ஒற்றைப் பயணி வரும் ரயில் நிலையம்

பிற்பகலில் பனி விழத் தொடங்கியது. இலை உதிர்த்து குச்சிக் கிளை நீட்டிய சிறு செடிகளும், அடர்ந்து வளர்ந்து வெட்டப் படாமல் தலை சாய்த்திருந்த பசும் புல்வெளிகளும் வெண்மை அணிந்தபோது ரயில் வந்தது. சாம்பல் நிறப் பெட்டிகளும், எப்போதும் அடைத்திருக்கும் சிவப்பு ஜன்னல்களுமாகப் பனி பூசி வந்த ரயில் அது. மைனா இறங்கி ஸ்டேஷனுக்கு வெளியே போய் குறுகிய பாதையில் நடக்கும் வரை வண்டி கூவென ஒலியெழுப்பி நின்றது.

குடியிருப்புகள் குறைந்த ஒரு பழைய சிறு நகரம். நாரைகள் இளைப்பாறிப் போகும் ஒரு கடற்கரைச் சிற்றூர். இரண்டையும் இணைக்கும் ரயில் பாதையில் ஒரு ரயில் கடற்கரையிலிருந்து காலையில் நகரம் நோக்கிப் போகும். பிற்பகலில் சிற்றூர் திரும்பும். நடுவில் ஏழு ரயில் நிலையங்கள்.

சிறு நகரத்தையும், சிற்றூரையும் இங்கே யாரும் போய்ப் பார்த்ததில்லை. நகரம் போகும் ரயில், கடற்கரைச் சிற்றூர் போகும் ரயில் என்று திசை வேறுபடுத்திக் காட்ட, பெயர்களாக மட்டும் அவை பயன்பட்டன.

என்றாவது ஒரு நாள் அங்கெல்லாம் போகவேண்டும் என்று புகை விட்டுக் கொண்டு ரயில் வரும்போது ஸ்டேஷன் மாஸ்டர் நினைப்பார். அவருக்கு உதவியாளர் ஒருவர் உண்டு. சதா ஜலதோஷம் மிகுந்து தும்மிக்கொண்டு, நெற்றி முழுக்க கோடாலித் தைலத்தைப் பூசி இருக்கிறவர். அவருக்கு எந்த ஊருக்கும் போக எப்போதும் விருப்பம் இல்லை.

ரயில் போகலாம் என்று சமிக்ஞை தர, பச்சைக்கொடியை ஸ்டேஷன் மாஸ்டர் அசைக்க ஆரம்பித்தபோது, ரயில் இஞ்ஜினிலிருந்து யாரோ குதித்து இறங்கினார்கள். கருப்பு நிறத் தொப்பியும், காக்கி பேண்டும், கருப்பு கோட்டும், முழங்கை வரை சுருட்டிய காக்கிச் சட்டையுமாக இறங்கியவரை ரயில் டிரைவராக ஸ்டேஷன் மாஸ்டருக்குத் தெரியும்.

ஒவ்வொரு ஸ்டேஷன் மாஸ்டரும் இரண்டு வருடம் தான் இந்த ரயில்வே ஸ்டேஷனில் பணி புரிய அனுப்பப்படுகிறார்கள். ஆக, மூன்று ஸ்டேஷன் மாஸ்டர்கள் இந்த ஆறு வருடத்தில் இங்கே இருந்து பச்சைக் கொடி காட்டி வரும், போகும் ரயில்களின் இந்த நிரந்தரமான டிரைவரை அறிமுகம் செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனாலும் கை அசைக்க, தொப்பியைக் கழற்றி வணங்க, புன்முறுவல் செய்தபடி கடந்துபோக என்று இல்லாமல், ஒரு வார்த்தை கூட அவர்களுக்கு இடையில் பரிமாறிக் கொண்டதில்லை.

ரயில் டிரைவர் வேகமாக நடந்து ஸ்டேஷன் மாஸ்டர் நின்ற இடத்துக்கு வர, வண்டி நீளமாக ஊதிக்கொண்டு கிளம்பியது. இஞ்சினில் இன்னொரு டிரைவர் இருக்கிறார் என்பதை எப்படிக் கவனிக்காமல் போனோம் என்று ஸ்டேஷன் மாஸ்டருக்கு வியப்பாக இருந்தது.

“நலமா?” டிரைவர் ஸ்டேஷன் மாஸ்டர் அருகில் வந்தபோது கேட்டார். அவருடைய மெல்லிய உருவத்துக்குப் பொருந்தாமல் குரல் பலமாக இருந்தது.

