஒரு மாசத்துல என்ன பெருசா சடவு சண்ட வந்துரப் போவுது? அவங்கதான் வலிய வந்து பொண்ணு கேட்டாக. நாமளும் கொஞ்ச நாள் போகட்டும். கைக்கும் மெய்க்கும் இல்லன்னு தாக்காட்டித்தான பாத்தோம். அவங்கதான் தொடந்து விடாப்படியா கேட்டு கட்டிக்கிட்டுப் போனாக. நம்ம ஆளுக வீட்டுப் பிள்ள மாதிரியேயில்ல. செகப்பு நிறமும், நிகிள தலமுடியும், ஒயரமும், கெம்பீரமும்ன்னு சொல்லி ஆள் மேல ஆள்விட்டு கட்டிக்கிட்டுப் போனா நா என்னன்னு சொல்றது? ஏன்டி ஊமக் கோட்டான். வாயத் தொறந்து சொல்லு. ஒனக்கும் ஒன் வீட்டுக்காரனுக்கும் ஏதும் பிரச்சனயா? அவன் ஏதாவது தொடுப்பு கிடுப்பு வச்சிருக்கானா? வாயத் தொறந்து சொன்னாத்தான தெரியும், நீ பாட்டுக்கு வந்து ஒக்காந்துக் கிட்ட. ஒனக்கு சோறு போட வேண்டியிருக்கேன்னு நான் கேக்கலத்தா. ஊர் சனம் பொல்லாதது. இப்பவே ஏதோ பேசிக்கிறாங்க. நான் கிட்டப் போனா நிறுத்திக்கிறாங்க. சொல்லத்தா என்ன பிரச்சன?”

மயிலம்மாவின் தலையைக் கோதிக்கொண்டே ஆராயி கேட்டாள். ஆராயி கிராமத்தில் முக்கியமான ஆள். பஞ்சாயத்து மெம்பரா ரொம்ப வருசமாக இருக்கிறாள். ஊரில் பெரிய வீட்டுக்கு மட்டும்தான் நிலம் இருக்கிறது. மற்றவர்கள் எல்லோரும் அந்த நிலங்களில் வேலை பார்க்க மட்டும் போவார்கள். எப்படியோ பத்து வருசத்துக்கு முன் ஆராயி வீட்டிலிருந்து இரண்டு ஏக்கர் நிலத்தை வாங்கியிருந்தாள். பெரிய வீட்டுக்காரரை மயக்கி அந்த நிலம் வாங்கியிருப்பாளோ என ஊர்ப் பெண்கள் அந்தச் சமயம் ரகசியமாகப் பேசிக் கொண்டார்கள். ஆனால் ஒருவர் கூட ஆராயியும் பெரிய வீட்டுக்காரரும் எந்த இடத்திலும் நின்று பேசிக்கொண்டதைப் பார்த்ததில்லை. எப்படி இது நடந்தது என்று தெரியாமல் யோசித்துக் கொண்டிருந்தனர். எப்படியோ நடந்துவிட்டது. ஆராயிக்கு மயிலம்மாள் பிறந்ததும், அவள் பெரிய வீட்டுக்காரர் மாதிரியே அச்சு அசலாகயிருந்ததையும் பார்த்து ஊர்காரர்களுக்குச் சந்தேகம் தீர்ந்துவிட்டது. பெரிய வீட்டுக்காரரை மயக்கிதான் இந்த நிலம் வாங்கியிருக்கிறாள் என்று.

மயிலு விசும்பினாள். ” நான் இனிமே ஒன்னய விட்டுட்டு போகமாட்டேன். இங்கதான் இருப்பேன்

ஏன்டி, இங்கயே இருக்கணும்னா எதுக்கு ஒனக்குக் கலியாணம் பண்ணி வெக்கணும்? எங்கிட்ட என்ன பணம் கொட்டியா கிடக்கு? அம்மாகிட்ட எதயும். மறைக்காதம்மா. எதுனாலும் மறைக்காம சொல்லிரு

ஆராயியின்  புருசன் ராமசாமி இந்தப் பேச்சு வார்த்தையில் கலந்து கொள்ளவில்லை என்றாலும் அவன் கவனம் முழுவதும் அம்மா மகளின் பேச்சுக்களிலேயேயிருந்தது. ஆராயி இந்த விசாரணையை ஆரம்பித்ததுகூட ராமசாமி வீட்டில் இருக்கும் நேரம் பார்த்துத்தான். அந்த வீட்டில் ராமசாமிக்கு என்று பெரிய செல்வாக்கு எதுவும் கிடையாது. எந்த விசயத்திலும் அவனுக்கென்று தனி அபிப்பிராயமும் இல்லை. ஆராயி என்ன சொல்கிறாளோ அதுதான் அவனது கருத்தும். ஆனால் ஆராயி எந்த முடிவு எடுத்தாலும் முடிவு எடுப்பதற்கு முன்பு அந்த விசயத்தை அவன் காதில் போட்டுவிடுவாள். இன்றுகூட அதற்காகத்தான் மயிலு புருசன் வீட்டிலிருந்து கோவித்துக்கொண்டு வந்ததை அவன் வீட்டில் இருக்கும் நேரமாகப் பார்த்து மகளிடம் விசாரித்துக் கொண்டிருக்கிறாள். ஆராயி இன்று இந்தப் பிரச்சனையை முடிவுக்குக் கொண்டு வர நினைத்தாள்.

