1)
வில்லிசைக்காரி இறந்து
முப்பது கடந்தும்
‘உன்னை ஒரு நாள் பார்க்க வருவேன்’ என்ற அவளது குரலே
கனவை நிறைக்கிறது.
திண்ணையின் முக்கோணக் குழியைச் சுத்தப்படுத்தி கிளியாஞ்சட்டியில்
நீரும் பருக்கையும் வைத்து
தினமும் காத்திருப்பேன்.
மரத்தாலோ
கல்லாலோ
மண்ணாலோ
வீசுகோல்களை செய்துவிடலாம்.
அவளது கரங்களை எதைக்கொண்டு
செய்வதென்பதுதான்
பதட்டத்தைக் கூட்டுகிறது.
நரைமுடிகளின் நுனி நீர் சத்தம் கேட்கிறது.
சந்தன வாடை பரவுகிறது.
வந்துவிட்டாள்
திண்ணைக் குழிக்குள் உட்கார்ந்து வில்லுக்கட்டத் தொடங்குகிறாள்.
தலைக்கு மேலே போய் சுழன்று வரும் வீசுகோல்கள் வில்லில் பட்டு குதிக்க
பக்கவாத்தியங்கள் குதியேத்த
அவளது கதைகளைச்
சொல்லி பாடுகிறாள்.
அதிகாலையில் மறைந்தாள்.
கதைகளை உறிஞ்சியபடியே திரியொன்று
கிளியாஞ்சட்டியில் எரிந்தது.
கொண்டுவந்த கரங்களை
அவளே திரும்ப எடுத்துச் சென்றாள்.
2)
– கனியே தெய்வம் –
முட்டுக் கிடாயின்
இளம்பருவத்துக் கொம்புகளை
குருத்து சிதையாமல்
கடாபற்களால் பிடுங்கியெறியும் வித்தையை
வழிவழியாய் தழைத்த
கிழவிகளின் பற்களிடமிருந்து
உள்வாங்கினேன்.
கனியில் மாதுளைகளை உதிர்த்துவிட்டு
சேகரித்த கிழ பற்களைப் பதித்து
வழிபடுகிறேன்.
3)
கீறலிட்டு மசாலா தடவி
வறுவலுக்குத் தயாராகவிருக்கும்
இரண்டு கட்லா மீன்கள்தான் அம்மாச்சியின் பித்தவெடிப்பு பாதங்கள்.
நீரற்ற செதில்களைப் போல
பாதத்தின் பத்து நகங்களும்
கணங்கள்தோறும் திறந்து மூடும்.
அவள் மரித்தபின் பாதங்களை மட்டும் வெட்டியெடுத்து பலகையில் வைத்து
பேணி வருகிறேன்.
கால்களுக்கு மேலே
உடலென்ற பொதி எடை இல்லாமலானதால்
இடப் பாதமும் வலப் பாதமும் தனித்தனியே ஆசுவாசமாக
பூங்காவினைச் சுற்றி வருகிறது.
-முத்துராசா குமார்