இந்த நகரத்தில் திருடர்கள் இல்லை -கேப்ரியேல் கார்சியா மார்க்கேஸ் தமிழில்: கா. சரவணன்

விடிந்தும் விடியாததுமாக டமாஸோ தனது அறைக்குத் திரும்பினான். ஆறு மாத கர்ப்பிணியான அவனுடைய மனைவி அனா நன்றாக உடையணிந்து, காலணிகளை மாட்டிக்கொண்டு கட்டிலில் உட்கார்ந்தபடி அவனுக்காகக் காத்துக் கொண்டிருந்தாள். அருகிலிருந்த எண்ணெய் விளக்கும் இப்போதோ அப்போதோ என்று மடியும் தறுவாயில் எரிந்துகொண்டிருந்தது. இரவு முழுவதும் ஒவ்வொரு நிமிடமும் தூங்காமல் தன்னுடைய மனைவி தனக்காகக் காத்துக்கொண்டிருப்பாள் என்பதை டமாஸோ உணர்ந்துதானிருந்தான். இப்போதும் கூட, அந்த தருணத்தில் அவன் அவள் முன்னால் வந்து நின்ற சமயத்திலும் அவள் அவனுக்காகக் காத்துக் கொண்டுதானிருந்தாள். அமைதிகாக்க வேண்டி அவன் அவளை நோக்கி கையசைத்தான். அவள் அதற்கும் பதில் சொல்லாமல் இருந்தாள். அவன் கையில் அவன் கொண்டு வந்திருந்த சிவப்பு நிறத் துணியாலான மூட்டையின் மீது அவளுடைய திகில் கலந்த பார்வை சென்று பதிந்தது.  தனது உதடுகளை ஒருசேர அழுந்திக்கொண்டாள். லேசாக நடுங்கத் தொடங்கினாள். டமாஸோ அவளுடைய கீழாடையை சத்தமில்லாமல் வலிந்து பிடித்து அவன்பால் இழுத்தான். அவனிடமிருந்து கடுமையான ஒரு துர்வாடை வீசியது.

அவன் அவளை ஏறக்குறைய அந்தரத்தில் தூக்கிவீசும் அளவுக்குத் தூக்கும்வரை அனா ஒன்றும் சொல்லவில்லை. பின்னர் தனது உடல் எடை முழுவதையும் முன்னால் கொண்டுவந்து தனது கணவனின் சிவப்பு கோடு போட்ட பருத்தியாடையின் மீது சாய்ந்துகொண்டு அழுதாள். அவனுடைய இடுப்பை ஒருசேர கட்டிக்கொண்டு மனம் அமைதியடையும் வரை அழுது தீர்த்தாள்.

“உட்கார்ந்தவாறே நான் அசந்து தூங்கிவிட்டேன். திடீரென்று கதவு திறக்கும் சத்தம் கேட்டது. ரத்தத்தில் குளித்தவனைப் போல  நீ சடாரென்று அறைக்குள் நுழைந்தாய்” என்றாள் அவள். “

எதுவும் பேசாமல் டமாஸோ தன்னிடமிருந்து அவளைக் கொஞ்சம் விலக்கிப் பிடித்தவாறு நின்றான். அவளைப் படுக்கையில் மீண்டும் உட்காரவைத்தான். தான் கொண்டு வந்திருந்த மூட்டையை அவள் மடிமீது வைத்துவிட்டு சிறுநீர் கழிப்பதற்காக உள்முற்றத்தை நோக்கிச் சென்றான். அவள் மூட்டையின் முடிச்சை அவிழ்த்தாள். உள்ளே மூன்று “பில்லியர்ட்ஸ்” விளையாடப் பயன்படும் இரண்டு வெள்ளைப் பந்துகளும் ஒரு சிவப்புப் பந்துமாக மொத்தம் மூன்று பந்துகள் இருந்தன. தொடர்ச்சியான பயன்பாட்டால் அவை வண்ணம் மங்கிப்போயும் கணிசமாகச் சேதமடைந்தும் இருந்தன.  

அறையிலிருந்து டமாஸோ திரும்பியபோது, அவள் ஆழ்ந்த சிந்தனையிலிருப்பதைக் கண்டான்.

“இவற்றால் என்ன பிரயோஜனம்? என்று அனா கேட்டாள்.

அவன் தனது தோளை ஒருமுறை வெறுமனே குலுக்கிக்கொண்டு சொன்னான்.

