கனலி கலை-இலக்கியச் சூழலியல் இணையதளம் தனது நான்காவது ஆண்டின் முதல்நாளில் அடியெடுத்து வைக்கிறது. தற்போது நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்? என்று என்னிடம் நானே (யாரும் நிச்சயம் கேட்க மாட்டார்களென்று தெரியும்) கேட்டுக்கொண்டால் எனது பதில்களை இப்படித்தான் தொகுத்துக் கொள்வேன் என்று நினைக்கிறேன்.
மிகுந்த மகிழ்ச்சியாக உணர்கிறேன். அதேநேரத்தில் பெரிய இலக்கியச் செயல்பாடுகள் எதுவும் இன்னும் செய்திடவில்லை என்கிற எண்ணமும் அதனுடனே வந்து உட்கார்ந்து கொண்டு என்னை வேடிக்கை பார்ப்பதைத் தவிர்க்கவும் இயலவில்லை. மூன்றாண்டுகள் என்பது வாழ்நாளில் பெரிய கால அளவு தான். வாழ்வின் தனிப்பட்ட லௌகீகச் சிக்கல்கள் ஒருபுறம்,இன்னொருபுறம் நவீன இலக்கியத்தின் மீதான ஆர்வம்,இவை இரண்டுக்குமிடையே அலைந்து திரியும் மனநிலையுடன் வாழ்ந்த நாட்களாக இந்த மூன்றாண்டுகளையும் கருதிக்கொள்கிறேன்.
கனலி போன்ற இலக்கிய இணையதளத்தை எந்தவித பிரதிபலனுமின்றி தொடர்ந்து நடத்திட என்னை எதுவெல்லாம் உந்துகிறது என்று வெவ்வேறு கணங்களில் சிந்தித்துப் பார்த்துள்ளேன். என் சிந்தனை வழியாக நிறைய பதில்கள் எனக்குக் கிடைத்தாலும், மிகவும் முக்கியமான ஒன்றாக ‘வெறுப்பு’ என்பதே முதலிடத்தில் இருக்கிறது என்று கருதுகிறேன்.
முதன் முதலில் ஆர்வத்துடன் பணியாற்றிய இலக்கிய அமைப்பில் நவீன இலக்கியம் என்று வெளியே பேசிவிட்டு உள்ளே ஏன் வெகுஜன ரசனைக்கு உழைக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பிய போது என் மீது தூற்றப்பட்டது முதல் வெறுப்பு, நவீன இலக்கியத்தின் மீதான ஆர்வத்தில் கனலியைத் தொடங்கியபோது நட்சத்திர விடுதி ஒன்றின் உணவகத்தில் அமர்ந்து உணவருந்திக்கொண்டு, குளிர்பானத்தையும் மெதுவாகக் குடித்துக்கொண்டே எதிரில் பசியோடு அமர்ந்திருக்கும் என் மீது ஒருவர் எறிந்த கசப்பின் வெறுப்பு, (இதற்கு அர்த்தம் எனக்கு வறுமை என்பதல்ல)
தனது தனிப்பட்ட பணத்தேவைகளுக்காகக் கூடவே இருந்து இயங்கிய நண்பர் ஒருவர் உங்களுடன் இனி வேலை செய்ய முடியாது நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள் என்று கனலியின் வேலைகளை நிறுத்திவிட்டு கனலியின் சில பொருட்களையும் எடுத்துக்கொண்டு காணாமல்போய் தனது செயல் வழியாக அளித்த துரோகம் என்னும் வெறுப்பு.
