தொழுவத்து மருத்துவக் குறிப்புகள்

1
தைப்பனிக்குள் அசைந்தாடும் மாமரத்தை
மேய்ந்துகொண்டிருக்கிறது மாடு
சற்று தூரத்தில்
சாரணத்தி வேர்களை கோணிப்பையில் சேமித்தவன்
கல்லெடுத்து கிளையின்மீது எறிகிறான்
அதிர்ந்து பார்த்த மாட்டின் கண்களில்
செம்மஞ்சள் துவரை.
சூரியன் உதிர்ந்த மாலையில்
உரலைப் பின்னும் கயிறு
பனிக்காலத்தில் வெடித்த மடிக்காம்புகளை
நெய்யும் வெண்ணையும் துழாவும்

2
தோட்டிகுளத்தில் உலாவரும் மேகங்களை
உறிஞ்சிக் குடிக்கிறது மாடு
அதன் பொடனியில் வீற்றிருந்தபடி
காதுமடலைக் கொத்தும் ஊர்க்குருவி.
குளம் சொட்டிய படி
இருளுக்குள் நுழைகிறது நண்டு.
மேய்ந்த பாதிவயறு புதர்க்காட்டில் மறைய
முட்டத்தின்ற வயிறோ தொழுவத்தைப் புரட்டிக்கொண்டிருக்கிறது
செரிமானக் கோளாறுக்கு நாட்டுவாழைப்பழத் தோலில்
மிளகு சீரகத்தைத் திணித்து
ஊட்டுகிறான் கிழவன்

3
கூடுதலாகப் பால்சட்டி நுரைக்க
அரிசி மாவைக் கரைப்பவள்
இரைப்பைக்கு அதீதமான அடர்தீவனம் ஊட்டுகிறாள்.
மூத்திரத்தில் பட்டுத்தெறிக்கும் சாணத்தில்
மடி அழுந்த அசைபோடும் மாடு
வீக்கமுற்ற மடிகளோ விரல்களைச் சூடேற்றுகிறது.
முட்டிக் கால்களை இறுகக் கட்டி
வெறுமனே வீட்டுச்செடிகளின் வேர்களுக்குப் பாய்ச்சிவிடுவோம்
“நிதானமா பீய்ச்சுடா ஊர் மூழ்கிடப் போவுது” என்பவள்
மார்க்காம்புகளின் கட்டிகளுக்கு
கற்றாழை மஞ்சள் வெற்றிலை எலுமிச்சையோடு சாக்பீஸை அரைக்கிறாள்

4
காற்றில் பரவும் கோமாரி
மாட்டின் மூச்சுக்காற்றைப் பிடிங்கிக்கொள்கிறது
மூன்றே மாதங்களில் முவ்வாயிரம் கயிறுகள்
மாடுகளை இழந்தன
தடைவிதிக்கப்பட்ட மாட்டுச் சந்தையின் சாணங்களை
வண்டுகள் உருட்டிச் செல்லும்
புண்ணாகிய மூக்குத்துவாரத்திலிருந்து
வடிந்துகொண்டே இருக்கிறது எச்சில்
வேம்பையும் மஞ்சளையும் மிக்ஸியில் அரைத்து
மாட்டின் கடைவாய்ப் பகுதியிலிருந்து
பற்களற்ற வாயின் மேற்பகுதியில் பூசப்பட்டது
வழக்கம்போல் சந்தை தொடங்கியது…

5
மண்ணை வளமாக்க
மாட்டு மூத்திரத்தில் ஊறிய உமியை
வயலில் கொட்டுகிறான்
அள்ளிப் பார்க்கிறேன்
ஈரமற்ற உமியென்று எதுவுமில்லை.
தழைச்சத்தில் செழுமையான மண்மீது விழும் சாணியில்
பூசணி விதைகளைக் கலந்து வறட்டி செய்கிறாள்
உலைமூட்டும் நேரத்தில்
வறட்டியில் கற்பூரத் தீ பற்ற
பாட்டியின் சிதை எரிகிறது
மாட்டின் கண்களோ
பறக்கும் நெருப்புச் சில்லை அண்ணாந்து வெறிக்கின்றன.

