முழுமதியன் பரிபூரணமாய் பிரகாசிக்கும் இரவுகள் பித்தெழச் செய்பவை. எய்துதற்கு அறியது பூரணம் என்பதாலேயே அதன் செளந்தர்யம் நம்மை ஆட்கொண்டுவிடுகிறது. காலந்தோறும் கவிகளால் எழுதியும் பாடியும் தீர்ந்துவிடாது வானில் எழுந்துகொண்டிருக்கின்றன முழுமதிகள். கரும் இரவினை வெண்ணிற இரவென ஆக்கும் மாயம் கொண்டவை அவை. பீட்டர்ஸ்பெர்க்கின் கோடைகளோ முழுமையாய் கருமையாகாத இரவுகளைக் கொண்ட அத்தகைய வெண்ணிற இரவினால் ஆனது. பரிதியே மதியனாக உருமயக்கி நிற்கும் இரவுகளைக் கொண்டது எனலாம். காலந்தோறும் நிகழ்ந்து கொண்டே இருக்கும் இத்தகைய இரவுகளில் தஸ்தாயெவ்ஸ்கியின் இந்த நான்கு இரவுகளும் நிகழ்கின்றன.
உலகின் அத்தனை காதலும், காமமும் அடையும் உச்ச தருணம் ஒன்றே. அந்த உச்ச கணத்தில் நின்றிருப்பது ஆணல்ல, பெண்ணல்ல, இரு உயிருமல்ல. ஒன்றாய் கலந்து ஓருணர்வாய் உருக்கொண்டு நிற்கும் பிரம்மம். அது முழுமையின் நிறைவு என்பதாலேயே அரிதாக நிகழக்கூடியது. பிரம்மத்தின் ஆடலாகக் காலம் முழுமைக்கும் உயிர்களில் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கின்றன இந்த நிறைவின் உச்ச தருணம். அந்த நிறைவின் கணத்தை நோக்கியதான பயணமாய் இந்த வெண்ணிற இரவுகள் அமைகின்றன.
இந்த வாழ்க்கைப் பயணத்தில் எல்லா மனிதர்களும், எல்லா சந்திப்புகளும் நம்மில் எஞ்சுவதில்லை. நினைவுகளைப் பத்திரப்படுத்தி ரசித்திருக்கும் அப்படியான மனிதர்களும் சந்திப்புகளும் அரிதாக நடைபெறக்கூடியவை. அப்படி நாஸ்தென்காவிற்கும், கனவுலகவாசியான கதையின் நாயகனுக்கும் நிகழும் சந்திப்பாகக் கதை கருக்கொள்கிறது. இரு வேறு பிரச்சனைகள் கொண்ட மனிதர்கள்; அவர்கள் இணையும் ஒரு உணர்வின் புள்ளியை நோக்கியதான பயணம்; ஒருவரை ஒருவர் கண்டு அடைந்து நிறைத்துக் கொள்ளும் உரையாடல்கள் என இரவுகள் விரிகின்றன. நான்கு இரவுகள் தான். ஏதோ ஓர் காலம் எனும் பரிமாணத்தில் நிகழக்கூடிய நான்கு இரவுகள் தான். ஆனால், காலத்தை மாயமென்றாக்கி காலம் முழுமைக்கும் எடுத்து மீட்டி மீட்டி அதே நான்கு நாட்களை வாழ்ந்து பார்க்கத்துடிக்கும் நான்கு இரவுகளாக இரு மனங்கள் மாற்றிக் கொள்ளும் இரவுகளாக அது உருக்கொள்கிறது.
பிரிவின் இரவுகள் வலிமிகுந்தவை. சங்க அகப்பாடல்களில் திகட்டத் திகட்ட கொட்டித் தீர்த்த உணர்வுகள் அவை. காதலில் ஏங்குவதற்கு அதை முழுவதுமாக உணர்ந்து பித்து கொள்வதற்கு அருகமை விட பிரிவே உகந்தது. பிரிந்து தனித்திருக்குந்தோறும் காதல் புனைவைக் கைக்கொண்டு அரும்புகிறது, பூக்கிறது. அப்படிப் பூத்துக் கனிந்து கிடக்கும் நாஸ்தென்கா முதல் நாள் இரவில் கனவுலகவாசியைச் சந்திக்கிறாள்.
