ஓடுங்கள் அப்பா -கிம் அரோன், தமிழில்: ச. வின்சென்ட்

நான் ஒரு விதையைவிடச் சிறியதாக ஒரு கருவாகக் கருவறையிலிருந்த போது என்னுள் இருந்த சிற்றிருள் என்னை அடிக்கடி அழச்செய்யும். நான் சுருக்கங்களுடன், வேகமாகத் துடிக்கும் இதயத்துடன் மிகச்சிறியவளாக இருந்தபோதும் கூட, அப்போது என் உடலுக்கு மொழியில்லாததால் அதற்கு நேற்றும் இல்லை நாளையும் இல்லை.

சதையின் பேசாத ஒரு பிண்டம் எப்படி ஒரு கடிதம் போல உலகிற்குள் தரப்படமுடியும் என்று காட்டியது என் அம்மாதான். என்னுடைய அம்மா என்னை அடித்தளத்து ஃப்ளாட்டின் ஒருபகுதியில் பெற்றெடுத்தாள், அது கோடைக்காலம், மேலிருந்து வடிகட்டிய கதிரவன் ஒளி உப்புத்தாள்போல மின்னிற்று. மேலாடை மட்டுமே மூடியிருக்க அறையில் வேதனையில் நெளிந்து அழுத்திப்பிடிக்க வேறு கைகள் இல்லாததால் அதற்குப்பதிலாகக் கத்தரிக்கோலைப் பிடித்துக் கொண்டாள்.  சன்னலுக்கு வெளியில் எங்கோ நடந்து போய்க்கொண்டிருந்தவர்களின் காலடி ஓசைகள். அம்மா சாக வேண்டுமென்று நினைத்தபோதெல்லாம் கத்தரியைக்கொண்டு தரையைக் குத்துவாள். இப்படி சில மணிநேரங்கள் போனபிறகு, தன்னுடைய சொந்த உயிரை வெட்டுவதற்குப் பதிலாக எனது தொப்புள் கொடியை வெட்டினாள். திடீரென்று என்னுடைய அம்மாவின் இதயத் துடிப்பைக் கேட்டேன், எனது காதுகள் மரத்துப் போகும் என்று நினைத்தேன்.

எனது வாழ்க்கையில் நான் முதலில் பார்த்த ஒளி ஒரு சன்னல் அளவு இருந்தது. அப்போதுதான் ஒளி எனக்கு வெளியே இருக்கும் ஒன்று என்று நான் அறிந்து கொண்டேன்.

அப்போது எனது தந்தை எங்கே இருந்தார் என்பது எனக்கு நினைவில்லை. அப்பா எப்போதும் எங்காவது இருப்பார்; அந்த  எங்காவது இங்கு இல்லை. அப்பா எப்போதுமே தாமதமாகத்தான் வருவார், அல்லது வரவே மாட்டார். அம்மாவும் நானும் எங்கள் துடிக்கும் இதயங்கள் ஒன்றுடன் ஒன்று ஒட்டியிருக்க இறுக்கமாக அணைத்துக்கொண்டு படுத்திருப்போம். என்னுடைய உடலின்மேல் எதுவும் போத்தியிராமல் என் அம்மா என் முகத்தைத் தனது பெரிய கரங்களால் பலமுறை வருடுவாள். எனக்கு அம்மாவைப் பிடிக்கும். ஆனால், எதை எப்படி வெளிப்படுத்துவது என்று தெரியாது. முகத்தைமட்டும் ஒருமாதிரி வைத்துக் கொள்வேன். நான் முகத்தை அதிகமாய்ச் சுருக்கச் சுருக்க அம்மா அதிகமாகச் சிரித்தாள் என்று நான் கண்டுபிடித்தேன். ஒருபக்கம் கேலியாகச் சிரிக்கத் தக்கதாகின்ற அளவிற்கு இருவரும் சேர்ந்து சிரிப்பது இருக்காதோ என்று நான் நினைத்தேன்.

அம்மா தூங்கிவிட்டாள். நான் தனிமையாக இருப்பதாக உணர்ந்தேன். ஆனால் உலகம் அமைதியாக இருந்தது. முன்னாள் காதலனிடமிருந்து வந்திருந்த, மரியாதையின் நிமித்தம்  எழுதப்பட்ட கடிதத்தைப் போலக் கொஞ்சம் தள்ளி கதிரவனின் ஒளி விழுந்து கிடந்தது. மரியாதை – அது தான் இந்த உலகத்தில் எனக்குப் பிடிக்காத ஒன்றின் முதல் அனுபவம். அப்போது என்னிடம் பாக்கெட் இல்லாததால், முஷ்டியை இறுக்கினேன்.

என்னுடைய தந்தையை நினைக்கும்போதெல்லாம் நான் கற்பனை செய்யும் காட்சி ஒன்றுண்டு. எதையோ நோக்கி வேகமாய் ஓடும் காட்சிதான் அது. அப்பா மின்னும் இளஞ்சிவப்பு கால் சட்டை அணிந்திருந்தார். அடர்த்தியான முடியுடன் நீண்ட கால்கள். அவர் முதுகு நேராக இருக்க முழங்கால்களை உயரமாய்த் தூக்கி அப்பா ஓடும் காட்சி, யாரும் கவலைப்படாத சட்டங்களைக் கடைப்பிடிக்கவேண்டும் என்று வற்புறுத்தும் அரசாங்க அதிகாரியின் முகம் போல அவ்வளவு அபத்தமாக இருக்கும். என்னுடைய கற்பனையில் அப்பா ஓய்வில்லாமல் பலபத்தாண்டுகளாய் ஓடிக்கொண்டே இருக்கிறார்; அவரது முகபாவமோ நிற்கும் முறையோ மாறவில்லை.  சிவந்த அவர் முகத்தில் அவருடைய தங்கப் பற்களைக் காட்டும் புன்னகை ஒளிவிடும். யாரோ மோசமாக வரைந்த படத்தை என் அப்பா தலையில் ஒட்டிவிட்டது போல இருக்கும்..

 அப்பா மட்டும்  இந்தவிஷயத்தில் தனியாக இல்லை. உடற்பயிற்சி செய்யும்போது யாருமே வேடிக்கையாகத்தான் தோன்றுவார்கள். இதனால்தான் பைன் மரத்தின் மேல் தொந்தியை மோதும் பயிற்சி செய்யும் மத்திய வயது ஆண்களையும், நடக்கும்போது தாளத்திற்கேற்ப கைதட்டிக்கொண்டுபோகும் மத்தியவயதுப் பெண்களையும் பார்க்கும் போது எனக்குச் சங்கடமாக இருக்கும். ஆனால் அவர்கள் அதில் தீவிரமாகவும் ஆர்வமுமாகவும் எப்போதும் இருப்பார்கள், தங்கள் உடல் நலனுக்காகக் கொஞ்சம் விளையாட்டுத்தனமாக இருப்பதுபோல.

நான் அப்பா ஓடியதைப் பார்த்ததே இல்லை; அப்படியிருப்பினும் நான் என் அப்பாவை ஒரு ஓட்டக்காரராகவே நினைத்து வந்திருக்கிறேன். நெடுங்காலத்திற்கு முன்னால் அம்மா சொன்ன கதையிலிருந்து வந்த புனைவாக இது ஒருவேளை இருக்கலாம்.  நான் முதலில் இக்கதையைக் கேட்டபோது அம்மா துவைக்கும் பலகையைக் கால்களுக்கு இடையில் வைத்து துணியைக் கரகரவென்று நுரை  வரத் தேய்த்துக் கொண்டிருந்தாள். துணி துவைக்கும்போது அம்மா அதிகம் அலட்டிக்கொள்வதால் கோபமாக இருப்பதுபோலத் தோன்றினாள்.

