பவா கதைகளின் கருவூலம்

அண்மையில் நான் படித்தும் கேட்டும் தெரிந்து கொண்ட எழுத்தாளர்களில் என்னை மிகவும் பாதித்த ஒரு எழுத்தாளராக பவா செல்லத்துரை அவர்களை நான் காண்கின்றேன்.

எழுத்துகளின் ஒரு குறுகிய வட்டத்தினுள் அமைக்கப்பட்டிருந்த ஓர் கோணத்தினுள் அமைதி கொண்டிருந்த நான், கவிஞர் அனார் அவர்களோடு நடந்த உரையாடலின் நடுவே உச்சரிக்கப்பட்ட அந்த பெயர் என்னை பற்றிக்கொண்டது. பவா என்கின்ற பல நூறு கதைகளின் தலைப்பை நானும் செவி சாய்க்க தொடங்கினேன்.

இணையதள YouTube அலைவரிசையில் என் விரல்கள் அவர் நாமத்தை பிராண்ட துவங்கியது, ஒவ்வொரு கதையாக செவிமடுக்கத் துவங்கினேன், என் செவிகளில் அவரின் சொற்கள் அந்தக் கதைகளின் முழு ரூபத்தையும் கண் முன்னே கொண்டு திரையிட்டது.

அவரின் யதார்த்தபூர்வமான மண்புழுச்சொற்கள் என் உடம்பில் நாடி நரம்பெங்கும், உடல் கூறுகள் முழுவதும் பரவத் தொடங்கியதை என்னால் உணர முடிந்தது, படிப்படியாக நான் என்னை இழந்து கொண்டிருக்கிறேன் என்பதை மனம் புரிந்து கொண்டாலும், அறிவு, சிந்தனை எல்லாமே பவா செல்லத்துரை என்ற ஒரு கருத்த கதைசொல்லி பூதத்திற்கு அடிமையாகி கொண்டிருப்பதை என்னால் நன்றாகவே விளங்கிக் கொள்ள முடிந்தது.
அடிமைத்தனத்தை முற்றாக நான் நிராகரிப்பவனாக இருந்தாலும் கூட இந்த அடிமைத்தனம் எனக்கு பிடித்திருந்தது, காரியாலய வேலைகளுக்கும், குடும்ப வாழ்வில் நெரிசலுக்கு மத்தியில் கிடைக்கும் ஒரு சில நிமிடங்களில் கூட என் விரல்கள் பவா என்ற கதைசொல்லியை தேடிக் கொண்டிருந்தது, அந்த அடிமைத்தனத்திலிருந்து என்னை சற்றேனும் விலகிக் கொள்ள விரும்பவில்லை, அதற்கு ஒரு அணுவளவும் முயற்சிக்கவுமில்லை.

அந்த கதைசொல்லியான கரும் பூதத்தின் ஒவ்வொரு கதையும் உடலைச் சுற்றி ஒட்டிக்கொண்டிருந்தன, என்னை மற்ற திசைகளின் பால் நகரவிடாமல் ஒரு திசையில் நகர்த்திக்கொண்டிருந்தது. இது ஒரு ஆபத்தான செயற்பாடு என்று தெரிந்தும் நான் அதனிலிருந்து விலகிக்கொள்ள முயற்சிக்கவில்லை. அதை நோக்கியே நான் பயணத்துக்கொண்டிருந்தேன். சில கதைகள் என் ஆன்மாவின் தொங்களை எப்போதும் வருடிக் கொண்டிருந்தன, ஆயிஷா, பிரியாணி, தேவகி சித்தியின் டைரி இப்படி எத்தனையோ கதைகள் என்னை பல நாட்களாக உறங்கவிடாமல் சிதைத்துக் கொண்டு இருக்கின்றன.
அந்த கதைகளின் கருவின் பின்னால் என்னை ஓடுவதற்கு தூண்டியது அவரின் வர்ணிப்பு.

