யோகம்


வெகுநாட்களுக்குப் பிறகு நாம்பள்ளி ரயில் நிலையத்தில் அனந்தன் சாமியைப் பார்த்தேன். சாமிதானா? சற்றே தயக்கத்துடன் அருகில் சென்றேன். அடுத்திருந்த இருக்கையில் அமர்ந்து உற்றுப் பார்த்தேன். மழிக்கப்பட்ட தலையில் முட்களைப்போல் நரைமுடி. அடர்த்தியான தாடி. குனிந்து எதையோ படித்துக்கொண்டிருந்தார். அவரேதான். தாமதிக்க சமயமில்லை. இன்னும் ஒருமணி நேரத்தில் ரயில் வந்துவிடும்.

எழுந்து அருகில் சென்றேன். சற்றே குனிந்தேன் “வணக்கம் சாமி.”

தமிழ்க் குரல் அவருக்கு ஆச்சரியத்தைத் தந்திருக்கவேண்டும். திடுக்கென தலைநிமிர்ந்தார். 

“வணக்கம்” இன்னும் அவருக்கு அடையாளம் தெரியவில்லை. கூர்ந்து பார்த்தார். 

“ஊட்டில குருகுலத்துல பாத்துருக்கோம் சாமி. ஈஷாவாஸ்யம்…” என்று சொல்லிய நொடியில் சுவாமியின் வழக்கமான உற்சாகமான சிரிப்பு முகத்தில் பளிச்சிட்டது.

“ஆ… தமிழ் கவியல்லே…” கையை இறுகப் பற்றிக்கொண்டார்.

“உக்காருங்கோ” அவருக்கேயுரிய தமிழ். அருகில் அமர்ந்தேன். இன்னும் அவர் முகத்தில் சிரிப்பு மறையவில்லை. 

“பாத்து வருஷம் நெறைய ஆயிடுச்சு. அடையாளம் தெரியல்ல. எப்பிடி இருக்கீங்க?” சாமியின் மணத்தை கண்டுகொண்டேன். 

“இருக்கேன் சாமி. நீங்க இப்ப எங்க இருக்கீங்க? கோயமுத்தூர்ல டிஸ்சார்ஜ் ஆன அன்னிக்கு பாத்தது” அதைச் சொல்லவேண்டாம் என்று நினைத்தும் வாயில் என்னை மீறி வந்துவிட்டது.

ஆமோதிப்பதுபோலத் தலையை ஆட்டினார் “இப்ப இங்கதான் இருக்கேன். வயசாயிடுச்சில்ல. உங்களை சிறு வயசாப் பாத்தது. இப்பிடி உங்களைப் பாத்ததும் தெரியலே” சிரித்தார். 

“நான் கோயமுத்தூர்லதான். வேலை விஷயமா இங்க வந்தேன்” இன்னும் அவர் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன்.


தகதப்பான ரஜாய்க்குள் சுருண்டிருந்தேன். குரங்குக் குல்லாய், காலுறை, உல்லன் ஸ்வெட்டர் என குளிர் தடுப்பரண்களுக்குள்ளே ஒடுங்கிக் கிடந்தேன். ஜன்னலின் சிறு இடுக்கு வழியே ரகசியமாய் நுழைகிறது குளிர்காற்று. வெளியேற முனையும் சிறுநீரை அடக்கியபடியே படுத்திருக்கிறேன். உடல் சூட்டைப் பொத்தி வைத்திருக்கும் இந்தக் கூட்டிலிருந்து வெளியே தலைநீட்ட பயம். சருமத்தை ஊசிபோல் துளைக்கும் தண்ணீரை இந்த வேளையில் தொடமுடியுமா? 

மேலும் பொறுக்க முடியாதபோது கனத்த போர்வையை விலக்கி வெளியே கால்வைத்தேன். காலுறைகளைக் கழற்றிவிட்டு தரையில் கால் வைத்தேன். உள்ளங்கால்களில் நெருஞ்சி முள்ளைப் போல் குளிர் அப்பிக்கொண்டது. உதறிக்கொண்டே செருப்பைப் போட்டுக்கொண்டு கதவை மெல்லத் திறந்தேன். உடலை மட்டும் வெளியே நீட்டி சட்டென்று வெளியில் வந்து அதே வேகத்தில் கதவைச் சாத்தினேன். நீண்ட கூடத்தின் கடைசியில் மங்கலான விளக்கொளி. கைகளை மார்புக்குக் குறுக்காக கட்டிக்கொண்டு விரைந்தேன். 

கழிப்பறையிலிருந்து வெளியே வந்தபோது உடல் உதறிக்கொண்டிருந்தது. கைகளைத் துடைத்தபடியே கூடத்துக்கு வந்தேன். சுவரிலிருந்த கடிகாரத்தைப் பார்த்தேன். ஐந்தரை மணி. பிரார்த்தனைக் கூடத்துக்கு முன்பக்கமாக பேரிமரத்தையொட்டி நின்ற கம்பத்தில் விளக்கொளிர்ந்தது. பனியில் கரைந்து ஒழுகியது மஞ்சள் வெளிச்சம். 

