நகுலனுடனான நேர்காணல்…

ழுத்தாளர் நகுலனைக் கேரள மாநிலம் திருவனந்தபுரம் கௌடியார் தெருவில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து, நூலாசிரியர் கண்ட நேர்காணலில், நூலாசிரியரால் கேட்கப்பட்ட வினாக்களும் நகுலனால் தரப்பட்ட பதில்களும் அவரவர் பேச்சு நடையிலேயே தொகுத்துத் தரப்பட்டுள்ளன. (நேர்காணல், ஒலிப்பதிவுக் கருவி கொண்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.)

 

நூலாசிரியர்: நகுலன் என்ற புனைப்பெயர் வைத்துக்கொண்டதேன்?

நகுலன்: மாபாரத்திலே குந்தியின் புத்திரர்களான தர்மன், பீமன், அர்ஜுனன் ஆகிய மூவரும் பிரமாதமாப் பேசப்படுவர். ஆனா மாத்திரியின் புத்திரர்களான நகுல, சகாதேவர்கள் முன்னோர் அளவிற்குப் பேசப்படுவதில்லை. இது நேக்கிருக்க எல்லாரும் என்னப் பேச வேண்டும் என்ற ஆச இல்லை. அப்புறம் வேரொரு நண்பரிருக்க, என்ன பண்ணுனாருன்னா, நகுலன் என்ற பெயரை, ந-குலன், ஒரு குலத்தையும் சார்ந்தவனில்லை என்று பிரித்துப் பொருள் சொல்லுவார்.

நகுலன் சாதி வேறுபாட்டுக்கு அப்பாற்பட்டு நிற்கக் கூடியவன். அதனால் அப்பெயர் நேக்குப் பிடிச்சது.

 

நூலாசிரியர்: தங்கள் நாவலில் இடம்பெறும் நாய், பூனை பற்றி…

நகுலன்: மனுஷனுக்கும் நாய்க்குமான உறவு என்ன? நாய் ஒரு குறியீடு. மனுஷனோடயே ஒட்டி உறவாடுது. தர்மத்தின் மாற்றுருவம். மனுஷனின் கடைசிக் காலம் வரை வருவது.

பூனைக்கு இருக்கிற இடந்தான் முக்கியமாகப்படுமே ஒழிய மனுஷா மேலே பற்றே கிடையாது என்று சிலர் சொல்லுவா. ஆனா அது பொய். எப்படின்னா இங்கே ஒரு வெள்ளை மஞ்சள் நிறப்பூனை இருந்தது. அது நான் போர இடத்துக்கெல்லாம் வரும். சான்றா – நான் உங்களோட பேசிக்கிட்டு இருக்கேன்னு வச்சுக்கோங்கோ. அது பின்னங்காலை இப்படியே வச்சிக்கிணு (தமது கையை அதுபோன்று வைத்துக் காட்டுதல்) என்னையே பாத்துக்கொண்டே இருக்கும். அதப் பாக்க ஒரே ஆசையா இருக்கும். இத வச்சே ஒரு நாவல் எழுதினேன். ‘மஞ்சள் வெள்ளை நிறப் பூனை’ன்ற பெயருல, அது பிரசுரமாகலே.

 

நூலாசிரியர்: இகர முதல்வி என்பது யார்?

நகுலன்: அது ஒரு பிரைவேட் சிம்பள். எனக்கு ஒரு பொண்ணுகிட்ட ஈடுபாடு. எங்களுக்குள்ள உடல் உறவே கிடையாது. அவளுடைய பெயர் இருக்க ராஜேஸ்வரின்னு வச்சிக்கோங்கோ. அப்போ ராஜேஸ்வரின்னா எல்லாருக்கும் புரிஞ்சுரும். அதுக்கோசரம்தான் இகர முதல்வின்னு சிம்பலப் பயன்படுத்திருக்கேன்.

 

நூலாசிரியர்: தங்கள் நாவலில் தத்துவ அறிஞர்கள் பலர் பெயர்களும் தத்துவங்கள் பலவும் இடம் பெற்றுள்ளனவே, அது பற்றித் தங்கள் கருத்து.

நகுலன்: என் நாவல்களில் தத்துவக் கருத்துக்கள் இடம் பெறுகின்றதற்குக் காரணம், நான் வாசித்த தத்துவக் கருத்துக்களடங்கிய புத்தகங்கள், பழகிய நண்பர்கள் கூறிய தத்துவ விசயங்கள் போன்றவற்றின் தாக்கமாக இருக்கும். வலிய எழுத வேண்டும் என்று எழுதப்பட்டதல்ல. அத்தோட நான் எம்.ஏ. படிக்கும்போது தாண்டவராய சுவாமிகளோட கைவல்ய நவநீதம் என்ற நூலைப் பாடமா வச்சிருந்தாங்க. அதுல இருக்கிற பாடல்கள் எனக்கு ரொம்பப் பிடிக்கும்.

