முத்தம்

ச்


முருகேசு அவனது வழக்கமான இடத்திற்கு வந்து காத்திருந்தான். நடுவில் ஊஞ்சமரம் ஒன்றைக் கொண்ட சிறுபுதர் அது. சங்கமுள் செடி ஒன்று அடர்ந்த இலைகளோடு வளர்ந்து மரத்தின் கழுத்துவரை மூடியிருந்தது. அதன்மேல் கோவைக்கொடிகள் ஏறியிருந்தன. அடிப்பகுதி முழுக்கப் புற்கள். அதற்குள் பொந்து போல வழி உருவாக்கி வைத்திருந்தான். வழியைக் கோவைக் கொடிகளைத் தொங்கவிட்டு அடைத்துவிடுவான். வெளியில் இருந்து பார்ப்பவருக்கு வழியும் தெரியாது; உள்ளே ஆள் இருப்பதும் தெரியாது. உள்பகுதி குகை போல அடக்கமானது. சப்பட்டைக் கல் ஒன்றை உள்ளே போட்டிருந்தான். அதன்மேல் வசதியாக உட்கார்ந்து அடிமரத்தில் சாய்ந்து கொள்ளலாம். ஒவ்வொரு முறையும் உள்ளே நுழைந்ததும் கல்லைப் புரட்டிப் பார்த்துவிடுவான். கல்லுக்கு அடியே ஏதேனும் சீவன் ஒளிந்திருக்குமோ என்னும் பயம். அடிக்கடி வருவதால் அது ஓர் இருப்பிடம் போலாகிவிட்டது. இன்னும் கொஞ்சநாள் போனால் படுத்துத் தூங்கும் அளவுக்கு வசதியாக உருவாகும் என நினைத்தான்.

உள்ளே போய்விட்டால் இரண்டு மூன்று மணி நேரம்கூட அசைவில்லாமல் உள்ளேயே இருப்பான். அவன் எதிர்பார்க்கிற மாதிரி பேச்சுக்குரல் கேட்டால் சங்கமுள் கோல்களை லேசாக விலக்கிப் பார்த்து ஆட்களை உறுதிப்படுத்திக் கொள்ளவும் வசதி செய்திருந்தான். அவன் பார்வை விழும் இடம் இன்னொரு புதர். அது ஒரு வேப்ப மரத்தடி. கூடாரம் போல விரிந்திருக்கும் நிழல். அதனடியில் இருந்து வெளியே பார்த்தால் ஆகாயம் மட்டுமே தெரியும். மலைப்படிகளில் ஏறிச் செல்வோர் பேச்சுக் குரல் மட்டும் மொனமொனவென்று கேட்கும். பொருள் பிரித்துணர முடியாது. தனியிடம் தேடும் காதலர்களுக்கு அவ்விடம் எப்படியோ கண்ணுக்குப் பட்டுவிடும். அதற்கு வரும் ஒத்தையடித் தடத்தைப் பிடித்தபடி வந்துவிடுவார்கள். அவ்விடம் பணத்திற்குப் பெண்களை அழைத்துவரும் ஆட்களுக்கும் தெரியும். அப்படி யாரேனும் வந்து தொலைத்துவிட்டால் அவன் காத்திருந்து பிரயோசனமில்லை.   

பதினொரு மணிவாக்கில் புதருக்குள் நுழைந்தான். பன்னிரண்டு மணியை நெருங்குகிறது. இன்னும் பேச்சுக்குரல் எதுவும் கேட்கவில்லை. இன்றைக்கு ஒன்றும் இல்லாமல் போக வேண்டுமோ என்று நினைக்கவே சோர்வாக இருந்தது. கல்யாணம் வரைக்கும்தான் இது, அதற்குப் பின் இந்த வேலையை நினைத்துக்கூடப் பார்க்கக் கூடாது என்று முடிவெடுத்திருந்தான். அதை அவ்வப்போது தனக்கே சொல்லிக்கொள்வான். பாம்பு வருமோ பல்லி வருமோ என்று இப்படிப் புதருக்குள் கிடப்பது அவனுக்குப் பிடிக்கவில்லை. ஆனால் இதைவிட எளிமையான வழியும் இல்லை என்று தோன்றியது. காதுகள் விடைத்திருந்தன. வெகுதூரத்தில் குரல்கள் கேட்கிற மாதிரி தெரிந்தது. அவை காதல் குரல்களா, எத்தனை வயசிருக்கும் என்பதை அனுமானிக்க முனைந்தான். 