இடதுபக்கமாய் குருகுலத்துக்கு உள்ளே வரும் பாதையில் ஏதோ அசைவு தெரிந்தது. அவ்வளவாய் வெளிச்சமில்லை. மெழுகுத் திரையென பனி அடர்ந்திருந்தது. புகைபோல் அசைந்துபோவதைக் கண்டதும் ஒருநொடி உடல் விதிர்த்தது. ஜன்னலை ஒட்டி நின்று கூர்ந்து பார்த்தேன். அங்குமிங்குமாய் அந்த வெண்ணிழல் அசைந்திருந்தது. ஏதோ ஒரு உருவம். இந்த நேரத்தில் யாரும் வந்திருக்கிறார்களா? 

உள்ளங்கைகளை உரசி சூடேற்றினேன். தூக்கம் விடுபட்டிருந்தது. கூடத்தின் கதவைத் திறந்ததும் காத்திருந்ததுபோல் பனிக்காற்று மோதிக் கடந்தது. அவசரமாய் கதவைச் சாத்தினேன். நிதானமாய் படிகளில் இறங்கினேன். புற்களும் பெரணிகளும் செடிகளும் அடர்ந்த மேட்டுப்பகுதியில் நின்று பார்த்தேன். விறுவிறுவென பனி இறங்கி என்மேல் கவிந்தது. கூர்ந்து பார்த்தேன். அந்த உருவம் தரையை நோக்கி குனிந்திருந்தது. இன்னும் சில படிகள் இறங்கி கீழே நின்றேன். காலடியோசை கேட்டிருக்கவேண்டும். நிமிர்ந்து திரும்பியது. தலைக்குல்லாவைத் தவிர எல்லாமே வெண்ணிறம். அந்த உருவமும் என்னை நோக்கி நகர்ந்தது. நானும் நடந்தேன்.

“யாரானு?” கரகரப்பான குரல் கேட்டதும் மனம் அடங்கியது. கழுத்துப்புறத்தில் வெம்மையை உணர்ந்தேன். 

இப்போது இன்னும் தெளிவாகப் பார்க்க முடிந்தது. கையில் சுள்ளிகளுடன் அனந்தன் சாமி நின்றிருந்தார். கணுக்கால் வரைக்குமான் வேட்டி. ஜிப்பாவும் அல்லாமல் சட்டையுமல்லாமல் ஒரு மேலுடுப்பு. கழுத்தைச் சுற்றி பழுப்பு கம்பளித் துண்டு. தலையில் அடர்நீல குல்லா.  

என் முகம் தெளிந்தவுடன் அவரது முகத்தில் சிரிப்பு விரிந்தது “குட்மார்னிங். இந்த நேரத்துல இங்க என்ன செய்யறீங்க?”

“குட்மார்னிங். எழுந்துட்டேன். வெளியில பாத்தா யாரோ நடமாடற மாதிரி இருந்துச்சு” என் குரலில் நடுக்கம்.

“அது செரி. பனியில நிக்க வேண்டாம். உள்ளே போங்கோ. இன்னும் கொஞ்ச நேரங்கழிச்சு வரலாம்” சிரித்தபடியே அவர் திரும்பி நடந்தார்.

ஒன்றும் சொல்லாமல் அவரையே பார்த்துக்கொண்டு நின்றேன். சுள்ளிகளைப் பொறுக்கியபடியே விடுதியின் பின்புறம் நடந்து மறைந்தார். தலைக்குல்லாவை இழுத்து காதுகளை பத்திரப்படுத்திக்கொண்டு அவர் சென்ற திசையில் போனேன். 

விடுதியின் சுவரையொட்டி பின்னால் கால்களை மடக்கி கீழே உட்கார்ந்திருந்தார். முகத்தில் நெருப்பின் ஒளி. அந்த இடத்தின் வெம்மை என்னை இழுத்தது. அருகில் சென்றேன். நிமிர்ந்து பார்த்தார். மீண்டும் சிரித்தார்.

“என்ன செய்யறீங்க?” நானும் அவர் அருகில் மடங்கி உட்கார்ந்தேன்.

“வெந்நீர் அடுப்பைப் பத்த வெச்சிருக்கேன். நீங்கல்லாம் குளிக்கணுமே?”

உள்ளே கழிவறைகளுக்கு நடுவிலிருக்கும் தொட்டியின் அடிப்பக்கத்தில் பொருத்தப்பட்டிருந்த அடுப்பில்தான் விறகு எரிகிறது. அதற்காக சுள்ளிகளைப் பொறுக்கிச் சேர்த்து நிதானமாக நெருப்பை வளர்க்கிறார்.

கைகளை நீட்டி வெம்மையை வாங்கி கன்னங்களில் ஒத்தினேன். 

“கூடுதல் தணுப்போ?”

“ம். ரொம்பநேரம் தூக்கமே வர்லை.”

சுள்ளிகளில் பற்றிக்கொண்ட நெருப்பின் வெம்மை கூடியிருந்தது. இன்னும் இரண்டு விறகுகளை ஓரமாய் செருகிவிட்டு எழுந்து நடந்தார். கூடவே தொடர்ந்தேன். பிரார்த்தனைக் கூடத்துக்கு அப்பால் பனிமூடிக் கிடந்த தேயிலைச் சரிவின் முடிவில் கலங்கலாய் சிறுவெளிச்சம். அங்கங்கே சிலுவைக் கோடுகள்போல் சில்வர் ஓக் மரங்கள். வானில் பஞ்சுத் திவலையென சிறுவெளிச்சம். 