 

நூலாசிரியர்: உங்களது படைப்புகள் எல்லாம் உங்களது அனுபவமா?

நகுலன்: அனுபவம் என்பதை விட என் மூலம், என் நாடிமூலம் ஒரு கிரியா சக்தி ஊடகமாக இருந்து என்னச் சிருஷ்டிக்க வைக்கிறது. நானா சிருஷ்டிக்கவில்லை: அதுவே சிருஷ்டித்துக் கொள்கிறது.

 

நூலாசிரியர்: திருமணம் செய்துகொள்வது பற்றி…

நகுலன்: (‘பொருத்த’ என்று செல்லமாக விளிக்கும் கோமதியம்மாளைப் பார்த்து) என்னப் பாத்துக்க இந்த அம்மா இருக்கா. எங்களுக்கு வெம்பாயான்ற கிராமத்துல சொத்து இருந்தது. அந்தச் சொத்த இந்த அம்மா வீட்டுக்கு எங்கப்பா கொடுத்தாங்க. அந்த விசுவாசத்துல இந்த அம்மா என்னப் பாத்துக்கிறாங்க. நேக்கு ஏந்தனிமையைப் போக்க, நிறைவளிக்க புத்தகங்கள் உதவின. அப்புறம் நெறையக் குடிப்பேன். நெறைய நண்பர்கள் உண்டு. கூடப் பெறந்தவா எல்லாம் கல்யாணமாயிப் போயிட்டதால அம்மா அப்பாக்குத் துணை வேண்டியிருந்தது. அதனால கல்யாணஞ் செஞ்சுக்கிரல.

 

நூலாசிரியர்: உங்களுக்கு கல்யாணம் செஞ்சுக்கிரணும்னு விருப்பமே வரவில்லையா?

நகுலன்: வந்தது. பம்பாயில் இருந்த எஞ்சகோதரி, சரோஜான்னு பேரு, எனக்கு ஒரு பெண் பாத்தா. நானும் அந்தப் பொண்ணப் பாக்கப்போனே. ஏங்கிட்ட அந்தப் பொண்ணோட அம்மா என்ன வேல பாக்குற எனக்கேட்டா. நான் English Tutor வேல பாக்குறேன்னு சொன்னேன். இதுலாம் ஒரு வேலையா? வேணாம் போன்னு சொல்லிட்டா. சரோஜாட்ட பொண்ணோட அம்மா எப்படியிருந்தாலும் பரவாயில்ல. நான் அந்தப் பொண்ணையேக் கட்டிக்கிறேன்னு சொன்னே. ஆனா, கடெசீல அந்தப்பெண்ண வேறே ஆளுக்கு ரெண்டாந்தாரமா கட்டிக் கொடுத்திட்டா. பெறகு கல்யாணம் பத்தி யோசிக்கல.

 

நூலாசிரியர்: எப்ப எழுத ஆரம்பிச்சீங்க?

நகுலன்: Sixth Form. Sixth form ன்னா பத்தாம் வகுப்புன்னு வச்சுக்கோங்க. வயது சரியா நினைவுப்படுத்திச் சொல்ல முடியல. அப்புறம் பாருங்கோ. நாம பாவஞ் செஞ்சா நகரத்துக்கும் புண்ணியஞ் செஞ்சா கடவுள்ட்டையும் போவோம்னு எல்லாரும் சொல்றாளே! அது உண்மையா? அப்படிச் சொல்றவாளுக்கு அது என்ன நேரடியாகக் கிடச்ச அனுபவமா? செத்த பின்னால என்ன சம்பவிக்கும்னு யாருக்குத் தெரியும். நம்ப நம்புறோம். நம்பாதவளும் சந்தோஷமாத்தானே இருக்கா. அப்புறம் போன ஜென்மத்துல பாவம் செஞ்சா இந்த ஜென்மத்துல துன்பத்த அனுபவிப்பம்னு சொல்றத நாம ஒத்துக்குவோம்னே வச்சுக்குவோம். இந்த ஜென்மத்துல மனசு அறிஞ்சு எந்தத் துன்பத்தையும் எவருக்கும் தந்ததில்லை. அப்படிப்பட்ட நான் போன ஜென்மத்துல எப்படிப் பிறருக்குத் துன்பம் கொடுத்திருப்பேன். எனக்கு ஆண்டவன் ஏன் தொடர்ந்தாற்போல துன்பத்தக் கொடுக்கிறான்.

 

நூலாசிரியர்: அப்பா, அம்மா பற்றிக் கொஞ்சம் சொல்லுங்களேன்.