கனலிக்காக நான் அதிகம் மதிக்கும் மனிதர் ஒருவரின் வீடு தேடிப்போய் நின்றபோது உள்ளே இருந்துகொண்டே நான் இல்லை என்று சொல்லிடு என்று சொல்லியனுப்பிய வார்த்தைகளின் வழியாக எனக்கு அளிக்கப்பட்ட வெறுப்பு. சமீபத்தில் கூட முக்கியமான நண்பர் ஒருவரிடம் கனலிக்கு நீங்கள் நிச்சயம் எழுத வேண்டும் என்று நேரிலும் அலைபேசி வழியாகக் கோரிக்கை வைத்தபோது என்ன விக்னேஷ் கனலிக்குத் தராமல் எங்க எழுதிடப்போறேன் என்று சொல்லிவிட்டு அடுத்த வாரத்திலேயே இன்னொரு இதழில் தனது சிறுகதையை வெளியிட்டு இப்படிக்கூட வெறுப்பை அன்பளிப்பாகத் தரலாம் பெற்றுக்கொள் என்று தரப்பட்ட வெறுப்பு. இப்படி பல்வேறு குழந்தைத்தனமான சில வெறுப்புகள் தொடர்ந்து எனக்கும் கனலிக்கும் அன்பளிப்பாக வந்து சேர்ந்துள்ளது.
மூன்றாண்டுகள் இப்படி சில வெறுப்புகளைத் தொடர்ந்து பெற்றுக் கொண்டேயிருந்திருக்கிறேன். இன்று இதை எழுதிக்கொண்டிருக்கும் இக்கணத்தில் கூட என் மனதில் தனிப்பட்ட வகையில் யார் மீதும் எனக்கும் கனலிக்கும் ஒரு சதவீதம் கூட வெறுப்பில்லை. ஒருவகையில் இவர்கள் அனைவரையும் எனக்கும் கனலிக்கும் அதிகமாகவே பிடித்துள்ளது. இவர்கள் அனைவரும் தெரிந்தும் தெரியாமலும் எனக்கு அளித்திருக்கும் இந்த குழந்தைத்தனமான வெறுப்பு தான் நிச்சயமாக எனக்குப் பெரிய உந்துசக்தியாக இன்று வரை இருக்கிறது. இன்பம் ஒருபோதும் இலக்கியப் பிரதியாக மாற வாய்ப்பில்லை என்கிற போது நவீன இலக்கியத்தின் அடிப்படையில் இணையஇதழ் நடத்தும் எனக்கும் கனலிக்கும் மட்டும் இன்பம் கிடைத்திட வேண்டுமென்று நான் ஏன் எதிர்பார்க்க வேண்டும்.
மூன்றாண்டு வெறுப்பு மட்டும்தான் பெற்றீர்களா என்றால் நிச்சயம் இல்லை என்பேன். வெறுப்பின் வழியாகப் பெற்றது உந்துசக்தி எனில் அன்பின் வழியாகப் பெற்றது செயலாற்றல். பல்வேறு மனிதர்களின் அன்பின் வழியாகத்தான் நானும் கனலியும் வெவ்வேறு படிநிலைகளில் எங்களைச் சிறப்பாகத் தகவமைத்துக் கொண்டோம் என்பதும் நிதர்சனம். இன்றுவரை கைப்பிடித்துக் கூடவே வரும் அத்தனை அன்பும் கனலிக்குப் பெரும் வழிகாட்டியாகத் தான் இருக்கிறது. இந்த அத்தனை அன்பின் வழியாகப் பெற்றது அதிகமே, அதில் கனலியின் 24 (இதில் ஏழு சிறப்பிதழ்கள்) இணையஇதழ்களும் கனலி பதிப்பகத்தின் வெற்றிகரமான ஏழு புத்தகங்களும் அடங்கும். ஒருவகையில் கனலியின் இந்த மூன்றாண்டுகள் என்பது அள்ள அள்ள வரும் அதீதமான அன்பாலும் குழந்தைத்தனமான சிறிய வெறுப்புகளாலும் சேர்த்து ஒளியூட்டப்பட்ட சுடரின் வெளிச்சமே.
கிட்டத்தட்ட 900 த்துக்கும் மேற்பட்ட படைப்புகள் 200 க்கும் மேற்பட்ட படைப்பாளிகளின் பங்களிப்புகள் என்று கனலி இணையதளம் சமகாலத்தில் முக்கியமான கலை – இலக்கியச் சூழலியல் இணையதளமாக தொடர்ந்து இயக்குகிறது எனில் அதற்கு முழுமுதற் காரணம் தளத்தில் பங்களிப்பு செய்திருக்கும் ஒவ்வொரு எழுத்தாளர்கள் தான். இவர்கள் அனைவருக்கும் நானும் கனலியும் என்றும் நன்றிக்கடன் பட்டுள்ளோம்.
