நகுலன் – குதிரை மொழியில் எழுதியவர்

ஞ்சள் நிறப் பூனைக்குட்டி, சுசீலா, நாய்கள், மதுக்கோப்பை, அடர் இருண்மை போன்றவற்றின் கலவைதான் நகுலன் என்று பேசுவதுண்டு. நகுலனை ஆராதிப்பவர்களும் மனப்பிறழ்வைக் கொண்டாடிய நகுலனை இவ்வாறு சொல்வதை ஏற்கனவே செய்தனர். நகுலன் எழுத்தாளரே அல்லர் என்று தள்ளி விடும் முயற்சிகூடப் பிழையானது. உன்னத எழுத்தாளர் என்று ஒரே குரலில் கொண்டாடிவிடவும் முடியாது. பூடகமானவர்; அதேநேரம் புரிந்து கொண்டவர்களுக்கு வெளிச்சமானவர். படைப்புலகில் தவிர்க்க முடியாதவர் என்பன போன்ற உரையாடல்களும் உள்ளன. எதிரும் புதிருமான இவை அனைத்திற்குமே காரணங்கள் இருக்கின்றன.

வாழ்வு என்பது மாறுதலுக்கு உட்பட்டது. வாழ்க்கைப்பயன் பற்றி முன்கூட்டியே ஒன்றும் சொல்ல முடியாது. ஆனால், மனமானது நிலையான ஒன்றை நம்புகிறது; விரும்புகிறது. உண்மையில் வாழ விரும்பினால் பாதுகாப்பின்றி இருப்பதற்குத் தயார்ப் படுத்திக் கொள்ள வேண்டும். அதாவது பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றால் வாழாமல் இருப்பதுதான் வழி – நகுலன் வாழாமல் இருக்கும் கலையை விரும்புவது அதிசயமன்று. இதைச் சொல்லத் தன் எழுத்தைப் பயன்படுத்தினார். வாசகன் திணறித்தான் போகிறான்.

நகுலன் மகாபாரதத்தில் வரும் ஒரு கதாபாத்திரம், குதிரைகளைப் பராமரிப்பவன். குதிரையின் மொழியறிந்தவன். டி.கே. துரைசாமி நகுலனாக ஆனதற்குச் சில காரணம், அவர் தன் எழுத்துகளைக் குதிரை மொழியில் எழுதினார் என்பதுண்டு. ஒரு வகையில் சரிதான். அவரின் இருண்மை எழுத்து அவருக்கு மட்டுமே புரிந்தது. வாசகன் புரிந்துகொள்ள மொழி கற்க அவகாசம் தேவைப்பட்டது. “எனக்கு யாருமில்லை / நான் / கூட…” என்பதும் இதனால்தான்.

“வந்தவன் கேட்டான் / என்னைத் தெரியுமா? / தெரியவில்லையே / உன்னைத் தெரியுமா? என்று கேட்டேன் / தெரியவில்லை என்றேன். பின் / என்ன தான் தெரியும் என்றான் / உன்னையும் என்னையும் தவிர / வேறு எல்லாமே தெரியும் என்றேன்.” ஆங்கிலப் பேராசிரியரான நகுலன் “நான் என் கவிதைகளில் வாழ்கிறேன்” என்றறிவித்தார். ஒருவிதமான சித்தர் மரபின் வெளிப்பாடு. இது தமிழுக்குப் பழக்கமானது. உலகத்தைத் துறப்பதுபோல் பற்றுவது. இவர் தன் எழுத்துகளை வல்லமையோடு பயன்படுத்தலாம் என்று நம்பினார். எல்லோரையும் நகுலனாக மாற்றும் முயற்சி இது. வார்த்தைகளை வைத்துக்கொண்டு கழைக் கூத்தாடுவது என்பது சரியானதில்லை. மிக எளிமையாக எழுதுவதே வலிமையானது என்று நம்பினார். ஆனால், எழுத்தை வாரியிறைத்துவிட்டு வேண்டியதைப் பொறுக்கிக்கொள் என்பது மாதிரியான ஆணை இதில் இருந்தது. சிலநேரம் சொற்கள் அவரிடம் அடம் பிடித்தன. அடக்க இயலாதவராய் அதன் போக்கிற்கு விட்டுவிட்டார். சோழிச் சிதறல்களாய்க் கிடந்ததை வாசகன் பொறுக்கிக்கொள்ளும் கடின வேலையைத் தந்தார்.