நகுலன்: அம்மா எம்மேல ரொம்பப் பிரியமா இருப்பாங்க. நான் கொஞ்சம் வெளில போயிட்டு வர லேட்டாயிடுத்துன்னா கொஞ்ச நேரம் பாப்பாங்க. அப்பொறம் அழ ஆரம்பிச்சுருவாங்க. நான் சாப்புடற போது பக்கத்துலயே இருப்பாங்க. அப்பா மர்ம நாவல் நெறய வாசிப்பாரு. எனக்குங் கொஞ்சம் புத்தகம் வாங்கித் தருவா. அம்மாவுக்குப் பூர்வீகம் கும்பகோணம். அப்பாவுக்குத் திருவனந்தபுரம்தான். எனக்குப் பதினெஞ்சு வயசுலயே இங்க வந்துட்டோம். அப்பாவோட அப்பா தாசில்தாரா இருந்தாரு. அவரோட அப்பா ஜட்ஜா இருந்தாரு. அவுங்கள்ளாம் ரொம்ப நல்லா இருந்தா.

 

நூலாசிரியர்: உங்களோட அப்பா, அம்மா பேரு என்ன?

நகுலன்: அம்மாவோட பேரு பார்வதியம்மா. அப்பா பேர் கிருஷ்ணய்யர். அண்ணே ஒருத்தர். தம்பி மூனுபேர். தங்கச்சி ரெண்டு பேர். அமெரிக்கால்ல ஒருத்தி செத்துட்டா. பேரு திரிசடை. நல்லா கவிதை எழுதுவா. புத்துநோய் வந்து செத்துட்டா. அவளோட கவிதைப் புத்தகங்கள் கூட இப்ப ஒன்று வந்திருக்கே. (கூறியதும் எழுந்து சென்று அப்புத்தகத்தை அலமாரியிலிருந்து எடுத்துவந்து கொடுத்தல்) மற்றொரு தங்கச்சி பேரு சரோஜா. அவா வீட்டுக்காரு பேரு ராமதாஸ். இப்ப கல்கத்தாவுல இருக்கா. அண்ணே டெல்லில ஆயில் கம்பெனில வேலை பார்த்தார். நெறையச் சம்பளம். அவருக்கு ரெண்டு பையன்கள். இப்ப ரெண்டும் அமெரிக்காவுல இருக்கா. அண்ணே கடைசியில ரொம்பக் கஷ்டப்பட்டார். அண்ணனைப் பாக்க நான் போனா அண்ணி என்னெய ரொம்பத் துச்சமாப் பாப்பாங்க. அண்ணனுக்கு தெரிந்தும் அவராலெ அண்ணிய ஒன்னும் சொல்ல முடியாது. அப்பொறம் ஒரு தம்பி. செவிடு ஊமை. 25 வயசுல பைத்தியம் பிடிச்சு செவத்துல மோதிண்டே செத்துப் போயிட்டான். பெறகு மற்றொரு தம்பி. இங்கதான் இருக்கான் (திருவனந்தபுரத்திலேயே வேறு இடத்தில்). ஆறாம் வகுப்புவரப் படிச்சான். படிப்பு வரல. கெட்டிக்காரன். நிறையச் சம்பாதிச்சான். மூனு பெண்கள். நல்ல இடத்தில கல்யாணம் பண்ணிக் கொடுத்துட்டான். மாசம் ஒரு முறை வந்து எங்கிட்டப் பணம் வாங்கி இந்த வீட்டுக்குக் கரண்ட்டுப் பில்லு கட்டிட்டுப் போவான். அப்பொறம் ஒரு தம்பி பெங்களூர்ல இருக்கான். அவுங்ககிட்டெயெல்லாம் நெறையப் பணமிருக்கு. எங்கிட்டப் பணமெல்லாம் அதிகமா இல்ல. மாசம் 1850 ரூபா பென்சன் வருது. அதுலதான் நானும் இந்தம்மாவும் சாப்புடறோம்.

அது பாருங்கோ, எனக்கு எதுக்கெடுத்தாலும் பயம். எப்பப் பாத்தாலும் ஒரு மாறுபட்ட விதமாகவே சிந்தித்து சிந்தித்து வாழ்க்க ஒரு மாதிரியா ஆயிடுத்து. வாழ்க்கையில அதிகமா அதுல இதுலன்னு ஈடுபட்டு நிறைய்ய இழந்துட்டேன். பழகின நண்பர்களால ஏமாற்றம். சொந்த உறவினர்களும் கூடப் பெறந்தவங்களும் கூட ஏமாத்திருக்காங்க. ஆனா ஒரு சைடு மட்டும் சொல்லக்கூடாது. பின்ன அவாளே வந்து கெல்ப்பும் பண்ணிருக்கா. பணம், தேக வலிமை இது ரெண்டும் இருந்தா ஒருத்தருக்கு எந்தப் பிரச்சனையும் வராது. இதுதான் லைப். அது இருக்க – என்னமாக இருந்தாலும் நம்பட்ட அது இல்லாட்டாலும் பிடிவாதம் மட்டும் விடவே மாட்டேன்கிறது.

 

நூலாசிரியர்: தமிழ் நாவல் உலகில் உங்களது நாவல்கள் புதுமையானதாக, வித்தியாசமுடையதாக இருக்கிறதே?