சில கதைகளின் கருவை உள்வாங்கிய எனக்கே இத்தனை வருடல்களும், நெருக்கடிகளையும் தந்து சோர்வடைய வைக்கின்றன, இந்த சமூகத்தின் செயல்பாடு அப்படி இருக்கும்போது, ஆயிரம் ஆயிரமாம் கதைகளை வாசித்து அவற்றை உள்வாங்கி, அதை பிறருக்கு அவற்றை ஊட்டும்போது, அவருக்கு எப்படியான நெருக்கடிகளையும், சமூக ஆதங்கத்தையும் கொடுத்திருக்கும் என்பதை என்னால் சிந்திக்க முடியுமாக இருந்தாலும், அதற்குரிய பரிமாணத்தை என்னால் கற்பனை பண்ண முடியவில்லை.

கதைகளிலுள்ள கதாபாத்திரங்களை அவர் வர்ணிக்கும் முறையும், அக்கதாபாத்திரம் கொண்டே அறிமுகப்படுத்தும் விதமும் மிகவும் அற்புதமானது. அந்த வர்ணனைகளிலிருந்து தான் நமது கதைக்கான எதிர்பார்ப்பு துவங்குகிறது. அக்கதைகளில் உட்கருவை அவர் விளங்கிக் கொண்ட விதமும் வாசகனுக்கு    அதை எத்திவைக்க முறையும் மிகவும் வித்யாசமான ஒரு தொனி. அதை கதையின் இடையில், வெறும் சந்தைகளின் சந்திகளில் அவரால் கூறப்படும் அந்த உவமைகள் கதைக்கான எதிர்பார்ப்பை இன்னமும் இன்னமும் கூட்டுகிறது. கதை முழுவதும் நம்மை படிக்கத் தூண்டுகிறது, அந்தக் கதையாசிரியர் கூட எந்தக் கோணத்தில் சிந்தித்து அந்த கதையை எழுதியிருக்கிறார் என்று நம்மால் சொல்ல முடியாது, ஆனால் பவா செல்லதுரையின் பார்வை கோணமானது மிகவும் விரிந்த ஒன்றாக முழுப்பருதி பாகையில் காணப்படுகின்றது.

பொதுவாக கதைசொல்லிகளின் மீது ஒரு விமர்சனமாக சொல்லப்படுவது அவர்களின் கதைகூறலானது வாசகர்களின் வாசிக்கும் ஆர்வத்தை மழுங்கடிக்கச் செய்கிறது என்றும், வாசகர்கள் கதையைக் கேட்டதும் அவர்கள் கதைகளை முழுமையாக வாசிக்காமலேயே சென்று விடலாம் என்பதுதான். ஆனால் நான் இங்கு கதைசொல்லியான பவா செல்லத்துரை மீது அந்த விமர்சனத்தை ஒரு துளியேனும் ஏற்றுக்கொள்ள மாட்டேன்.
இந்தக் கதை சொல்லியின் ஒவ்வொரு கதையையும் நான் செவிமடுத்த பின் அந்த கதைகளைத் தேடி இணையதளத்தில் தான் மூழ்கி போகிறேன்.
சில கதைகளின் தேடல் பல நாட்களுக்கு தொடர்ந்தும் இருக்கின்றன, சில கதைகள் என்னால் பெறமுடியாதாக இருக்கின்றன. அப்படியான கதைகளை நான் என் டயரியில் குறித்து வைத்துக் கொள்கிறேன், எப்படியாவது ஒரு நாள் அக்கதைகளை முழுமையாக வாசிக்க வேண்டுமென்று.

பவா செல்லத்துரை அவர்களின் நோக்கத்தில் வெற்றி பெற்றுவிட்டாரென்று தான் நான் கூறுவேன். அவரின் நோக்கமான வாசகர்களை வாசிப்பின் பால் செலுத்த வேண்டும் என்பதே! அதை அவர் அடைந்து கொண்டிருக்கிறார் என்பதில் எந்த சந்தேகமும் எனக்கில்லை.

என் அடிமைத்தன படலம் தொடர்ந்து கொண்டிருக்கும் போது, அதிலிருந்து இன்னமும் விடுபடாத நான் மேலும் அவரைப் பற்றிய தேடலே அதிகமாக்கினேன், அவரின் தனிப்பட்ட குணாம்சங்களையும், செயற்பாடுகளையும் நோக்கி பறந்தேன், ஆனாலும் நான் சற்றும் எதிர்பாராத ஆச்சரியங்களும் அதிசயங்களும் அவரினுள் புதைந்து கிடந்தன.

