5.தீராத்தழும்புகள்.
குழந்தைகளைப் பற்றிப் பேசும் திரை இலக்கியம் நுணுக்கமான தளத்தில் நிகழ்பவை. அவை குழந்தைகளுக்கான கேளிக்கையாக மட்டுமே சுருங்கிவிடுமே ஆயின் இலக்கியமாகா. குழந்தைகளின் தடங்களுக்குள் பொருந்தக் கூடிய மானுடனின் மனப்பாதங்கள் உண்டு. அப்பாதத்தைக் கற்பனையில் எழுப்பிப் பொருத்திப் பார்த்து தவிப்படையச் செய்யும் படைப்புகளுக்கு இன்னும் இன்னும் தேவை. அவ்வுணர்வைத் தட்டியெழுப்புகையில் தவறாமல் கண்ணீர் எழுவது நிதர்சனம். போர் போன்ற அதீத வன்மங்களின் பறைசாற்றலின் போது முதலில் முற்றாய் பாதிக்கப்படும் வகையினர் குதலைகள்; அப்போரின் அகரம் பற்றிக் கூட ஆமோதித்துத் தலையசைத்திருக்காத குழந்தைகளின் உயிரும் உடலும் வாழ்வும் தான் முதலில் நசுக்கலுக்குள்ளாகும்.
புனுவல், டிசிகா தொடங்கி அத்தனை மேதைகளும் குழந்தைகளைப் புரிந்து கொள்ள முயன்றிருக்கிறார்கள். குழந்தைகளுக்குப் புரியும்படி படம் எடுப்பது, அவர்களை ஆனந்தம் கொள்ளவைக்கும் கேளிக்கைப் படங்களை உருவாக்குவது ஒருபுறம் தேவைதான். அதனினும் இன்றியமையாதது, குழந்தைகளின் வலியையும் வலிமையையும் பெரியவர்களின் குறைபட்ட பார்வைக்கு முன்வைப்பது.
டார்டீன் சகோதரர்களின் திரைப்படங்கள் பலவும் அந்த தீவிரத்தளத்தை பல முறை சமீபத்தில் முன்வைத்திருக்கின்றன. இந்த மற்றும் கடந்த தசாப்தங்களில் குழந்தைகள் மீதான வன்முறை, அவர்களின் மீதான புரிதலின்மை போன்றவற்றை எழுதியும் திரையில் நிறைத்தும் பார்க்கிறது உலகத் திரைப்பட இலக்கியக் குரல்கள்.
ஒரு துளியில் சமுத்திரங்களின் அடுக்குகள் இருப்பதையும் அவற்றிற்குள் நுண்ணுயிர்களின் ஆட்சிகள் நடந்து கொண்டிருப்பதையும் அறிவியல் உணரத் தொடங்கி நூற்றாண்டாகிறது. அறிவியலை விடவும் கலைகளுக்குத் துணைபோகும் உளவியலோ மானுடத் துளிகளின் மனதை இப்போதுதான் தொட்டுப் பார்க்க திரும்பியிருக்கிறது.
குழந்தைகளின் வரலாற்றுக் களஞ்சியம் எனும் பனுவலின் ஒவ்வொரு பக்கமும் கனத்த இதயத்துடன்தான் திருப்பப்பட வேண்டும் என்பது இன்னொரு கசப்பு. இத்தகைய கதைகளைக் கடக்க நேரும் சில நேரங்களில் நம் இதயம் கிழியும் வரை தவிப்பதும் நிகழும். திரைப்படங்களின் மூலமாக மதலைகளின் வலியை முன்வைப்பது இன்னும் ஒருபடி சென்று, தீயின் அருகாமையில் இருந்து தீயின் மேலேறி நிற்பதைப் போன்றது.