மயிலு பதில் சொல்லாமல் அழுவது ராமசாமிக்கும் கஷ்டமாகப் போய்விட்டது. மயிலின்  அருகில் கிட்ட வந்து அவள் தோளைத் தொட்டான்

ஏன் ஆத்தா, சொல்லுங்க. என்னன்னாலும் எங்களால முடிஞ்சா உசிரக் கொடுத்துக் கூட செய்றோம்”  ராமசாமி மயிலிடம் அதிகம் பேசமாட்டான். ஓரிரு வார்த்தைகள் தான் பேசுவான்.

சரிய்யா நீ ஏன் உசிர கொடுக்கிறேன், அது இதுன்னு  பெரிய வார்த்தையெல்லாம் பேசிக்கிட்டிருக்கிற. தள்ளு. மயிலு சொல்லும்மா.”

அம்மா நா ஓங்கிட்ட தனியா பேசணும். அப்புறமா வேணும்னா நீ அப்பாகிட்ட சொல்லிக்க.”  ராமசாமியை ஆராயிப் பார்த்தாள். “ சரித்தா, நா ஆத்துத் தண்ணியில நெல்லு மூட்டய ஊரப் போட்டிருக்கேன், அதப் பாத்துட்டு வர்றேன்எனக் கிளம்பினான். ஆராயிக்குப் புரிந்துவிட்டது. இவள் ஏதோ பெரிய விசயத்திற்கு அடிப் போடுகிறாள் என்று.

சொல்லு. என்ன எங்கிட்ட தனியா பேசணும்?”

மயிலு எழுந்து வீட்டிற்கு வெளியே திண்ணயில் யாரும் இருக்கிறார்களா எனப் பார்த்தாள். ஒருவரும் இல்லை. கதவைச் சாத்திவிட்டு ஆராயியிடம் வந்தாள். ஆராயி தரையில் குத்தவைத்து உட்கார்ந்திருந்தாள். அவள் கால்களை மயிலு கட்டிக் கொண்டாள்.

சரி, சொல்லு.”

மயிலின் முகத்தைத் தடவிக் கொடுத்தாள்.

அம்மா, என்னையைக் கல்யாணம் பண்ணுனதே நா பார்க்க நல்லாயிருக்கேன்றது மட்டும்தானாம் கல்யாணத்துக்கு முந்தி நம்ம வீட்டப் பத்தி விசாரிச்சாங்களாம். கல்யாணப் பத்திரிகயில் அவரு தலமயில் கல்யாணம்னு போட்டோமாம்.”

நிறுத்துடி. எதுக்குடி இந்தப் பேச்ச ஒம் புருசன்கிற அந்தப் பொசகெட்ட பய எடுக்குறான். அவரப்பத்திப் பேசுனா எனக்கு வேகாளம் வந்துரும். சொல்லிட்டேன்.”

பொறும்மா நான் சொல்ல வர்றத முடிக்கவிடு, எனக்குத் தெரியாதா? நா அவன் சும்மா விட்டுருப்பேன்னு நெனக்கிறயா?”

 ஆராயி கண்களில் கண்ணீர் முட்டிக்கொண்டு நின்றது. மகள் வீட்டின் பிரச்சனை சாதாரணமாக தீர்க்கக் கூடியது இல்லை என்பது தெரிந்து போயிற்று.

சரி, சொல்லுஎன்றாள் ஆராயி.

அந்த ஊர்ல இப்ப ஒரு மில்லு கட்டிக்கிட்டுயிருக்காங்க. இந்த ஆளுக்கு அங்க வேலயில சேரணுமாம். அந்த மில் ஓனரும் நம்ம பெரிய வீட்டுக்காரரும் ஒரே ஜாதியாம், பெரிய வீட்டுக்காரார்கிட்ட சொல்லி நாம வேல வாங்கித் தரணுமாம்.”

ஆராயிக்கு மயக்கம் வருவதுபோல் இருந்தது. சுவரில் சாய்ந்து கொண்டாள். மயிலு எழுந்து சென்று ஒரு தம்ளரில் தண்ணீர் எடுத்து வந்தாள். ஆராயி அதை வாங்கிக் குடித்தாள். வாயை சேலை முகப்பில் துடைத்தாள்.

மெதுவா பேசு மயிலு. சுத்தியிருக்கிறவளுகளுக்கு மெல்லுறதுக்குக் கிடைச்சிருச்சு. நா பத்து வருசமா பேசக்கூடாதுன்னு மூடி வைக்கிறத இப்படிப் பேசி அசிங்கப்படுத்தறாங்களே. எனக்கு நெனச்சாலே ரத்தம் சுண்டிப் போகுது. கேடு கெட்ட பயலுக, எதைத் தொட்டா உசிரு போகுமுன்னு தெரிஞ்சு வச்சிருக்காய்ங்க. ஒனக்குதான் தெரியுமே எல்லாம். ஊர் வாய ஒலம்புடி போட்டு மூடி வைக்க முடியுமா? ஊர்லயிருக்கிறவங்க மறந்துட்டாய்ங்கன்னு நெனச்சேன். இப்ப புதுசா இவன் கிளம்பிருக்கானா?”

கல்யாணப் பத்திரிகயில அவர் தலமயில கல்யாணம்னு போட்டிருந்துச்சுல்ல, உள்ளூர்லயிருந்துக்கிட்டே ஏன் அவரு வரல? எனக்கு என்னான்னு தெரிஞ்சாகனும்னு தவ்வுறான்.”