“இருப்பதற்கென்றே வருகிறோம் / இல்லாமல் / போகிறோம்…” வாசிப்பில் உள்வாங்க முடியாத கவிதைகள் இல்லை. நகுலனை வாசிக்க நாமும் நகுலனாக மாறவேண்டும் என்பது ஒருவித வன்முறைதான். ஆனால், புரிய வைப்பது என் வேலையில்லை என்பது அவரது கட்சி. அடிக்கடி வாசகனோடு பிணக்குக் கொள்ளும் தன்மைகூடப் பெரிதில்லை. வினாவில் சமாதானமாகிவிடும்தான். அவரது தனிமை விரக்தி அன்று. முதுமையில் வாழ விருப்பமின்றிச் சாவதற்கு மனுப்போட்டு விட்டுக் காத்திருப்பது மாதிரிதான்.

எல்லா இலக்கியங்களும் நம்முன் இருப்பதையே சொல்கின்றன. புறநுழைவு இல்லை. புதிதாக ஒன்றும் இல்லை என்பது நகுலனின் நினைப்பு. உண்மையில் நகுலனின் மனம் சதா கொதி நிலையிலேயே இருந்திருக்கிறது. மதுக்கோப்பைகளில் புத்தர்களைக் காண விரும்பினார். கிட்டத்தட்ட இன்னொரு மெளனிதான். வாக்குமூலத்தில் சாட்சியாய்க் காணக் கிடைக்கிறது. அவரது சொற்கள் சிறைபட்டிருக்கலாம். எல்லாமே சுதந்திர வெளியில் உலவின. தம் பாசக்காரக் குழந்தைகள் பரந்த வெளியில் புழுதி படியப்படிய உடைகளைக் கிழித்துக் கொண்டு விளையாடுவதை ஒரு வித்யாசமான தந்தையாய் நின்று ரசித்தார். அங்கு சுற்றி இங்கு சுற்றி மரணத்தில் வந்து நின்றார். மரணத்தைக் கொண்டாடுதல் – மரணம் அவருக்குப் புரிந்திருந்தது. மரணம் இழத்தல் அன்று. இருப்பு. “நீரில் அந்நிலவு உடைகிறது – மீண்டும் உடைகிறது. ஆயினும் அது முழுமையாய்” என்னும் ஜென். மரணமில்லாப் பெருவாழ்வு என்பதன்று. மரணத்தை ஆராதித்து அதற்குள் அடங்குவது. நகுலன் அத்வைதியாகக்கூட இருக்கலாம். இருப்பது, மறைவது என்ற நிலையாமையை நிலைத்த ஒன்றாகக் காட்டுவது தான். சம மனிதன் மீதான அக்கறை சிறிது சிறிதாகக் குறைந்து வருகிறது. உலகியல் என்னவாய் இருக்கிறது? இராமச்சந்திரன் கவிதையின் மூலம் சொல்கிறார்.