இன்று 25 ஆவது இணைய இதழைக் கனலி வெளியிடுகிறது. ஏற்கனவே கனலி வெளியிட்டுள்ள 24 இணைய இதழ்களையும் மீள் வாசிப்புக்குத் தரும்போதுதான் மனதில் சட்டென்று உறைக்கிறது கனலி எவ்வளவு தனிப்பட்ட நபர்களுக்கு நன்றிக் கடன்பட்டுள்ளது என்பது. எவ்வளவு படைப்புகள், கவிதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், நேர்காணல்கள், சிறார் இலக்கியம் இதுமட்டுமின்றி போன வருடங்களில் கனலியின் அங்கமாக எடுத்துக்கொண்ட சூழலியல் ஆக்கங்கள் என்று மிகப்பெரிய கலை-இலக்கியச் சூழலியல் களஞ்சியமாக ஓரளவுக்கு இன்று கனலி இணையதளம் மிளிர்கிறது எனில் அதற்குக் காரணம் கடந்த 24 இணைய இதழ்களிலும் பங்காற்றிய அனைத்து எழுத்தாளர்கள் மட்டுமே. ஒவ்வொரு இணைய இதழும், கனலியின் ஒவ்வொரு புத்தகங்களும் வெளிவந்த போது ஆதரவும் விமர்சனமும் அளித்து என்றும் எங்களை வழிநடத்தும் வாசகர்களும் இன்னொரு முக்கியமான காரணம் என்பதில் எந்தச் சூழ்நிலையிலும் மாற்றுக் கருத்துகள் எனக்கும் கனலிக்கும் கிடையாது. இதுமட்டுமின்றி கனலியுடன் தொடர்ந்து இயங்கும் பல்வேறு நண்பர்களும் முக்கியமானதொரு காரணம்.
கனலி ஆரம்பிக்கும் போது சில இலக்கியச் செயல் திட்டங்களைக் கனலிக்கென்று வடிவமைத்திருந்தேன். இந்த மூன்றாண்டுகளின் முடிவில் அவற்றில் எவ்வளவு செய்துள்ளேன் என்று நானே என்னை விமர்சனம் செய்து பார்க்கும்போது ஒருவகையில் பாதியளவுக்காவது செயலாற்றியுள்ளேன் என்று நம்புகிறேன். திட்டமிட்ட சிலவற்றைச் செய்ய இயலவில்லை என்பதும் நிச்சயமான உண்மை. இந்த நான்காவது ஆண்டு தொடக்கநாளில் இன்னும் திட்டவட்டமான சில இலக்கியச் செயல் திட்டங்களை மீண்டும் கனலிக்காக நான் தொகுத்துள்ளேன். இனிவரும் காலங்களில் அவற்றின் மீது கனலி தீவிரமாகக் கவனம் செலுத்தும்.
அவற்றில் சில புதிய விடயங்களும் அடங்கும். அதில் முக்கியமானது கனலியின் வலையொலி மற்றும் கனலி வலையொளி. இதன் வழியாக நவீன இலக்கியத்தின் தீவிரமான பக்கங்களை இன்னும் நிறைய வாசகர்களுக்குக் கொண்டுசெல்ல இயலும் என்று மீண்டும் திடமாக நம்புகிறேன். இவைதவிர கனலியின் இன்னொரு உறுப்பான கனலி பதிப்பகம் இனிவரும் காலங்களில் இன்னும் பல்வேறு முக்கியமான புத்தகங்களை வெளியிடும் அதன் வழியே பெறும் பொருளாதார பயன்களைக் கனலியின் அடிப்படையான அலகுகளில் ஒன்றான தனது இணையதளத்தை மேம்படுத்திக்கொள்ளும். மேலும் வாய்ப்புகள் கிடைத்தால் நிச்சயம் கனலியில் பங்களிப்பு செய்யும் அனைத்து எழுத்தாளர்களுக்கும் பொருளாதார ரீதியில் நன்றிக்கடன் செலுத்தவும் கனலி இத் திட்டங்களைப் பயன்படுத்திக்கொள்ளும். கனவுகள் நிறைய