“கட்டன் சாயா குடிக்கலாமா?” கேட்டபடியே சமையல்கூடத்துக்குச் செல்லும் சரிவில் இறங்கினார். கதவருகே இருந்த ஸ்விட்சைப் போட்டதும் வாசலில் வெளிச்சம் இறங்கியது. தள்ளித் திறக்கும்போது மரக்கதவுகள் முனகின. சிறுகூடத்தின் ஓரத்தில் பழைய மரபெஞ்சு. அதன்மேல் கவிழ்க்கப்பட்ட பாத்திரங்கள். உள்ளறைக் கதவைத் திறந்து விளக்கைப் போட்டார். சற்றே பெரிய கூடம். உணவு மேசையின் இருபுறமும் நீண்ட பெஞ்சுகள். மூலையில் அடுப்பு. அதையொட்டி மேடையில் பாத்திரங்களும் சமையல்பொருட்களும். 

தேநீர் பாத்திரத்தில் நீரை நிரப்பி அடுப்பில் ஏற்றினார். தலைக்குல்லாவைக் கழற்றி மேசையின் ஓரத்தில் வைத்தார். ஐந்தரை அடி உருவம். தலைமுடியும் தாடியும் ஒரே அளவில் கருப்பும் வெளுப்புமாய் கலந்திருந்தன. கட்டுமஸ்தான உடல். 

“உங்களுக்கு குளுராதா?”

சற்றே பெரிய முன்பற்கள் பளிச்சிட்டுத் தெரியும்படியான சிரிப்புடன் தலையாட்டினார் “ஏய்…”

தண்ணீர் கொதிப்பதைப் பார்த்துவிட்டு தேயிலையை அளவுபார்த்து இட்டார். தேயிலையின் மணத்தை நுகர்ந்தவர்போல் கண்களை மூடினார். இரண்டு தம்ளர்களை எடுத்து மேசையில் வைத்தார். நான் சர்க்கரைக் கிண்ணத்தை எடுத்து வைத்தேன். 

தேநீரை கலந்து பருகியபோது குளிருக்கு உடல் பழகியிருந்தது. 

“சாமி, நீங்க டாக்டரா?”

“எதுக்கு கேக்கறீங்க?” சிரித்தார்.

“டாக்டர்னு மணி சொன்னார். அதான்…”

“அதே…” மறுபடியும் சிரித்தார்.

உடனடியாக எழுந்த கேள்விகளை நான் கேட்கவில்லை. அவரது சிரிப்பே எனக்கு பதில்சொன்னது போலிருந்தது. மருத்துவப் படிப்பை முடித்து இரண்டு ஆண்டுகள் திருவனந்தபுரம் மருத்துவமனையில் பணியாற்றியதோடு சரி. அதற்குப் பின்பு வைத்தியம் பார்க்க மனம் கூடவில்லை. மாத்ருபூமியில் குரு சைதன்யா எழுதிய ஒரு கட்டுரையைப் படித்துவிட்டு குருகுலத்துக்கு வந்துவிட்டார். பதினாறு வருடங்கள் ஓடிவிட்டன.

தம்ளரை கழுவி மேடையில் கவிழ்த்துவிட்டு மறுபுறம் ஓரத்தில் நின்ற அலமாரியிலிருந்து காய்களை அள்ளிக்கொண்டு வந்து மேசையில் போட்டார். என்னிடம் ஒரு கத்தியை நீட்டினார். 

“காய் நறுக்கலாமில்லையா?” 

பீன்ஸை எடுத்து நறுக்கும்போது கூரையின் மீது எதுவோ விழுந்து உருளும் சத்தம் கேட்டது. தலைதூக்கிப் பார்த்தேன். 

ஓட்டுக்கூரையுடனான இதன் ஒருபகுதி நடராஜகுரு ஆரம்பத்தில கட்டியது. இரண்டு பேர் மட்டுமே தங்குமளவுக்குச் சிறியது. தடித்த மரங்களும் அடர்ந்த செடிகொடிகளுமாய் செறிந்திருந்த இந்த பகுதியில் அப்போது தேயிலைச் சரிவுகள் இல்லை. ஆள்நடமாட்டம் கிடையாது. சுற்றிலும் சரிவுகளுடன் சிறு குன்றின் உச்சியிலிருந்த இந்த இடம் அன்பரொருவர் தந்தது. தனிமையான இடம். அடர்காடு. குருவுக்கு ஏற்றதாயிருக்க அங்கேயே தங்கிவிட முடிவுசெய்தார். அருகில் கிடைத்தக் கற்களையும் மண்ணையும் கொண்டு சுவர்களை எழுப்பினார். உடைந்த மரக்கிளைகளைக்கொண்டு கூரை அமைத்தார். கடும்பனியிலும் ஓயாத மழையிலும் அதற்குள்ளேயேதான் ஒடுங்கியிருந்தார். எப்போதேனும் மலையைவிட்டுக் கீழே இறங்கும்போதுதான் பிறர் கண்ணில்படுவார். 

“சமையல் தெரியுமா?”