நீ என்னடி சொன்ன?”

எனக்குத் தெரியாதாம்மா. நா அவன விடல. ஊர் முறப்படி போட்டோம். ஏன் வரலன்னு அவர்கிட்டத்தான் கேட்கணும்னு சொன்னேன். ‘எனக்கு வேல வாங்கித் தர துப்பில்லைன்னான். என்ன வேகாளம் வந்துச்சோ குடிக்கார நாயிக்கு, பளார் பளார்ன்னு அறைஞ்சு, ‘ ஒன்னைக் கல்யாணம் பண்ணுனதே அதுக்குத்தான். அதுவே இல்லன்னப் பிறகு ஒனக்கு இங்க வேலையில்ல கிளம்புன்னுட்டான்.”

ஏன்டி நீ பேசறது ஒனக்கே புடிபடுதா? என்ன சொல்ல வந்த? அடிச்சான்னு தெரியுது. ஏதோ வேல கேட்டான்னும் தெரியுது. என்ன கேட்டான்னு விளக்கமாச் சொல்லு. ஒம் பொறப்பு அப்படி. எதுவும் சரியா சொல்லமாட்டே, சரியா கேட்டுத் தெரிஞ்சுக்கிறவும் மாட்டே. ஆளு மாத்திரம் நல்லாயிருந்தா போதுமா? ஆளப் பார்த்தா அழவு, வேலயப் பாத்தா இழவுன்னுட்டு சொல்ற மாதிரிதான இருக்கே.”

பொறும்மா, நா சொல்ல வர்றத முழுசா கேளு, இந்த ஆளு நம்ம பெரிய வீட்டுக்காரர எங்க ஊர் புது மில்லுல வச்சுப் பார்த்தாராம். இந்த ஆளு மில்லு வேல கேட்டு அங்குப் போனப்ப அவர் இருந்திருக்காரு. நம்ம அய்யாதானே வந்திருக்காருன்னு சிரிச்சிக்கிட்டே கிட்டப் போச்சாம். பெரிய வீட்டுக்காரர் பாத்தும் பாக்காதது மாதிரியும் இருந்தாராம். இந்த மூதேவி நேரங்காலந் தெரியாம கிட்டப் போயி, ‘உங்க ஊர்லதான் நான் கலியாணம் பண்ணியிருக்கேன். ஆராயி மருமகன்ன்னுச்சாம். அவரு டக்குனு நகர ஆரம்பிச்சாராம். ‘கலியாணம்கூட ஒங்க தலமயின்னுதான் பத்திரிகயில் போட்டிருந்துச்சு. நீங்க வரலன்னு வேற ஒளறியிருக்கு. பெரிய வீட்டுக்காரரு மூஞ்சில அடிச்ச மாதிரி, ‘எனக்கும் அந்த வீட்டுக்கும் சம்மந்தமில்ல. ஒன்னயும் தெரியாது. நீ சொல்ற ஆளுக்கும் எனக்கும் எந்த சம்மந்தமுமில்லன்னு சொல்லிட்டு கிளம்பிப் போய்ட்டாராம்.”

இந்த ஆளு வீட்டுக்கு வந்து தய்யா தக்கான்னு குதிக்கிறான். ‘கல்யாணத்துக்கு வாராதவன் பேர ஏன் தலமன்னு போடணும்? அவன் என்னடான்னா பத்து, இருபது வீடு இருக்கிற சின்ன ஊர்ல இருந்துக்கிட்டு ஓங்க ஆத்தாவத் தெரியாது, சம்பந்தமில்லங்கிறான். ஒங்க ஆத்தாவுக்கும் இவனுக்கும் சம்மந்தமில்லையான்னா அப்ப யாருக்கு சம்பந்தம்னுகத்துறான்.”

மரியாதயா பேசுடி. குடிகார நாய்க்கு வாய்த் துடுக்கு அதிகமாயிருக்கு. அந்தக் கேடுகெட்ட நாய் அவர அவன் இவன்னு பேசுவானா?”

நானும் அப்பவே அவன்கிட்ட சொல்லிட்டேன். அவரப் பத்தி மரியாதயாப் பேசுன்னு. அதுக்கு அவன் சொல்றான். ‘ ஆமாடி மரியாதய எங்கிட்ட மட்டும் எதிர்பாரு. அந்த ஆளு பேசுன பேச்சுல ஒனக்கு அசிங்கம் இல்லையா?’ன்னு என்னைய கேக்கிறான்.”

சரி விடு. அவனுக்கு என்ன வேணுமாம்?”

என்னம்மா புரியலயா ஒனக்கு? நா ஆராயி மருமகன்னு இவன் சொன்னவுடன்மயிலு எப்படியிருக்குன்னுஅவர் கேட்கணும்னு இவன் எதிர்பார்த்திருக்கான் . மில்லு முதலாளிகிட்ட கூட்டிக்கிட்டுப் போயி, ‘இவன் எனக்கு ரொம்ப வேண்டியவன், இவன கட்டியிருக்க பிள்ள மயிலு எனக்கு மக மாதிரி. இவனுக்கு ஒரு வேல கொடுங்கன்னு சொல்லுவார்னு எதிர்பார்த்திருக்கான். அது நடக்கலன்னவுடன் ஒன்னய மானாங்கனியா பேச ஆரம்பிச்சுட்டான். நீ ஒரு ஆளு கிட்ட இல்லயாம். பெரிய வீட்டுக்காரரு ஒன்னய அதனாலதான் மதிக்கலயாம். பேரு போட்டிருதும் கலியாணத்துக்கு வரலயாம்.”