நகுலன்: நான் நெறையப் படிச்சிருக்கேன். போர்ஃகே, வர்ஜீனியா வுல்ஃப், ஜாய்ஸ், காப்கா, தாமஸ்மன் என நெறையப் பேர படிச்சிருக்கேன். ஆனா அவாளோட பாதிப்பு என் எழுத்துல வராம பாத்துக்குவேன். இருந்தாலும் என்ன அறியாம வந்துருதோ என்னமோ! ஆல்பர்ட் காம்யூ படிச்சிருக்கேன். ஏதோ ஒரு நாவல்ல காம்யூ அவன் அம்மா செத்த பிறகு அழமாட்டான். ஏன்னா எல்லாரும் அவன் அழமாட்டானா என எதிர்பார்க்கிறதால, அதுமாதிரி, நான் அழாட்டா என் அம்மா மீது எனக்குப் பாசமில்லன்னு ஒன்னும் அர்த்தமில்லை. சொஸைட்டிக்காக நான் வாழ முடியாது. இன்னோன்னு இருக்க இது தெரியுமா உங்களுக்கு? பிராமணால்ல ஒரு பழக்கம் உண்டு. சாமியுடைய லட்சம் பெயர்களைக் கூறுவது. கந்தா, சுப்பிரமணியான்னு. அதன மனசுல வச்சுத்தான் நாவல்லயும் வெறும் பெயர்களா அடுக்கி எழுதுறது.

 

நூலாசிரியர்: இப்படி எழுதுன்னா நாவல் வாசிப்பவருக்குச் சலிப்பு வராதா?

நகுலன்: முன்ன சொன்னதோட பரிச்சயமிருந்தா அவ்வாறு நிகழாது. அப்புறம் உங்களுக்கு இவரப் படிச்சிருக்கேளா? காப்காவில ஒரு பேரு. எனக்கு ரொம்ப பிடிச்சது. கிறித்துவப் பேரு. எழுதன ஒரு நாவல்ல நான் வேல பாத்த காலேஸீல இருந்த கிறித்தவா பேரை எல்லாம் தொடர்ந்து வரிசைப்படுத்தி எழுதுவேன். பின்பு, அந்த நாவல் பெயரோட பண்பு இப்பெயர்களுக்கு உண்டான்னு பார்த்தேன். ஒரு பேருக்கும் வரல. அப்புறம் பைத்தியக்காரத்தனமான மனோநிலை மேல எனக்கு என்னவோ ஒரு ஈடுபாடு. அது மாதிரி நாம இருக்கனும்னு ஆசை.

 

நூலாசிரியர்: டைரி வடிவில் எழுதக் காரணம் என்ன?

நகுலன்: நாம சொந்த அனுபவத்த எழுதும்போது டைரி வடிவுல எழுதுனாத்தான் உண்மை இருக்கும். எழுத்துல போலித்தனம் கூடாது. எனவேதான் அவ்வாறு எழுதினேன். அப்பொறம் க.நா.சு.கோட எழுதியிருந்தாரு. என்னோட டைரிக்குறிப்ப படிச்சுட்டுதான் சுந்தரராமசாமி கூட ஜே.ஜே. சில குறிப்புகள்னு ஒரு நாவல் எழுதுன்னாருன்னு. ஆனா, டைரிக்குறிப்புன்னு பேரு வைக்காம சில குறிப்புகள்னு வச்சுருக்காருன்னு. நாம இத சுட்டிக் காட்டுனா தவறாயிரும். ஒரு காலத்துல அவருட்டப் பேசுறதுக்காவே போயிருக்கேன். ஆனா மனசுக்குள் ஒரு வருத்தம் உண்டு.

 

நூலாசிரியர்: உங்கள் எழுத்து முறையினை இப்ப இருக்கிற பிரேம் – ரமேஷ் போன்ற எழுத்தாளர்கள் நான்-லீனியர் எழுத்து என்கின்றனரே?

நகுலன்: அவுங்களா ஏதாவது ஒரு பேர் வைச்சுக்கிருவாங்க – நான்-லீனியர்னா என்ன? தொடர்ச்சி இல்லாம இருக்கறதா? எதுல தொடர்ச்சி? தொடர்ச்சி இல்லாம இருக்கறதே ஒரு தொடர்ச்சிதானே? தொடர்ச்சி மறைமுகமாவேணும் இருக்கிறதா இல்லையா? ஏன் புதுக் கொள்கைலாம் உருவாக்கறா. இது வாஸ்தவம்தான். ஆனா நம்பளாள இது எவ்வளவு தூரம் ஏற்றுக்கொள்ளமுடியும்.