”நலமாக இருக்கிறேன்”, வணக்கம் சொன்னார் ஸ்டேஷன் மாஸ்டர்.

“வேறே ஏதும் ரயில் இப்போது வராது தானே?”, டிரைவர் கேட்டார்.

“வராது. போக வர, உங்கள் ரெண்டு ரயில்கள் தான் இந்தத் தடத்தில்”.

”சரக்கு வண்டிகள்?”

சங்கடமான மௌனம் நிலவியது. பழைய நகரத்தில் மின்நிலையம் இயங்கிய வரை சரக்கு வண்டிகள் வந்து போனதை ஸ்டேஷன் மாஸ்டர் அறிவார். டிரைவருக்கும் தெரிந்திருக்கும். அது ஆறு வருடம் முன்.

காப்பி குடிக்கிறீர்களா என்று கேட்டார் ஸ்டேஷன் மாஸ்டர். சங்கோஜம் ஏதுமில்லாமல், குடிப்போமே என்றார் டிரைவர்.

“கூடவே மெல்லிய பிஸ்கட்டுகள். காப்பியில் நனைத்துச் சாப்பிட நன்றாக இருக்கும். இதோ, அவற்றைக் கொண்டு வந்திருக்கிறேன்”.

தோளில் மாட்டியிருந்த பையை ஸ்டேஷன் மாஸ்டரின் மேஜையில் வைத்துத் திறந்தார் இஞ்சின் டிரைவர். பெரிய தகர டப்பாவில் காற்றுப் புகாமல் அடைத்த பிஸ்கட்டுகளை அவர் கொண்டு வந்திருந்தார். அந்த தகர டப்பாவில் வரைந்திருந்த அலையடிக்கும் கடலில் பயணம் போகும் ஒரு பெரிய கப்பலின் படம் ஸ்டேஷன் மாஸ்டரை ஈர்த்தது. கையில் எடுத்துப் பார்த்தார். டப்பாவுக்குள் கடல் இரையும் ஓசை. பிஸ்கட்டுகளை உள்ளே பொதிந்து வைத்த வருடம் என்ன என்று கண்ணை இடுக்கிக் கொண்டு படித்தார், நூறு வருடம் முந்திய காலம் அது.

அவர் பார்வையைப் புரிந்து கொண்ட டிரைவர் பதில் சொன்னார்-, ”இதெல்லாம் பழைய பிஸ்கட்டுகள். ஆனால் நேற்று செய்து அனுப்பியது போல புத்தம் புதிதாக, மொறுமொறுப்பாக இருக்கும். பிஸ்கட்டுக்கு கோதுமை மாவு பிசைய எண்ணெய் சேர்க்காமல், நல்ல தண்ணீராக ஊற்றிப் பிசைந்து வேகவைப்பதால் இவை இன்னும் பல காலம் உயிரோடு இருக்கும். அணுக் கதிர்வீச்சு கூட பாதிக்காது இவற்றை”.

ஸ்டேஷன் மாஸ்டர் தன் ப்ளாஸ்க்கில் இருந்து இரண்டு டம்ளர்களில் சூடான காப்பியை ஊற்றினார். பிஸ்கட் கடித்தபடி காப்பி குடித்து முடித்தார்கள்.

முடிக்கக் காத்துக்கொண்டிருந்த மாதிரி ஸ்டேஷன் மாஸ்டர் கேட்டார் – “நான் ஏதாவது உங்களுக்குச் செய்ய வேண்டுமா??”

“நீங்களும் என்னோடு வரவேண்டும். சீக்கிரம் திரும்பி விடலாம்”, டிரைவர் பிஸ்கட் பொதியை, பை உள்ளே வைத்தபடி சொன்னார்.

“எங்கே போகணும்?” இதை ஸ்டேஷன் மாஸ்டரின் உதவியாளர் கேட்டார். அவர் அப்போதுதான் உள்ளே வந்தார். அவரிடம் பனியை அள்ளி வழி மறைக்காமல் இட உபயோகிக்கும் அகன்ற மண்வெட்டி இருந்தது. தோளில் அதைச் சார்த்தி வந்த அவர் யாரென்று ஸ்டேஷன் மாஸ்டர் அறிமுகப்படுத்தி விட்டு, “இந்தப் பிரதேசத்துக்கு என்னைப்போல ரெண்டு வருஷ ட்ரான்ஸ்பரில் வரவில்லை இவர். இங்கேயே பிறந்து வளர்ந்தவர்” என்றார்.