நிறுத்துடி. ஏன்டி என்னயும் அவரையும் தெரிஞ்சுதுகளும் தெரியாததுகளும் எத்தன நாளுக்குத்தான்டி வாயில போட்டு மெல்லுவீங்க? இப்ப அவனுக்கு என்னடி நான் ருசு பண்ணனும். நீ அந்த ஆளுக்குத்தான் பொறந்தே, அவரத் தவிர எனக்கு வேற யாரும் இல்ல. அவரு என்னயப் பத்தி என்ன நெனக்கிறார்ங்கிறது எனக்கு முக்கியமில்லை. நா அவர எப்படி நெனக்கிறங்கிறதுதான் முக்கியம். நானும் அவரும் பேசி பத்து வருசத்துக்கு மேலாகுது. ஒருத்தர் மூஞ்சி ஒருத்தருக்கு மறந்து போச்சு. அவரு மாதிரி நீ கூறு கெட்ட வேல பாக்கயில, பேசத் தெரியாம பேசயில அவரு ஞாபகம் வரும். மத்தபடி நான் அத கனவா நெனச்சு மறந்துட்டேன். இப்ப அத எதுக்குடி கிளர்றாங்க? நாங்களே முடிஞ்சு போச்சுன்னு நெனச்சத. சரி, விடு. இப்ப நா என்ன செஞ்சா அவன் வந்து ஒன்னைய கூட்டிக்கிட்டுப் போவான்? ஒன்னய நல்லா வச்சிக் கிருவான்?”

பெரிய வீட்டுக்காரரு இவனக் கூப்பிட்டுப் பேசணும். மயிலு எனக்கு மக மாதிரி ரொம்ப முக்கியம்னு அவன்கிட்ட சொல்லணும். மில்லுல வேல வாங்கித் தரணும்.”

அப்படி அவர் சொல்லலன்னா?”

நா இங்கதான் இருப்பன்

சரி, இரு.”

ஆராயி எழுந்து சென்று முகத்தை கழுவிக் கொண்டாள். நல்ல சேலையாகப் பார்த்து உடுத்திக் கொண்டாள். “ எந்திரி மயிலு, முகத்தக் கழுவிக்கிட்டு வாசலக் கூட்டித் தெளி. பொழுது சாயப் போகுது. ஒம் புருசன அந்தப் பொச கெட்ட பயல, விளக்கு வைக்கிற நேரத்தில தப்பா பேசக் கூடாதுன்னு பாக்குறேன். அந்த ஆளு மூஞ்சியிலேயே முழிக்க மாட்டேன்னு சொல்லி பத்து வருசமாகுது. நா வேணா வேணான்னு தலயால அடிச்சுக்கிட்டேன். பத்திரிக்கையில பேர் போட்டா பிரச்சன வரும்னு. யார் கேட்டா?”

யம்மா நீ ஒனக்கு தெரிஞ்சத சொல்லிட்ட. எனக்குத் தெரிஞ்சத நான் ஒங்கிட்ட சொல்லிடுறேன். ஓங்கிட்ட அவரு பேசலயின்னாலும் எங்கிட்ட பேசுவாரு. நா வயக்காட்டுக்குப் போறப்ப தனியா வந்து பேசுவாரு. பணம் கொடுப்பாரு. ஒங்கிட்ட சொல்ல வேணான்னு சொல்லி கல்யாணத்துக்கு  நக கொடுத்தாரு. ஓங்கிட்டகில்ட்நகன்னு சொல்லச் சொன்னாரு. அப்படி என்னதாம்மா பிரச்சன ஒனக்கும் அவருக்கும்?”

ஒனக்கு இது சம்மந்தமில்லாதது. விடு. இப்பத்தான் நீயும் அவரும் சேர்ந்துக்கிட்டீங்கன்னு எனக்குத் தெரிஞ்சு போச்சே. ஓங்க ரெண்டு பேருக்கும் நா வேண்டாதவ. அவரு ஒங்கிட்ட பேசுவாரு. ஆனா எங்கிட்ட பேசமாட்டாரு. நீ அவருகிட்ட பேசுவ. எங்கிட்ட மறச்சிருவ. இந்த விசயத்தயும் போய்ச் சொல்லு அந்த பெரிய மனுசன்கிட்ட. ஓம் புருசன் ஒன்னய அடிச்சத அவருகிட்ட சொல்லு.”

தலயிருக்க வாலு ஆடக்கூடாதும்மா. நா வேணும்னே இதெல்லாம் மறைக்கல. அவரப் பாத்தா பாவமாயிருக்குமா. பெரிய மனுசன். ஊரே அவரப் பாத்து பயப்படுது. மரியாத கொடுக்குது. எனக்காக வழியில தனியா மறஞ்சு நிப்பாரு. பாவமாயிருக்கும்மா.”

ஆமா பெரிய பாவம். அவரா பாவம்? எம்மேல இல்லாத பழிய போடுமாம். நா சும்மாயிருக்கணுமாம். ஏன்னா இவரு ஆம்பள. பெரிய வீடுஅதான் போட்டேன் ஒரு போடு. ஆள் பொட்டிப் பாம்பா அடங்கிருச்சு.”