தனக்காக அப்பா ஓடியதில்லை என்று அம்மா சொன்னாள். அவரை விட்டு விட்டுப் போகப்போவதாக அம்மா சொன்னபோதோ, அவரைத் தேடுவது என்று சொன்னபோதோ, என்னைப் பெற்றபோதோ அவர் ஓடிவரவில்லை. அப்பா ஒரு பிரபுவின் பொழுதுபோக்கு மனம் கொண்டவர்  என்று மக்கள் சொன்னார்கள்; ஆனால் அம்மா அவர் ஒரு முட்டாள் என்று நினைத்தாள். அப்பாவிற்காகக் காத்திருப்பது அதுதான் கடைசி நாள் என்று அம்மா குறிப்பிட்ட நாளுக்கு அடுத்த நாள் வரக்கூடிய ஆள் அவர். அப்பா காலதாமதமாக வருவார்; ஆனால் எப்போதும் தொங்கிய முகம்தான்.  அம்மா விட்டுக்கொடுக்கக் கூடிய ஆள். அப்பாவுடைய கூச்சமுடைய, மந்தமான, மாணவனின் தோற்றத்தைப் பார்த்து ஜோக் அடிக்கிற ஆள் அவள்தான். அப்பா தாமதத்திற்குச் சாக்குச் சொல்லமாட்டார். ஆர்ப்பாட்டம் செய்ய மாட்டார். உலர்ந்த உதடுகளுடனும் கறுத்த முகத்துடனும் வந்துவிட்டார்; அவ்வளவுதான்.  அப்பா வெறுத்து ஒதுக்கப்படுவதற்கு அஞ்சுபவராக இருக்கவேண்டும், இது எனது கற்பனைதான். வருத்தப்படுவதால் வராத ஆள். அவர் வருத்தப்படுவதால் இன்னும் வருத்தப்படுத்தக்கூடிய சூழலை உருவாக்கக்கூடிய ஆள் அவர். அதன் பிறகு அவர் மிக அதிகமாக வருத்தப்படுவதால் முட்டாளாக ஆகாமல் கெட்டவராக ஆகிற மனிதர் அவர். கெட்டவராக ஆக விரும்புகிற அளவுக்கு அவர் நல்லவர் என்று நான் நினைக்கவில்லை. தப்பு செய்தது அவராக இருந்தாலும் அதற்காக மற்றவர்கள் தங்களை மோசமாக நினைக்கச் செய்யக்கூடிய அளவிற்குக் கெட்டவர் என் அப்பா. கெட்டவர்களாகவும் அதேசமயம் இரக்கம் காட்டவேண்டியவர்களாகவும் இருப்பவர்கள் தான் உலகில் மிக மோசமானவர்கள் என்று இன்னும் நினைக்கிறேன். ஆனால் அப்பா எப்படிப்பட்டவர் என்று தெரிந்துகொள்ள எனக்கு வழியே இல்லை. தனக்குப் பின்னால் அப்பா விட்டுச் சென்றிருப்பவை சில உண்மைகள்தான். ஒரு ஆளின் குணத்தை எடைபோட உண்மைகள்தான் சிறந்த வழி என்றால், அப்பா கெட்டவர் என்பது தெளிவாகத் தெரிகிறது. அல்லது, அவர் நான் நன்றாகத் தெரிந்து கொள்ளாத ஒரு மனிதர். எப்படி இருப்பினும் நான் சொல்லவருவது என்னவென்றால் இந்த மந்தமான அப்பா தனது திறமையையெல்லாம் காட்டிவிட்டு ஓடிவிட்டார் . சியோலுக்கு பிழைப்புத் தேடி என் அப்பா வந்த சில மாதங்களுக்குப் பிறகுதான்.

அப்பா சியோலுக்கு வந்தவுடன் அவருக்கு ஒரு தச்சுத் தொழிற்சாலையில்  வேலை கிடைத்தது. இப்போது நினைத்துப் பார்க்கும்போது, என்னுடைய அப்பாவைப்போன்ற ஒரு மனிதர் பிழைப்புத் தேடிச் சொந்த ஊரைவிட்டு வந்தது அபூர்வம்தான். ஆனால் அந்தக்காலத்தில் மற்றவர்களெல்லாம் செய்தது போலத்தான் செய்தார். சியோலிலிருந்து எப்போதாவது அம்மாவுக்குக் கடிதம் எழுதுவார். அப்பாதான் அதிகம் கடிதம் எழுதுவார். அம்மாவுக்குத் தன்னைத் தனியாகவிட்டுவிட்டு அவர் சியோல் போனதில் கடுங்கோபம். பிறகு ஒருநாள் அம்மா தாத்தாவுடன் பெரிய சண்டை போட்டுவிட்டு ஓடி வந்து விட்டாள். இருவருக்கும் ஒத்துப் போகவில்லை. உரையிலிருந்த முகவரியை வைத்துக் கொண்டு வளைந்து வளைந்து போகும் மர்மப்பாதை போன்ற தெருக்களின் வழியாய் வந்து அப்பாவின் வாடகை அறையைக் கண்டுபிடித்துவிட்டாள். அவளுக்குப் போக வேறொரு இடம்  இல்லை. அவள் நோக்கம் ஒருசில நாட்கள் அங்கு தங்குவதுதான். ஆனால் அப்பாவுக்கு அது நோக்கம் இல்லை. அம்மா வந்த நாளிலிருந்து அப்பா பாலுறவுக்கு அழைக்கத்தொடங்கிவிட்டார். அது புரிகிறது. அப்பாவுக்கு இளவயது. ஒரே அறையில் ஒரு இளம்பெண்ணுடன் தங்க வேண்டும். அதுவும் அவர் விரும்பிய பெண். அப்பாவின் கெஞ்சல் , எரிச்சல், உளறல் பல நாட்கள் தொடர்ந்தன. அவர்மேல் அம்மா இரக்கம் கொண்டாள். ஒருவேளை என் வாழ்நாள் முழுவதும் இந்த மனிதனின் சுமையுடன் வாழவேண்டும்போலும் என்று நினைத்திருக்கலாம். கடைசியில் அவள் அனுமதித்துவிட்டாள். அவரோடு மெத்தைக்குக்கீழ் படுப்பாள், ஆனால் ஒரு நிபந்தனை. அவர் உடனே போய் கருத்தடை மாத்திரை வாங்கி வரவேண்டும்.