முதல் சந்திப்பிலேயே தனியன், கனவுலகவாசி, கூச்ச சுபாவமுடையவன், பெண்களிடம் பழகாதவன், அன்பிற்கு ஏங்குபவன் என அத்தனை பலவீனங்களையும் நாஸ்தென்காவிடம் சமர்ப்பிக்கிறான். அப்படி அப்பட்டமாய் நின்றிருக்கும் ஒருவனின் மேல் கருணை கொள்ளவும், அன்பைப் பொழியவும் ஏதுவான அப்பாவித்தனமும் கொண்டவளாக நாஸ்தென்கா இருக்கிறாள். அப்படியல்லாத பெண்களால் அவனைப் புரிந்து கொள்ளவும் இயலாது. எளிதில் அசிரத்தையாகக் கடந்து போகக் கூடியவனைக் கண்டு கொள்ளும் நுண்மையைக் கைக்கொண்டவளாக இருக்கிறாள்.
”பூ இடைப்படினும் யாண்டு பலவாக” என்ற குறுந்தொகைப் பாடல் காதலின் உச்சத்தை எடுத்தியம்பக் கூடியது. கலவியின் போது இடைப்படும் பூவினால் ஆண்டுகள் அளவுக்குத் தொலைவான பிரிவாற்றாமையைக் காதலர்கள் அடைவது மிகையுணர்ச்சி போலத் தோற்றமளிக்கக்கூடியது. ஆனால் இத்தகைய நீண்ட விலக்கம் தரக்கூடிய காலம் என்பது உடலினால் நிகழ்வது அல்ல. காதலின் உச்சத்தில் பிறக்கும் காமம் என்பது உடலைத் தாண்டியது. உடலையும் தாண்டி ஒன்றிணைய இயலுமா என்று உயிர் அலையும் போராட்டத்தைக் கொண்டது. அப்படி இரு உயிர்கள் ஒன்றிணைய முற்பட்டுக் கொண்டிருக்கும் புள்ளியில் ஒரு பூ வந்து விழுமானால் அது ஆண்டுகள் பல எனுமளவு தொலைவை அளிக்கக் கூடியது. காதலனைப் பிரிந்திருக்கும் நாஸ்தென்காவும் அத்தகைய தவிப்பைக் கைக்கொண்டவள். இரு உயிர்களும் காதலின் பொருட்டு இணைந்து பின் பொருன்வயிற் பிரிவால் பிரிவாற்றாமைத்துயர் கொண்டிருக்கும்போது அங்கு விழும் பூவாக கனவுலகவாசி அமைகிறான். காதலினால் கலந்துவிட்ட இரு உயிர்களுக்கிடையே அமையும் நீட்டிக்கப்பட்ட பிரிவு காலத்தில் விழுந்த பூவாகிறான். அந்தப்பூ ரசிக்கும்படியானது என்பதால் அது இடையூறாக இல்லை. அவனைப் பற்றி அறிந்து கொள்கிறாள். அதுவும் காதலிக்க ஏதுவானது எனும்போதும், காதலித்தவன் தன்னைப் புரிந்து கொள்ளவில்லை எனும்போதும் அவள் கனவுலகவாசியான அந்தப் பூவின் மேல் சலனமடைகிறாள்.
தன்னைப் பற்றிச் சொல்ல என்ன இருக்கிறது என்பவனிடம் “கதை ஏதும் இல்லாமல் எப்படி வாழ்ந்தீர்கள்?” எனும் நாஸ்தென்கா அவனுக்குப் புதுமையானவள். தான் சொல்ல ஆரம்பித்தால் ஒரு நாவல் அளவுக்கு நீளும் என்பதான கதையை தனக்கே காட்டியவளாக நாஸ்தென்கா அவனுக்குத் திகழ்கிறாள். இத்தனை நாள் அப்படியொரு வினாவைச் சந்தித்திராதவன் போல ஆனால் இதற்காகவே காத்துக் கொண்டிருந்தவன் போல ஒரு கனவுலகவாசியான அவன் தன் உலகத்தை எடுத்துரைக்கிறான். எத்தனை புத்தகங்கள், எழுத்தாளர்கள், அவர்கள் வழி அவன் உருவாக்கி வைத்திருந்த எத்தனை புனைவுப் பிரபஞ்சங்கள். யாவையும் எடுத்து விரித்து நாஸ்தென்காவிடம் காண்பிக்கிறான். ஒரு இலக்கிய வாசகியான அவள் இந்த கற்பனை உலகிற்கு முன் முதலில் கொடுப்பது மௌனத்தைத்தான். பின் அவனுக்காக மனம் கனிகிறாள். இலக்கிய வாசகர்களால் உணர்ந்து கொள்ளக் கூடிய பிரபஞ்சமது. தனிமையின் கட்டுக்குள் உழன்றிருந்த தன்னை விடுவிக்க