1.System Crasher (2019) / Director : Nora Fingscheidt
சன்னதம் கொண்டு ஆங்கரிக்கும் ‘பென்னி’ என்ற சிறுமியின் ஆக்ரோஷத்தின் முன் காயப்படுபவர்களாகவும் கையறுநிலை கொண்டவர்களாகவும் நின்று கொண்டு விழிபிதுங்கும் அனைவரின் முகங்களும் ஒன்றுபோலாகி விடுகின்றன. எனக்கு, கொற்றவை நாவலில் மலையுச்சியில் பேரோலம் எழுப்பிய குமரியிளங்கண்ணியின் முதற்சொல்லை உச்சரிக்கும் காட்சி நினைவில் எழுகிறது. அவள் நாவிலிருந்து சுரந்து விழும் தீந்தமிழுக்கு முன் ஆதிமனிதர் அனைவரும் மண்டியிட்டுத் தவித்து வழிபடுவர். இங்கு நாகரீக உலகில் அப்படி வீழ்ந்து வழிபடுவதற்கான தடையாக பெருமித உணர்வு இருப்பதால் அவர்கள் முகத்தை வேறெங்கோ திருப்பிக் கொள்கின்றனர்.
அவள் உடைத்துப் போடும் பொருட்களும் முகங்களும் அவளுள் இருக்கும் பெருங்கனலைச் சுட்டும் அறிகுறிகளாகின்றன. அவள் தன்னைக் கிழிக்கும் கூர்வாளினை உண்டுவிட்டுச் செரிக்க முடியாதவள் போலிருக்கிறாள். பாவனையாகக் காட்டப்படும் அன்பு இன்னும் அவள் தீயைக் கிளர்ந்தெழ வைக்கிறது.
தன் தாயின் அணைப்பு மட்டுமே தனக்கு ஏற்புடையதாக இருக்கிறது, மற்றபடி, ‘நீங்கள் அனைவருமே எனது உமிழ்நீருக்கே உரியவர்கள்’ என்கிறாள் அவள். படிப்படியாக அவளது வாழ்நாட்களைப் பதற்றத்துடன் படம் பிடிப்பதில் இருந்த நிதானம் திகைப்பேற்படுத்துவது. இந்த படத்திற்கு தொழில்நுட்ப மாய வித்தைகள் ஏதும் தேவைப்படவில்லை என்பதற்குக் கதைசொல்லியின் தன்னம்பிக்கையும் கதாபாத்திரத்தின் தத்ரூபத்தைப் பிரதிபலித்த நடிகையின் ஆற்றலும் அடிப்படைக் காரணங்கள்.
மெருகேற்றி வைக்கப்பட்டிருக்கும் தரையினையோ, அழகாய் நிறமூட்டப்பட்டிருக்கும் சுவரினையோ எதிர்பாராதவிதமாக அலங்கோலப்படுத்திடக்கூடிய உள்ளாற்றல் இருப்பதாலும் அவளைத் தண்டிக்கப் போதிய சட்டவழிமுறைகளோ ஒழுக்கப் பாடங்களோ இல்லாத நிலை இருப்பதாலும் அவளைக் கண்டு அசூயையும் பயமும் கொள்கிறது சமூகம்.
அன்னையைப் போலவே அவளுக்கு ஓரிரு ஈரங்கள் தளிர்த்தாலும் விரைந்து அவர்களையும் தன் மீது எரிச்சல் கொள்ளச் செய்யும் பொறையின்மை அவளிடம் ததும்புகிறது. எந்த ஒழுங்கமைவையும் சீர்குலைக்கும் கீறல்களைச் செய்யும் சிறுபாதமலர் கொண்ட கொற்றவை பற்றிய இந்த ஜெர்மானிய திரைப்படம் சென்றஆண்டின் படங்களில் முதன்மையானது.
- The Kid With a Bike (2011) / Jean Pierre Dardenne and Luc Dardenne
தன்னைப் பாரமாய் கருதி ஒதுக்கி விட நினைக்கும் தந்தையினை அப்படியொன்றும் அவனால் வெறுத்திட முடியவில்லை, என்ற போதும் அவனது தவிப்பின் கனல் மேல்தளத்தில் தன் மீது அணைப்பு தரும் வளர்ப்புத் தாயின் மேல் சினத்துடன் திரும்பி விழுகிறது. தான் அகவையில் பெரியவள் என்பது தந்த அறிதலினாலேயே மணற்கடியில் கிடக்கும் கணையாழி என அவன் மனதைப் புரிந்து கொள்ளவும் அவளால் முடிகிறது. இருப்பினும் அவன் அவளிடம் நிலை கொள்ள விரும்புவதில்லை. குழந்தைகளுக்குத் தன் செம்மலையும் செருக்கினையும் கடக்க எப்படிச் சொல்லிப் புரிய வைப்பது? அது நீர்வழிப்படும் புனையாய் வரும் வாழ்வின் வளைவுகள் சொல்லித் தரக்கூடும்.