இல்லையென்று தலையாட்டினேன்.

“சம்சாரிக்கு தெரியாட்டி பரவால்லே. சாமியாருக்கு தெரியணும்” சிரித்தார். 

மறுபடியும் கூரையின்மீது எதுவோ உருண்டுவிழும் சத்தம். தலைநிமிர்த்திப் பார்த்தேன். அவர் கண்டுகொள்ளாமல் கேரட்டை நறுக்கிக்கொண்டிருந்தார்.

 


குருகுலத்துக்கு போனீங்களா?” முந்திக்கொண்டதுபோல அவர் கேட்டார். அந்த கணத்தில் அவரது முகத்தில் காணக்கூடாத தளர்ச்சி எட்டிப்பார்த்தது. 

“மே மாசம் போயிருந்தேன்.”

“இப்ப குருகுலத்துல மே மாசத்துல மட்டுந்தான் ஆட்கள் வராங்க போல.”

பிற நாட்களில் யாருமே புழங்காத குருகுல வளாகத்தை சுத்தப்படுத்துவது சுலபமான காரியமில்லை. உதிர்ந்து மக்கிக் கிடக்கும் இலைகள். உடைந்து நொறுங்கிய மரக் கிளைகள். பாதைகளை மூடி அடர்ந்து வளர்ந்திருக்கும் செடிகளும் புதர்களும். அடைபட்டிருக்கும் கழிவறைக் குழாய்களை சரிபார்க்கவேண்டும். தண்ணீர்த் தொட்டிகளை சீராக்கவேண்டும். பூட்டிக் கிடக்கும் கதவுகளை ஜன்னல்களைத் திறந்துவைக்கவேண்டும். பத்துநாட்களுக்கு முன்பிருந்தே வேலையைத் தொடங்கினால்தான் காரியம் நடக்கும்.

“லைப்ரரிலதான் கூட்டம் நடக்குதா?”

“ஆமா சாமி. நெறைய அலமாரிகள்ல புக்ஸே இல்லை. எடுத்துட்டுப் போயிட்டாங்கபோல.”

அவர் ஒன்றும் சொல்லாமல் கோப்பையிலிருந்த தேநீரைப் பார்த்தார். 

“நாஞ்சில் எப்பிடியிருக்கார்?” அவர் முகத்தில் மீண்டும் சிரிப்பு. ஆசுவாசமாய் உணர்ந்தேன்.


டிசம்பர் மாதத்தின் அன்றைய இரவில் கடுங்குளிர் அடிபட்ட மிருகத்தைப்போல சீற்றத்துடன் உலவிக் கொண்டிருந்தது. கம்பளி உடுப்புகளின் கதகதப்புக்குள் உடலைப்பொத்தி காற்றுப்புகாத அறைகளுக்குள் பதுங்கிக் கிடந்தோம். அன்றைய மதிய உணவில் ஏதோவொன்று நாஞ்சிலின் வயிற்றுக்கு ஒத்துக்கொள்ளவில்லை. அன்றிரவு நாங்கள் தங்கியிருந்த அறை பிரார்த்தனை கூடத்தின் ஒருபக்கச் சிறகில் அமைந்தது. கழிப்பறைக்கு கட்டடத்தின் பின்பக்கமாய் செல்லவேண்டும். குளிர் விரட்டிய இரவில் பலமுறை சென்றுவர நேர்ந்தது. விடியும் வரையிலும் பெரும் சிரமம்.

வழக்கம்போல விடிகாலையில் வெந்நீர் அடுப்பை மூட்டியிருந்தார் அனந்தன் சாமி. தலைக்குல்லாவுடன் வந்தவரிடம் நாஞ்சிலின் சிரமத்தைச் சொன்னேன்.

“அய்யடா… ராத்திரியே சொல்லக்கூடாதா?” பற்சிரிப்பு பளிச்சிட்டது.

“பதினோரு மணிக்கு மேலதான் தொந்தரவு. சரியாயிடும்னு நெனச்சோம். இப்பதான் கண்ணசந்துருக்கார்.”

“ஒரு கொழப்பமும் இல்லே. கண் முழிச்சதும் சொல்லுங்கோ. கட்டன்சாயா ரெடியா இருக்கு. போங்க” சுள்ளிகளைச் சுமந்தபடி நடந்தார். 

பனியினூடே சாம்பல் வெளிச்சம் இளகிக் கசிந்தது. ஈரமண்ணில் நனைந்த இலைகள். சமையல்கூடத்தின் வாசலில் விளக்கெரிந்தது. கைகளை மார்புக்குக் குறுக்கேக் கட்டிக்கொண்டு நடந்தேன். 

சூடான கட்டஞ்சாயாவைப் பருகியபடி நின்றேன். தேயிலைச் சரிவின்மேல் பொழுதின் ஒளி. வளைந்து கீழிறங்கியது மண் சாலை. குன்றின் மேலிருந்த மரங்களுக்கிடையே எட்டிப் பார்த்தன ஒளிக்கதிர்கள். 

கழிவறையிலிருந்து நாஞ்சில் வெளியே வந்தார். என்னைப் பார்த்துவிட்டு மெல்ல சரிவுப்பாதையில் இறங்கிவந்தார். “புதுசா கவிதை எழுத வந்தவனமாதிரி நிக்காம போயிட்டே இருக்கு…” சிரித்தபோது தூக்கமின்மையின் தளர்ச்சி முகத்தைச் சுண்டியது.