“அப்போது உங்களுக்கு மைனா வீடு தெரிந்திருக்குமே”? டிரைவர் கேட்டார்.

“பின்னே இல்லையா? புதுக் குடியிருப்பு என்று பெயர் வைத்தாலும் அங்கே இருக்கும் ஒரே குடும்பம் அந்தப் பெண்ணுடையது தானே”. உதவியாளர் உற்சாகமாகச் சொன்னார். தனக்குத் தெரியாது போனது குறித்து ஸ்டேஷன் மாஸ்டர் உடனடி மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்.

“இரண்டே வருஷத்தில் இடமாற்றம் கொடுத்து அனுப்பி விடுகிறார்கள். இங்கே நிலைத்து இடம் பழகி, இருப்பவர்கள் பற்றித் தெரிந்து கொள்ள ஆரம்பிக்கும்போது அடுத்த டிரான்ஸ்பர். ஸ்டேஷன் மாஸ்டர்களின் உத்தியோகமும் வாழ்க்கையும் வினோதம்தான்”:.

ஸ்டேஷன் மாஸ்டர் சுய பச்சாதாபத்தோடு சொல்ல, டிரைவர் புரிந்து கொண்டேன் என்று தலையாட்டினார்.

ஸ்டேஷன் மாஸ்டருக்கு மைனாவை ஒரு பயணி என்று மட்டும் தெரியும். ஒரு பயணி கூட இல்லை. ஒரே ஒரு பயணி. அந்த ரயில் நிலையத்தில் காலை எட்டு மணிக்கு வரும் ரயிலில் ஏறுவாள் மைனா. சாயந்திரம் நாலு மணிக்கு வந்து சேரும் ரயிலில் திரும்புவாள் அவள். ஒரு வருடத்துக்கான பயண டிக்கெட் அவளிடம் உண்டு. ரயில்வே அவளுக்கு இலவசமாகவே அளித்தது.

”மைனா வீட்டுக்குப் போய்விட்டு வந்து விடலாமா?”, இஞ்சின் டிரைவர் கேட்டார். கிட்டத்தட்ட இரண்டு வருடம் இங்கே இருந்தும் ரயில்வேயின் மதிக்கத்தக்க ஒரு பயணியை அறியாமல் இருந்ததற்காக ஸ்டேஷன் மாஸ்டர் இன்னொரு மன்னிப்பு கேட்டார். இது அவருடைய உதவியாளரிடம்.

“போய்ட்டு வாங்க” உதவியாளர் பெருந்தன்மையாக அனுமதித்ததோடு மைனா வீட்டுக்குப் போகும் வழியையும் ஸ்டேஷன் மாஸ்டரிடம் விளக்கினார். போதாது என்றுபட, ஒரு பக்கம் அச்சடித்து மறுபக்கம் வெறுமையாக இருந்த பழைய ரயில்வே காகிதத்தில் வழியை விளக்கி வரைபடமும் போட்டுக் கொடுத்தார். ரொம்ப தூரம் நடக்க வேண்டாம் என்றும் பத்து நிமிடத்தில் அங்கே போய்ச் சேரலாம் என்றும் சொன்னபடி கோடாலித் தைலத்தைப் போத்தலில் இருந்து உள்ளங்கையில் வார்த்து நெற்றியில் பரபரவென்று பூசிக் கொண்டார் அவர்.

ஸ்டேஷன் மாஸ்டரும் இஞ்சின் டிரைவரும் நடக்க ஆரம்பித்தார்கள். நடைபாதையில் படிந்த பனி அடர்த்தி இல்லாமல் பொலபொலவென்று உதிர்ந்திருந்ததால், குவிந்திருந்த பனித் தூவலில் கால் அளைந்து வெள்ளப் பரப்பில் நடப்பதுபோல் அவர்கள் நடந்து போனார்கள்.

“மைனா வீட்டுக்குப் போகணும் என்று ரொம்ப நாளாகத் திட்டமிட்டிருந்தேன். இப்போது தான் அதற்கு வேளை வந்தது”, இஞ்சின் டிரைவர் சொன்னார்.

“உங்களுடைய கரிசனத்தைப் போற்றுகிறேன். ஆமாம், ரயில் ஓட்டிப் போகும்போது பயணிகளோடு எப்படிப் பழக முடிகிறது உங்களால்? நான் இங்கே இருந்து ஸ்டேட்மெண்ட் போட்டுப் போட்டு யாரோடும் பேச முடியாமல் போய் விடுகிறதே” என சிரிப்புடன் கேட்டார் ஸ்டேஷன் மாஸ்டர்.