கதவைத் தட்டும் சத்தம் கேட்டது. மயிலும் ஆராயியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். ஆராயி மகளை உள்ளே போகச் சொல்லி  கண் ஜாடை காட்டினாள், முகத்தைத் துடைத்து விட்டு கதவைத் திறந்தாள். ராமசாமி நின்றிருந்தார்

நீதானா கதவைத் தட்றே, நான் தான்னு சொன்னா என்ன? நா யாரோ எவரோன்னு பயந்து போயிட்டேன். வா உள்ளஎன்றாள். வந்திருக்கிறது யார் என்று தெரிந்தவுடன் மயிலு வெளியில் வந்தாள்.

வாசல் கூட்டித் தண்ணீர் தெளித்தாள். ஆராயி ராமசாமியை ஜாடை காட்டி அழைத்தாள், “யோவ், நா ஒங்கிட்ட படிச்சுப் படிச்சு சொன்னேல்ல? பத்திரிகயில பேர் எல்லாம் போட வேணாம்னு, நீ என்ன சொன்ன? ஊர்ல எல்லாரும் அவரு பேர போடுறபோது நாம போடலன்னா நல்லாயிருக்காதுன்னு சொல்லி என் வாய அடைச்சயில. இப்ப பாத்தியா வெனய? ஒன் மருமகன் என்னய பத்தி மானவாரியா பேசுறானாம்.”

சரி சரி விடு. சத்தமா பேசாதே. எனக்குப் பூராம் தெரியும். மயிலு வந்த அன்னக்கே சொல்லிருச்சு.”

அடப்பாவி. எங்கிட்ட சொல்ல மாட்டீங்களாநீயும் அவளும் பேசிக்கிட்டா சரியாப் போச்சா? நான் தான் இதுல முக்கியமான ஆளு. என்னப் பத்திதான பிரச்சனயே. என்னய விட்டுட்டுப் பிரச்சனயே இல்லாத ஆளுக இதப்பத்தி பேசிக்கிட்டிருக்கீங்க. சரி நா ஒரு முடிவு பண்ணிட்டேன். அவரப் பார்க்கணும். இதுக்கு நா ஒரு முடிவு கட்டியாகணும்இப்ப எங்கயிருப்பாரு? ஆத்துப் பக்கம் அவர பாத்தியா இப்ப?”

ஆத்துலதான் இருக்காரு. நம்ம நெல் மூட்டக்குப் பக்கத்திலதான் அவரது நெல்லு மூட்டயும் தண்ணியில ஊறுது. அவங்கப் போட்டு ரெண்டு நாளாச்சாம். இப்ப வீட்டுக்கு எடுத்துட்டு போகச் சொல்லிக்கிட்டிருந்தாரு. நா அவருகிட்ட நாளக்குக் காலல எடுங்கன்னு சொன்னேன். எடுத்துட்டுப் போயி நனஞ்ச சாக்கு மூட்டகள ஒன்னுக்கு மேல ஒன்னு வைக்காதீங்க. நெறைய நெல்லு முளைக்காது. படுக்கப் போடுங்க. ரெண்டு நாள்ல கப்புன்னு முளச்சிடும். அப்படியே தூக்கிப் போய் நாத்தாங்கால்ல வெதைச்சிடுங்கன்னு சொன்னேன். சரின்னுட்டு வேலக்காரங்கள ஆத்துலயிருந்து அனுப்பிச்சிட்டாரு. ஊருக்குள்ள வரலயான்னு கேட்டேன். மனசு சரியில்ல. கொஞ்ச நேரம் கழிச்சி வர்றேன். கிளம்புன்னு சொன்னார். இப்ப அங்கதான் இருப்பாரு.”

ஆமா, நீ பெரிய யோசனக்காரரு சொல்லிட்ட. நா என்ன கேக்கிறன்? நீ என்ன சொல்லுற? சரி போய் நானும் மயிலும் அவரப் பார்க்கணும்னு சொல்லு. எப்ப எங்க வரணும்னு கேட்டுட்டு வா. இருய்யா, யாரும் இல்லாத நேரமாப் பாத்துக் கேளு.”

ராமசாமி போய்ப் பார்த்தபோது ஆத்தங்கரையில் அவர் இல்லை.

ராமசாமி பெரிய வீட்டிற்கு வந்தான். அவனைப் பார்த்ததும் பெரிய வீட்டுக்காரனின் பொஞ்சாதி, “என்ன ராமசாமி வராத ஆளு வந்திருக்க. மயிலு எப்படியிருக்கா? வந்து பத்து நாளாச்சாமே? தனியா வந்திருக்கான்னு சொல்றாங்க? ஏதாவது பிரச்சனயா?” என்றாள்.

இல்லத்தா. சும்மாதான் வந்திருக்கு. மாப்ள வெளியூர் போயிருக்காராம். அங்க தனியாயிருக்க வேணாம்னு இங்க வந்திருக்கு.”

சரி சரி. இப்படி ஒக்காரு. அவர வரச் சொல்லுறேன். நீ ஏதோ நாத்து நெறைய முளக்க யோசன சொன்னியாமே? அதத்தான் காவக்காரன்கிட்ட சொல்லி நெல்லு மூட்டகள படுக்க வைக்க இடம் தயார் பண்ணிக்கிட்டிருக்காருஎன்றாள்.