ஒருவன் வந்ததைப் போலத் தனிமையின் உச்சத்தில் உழன்றிருக்கும் கனவுலகவாசிக்கும் நிகழ வேண்டுமென மெய்யாகவே விரும்புகிறாள். அவள் அவனுக்கு ஆறுதல் கூறுகிறாள். பீட்டர்ஸ்பெர்க்கின் வீடுகளுடனும், ஜன்னல்களுடனும் பேசுபவன், மலர்களைக் கூர்மையாகப் பார்த்து அதன் மீது பாசம் கொள்ள யாருமில்லையே என ஏங்குபவன், உள்ளத்தில் எழும் இன்பத்தைக் கூறி மகிழ நண்பர்களோ தெரிந்தவர்களோ யாருமில்லாதவன், எந்தப் பெண்ணுடனும் பேசிப்பழகி அறியாதவன், இயற்கையில் கரைபவன் என நுணுக்கமாக நாவலில் அவன் துலங்கி வருகிறான். பெண்களைப் பற்றிச் சொல்லும் போது சாதாரணமான அடுப்பங்கரைப் பெண்கள் என்றும் விசேஷமான பெண்கள் என்றும் பிரித்துக் கொள்கிறான். தன் வாழ் நாளில் இதுவரை சந்தித்த சாதாரண பெண்களைப் பற்றிச் சொல்லும்போதே நாஸ்தென்கா விசேஷமாகி விடுகிறாள்.
யாருமற்ற அந்த நிசப்த இரவில் தன் கனவுப் பிரபஞ்சத்தைக் கள்ளமில்லாது எடுத்துரைக்கும் ஒருவனைப் பற்றிக் கேட்டுக் கொண்டிருப்பதே நாஸ்தென்காவுக்கு இனிய கனவாகத்தானிருக்கும். அவனுக்கு ஆறுதல் கூறுகிறாள். அருகமைவது. கேட்பது. ஆறுதல் கூறுவது. எல்லாம் சரியாகிவிடும் என்று சொல்வது ஒரு தனியனுக்கு எத்தனை ஆறுதல் அளிக்கக் கூடியவை. தனக்காகக் கண்ணீர் உகுக்கும் ஒரு பெண்ணை காணும் பித்தன் மேலும் அவள் மேல் பித்தாகிறான். தனிமையும், வலியும், நோயும், மகிழ்வற்ற வாழ்வும், வறுமையும் ஒரு மனிதனுக்கு முதலில் உணர வைப்பது தான் பாவி என்பதைத்தான். மதங்கள் அவ்வாறு போதிக்கின்றன. அதிலிருந்து அவனை விடுவிப்பவளாக நாஸ்தென்கா இருக்கிறாள். நாஸ்தென்கா அவன் வாழ்வில் நிகழ்ந்த முதல் அற்புதம்.
பிரிவின் காதலுக்கும் அருகமைவின் காதலுக்கும் இடையேயான ஒரு மனப்போராட்டமாக கதை அமைகிறது. கண்ணெதிரில் காதல் பித்து கொண்ட இலக்கிய வாசகன், கனவுலகவாசி, தனியன், தன் வாழ்நாள் தோறும் துயரின் உச்சியில் நகரின் ஒளிபடாத இடத்திலிருந்தவன். நான்கு நாட்களாக நாஸ்தன்காவுடன் இருந்த வெண்ணிற இரவால் மட்டுமே ஒளியைக் காண்கிறான். பேசிப்பேசி பகிர்ந்து பகிர்ந்து உணர்வுகளால் ஒரு கட்டத்தில் காதல் வயப்பட்ட இருவரும் நிற்கும் ஒரு புள்ளி வந்து சேர்கிறது.
கனவுலகவாசியானவன் தன் காதலைச் சொல்லும்போது “நாஸ்தென்கா, முன்பு நீங்கள் உங்கள் பொருட்களைத் தூக்கிக் கொண்டு அவரிடம் போனபோது உங்களுக்கு எப்படி இருந்ததோ அதேபோலத்தான் எனக்கு இப்பொழுது இருக்கிறது. ஆனால் இன்னுங்கூட இது மோசமானது. ஏனென்றால் நீங்கள் காதலித்தவர் வேறு யாரையும் காதலிக்கவில்லை. எனக்கு நீங்களோ வேறொருவனைக் காதலிக்கிறீர்கள்” என்று நிற்கிறான். பரிதவிப்பான காதல் ஒரு புறம். பிரிவின் உச்சியில் பிரிந்து போன காதலன் ஊருக்குத் திரும்பி வந்து இத்தனை நேரமான பின்னும் தன்னைச் சந்திக்காமல், தன் காதலைப் புரியாதவன் இன்னொரு புறம். தன்னைப் புரிந்து கொள்ளாத காதலன் என்று வெறுத்து அழுது அவனைக் கைவிட எத்தனித்து ஒரு கணம் கனவுலகவாசியான கதையின் நாயகனை நாஸ்தென்கா கைபிடிக்கும்போது மகிழ்வு பொங்குகிறது.