“பில்லியர்ட்ஸ் விளையாடத்தான்”

தன் வசம் இருந்த போலிச் சாவிக்கொத்து ஒன்றையும், டார்ச் ஒன்றையும், கத்தி ஒன்றையும் அந்த மூட்டைக்குள் போட்டு மூடினான். அதை நன்றாகக் கட்டி கனமான பெட்டி ஒன்றின் அடியில் பதுக்கினான். அனா தனது உடையைக்கூடக் களையாமல் சுவரை வெறித்த வண்ணம் படுத்துக்கிடந்தாள். டமாஸோ தன்னுடைய பேன்ட்டை மட்டும் கழற்றிவிட்டு, கால்களை அகற்றிக்கொண்டு படுக்கையில் மல்லாந்தான். இருட்டில் புகைத்தபடி, அங்குமிங்குமாகச் சந்தடிகள் ஆரம்பித்திருந்த அந்த காலை வேளையில் அவன் தனது சாகஸங்களின் சுவடுகளை அடையாளம் காண முயன்று கொண்டிருந்தான். தனது மனைவி இன்னும் தூங்காமல்தான் இருக்கிறாள் என்பது அவனுக்கு அப்போதுதான் உறைத்தது.

“நீ எதைப்பற்றிச் சிந்தித்துக் கொண்டிருக்கிறாய்?”

“ஒன்றுமில்லை” என்றாள் அவள்.

வழக்கமாக ஒரு மெல்லிசையைப்போல ஒலிக்கும் அவளது குரல் வெறுப்பின் காரணமாக கனத்து ஒலித்தது. டமாஸோ சிகரெட்டின் இறுதிப்புகையை ஆழ்ந்து இழுத்தான். பின்னர் அதன் துண்டை மண்தரையில் அழுந்தத் தேய்த்தான்.

“போன இடத்தில் ஒன்றுமே அகப்படவில்லை” என்று பெருமூச்செறிந்தான். “நான் அங்கே இருந்தது குறைந்தது ஒரு மணி நேரமாவது இருக்கும்”

“அவர்கள் உன்னைச் சுட்டிருக்கக் கூடும்” என்றாள் அவள்.

டமாஸோ நடுங்கிப்போய் விட்டான். “இவ வேற” என்று சொல்லிக்கொண்டே கட்டிலின் மரச்சட்டத்தை முஷ்டியால் அறைந்தான். குடித்துவிட்டு அவன் வீசியெறிந்த  சிகரெட்டு துண்டுகளும் தீக்குச்சிகளும் தரையில் விரவிக் கிடந்ததை அவனால் உணர முடிந்தது.

“ஒரு கழுதைக்கு இருக்கும் உணர்வுகள்தான் உனக்கும் இருக்கிறது. தூங்கக்கூட முடியாமல், தெருவில் ஏதேனும் சிறு சலசலப்பு கேட்டால் கூட உன்னைத்தான் பிணமாகக் கொண்டுவந்து விட்டார்களோ என்று அனுதினமும் பயந்துபோய் உனக்காக இங்கே நான் காத்துக் கொண்டிருக்கிறேன் என்பதை நீ நினைத்துப் பார்த்திருக்க வேண்டும்” என்றாள் அனா. சொல்லிவிட்டு ஒரு நீண்ட பெருமூச்சுடன் மேலும் சொன்னாள்:

“இந்த மூன்று பில்லியர்ட்ஸ் பந்துகளைக் கொண்டு வருவதற்குத்தான் இந்தப் பாடுபட்டாய் போலும்”

“மேசை டிராயரிலிருந்த இருபத்தைந்து சென்ட் தவிர வேறு ஒன்றுமே அங்கே இல்லை”

“அப்படியென்றால் நீ ஒன்றுமே எடுக்காமல்தானே திரும்பி இருக்க வேண்டும்?”

“அதில் இருக்கும் கடினமான வேலையே அங்கே உள்ளே நுழைவதுதான்.  அதனால்தான் வெறுங்கையோடு திரும்பி வர மனம் ஒப்பவில்லை” என்றான் டமாஸோ.

“அப்படீன்னா எதையாவது நீ கொண்டுவந்திருக்க வேண்டும். அப்படித்தானே?”

“அங்கேதான் ஒன்றுமே இல்லையே” என்று டமாஸோ அங்கலாய்த்தான்.