சிறிது நேரத்தில் பெரிய வீட்டுக்காரர் வந்தார். மெதுவான குரலில் ராமசாமி சொன்னதைக் கேட்டுக்கொண்டார். “இப்பவே கூட்டிக்கிட்டு வா. நா ஆத்துல நெல் ஊறப்போடற இடத்துக்கு வந்துர்றேன். எங்கூட யாரும் இருக்க மாட்டாங்கன்னு சொல்லிடுஎன்றார்

 மயிலும் ஆராயியும் ஆத்துக்குப் போனபோது லேசாக இருட்டிவிட்டது. அதுவரை பின்னால் வந்த மயிலை நீ முதல்ல போ என்று ஆராயி லேசாகத் தள்ளிவிட்டாள். மயிலு முன்னால் நடந்தாள். பெரிய வீட்டுக்காரர் ஒரு கல் மீது உட்கார்ந்திருந்தார். இருவரும் வருவதைப் பார்த்து எழுந்து நின்றார். “வாத்தா மயிலு. எப்படியிருக்க. ஒம் புருசனப் பாத்தேம்மா. நா கலியாணத்துக்கு வரலேயே தவிர அவன நான் பாத்திருக்கேன். ஒன்னய பொண்ணுக் கேட்டு வரலேயே என்னய அவன் அப்பன் பாத்துட்டுத்தான் ஒங்க வீட்டுக்கு வந்தான். பத்து நாளைக்கு முன்னே ஒம் புருசன் ஊர்லயிருக்கிற ஒரு மில்லுக்குப் போயிருந்தேன். மில் ஓனரு நம்ம சொந்தக்காரரு  அங்க ஒன் புருசன் வந்தான். சரியாப் பேச முடியலம்மா. தப்பா நினைக்காதே. அப்புறம் எப்படியிருக்க? மாப்ள வரலயா?”

எப்படி வருவாரு? இது வரைக்கும் இவருதான் அவிசாரி பட்டம் கொடுத்தாரு. இப்ப புதுசா ஒரு ஆளும் வந்தாச்சு. இனி எல்லாரும் பேசட்டும்

மயிலு நா ஒங்கிட்டத்தான் பேசிக்கிட்டிருக்கேன். ராமசாமி கிட்ட நா சொல்லித்தான் வரச் சொன்னேன். யார் கூட நீ வந்தாலும் ஒன்கூட மட்டும்தான் நான் பேசுவேன்னு சொல்லிட்டன். வேணாம். என் கூட யாரும் பேச வேணாம்.”

பத்து வருசமா நீ படுத்துறபாடு எனக்கும் அந்த கரைச்சாமிக்கும்தான் தெரியும். வாய்க்கு வந்த படி நீ பேசுவ. நா கேட்டுக்கிட்டு பேசாமயிருக்கணும். நீ ஊர மேய்வ. என்னயும் ஒன்ன மாதிரி நினைச்சுப் பேசுவ. நா கேட்டுக்கிட்டு எரும மாதிரியிருக்கணும்.”

மயிலுக்கு ஆச்சரியமாகயிருந்தது. அம்மா அவர, “ நீ.. வா, போஎன்பதும் அவர் அதற்கு பதில் பேசாமல் இருப்பதும். அந்த ஊரில் அவரை யாரும் இப்படிப் பேசி அவள் பார்த்ததில்லை.

மயிலு உங்க அம்மாகிட்ட ஒன்னு சொல்லிக்கிறேன். அவங்ககூட பழைய மாதிரி நான் இருக்க விரும்பல. ரெண்டாவது எது பேசுனாலும் பெரியவங்க தனியா பேசிக்கிறணும். மன்னிச்சுக்கம்மா. நீ சின்னப் புள்ள.”

என்ன பெரிய்ய்யய மயிலு? நா போட்ட புழுக்கத்தான. எனக்குத் தெரியாம ஒனக்கு அவ கூட என்ன பேச்சு? ஆடு பகை, குட்டி ஒறவா ஒனக்கு?”

விடு புள்ள. தனியா பேசிக்கிருவோம். மயிலு நீ கொஞ்சம் தள்ளி போம்மாமயிலு நடக்க ஆரம்பித்தாள்.

போகாதேடி. நில்லு. ஒங்க அப்பன் யோக்கியதய இப்பத் தெரிஞ்சுக்கோ. எதுக்கு நானும் இந்த மனுசனும் பேசுறதில்லைன்னு தெரிஞ்சுக்கோ.”

வேணாம் ஆராயி விடு.”

எம் பேரச் சொல்லாதய்யா. எனக்கு வாயில கண்டமாதிரி வந்துரும் சொல்லிட்டேன். ஒனக்காக நா பட்ட கஷ்டம் கொஞ்ச நஞ்சமில்ல. ரெண்டு ஏக்கர் நிலத்த நீ கொடுத்தாலும் கொடுத்தே. ஊர் என்னப் பேசின பேச்சு கொஞ்சநஞ்சமில்ல. ஒன்னய மயக்கிட்டேனாம். கருவாச்சி சரியான ஆளு. ரெண்டு ஏக்கரும் வாங்கிட்டா. அவளுக்கு சம்மந்தமேயில்லாத செவப்பு நெறத்துல பொம்பளப் பிள்ளயும் பெத்துக்கிட்டான்னு. நானும் அதப் பெருமயாத்தான் எடுத்துக்கிட்டேன். ஆனா நீ பேசின பேச்சு எப்படிய்யா மறப்பன்? ஒனக்கு என்னய பிடிக்கலன்னா விட்டுற வேண்டியதுதான? அதுக்காக எது வேணாகும் பேசுவியா நாக்கில நரம்பில்லாம? அதுதான் ஒன் சங்காத்தமே வேணான்னுட்டேன்இந்த ராமசாமி கூறுகெட்ட குப்பன். பத்திரிகயில பேரப் போடு எழவக் கூட்டுன்னு உயிர வாங்கிடுச்சு. இந்த மயிலு இந்தப் பெரிய மனுசன்கிட்ட நகையும் நட்டும் வாங்கியிருக்கு. எதுக்கு நக குடுக்கிறீங்க? ஒங்களுக்கும் எங்களுக்கும் என்ன சம்பந்தம்? எங்கிட்ட பேசாத மாதிரியே இவகிட்டயும் பேசாம இருந்துட்டுப் போக வேண்டியதான?”