“இராமச்சந்திரனா / என்று கேட்டேன் / இராமச்சந்திரன் என்றார் / எந்த இராமச் சந்திரன் / என்று நான் கேட்கவில்லை / அவரும் சொல்லவும் இல்லை.” நகுலனின் தனிமை விருப்பம். அவ்வாறு சொல்ல வைத்தது. அறையின் மெல்லிய இருட்டும்; புழுக்கமும், மதுக் கோப்பைகளும் கொஞ்சம் சொற்களுமாய் அடைந்து கிடந்த நகுலன் விரிந்த ஆகாயத்தைப் பார்க்க எம்பி எம்பிக் குதித்தார். உண்மையில் தன் அறையின் ஜன்னல்களை இறுக்கமாகச் சார்த்திவிட்டுத்தான் இப்படிச் செய்தார். தன்னைத்தானே பூட்டிக்கொண்டு உட்கார்ந்திருப்பது மாதிரி. மனிதர்கள் இருக்கிறார்கள்; மலர்கள் இருக்கின்றன; ஆகாயம், நட்சத்திரங்கள் இருக்கின்றன. இப்படி எண்ணற்ற அழகுகள் சூழ இருக்கும்போது நகுலனால் ஒப்புக்கொள்ள முடியவில்லை. உலகம் அழகற்றதுதான் என்பதைத்தான் மிகுந்த பிரயத்தனத்தோடு சொல்ல வந்தது. மாறுதலுக்கு அப்பால் செல்க. அகத்தே ஆழ்ந்து அனுபவித்துக்கொண்டு. இதை நகுலன் கடுமையான விஷயமாக்கியிருக்க வேண்டியதில்லை என்பது ஒரு கருத்து.

தனியாக இருக்கத் தெரியாத – இயலாத ஒருவனும் ஒரு எழுத்தாளனாக இருக்க முடியாது என்பார். உண்மையில் தனிமை என்பது பிரமைதான். நம்மைச் சுற்றி ஏராளமாகச் சுழல்கின்றன. மேன்மைகளின் அழகு கண்டு தவம் கலைக்காத முனிவன்போல் மரக்கட்டையாக இருப்பதில் நியாயம் கண்டார். ஒரு துளி மது என்பதே பிரபஞ்சம்தான் என்பது போலப் பேசினார். மலை உச்சியை அடைய வேண்டுமானால் எங்கிருந்து தொடங்குவது? மலை உச்சியிலிருந்துதான். ஒரு பூனையோடு மட்டுமே வாழ்ந்தவருக்கு வாழ்க்கை பற்றிய அதீதப் புரிதல் இருந்தது. அவருடைய சிக்கலும் அதுதான். அதீதப் புரிதல் – காலிக் கோப்பைகள் என்பவை தற்காலிகமானவைதாம் என்பதுண்டு. ஒவ்வொரு சந்திப்பிலும் இதை மகா வாக்கியமாகச் சொல்வதுண்டு.

மௌனத்தை அடையப்பெற்ற பின்னர்த்தான் பேச்சு மதிப்பு மிக்கதாக ஆகிறது. தனிமையில் மனதின் கேள்விகள் இல்லை. பதில்கள் இல்லாத கேள்விகள்கூட உள்ளன. நகுலனின் “சும்மா இருத்தலில்” என்ன நேர்ந்துவிடும்? மனதால் கேள்விகள் கேட்பதை நிறுத்திவிட முடியாதுதான். எப்போதாவது அழுத்தமான கேள்வியொன்றைக் கேட்டுவிடும். பதில்களுக்காக நூற்றாண்டு அலைச்சலும் நேர்ந்துவிடலாம். மனதை வெற்றிடமாக வைத்துக் கொள்வது நகுலனுக்குப் பிடித்தமானது. ஒவ்வொரு சந்திப்பிலும் இது விளங்கும். “நகுலன் லேசுப்பட்டவரல்லர்” என்ற பிரமிப்புத் தவிர்க்க இயலாதது. அற்ப நிகழ்வுகளுக்கான பெரிய உரையாடல்கள் என்பவை அபத்தம். அற்பமான விஷயங்களுக்கு விடைகள்தேடி அரிய பொக்கிஷங்களை இழந்த சித்தார்த்தன் ஒருபோதும் சரியானவரில்லர். நகுலனிடம் பேசிக் கொண்டிருந்தால் நாமும் ஒரு கட்டத்தில் மெல்லமெல்ல மன இறுக்கமுள்ள நகுலனாகவே வடிவம் கொள்வோம். ஒரு கனவிற்குப் பின்னரான விழிப்பின்போது வரைந்த சித்திரங்கள் எனச் சொல்வது சரியாக இருக்கும். நீயாக இருப்பது மதிக்கப்படுவதில்லை என்பதை அவர் அறிந்தே இருந்தார்.