“சூதாட்டம் விளையாடும் அறையில் கிடைப்பதைப் போல வேறு எங்கும் கிடைப்பதில்லை”

“அப்படித்தான் தோணும். ஆனால் உள்ளே போய்ப் பார்த்தால்தானே தெரிகிறது. உள்ளே போய் எதை எதையோ எங்கெல்லாமோ தேடிப்பார்த்த பின்புதானே தெரிகிறது சொல்லிக்கொள்ளும்படி அங்கே ஒன்றுமே தேறாது என்பது.” என்று சலித்துக்கொண்டான் டமாஸோ.

நெடுநேரம் அவள் அமைதியாக இருந்தாள். அவள் கண்ணைத் திறந்துகொண்டுதான் இருக்கிறாள் என்று டமாஸோ கற்பனை செய்து கொண்டான். நினைவுகளின் இருளில் மதிப்புள்ள பொருள் ஏதேனும் தென்பட்டதா என்று அவன் கண்டுபிடிக்க முயன்று கொண்டிருந்தான்.

“ஒரு வேளை…” என்று இழுத்தாள் அனா.

டமாஸோ மறுபடியும் திரியைத் தூண்டிவிட்டான். சாராயத்தின் தாக்கம் அவனைத் தள்ளாடச் செய்திருந்தது என்றாலும் அவனுடைய உடல் எடையையும், பருமனையும் அறிந்து கொள்ளும் அளவுக்கு, கை கால்களை அசைக்கும் அளவுக்கு அவனுக்கு பிரக்ஞை இருக்கத்தான் செய்தது.

“அங்கே ஒரு பூனை இருந்தது. மிகப்பெரிய வெள்ளைப்பூனை அது” என்றான்.

அனா அவனை நோக்கித் திரும்பினாள். பெருத்திருந்த தனது வயிற்றை அவன் வயிற்றோடு சேர்த்து அழுத்தினாள். அவனுடைய முழங்கால்களுக்கு இடையில் தன் கால்களை நுழைத்துக்கொண்டாள். அவளிடமிருந்து வெங்காயத்தின் வாசனை வீசியது.

“நீ ரொம்ப பயந்துட்டியா?”

“நானா?”

“ஆமா… நீதான். ஆண்களும் பயப்படுவார்கள் என்று சொல்லிக் கொள்கிறார்களே” என்றாள் அனா.

அவளுடைய பரிகசிப்பை அவன் புரிந்து கொண்டான். பதிலுக்கு அவனும் சிரித்தான்.

“கொஞ்சம்” என்றான். “நான் இப்பவே சிறுநீர் கழிக்கவேண்டும். என்னால் அடக்க முடியவில்லை”

அவன் அவளை முத்தமிட அனுமதித்தான். ஆனால் அவன் அவளை முத்தமிடவில்லை. அவளிடம் சொல்வதில் அபாயங்கள் இருக்கின்றன என்று தெரிந்தாலும், அதைப் பற்றி எவ்வித மன வருத்தமும் கொள்ளாமல் தன்னுடைய பயணத்தைப் பற்றிய நினைவலைகளைத் தூண்டுவதைப் போல அவனுடைய சாகசங்களைப் பற்றி அவளிடம் சொல்லத் தொடங்கினான்.

நெடுநேர அமைதிக்குப் பின்னர் அவள் பேசினாள்.

  “கேட்கும்போது ஏதோ பைத்தியக்காரத்தனம் போலத் தோன்றுகிறது”

“தொடங்குவது எப்படி என்பதுதான் இங்கே முக்கியம்” என்று கண்களை மூடிக்கொண்டு பேசினான் டமாஸோ. “முதல் முயற்சிதான். இருந்தாலும் அப்படி ஒன்றும் கேவலமான ஒன்றாக அது ஆகவில்லை”