“பெட்டிகளுக்கு இடையே வெஸ்டிப்யூல் இணைப்பு உள்ள ரயில் தானே. உதவியாளரை இஞ்சினைக் கவனிக்கச் சொல்லி விட்டு ஒரு பயணத்துக்கு ஒரு முறையாவது ரயிலுக்குள் நீள நடப்பேன். அப்போது பயணிகளோடு ஏதாவது பேசிக்கொண்டு, நகைச்சுவைத் துணுக்கு பரிமாறிக்கொண்டு நடக்க ரொம்பவும் பிடிக்கும். மைனாவை தினசரி சந்திப்பதால் அவளுடைய படிப்பு, உடல்நலம், எதிர்காலத் திட்டம், பிடித்த புத்தகம் என்றெல்லாம் பேசுவேன். என் மகளை விட ஒரு மாதமே இளையவள் அவள்”.

கண்கள் மின்ன ஈடுபாட்டோடு சொன்னபடி நடந்து வந்தார் இஞ்சின் டிரைவர். ஸ்டேஷன் மாஸ்டர் தன் ஒரே பயணியிடம் அவ்வப்போது நாலைந்து வார்த்தைகள் அளந்து பேசியிருப்பார். அவருடைய உத்தியோகப் பளுவும் வீட்டில் எப்போதும் உடல்நலமில்லாமல் மூட்டு வலியோடு துன்பப்படும் மனைவியும் அவருடைய சிந்தையை சதா ஆக்கிரமித்துக் கொண்டதால் யாரோடும் நட்பு பாராட்ட முடியவில்லை.

மூட்டு வலிக்கும் வாயுப் பிடிப்புக்கும் முடக்கத்தான் கீரை தினம் சமையலில் சேர்க்க வேண்டும் என்று வைத்தியர் சொன்ன பிரகாரம் போன வருடக் கடைசியில் இருந்து ஸ்டேஷன் மாஸ்டர் வீட்டுக்குத் தினம் அந்தக் கீரை வந்து சேர்ந்து கறியானது. போன வாரம் தான் தெரிந்தது, அவர்கள் அதுவரை சாப்பிட்டது குப்பைக்கீரை என்று. அதனால் பெரிய நன்மை இல்லாவிட்டாலும் பின்விளைவு அறவே இல்லையாம். ஆனாலும் ஸ்டேஷன் மாஸ்டர் மனைவி நடு ராத்திரியில் தனக்குத்தானே சிரிப்பதற்கு இந்தக் கீரை காரணம் என்று கருதி போன வாரக் கடைசியிலிருந்து அதைத் தின்பதை நிறுத்திப் போட்டார் அவர். அவருக்கும் அபானவாயு தொல்லை அதிகமாகி உள்ளது. அபானவாயுவோடு, புன்முறுவல் பூத்தபடி அதுவும் இதுவும் பேசுவது கஷ்டம். அப்புறம் வேலைப் பளு. தினசரி தலைமை ஆபீசுக்கு அனுப்ப வேண்டிய ஸ்டேட்மெண்டில், மேஜை நாற்காலி கதவு ஜன்னல் அளவுகள், தட்ப வெட்பம், ஸ்டேஷனில் இருக்கும் மரங்களின் விவரம் என்று ஆயிரத்தெட்டு சமாசாரம் தர வேண்டியிருக்கிறது. பயணிகள் பற்றி அதில் ஏதுமில்லை.

”உங்கள் ரயில் நிலையத்தைச் சுற்றிலும் ரம்மியமான நிலப்பகுதி. பனிக்காலத்திலேயே இவ்வளவு அழகாக இருக்கிறதே. வசந்தம் வந்தால் எவ்வளவு நேர்த்தியாக இருக்கும்”.

இஞ்சின் டிரைவர் சொல்ல, சும்மா சிரித்தார் ஸ்டேஷன் மாஸ்டர். தான் செய்யத் தவறிய எல்லாவற்றையும் விசாரித்து நியாயம் தீர்க்க டிரைவரை யாரோ அனுப்பியிருக்கிறார்கள். அப்படித்தான் அவருக்குத் தோன்றியது.