அவனுடைய இலக்கு இளங்காதலர்கள். அதுவும் பதினேழிலிருந்து இருபத்திரண்டு வயதுக்குள் இருக்கும் காதலர்கள். அவர்களுக்குத்தான் சூழல் பற்றிய அனுமானம் இருக்காது. படுவேகமாக இருப்பார்கள். தப்பு செய்கிறோம் என்னும் குற்றவுணர்வு கூடுதலாக இருக்கும். சட்டெனப் பயந்துவிடுவார்கள். ஒருவர் மேல் ஒருவர் அத்தனை ஈர்ப்பு இருக்கும். உயிரைக் கேட்டாலும் கொடுத்துவிடத் தயாராக இருப்பார்கள். அதேசமயம் இருவரையும் சேர்த்துப் படம் எடுத்து இணையத்தில் போட்டுவிடுவேன் என்றாலே ‘வேண்டாம் வேண்டாம்’ என்று கெஞ்சுவார்கள். இருவரும் வேறுவேறு சாதியாக இருந்தால் கெஞ்சல் மிகும். 

முருகேசுவின் கருவி இரண்டுதான். கண்களை மட்டும் விட்டு முகத்தை மறைத்துத் தலையைச் சுற்றிக் கட்டும்  துண்டும் சற்றே நீளமான பளபளக்கும் கத்தியும். கத்தி பயமுறுத்தலுக்கு மட்டும்தான். சண்டை உருவாகும் அளவுக்கு வளர்த்துக்கொள்வதில்லை. அவனுடைய இலக்கும் மிகவும் எளிது. பர்ஸை வாங்கிப் பணத்தை எடுத்துக்கொள்வான். பையன் கழுத்தில் தங்கச் சங்கிலி இருந்தால் அதை வாங்குவான். பெண்ணின் கழுத்தில் காதில் இருக்கும் நகைகளைக் கேட்பான். பெரும்பாலும் கழுத்தில் இருப்பது தங்கமாகத்தான் இருக்கும். அரைப்பவுன் செயின். கால் பவுன் தோடு. அவ்வளவுதான். அதற்கு மேல் அணிபவர்கள் இந்த மாதிரி இடத்திற்கு வருவதில்லை. அல்லது இந்த மாதிரி இடம் தேடி வருபவர்கள் அதற்கு மேல் அணிந்து வருவதில்லை. 

செல்பேசியைத் தொட மாட்டான். அதனால் ஏதேதோ பிரச்சினைகள் வருமென்று தெரிந்திருந்தான். வேலை முடிந்ததும் அவர்களை விரட்டிவிட்டு மலையின் இன்னொரு பகுதிக்குப் போய் அடர்ந்திருந்த புரச மரநிழல் ஒன்றில் ஓய்வெடுப்பான். பிறகு காட்டுத்தடத்தில் மெல்ல நடந்து அடுத்த கிராமத்தை நோக்கிச் செல்லும் சாலைக்குப் போவான். அவ்வழியில் அனாதியான பேருந்து நிறுத்தம் ஒன்று இருந்தது. அங்கே நகரப் பேருந்து வரும் நேரம் அவனுக்குத் தெரியும். அதில் ஏறிக் கிளம்பிப் போய்விடுவான். மாதத்திற்கு ஒருமுறை, இருமுறை வாரநாள் ஒன்றைத் தேர்ந்தெடுத்து இப்படி வந்து போனால் கையில் கணிசமாகப் பணம் புரளும். 