தனது மிதிவண்டியினைப் பல முறை திருடிச் செல்ல விழையும் ஒரு ரெளடி கும்பலிடம் நட்பு கொள்ள வேண்டிய நிர்பந்தம் ஏற்பட, அக்கூடா நட்பு தனக்குத் தரவிருக்கும் அங்கீகாரத்தின் பொருட்டு வளர்ப்புத் தாயினைக் காயப்படுத்திவிட்டு தப்பவும் தயாராக இருக்கிறான். தந்தையின் பிரிவால் ஏற்பட்ட வெடிப்புகளுக்கு மருந்திடும் அவள், மேலும் கடும் குற்ற உணர்வைத் தருகிறாள் அவனுக்கு. அன்பின் எடையைச் சுமக்க வேண்டிய ஆற்றல் ஞானிகளுக்கே இருப்பதில்லை. அதற்குத்தானே பக்கவாட்டில் துறவறத்தைக் கைவசம் வைத்திருப்பது.
டார்டீன் சகோதரர்களின் இன்னொரு திரைப்படமாகிய The Child (2005)இல் தன் மகனை விற்றுவிட்டு அதன் விளைவுகளை அனுபவிக்கும் இருபது வயது தந்தையைப் பார்க்க முடியும். அதன் தொடர்ச்சியாக சில ஆண்டுகளில், தன்னை விலக்கி வைத்திருக்கும் தந்தையைத் தேடித் தவிக்கும் மகனை இங்கு பார்க்க முடியும். அகவை ஒருவனது சுதந்திரத்தையும் செருக்கையும் நிர்ணயிக்கும் காரணிகளுள் ஒன்றாகும் ஒரு புத்தறிதலை இவ்விரண்டு திரைப்படங்களையும் ஒன்றாய் காண புரியக்கூடும்.
தன் புதிய நண்பர்களது அணியில் தன்னை நிருபிக்க ஒரு வழிப்பறிச் சம்பவம் ஒன்றை நிகழ்த்த வேண்டிய முனைப்பில் இருக்கிறான் சிறுவன். எதிர்பாரா விதமாக தந்தை மகன் என இருவரைத் தாக்க வேண்டிய நிலை ஏற்பட, அதன் விளைவாக இழப்பீடும் மன்னிப்பு கோரலும் செய்ய வேண்டியதாகிறது. அங்கு தன் பிழைகளை உணர்ந்து வளர்ப்பு அன்னையிடம் மன்னிப்பு கோருகிறான். விழிக்காட்சி தெளிவுறும் தருணம்.
- The Hunt (2012) / Thomas Vinterberg
இணையத்தின் பிரம்மாண்டமான கண்ணிகளைப் பின்னும் சிலந்திக்கு அரூபமான தோற்றம் இருப்பதில்லை. அதன் காரணமாகவே அதை ஒரு பிரச்சனையாகக் கண்டு கொள்வதில் சாதாரண மக்களுக்கு தடைகள் உள்ளன. ஆயினும், உலகின் அத்தனை அடுக்குகளிலும் அது தன் பிடியை நுழைத்தபடியே இருக்கிறது. குழந்தைகளும் அதன் பிடியிலிருந்து தளர்ந்து விடப்படுவதில்லை. போர்னோகிராபி இன்று சட்டைப்பையில் அணுகுண்டாக கச்சிதமாக அமர்ந்து கொண்டிருக்கிறது. காமத்தின் திரிவழியே எப்போதடா தான் வெடிப்பது என்று தயாராக மந்திர உச்சரிப்பு போல காத்துக் கிடக்கிறது.