மரங்கள் அடர்ந்திருந்த ஒரு சிறு திட்டைச் சுற்றி வலப்புறம் போக வேண்டுமா, அல்லது இடதுபுறமா என்ற சிறு குழப்பம் தவிர மற்றபடி நடக்க இலகுவாகவே இருந்தது. வலதிலும் இடமாகவும் பிரிந்த பாதைகள் பின்னால் ஒன்று சேர்ந்து போவதைப் பார்க்க, அந்தக் குழப்பம் அர்த்தமில்லாததாகத் தோன்ற இருவரும் சிரித்தார்கள். மனம் லேசாகிப் போக அதே மகிழ்ச்சியோடு மைனாவின் வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள்.

பூச்செடிகளும், நெடிதுயர்ந்த மரங்களும், தரையிலிருந்து உயர்ந்து மரங்களை அணைத்துப் படர்ந்த கொடிகளுமாகப் பனி தங்கி ஒளிர்ந்த நிலத்தின் நடுவே வீடு நின்று கொண்டிருந்தது. முன்வாசலில் சக்கரம் வைத்த சிறு தள்ளுவண்டி நிற்க, பக்கத்தில் ஆறு படிகள் வழியமைத்துக் கொடுத்த பாதை. அது முடியும் இடத்தில் வீட்டுக் கதவு பாதி திறந்திருந்தது.

“நல்ல ரசனையுள்ளவர்களின் வீடு இது” என்றார் ஸ்டேஷன் மாஸ்டர். எதுவும் பேசாமல் மரங்களை அண்ணாந்து பார்த்தபடி நின்றார் டிரைவர்.

“உள்ளே வரலாமே”, வாசல் திண்ணையில் சாய்வு நாற்காலியில் இருந்து புத்தகம் படித்துக் கொண்டிருந்த முதியவர் கேட்டார். ஸ்டேஷன் மாஸ்டரும், இஞ்சின் டிரைவரும் காலணிகளை வெளியே மரத் தடுப்புக்குள் பத்திரமாக வைத்துவிட்டு உள்ளே போனார்கள். பனி விழுந்த சாயலே இல்லாமல் வீட்டு முகப்பும் கல் பதித்த குறுகிய முற்றமும் சுத்தமாக மின்னின.

“நான் மைனாவின் அப்பா. நீங்கள்..?”, தயங்கி விட்டு முதியவர் அடையாளம் கண்டுகொண்ட மகிழ்ச்சியில் சிரித்தார். “ரயில் ஓட்டி இந்த ஜன்னலுக்கு நேரே வரும்போது ஓ என்று சிறு விசில் ஒலித்து என்னைத் தினமும் நலம் விசாரித்துப் போகிறவர் அல்லவா நீங்கள்””.

அவர் இஞ்சின் டிரைவரைக் கேட்க, மகிழ்ச்சியில் இரு கையும் உயரத் தூக்கி மெல்ல ஆடினார் டிரைவர்.

“நடனம் ஆடும் எஞ்சினியர்களை அடைய ரயில்வேக்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும்” என்றபடி ஆமோதிப்புக்காக அவர் ஸ்டேஷன் மாஸ்டரைப் பார்த்தார். மாஸ்டர் தொண்டையைக் கனைத்துக் கொண்டு, “நான் இந்தப் பகுதி ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர். மைனா தினம் காலை மாலை வந்து போகும்போது அவளுக்கு நானும் வாழ்த்து சொல்வேன்” என்று தானும் உற்சாகம் மிக்க ரயில்வே ஊழியன் என்று நிரூபிக்கக் கூறினார்.

“நீங்கள் மைனாவின் தந்தை என்று தெரியும்”. டிரைவர் அவர் அருகில் சென்று கைகுலுக்கினார். ஸ்டேஷன் மாஸ்டர் அடுத்துக் கைகொடுக்கும்போது தான் கவனித்தார், வீட்டுக்காரர் அத்தனை வயதானவர் இல்லை. தோல் சுருக்கம், உடம்பு தளர்ச்சி காரணம் வயது கூடுதலாகித் தெரிகிறது போல.

“மைனா உள்ளே வீட்டுப் பாடம் எழுதிக் கொண்டிருக்கிறாளா?” டிரைவர் கேட்டபடி தோளில் மாட்டிய பையிலிருந்து சில புத்தகங்களையும், இனிப்புப் பொட்டலம் ஒன்றையும் எடுத்து டீப்பாயில் வைத்தார்.

”சூப் சுட வைத்துக் கொண்டிருக்கிறாள்”, அவள் அப்பா சொன்னார்.