அவன் ஊருக்கு அருகில் இருக்கும் சிறுநகர ஜவுளிக்கடை ஒன்றில் விற்பனையாளராக அவன் வேலை செய்தான். நாள் முழுக்க நின்றுகொண்டே இருக்கும் வேலை. பண்டிகை, முகூர்த்த நாட்களில் கூட்டம் மிகும். மற்ற காலங்களில் கூட்டம் இருக்காது என்றாலும் உட்கார அனுமதியில்லை. அனுமதி என்ன, உட்கார எதுவுமே இருக்காது. புதியவை வரும்போது அவற்றைப் பிரிப்பது, ஸ்டிக்கர் ஒட்டுவது என வேலைகள் இருக்கும்போது உட்கார்ந்து செய்யலாம். மற்றபடி துணிகளை எடுத்துக் காட்டுவதும் வாடிக்கையாளர்கள் திருப்திப்படும் வகையில் பேசுவதும் தினசரி அலுவல்.  ஒன்றும் மீதமாகாத மாதச் சம்பளம். வீட்டுச் செலவுகளுக்கே இழுபறிதான். இந்த நிலையில் அவனுக்குப் பெண் பார்த்துக் கொண்டிருந்தார்கள். இருபத்தேழு வயது தொடங்கி இருக்கிறது. இது முடிவதற்குள் கல்யாணம் செய்துவிட வேண்டும் என்பதில் அவன் அம்மாவும் அப்பாவும் தீவிரமாக இருக்கிறார்கள்.

அவன் எதிர்பார்த்த மாதிரி ஒரு ஜோடி படிகளில் ஏறிப் போவது தெரிந்தது. முகம் தெளிவாகவில்லை என்றாலும் இளஞ்ஜோடிதான் என்பதில் சந்தேகமில்லை. கோயிலுக்குப் போய்விட்டு வருவார்கள். அந்த மரத்தடியைக் காட்டி அவர்கள் பேசுவது தெரிந்தது. கட்டாயம் இந்த இடத்திற்கே வருவார்கள். அடிக்கடி வந்து இடத்தை அடையாளம் வைத்திருக்கக்கூடும். அவன் சுற்றுமுற்றும் பார்த்துக்கொண்டான். இவர்களுக்கு முன் யாரும் மலையேறவில்லை. ஏற்கனவே ஏறியிருந்தவர்கள் இறங்கியதைப் பார்த்திருந்தான். இந்த இடத்திற்கு அவர்கள் வந்து சேரும்வரை வேறு யாரும் மலைக்கு வராமல் இருந்தால் நல்லது. பழகிவிட்ட ஒன்றுதான் என்றாலும் மனதுக்குள் ஏற்படும் பரபரப்பையும் பதற்றத்தையும் தவிர்க்க  முடிவதில்லை.   

இப்படி ஒரு தொழிலில் ஈடுபடுவது கடந்த ஏழெட்டு மாதமாகத்தான். அப்போது வார நாள் ஒன்றில் நண்பர்கள் சிலரோடு இந்த மலைக்கு வந்தான். மலைக்கு இரண்டு வழிகள் இருந்தன. ஒன்று படியேறுதல். இன்னொன்று தார்ச்சாலை. படியில் ஏறிப் போய்த் தரிசனம் செய்துவிட்டுச் சாலையில் இறங்கினார்கள். சாலைத் திருப்பம் ஒன்றில் கண்களைக் கீழிறக்கிப் பார்த்த நண்பன் ஒருவனுக்கு அந்தக் காட்சி தென்பட்டது. சேய்மைக் காட்சி என்றாலும் தெளிவாகத் தெரிந்தது. புதர் சூழ்ந்த மரத்தடியில் இறுக அணைத்த நிலையில் இளம் காதல் ஜோடி. சத்தம் செய்யாமல் கொஞ்ச நேரம் பார்த்தவர்கள் அப்பெண்ணின் உடையை அவன் கழற்ற முனைவதைப் பார்த்தபோது பொறுக்க முடியவில்லை. ‘டேய்… என்னடா பண்ற?’ என்று ஒருவன் குரலெடுத்துக் கத்த காதலர்கள் திடுக்கிட்டு எழுந்து மேலே பார்த்தார்கள். ‘கோயிலுக்கு வந்து என்னடா பண்ற?’ என்று இன்னொரு குரல் கொடுக்கவும் புதருக்குள் புகுந்து ஓடினார்கள். அதற்குள் ஒருவன் பாய்ந்து அந்த இடத்திற்குப் போய்விட்டான். ஜோடி யாரென்று பார்க்க முடியவில்லை. அவர்கள் தப்பிப் போக வேறு ஏதோ வழியிருந்தது. 