மயிலு ஒங்க அம்மா அதிகமாகப் பேசுது. சின்னப்புள்ள இருக்கயில என்ன பேசுறோம்னு தெரிஞ்சுப் பேசணும்.”

எங்கிட்டப் பேசுய்யா, எதுக்கு என்னய விட்டுட்டு அது கிட்டப் பேசுற? மயிலு பெரிய இவ. இவளுக்கும் கலியாணம் ஆயிருச்சு. அப்புறம் என்ன சின்னப் புள்ள நொன்னப் புள்ளன்னுக்கிட்டு. ஊருக்குத் தெரிஞ்ச என்ன அசிங்கம் ஒன் புள்ளைக்கும் தெரியட்டும். ஒரு பெரிய மனுசன் எப்படா இவ வருவான்னு ஒளிஞ்சு ஒளிஞ்சு பாத்துக்கிட்டு முட்டாயியும் காசும் மட்டுமாய்யா குடுத்தே. மானங்கெட்டவங்கிறவளோட மகங்கிற பேரையும்தான் குடுத்த. இன்னிக்கு ஒன் யோக்கித முழுசாத் தெரியட்டும். ஆமாய்யா நா இதுவர இவகிட்டக் கூட சொல்ல முடியாது, இவளுக்குத் தெரியக் கூடாதுன்னு நெனச்சன். ஒன் குறுக்கு புத்திதான நீ பெத்ததுக்கும் இருக்கும். எங்கிட்ட எல்லாத்தையும் மறைச்சிடுச்சு. இன்னிக்கு சொல்லிச்சு. முதல்லே தெரிஞ்சிருந்தா இவள உண்டு இல்லன்னு பண்ணியிருப்பேன்.”

மயிலு இவள விடு. ஒன்னய அவன் நல்லா வச்சிருக்கான்னாம்மா? நா அவன்கிட்டப் பேசுறேன்.”

நீ அவன்கிட்ட பேசுறது இருக்கட்டும். முதல்ல என்கிட்டப் பேசு. பத்து வருசம் என்கூட ஏன் பேசாம இருக்கேன்னு இப்ப ஒடச்சு சொல்லு.”

வேணாம் பழச கிளறாதே. நா நொந்து போயிருக்கேன்.”

ஆமா. நொந்து போயிருக்கிற ஆளப்பாரு. பவிசு என்ன கொறஞ்சிருக்கு? ஒன் ஆட்டம் என்ன கொறஞ்சிருக்கு? எனக்கு என்ன தெரியாதுன்னு நெனச்சியா? ஒன்னப் பத்தி முழுசாத் தெரியும் எனக்கு. ஓன் வீட்லயிருக்கிறது மாதிரின்னு என்னய நெனச்சுக்கிட்டயா?”

நீ வீட்லயிருக்கிற மாதிரியா நடந்துக்கிறயா?”

யோவ் நிறுத்துய்யா. நானும் ஒன் சித்தப்பனும் பேசிக் கிட்டிருந்தது…”

நிறுத்துடி. என்கிட்டயே திமிராப் பேசுறயா? “ என்று சொல்லி தலைமுடியைப் பிடித்து நான்கு அடி கொடுத்தார்

யோவ் பெரிய வீட்டு மைனர். என்னய்யா கையில சத்து இல்லயா? சின்னப்பிள்ள தட்டுறமாதிரி தட்டுற. ஒம் மனசுல சத்தியம் இல்லாததால ஒங் கைக்கு சக்தியில்லாமப் போச்சுய்யா. ஓனக்கே தப்புப் பண்ணிட்டோம்னு தெரியுது. ஓன் திமிர், ஆம்பிளங்கிற தினாவட்டு, நா வந்து ஒன் கால்ல விழுந்து,  ’நா சும்மாதான் பேசினேன். நா அப்படிப்பட்டவ இல்ல. என்னய சந்தேகப்படாத. ஒன் மேல சத்தியம். ஒன் பிள்ள மேல சத்தியம், கரைச்சாமி மேல சத்தியம்னு நா சொல்லியிருந்தாநான் தப்பு பண்ணியிருந்தாக்கூட என் கூட இருந்திருப்ப. நீ கேட்ட, அவருகிட்ட என்ன பேச்சுன்னு? நா வெளையாட்டுக்கு நீ ஊர் பொம்பளக கூடல்லாம் பேசயில நா அவரு கூட பேசக் கூடாதான்னு கேட்டன். ஒனக்கு ஏறிக்கிருச்சி. மூஞ்சியில முழிக்காதேன்னுட்டு கிளம்பிட்ட. நா தப்புப் பண்ணல. அதனால நீ எம்மேல சந்தேகப்படுறேன்னு தெரிஞ்சும் நா ஒன்கிட்ட மன்னிப்பு கேட்கல. நீ அப்படியே அடச்சு பட சாத்திட்டு இருந்துட்ட. பத்து வருசம் ஓடிப்போச்சு. ஒனக்கென்ன ஒருத்தி போனா இன்னொருத்தி.”