“இவை அவளுக்குப் பிடித்த காமிக்ஸ் புத்தகங்கள். என் மகளுக்கும் தான். அவள் படித்த புத்தகங்களையும், புதிதாக அவள் சார்பில் இரு புத்தகங்களையும் என் மூலம் மைனாவுக்குக் கொடுத்தனுப்பியிருக்கிறாள்”.

நன்றி சொல்லிப் புத்தகங்களை வாங்கிக் கொண்டு புரட்டிப் பார்த்தார் மைனாவின் அப்பா. “எனக்கும் பிடித்த காமிக்ஸ் இவையெல்லாம்” என்றார். கையில் நான்கு கோப்பை தேநீரை தட்டில் வைத்துப் பிடித்தபடி மைனா உள்ளே இருந்து வரவேற்பறைக்கு வந்தாள். தட்டில் வைத்திருந்த பிஸ்கட்டுகளைப் பார்த்ததும் ஸ்டேஷன் மாஸ்டர் புன்சிரிப்பு பூத்தார். டிரைவர் கொண்டு வந்த, தண்ணீர் விட்டுப் பிசைந்து வேகவைத்த, நீண்ட ஆயுள் கொண்ட பிஸ்கட்டுகள் அவை.

மைனா உற்சாகமாக ரயில்வே அதிகாரிகளுக்கு வணக்கம் சொன்னாள். “ஒரு சந்தேகம். நான் பள்ளிக்கூடம் போய் வந்து வீட்டில் இருக்கும்போது சீருடை அணிவதில்லை. நீங்கள் ஏன் எங்கும் ரயில்வே சீருடைகளில் இருக்கிறீர்கள்?”

“அந்த உடுப்பு இல்லாவிட்டால் உள்ளே ஒன்றுமில்லாத குடுவை ஆகிவிடுவதாகப் பயப்படுகிறேன் நான்” என்றார் ஸ்டேஷன் மாஸ்டர். டிரைவர் அதை மெல்ல மறுத்து, “அணிய சுலபமானது. அழுக்கு தெரியாதது இந்த சீருடை. நான் இதை சலவை செய்து ஒரு மாதமாகப் போகிறது. நல்ல குளிர் தாங்கும் தன்மை உண்டு”என்றார்.

மைனா அவர்களுக்கும் அப்பாவுக்கும் தேநீர் கொடுத்து விட்டு, தானும் ஒரு கோப்பையோடு சுவரை ஒட்டிப் போட்ட முக்காலியில் அமர்ந்து கொண்டாள்.

“நீங்கள் ஸ்டேஷன் மாஸ்டராக இரண்டு வருடத்துக்குள் வந்திருப்பீர்கள் தானே. ஏனென்றால், நான் இரண்டு வருடம் முன்பு ஆபீஸ் போகவர ரயில்வே ஸ்டேஷனுக்கு வருவேன். உங்களுக்கு முன்னால் இருந்தவரை அறிவேன்” என்றார் மைனாவின் தந்தை.

“நீங்களும் ரயில்வேயில் உத்தியோகம் பார்க்கிறீர்களா?”

பிஸ்கட்டைக் கடித்தபடி டிரைவர் கேட்க, இல்லை என்றார் அவர். “நான் சீரமைப்புத் துறையில் அதிகாரியாக இருந்தேன். கதிரியக்க விளைவு என் உடலில் கூடி வருவதால் விருப்பப் பணி ஓய்வு பெற்று பென்ஷன் வாங்கிக் கொண்டு வீட்டோடு இருக்கிறேன்.”.

மைனா இனிப்புப் பொட்டலத்தைப் பிரித்து சதுர வடிவில் ஓர் இனிப்பை எடுத்துக்கொண்டு அப்பாவிடம் பொதியை நீட்டினாள். அவர் ஆசி அருள்வது போல் கையால் தொட்டு அதை ஸ்டேஷன் மாஸ்டரிடம் கொடுத்தார். “இது என் மனைவிக்கு நினைவு மாதம். இனிப்பு வேண்டாம்” என்றார் அவர்.

“அம்மா இதே போல் பனி விழுந்த பிற்பகலில் தான் இறந்து போனாள்”, இனிப்பைக் கடித்தபடி சொன்னாள் மைனா.

“இவளுடைய அம்மா கதிரியக்கத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டாலும் இறுதிவரை சுறுசுறுப்பாக இருக்கவே விரும்பினாள். காகிதக்கூழ் பொம்மைகளைச் செய்வதில் அவள் ஆழ்ந்து ஈடுபட்டபடி சாவை எதிர்கொண்டாள்” பெருமையோடு சொன்னார் மைனாவின் அப்பா.