ஒரு ரைட்டர் எழுதுவார். A Rose is the rose is the rose ன்னு மூணு தடவ எழுதுவார். கமா, புல்ஸ்டாப் போட மாட்டார். நாம வாசிக்கும்போது வேறு வேறு பொருள் கொள்ள நேரும். போர்ஹே படிக்கும்போது திரும்பத் திரும்பத் தலைய ஒடச்சுக்கணும். சொல்ல வேண்டிய விசயத்த சொல்லாம சுத்திச் சொல்றது. அத தமிழாக்கிச் சொல்றதுன்னா – ஒருத்தர், கம்பராமாயணத்தைப் படிச்சுட்டு, வேறொரு இராமாயணம் படைக்கப் போறேன்னு சொல்லிட்டு அதேக் கம்பராமாயணத்தை அப்படியே எழுதுவது மாதிரி. நீங்க தத்துவம் பற்றிக் கேட்டேள்! தத்துவம் நாம்ப படிக்கிறோம். சில பிடிக்கிறது. அது அறியாம நம்ப எழுதும்போது வந்து சேர்ரது.

நான் தத்துவம் விரும்பிப் படிச்சதுல்ல. அது எப்பிடின்னா சில கருத்துகள் பிடிக்குது. இங்கிலிஸ்ல – பெக்கட் – நாவல்ல ஒரு காட்சி – நீ எங்கிட்ட வராத, ஏங்கிட்டப் பேசாத. ஆனா என்ன விட்டுப் போயிடாத. ஏன்னா அதுக்கென்னன்னா நீ இருக்கிறதுன்னாலதான் நான் இருக்கேன். நீ இல்லாம நான் தனியா இருந்தா நான் இருக்கிறேனா என்பது, எனக்கே சந்தேகமா இருக்கு. அந்தச் சந்தேகத்தைப் போக்கணும்னா நீ இருக்கணும் எங்கூட – என்பது அது. இது மாதிரி ரொம்பப் பிடிச்சது நம்ப அறியாம எழுதும்போது சேந்து வந்திடும்.

 

நூலாசிரியர்: ‘ஜானே வாலே வாலே ஜானே’ன்னு பல வரிகளப் புரியாத வண்ணம் எழுதிக்கிட்டேப் போறிங்களே?

நகுலன்: அத நான் என்னன்னு தெரியாமத்தான் எழுதுனேன். ஆனா அதுக்கு ‘நான் போயிண்டே இருக்கேன்னு’ ஒரு அர்த்தம் இருப்பதா பின்னால நண்பர் அசோகமித்திரன் சொன்னார்.

 

நூலாசிரியர்: சூசிப்பெண், ரோஜாப்பூ என்பவை யாரைக் குறிக்கின்றன?

நகுலன்: அது நம்ம சுசீலா (மகிழ்வு ததும்ப சத்தமாகச் சிரித்தல்). ரெண்டு பேரும் நெருங்கிப் பழகினோம். பின்ன கல்யாணமாகி அவ அமெரிக்கா போயிட்டா. கொஞ்சகாலம் அங்க இருந்துட்டு திருவனந்தபுரம் வரப்போ எனக்கு சொல்லிட்டு வந்தா. நான் அங்ங வரப் போறேன்னு. நானும் அவளும் பாத்துக்கிற மாட்டோம். அவளா என்னப் பாக்கவரமாட்டா. நானும் போக மாட்டேன். இருந்தாலும் எங்களுக்குள்ள ஒரு தொடர்பு இருக்கும். மானசீகத் தொடர்பு. அதுக்கு ஸ்தூலமான உருவங் கிடையாது. அது சூட்சுமமான ஒன்று.

சுசீலா, முன்ன திருவனந்தபுரத்துலதான் இருந்தா. இங்க இருந்த அமெரிக்கன் லைப்ரரில வேல பாத்தா. இங்க, பஸ்ஸ்டாண்டுப் பக்கம் யுனிவர்சிட்டி காலேஜ் முன்னாடி உள்ள ஒரு இடத்துல ஒரு சாகை பிடிச்சுண்டு தங்கியிருந்தா. அங்கிருந்து மெட்ராஸ் போனா. அங்கயிருந்து கொஞ்ச நாள்ல அமெரிக்காவுக்குப் போனா. கெட்டிக்காரி. அங்கயிருந்து வந்ததும் ஒரு நல்ல ஆளாப் பாத்து கல்யாணம் செஞ்சுண்டு தம் ரெண்டு குழந்தைகளையும் அமெரிக்காவுக்கு அனுப்பிட்டா.

 

நூலாசிரியர்: சுசீலா நெறையப் படிப்பாங்களா?

நகுலன்: புஸ்தகம் எல்லாம் படிக்கமாட்டா. ஆனா நாலுபேரு எடுக்கறத வச்சு இது நல்லது, இருக்காதுன்னு அவளுக்குத் தெரியும். அந்த வேலையிலேயே இருக்கிறதுனாலே அது சம்பந்தமான அறிவு இருக்கும். இத எல்லாம் என்ன சொல்ல முடியும். அவ சொந்த ஊர் கொடுங்களூர். சிலப்பதிகாரத்துலகோட இந்தப் பேர் வரும். லைப்ரரில வச்சுதான் அவள நேக்குத் தெரியும். அவ நாயர் பொண்ணு. அவா வீட்டுக்கார் சைன்யத்தில வேலை பார்த்தார்.