“இணைபிரியாது எந்நேரமும் உங்களுடன் ஒட்டிக் கொண்டு ஓர் இதயம் இயங்குகிறது என்பதைத்தவிர நன்றியுணர்வுடைய நேசமும் பாசமும் கொண்ட ஓர் இதயம் என்றும், உங்களுக்கே உரியதாயிருந்து உங்களுக்காக எதுவும் செய்யத்தயாராயுள்ள ஓர் இதயம் உங்களுடன் இணைந்து இயங்குகிறது என்பதைத்தவிர வேறு எதுவும் உங்களுக்குத் தெரியாதபடி நீங்கள் எதையும் உணர முடியாதபடி அப்படி உங்களைக் காதலிப்பேன் நாஸ்தென்கா! நாஸ்தென்கா!” என்பவனைத் தவற விட எந்தப் பெண்ணுக்கு மனம் வரும்.
”பெருந்தன்மையும் நல்லுணர்வும் கண்ணியமும் உடையவரைத்தான் என்னால் காதலிக்க முடியும். ஏனெனில் நான் இவையாவும் உடையவள். அவர் எனக்கு ஏற்றவர் அல்ல. என்னை அடைவதற்குத் தகுதியில்லாதவர்” என்று தன் நிலையை உணர்ந்து அவனைக் காதலிக்கத் தயாராகிறாள். அதன்பின் அவள் அவன் மேல் காதல் கொண்டு இனி அவனுடன் வாழப்போகும் நாட்களை வாழ்ந்து பார்த்து மகிழ்ந்திருக்கும் சிறு கணப்பொழுதுகள் அழகானவை.
நொடிப்பொழுதில் உடைந்து தெறித்துச் சிதறும் குமிழி போல அந்த கணங்கள் கரையும் இடம் நாஸ்தென்காவின் காதலின் வரவால் நிகழ்கிறது. ”இருவரும் ஒருவராய் இருந்துவிடக்கூடாதா” என்று ஏங்கும் அவளின் அந்நேரத்தைய உணர்வுகளைப் புரிய முடிகிறது. இந்த நீண்ட வாழ்க்கைப் பயணத்தில் ஒரு பெண்ணுக்கு/மானுடனுக்கு/உயிர்களுக்கு ஒற்றைக் காதல் மட்டுமே சாத்தியம் தானா? என்ற கேள்வியை எழுப்பும் இடம் இது. தன் முன் வந்து நிற்கும் சலனத்தில் அவள் எடுக்கும் முடிவு அனிச்சையானது. தன்னுடைய முதல் காதலைப் பார்த்த மாத்திரத்தில் சென்று அணைத்துக் கொண்ட மறுகணமே அதே விசையுடன் கனவுலகவாசியின் முன் வந்து அணைத்துக் கொள்கிறாள். “நீங்கள் அவராக இருக்கக் கூடாதா? அவர் நீங்களாக இருக்கக் கூடாதா?” என்ற நாஸ்தென்காவின் ஏக்கம் சமூகத்திலிருக்கும் கட்டுப்பாடுகளையும் அதே சமயம் அதைப் புனைவின் வழி கடக்கும் ஒரு பித்து நிலையையும் காண்பிக்கிறது. இத்தகைய இடத்தைக் கடந்த ஒவ்வொரு வாசகரும் நின்று கண்ணீர் உகுக்கும் இடமிது.
பிரிவென்னும் காதலில் வளர்ந்து வளர்ந்து கனவுகளைக் கட்டிக் கொண்டு பூத்து நின்ற காதல் கைகூடுகிறது. ஒரே சமயத்தில் காதலும், காதல் பிரிவும் கைகூடும் நாஸ்தென்காவிற்காக பரிதவிப்பும், மகிழ்வும் ஒருசேர நிகழ்கிறது. ஆனாலும் நாஸ்தென்காவுக்கு கனவுலகவாசியுடன் இருந்த இந்த நான்கு நாட்கள் வாழ்நாள் முழுவதும் விரித்து விரித்து எடுத்துப் பார்த்துக் கொள்ளக் கூடிய நாட்களாக அமையும். அப்படியான கனவுகள் இனிமையானவை. கனவுகள் அவை மட்டும் தானே நம்மை நாம் வாழ முடியாத புனைவுலகிற்குள் வாழச் செய்பவை.