சூடான கட்டன் சாயாவை கண்ணாடித் தம்ளரில் ஊற்றித் தந்தேன். “வயித்துக் கடுப்புக்கு நல்லதுதான்” என்றபடி தம்ளரை உள்ளங்கைக்கு நடுவில் வைத்து உருட்டினார். சிறிதே பருகினார்.

“சாருக்கு எந்தாயி?” அனந்தன் சாமி குடுகுடுவென சரிவில் இறங்கி வந்தார். பெஞ்சிலிருந்து எழுந்தார் நாஞ்சில். 

“உக்காருங்கோ” அருகில் வந்து முகத்தை ஊன்றிப் பார்த்தார். 

“சாப்பிட்டது என்னவோ ஒத்துக்கலை. லூஸ் மோஷன். ஒறங்கவிடலை.”

நாஞ்சிலின் இடதுகையைப் பற்றி நாடியைப் பரிசோதித்தார் “ஒண்ணுமில்லை. டீ குடிச்சிட்டு அப்பிடியே மேல போகலாம். சரி பண்ணிடலாம்.”

அனந்தன் சாமி தங்கியிருக்கும் அறை ஓவியக்கூடத்துக்கு ஏறிச்செல்லும் படிகளுக்கு அடியில் அமைந்த மிகச் சிறிய அறை. குரு சைதன்யாவின் ஓவியக்கூடம் மிக அழகானது. ஆறு ஏக்கர் அளவிலான குருகுல வளாகத்தின் உயரமான இடத்தில் அமைந்தது. கிழக்கிலும் மேற்கிலும் அகன்ற சுவர்களில் அளவில் பெரிய கண்ணாடிகள் பொருத்தப்பட்டிருக்கும். நீலவானம், பசுமைபோர்த்திய மலைச்சரிவுகள், மிதக்கும் மேகக்கூட்டம், சிறகசைத்து மறையும் பறவைகள் என இயற்கை எழுதும் சித்திரங்களைக் காட்டும் சாளரம். காலைப்பொழுதில் இளவெயில் மெல்ல மெல்ல தேயிலைச் செடிகளின் மேல் ஊர்ந்து வரும் காட்சியைக் காணத் தகுந்த இடம். அந்தியில் வானம் சிவந்திருக்க ஒளிமங்கிய குன்றுகளில் அசைந்திருக்கும் மரங்கள். சூரியன் இறங்கி மறைந்த பின்னும் தேங்கி நிற்கும் ஒளிக்கீற்று. சரிவிலுள்ள வீடுகளில் இரவின் கண்களென மின்விளக்குகள் ஒளிரும். அவ்வப்போது ஒன்றிரண்டு நட்சத்திரங்களும். 

ஓவியச் சட்டத்தில் வரைவதெற்கென பொருத்தி வைத்த கித்தானில் பல நாட்கள் ஒன்றுமே வரையாமல் உட்கார்ந்திருப்பார் குரு சைதன்யா.

சின்னஞ்சிறிய ஊதாப்பூக்கள் அசைந்திருந்த மண்பாதையில் இறங்கி வெறுமனே சாத்திவைத்த கதவைத் தள்ளித் திறந்தார் அனந்தன் சாமி. வாசலின் ஓரத்தில் மண்குவியல். சிறிய பள்ளத்தில் நீருற்றிப் பிசைந்த மண். மரத்துண்டின் மீது மார்பளவுச் சிலை. இன்னும் வனைந்து முடிக்கப்படவில்லை. மஞ்சளும் சிவப்புமாய் டேலியாக்கள் ஜன்னலோரமாய் பூத்திருந்தன. 

அறைக்குள் நுழைந்ததும் மூலிகையும் எண்ணெயும் கலந்த மணம். ஆட்டுக்குட்டியை கையிலேந்திய ஏசுவின் படம். அருகில் மரஅலமாரி. சிறிதும் பெரிதுமான டப்பாக்கள். கீழ்த்தட்டில் புத்தகங்கள். சிறிய மரப்பெட்டியிலிருந்து வெள்ளைக் காகிதத்தில் மடித்த பொட்டலங்களை எடுத்தார். ஒன்றைப் பிரித்து நாஞ்சிலின் உள்ளங்கையில் போட்டார். இரண்டாவது தட்டிலிருந்த பாட்டிலை எடுத்துத் திறந்தார்.

“கையை நீட்டுங்கோ…”

நாஞ்சில் உள்ளங்கையைக் குவித்து நீட்ட தேனை ஊற்றினார்.

“நல்லா கலந்து சாப்பிடுங்கோ. உடனே நின்னுடும்.”

வெள்ளை பவுடரை தேனில் குழைத்து நக்கினார். இன்னொரு பொட்டலத்தையும் எடுத்துத் தந்தார். 

வெளியில் வந்ததும் கையைக் கழுவிக்கொண்டார் நாஞ்சில். கதவைச் சாத்திவிட்டு வந்த அனந்தன் சாமிகள் கேட்டார் “என்னன்னு தெரிஞ்சுதா சார்?”