“நான் அவரைப் பற்றிய உங்கள் நேர்காணலைப் பத்திரிகையில் படித்திருக்கிறேன்” டிரைவர் சொன்னார். ஸ்டேஷன் மாஸ்டர் ஆச்சரியத்தை மறைத்துக் கொண்டார். நகர்ந்தபடி இருக்கும் இஞ்சின் டிரைவர் உலகம் சுழலும்போது தானும் கூடச் சேர்ந்து சுழன்று அனைத்தையும் அனைவரையும் பற்றித் தெரிந்து வைத்திருக்கிறார். கரிசனம் கொள்கிறார். தனக்கு? தினசரி ஸ்டேட்மெண்ட்களைப் போடவைத்து இந்த சர்க்காரும், ரயில்வே நிர்வாகமும் ஸ்டேஷன் மாஸ்டர்களை, பிடித்து வைத்த வெல்லக் குந்தாணிகளாக நிறுத்தி வைக்கிறது. ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர்கள் எல்லோரும் தரைக்கு அரை அடி உயரவே இருந்து பணியாற்ற வேண்டும், என்று ஏன் ரயில்வே எதிர்பார்க்கிறதென்று அவருக்குப் புரியவில்லை.

”ஆமாம், நான் பத்திரிகையில் நான்கு வருடம் முன்னால் நேர்காணலுக்கு சரியென்று சொன்னேன். ஊரோடு அணு உலை விபத்தில் இறந்து போக, ஊருக்கு வெளியே விலக்கி வைத்திருந்த எங்கள் குடும்பத்தில் நானும் என் மகளும் பயணத்தில் இருந்ததால் உடனே இறக்காமல் தப்பிப் பிழைத்தோம். நெடுங்காலம் அணு உலைக்கு அண்மையில் இருந்ததால் எங்கள் உடலிலும் கதிரியக்கம் இன்னும் சற்று அதிகம் தான். கீகர் முல்லர் கவுண்டர் வைத்துப் பார்த்தால் அது புலப்படும். எங்கள் இருவரைப் போலன்றி, என் மனைவி அணு உலை விபத்தில் இறந்து போனாள். வெவ்வேறு இனக்குழுவினர் நாங்கள், எங்களின் கல்யாணத்தைக் கடைசிவரை அரசாங்கம் அங்கீகரிக்கவில்லை”.

அவர் சொல்லிக் கொண்டிருக்கும்போது, தோட்டத்தில் உலவப் போகிறேன் என்று சொல்லி மைனா வெளியே போனாள்.

”மைனாவா சமையல் முழுக்க செய்கிறாள்?” ஸ்டேஷன் மாஸ்டர் கேட்டார்.

“இல்லை, நானும் அவளும் வார இறுதியில் அடுத்த வாரத்துக்காகச் சமைத்து ஃப்ரிட்ஜில் வைத்து விடுகிறோம். வீடு சுத்தப்படுத்த யாரும் வராததால் அரசு ஒரு ஊழியரை இரண்டு நாளைக்கு ஒரு முறை அனுப்பி வைக்கிறது. அவருக்குக் கூடுதல் பணம் கொடுத்துத் துணி துவைக்கவும், இஸ்திரி போடவும் பயன்படுத்திக் கொள்கிறேன்” என்றார் மைனாவின் அப்பா.

”அப்பா, பிச்சிப் பூச்செடி நாலைந்து மொட்டு விட்டிருக்கு” மைனா வெளியே இருந்து ஓடி வந்து சொல்லி விட்டுத் திரும்ப ஓடினாள்.

“எனக்கும் இவளுக்கும் டாக்டர்கள் நாள் குறித்திருக்கிறார்கள். அதிகம் போனால் நானும் மைனாவும் இன்னும் ஒரு வருடம் உயிரோடு இருக்கக் கூடும். அவள் முந்திப் போனால் என்னை முதியோர் இல்லத்திலும், நான் போனால் அவளை அரசு பெண்கள் விடுதியிலும் சேர்த்துப் பராமரிக்க அரசு வழி செய்திருக்கிறது” அவர் அவசரமாகச் சொல்லியபடி நின்றார்.

“நீங்கள் இதையும் அந்த உரையாடலில் பூடகமாகக் குறிப்பிட்டிருந்தீர்கள். அதற்கு முன்னே இங்கிருந்து தலைநகரத்தில் போய் இருக்க ஆர்வம் தெரிவித்திருந்தீர்கள்”.