அப்போது  அப்பா ஓடினார். அந்தச் சேரிப்பகுதியிலிருந்து மருந்துக் கடைகள் இருந்த கடைத் தெருவுக்கு படுவேகமாக ஓடினார்.ஒன்றுக்குப் போகவேண்டியதைப் போல அவர்முகம் சிவந்திருந்தது, முகம் புன்னகையால் கிழிந்து போயிருந்தது. அவர் ஓடுவதை நாய் பார்த்து அதிர்ந்து குலைக்க அக்கம் பக்கத்து நாய்கள் எல்லாம் ஒருசேரக் குலைக்கத் தொடங்கின. அப்பா ஓடினார், ஓடினார். அவர் முகம் சிவக்க, முடி பறக்க, படிக்கட்டுகளைத் தாண்டி இருளைக் கிழித்துக்கொண்டு காற்றை விடக் கடிதாக ஓடினார்.  அவசரத்தில் அவரது கால் சாம்பல் குவியலில் இடறிக் குப்புற விழுந்தார். வெள்ளைச் சாம்பல் பூசிக்கொண்டு ஒரு வினாடியில் எழுந்து, எந்த வருங்காலத்தை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறோம் என்று தெரியாமல் அதில்தான் தன் வாழ்க்கையே இருக்கிறது என்பது போல ஓடினார். அவரது வாழ்க்கையில் முன்னால் இவ்வளவு வேகமாக ஓடியிருக்கிறாரா? என்னுடைய அம்மாவை அணைப்பதற்காகவென்று அப்பா ஓடியபோது நான்  எதையும் பார்க்கவோ கேட்கவோ முடியாவிட்டாலும், “ஆவ், அப்பா! வெளியில் தெரிவதைவிட நீங்கள் நல்ல ஓட்டக்காரர்,” என்று கத்த நினைத்தேன்.

அன்று இரவு அப்பா வீட்டிற்குத் திரும்பிய அவசரத்தில் மருந்துக் கடைக்காரரிடம் குடும்பக் கட்டுப்பாடு மாத்திரையை எப்படிச் சாப்பிடுவது என்று கூடக்கேட்கவில்லை. அப்பாவிடம் அம்மா எத்தனை மாத்திரை உட்கொள்ளவேண்டும் என்று கேட்டதற்கு, வெள்ளைச் சாம்பல் பூசிய அப்பா, “இரண்டு என்று நினைக்கிறேன்,” என்று சொல்லித் தலையைச் சொரிந்தார்.  அம்மா ஒரு நாளைக்கு இரண்டு வீதம் சில மாதங்கள் உட்கொண்டதாக அம்மா சொன்னாள். அந்த மாதங்களில் வானம் ஏன் மஞ்சளாகத் தெரிகிறது, அவளுக்கு ஏன் வாந்தி மயக்கம் வருகிறது என்று நினைத்தது உண்டு. அவள் ஒரு மருந்துக் கடைக்காரரை இதுபற்றிக் கேட்டு ஒருமாத்திரையாகக் குறைத்துக் கொண்டாள். ஒரு நாள் மாலை அவளுடைய நிலவொளி இடுப்புக் குளியலுக்காக வாளித்தண்ணீரில் உரைந்து போயிருந்த பனிக்கட்டியை உடைத்ததில், குளிரில் விரைத்து மாத்திரை போட மறந்துவிட்டாள். அம்மா கர்ப்பம் தரித்தாள். அவள் வயிறு பெரிதாக ஆக இவர் முகம் வெளுத்துக் கொண்டே போயிற்று. அவர் தந்தையான அன்று அவர் வீட்டைவிட்டுப் போய்விட்டார். போனவர் போனவர்தான், அதன்பிறகு வரவே இல்லை.

ஓட்டம் உலகம் முழுவதும் எல்லாக் காலங்களிலும் பிரபலமான விளையாட்டாக இருக்கிறது என்று சொல்கிறார்கள். ஓடுதல் உடல் முழுவதற்குமான ஒரு பயிற்சி; இதயத்தையும் நுரையீரலையும் போதுமான அளவு தூண்டி இதயத் தசையை உறுதிப்படுத்துகிறது. முதலில் அது நடைப்பயிற்சிக்கும் வேகமாக ஓடுவதற்கும் இடைப்பட்டதாக வந்தது. ஓடுதலின் நன்மைகளில் ஒன்று அதற்குச் சிறப்புத் திறனோ வேகமாக ஓடுவதோ தேவைப்படாது. மேலும் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கோ பருவ நிலைக்கோ உரியது இல்லை. ஓடும் விளையாட்டுக்கு வலுவான, தாங்கிக் கொள்ளும் திறன்  தேவை என்று சொல்கிறார்கள். ஆனால் எனக்கு உறுதியாகத் தெரியவில்லை. என்னை விட்டுப்போன இந்த மனிதர் விட்டுப்போன இடத்திலிருந்து இவ்வளவு காலம் ஓடிய வலிமையையோ, ஓடிய காரணத்தையோ எப்படி ஏற்றுக் கொள்வது என்று எனக்குத் தெரியவில்லை.

ஓடுவதற்காகவே அப்பா வீட்டை விட்டுப் போனார். அப்படித்தான் நம்பப் போகிறேன் என்று முடிவு செய்தேன். போருக்குப் போவதற்கோ, புது மனைவி வேண்டும் என்பதாலோ, வெளிநாடு ஒன்றில் எண்ணெய் குழாய் பதிக்க உதவவோ அவர் போகவில்லை. அவர் வீட்டை விட்டுப்போன போது அவருடைய கைக்கடிகாரத்தை எடுத்துக்கொண்டு  போக மறந்து விட்டார், அவ்வளவுதான்.

எனக்கு அப்பா இல்லை. ஆனால் அதற்குப் பொருள் அவர் இங்கே இல்லை. அப்பா எங்கேயோ ஓடிக்கொண்டிருக்கிறார். அவருடைய ஒளிரும் சிகப்பு அரைக்கால் சட்டையில் ஃபுகொகாவைக் கடந்து, போர்னியோ தீவுகளின் வழியாய் கிரீன்விச் வானாய்வுக்கூடத்திற்குப் போவதைப் பார்க்கிறேன். ஸ்ஃபின்க்சின் இடது பாதத்தில் திரும்புவதை, எம்பையர் ஸ்டேட் பில்டிங்கின் 110 ஆம் குளியலறையைப் பார்ப்பதை, ஐபீரியத் தீபகற்பத்தில் சயரா தெ கௌடராமாவில் ஏறுவதை நான் பார்க்கிறேன். இருளில் கூட அப்பா எங்கே இருக்கிறார் என்று என்னால் பார்க்கமுடிகிறது. அது அவருடைய ஒளிரும் கால்சட்டையின் மினுமினுப்பினால் அது சாத்தியம். அப்பா ஓடுகிறார், யாராவது அவரைப் பாராட்டியிருப்பார்கள் என்பதல்ல.

***

அம்மா என்னை ஜோக்குகளிலேயே வளர்த்தாள். நான் சோகத்தில் உழன்று கொண்டிருக்கும்போது அவள் தனது ஈரவிரல்கள் இரண்டால் கழுத்தைப் பிடித்துத் தூக்குவார். இந்த வேடிக்கை சிலவேளைகளில், நான் அப்பாவைக் கேட்கும்போது போல, நம்பமுடியாத அளவுக்கு முரட்டுத்தனமாக இருக்கும். அப்பா பற்றிய பேச்சுக்குத் தடையில்லை. அவர் எங்களுக்கு உண்மையில் முக்கியம் இல்லை, அவ்வளவுதான். அதனால் அவரைப்பற்றி நாங்கள் அதிகம் பேசமாட்டோம். ஆனால் சில வேளைகளில் அந்தப் பேச்சு எவ்வளவு சலிப்புத் தருகிறது என்று காட்டிக் கொள்வார். ”உன் அப்பாவைப்பற்றி உனக்கு எத்தனை முறை சொல்லியிருக்கிறேன் என்று உனக்குத் தெரியுமா?” என்று கேட்பார். நான் பயந்துபோய், “தெரியும்…” என்று இழுப்பேன். பிறகு அம்மா கேலியுடன், “முடியில்லாத சாமான் தெரியுமா?” என்று சொல்லித் தானாக உரக்கச் சிரிப்பாள். அப்போதிருந்து எனக்குத் தெரியும் என்று சொல்வது எவ்வளவு ஆபாசமானது என்று நினைத்துக் கொண்டேன்.