“தேனோட தித்திப்புல ஒண்ணும் தெரியலை.”

அனந்தன் முகம் மலரச் சிரித்தார் “மாங்கொட்டை இருக்குல்ல. அதுக்கு உள்ள ஒரு விதை இருக்கும். அந்த விதையை நுணுக்கியெடுத்த பவுடர் இது.”

கையிலிருந்த இன்னொரு பொட்டலத்தைப் பிரித்து முகர்ந்தார் நாஞ்சில். ஆமோதிப்பதுபோலத் தலையாட்டினார்.

“எம்.பி.பி.எஸ் டாக்டர் மாம்பழ விதைச் சூரணத்தைத் தர்றது விநோதம்தான்.”

“படிச்சது ஒடம்பப் பத்தித் தெரிஞ்சுக்கறதுக்கு. மருந்தெல்லாம் நம்ம கையிலேயே இருக்கு. சரியா பயன்படுத்தனும். அவ்வளவுதான்.”

 


நாஞ்சில் இன்னும் தீவிரமா எழுதறார். பேப்பர் பேனா வெச்சுதான் இன்னும் எழுதறார். நிறைய எழுதணும்ங்கற ஆசை இருக்கு. வேகமும் உழைப்பும் இருக்கு. வயசானமாதிரியே தெரியலை…” முடிப்பதற்கு முன்பே அனந்தன் சாமி கையை உயர்த்தினார்.

“அவர் இயல்பு அது. அப்பிடித்தான் இருப்பார். கேட்டேன்னு சொல்லுங்க” நாஞ்சிலின் முகத்தை நினைவுபடுத்திக்கொண்டதுபோல ஒருதரம் கண்களை மூடினார். 

இப்போது அதைப்பற்றிக் கேட்கலாமா என்ற எண்ணம் எழுந்தது. 


ராமகிருஷ்ணா மருத்துவமனை வாசலில் மணியைப் பார்த்தபோது மிகவும் சோர்ந்திருந்தார். பருத்த பூவரசின் அடிமரத்தைச் சுற்றி அமைத்தத் திண்டில் உட்கார்ந்திருந்தோம். தரையில் பறவைகளின் எச்சங்கள். பம்பரக்காய்கள் சிதறிக் கிடந்தன. 

“ஒண்ணுமே புரியலை” மணியின் குரல் இடறியது. 

இரண்டு மணி நேரத்துக்கு முன்பாக அலைபேசியில் அழைத்திருந்தார் “ராமகிருஷ்ணா ஆஸ்பத்திரில இருக்கேன். அனந்தன் சாமியை அட்மிட் பண்ணிருக்காங்க. நீங்க கொஞ்சம் வர முடியுமா?”

மருத்துவமனையை சென்றடைந்தபோது வாசலிலேயே காத்திருந்தார். கண்கள் கலங்கி முகம் சோர்ந்து தளர்ந்திருந்தார். உடனே எதுவும் கேட்கவில்லை. அருகிலிருந்த உணவகத்துக்கு அழைத்துச் சென்றேன். முகம் கழுவி தேநீரைப் பருகிய பின் சற்றே அமைதியானார்.

“முன்னாடியே சொன்னேன்ல. இப்ப கொஞ்ச நாளா தொந்தரவு அதிகமாயிருச்சு. போன மாசம் நான் போயிருந்த சமயத்துலகூட நாலஞ்சுபேர் வந்திருந்தாங்க. பேச்சே வித்தியாசமாதான் இருந்துச்சு. அதுக்கு முன்னாடி ஒருநாள் ராத்திரி கல்லெடுத்து அடிச்சிருக்காங்க. ராத்திரில முன்னாடி இருக்கற வேலியை உடைச்சிட்டு உள்ளபோயி குருவோட வெங்கலச் சிலைக்கு முன்னால உக்காந்து தண்ணி அடிக்கறது, சத்தம் போடறதுன்னு தினம் பிரச்சினைதான். ஆனா இவர் சீரியஸா எடுத்துக்கல…”

குரு சைதன்யாவின் மறைவுக்குப் பிறகு குருகுலத்தில் ஆட்கள் குறைந்துவிட்டனர். மே மாதத்தில் மூன்று நாட்கள் நடக்கும் குரு பூஜையின்போது மட்டுமே குருகுலத்தில் ஆள்நடமாட்டம். மற்றபடி அனந்தன் சாமி மட்டுந்தான். அவ்வப்போது ஒன்றிரண்டு பேர் மைசூரிலிருந்தோ அல்லது கோட்டையத்திலிருந்தோ வருவதும் போவதுமாயிருப்பார்கள். குருவின் புத்தகங்கள், ஓவியங்கள், பழம்பொருள் சேகரிப்புகளையெல்லாம் கோட்டையத்துக்கே எடுத்துப்போய்விட்டார்கள். அனந்தன் சாமிக்கு இங்கிருந்து போவதில் விருப்பமில்லை. 

“உள்ளூர் கட்சிக்காரங்க, ரியல் எஸ்டேட் ஆசாமிக எல்லாருமா சேர்ந்து நெருக்கினதுக்கப்பறமும் ஒண்ணும் நடக்கலை. மொதல்ல எடத்தை வெலைக்கு கேட்டாங்க. அப்பறமா வாடகைக்கு மட்டும் குடுங்கன்னும் மெரட்டிப் பாத்தாங்க. ஒண்ணும் நடக்கலை. எதுவும் செய்யமுடியாது. டிரஸ்டோட சொத்து. விக்க முடியாதுன்னு சொல்லியாச்சு. ஆனா கேக்க மாட்டேங்கறாங்க.”