அப்படி ஒரு வெடிப்பில் தாளமுடியாத குற்றச்சாட்டிற்குச் சுட்டுவிரலுக்கு முன் நிராயுதபாணியாக நிற்கிறான் லூக்காஸ். குழந்தைகளை நேசிக்கும் இன்மனது இருப்பவனுக்குச் சந்தர்ப்பங்களின் சுழல்கரங்கள் சதி தீட்டுகிறது. அவனது அகத்திற்கும் புறத்திற்கும் கேள்விகளையும் கேலியையும் கூடவே சில கற்களையும் வீசுகிறது சமூகம். அவனது இயல்பையே அவனது முகமூடி என்று இலாவகமாக சொல்லிக் கொள்கிறது. ஓரிரவிற்குள்ளேயே விரைவாக அவனது நட்புலகம் தலைகீழாகி விடுகிறது. அவர்களது கோபத்தினையும் உதறல்களையும் கடந்து அவன் நிற்பது இன்னும் அவர்களது ஆக்ரோஷத்திற்குத் தீனியாகிறது. தொடர்கின்றன தனிமனித தாக்குதல்கள்.
மேட்ஸ் மைக்கெல்சன் என்ற டானிஷ் நடிகர் உலகத்தின் பார்வைக்கு முக்கியமான கலைஞராகத் தெரிந்தது இத்திரைப்படத்தின் மூலம். தன் மீது எறியப்பட்ட முட்களையும் கற்களையும் கடந்து ஓரிடத்தில் குழந்தையின் முன் நிற்கும் போது அவர்கள் இருவரது மனமும் ஒன்றாய் சந்தித்து புன்னகைத்துக் கொள்ளும் தருணம் உலகம் பார்க்கத் தவறிய நட்பின் விதை.
குழந்தைகளுக்கு ஏற்படும் விசித்திரமான கற்பனைகளை விளக்கிப் பேசுவதற்கும் புரிந்து கொள்வதற்குமான முதிர்வைப் பெற இன்னும் கூர்மையான அவதானிப்புகள் கொண்ட பல பத்தாண்டுகள் தேவைப்படலாம் என்று தோன்றுகிறது. அப்போது இன்னும் நுட்பமான சிடுக்குகளை இந்த மானுடம் ஏற்படுத்தி வைத்திருக்கும் என்பதும் கூடுதல் கவனத்திற்குரியது.
- The Painted Bird (2019) / Vaclav Marhoul
தனித்து விடப்பட்டுவிட்ட ஜோஸ்கா தனது தாய் தந்தையரைத் தேடி பயணத்தைத் தொடங்குகிறான். வழியெங்கும் துஷ்டங்களும் வன்மங்களும் தழைத்தோங்கி இருக்கின்றன. போர்க்குருதியை நறுமணம் என்று சொல்லி ஐரோப்பாவே மனம் பிறழ்ந்து ஆடிக் கொண்டிருந்த நாட்கள். தான் கிளப்பி இருக்கும் தீயின் உயரத்தைத் தானே முழுமையாகக் காண முடியாத அதிகாரம் படைத்த ஆட்சியாளர்களின் கைப்பாவைகள் குடியானவர்களிடமும் அத்தகைய பைத்தியக்காரத்தனத்தை விதைத்திருந்தனர்.
செக்கோஸ்லோவேகிய இயக்குநர் தனது மூன்றாவது படத்தில் உலகின் முக்கியமான திரைப்படம் ஒன்றினைத் தந்திருக்கிறார். படத்தின் ஒவ்வொரு காட்சிகளும் நினைவில் இருந்து அகல மறுப்பவை. பாட்டியின் மரணம், சூன்யக்கிழவி, அரவையாலையின் கொடூரம் எனத் தொடங்கி ஜோஸ்கா செல்லும் பயணம் ஆழமான பீதியளிப்பது. ஒவ்வொரு இடைக்கதையிலும் அவனது வலி தாங்கும் திறன் கூடுதலான எடையால் சோதிக்கப்படுகிறது. குருவியின் தலையில் யானையின் பாதங்கள்.
ஒரு காட்சியில் அவனுக்கு அணுக்கமாக இருக்கும் பறவைகள் விற்கும் முதலாளி பற்றி காண்பிக்கப்படுகிறது. அவர் ஒரு பறவைக்கு நிறமேற்றி அதன் கூட்டத்தினை நோக்கி வானிற்கு அனுப்புகிறார். கண் முன்னேயே அது தனது கூட்டத்தாலேயே அந்நியனாய் உணரப்பட்டு கொத்திக் கிழிக்கப்பட்டு அந்தரத்திலேயே உயிரை விட்டு ‘தொப்’ பென தரையில் மரித்து வீழும். அவனுக்கு அது ஆழ்கற்றல். இப்படித்தான் வலியிலிருந்து பாடம் கற்க அவனது தகவமைப்பு தயாராகிக் கொள்ளும்.