இருக்கிறது அதற்கு ஏற்றபடி தன்னைத் தகவமைத்துக்கொள்ள கனலியிடம் முயற்சியும் செயலும் இருக்கிறது. கனலி இணையதளத்தின் வாசிப்புக்கு என்று எந்தவிதமான கட்டணம் யாரிடமும் இதுவரை பெற்றதில்லை இனியும் பெறப் போவதில்லை என்பது திண்ணம். இருந்தாலும் பொருளாதாரம் என்பது எந்தவொரு செயலுக்கு அடிப்படையான அலகு, அதனால் கனலியும் தனக்கு பங்களிப்பு செய்யும் எழுத்தாளர் அனைவருக்கும் திரும்ப உதவிட வேண்டும் என்று கனலி நினைக்கிறது அதற்குத்தான் இந்தப் புதிய இணைய வடிவமைப்பில்
‘கனலிக்கு உதவிட’ என்கிற பகுதியை இணைத்துள்ளோம். வாய்ப்புள்ள நண்பர்கள் அப்பகுதியை வாசித்துவிட்டு கனலிக்கு உதவலாம். உங்கள் எந்தவொரு உதவியும் கனலிக்கு நீங்கள் அளிக்கும் சந்தாவாக மட்டும் எடுத்துக்கொள்கிறோம் என்று தெரிவித்துக்கொள்கிறேன்.
நவீனத் தமிழிலக்கியத்தின் வரலாற்று பக்கங்களில் கனலி எந்தவகையிலாவது நவீன இலக்கியத்தின் வளர்ச்சிக்கும் தொடர் பயணத்திற்கும் உதவும் சிறிய கருவியாக இருந்தால் போதும் அதையே பெரும் வரமாகக் கருதுகிறோம். இந்த இணைய இதழ் முதல் கனலி இணையதளத்தின் வடிவமைப்பில் பல்வேறு புதிய மாற்றங்களைச் செய்துள்ளோம். அதன் வழியாக இணையதளத்தை வாசிக்கும் அனைவருக்கும் மிகச்சிறந்த வாசிப்பனுபவம் தர வேண்டும் என்கிற ஆவல் எங்களுக்கு உண்டு. அதேநேரத்தில் இவையனைத்தும் எங்கள் பார்வைக்குச் சரி என்று படுவதால் மட்டும் சரியல்ல.
கனலி எப்போதும் எந்தவிதமான ஆக்கப்பூர்வமான விமர்சனங்களைத் தலைவணங்கி ஏற்கும். அதனால் தங்களது ஆக்கப்பூர்வமான விமர்சனங்களையும், கருத்துகளையும் என்றும் எதிர்நோக்கிக் கனலி காத்திருக்கும்.
கண்ணீரின் உவர்ப்பை ருசித்தல் என்பது ஒரு அற்புதமான அழகியல் நிகழ்வு நீண்ட அல்லது குறுகிய வாழ்வின் ஏதேனும் கணங்களில் மட்டும் அந்த அற்புதமான அனுபவம் உங்களுக்கு வாய்க்கும். அப்படி வாய்க்கும் அக்கணங்களின் நினைவுகள் மறக்க இயலாத அளவுக்கு உங்கள் வாழ்நாள் முழுவதும் உடன் வரும். அப்படியே என் வாழ்வில் கனலியுடன் மட்டுமின்றி நவீன தமிழிலக்கியத்தில் ஓரமாகச் செயலாற்றும் இந்த அனைத்து நாள்களையும் கண்ணீரின் உவர்ப்பை ருசித்த நாள்களாகவே நான் கருதிக் கொள்வேன். ஒருவகையில் அத்தனை அன்பையும் வெறுப்பையும் சமமான ஒன்றாகவே ரசித்து ஏற்றுக்கொண்டு தொடர்ந்து இயங்குவேன் கனலி வழியாக மட்டும்.
அனைத்து எழுத்தாளர்களுக்கும், வாசகர்களுக்கும், நண்பர்களுக்கும் என் சார்பிலும் கனலி சார்பிலும் நன்றியும் அன்பும் உரித்தாகட்டும்.
நன்றி
அன்புடன்,
க.விக்னேஸ்வரன்.