 

நூலாசிரியர்: அவுங்க குடும்பம் பற்றித் தெரியுமா?

நகுலன்: வேறே ஒன்னும் நேக்குத் தெரியாது. ஒருத்தர்கூட ‘சுசீலாவின் சிறப்பு சுசீலாவிடம் இல்லைன்னு’ எழுதியிருந்தாரு. நான் அவளப் பத்திச் சிருஷ்டித்து வச்சுருந்தது அவள்ட்ட இருக்கலாம்; இல்லாமலும் இருக்கலாம். அவ ஏன் ஏங்கிட்டச் சொல்றா, நான் புறப்பட்டு வாரேன்னு. நானும் போய் பாக்கமாட்டேன். அவளும் வரமாட்டா. ஆனா சூட்சுமமா ஏதோ ஒரு தொடர்பு எங்களுக்குள்ள இருக்கு. ஆனா அது குழப்பமான ஒன்று. ஆனா அதுல, அந்நினைவுல நேக்கு ஒரு சந்தோசம்.

 

நூலாசிரியர்: அவுங்க இப்ப உங்களப் பாக்க இங்க வீட்டுக்கு வருவாங்களா?

நகுலன் வீடு
நகுலன் வீடு

நகுலன்: மாட்டாங்க. மாட்டவே மாட்டங்க. பயம். கொஞ்ச வருஷங்களுக்கு முன்ன எப்பயாச்சும் அகஸ்த்துமாத்தா பாத்துகிட்டாத்தான். இப்ப என்னாலயும் வீட்ட விட்டு வெளிய போக முடியறதில்லை. அவுங்களும் வரமாட்டாங்க. நானும் போக மாட்டேன்.

 

நூலாசிரியர்: அவுங்கள இப்பப் பாக்கணும்னு ஆசையுண்டா?

நகுலன்: கிடையாது.

 

நூலாசிரியர்: அவுங்க போட்டோ ஏதும் உங்கட்ட இருக்கா?

நகுலன்: இல்ல. அவ போட்டோவ அந்தக் காலத்துல கேட்டிருந்தா கொடுத்திருப்பா. நான் கேட்கவுமில்லை. அவ கொடுக்கவுமில்லை.

 

நூலாசிரியர்: உங்கள் நாவல்கள்ல வருகிற பாத்திரங்கள் பற்றி…

நகுலன்: நானும் என் நண்பர்களும் உறவினர்களுந்தான். நவீனன் நான். சுசீலா நம்ம சுசீலா. தேரை மௌனி. சாரதி கிருஷ்ணன் நம்பி. கேசவ மாதவன் – சுந்தர ராமசாமி. சிவன் சண்முக சுப்பையா. ஹரிஹர சுப்பிரமணிய ஐய்யர் – காசியப்பன். நல்லசிவன் பிள்ளை, கா.நா.சு, கேசவன் – நீலபத்மநாபன். சச்சிதானம்பிள்ளை – அண்ணாமலை யுனிவர்சிட்டி பதிவாளர் – பெயர் இப்ப ஞாபகம் வரல.

 

நூலாசிரியர்: இளைஞன் என்ற பாத்திரம்?

நகுலன்: ரிசர்வ் பேங்க் ஆபிஸர். அவர் ஒரு பொயட்டிக். நாய் – குறியீடு. இன்னொன்னு பாருங்கோ. குறியீடுகின்ற சொல்ல யாரு வழக்கத்துக்குக் கொண்டுக்கிட்டு வந்ததுன்னு தெரியுமா? சி.சு.செல்லப்பா. அப்புறம் இன்னொன்னு பார்த்தேளா. ஒருத்தரு பேரச் சொன்னா – அவர் பற்றிய அனுபவ உலகு எனக்கு உடனே வந்திடும்.

 

நூலாசிரியர்: சாவு, தற்கொலை பற்றியே அதிகம் எழுதியிருக்கீங்களே?

நகுலன்: எனக்குச் சாவக் கண்டு ரொம்பப் பயம். ‘ரோகிகள்’ நாவல் நான் ஆஸ்பத்திரிலே இருக்கும்போது ஏற்பட்ட அனுபவம். அப்பொறம் எதுக்கு இவ்வளவெல்லாம் இருந்தாக்கூட சாவப்பத்தி ஏன் பயப்படறோம்.

சாவுக்குப் பின்னால என்ன நடக்குமோன்னு ஒரு பயம்.

 

நூலாசிரியர்: தங்கள் படைப்புகள் பற்றிச் சொல்லுங்களேன்?