அதையே அவன் வேறொரு இடத்தில் பயன்படுத்திக் கொள்கிறான். நாஜி அதிகாரியைக் கண்ட ஒரு ஆள் எச்சில் உமிழ்கிறார். அதற்குப் பரிசாக தலையில் குண்டைப் பெறுகிறார். அடுத்து துப்பாக்கி தன் விழிகளை ஜோஸ்கா பக்கம் திருப்பவிருக்கிறது. அவன் விடுவிடுவென நாய் போல நகர்ந்து வந்து அந்த அதிகாரியின் சப்பாத்துகளில் இருக்கும் உமிழ்நீரைத் துடைத்து விட்டு இரக்கம் கோரிய பார்வையை தருவான். அது அந்த கணத்தில் அவன் உயிரைக் காக்கும்.
சம்பவங்கள் இத்தனை வலுவாக அடுக்கப்பட்டு அடுத்தடுத்த காட்சிகள் தீயென எழுவதும், யதார்த்தச் சித்தரிப்பு குலையாமல் இருக்க பெரிதும் மெனக்கெட்டிருப்பதும் சமீபத்தில் எங்கும் பார்த்திருக்காதது. சொல்லிக் கொண்டே இருக்க வேண்டிய தினவு ஏற்படுகிறது.
கருப்பு வெள்ளை இன்னும் படத்தை அணுக்கத்திற்கு எடுத்து வருகிறது. ஜோஸ்காவாக நடித்திருக்கும் சிறுவனின் மனத்திடம் அபாரமானது. அவன் தலையை மட்டும் வெளிக்காட்டி புதைக்கப்பட்டிருக்கும் காட்சியும் அவனால் தங்களது தேவாலயம் அசுத்தம் அடைந்தது என்று சொல்லி உறுப்பினர்களால் சாக்கடைக்குள் தூக்கி வீசப்படும் காட்சியும் என அசாத்தியமான நடிப்பு.
- Loveless (2017) / Andrey Zvyagintsev
தற்படங்கள் எடுத்துக் கொண்டே இருக்கும் தாய். அவள் தனது உடலின் வடிவத்தைக் காபந்து செய்து கொள்ளும் மும்முரம் பற்றிய ஓரிரு காட்சிகளிலேயே மனநிலையையும் முன்வைத்து விடுகிறது. தந்தை இன்னொரு பிள்ளை சுமப்பவளை மணந்து கொள்ள ஆயத்தமாகிறான். இரு தலைக் கொள்ளி எறும்பென தனிமையில் கதவிற்குப் பின்னால் நின்று கொண்டு அழுகின்ற காட்சியில் அல்யோஷா நம்மைக் கலங்கடிக்கிறான்.
திரைப்படத்தில் பெரிதாக ஒன்றுமே நிகழாதது போல நகர்ந்து கொண்டிருக்கும் காட்சிகள், ஒரு புள்ளியில் முழுவதுமாய் பார்ப்பவரை உள்ளிழுத்துக் கொள்ளும் ஆற்றலுடன் நகர்வதே இயக்குநரின் மேதமைக்குப் பதம். வெகு சில காட்சிகளே வந்து போகும் அல்யோஷா கதாபாத்திரம் அத்தனை ஆழமாய் நிழலாடுகிறது. அல்யோஷா என்ற பெயரே கூட தூய்மையின் குழந்தைமையின் உருவகம்தானே.
தாய் தந்தை இருவருக்கும் தாம் விழைந்த திசைகள் திறந்து கொள்ளும் தருணத்தில் அல்யோஷா அவர்களுக்குத் தரும் பரிசு அவர்களைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டுச் செல்கிறது. அவர்கள் முகத்தில் தீராத்தழும்பு போல சோகத்தின் ரேகைகள் நிலைக்கச் செய்யப்பட்டுவிட்டன. தனது இருப்பினை அவன் உணர்த்திச் செல்லும் காட்சிகள் வெகு ஆழமானவை. இயக்குநர் ஏற்கனவே தனது லிவியாதன் திரைப்படத்தில் செய்த முடிவினை தானே கடந்திருக்கிற காட்சிகள் கொண்ட திரைப்படம் இது.
- கமலக்கண்ணன்