“நாய்கள்” வசைச்சொல் அல்ல. நாய்கள் ஒரு தத்துவக் குறியீடு. மனித சமூகத்தின்மேல் வைத்த விமரிசனம். அது ஒரு புத்தகத்தின் பொருளடக்கம்போல. நகுலன் சொல்கிறார் “நான் ஒருபோதும் நகலெடுப்பதை விரும்புவதில்லை. நான் அசல்” உண்மையாகப் பார்த்தால் அனைத்துமே அவருக்கு நகலாகத்தான் தெரிந்தன. மனிதன் முழுவதுமாக மிருகம்தான். வெகு சொற்ப மனிதர்களையே மாபெரும் மனிதக் குலத்தின் பிரதிநிதிகளாகக் கொண்டு முடிவுகள் தருகிறார். “நகுலன் அப்பத்தைப் பிட்டுத் திராட்சை ரசத்தை விழுங்குவார்” என்று பிரமிள் சொல்வது சரிதான்.

உலகத்தில் மகிழத்தக்கது எதுவுமே நம் மரபில் இல்லை என்பதை வெகு சாதாரணமாகச் சொல்லுவார். நிழல் பிம்பங்களை ஆராதிக்கும் வழக்கத்தை ஏற்படுத்தியது நகுலன்தான். இதில் ஒரு தனி ருசி வாசகனுக்குக் கிடைக்கச் செய்ததையும் நகுலன் நேர்த்தியாகச் செய்தார். நகுலனும் அதில் அமிழ்ந்தார். மனித சமூகம் எல்லாம் தெரிந்ததாகப் பம்மாத்துப் பண்ணிக் கொண்டிருக்கிறது என்ற எதிர் உளவியலை முன்வைத்தார். மனதின் புரிபடாத ஓசையை விரும்பினார். உலகில் இருங்கள்; ஆனால், உலகத்தவராக இருக்க வேண்டாம். உலகத்தில் இருங்கள்; ஆனால் உலகம் உங்களுக்குள் வந்துவிடக்கூடாது.

அவரது “நினைவுப்பாதை”யாகட்டும், வாக்குமூலமாகட்டும், நாய்கள் “நவீனன் டைரி”, “இவர்கள்”, “சில அத்யாயங்கள்” அந்த மஞ்சள் நிறப் பூனைக்குட்டி, அவரது கவிதைகள், எல்லாமே திரும்பத் திரும்ப ஒரே விஷயத்தைப் பேசின. வாசகர்கள் வேறுவேறு வடிவங்களைக் கற்பித்துக்கொண்டு வாசிக்கப் பழகியிருந்தனர். இருத்தலின் ஆச்சர்யம் என்பதை வாசகனுக்குப் புரியவைத்தார்.

“சாவின் சமீபத்தில்கூட இவ்வுலகம் எவ்வளவு வசீகரமாக இருக்கிறது. ஆகாயமே கூரையாக / பூமியே வீடாக / ஐப்பசியில் அடைமழை / சூறைக்காற்று / மனிதன் ஒரு நிரந்தர நோயாளி / இந்த உலகமே ஒரு பெரிய ஆஸ்பத்திரி” என்றதும் நகுலன்தான். குதிரைமொழிகூடப் பின்னர் இடைவிடாத வாசிப்புவழி வாசகனுக்குப் புரிந்தது. நிறைய விமரிசனங்கள் இருந்தாலும் நகுலனின் முரண்கள் அழகானவை. பிறப்பு இறப்பு ஒவ்வொன்றையும் சாட்சியாக இருந்து கவனிக்க வேண்டும். நகுலனின் செய்தி இதுவாகத்தான் இருக்க வேண்டும்.

“பந்தல் கொடியைப் / படரவிட்டார் / பட்ட மரத்தை வெட்டினார்” – நகுலன்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.