அவளது வியர்வைத் துளிகள் உதிர்ந்து கொண்டே இருக்கின்றன
இந்த கடலை விட பெரிதாக
இந்த கற்களை விட உறுதியாக
சமயங்களில்
அவள் உப்புக்கரிக்கும் வியர்வைகளை
உற்பத்தி செய்கின்றாள்
அவள்
தனது நீராகாரத்தில் அதனைக் கொண்டே ருசியைக் கூட்டுகிறாள்
அவளின்
உதடுகள் வெடித்த பனிப்பாறையை
நினைவூட்டுகின்றன
அயற்சியால்
தன்னிச்சையாக
நாக்கு ஈரமாக்கிட பற்கள் கடித்து
மீண்டும் மீண்டும்
பனிப்பாறையில் சிவப்பு கையெழுத்திடுகிறது
அவளது ரத்தம் உப்பு
அவளது கண்ணீர் உப்பு
அவளது சிறுநீர் உப்பு
அவளது எச்சில் உப்பு
உப்புக்காற்றால் பிசுபிசுக்கும் கூந்தலை
ஒதுக்கிவிட்டு கறுப்பு தேயிலையை மிடறு ஊற்றுகிறாள்
சாதாரண சாலைகளில்
பிளவுபட்ட அவளது பாதங்கள்
பதிய மறுக்கின்றன
அவளது மரணத்திற்கு பிறகு
உப்புச்சுவை ஊறிய
உடல் மக்கிப் போகாமல்
இருந்தே விடுமோ என்றெண்ணி
எரிபொருளால் நெருப்பூதி சாம்பலாக்கி தூவி விட்டார்கள்
உப்பளத்தில் ஒரு துளி கரிசல்
இணைந்த தருணமது ..
பாலைவன லாந்தர்.
கனலி – கலை இலக்கியச் சூழலியல் இணையதளம்.
www.kanali.in
லோகேஷ் / October 4, 2019
அருமையான கவித்துவம்
/