ஒரு சராசரி மனிதனால் இப்படியெல்லாம் இருக்க முடியுமா! என்ற தோற்றப்பாடை என்னுள் விதைத்தது,

பத்தாம் வகுப்பு விடுமுறை நாளில் எழுதிய நாவலோடு கண்ட ஒரு பையனின் கனவு, ஒரு நகரத்தின் கனவாகவே மாறியது எப்படி?

இலக்கியத்தை கொண்டாடும் நகரமாக எப்படி திருவண்ணாமலையை மாற்றினார்?

இலக்கியவாதிகள் கொண்டாடும் நபராக பவா எப்படி மாறினார்?

இதற்குரிய ஒரு முழுமையான பதிலை பவா அவர்களும், அவரின் நண்பனான கருணாவும் தான் அறிவார்கள்.

இலக்கிய ஆளுமைகளினதும், திரைப்படத்துறை முக்கிய பிரபலங்களினதும் கால் பதிக்காத இடமாக திருவண்ணாமலையும் குறிப்பாக பவா செல்லதுரையின் இல்லமும் இருக்கவில்லை.

அவரின் இல்லத்தை பற்றி பிரபல எழுத்தாளரும் இயக்குனருமான பாலுமகேந்திரா அவர்கள் கூறுகிறார்கள் பவாவின் வீட்டிற்கு சாவி மட்டுமல்ல கதவுகளே இல்லை, யார் வேண்டுமானாலும் உள்ளே செல்லலாம் வரலாம்.

பாலுமகேந்திரா அவரிகளின் கடைசி தருணங்களில் பெரும் பொழுதுகள் அங்கேயே கழிந்தன, அவரின் அஸ்தி கூட பவாவின் நிலத்திலயே புதைக்கப்படும் அளவிற்கு அந்த வீடு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருந்தது.

ஒருமுறை எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன் அவர்கள் பவாவின் வீட்டிற்கு சென்றிருந்தபோது, அங்கே முகப் பரிச்சயமற்ற ஒரு இளைஞன் நடமாடிக் கொண்டிருந்தான், ‘யார் இந்த பையன்’ என்று அவரிடம் கேட்டபோது அதற்கு அவர் அளித்த பதில் ‘யாருன்னு தெரியாம ரெண்டு நாளா இங்க தான் இருக்கான் இனிதான் கேட்கணும்’ இப்படி பழைய ஆளுமைகள் மட்டுமல்ல, புதிய ஆளுமைகளையும் அவர் வளர்த்துக் கொண்டிருக்கிறார்.

எழுத்தாளர்கள் அனைவரும் எந்த கூச்சமும் இன்றி செல்ல வேண்டிய, செல்லுகின்ற ஒரே ஒரு இடம் அது பவா செல்லதுரையின் வீடு தான் நாங்கள் அவர்களின் படுக்கை அறை வரை சென்று எங்களது சட்டையை தொங்க விடும் அளவுக்கு எங்களுக்கு சுதந்திரம் அந்த வீட்டினுள் காணப்பட்டது, அவரின் வீட்டின் செல்வாக்கு எந்த அளவுக்கு என்றால் எழுத்தாளர் ஜெயகாந்தனின் தொடங்கி ஜெயமோகன் வரை அவரின் வீட்டினுள் தடம் பதித்திருந்தார்கள்.

தற்போதயே முன்னனி எழுத்தாளர்களின் இலக்கிய ஆயுட்காலத்தில் பவாவின் நினைவுகளும், அவரின் நிழலும் சரிக்கு பாதியாக கிடக்கிறது.