ஆராயி, பேச்ச விடு . நா எல்லாத்தயும் மறந்துர்றேன். நீயும் மறந்துரு.”

எதய்யா மறக்கிறது. பத்து வருசம். ஒரே ஊர்ல ஒருத்தர் மூஞ்சிய ஒருத்தர் பாக்காம கலியாணப் பத்திரிகயில பேர் போட்டும் நீ வராமா, ஊர்க்காராங்களுக்கு நாம எப்பப் பாத்துக்கிறோம். எப்படி இவ ஒன்ன மாறியே  அச்சு அசலா பொறந்தா. ஏன் நாமப் பேசிக்கிறதில்லன்னனு எத்தனய நா மறக்கிறது.”

ஏய் பைத்தியக்காரி. ஒங் கதய எவன் கேட்டான்? இப்ப முதல்ல நடக்க வேண்டியதப் பாரு. இந்தப் பிள்ள புருசன் வீட்டுக்குப் போகணும். அதுக்கு நாம என்ன செய்யனும்னு சொல்லு. நம்ம பிள்ளக்காக எதுன்னாலும்  செய்றேன்.”

மயிலுக்குப் புரிந்துவிட்டது. அம்மாவும் பெரிய வீட்டுக்காரரும் சமாதானமாகி விட்டார்கள் என்று. எத்தனை வருடங்கள் அம்மாவின் அழுகைக்கு இன்று முடிவு கட்டியதில் அவளுக்கு ரொம்பச் சந்தோசமாகிவிட்டது.

சொல்லு மயிலு. நீதான் சொல்லணும். நானும் ஒங்க அம்மாவும் என்ன செய்யணும்? நீ ஒன் வீட்டுக்குப் போக.”

அவள் புருசன் எதிர்பார்ப்பது என்ன என்று மயிலு யோசித்தாள். “ஒன்னுமில்ல. என் புருசனுக்கு அந்த மில்லுல வேல வாங்கித் தரணும். அந்த விசயத்த நீங்களே என் புருசன்கிட்ட வீட்டுக்கு வந்து சொல்லணும். அப்ப அந்த ஆளு சமாதானமாயிரும்.”

ஒன்னும் பிரச்சயில்ல மயிலு. நீ சொல்ற எல்லாமே என்னால முடியும். அவனுக்கு வேல வாங்கித் தர்றேன். ஒன் வீட்டுக்கும் வர்றேன்.”

ஆராயி மயிலின் முதுகில் தட்டினாள். “ ஆமா இவ புருசன் பெரிய்ய இவரு. அவன் கெட்ட கேட்டுக்கு அவன வீட்ல வந்து இவருப் பாக்கணுமா? அதெல்லாம் ஒன்னும் வேணாம். வேல மாத்திரம் வாங்கிக் கொடுங்க. மத்தபடி அந்தப் பய வீட்டுக்கு நீங்க ஏன் போகணும். தராதரம் வேணாம்?”

இதுல்ல என்ன பிள்ள பெரிய தராதரம். பத்திரிகயில பேரு போட்டீங்கஉள்ளூரிலேயே இருந்துகிட்டு நா வரலன்னா அப்படியிப்படி யோசிக்கிறது சகஜம்தானே. நீயும் மயிலும் தப்பா நெனக்கலைன்னாலும் அவன் வெளியூர்க்காரன்நம்மளப்பத்தி அவனுக்கு என்ன தெரியும்? அவன் நெனச்சது பேசினது எல்லாம் சரிதான். விடு இப்பத்தான் எல்லா சரியாய் போச்சுதுல்லஎன்றார் பெரிய வீடு.

அம்மாவின் முகம் பிரகாசமாகயிருந்ததாக மயிலம்மாவுக்குத் தெரிந்தது. ஆராயி பேச்சை மாற்றினாள்.

வித நெல் ஊறப்போட்டு ரெண்டு நாளாச்சாமே? முந்தி அவசரப்பட்டு எடுத்து சரியா மொளக்கலயாமே? என்ன அவசரம், ஒரு நாள் சேத்து இருந்தால் நல்ல மொளைக்குமாம்ஆராயி முடிக்கவில்லை.

ஆமா ராமசாமி சொன்னாப்பல. படுக்க வச்ச மாதிரி நெல்லு மூட்டைகள அடுக்கணுமாம். வெதைங்க நல்ல மொளக்குமாம்.”

ஆராயி மகளைப் பார்த்தாள். “ மயிலு நீ வீட்டுக்குப் போ. நா வந்துர்றன்என்றாள்.

இன்று இரவும் அம்மா தூங்கமாட்டாள். ஆனால் நிச்சயம் அழமாட்டாள் என்று மயிலம்மாவுக்குத் தெரிந்துவிட்டது.


டாக்டர்.மு.ராஜேந்திரன் இ.ஆ.ப

 

பாதாளி சிறுகதைத் தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்ட இச்சிறுகதை ஆசிரியரின் உரிய அனுமதிப் பெற்று பெட்டகம் பகுதியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது

1 COMMENT

  1. அவிழ்க்கச் சிக்கலான முடிச்சுகளும் தக்க தருணம் வந்தால் தானாய் அவிழ்ந்து சிக்கல் விடுபடும் அதிசயம். ஆராயியும் ஒரு அதிசயம்தான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.