Monday, Aug 15, 2022
Homeபடைப்புகள்கவிதைகள்கலீலியோவின் இரவு

கலீலியோவின் இரவு

சுல்தான் ஸைன் உல் அபீதின் அழிவை முன்னறிவித்த
நட்சத்திரம் தோன்றி மறைந்து ஆண்டுகள் ஓடிவிட்டன.
வெள்ளம் கோபுரங்களை மூழ்கடித்தது, கூறப்பட்டதைப் போலவே
இளநீர் கூடுகளுடன் மணிமகுடங்கள் மிதந்து செல்ல
ஒன்றடுத்தொன்றாய் பால்பற்களென வீழ்ந்தன பேரரசுகள்.
முன்னை கிழக்கில் இருந்து கிளம்பிய மூன்று ஞானியருக்கும்
அவர்தம் ஒட்டகங்களுக்கும் வழிகாட்டியது இதே வால்நட்சத்திரம் தான்.
‘தெரியாதா உமக்கு, யூதர்களின் ராஜா பிறந்திருக்கிறார்’
இது மீண்டும் வரும் அப்போது நாம் இருக்கலாம் ஒருவேளை
ஒட்டகங்கள் இல்லாதிருக்கலாம் அல்லது எவரும் அற்று போகலாம்.
அது ஒரு பொருட்டில்லை ஏனெனில்

யாவும் முன்னரே நிகழ்ந்தவை போல உள்ளது.
இந்த மதியம், இந்த பாடல், என்னைக் கடந்து செல்லும் இவ்வாகனம்..
யாவும்.. சிதிலமடைந்த கும்மட்டத்தில் அமர்ந்திருக்கும் தோகைமயிலை
முன்பே நான் பார்த்ததுண்டு, எங்கென்று தெரியவில்லை.
காலம் அலைகளை மேய்க்கிறது, நான் வேறொரு ஊருக்குச் செல்கிறேன்.
கர்ப்பூர மரங்கள் முன்ஜென்ம ஞாபகத்தில் அலைக்கழிகிற அங்கேயும்
எப்படியோ வந்து விடுகின்றன கெட்ட கனவுகள்.
மூலிகை தேடும் காட்டுவைத்தியரின் காதுக்குள்
கரிய பூதங்கள் உளறுவது என் வீட்டில் கேட்கிறது.
தூரத்து மலைகளில் எரி பரவும் இந்த ராத்திரி,  இதுவும் எனக்கு பரிச்சயமே.

அங்கு சூனியக்காரி ஒருத்தி உயிரோடு கொளுத்தப்படுகிறாள்.
ரசவாதியின் குடற்பாதையில் இறங்குகிறது துத்தத்தைலம். கசையடி
ஒவ்வொன்றுக்கும் ஒரு எட்டு முன்னெடுத்து வைக்கிறது ஆன்மா.
‘கடவுள் வென்றுவிட்டார், அவரது ராஜியம் வருகிறது’
’ஆம் வென்றுவிட்டார், வாழ்க அவர் திருநாமம், வெல்க அவர் திருவுளம்’
கூச்சல் கோஷங்கள் நடுவே இளங்கவிஞன் எழுதுகிறான் தலைகுனிந்து
விரலால் மணலில்: ஒரு தாகம் உள்ளது உதிரம் மாத்திரமே தீர்க்க இயன்றதாய் ஒரு தாகம்.
மன்னிக்கவும்,அவன் இனி கேட்க மாட்டான்
’இன்று மழை வருமா?’ ‘காந்தி இருந்திருந்தால் என்ன செய்திருப்பார்?’
போன்ற கேள்விகளை. அவர் இல்லை, அவ்வளவு தான்.  இப்போதிங்கு
நம்பிக்கையூட்டும் ஏதும் தென்படவில்லை, வெறும் மேகமூட்டம், திடீரென
மௌனமாகிய பறவைகள், ஏவல் காய்ச்சலின் வெம்மை, மாலை நிழல்கள்.