இப்படியான ஒரு நபர், சிக்கலடைந்த நமது சமூக, குடும்ப கட்டமைப்பையும் தாண்டி எப்படி இன்னமும் உயிரோட்டமாக இருக்கிறார் என்று பார்த்தால், அதற்குரிய காரணம் அவரின் குடும்பமும் இலக்கியத்தையும், இலக்கியவாதிகளையும் தத்தெடுத்து இருந்தது, குடிசையில் வாழும்போது அவரது பெற்றோர்களின் அரவணைப்பு,
பவா என்ற பக்கம் எழுதப்படும் போது சைலஜா என்ற நாமமின்றி, அந்த பக்கம் பூர்த்தியடையாது,
மாநிலம், மதம், மொழி தாண்டி வந்த அந்த காதல், இலக்கியம் என்ற ஒரு பொதுவுடமையால் சேர்ந்து கொண்ட உள்ளங்கள், இவர்களின் உள்ளங்கள் பரிமாறும் சமயத்தில், எழுத்தாளர் ஜெயமோகன்
28 பக்கங்கள் கொண்ட கடிதமொன்று எழுதி, அதில் இருவர்களுக்கிடையிலான வேறுபாடுகள் என்ன! என்ன பிரச்சினைகள் எழும், அவற்றை எப்படி எதிர்கொள்ளுவது என்றால்லாம் உள்ளடக்கியதாக இருந்தது,
ஆனால் பவா அவர்கள் கூறுகிறார்கள், இதுவரை அவர் கூறிப்பிட்ட எதுவும் எங்களிடம் தோன்றவில்லை என்கிறார். அப்படியொறு புரிந்துணர்வுடன் அவர்களின் இலக்கிய இல்லற வாழ்வு செல்கிறது.
ஒரு ஆணின் வெற்றியின் பின்புலத்தில் பெண் இருக்கிறாள் என்பார்கள், ஆனால், இங்கே மறுதலையாக பவாவின் முன்னால் நின்று, பவாவை அவரது மனைவி சைலஜா இலுத்துக்கொண்டு செல்கிறார் என்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய விடயம்.

ஹனீஸ் முஹம்மட்

எஸ் ராமகிருஷ்ணன் தனது நேர்காணல் செவ்வியில் ஒருமுறை குறிப்பிடுகிறார், நானும் எழுத்தாளர் கோணங்கியும் திருவண்ணாமலையை அடைந்த போது நடுநிசியை தாண்டிவிட்டது, அதுவும் பவா செல்லதுரையின் வீட்டை அடையும்போது மணி ஒன்றையும் தாண்டிவிட்டது, இருந்தாலும் தாங்கள் சென்று, சில மணி நேரங்களில் இரவு சாப்பாட்டை அதிகாலை மூன்று மணிக்கு உண்டுகொண்டிருந்தோம், எங்கிருந்து வந்தது, யாரு சமைத்தார்கள் எதுவுமே எங்களுக்கு தெரியாது, ஆனால் நாங்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம், ஒருவேளை நாங்கள் உண்ணும்போது குறைந்தது பத்துப் பேராவது அந்த பந்தியில் இருப்பார்கள், அவர்கள் யாரென்று யாருக்கும் தெரியாது, ஆனால் அவர்கள் எல்லோருக்கும் ஒரே ஒரு தொடர்பு இருந்தது அது இலக்கியம்.
இந்த இலக்கியத்திற்காக தன்னை இழக்கவும் கூட தயாராக பவா செல்லத்துரை காணப்பட்டார், இத்தனைக்கும் அவர் ஒரு வசதி படைத்தவருமல்ல, ஒரு சாதாரண விவசாயின் மகன், மேலும் எழுத்தாளர் எஸ்.ரா கூறுகிறார் பவாவின் அந்தக் பத்துக்கு பத்து குடிசையில் தற்போது முன்னனியிலுள்ள பல எழுத்தாளர்கள் பக்கவாட்டில் படுத்துக்கொண்டு இலக்கியத்தை விவாதித்துக் கொண்டிருப்போம் நாட்கணக்காக, பவா செல்லத்துரை பற்றி எழுத்தாளர்கள் அனைவரும் ஒருமித்து கூறுவது அவரிடம் நாங்கள் காணும் அதிய சிறப்பியல்பு; ஒரு நபரின் மறைவான பகுதியை அவர் காணவே விரும்பமாட்டார், ஒரு மனிதனின் நெகட்டிவ் பக்கம், அதைப்பற்றி அவர் ஒருபோதும் கவலைப்பட்டதே இல்லை. அவரிடம் காணப்படும் பொசிட்டிவை மட்டும் அவர் இறுகப் பற்றிக்கொள்வார், அவற்றை தன்னுள் ஈர்த்துக்கொள்வார்.
இதுவே பவா அவர்களே மற்ற இலக்கியவாதிகள் இருந்து வேறுபடுத்திக் காட்டுகின்றது.

