மடிநிறைய குட்டிகளைச் சுமக்கும்
நிறைமாத கர்ப்பிணியாய்
எதிர்ப்புக்களற்றுச் சுணங்கிக்கிடக்கிறது
துணையிழந்த பேருந்து நிறுத்தம்.
கிழிந்து கிடக்கும் தார்ச்சாலை
தன் அடிவயிற்றிலிருந்து
உலர்ந்துபோன பால்மடியின் வாசத்தைப்
பேரிரைச்சலோடு அலையும்
கனரகக்காற்றில் கலந்து வீசுகிறது
டிபன் கேரியர் வைக்கும் கூடையில்
சாலைக்கும் பேருந்து நிலையத்திற்குமாய்
அலைமோதும் குட்டிகளை
பெரும் இரைப்போடு அள்ளி நிரப்புபவன்
ஒவ்வொரு முறை நிமிரும்போதும்
ஜவ்வுபோல சுருங்கியிருக்கும்
நுரையீரல் குழாயின் வழியே
வினோதமாக்க் குரலொன்றை எழுப்புகிறான்
இதேபோன்றதொரு அடைமழை காலத்தில்
ரோட்டோரத்திலிருந்து எடுத்துவரப்பட்டு
வாசலில் கட்டப்பட்டிருந்த குட்டியின்
ஈனஸ்வரத்தைப் பொறுக்கவும் இயலாமல்
தூரத்தில் சென்று தொலைக்கவும் இயலாமல்
ஆறிப்போன பாலை
அடிவயிற்றை இழுத்து ஊதியபடி
அழுதுகொண்டிருந்தவள் குரலிலும்
ஆஸ்துமா இப்படித்தான் கலந்திருந்தது.
– சுபா செந்தில்குமார்.