எனக்கு அம்மா கொடுத்த மிகப்பெரிய சொத்து என்னையே நொந்துகொள்ளாமல் இருப்பது எப்படி என்பதுதான். எனக்காக அவள் வருத்தப்பட்டதில்லை; என்மேல் இரக்கம் காட்டியதும் இல்லை. ஆகவே நான் அம்மாவிற்கு நன்றியுடன் இருந்தேன். எனக்குப் புரிந்தது, என்னிடம் நன்றாக இருக்கிறேனோ   என்று மக்கள் கேட்டால் அவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்று அவர்களையே கேட்டுக் கொள்கிறார்கள். எங்கள் உறவு மீட்பு பற்றியது அல்ல; நிற்பதற்கான அனுமதிச்சீட்டுகள்  போல நேர்மையானது.

அம்மாவிடம் பாலுறவு பற்றிக் கேட்கும்போதெல்லாம் நல்ல பதிலைக் கொடுப்பார். எனக்கு அப்பா இல்லாததால் எனக்குப் பலவற்றைப்பற்றித் தெரிந்துகொள்ள ஆசை. ஒருமுறை கார் விபத்தில் காலை இழந்த ஒருவர் நொண்டிக்கொண்டு போவதைப் பார்த்து, ”இவர் எப்படி நெருக்கமான உறவு வைத்துக்கொள்ள முடியும்?” என்று நான் கேட்டேன். அவள் என்னை மேலும் கீழும் பார்த்து, நறுக்கென்று, “காலாலா செய்வார்கள்?” என்று பதிலளித்தாள்.

என்னுடைய மார்பகங்கள் பெரிதாகத் தொடங்கிய வேளையில் கூட அது பற்றிக்கவலை காட்டாமல் அம்மா ஏதாவது சேட்டை செய்வாள். என்னோடு கைகோர்த்து நடப்பதுபோலப் பாசாங்கு செய்வாள். பிறகு அவளது முழங்கையால் நெஞ்சை இடிப்பாள். அப்படி நடக்கும்போதெல்லாம் நான் கத்திக் கொண்டு ஓடுவேன். ஆனால் என்னுடைய மார்பகங்களில் ஏற்பட்ட லேசான வலி நன்றாக இருந்ததாக உணர்வேன்.

இந்த உலகில் அம்மாவுடைய மறைந்து கிடக்கும் கவர்ச்சியைத் தெரிந்தவர் ஒருவர் இருந்தார். அவர் எனது தாத்தா, அம்மாவுடைய அப்பா. அவரது வாழ்நாள் முழுவதும் என் அம்மாவுடன் ஒத்துப் போனதே இல்லை. தாத்தா மீதான நினைவுகள் அதிகமில்லை எனக்கு. தந்தையில்லாத எனக்காக அவர் ஒருவார்த்தை சொல்லமாட்டார் என்பதும் வாய்ப்புக் கிடைத்தபோதெல்லாம் என் அம்மாவை அவமானப்படுத்திப் பேசுவார் என்பதும் தான் நினைவு இருந்தது. எனக்குத் தாத்தாமேல் பிரியம் தான். ஆனால் அவர் என்னைத் தட்டிக் கொடுத்தது கிடையாது, திட்டியதுகூடக் கிடையாது. ஒருவேளை அவருடைய கவனத்தைக் கவரும் அளவிற்குப் பெரியவள் இல்லை போலும் நான். பிறகு ஒருநாள் என்னுடன் பேசினார். கஞ்சாவெல்லாம் போட்டுவிட்டு நல்ல மனநிலையில் இருந்தார். என்னை உற்றுப்பார்த்துவிட்டு, “நீ யாருடைய மகள்?” என்றார் திடீரென்று. ”நான் சோ ஜா-ஓக் மகள்,” என்று உரக்கச் சொன்னேன். தாத்தா அதைக் கேட்காதது போல நடித்து, “என்ன? யார் மகள் நீ?” என்று கேட்டார் விளையாட்டாக. நான் உற்சாகத்தில் மேலும் கீழும் குதித்து “சோ ஜா-ஓக்! சோ ஜா-ஓக்கின் மகள்,” என்றேன். என்னுடைய குழந்தைப் பருவத்தின் கான்க்ரீட் முற்றத்தில் எப்போதும் கத்த வேண்டும் என்று நினைத்தேன். கடைசியில் தாத்தா, “அப்படியா? நீ சோ ஜா-ஓக்கின் மகளா?” என்றுசொல்லிக் கோபத்தில் கொந்தளித்தார். அவர் முன்னால் என்னை உட்காரவைத்து என் அம்மா சிறுவயதில் செய்த ஒவ்வொரு குற்றத்தையும் எடுத்துச்  சொல்லத் தொடங்கினார். நான் எனது பெரிய கண்களைச் சிமிட்டி தாத்தா சொல்லிய வார்த்தைகளை ஆர்வமுடன் கேட்பேன். பல வேளைகளில் அவர் அம்மாவை வறுத்தெடுப்பார். அப்போதெல்லாம் அம்மா அவர் சொல்வதற்கெல்லாம் எப்படி எதிர்த்துப் பேசுவாரென்றும் என்னுடைய சித்தி எவ்வளவு அருமையான மகள் என்றும் சொல்ல மறப்பதில்லை.

இதற்கு நேர்மாறாக அம்மா அடிக்கடி சொன்னவற்றில் ஒன்று, “எப்படி ஒருவர் நல்ல குடும்பச்சூழலில் பிறக்க வேண்டும்,” என்பது. தாத்தாவுடன் சண்டைபோட்டு வீட்டை விட்டு ஓடி வந்திராவிட்டால் அவள் வாழ்க்கை எப்படி மாறியிருந்திருக்கும் என்று சொல்வாள். அதை அவள் பேசியபோதெல்லாம் நான் தாத்தா பேசும்போது செய்தது போலவே அம்மாவின் துன்பங்களை உள் வாங்கிக்கொண்டு விழித்துக் கொண்டு அமைதியாக உட்கார்ந்திருப்பேன்.

இருவரும் எவ்வளவுதூரம் ஒருவரை ஒருவர் வெறுத்தாலும், குழந்தையைத் தானாக வளர்த்த அம்மாமேல் தாத்தா எவ்வளவு காட்டமாக இருந்தாலும், பாட்டியைத் தாத்தாவின் வைப்பாட்டியினுடைய உள்ளாடைகளைத் துவைக்கச்செய்ததை வெறுத்தாலும் தாத்தாவை நான் ஏற்றுக் கொள்ள ஒரே ஒரு காரணம் இருந்தது. அவர் சாவதற்குச் சில நாட்களுக்கு முன்னர் தாத்தா அம்மாவிடம் போகிற போக்கில் சொன்ன ஒருவாக்கியம்தான்.