அவர் புதிய பழைய பல எழுத்தாளர்களுக்கு பல உதவிகளை செய்து இருந்தாலும், அவற்றை அவர் எப்போதும் நினைத்ததில்லை, எண்ணத்தில் வைத்துக்கொண்டதும் இல்லை. ஆனால் இலக்கியவாதிகள் அவரின் உதவிகளை எப்போதும் நினைவு வைத்துக் கொண்டிருக்கிறார்கள், பல இடங்களில் அவர்களின் நேர்காணலில் சுட்டிக்காட்டியும் உள்ளார்கள், இப்படி பல சம்பவங்களை நான் படிக்க கிடைத்தாலும் என்னை மிகவும் பாதித்த ஒரு சம்பவம் எஸ் ராமகிருஷ்ணன் அவர்களின் நேர்காணலில்.

எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன் அவர்கள் ரஷ்யாவின் ஒரு எழுத்தாளரைப் பற்றிய நாவல் ஒன்றை எழுதியிருந்தார் அந்த நாவலை அவர் புத்தகமாக வெளியிடுவதற்கு பல முயற்சிகள் செய்தும் எந்தவித பலனும் கிடைக்கவில்லை. உதவிகளும் கிட்டவில்லை. பல பேர்கள் ரஷ்யாவின் ஒரு எழுத்தாளரைப் பற்றிய புத்தகத்தை வெளியிடுவதற்கு செலவு செய்வதில் எங்களுக்கு என்ன பலன் கிடைக்கப் போகிறது,
அது மட்டுமில்லாமல் அவர் ஒரு பிரபல எழுத்தாளரும் அல்ல,
அந்த சமயத்தில் கவலையுற்று இருந்த எழுத்தாளர் எஸ். ரா அவர்கள் தனது எழுத்துத்துறை நண்பனான எழுத்தாளர் கோணங்கி உடன் இதுபற்றி அளவளாவிக் கொண்டிருக்கும் போது எழுத்தாளர் கோணங்கி நீ போய் பவாவை சந்தித்து இதுபற்றி பேசு என்று கூறி அனுப்பினார்.

இதுபற்றி அவர் பவாவிடம் குறிப்பிட்டபோது ‘இரண்டு மூன்று தினங்கள் காத்திருங்கள், ஏதாவது உதவி கிடைக்குமா என்று பார்ப்போம்’ என்றார்; இப்படி மூன்று நான்கு தினங்கள் கழிந்த பின்னும் அவரிடமிருந்து எந்தவித பதிலும் கிடைக்காத எஸ்.ரா அவர்கள் கடுமையான தொனியில் கேட்க, மீண்டும் ‘சற்று பொருத்திருங்கள் நான் பேசியிருக்கிறேன் கிடைக்கும்’ என்று கூறிய இரு தினங்களில் பவா அவர்கள் எஸ்.ராவிடம் ‘சட்டைப் பையில் சிறிதளவு பணம் வைத்து இருக்கிறேன் நீங்கள் போய் புத்தகத்துக்கான வேலையை பாருங்கள் மிகுதிப் பணத்தை நான் அனுப்புகிறேன் ‘என்று அவரை அனுப்பி வைத்தார். புத்தகமும் வெளியிடப்பட்டது, ஆனால் எஸ். ரா அவர்களுக்கு அந்த பணம் எப்படி கிடைத்தது, யார் கொடுத்தது என்று எதுவுமே தெரியவில்லை, அதை அவர் தெரிந்து கொள்ளவும் விரும்பவில்லை, அதை கேட்டு பவாவை சங்கடப்படுத்தவும் விரும்பவில்லை.
சில மாதங்களின் பின்னர் எழுத்தாளர் கோணங்கி பேசிக்கொண்டிருக்கும்போது, ‘எஸ்.ரா புத்தக வெளியீட்டுக்கு பவா பணம் தந்தான் தானே, அந்த பணத்தை அவன் இப்பவும் மாதமாதம் பகுதி பகுதியாக செலுத்திக் கொண்டிருக்கின்றான்’ என்றார்.