6
பொழுது சாயும் நேரத்தில்
ஒடிந்த ஒற்றைக்கொம்பைத் தேடியலைகிறேன்
இன்னும் அது கிடைக்கவில்லை
தானியமாய்ச் சிதறிய ரத்தக்கறையை
வெறித்தபடியே நிற்கிறேன்
ஆவி பறக்க குச்சிக்கிழங்கை உரித்துக்கொண்டிருப்பவன்
திருடனாகத் தெரிகிறான்
இடிந்த புற்றையொத்த எஞ்சிய கொம்புக்கு
வெட்டுக்காயப் பூண்டையும்  வெங்காயத்தையும் அரைத்துப் பூசினான்

7
இரும்பு தெருப்பெயர்ப்பலகையில்
கட்டியிருக்கும் கன்று
சுவரில் எழுதிய
பழைய தெருப்பெயரை நக்குகிறது
பெட்டிக்கடை வாழைப்பழத்தைத் தின்றவன்
தோலை
கன்றின் நிழல்மீது வீசிச்செல்கிறான்
மோவாய் மோதிய மூச்சுக்காற்றில்
தரை பறக்கிறது
சற்று தொலைவில்
தொட்டியில் கொட்டப்பட்ட தெரு
சக்கரங்களால் நகர்ந்துகொண்டே வருகிறது

8
ரெங்கசாமி தோட்டத்து நெல்வயலில்
பால் கட்டியிருந்தது
பசி பழுத்த துரையன் மாடு
கள்ளத்தனமாய் மேய்வதைக் கண்ட
ரெங்கசாமி மகன்
மாட்டை கம்பத்தில் கட்டிவைத்து அடித்தான்
அதன் முதுகெங்கும் செங்கரும்பு காய்த்திருந்தது
கதறல் சத்தம் கேட்டு
ஓடிவந்த துரையன் நிழலும்
கம்பத்தில்
சைக்கிள் செயின் பற்கள் கடித்ததில்
முட்டி ஒழுக ஒழுக
ஊரெல்லையை அடைந்தார்

9
இரைப்பை அமில நோயுற்ற மாடு
ஆழமாகவும் வேகமாகவும் மூச்சுவிடுகிறது
அதிகாலை பனியில் போட்ட இரை
உச்சிவெயிலைச் சுமந்து தணிகிறது
நுரைபொங்க விழும் சாணி
பெருகுகிறது
“மாவுச்சத்தும் சர்க்கரைச் சத்தும்
அதிகம் உண்டதால் வந்தவினை” என்ற மருத்துவன்
“இந்த உணவுகளைக் கொடுங்க” என்ற படி
மருந்துச் சீட்டில் குறித்துத் தருகிறான்
வளைந்த புற்களைப் போன்ற எழுத்துகளை
தூக்கிக்கொண்டு அலைகிறேன்

10
மாடு
தன் வாலை மென்று தின்றுகொண்டிருக்கிறது
விட்டால்
அது தன்னையே விழுங்கிவிடும்போல
அதன் வாலில்
சாமையைப் போல் அடர்ந்திருக்கும் ஈறுகள்
எருமையின் உடலெங்கும்
காலால் பற்றித் தொங்கும் பேன்
விலங்கின் ரத்தத்தைக் குடித்துப் பெருகும்
அதுயிட்ட எண்ணற்ற முட்டைகளிலிருந்து
குஞ்சுகள் விளைய
ஒரு மாடு இன்னொரு மாட்டின் மீது
ஒட்டி உராசும்
அல்லது
சுவரை உராசி உதிர்க்கும்
பின்
ஒல்லியாய் நோஞ்சானாய்க் காணும்
மாட்டின் பிறப்புறுப்பிலும் தொங்கும்
50 மில்லி வேப்பெண்ணெயையும் இலுப்பை எண்ணெயையும்
கலந்து  தடவ
அந்தச் சின்னஞ்சிறிய இருள்குஞ்சுகள்
ஒவ்வொன்றாய் உதிர்கிறது


-பச்சோந்தி 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.