ஆகவே, அன்று ( தற்செயலாக வந்த ஒருவருக்காக) அவர் உட்கார்ந்திருந்தார். அவர் மூக்கை நுழைக்கக் கூடியவற்றிலெல்லாம் தலையிட்டுக் கொண்டிருந்தார். அம்மா ஒன்றும் பேசாமல் அமைதியாக இருந்ததைப் பார்த்து இவருக்கு வார்த்தைகள் வரவில்லை. என்ன பேசலாம் என்பது பற்றிச் சிறிது யோசித்துவிட்டு, என்னுடைய இனிமையான சித்தியை அம்மாவுடன் ஒப்பிடத் தொடங்கிவிட்டார். அவளை வாய்க்குவந்தபடிபேசி முடித்தபிறகு அம்மா அமைதியாக இருந்ததால் வார்த்தைகள் வரவில்லை. சிறிது நேரம் காலிக்கோப்பையை நோண்டிக்கொண்டிருந்தார். தொப்பியை எடுத்தார். நானும் அம்மாவும் வாயில் வரையில் முறைக்காக அவருடன் போனோம். ஆனால் தாத்தா கதவருகில் சிறிது நேரம் தயங்கி நின்றார். ஏதோ வினோதமாகச் சொல்லிவிட்டு மறைந்துவிட்டார்.

“அப்படியே இருந்தாலும், நான் உறவு வைத்துக் கொள்வதாய் இருந்தால் சின்னப் பெண்ணுடன் தான் வைத்துக் கொள்வேன், தடிப் பெண்ணுடன் அல்ல.”

சிலநாட்கள் கழித்து தாத்தா இறந்து விட்டார். அம்மாவுடைய கவர்ச்சியை அவளுடைய சிறு இரகசியத்தைத் தெரிந்த ஒரே ஆள் தாத்தாதான் என்று நினைக்கிறேன். இப்போது தாத்தா இறந்துவிட்டதால், அதைத் தெரிந்த மிச்சம் இருக்கும் ஒரே ஆள் நான்தான்.

**

அம்மா ஒரு டாக்சி ஓட்டி. சியோலைச் சுற்றி ஓட்டி வரலாம், என் மேலும் ஒரு கண் வைத்துக் கொள்ளலாம் என்பதால் தான் இந்தத் தொழிலை அவள் தேர்ந்துகொண்டாள் என்று முதலில் நினைத்தேன். பிறகு என் அப்பாவை விட வேகமாக ஓடமுடியும் என்பதால்தான் டாக்சி ஓட்டினார் என்று நினைத்தேன். அம்மாவுக்கு அடுத்து சில வேளைகளில் முன்னால் சிலவேளைகளில் பின்னால் அப்பா ஓடிவருவதைக் கற்பனை செய்கிறேன். என்னுடைய அம்மா வெறுப்பின் பல ஆண்டுச் சுமையால் ஆக்சிலேட்டர் மேல் குனிந்திருப்பது, அப்பா தன்னைக் கண்டுபிடித்துவிட்டார்கள் என்பதை அறிவது ஆகிய அவர்களின் முகங்களின் பிம்பங்கள் என் தலையின் உச்சியில் குழப்பமாக வட்டமிடுகின்றன. அப்பாவைப் பிடிப்பதை விட அவரை முந்திக்கொண்டு ஓடுவது பழிவாங்குவதாக ஆகும் என்று அம்மா உணர்ந்திருக்கலாம்.

அம்மாவுக்கு டாக்சி ஓட்டுவது கடினமாக இருந்தது. ஊதியம், பெண் ஓட்டுநர் மேல் நம்பிக்கையின்மை, குடித்து விட்டுக் கலாட்டா செய்யும் வாடிக்கையாளர்கள் என்று பல இக்கட்டுகள். ஆனால் நான் பணம் வேண்டும் என்று நச்சரித்துக் கொண்டே இருந்தேன். எங்கள் நிலைமை மோசமாக இருக்கும்போது நான் நிலையைப் புரிந்து கொண்ட நல்ல நடத்தையுள்ள பெண்ணாக இருந்தால் அம்மா இன்னும் நொந்துபோவாள் என்று நினைத்தேன். அதேபோல குற்ற உணர்வினால் அதிகப்பணமெல்லாம் கொடுக்கும் ஆள் இல்லை அம்மா. நான் கேட்கும் பணத்தைக் கணக்காகக் கொடுப்பாள். கொடுத்துவிட்டு, “எவ்வளவு சம்பாதித்தாலும் எல்லாம் உனக்குத்தான் சரியாக இருக்கிறது,” என்று சொல்லத் தவறமாட்டாள்.

வழக்கம்போலவே அன்றும் நான் அந்த நாளையும் கழித்துக் கொண்டிருந்தேன். சாப்பாட்டு மேசையில் நான்  தொலைக்காட்சி பார்த்துக்கொண்டே சாப்பிடுவதுபற்றி தொண தொணத்துக் கொண்டிருந்தாள். அவள் முந்திய இரவு வாடிக்கையாளரிடம் சண்டை போட்டதைப்பேச ஆரம்பித்துவிட்டாள். நான் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருக்க வேண்டியதாயிற்று. இப்படி அவள் வெடித்துக் கொண்டிருக்கும்போது அவள் கரண்டியை மேசைமேல் எறிந்துவிட்டு, “நான் செய்தது தப்பா?” என்று கேட்டாள். அவளோடு சேர்ந்துகொண்டு பேசுவேன். பள்ளியில் நான் டெஸ்கில் கவிழ்ந்திருக்கும் போது பயிற்சி ஆசிரியர் தனது பதற்றத்தில் எச்சிலைக் கூட்டி விழுங்கும்போது அவரது தொண்டை ஏறி இறங்குவதைப் பார்த்துக்கொண்டிருப்பேன். அப்பா இல்லாததால் குறிப்பாக எதுவும் மோசமாகவும் இல்லை, வித்தியாசமாகவும் இல்லை என்ற வகையான வாழ்க்கை அது. பிரச்சனையைப் பொறுத்த வரையில் நான் பள்ளியிலிருந்து வீட்டிற்கு வந்த போதுதான் நடந்தது

முகம் கருகருவென்றிருக்க அம்மா அறையின் நடுவில் உட்கார்ந்திருந்தாள். அவள் கையில் ஒரு கடிதம் இருந்தது. தரையில் திறந்த அஞ்சலுரை கிடந்தது. ஒருகாலத்தில் கத்தரியால் குத்திய அதே தரைதான். நான் உரையிலிருந்த முகவரியைப் பார்த்து அது ஆகாய அஞ்சல் என்று கண்டுகொண்டேன் . புரிந்த கொள்ளமுடியாத ஆனால் ஏதோ மோசமான செய்தியைச் சொல்வதுபோல இருந்த கடிதத்தை எதிர்கொண்டதால் அம்மாவின் முகம் எரிச்சலடைந்த பட்டிக்காட்டுப் பெண்ணுடையதைப்போல ஆயிருந்தது. ‘எவ்வளவு நேரம் இப்படி உட்கார்ந்திருந்தாளோ?’ அவள் கையிலிருந்து கடிதத்தைப் பிடுங்கினேன். “என்ன இது?” என் முகத்தைக் கூர்ந்து பார்த்தாள். கடிதம் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது. அம்மாவின் கர்வத்தை மனத்தில் கொண்டு அதை மெல்ல மொழிபெயர்க்கத் தொடங்கினேன். முதலில் கடிதம் என்ன சொல்லவந்தது என்றே எனக்குப் புரியவில்லை. ஒன்றிரண்டுமுறை படித்தபிறகு அதில் முக்கியமான செய்தி இருக்கிறது என்று புரிந்தது. “என்ன சொல்கிறது?” அம்மா கேட்டாள். ஒருமுறை எச்சில் விழுங்கிவிட்டுப் பதில் சொன்னேன். “அப்பா இறந்துவிட்டார்.” அம்மா என்னைக் கடுமையான பார்வையில் பார்த்தாள். நான் முகத்தில் இப்படி கருத்துப் போன பார்வையைக் காட்டினால் அம்மா ஏதாவது ஜோக் அடிப்பாள். அதுமாதிரி நான் வேடிக்கையாக ஏதாவது சொல்ல நினைத்தேன். ஒன்றும் பொருத்தமாகக் கிடைக்கவில்லை.