டிரைவர் தயக்கத்தோடு கூறினார். அவருக்கு மைனாவின் குடும்பத்தோடு அண்மை தோன்றி அது வளர்வதில் ஸ்டேஷன் மாஸ்டருக்கு அசூயை தோன்றியது. தினசரி அனுப்ப வேண்டிய ஸ்டேட்மெண்டுகள் இல்லாவிட்டால் அவரும் உலகையே அன்பால் அணைத்திருப்பார்,

”பூச்செடியில் மொட்டு அரும்பி இருக்கும் நேரத்தில் யாராவது தலைநகரம் பற்றி எல்லாம் நினைப்பார்களா?”

உள்ளே வந்து அப்பாவைக் கையைப் பிடித்து இழுத்த மைனா இஞ்சின் டிரைவரைக் கேட்டாள். கையசைத்து அவரையும் ஸ்டேஷன் மாஸ்டரையும் கூடவே நடக்கச் சொன்னாள். அவர்கள் தோட்டத்துக்குப் போனார்கள்.

செடிகளைப் பார்த்து விட்டு வாசலுக்கு வந்தபோது டிரைவர் விடைபெற்றார். “சும்மாதான் பார்த்துப் போக வந்தேன். மைனாவையும் உங்களையும் தீர்க்கமாக பரிச்சயப்படுத்திக் கொள்ள ஏனோ தோன்றியது. இனி தினசரி இந்த வீட்டைக் கடக்கும்போது இன்னும் குஷியாக என் ரயில் விசில் ஒலிக்கும்” என்றார் அவர் மைனாவின் அப்பாவிடம்.

“நான் அடுத்த மாதம் உத்தியோக மாற்றலில் போகிறேன். அதற்குள் இன்னொரு முறை வந்து சந்திக்கப் பார்க்கிறேன். வரும்போது உங்கள் விஷயமாக பத்து ஹைக்கு கவிதைகள் எழுதி எடுத்து வருகிறேன். ஸ்டேட்மெண்ட் போட்டு முடித்து எஞ்சிய காகிதம் எனக்கு உடனே கிட்டும்” என்றபடி விடைவாங்கி இஞ்சின் டிரைவரோடு நடந்தார் ஸ்டேஷன் மாஸ்டர்.

பாதைத் திருப்பத்தில் நின்றார் டிரைவர்.

“என் மகளுக்குத் தொண்டையில் புற்றுநோய். தலைநகரம் போனால் தான் நல்ல சிகிச்சை கிடைக்கும். டிரான்ஸ்பர் கேட்டால், ரயில் போய்ச் சேரும் பழைய நகருக்கு என்னை குடிமாறச் சொல்கிறார்கள். அது இறந்தவர்களின் நகரம். நான் அங்கே இருக்க விரும்பவில்லை. ஆனாலும் இந்தப் பாதையில் தான் நான் தினமும் போய்வர வேண்டும். மைனா இங்கே இருக்கும்வரை ரயிலுக்கு என்னை டிரைவராக நியமித்திருக்கிறார்கள். அது முடிவுக்கு வர, மைனா வேறு எங்காவது குடிபெயர வேண்டும். அதைச் செய்யும்படி அவளுடைய அப்பாவை வேண்டத்தான் நான் வந்தேன்.” என்றார் அவர்.

“அவர் வீட்டில் இரண்டு பூச்செடிகள் துளிர் விட்டிருக்கின்றனவே”, ஸ்டேஷன் மாஸ்டர் கேட்டார்.

“ஆமாம், அதனால் தான் நானும் அவரை ஒன்றும் கேட்கவில்லை” டிரைவர் சொன்னார். அவர் தோள் பையில் ஓசை கேட்டது. கடல் இரையும் சத்தம். ஆயுள் கூடிய பிஸ்கட்டுகளை நினைத்துக் கொண்டார் ஸ்டேஷன் மாஸ்டர்.

“உங்கள் வீட்டுத் தோட்டமும் பூக்கட்டும்”, ஸ்டேஷன் மாஸ்டர் சொன்னார். ஸ்டேட்மெண்ட் போடும் அவசரத்தில் வேகமாக நடந்தார் அவர்.

மறுபடி பனி பெய்ய ஆரம்பித்தது. பாதை முழுக்க வெண்மை படிந்து உறையத் தெரு விளக்குகள் மஞ்சள் பரத்தி ஒளிரத் தொடங்கின.


-இரா.முருகன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.