கீழே கிடந்த பர்ஸையும் அப்பெண்ணின் கைப்பையையும் எடுத்துக்கொண்டு திரும்பினான். பர்ஸில் ஆயிரத்து சொச்சம் ரூபாய் இருந்தது. பையில் நூற்றைம்பது ரூபாய். எடுத்துக்கொண்டு இரண்டையும் சாலையோரத்தில் வீசிவிட்டார்கள். ‘பாவம்டா… பஸ்ஸுக்குப் பணம் இருக்குமோ என்னமோ’ என்றான் ஒருவன். ‘இந்த மாதிரி நடந்துக்கறவங்களுக்கு வேணும்டா. நடந்து போவட்டும்’ என்றான் இன்னொருவன். ‘சின்னப் பொண்ணு மாதிரி தெரிஞ்சுதுடா’ என்றான் மற்றொருவன். ‘சின்னப்பொண்ணு சரி, அவன் கூப்பிட்ட ஒடனெ தைரியமா வந்திருக்கறா பாரு’ என்று இழிவான வார்த்தைகளை உதிர்த்தான். அந்தப் பணம் அன்றைக்கு டாஸ்மாக் பாரில் ஜோராகச் செலவழிந்தது. ‘இப்படி மாசம் ஒருக்கா மலைக்குப் போனமுன்னா டாஸ்மாஸ்க் செலவுக்கு ஆயிரும்டா’ என்றான் ஒருவன் சிரித்தபடி. அவன் சாதாரணமாகச் சொன்னாலும் முருகேசுவின் மனதில் ஆழப் பதிந்துவிட்டது. 

அந்தச் சம்பவமும் நண்பனின் பேச்சும் முருகேசுவின் மனதில் சஞ்சலத்தை உருவாக்கி இப்படி ஒரு திட்டம் போடத் தூண்டியது. செயலில் இறங்கும் முன் அவன் பல நாள் இதற்காக உழைத்தான். மலைக்கு அடிக்கடி வந்தான். முதன்மைச் சாலையில் இறங்கிக் கிட்டத்தட்ட ஒரு கல் தொலைவு நடந்து வந்தால் ஏகாந்தமாக நிற்கும் மலை. சுற்றிலும் மேய்ச்சல் நிலங்களும் விவசாயக் காடுகளும்தான். சிறுபையன் ஒரே ஓட்டத்தில் ஏறிவிடும் உயரம். என்றாலும் எங்கும் அடர்ந்த மரங்கள். கடைகள் இருந்த பொதுவழியை விட்டுப் பின்பக்கக் காட்டுவழியை முருகேசு கண்டுபிடித்தான். பேருந்து வசதியைப் பார்த்தான். எந்தெந்த நாட்களில் கூட்டம் இருக்கும், எப்போது கூட்டம் இருக்காது என்பவற்றைத் துல்லியமாகத் தெரிந்துகொண்டான். காதலர்கள் மலைப்பகுதியில் கண்டுபிடித்து வைத்திருந்த மறைவிடங்களை எல்லாம் அறிந்தான். 

இதில் யாரையும் அவன் கூட்டுச் சேர்த்துக் கொள்ளவில்லை. அவசரப்படவும் இல்லை. முதல் அனுபவம் போலவே சத்தம் போட்டு விரட்டுவதையே முதலில் செய்தான். பர்ஸோ பையோ கிடைக்கும். விடாமல் எடுத்துக்கொண்டும் ஓடிப்போவார்கள். வந்து காத்திருந்து ஒன்றுமில்லாமல்  வெறுங்கையோடு ஏமாந்து போவது முடியாது என்று அடுத்த கட்டத்திற்கு இறங்கினான். கத்தியைக் காட்டுவது நன்றாகவே வேலை செய்தது. பெண்கள் அஞ்சி ஒடுங்கிப் போவார்கள். பையன்கள்தான் கதாநாயகத்தனம் காட்டுவதற்காகக் கொஞ்சம் துள்ளுவார்கள். அவன்களையும் அந்தப் பெண்கள் அடக்கி விடுவார்கள். விஷயம் வெளியாகி விட்டால் தனக்குத்தான் அவமானம் என்பதில் பெண்கள் தெளிவாக இருந்தார்கள். 