**

அப்பா வீட்டிற்கு வந்துவிட்டார். இத்தனை பத்தாண்டுகளுக்குப் பிறகு, தெரியாத நோக்கத்துடன் கருணையுடைய பாவனைபோல, திடீரென்று முடியும் நாடகத்துக்கு பாராட்டுபோல அவர் அஞ்சலில் சவாரி செய்து வந்துவிட்டார், பழக்கமில்லாத நடையில் வாழ்த்துடன் தொடங்கும் மரண அறிவிப்பு அது. அப்பா உலகெல்லாம் சுற்றி ஓடியது தான் இறந்துவிட்டதாக எங்களுக்குச் சொல்வதற்காக இருக்கும் என்று நான் நினைத்துக்கொண்டிருந்தேன். இப்படிப்பட்ட தொலைதூர இடங்களுக்கு ஓடியது தான் இறந்துவிட்டதாகச் சொல்லவா? ஆனால் அப்பா எல்லா நேரமும் உலகையே சுற்றிவந்துகொண்டிருக்கவில்லை; மாறாக அவர் அமெரிக்காவில் தங்கி விட்டிருந்தார்.

கடிதத்தை அவருடைய குழந்தைகளின் ஒருவன் அனுப்பியிருந்தான். போர்வையின் கீழ் வைத்து அகராதியின் உதவியுடன் கடிதத்தை மொழிபெயர்த்தேன்: அப்பா அமெரிக்காவில் திருமணம் செய்து கொண்டார். இது ஆச்சரியமாக இருந்தது. குடும்பமே வேண்டாமென்று சொல்லும் மனிதனாக அவர் இல்லாவிட்டால் அவர் எப்படி அம்மாவை விட்டுப்போயிருக்கமுடியும் என்பது எனக்குப் புரியவில்லை. ஒன்று அவர் உண்மையிலேயே இந்த மனைவியை நேசித்திருக்கவேண்டும் அல்லது ஓடுவதற்குத் தகுதியான இடமாக அமெரிக்கா இருக்கவேண்டும்.  பல ஆண்டுகளுக்குப்பிறகு அவர்கள் மணமுறிவு செய்துகொண்டார்கள். என்ன காரணம் என்று சொல்லப்படவில்லை. ஆனால் எனது அப்பாவின் திறமையின்மை காரணமாக இருக்கும் என்று நான் அனுமானித்தேன். அந்த மனைவி ஜீவனாம்சம் கேட்டாள். அப்பாவிடம் பணம் இல்லாததால் ஒவ்வொரு வாரக் கடைசியிலும் அவள் வீட்டுத் தோட்டத்துப் புல்லை வெட்டுவதாக அவர் ஒப்புக் கொண்டார். அமெரிக்காவில் உங்கள் வீட்டுப் புல்வெளியை வெட்டாவிட்டால் உங்களைப்பற்றி அடுத்தவீட்டுக்காரர் புகார் தெரிவிக்கலாமாம், யாரோ சொல்லக் கேட்டிருக்கிறேன். அந்த மனைவி  ஒரு கால்பந்தாட்ட மைதானம் அளவிற்குப் பின்கட்டு வைத்திருக்கும் ஒருவனை மணம் முடித்துக் கொண்டாள்.

சொன்னபடியே அப்பா ஒவ்வொரு வாரக்கடைசியிலும் வீட்டுக் கதவு மணியை அடித்தார். செக்யுரிட்டி காமராவுக்கு முகத்தைக் காட்டி ஹலோ சொல்லிவிட்டுப் புல்வெட்டப் போவார். மனைவியும் புதுக் கணவனும் அறையில் பியர் குடித்துக்கொண்டு இனிமையாய் உட்கார்ந்திருக்கும்போது அப்பா புல்வெட்டியை ஓட்டிக் கொண்டிருப்பது என் மனத்தில் தோன்றியது. தொடக்கத்தில் கணவனுக்கும் மனைவிக்கும் அவரை அருகில் வைத்திருந்தது இடைஞ்சலாக இருந்திருக்கும். ஆனால் அவள் அவனிடம், “அதைக் கவனியாதே, ஜான்,” என்று சொல்லியிருப்பாள். சிறிது சிறிதாக அப்பா மறைந்துபோயிருப்பார். கணவனும் மனைவியும் அணைத்துக் கொண்டிருப்பார்கள். அப்பா மேலும் கீழுமாய் அந்த அறையின் பெரிய சன்னலின் கீழ் புல்வெட்டியைத் தள்ளிக் கொண்டு போயிருப்பார். இந்தக் கடிதத்தை எழுதிய அந்தப் பையன்  வேறொரு நாட்டிலிருக்கும் தனதுதந்தையின் குடும்பத்தை மகிழ்ச்சிப்படுத்த இப்படி எழுதாவிட்டால் எனது அப்பா அப்படித்தான் செய்திருப்பார். கடிதத்தில் இந்த விபரங்களையெல்லாம் எழுதக்கூடிய அப்பாவின் பிள்ளைபற்றி நான் ஆச்சரியப்பட்டேன். கண்டிப்பாக அவன் அப்பாவின் முட்டாள்தனத்தோடு பிறந்திருக்கிறான். அறையில் தம்பதியர் கொண்டிருந்த உடலுறவைக் கற்பனைசெய்தேன். அவளது மார்பகங்கள், அவளது மூச்சுக் காற்றின் மூட்டம் கண்ணாடியில் பரவுவது. சன்னல் திரை வேகமாக இறங்குவது, அப்பா தொலைவில் புல்வெட்டியின் பர்ர்ர்ர் சத்தத்தில் அதோடு போராடுவது. அதற்கு மேல் போகமுடியாமல் சன்னலுக்குக் கீழ் மேலும் கீழும் பதற்றத்துடன் நடப்பது. மனைவி இதைப் பொறுத்துக் கொள்ளமுடியாமல்  நவீன தானியங்கிப் புல்வெட்டியை வாங்கிக் கொடுத்தாள். அப்பா  பழையதையே பயன்படுத்த வீம்புபிடித்தார். அது பின்கட்டில் பெரும் சத்தத்துடன் சுற்றிவரும்.