இந்தச் சம்பவம் என்னை மிகவும் உராய்விற்குள் உட்படுத்தியது, இன்னமும் நான் இந்த சம்பவத்திலிருந்து நான் விடுபடவில்லை. இப்படி ஒரு இலக்கியத்திற்காக தன்னை அர்ப்பணிக்கும் ஒரு நபர், தன்னையே இழந்து இன்னொருத்தரை வாழவைக்கும் இன்னொருத்தரின் படப்பை உயிர்ப்பிக்க வைக்கும் ஒரு நபரை எங்கும் காண முடியுமா இந்த நூற்றாண்டில்.

மேலும் எஸ்.ரா கூறுகிறார், என்னுடைய படைப்பின் வெளியீட்டுக்காக நானே கடன் வாங்க முன்வரவில்லை, நான் என்னுடைய சொந்தத்திலோ, என் நண்பர்களிடமோ; யாரிடமோ என்னுடைய படைப்பை வெளியிடுவதற்கு எந்த கடனும் நான் வாங்க முன்வராத நிலையில், யாரோ ஒரு நபர் என்னுடைய படைப்பை வெளிக்கொணர்வதில் இந்தளவு அக்கறை செலுத்துகிறார், இவர் எப்படிப்பட்ட மனிதராக இருப்பார். இத்தனைக்கும் நான் அந்த புத்தகத்தில் பவாவுக்கு ஒரு நன்றி கூட தெரிவிக்கவில்லை என்று மனம் நெருடிய குரலில் தழுதழுத்தவராக கூறி முடித்தார்.

என் ஆத்மாவில் மீளமுடியாத முடியாத நபராக பவா செல்லத்துரை அவர்கள் ஆர்ப்பரித்து கொண்டிருக்கின்றார் என்பதை என்னால் உணர முடிகிறது. அவரின் வேர்கள் இதயம் முழுவதுமாக, ஆன்மாவில் பரவிக் கொண்டிருக்கின்றது என்பதையும் விளங்கிக்கொள்ள முடிகிறது.

ஒரு நாளாவது பவா செல்லத்துரை வீட்டிற்கு செல்ல வேண்டும்;
அவரோடு உணவு அருந்திவிட்டு,
ஒரு பொழுதாவது அவரோடு கழித்துவிட்டு வரவேண்டும் என்ற ஆசை என் வாழ்நாள் ஆசைகளின் பட்டியலில் இறுதியாக ஒட்டிக்கொண்டது.


-ஹனீஸ் முஹம்மட்

2 COMMENTS

  1. சிறப்பான பதிவு நண்பரே… நானும் தங்களை போன்று அவருடைய கதை சொல்லி நிகழ்வினை அதிகம் கேட்டிருக்கிறேன் மெய்மறக்கச் செய்யும் உரைகள்.அவருடைய உரைகளே எனக்கு வாசிப்பின் சில
    புதிய பாதைகளில் பயணம் செய்ய வைத்தது.

  2. நண்பர் ஹனீஸ்! பவா அவர்கள் பற்றிய வாசிப்பு, கதை சொல்லும் பாங்கு, விருந்தோம்பல், குடும்பச் சூழல், இலக்கியம் மற்றும் பழைய புதிய எழுத்தாளர்களை அரவணைக்கும் செயல் அனைத்தும் தங்கள் பதிவின் மூலம் அறிந்தேன். சிறப்பாக இருந்தது. ஒரு சிறு குறை. என் போன்ற வாசகர்கள் எப்படி அவரது வீட்டை அடைவது? அன்று நேரம் கடந்து விட்டது எனில் அருகே தங்கும் விடுதி உள்ளதா? என்பதை அறிய ஆவல்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.