காதல் பாடல்களை விடவும் காதல் சோகப் பாடல்களே மனதை மீட்டுபவை. இந்த பிரிவென்னும் காதல் அமையப் பெற்றவர்கள் அந்த வகையில் பாக்கியவான்கள். எப்போதும் கனவுலகத்தில் வாழும் அந்த தனியனான கனவுலகவாசி அதே கனவுகளோடு நாவலில் அமையப் பெறுகிறான். யாரால் தாங்கிக் கொள்ள முடியாதோ அவர்களுக்கே துக்கம் அருளப்படுகிறது. பீட்டெர்ஸ்பெர்க்கின் நகர வீதிகளில் இந்த நான்கு நாட்களின் இனிமையோடும், துக்கத்தோடும் அவன் அலைந்து கொண்டிருப்பான் என்று நினைக்கும் போதே மனம் கனக்கிறது. “எனது இரவுகள் மறு நாள் காலையுடன் முடிவுற்றன” என்ற வரிகளே அவற்றைக் கடத்துகின்றன.
நாஸ்தென்காவிற்கும் காலம் முழுமைக்கும் மனதில் எஞ்சப்போகும் காதலாக அது கனிகிறது. “விழித்தெழுந்த பிறகும் நெடுநேரம் நினைவில் நிலைத்திருக்கும் கனவு போல உங்கள் காதல் என் உள்ளத்தில் ஆழப் பதிந்திருக்கிறது… நீங்கள் காதலிக்க வேண்டும். என்னை நீங்கள் கை விட்டு விடக்கூடாது. ஏனெனில் இத்தருணத்தில் உங்களை அப்படி நேசிக்கிறேன். உங்கள் காதலுக்கு ஏற்றவள் நான். என்றும் ஏற்றவளாகவே இருக்க விரும்புகிறேன். நீங்கள் மன்னிக்க வேண்டும். மறவாதிருக்க வேண்டும். காதலிக்க வேண்டும் உங்கள் நாஸ்தென்காவை” இந்தப் பிரிவின் நிமித்தம் அவன் தன்னை வெறுத்துவிடக்கூடாது என்பதிலும், தன் மேலுள்ள காதல் குறைந்துவிடக்கூடாது என்பதிலும் உறுதியாக இருக்கிறாள்.
நாயகனின் இறுதி வரிகள் மேலும் மேலும் இந்த இனிமையான துக்கத்தைக் கூட்டுகிறது. “உனது இனிய புன்னகை துன்பத்தால் தீண்டப்பெறாது என்றும் ஒளி வீசுவதாக! தனிமையான, நன்றி நிறைந்த ஓர் இதயத்துக்குக் கணப்பொழுதேனும் மகிழ்வும் இன்பமும் அளித்தாய் அல்லவா. அதற்காகக் கடவுள் உனக்கு அருள் புரிவாராக!” என்கிறான். இத்துணை இனிமையாக ஒரு நினைவை நிறைத்துக்கொள்ள இயலுமா என்றே தோன்றச் செய்கிறது ஒவ்வொரு வரிகளும்.
இந்த வாழ்க்கைப்பயணம் எப்போதாவது இணைமனங்களை இணையர்களை, நிகரானவர்களை நம் முன் நிறுத்துகிறது. எப்போதும் இணைந்து பயணித்துவிடும் வாய்ப்பை அது சிலருக்குத்தான் அருள்கிறது. சிலருக்குப் பிரிவை இனிய நினைவுகளாக, தீற்றலாக மனதின் ஆழத்தில் புதைத்து விடுகிறது. வேறெந்தப் புதையலை விடவும் நினைவுகள் பொக்கிஷமானவை. காலம் முழுமைக்கும் மீட்டிப் பார்த்து ரசிக்க ஏதுவானவை. அப்படியான நினைவின் புதையலாக இரு மனங்களுக்கு அமைந்த நான்கு வெண்ணிற இரவுகள் அழகானவை. இறுதியாகக் கதையின் நாயகன் சொல்வது போல “அது போதாதா, ஓர் ஆயுட்காலம் முழுமைக்கும் அது போதாதா?”