கரவாஜியோவின் கித்தானில் எப்போதும் இரவு, கூதல்பருவத்து காருவா.
காலை முதல்மணி ஒலிக்கும் வரை கொட்டும் பனியில்
முற்றழிந்த விலங்கொன்றின் முழுஉருவ மாதிரியென நிற்கும் கதீட்ரல்.
நானும் நீயும் அப்படி நிற்கமுடியாது.
வரலாற்றின் கூரை ஒழுகும்போது நாம் வேறிடத்திற்குச் சென்றாக வேண்டும்.
களைப்புற்ற வீரர்கள் வெற்றியா தோல்வியா என அறியாது
வனப்பாதைகளில் வாய்மூடி ஊர் திரும்புவதைப் போல.
குப்பை சேகரிப்போர் கதவு தட்டி பிரேதங்களைப் பெற்றுச்செல்கின்றனர்.
யாருமில்லாத ஊரை யாத்ரீகர்கள் சிலுவைக்குறியிட்டபடியே கடக்கின்றனர்.
பட்சி முகமூடியுடன் வட்டத்தொப்பி அணிந்து வீடு வீடாக பரிசோதிக்கிறது
மருத்துவர் வேடத்தில் மரணம். இன்னரும் மண்ணில் இன்னொரு நாளிதில்
மீண்டும் அவர்கள் கர்ஜிக்கின்றனர், ரத்தக்கறையோடு விருந்தமர்கின்றனர்
‘கடவுள் வென்றுவிட்டார், அவரது ராஜியம் வருகிறது’
’வாழ்க அவர் திருநாமம், வெல்க அவர் திருவுளம்’

நீயோ மதவிரோதி, வேதவாக்கியத்தை மறுப்பவன்.
உனது கருத்துகள் நரகத்தின் நெருப்பை பூமிக்கு கொண்டுவரும்.
உனது மகள் பிரார்த்திக்கிறாள் ஒவ்வொரு நாளும்
உன் விடுதலைக்காகவா மீட்புக்காகவா எனத்தெரியாது
ஆனாலும் பிரார்த்திக்கிறாள்.
ஊசல்,துலாக்கோல்,திசைமானி, சூரியக்கடிகை..
சோதனைக்கருவிகளில் குளிர் வளர்கிறது
உன் தோட்டத்தில் பூக்கோஸ்களும் ஒலிவங்களும் வளர்வதைப் போல.
பசி,அது நல்லது. வெளியே
காற்று மாசுபடுகிறது
நீர் மாசுபடுகிறது
மொழி மாசுபடுகிறது
ஒலி மாசுபடுகிறது
நினைவும் சிந்தையும் மாசுபடுகிறது
மத்தியகால இரும்பின் ஓசை:நாளை தயாராகிக்கொண்டிருக்கிறது.
இந்த டிசம்பர் மாத குளிரிரவில்
கர்தினால் பெல்லார்மின் உறங்குகிறார்
ஆயர் பார்பிரினி உறங்குகிறார், இழுத்துப் போர்த்தி
டஸ்கனியின் டியூக் ஃபெர்டினாண்ட் உறங்குகிறார்
கோமாட்டி விட்டோரியா உறங்குகிறார்
இளவரசர் அல்ஃபோன்ஸோ உறங்குகிறார்
வேலைப்பளு மிக்கதொரு நாளுக்குப் பிறகு நீதியரசர்களும் நன்கு உறங்குகின்றனர்.
ஒளியாண்டுகளுக்கு அப்பாலிருந்து சில வில்லைகள் வழியே வந்துசேருகிறது
ஒருவழியாக அமைதி.
விழித்திரு வேறு வழியில்லை
ஒற்றை மெழுகுதிரியின் சோதியில் தனித்திரு
நீ நம்பிக்கொண்டிருக்கும்
உன்னை நம்பிக்கொண்டிருக்கும் ஓர்
அரிய உண்மையுடன்.


-சபரிநாதன்

பகிர்:
Latest comments

leave a comment

error: Content is protected !!