நகுலன்: தமிழில் பத்து நாவல்கள், முப்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதி இருக்கேன். சரியா கணக்குத் தெரியல. அப்புறம் ஐந்து கவிதைத் தொகுதி, இங்கிலிஸ்ல ஒரு நாவல். பெறகு ஒரு ஆறு புத்தகங்கள் எழுதியிருக்கேன். பெரும்பாலும் எம் புத்தகங்கள நான்தான் போட்டேன். வேற யாரும் பதிப்பிக்க முன்வரல.

 

நூலாசிரியர்: நாவல்கள்ல தனிமை, குடி பற்றி நெறையப் பேசுறீங்களே?

நகுலன்: ஆமா, நான் நெறையத் தனிமைய அனுபவிச்சுருக்கேன். அப்ப புத்தகங்களும், குடியும் கைகொடுக்கும். குடிச்சதும் சுயநினைவு இருக்கறதில்லை. அப்போ நீங்க நல்ல ஆளா இருக்கிறீங்க. அப்போது நீங்க வேறு ஒலகத்துக்குப் போயிருவீங்க. இந்த உலகத்துக்கு வந்துட்டா, அதாவது குடிபோத போயிட்டதும் கெட்ட சுபாவம் தலதூக்க ஆரம்பிச்சிரும். தண்ணி அடிச்சா நம்பட்ட இருந்து நாம விடுபட்டு போகலாம். நாலு பேருட்டப் பேசும்போது நல்லா நேரம் போகுது. தண்ணி அடிச்சா நம்ப கஷ்டம் போகுது. தனியா இருந்தா பயம் வந்திடுது.

 

நூலாசிரியர்: கடவுள் பற்றி…

நகுலன்: எனக்கு ஒரு அனுபவம் என்னன்னா மனமுருகி பிரார்த்தனை செஞ்சா எதுவும் நடக்கும். நான், ராம நாமம், தேகச் சேமம், ராம நாமம் தேகச் சேமம் – என்ற ஒரு பாட்டு. அப்புறம் ஈசன நெனை மனமே ஈசனை நெனை மனமே… இந்தப் பாட்ட நானா கம்போஸ் பண்ணுனது. இதச் சொல்றபோது எனக்கு மனசுக்கு ஒரு ஆறுதல் கிடைக்கும். நம்பிக்கையோடு பிரார்த்தனை செய்தா வேண்டியது கிடைக்கும். சாமி என்பது இருக்கு. இல்லைனு சொல்ல முடியாது.

 

நூலாசிரியர்: உங்கள் நண்பர்கள் பற்றி…

நகுலன்: க.நா.சு., மௌனி, சண்முக சுப்பை யா போன்றோர் நெருங்கிப் பழகியவர்கள். சுந்தர ராமசாமிட்ட நான் நெருக்கமா பழகுனேன். இப்பல்லாம் அவர் இங்க வந்தாலும் என்னப் பார்க்காலேயேப் போயிடுவார். அப்புறம் தி.ஜா. இங்க வீட்டுக்கு வந்திருக்கார். நாஞ்சில் நாடான் கடிதம் எழுதுவார். ஜி.என். வந்திருந்தார் ஒருமுற இங்க. நெறையக் கோபம் வரும் அவருக்கு. நீலபத்மநாபன் மாதம் ஒரு முறை வந்து பாத்திட்டுப் போவார். ஆ.மாதவன் எப்பவாவது வருவார். கிருஷ்ணன் நம்பி எனக்கு ரொம்பப் பிடிச்சவர்.

 

நூலாசிரியர்: தற்காலப் படைப்புகள் பற்றி…

நகுலன்: உள்ளத உள்ளவாறு சொல்வது கதையம்சம் ஆகாது. சூட்சுமமாகச் சொன்னால்தான் சிறப்பாக இருக்கும். இப்ப வந்த படைப்புக்கள்ல சிலது படிச்சேன். அதுல கோணங்கி, எஸ்.இராமகிருஷ்ணன் நல்லா எழுதறா. என் எழுத்து – மனதுல தோன்றத அப்படியே எழுதுவேன். அந்த நாற்காலியப் பாருங்கோ (நாற்காலி ஒன்றைச் சுட்டிக் காட்டுதல்) அது இருக்க. அதப் பாக்கும்போது தோன்றத அப்படியே எழுதறது. நாற்காலியப் பாக்கும்போது யாரோ உட்கார்ந்திருக்கிற மாதிரி நமக்குத் தோணுதுன்னு வச்சுக்கோங்க. அத அப்படியே தோணினவாறு எழுதுறது. அப்படி எழுதுனா அத எத்தன பேரு ஒத்துக்குவா. (சற்று நேரம் யோசித்த பின்பு…)

ஒருத்தருக்கே எல்லாம் தெரிந்திருக்காது. இவர் இருக்காரோல்லியா, க.நா.சு. அவருக்கு முறையான படிப்புக் கிடையாது. கெமிஸ்ட்ரி பி.எஸ்.சி. முறையான படிப்பு எதுவும் கிடையாது. ஆனா நல்லா எழுதுவார். முறையாகப் படித்தவர்களில் நெறையப் பேர் முட்டாள்களாகவும் இருக்கா; முட்டாள் இல்லாதவளாகவும் இருக்கா.