இப்படி எதுவும் நடக்கக்கூடும் என்று மணிக்கு அச்சம் இருந்தது. “அவர் மட்டுந்தான் இருந்தாரா?”

“அப்பிடித்தான் சொல்றாங்க. ஆனா எனக்குத் தெரிஞ்சு ஆறு மாசமா ஒரு பையன் கூட இருக்கான். பதினெட்டு இருபது வயசு இருக்கும். ஒண்ணு ரெண்டு தடவை நானே பாத்துருக்கேன். சுறுசுறுப்பா இருப்பான். வேலையெல்லாம் செய்வான். கோட்டயத்துலேர்ந்து வந்ததா சொன்னாரு. ஆனா அவனைப் பத்தி இப்ப ஒண்ணும் தெரியலை.”

“எப்ப நடந்துச்சு?”

“நேத்து சாயங்காலம் ஆறு மணின்னு சொல்றாங்க. இருட்டு. கிச்சன்ல இருந்திருக்கார். முன்னாடி வௌக்கு எரிஞ்சிருக்கு. என்னவோ சத்தம்கேட்டு வெளிய வந்திருக்கார். யாரும் இல்லேன்னு உள்ள போறப்ப மண்டையில அடிச்சிருக்காங்க. திரும்பினதுமே வயித்துல குத்திட்டு ஓடிட்டாங்க.”

சாலையிலிருந்து உள்ளே நுழையும் வாசலிலிருந்து சமையல் கூடத்தை அடைய நானூறு அடி தொலைவு இருக்கும். தெற்கில் வேலியை ஒட்டி பைன்மரக்காடு. அதற்கு நடுவில் ஒன்றிரண்டு மரவீடுகள் உண்டு. இப்போது யாரும் தங்குவதில்லை. அங்கிருந்து கீழே வந்தால் குருவின் சமாதி, நூலகம். அதன்பிறகு ஓவியக்கூடம். இன்னும் கீழே பிரார்த்தனைக்கூடமும் விடுதியும். கிழக்குப் பக்கத்தில் தேயிலைச் சரிவு. எனவே எந்தப் பக்கத்திலிருந்தும் யாரும் எதையும் பார்க்க முடியாது. கூச்சலிட்டாலும் கேட்க முடியாது. ஆனால் சமையல்கூடத்தின் வடக்குப்புறத்தில் வேலிக்கு அப்பால் வீடுகள் உண்டு.

“அந்தப்பக்கமா வீட்ல இருந்தவங்க யாரோ சத்தம் கேட்டு எட்டிப் பாத்துதான் தெரிஞ்சிருக்கு. உடனே டவுன் ஆஸ்பத்திரில சேத்துட்டு என்னைக் கூப்பிட்டாங்க. ஃபர்ஸ்ட் எய்ட் பண்ணினாங்க. ஆனா கோயமுத்தூர் அழைச்சிட்டு போயிடுங்கன்னு டாக்டர் சொன்னதும் கோட்டயத்துக்கும் மைசூருக்கும் தகவல் சொன்னேன். ராத்திரியே ஆம்புலன்ஸ் வெச்சு இங்க அழைச்சிட்டு வந்துட்டேன்.”

அறைக்குச் சென்றபோது அனந்தன் சாமி உறக்கத்திலிருந்தார். தலையில் கட்டு. இடது இடுப்பில் கத்திக் குத்து என்று மணி சொன்னார். போர்த்தியிருந்ததில் எதையும் பார்க்கமுடியவில்லை. அறையின் மூலையிலிருந்த அலமாரியின் கீழ்த் தட்டில் அகல் விளக்கு ஒளிர்ந்தது. இரண்டு செம்பருத்திகள். 

மைசூரிலிருந்து வந்திருந்த பிரசாத் சாமிகளிடம் விடைபெற்றுக்கொண்டு வெளியே வந்த பிறகு மணியிடம் கேட்டேன் “போலீஸ் பிரச்சினை ஒண்ணும் இல்லையே?”

“விசாரிக்க வர்றதா சொன்னாங்க. ஆனா இவர் ‘எனக்கு எதுவும் தெரியலை. யாரோ மண்டையில அடிச்சாங்க. திரும்பினேன். வயித்துல குத்தினமாதிரி இருந்துது. அதுக்கப்பறம் எதுவும் தெரியலைன்னு’தான் சொல்றார்.”

“நேத்து அந்தப் பையன் அங்க இருந்ததை யாரும் பாத்தாங்களா?”

“தெரியலை. ஆனா அவன் இப்ப எங்கேன்னு தெரியலை.”

“அவன்தான்னா இவருக்கு சுலபமா அடையாளம் தெரிஞ்சிருக்கும். அவனை வெச்சு யாராவது செஞ்சிருக்கவும் வாய்ப்பு இருக்கு.”