பிறகு ஒரு நாள் மனைவியின் புதுக் கணவருடன் சண்டைக்குப் போய்விட்டார். அப்பா புல்வெட்டியதில் அவன் குறுக்கிட்டதும் சண்டை தொடங்கியது.  அவனை அப்பா கவனிக்காமல் தனது வேலையைச் செய்தார். ஆனால் கணவன் இவரைத் திட்டுவதை நிறுத்தாமல் குரலை உயர்த்திப் பேசினான். ஒன்றும் பேசாமல் புல்வெட்டிக் கொண்டிருந்த அப்பா ஒரு நொடியில் புல்வெட்டியைக் கையில் தூக்கி அவனைத் தாக்கினார். கணவன் பயத்தில் நீலமாகிப் போய்க் கீழே விழுந்துவிட்டான். அப்பாவுக்கு அவனைக் காயப்படுத்திடவேண்டும் என்று நோக்கம் இருந்திருக்காது என்று நினைக்கிறேன்.ஆனால் கெட்டவேளை மனைவியின் கணவனுக்குக்  காயம் பட்டுவிட்டது. இப்போது நிலைகுலைந்து போனது அப்பா தான். இரத்தத்தைக் கண்டதும் கணவன் நிலை தடுமாறி அவரைத் தாறுமாறாகத் திட்டினான். கடைசியில் காவலரை அழைத்துவிட்டான். பயந்துபோய் அப்பா சிறிது நேரம் நின்றுவிட்டார். பிறகு கொட்டகைக்குள் போய் புதிய புல்வெட்டியைக் கண்டுபிடித்தார். அதைத் துப்பாக்கிபோலத் தோளில் போட்டுக் கொண்டு துடிக்கும் இதயத்துடன் அதை ஓட்டிக்கொண்டே சாலைக்கு ஓடினார். வெகுவேகமாய் புல்வெட்டியுடன் ஓட வழியிலெல்லாம் புற்துகள்கள் பறந்தன. அப்பா எங்கே போனார்?

அப்பா கார் மோதி இறந்துவிட்டார் என்று சொல்லி கடிதம் முடியத்  தொடங்கியது. அப்பாவுடைய குழந்தைகளும் குடும்பமும் அவர் இறப்பு குறித்து உண்மையிலேயே வருந்தினார்கள். அவரைக் கல்லறையில் அமைதியாக அடக்கம் செய்தனர். அப்பாவை அவனுக்குப் பிடிக்காது என்றான். அவருக்காகக் காத்திருந்தே அவனது குழந்தைப் பருவம் கழிந்து விட்டது என்றும், அப்பா அவனை டிவியின் முன்னால் வைத்து விட்டு  நாள் முழுவதும் வேலைக்குப் போய்விடுவார் என்றும் சொன்னான். மணமுறிவுக்குப் பிறகு அவன் அப்பாவுக்காக ஒவ்வொரு வார இறுதியிலும் காத்திருப்பான். இப்போது அவரை மறக்கக் காத்துக் கொண்டிருந்தான். இதையும் அவன் பார்த்திராத கடல்கடந்து இருக்கும் சகோதரிக்குச் சொன்னான்.

”அப்பாவுக்காகக் காத்திருந்து வளர்ந்த எனக்குக் காத்திருப்பது எவ்வளவு வலியைத்தரும் என்பது தெரியும். என் அம்மாவுக்குத் தெரியாமல் இக்கடிதத்தை எழுதுகிறேன். உன் முகவரியை அப்பாவின் பொருள்களிலிருந்து கண்டுபிடித்தேன்.”

எல்லாமே பொய்யாகத் தோன்றியது.

ஆனால் கடைசியில் பொய் சொன்னது நான் தான். அப்பா ஒரு விபத்தில் இறந்தார் என்று அம்மாவிடம் சொன்னேன். ஆனால் அது எப்படி நடந்தது என்று சொல்லவில்லை. “அப்படியானால் கடிதம் ஏன் இவ்வளவு நீளமாக இருக்கிறது?” என்று அம்மா கேட்டாள். “கொரியனை விட ஆங்கிலத்தில் எல்லாம் நீளமாக இருக்கும்,” என்று சொல்லிச் சமாளித்தேன். வேறு ஏதாவது கடிதத்தில் இருக்கிறதா என்று அம்மா கேட்டாள். எப்படி அப்பா வாழ்ந்தார், யாருடன் வாழ்ந்தார், உண்மையிலேயே வேறு எதுவும் இல்லையா….. ஆனால் இதைப்பற்றியெல்லாம் யாருக்கும் தெரியாது. அம்மா கேட்க விரும்பியதெல்லாம் அன்றிரவு ஏன் அப்பா போனார் என்பதுதான். ஆனால் அதேசமயம் அது ஒன்றைக் கேட்கத்தான் அவள் விரும்பியிருக்கமாட்டாள். அவளுடைய சோகமான முகம் என்னைக் கவலைப்பட வைத்தது. பிறகு கோபப்பட வைத்தது. நான் என்னைக் கட்டுப்படுத்துவதற்கு முன்னர், நான், “அப்பா…: என்று சொல்லிவிட்டேன். பிறகு அம்மா என்னைப்பார்த்தாள். இப்போது அடிபட்ட நாய்க்குட்டியின் தோற்றம்போல இருந்தது. ”அப்பா வருத்தப்படுகிறார். வாழ்நாள் முழுவதும் வருத்தப்பட்டதாகச் சொன்னார். இந்தப் பையன் சொல்வதன்படி.” அம்மாவின் கண்களில் கலக்கம். அதைப்பற்றி  நினைத்துக் கொண்டிருக்கும்போதே, வேறொன்றும் சொன்னேன்,  “நீங்கள் அப்போது உண்மையில் அழகாக இருந்தீர்கள்…” குரல் நடுங்க அம்மா கேட்டாள், “ எங்கே அப்படிச் சொல்கிறது?” நான் கடிதத்தைப் படிப்பதைப்போல நடித்து, “அப்பா ஒவ்வொரு வார இறுதியிலும் புல்வெட்ட அம்மாவின் வீட்டிற்கு வந்தார்,” என்ற வரியைக் காட்டி, “இங்கே,” என்றேன்.  அம்மா அந்த வரியையே கொஞ்ச நேரம் பார்த்தாள், எந்த நேரமும் அழுதுவிடுவாள் என்பதுபோலத் தோன்றியது. பிறகு அதைத் தனது விரல் நுனியால் வருடினாள். எப்போதும் ஜோக்ஸ் அடித்து விளையாட்டாக இருக்கும் அம்மா தனது வாழ்க்கையில் ஒரு சொட்டுக் கண்ணீர் சிந்தியதில்லை என்பதை முதல் முறையாக நினைத்துப்பார்த்தேன். ஆனால் அவள் தொண்டை அடைத்துக் கொண்டிருக்கும்.

அன்று அம்மா காலை வரையில் வீட்டிற்கு வரவில்லை. நான் போர்வையை நாடிவரை இழுத்து மூடிக்கொண்டு அப்பாவைப்பற்றிச் சிந்தித்தேன். அப்பாவின் வாழ்க்கை, அப்பாவின் சாவு, அப்பாவின் புல்வெட்டி போன்றவை. ஆனால் அப்பா என் தலையில் இன்னும் ஓடிக்கொண்டிருந்தார். பெரிய புனைகதையை நீண்டநாள் வைத்திருந்து  அது எளிதாகப்போய்விட மறுத்தது போல இருந்தது. ஆனால் திடீரென்று, ’நான் மன்னிக்க முடியாததால் ஒருவேளை இதைக் கற்பனை செய்திருப்பேன்,’ என்று எனக்குத் தோன்றியது. அப்பாவை முடிவின்றி ஓடச்செய்தது ஒருவேளை நான் தான் போலும். ஏனென்றால் அவர் ஓடுவதை நிறுத்தினால் நான் ஓடிப்போய் அவரைக்  கொல்ல வேண்டியதிருந்திருக்கும். இது திடீரென்று என்னைத் துயரத்தில் ஆழ்த்தியது. இந்த சோகம் என்னை முட்டாளாக ஆக்குவதற்கு முன்னால் நாம் தூங்கிவிடுவோம் என்று நினைத்தேன்.