 

நூலாசிரியர்: உங்களுக்கு பிடிச்ச தமிழ் நாவல் ஆசிரியர்கள் யார்?

நகுலன்: யாரச் சொல்றது? க.நா.சு., கி.ரா.வைப் பிடிக்கும். அப்புறம் கிருஷ்ணன் நம்பி.

 

நூலாசிரியர்: தற்போது ஒவொரு நாளும் எவ்வாறு கழிகிறது?

நகுலன்: எதையாவது எதிர்பார்த்துண்டே இருக்கறது – குறிப்பா பென்சன், போஸ்ட்மேன். பெரும்பாலும் பென்சன் மாதம் பெறந்து ஆறு ஏழு தேதிகள்ல வரும். சில நாட்கள்ல முதல் தேதியிலேயே வந்துரும். அப்படி முதல் தேதியிலேயே வந்துட்டா அது எனக்கு பெருத்த ஏமாற்றமா இருக்கும். அப்புறம் இன்னோன்னு நீங்க வர்றேன்னு லெட்டர் போட்டிகளோ இல்லியா, நான் உங்களுக்கு, வரவேண்டான்னு எழுதலாம்னு நினைச்சேன். ஏன்னா வந்து உங்களுக்கு வேண்டியத என்னால தர முடியலைன்னா உங்க மனசு வருத்தப்படுமோ இல்லியோ அதனால. அடுத்து, அப்புறம் யாராவது வந்தா, அவாட்ட நாம பேசின்டே இருக்கறபோது நம்ப கவலை எல்லாம் மறக்கும். ஆனா எத்தன பேரு வருவா? வயாசானா ஒருத்தருக்கும் வேணாம்…

 

நூலாசிரியர்: கொஞ்சம் நேரமேனும் வீட்டை விட்டு வெளியில் சென்றுவருவதுண்டா?

நகுலன்: நேக்கு ரொம்ப பயந்த சுபாவம். யாரும் அந்த ரோட்ட விட்டு நம்ம வீட்டுப்பக்கம் வந்தா பயம். அப்புறம் பாம்புக்கு ரொம்பப் பயம். ஒரு சமயம் இந்த வழியா பெரிய பாம்பு ஒன்னு போச்சு. வெளிநாட்டுக்குப் போக வாய்ப்புக் கிடைச்சது. ஆனா கடல் கடந்து போகப் பயம். ஒரு சமயம் ஒரு கேர்ள் இந்த ரோட்ல ஒரு ஸ்கூட்டர நிறுத்திட்டுப் போயிட்டா. அப்ப நா அதப் பாத்துண்டே இருந்தேன். வேறு யாரும் எடுத்துகிட்டு போயிட்டா என்ன செய்யிரதுன்னு. பிறகு வந்து அவளே எடுத்துண்டு போயிட்டா. இப்போது இந்த ரோட்டு வழியாப் போறவாளப் பாத்து நான் கையெடுத்துக் கும்பிடுவேன். ஏழையா இருந்தா அவா திரும்பக் கும்பிடுவா. பெரும்பாலான பணக்காரா இங்கிட்டு திரும்பிக்கூடப் பாக்க மாட்டா. நாம ஏழையாக இருக்கிறதுக்கு படிக்கணும் இல்லையா?

 

நூலாசிரியர்: இதற்கு மேல் நம்மலால எழுத முடியாதுன்னு எப்பவாகிலும் உங்களுக்கு தோன்றியது உண்டா?

நகுலன்: அப்படி இல்ல. நான் எழுதிண்டே வந்தேன். எனக்கு உடம்பால் குறைஞ்சு போயிட்டது. அதுதான் எழுத முடியல. ஆனா எழுத முடியாதுன்னு ஒன்னுமில்லை. நான் இப்போது சும்மா இருக்கும்போது கூட ஏதாவது வார்த்தைகள் மனசுல வந்துண்டே இருக்கு. சான்றா – ஊழையும் உட்பக்கம் காண்பர் – என்ற வரி வருது. இதுல ‘உட்பக்கம்’ என்ற வார்த்தையில ஒரு வசீகரம் இருக்கிற மாதிரி தோணித்து. உடனே அகராதியெடுத்து ‘உட்பக்கம்’ என்றால் என்ன என்று பார்த்தேன். உட்பக்கம் என்றால் – ‘இடைவெளி’ – என்று போட்டிருக்கு.

இதுபோல வார்த்தைகள் வருது. ஏதாவது நினைவுகள் வந்து போயின்டேயிருக்கு…

 

தத்துவத் தேடல்.

 

நன்றி :எழுத்தாளர் வியாகுலன்,

முனைவர் ஆ. பூமிச் செல்வம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.