வட்டத் திண்ணையில் மறுபடியும் உட்கார்ந்தபோது மணி வருத்தத்துடன் சொன்னார் “நல்லவேளை. ஒண்ணும் பிரச்சினையில்லை. காயம் ஆழமா படலை. ஆனா மண்டையில அடி. ரெண்டு நாள்ல சரியாயிருவார். வேற ஏதாவது ஆயிருந்தா… பயமா இருக்கு. ஊட்டியில அப்பிடியொரு இடம் இருக்கறது எல்லார் கண்ணுக்கும் உறுத்துது. இதுமாதிரி என்னவாச்சும் செஞ்சு பயமுறுத்தப் பாக்கறாங்கபோல.”

முன்பொருமுறை அனந்தன் சாமியிடம் கேட்டது நினைவுக்கு வந்தது “நடராஜ குரு, சைதன்யா, நீங்க எல்லாருமே பயில்வான்மாதிரி திடமா இருக்கீங்களே?”

“யோகத்துக்கு உடம்பு முக்கியம். உடம்பை திடமா வெச்சுக்கலேன்னா மத்தது எதுவும் சரியா வராது.”

“அவரோட உடம்புங்கறதுனால தேவலை. அதோட வந்தவனையும் அவர் சுலபமா சமாளிச்சிருப்பார். அவருக்குத் தெரியவும் வாய்ப்பிருக்கு. இல்லேன்னா அவர் சொல்றமாதிரி இருட்டுல அடையாளம் தெரியாமயும் போயிருக்கலாம்.”

“அவருக்குத்தான் தெரியும். ஆனா சொல்லமாட்டார்னுதான் தோணுது” மணி யோசனையுடன் சொன்னார்.

மணி சொன்னதுபோல அவர் விசாரணையிலும் எதையும் சொல்லவில்லை. நான்கு நாட்கள் கழித்து மருத்துவமனையிலிருந்து நீங்கியபோது சந்தித்தேன். உடல்நிலை இன்னும் தேறியிருக்கவில்லை. தலையில் கட்டு. அடையாளம் கண்டு புன்னகைத்தார். 

துறவிகள் இருவருடன் காரில் புறப்பட்டுப் போன பின்பு மணியை பேருந்து நிலையத்துக்கு அழைத்துச் சென்றேன்.

“அவர் ஊட்டிக்குப் போகலை. இப்போதைக்கு வேண்டாம்னு கேரளாவுக்கு அழைச்சிட்டுப் போறாங்க. போலீஸ் விசாரணயிலயும் எதுவுமே தெரியலைன்னு சொல்லிட்டார். மறுபடியும் இங்க வருவார்னு தோணலை” என்று மணி சொன்னபோது கண்கள் கலங்கியிருந்தன. 

 


லிபெருக்கியில் ரயிலின் அறிவிப்பொலி கேட்டது.  

“உங்களுக்கு நேரமாயிடுச்சி” அனந்தன் சாமி கைகளைப் பற்றினார். அந்தக் கைகளின் இறுக்கம் என்னை தளுதளுக்கச் செய்தது. அவரது அறையில் உணர்ந்த அதே வாசனை. அதே சிரிப்பும் கனிவும்.  

“உங்களைப் பாத்தது ரொம்ப நிறைவா இருக்கு. கூடவே கொஞ்சம் சங்கடமாவும் இருக்கு” சொல்லமுடியாமல் திணறினேன்.

“எதுக்கு சங்கடம்? மறுபடி எங்காயவது இதுமாதிரி பாக்கலாம்” எழுந்துகொண்டார்.

“ஒரு விஷயம் டாக்டர். இப்பவே கேட்டுடறேன். நீங்க பதில் சொல்லக்கூட வேணாம். ஆனா நான் கேக்கணும்.”

அவர் என் முகத்தையே சிரித்தபடி பார்த்துக்கொண்டிருந்தார்.

“அன்னிக்கு என்ன நடந்ததுன்னு நீங்க ஏன் யார்கிட்டயும் சொல்லலை?”

அவர் முகத்தில் ஒருகணம் அந்தச் சிரிப்பு மறைந்தது. ஒருகணமே. பிறகு மீண்டும் அதே சிரிப்பு.

“எதுவுமே நடக்காதபோது யார்கிட்ட என்ன சொல்லணும்?” குரலில் இறுக்கம். சற்றே கண்டிப்புடன் சொன்னதுபோல இருந்தது.

அவர் செல்வதைக் கண்டு அப்படியே நின்றிருந்தேன். ஏதோவொன்று என்னை அங்கிருந்த நகரவிடாமல் செய்தது. அவரிடமிருந்து கிடைக்கவேண்டிய ஒன்றை பெறாமலே போய்விடுவேனோ என்ற பயம். படபடப்புடன் பார்த்துக்கொண்டே நின்றேன். 

ஏதோ நினைவு வந்ததுபோல நின்றார். என்னை நோக்கி திரும்பி வந்தார். நெருங்கிக் தோளைத் தொட்டார் “விடாம எழுதுங்க. சந்தோஷமா இருங்க.”

இப்போது அவரது முகத்தில் அதே சிரிப்பு. நான் விரும்பியதைப் பெற்றுக்கொண்ட நிறைவுடன் நடைமேடைக்கு நடந்தேன்.


-எம்.கோபாலகிருஷ்ணன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.