**

டாக்சிக்கு இரவு நேரக் கூடுதல் கட்டணம் முடிந்த பிறகு அம்மா வீட்டிற்கு வந்தாள். தூங்கும் மகளை எழுப்பாமல் கவனமாக இருக்கும், விளக்குப் போடத்துணியாத, தன் உடைகளைச் சத்தமில்லாமல் மாற்றும் அம்மாவை நான் அடிக்கடி கற்பனை செய்து கொண்டிருப்பேன். மாறாக, தன் காலால் என்னை உதைத்து, “ஏ, தூங்குகிறாயா,” என்றாள் அம்மா. நான் எனது தலையை போர்வையிலிருந்து வெளியே நீட்டி, “உங்களுக்கு என்ன பைத்தியமா? குடித்துவிட்டு டாக்சி ஓட்டினீர்களா?” என்றேன். அம்மா ஒன்றும் சொல்லவில்லை. புன்னகை செய்துகொண்டே போர்வைமேல் விழுந்தாள். சிறிய மூடிய முட்டிபோல தனது உடலைச் சுருட்டிக் கொண்டாள். அவளை மூடிவிடலாம் என்று நினைத்தேன். ஆனால் அப்படியே விட்டுவிட்டேன். சிறிது நேரம் கழித்துக் குளிர்வதுபோலத் தானாகவே போர்வைக்கு அடியில் ஊர்ந்து வந்துவிட்டாள்.

இருளில் அம்மாவின்  மூச்சு மெதுவாக வந்தது. அவளிடமிருந்து சிகிரெட் வாடை வந்தது. என்னை அது பைத்தியமாக்கியது. என் கைகளை மடித்து, ” கெட்ட அம்மா!” என்று நினைத்தேன். என் பக்கம் முதுகைத் திருப்பி இறால் மீன்போலச் சுருட்டிக் கொண்டு அம்மா தூங்கினாள். நான் நேராகப்படுத்து கூரையைப் பார்த்தேன். அம்மாவின் மூச்சுச் சப்தம் நீண்ட அமைதியைக் கூட்டியது. ஆனால் தூங்குவதுபோலத் தோன்றிய அம்மா பேசுவதற்குத் தன் வாயைத் திறந்தாள். ஏற்கனவே சுருண்டிருந்த உடலை மேலும் இறுக சுருக்கிக்கொண்டு தணிந்த குரலில் அப்பாமேல் எந்த வெறுப்புணர்வும் இல்லாமல் அல்லது எந்த உணர்வும் இல்லாமல் ஒரு கேள்வி கேட்டாள்:

”அவர் நன்றாக அழுகிக் கொண்டிருப்பார் என்று நினைக்கிறாயா?”

அன்றைய இரவைத் தூங்காமலே கழித்தேன். கூரையைப் பார்த்துக் கொண்டே, நான் அப்பாவைப்பற்றிக் கற்பனை செய்திருந்த பிம்பங்களையெல்லாம் கொண்டுவந்தேன்.  ஃபுகொகாவைக் கடந்து, போர்னியோ தீவுகளின் வழியாய் கிரீன்விச் வானாய்வுக்கூடத்திற்குப் போவது, ஸ்ஃபின்க்சின் இடது பாதத்தில் திரும்புவது, எம்பையர் ஸ்டேட் பில்டிங்கின் 110 ஆம் குளியலறையைப் பார்ப்பது, ஐபீரியத் தீபகற்பத்தில் சயரா தெ கௌடராமாவில் ஏறுவது முதலான படிமங்கள். ஓடும்போது சிரித்துக் கொண்டே இருக்கும் அப்பா. அப்பா கடும் வெய்யிலில் ஓடிக்கொண்டிருந்திருக்கிறார் என்று எனக்குத் தோன்றியது.  அதிக நேரம் அவருக்கு ஒளிரும் சிகப்புக் கால்சட்டைபோட்டு, அவருடைய கால்களில் மென்மையான அடிப்பகுதி கொண்ட ஓடுவதற்கான காலணிகளை அணிவித்து. காற்று உள்ளே போவது போன்ற சட்டை கொடுத்திருந்தேன். அவர் ஓடுவதற்குத் தேவையான அனைத்தையும் கற்பனை செய்திருந்தேன். ஆனால் அவருக்குக் கறுப்புக் கண்ணாடி கொடுப்பதுபற்றி நினைத்துப் பார்க்காதது வினோதமாக இருந்தது. அப்பா உலகிலேயே மிகமந்தமான மிடுக்கே இல்லாத ஆளாக இருந்தாலும் அவர் மற்றவர்களைக் காயப்படுத்துவதெல்லாம் அவரையும் எப்படிக் காயப்படுத்தும் என்பதையும் மற்றவர்கள் விரும்புவதையே அவரும் விரும்புவார் என்பதையும் நான் எண்ணிப்பார்த்ததில்லை.  ஓய்வு இல்லாமல் பல பத்தாண்டுகள் ஓடுவதைக் கற்பனை செய்தேன். அவர் கண்கள் எரிச்சலடைந்து வீங்கிப்போயிருக்கும். இன்றிரவு அப்பாவிற்கு கறுப்புக் கண்ணாடி அணிவிப்பது என்று உறுதிபூண்டேன். முதலில் அவருடைய முகத்தைக் கற்பனை செய்தேன். அவர் எதிர்பார்ப்புகளுடன் இருக்கிறார். ஆனால் அவரது புன்னகையைக் குறைத்துக்கொண்டு அதனை வெளிக்காட்டாமலிருக்க முயற்சி செய்கிறார். அப்பா கண்களை மூடுகிறார், முத்தத்திற்காகக் காத்திருக்கும் சிறுவனைப் போல இருக்கிறார், என்னுடைய பெரிய கைகள் அவர் முகத்தில் கறுப்புக் கண்ணாடியை வைக்கின்றன.

அவர் கூர்மையாகத் தோன்றுகிறார். அவர் இப்போது இன்னும் நன்றாக ஓடலாம்.


  (கிம் அரோன்

கிம் அரோன்

தென் கொரியாவில் இன்சியான் என்ற இடத்தில் 1980 ஆம் ஆண்டு பிறந்தார். ஊரகப்பகுதியான செயோசன் என்ற இடத்தில் வளர்ந்தார். நாடகம் எழுதுதலைப்பாடமாக எடுத்து கொரியா நேஷனல் யுனிவர்சிட்டி ஆஃப் ஆர்ட்ஸ் இல் படித்தார். 2003 ஆம் ஆண்டு அவருடைய முதல் சிறுகதை வெளிவந்தது.  அவருடைய சிறுகதைகளுக்கும் நாவல்களுக்கும் விருதுகள் கிடைத்தன. அவருடைய The Youngest Parents with the Oldest Child என்ற நாவல் My Brilliant Life என்ற பெயரில் திரைப்படமாக எடுக்கப்பட்டது. கொரியத் தொடர்கள் நம்மவர்களால் விரும்பிப் பார்க்கப்படுகின்றன என்பதைக் கவனத்தில் கொள்கிறோம்.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.