அவன் எதிர்பார்த்த மாதிரியே அந்த இளங்காதலர்கள் மறைவிடத்திற்கு வந்து சேர்ந்தார்கள். அவள் தன் கைப்பையைக் கீழே வைத்திருந்தாள். அவனிடம் ஏதும் இருக்கவில்லை. பேண்டின் பின் பாக்கெட்டில் கட்டாயம் பர்ஸ் வைத்திருப்பான். கழுத்து விஷயம் அருகில் போனால்தான் தெரியும். இருவரும் சிரித்தபடி ஒருவரை ஒருவர் தொட்டுக்கொண்டு பேசினார்கள். இனிமேல்தான் முக்கியமான கட்டம் இருக்கிறது. அவன் மெல்லத் தன் குகைக்குள் இருந்து வெளியே வந்தான். மறைவிடத்தை நோக்கி மெதுவாக நகர்ந்தான். அவன் அவளை ஏதோ கேட்டு வற்புறுத்துவதும் அவள் வெட்கப்பட்டு மறுப்பதும் தெரிந்தது. பேச்சொலி மெதுவாக இருந்ததால் கேட்கவில்லை. பொதுவாகச் சுடிதார் போட்டுக்கொண்டுதான் வருவார்கள். இந்தப் பெண் சேலை உடுத்தியிருந்தாள். அவனுக்கோ அவளுக்கோ பிறந்த நாளாக இருக்கலாம். சேலையில் பார்க்க அழகாகத் தெரிந்தாள். அவள் முகத்தைத் தொட்டு அவன் திருப்பியபோது வெட்கம் படர்ந்த முகம் சூரிய ஒளியில் அற்புதமாக இருந்தது. ஒருகணம் அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தான். 

முருகேசு பார்த்துக் கொண்டிருக்கும்போதே சட்டென அவன் தலையை அவள் தன் இருகைகளாலும் பற்றி இழுத்து ஆழ முத்தம் பதித்தாள். உதடுகள் ஒட்டிக் கொண்டன போலிருந்தது. அவன் விடவில்லை. அப்படியே இருந்தார்கள். கண்கள் மூடிக் கொண்டன. இனி அப்படியே அடுத்த கட்டத்திற்கு நகரக் கூடும். அதுவரை அவனுக்குப் பொறுமை இல்லை. இதுவே போதுமானது என்று தோன்ற முகத்திற்குத் துண்டைக் கட்டிக்கொண்டு நிதானமாக அவர்கள் முன் போய் நின்றான். அவன் பூனை நடை அவர்களுக்குக் கேட்கவில்லை. இன்னொரு ஆள் தங்கள் முன் வந்து நிற்பது தெரியாத மயக்கத்தில் இருந்தார்கள். உதடுகள் பிரிபடவேயில்லை. 

அவனுக்கு ஒருமாதிரி இருந்தது. சட்டென ‘டேய், என்னடா பண்றீங்க’ என்றான் கடுமையாக. அதட்டலுடன் புதுக்குரல் கேட்டதும் அப்பெண் விருக்கென்று விலகி எழுந்து நின்றாள். அவனும் எழுந்துகொண்டான். பையனுக்கு இருபது இருபத்தொரு வயதுதான் இருக்கும். பெண்ணுக்கும் கிட்டத்தட்ட அதே வயதிருக்கலாம். அவன் கழுத்தில் ஏதுமில்லை. அவள் கழுத்தில் வெண்ணிறச் சங்கிலி மினுங்கியது. அது பிரயோசனமில்லை. காதுகளில் தோடுகள் இருந்தன.  ‘யாருடா நீ?’ என்று அந்தப் பையன் கோபத்தோடு கேட்டான். ஒடுங்கிய வயிறு; ஒல்லி உடம்பு. ஆக்ரோசம் மிகுந்திருந்தது. இந்தச் சந்தர்ப்பத்தில் ஏற்படும் எந்தத் தடையும் இப்படியொரு ஆக்ரோசத்தையே தரும். 

வேகமாக அவள் பக்கம் பாய்ந்தவன் விரித்துப் பின்னியிருந்த தளர்சடையைத் தவிர்த்து பின்மண்டை முடியைக் கொத்தாகப் பற்றிக் கத்தியை அவள் கழுத்தில் வைத்தான். ‘எங்க அந்த ஒதட்டக் காட்டு. தேன் தடவியிருக்குதா? அந்த உறிஞ்சு உறிஞ்சறான்’ என்று அவள் முகத்தைத் திருப்பி உதடுகளைப் பார்த்தான். எச்சில் நனைத்த சிவப்பு உதடுகள் பயத்தில் துடித்தன. முருகேசுவுக்கு ஒருமாதிரி இருந்தது. ‘டேய் உடுடா… டேய் உடுடா’ என்று கத்திக்கொண்டே அவன் முருகேசுவின் பக்கம் வந்தான். வர வேண்டாம் எனக் கை நீட்டித் தடுத்தாள் அவள். அப்படியே நின்று ‘அவள உட்ருடா. உனக்கு என்னடா வேணும்?’ என்றான் அவன். ‘பர்ஸ எடு’ என்றான் முருகேசு. ‘பர்ஸ் இல்ல’ என்றான். ‘பணம் எவ்வளவு வெச்சிருக்கற?’ என்று கேட்டான் முருகேசு. சட்டைப் பாக்கெட், பேண்ட் பாக்கெட் எனத் தேடி பத்தும் இருபதுமாக எடுத்துப் போட்டான். இருநூறு ரூபாய் தேறும். ‘ச்சீ… நீயெல்லாம் ஒரு ஆளு. ஒரு பொண்ணக் கூட்டிக்கிட்டு வர்ற, வெறும் எரநூறுதான் வெச்சிருக்கறயா? வெக்கமாயில்ல?’ என்று அவன் மேல் காறித் துப்பினான். அவன் மெல்லத் தலைகுனிந்து கொண்டான். 

அவள் காதைப் பார்த்தான். தோடுகளும் கவரிங்தான் என்பது அப்பட்டமாகத் தெரிந்தது. இன்றைய முயற்சி வீண். சோர்வுடன் அவளைப் பார்த்தவனுக்குப் புதுயோசனை வந்தது. தன் வழக்கத்தை மீறுவது என்று முடிவு செய்தான். சரி, இது தன் தொழிலில் அடுத்த கட்டப் பாய்ச்சலாக இருக்கட்டும் என்று மனம் தூண்டியது. அவனுடைய சட்டையைக் கழற்றச் சொன்னான். தயக்கத்தோடு கழற்றினான். சட்டையும் பேண்ட்டும் புதியவை என்றாலும் விலை மலிவானவை. அவன் உள்ளே பனியன் எதுவும் போடவில்லை. தயாராக வந்திருக்கிறான் என்று தோன்றியது. உடலில் பனியன் படிந்த தடமே இல்லை. போடும் பழக்கமே இல்லை போல. மீண்டும் அவன் மேல் காறித் துப்பினான். அவன் உடல் கூச்சத்தால் ஒடுங்கியது.  ‘எங்கடா வேல செய்யற?’ என்றான். அந்த மாவட்டத்தின் தலைநகரில் பெரிய ஜவுளிக்கடை ஒன்றின் பெயரைச் சொன்னான் அவன். தன் இனம் என்று முருகேசுவுக்குத் தோன்றவும் அவன்மேல் இரக்கம் வந்தது. ‘உங்க கடையில பனியன் விக்கறதில்லையா?’ என்றவன் ‘ஜட்டியாச்சும் போட்டிருக்கறயா? தயாரா வந்திருக்கற… ம்…’ என்று கேலி செய்தான். இவ்வளவு பேசுவது அவன் வழக்கமில்லை. இந்தத் தொழிலில் பேச்சை முடிந்தவரைக்கும் குறைத்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் அவன் எண்ணம். அந்த எச்சரிக்கை மனதில் வந்தது. 

அவனை மரத்தருகே போய் நிற்கச் சொல்லிக் கைகளைப் பின்னால் கொண்டு வந்து அவன் சட்டையாலேயே  அவளைக் கட்டச் சொன்னான். அவள் தலைமயிரும் கத்தியும் நிலை மாறவில்லை. தடுமாறியபடி கட்டினாள். இறுகக் கட்டியிருக்கிறாளா என்று இழுத்துப் பார்த்தான். அடுத்து அவள் சேலையை அவிழ்க்கும்படி சொன்னான். அவன் நோக்கம் புரிந்ததும் ‘அண்ணா வேண்டாண்ணா… என்னய உட்ருண்ணா’ என்றாள். கண்ணீர் கொட்டிற்று. ‘அவுத்து அவன் கால நல்லாக் கட்டுடி’ என்றான். ‘டேய்… அவள உட்ருடா… என்னய என்ன வேண்ணாலும் பண்ணு. அவள ஒன்னும் பண்ணீராத’ என்று அவன் குரல் இப்போது கொஞ்சம் இறங்கிக் கெஞ்சலுக்கு வந்திருந்தது. ‘உன்னய என்னடா பண்ணறது?’ என்று நினைத்துக்கொண்டு கத்தியைச் சற்றே அழுத்தவும் அவள் வேறு வழியில்லாமல் முந்தானையை எடுத்தாள். அவள் கழற்ற வசதியாகப் பிடியைச் சற்றே தளர்த்தினான். 

தோள் மேலிருந்த முந்தானையில் குத்தியிருந்த ஊக்குகளை வேர்த்து வழியும் விரல்களால் கழற்றிவிட்டு அவள் சேலையை மெல்ல அவிழ்க்கும்போது அவளையே பார்த்தான். ஈர்க்கும் உடம்புதான். தான் உணரப் போகும் முதல் உடம்பு இது என்னும் எண்ணம் தோன்றியது. நல்ல அழகி என்றும் நினைத்தான். அவளை இறுக அணைத்துக்கொள்ள வேண்டும் போல உடல் தவித்தது. தன் புதருக்குக் கூட்டிக்கொண்டு போய்விடலாம் என்று நினைத்தான். வருவாளா, உயிரே போனாலும் வர மாட்டேன் என்று வசனம் பேசுவாளா? கத்தியை அவன் கழுத்துக்கு மாற்றினால் மசிந்துவிடுவாள். சில நொடிகளில் அவனுக்குள் திட்டங்கள் அடுத்தடுத்து உருவாயின. சேலையைக் கீழே முழுக்க அவிழ்க்காமல் குனிந்து அவன் கால்களில் சுற்றப் போனவள் ஏறெடுத்து முருகேசுவின் முகத்தைப் பார்த்தாள்.  

’அண்ணா உட்ருண்ணா. இன்னைக்கு இவனுக்குப் பொறந்த நாளுண்ணா. எதுனா நல்ல பரிசாக் குடுக்கலாம்னு பாத்தா எங்கிட்ட எதுவும் இல்ல. வாங்கப் பணமில்லைண்ணா. அதான் ஆசையா ரொம்ப நாளாக் கேக்கறானேன்னு ஒரே ஒரு முத்தம் மட்டும் குடுத்தண்ணா… மத்தபடி நான் அந்த மாதிரி பொண்ணில்லண்ணா….’ என்றாள். அவள் அழுகை கூடிற்று. ‘இதுதான் மொத முத்தம்ணா… அவன் ஒதடு இன்னம் ஒட்டிக்கிட்டு இருக்கற மாதிரியே இருக்குதுண்ணா…’ என்று சொல்லிக் குனிந்துகொண்டாள். அவள் விசும்பல் ஒலி மட்டும் கேட்டது. 

ஒருநொடி நிதானித்து அவள் மயிரை விட்டுத் தள்ளிய முருகேசு ‘போய்த் தொலைங்க’ என்று சொல்லிவிட்டுச் சட்டெனத் தன் வழியில் ஓடிப் புதருக்குள் மறைந்து போனான்.


-பெருமாள்முருகன்

2 COMMENTS

  1. மனதின் போக்கை பணம், காமம் எவ்வாறு தீர்மானிக்கிறது? என்பதை கூறும் கதை. சிறப்பாக சொல்லப்பட்டுள்ளது. இக்கதையில் கூறப்பட்டுள்ள நிகழ்வுகளை நிஜத்தில் கேள்விப்பட்டிருக்கிறேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.