சூரியனின் வெப்ப உக்கிரத்தைக் கொஞ்சம் தாமதமாகவே உணர முடிந்தது. டமாஸோ தூங்கி எழுந்த போது அவனுடைய மனைவி அவனுக்கு முன்பாகவே எழுந்திருந்தாள். தூக்கக் கலக்கம் நன்றாக கலையும்வரை உள்முற்றத்தில் நீர் வரும் குழாயின் அடியில் சில நிமிடங்கள் தனது தலையைப் பிடித்துக்கொண்டான். அந்த அறை ஒரே மாதிரியான வெவ்வேறான அறைகளின் ஒரு பகுதியாகவும், துணி காயப்போடும் கயிற்றினால் பிரிக்கப்பட்ட  பொதுவான ஓர் உள்முற்றத்தோடும் இருந்தது. பின் சுவற்றை ஒட்டி, தகரத்தாலான ஓர் இடைத்தட்டியால் உள்முற்றத்தில் இருந்து பிரிக்கப்பட்ட இடத்தில்தான் நகர்த்திக்கொள்ளும் வசதியுள்ள தனது அடுப்பை நிறுவி இருந்தாள் அனா. பக்கத்தில் ஒரு மேசையையும் போட்டிருந்தாள். அந்த அடுப்பு சமைப்பதற்கும் இஸ்திரி பெட்டியைச் சூடு செய்துகொள்ளவும் உதவியாக இருந்தது. சாப்பிடவும் துணிகளை இஸ்திரி செய்யவும் அந்த மேசை பயன்பட்டது. அவளுடைய கணவன் அவளை நோக்கி வருவதைப் பார்த்தபோது இஸ்திரி செய்யப்பட்டிருந்த துணிகளை ஒரு புறம் ஒதுக்கி வைத்துவிட்டு அவனுக்கு காபி தயார் செய்ய இஸ்திரி பெட்டியை அடுப்பிலிருந்து வெளியே எடுத்தாள்.  அவள் அவனை விட வயதில் மூத்தவள். வெளிறிப்போன தோல் அவளுக்கு. நடைமுறையோடு நல்ல பரிச்சயம் கொண்ட மனிதர்களின் நாசூக்கான திறமை அவளுடைய ஒவ்வொரு அசைவிலும் தெரியும்.

அவள் பார்க்கும் விதத்திலிருந்து தன்னுடைய மனைவி தன்னிடம் ஏதோ சொல்ல விழைகிறாள் என்பது தலைக்குள் அடர்ந்து போயிருந்த தலைவலியின் ஊடேயும் அவனுக்குப் புரியத்தான் செய்தது. அதுவரைக்கும் உள்முற்றத்தில் கேட்ட குரல்களுக்கு அவன் செவி சாய்க்காமலிருந்தான்.

“காலையிலிருந்து இவர்கள் வேறு எதைப்பற்றியும் பேசவில்லை” அவனுக்கு காபியைத் தந்தவாறு தனக்குள் முனகிக்கொண்டு இருந்தாள் அனா. “எல்லா ஆண்களும் கொஞ்ச நேரத்துக்கு முன்னால்தான் அங்கே போனார்கள்”

ஆண்களையும் குழந்தைகளையும் உள்முற்றத்தில் காணவில்லை என்பதை அப்போதுதான் உணர்ந்தான் டமாஸோ.  காபி குடித்துக் கொண்டிருக்கும்போது வெயிலில் துணி காயப்போட வந்த இரண்டு பெண்களின் உரையாடலை அமைதியாகக் கவனித்துக்கொண்டு இருந்தான். இறுதியாக சிகரெட்டு ஒன்றைப் பற்ற வைத்துக்கொண்டு அடுப்படியை விட்டு வெளியே வந்தான்.

“தெரஸா” என்று கூப்பிட்டான்.

ஈரமான துணிகளை உடம்பில் ஒட்டுமாறு போட்டுக்கொண்டு நின்ற பெண்ணொருத்தி அவனுடைய குரலுக்குப் பதிலிறுத்தாள். “கவனமாகப் பேசு” என்று முணுமுணுத்தாள் அனா. அந்தப் பெண் அவன் அருகில் வந்தாள்.

“எல்லோரும் அங்கே என்ன பேசிக்கிறீங்க?” என்று கேட்டான் டமாஸோ.

“எவனோ ஒருத்தன் சூதாட்ட கிளப்புக்குள்ள நுழைஞ்சு எல்லாத்தையும் அள்ளிக்கிட்டு போயிட்டானாம்” என்றாள் அவள்.

அவளுக்கு எல்லாமே தெரிந்திருக்கும் என்று நினைக்கத் தோன்றியது. அவர்கள் அந்த இடத்தை எப்படி ஒவ்வொரு இன்ச்சாக பிரித்துப் பார்த்து அனைத்தையும் அள்ளிக்கொண்டு போனார்கள் என்பதையும், பில்லியர்ட்ஸ் மேசையையும் கூட அவர்கள் விட்டு வைக்கவில்லை என்பதையும் விலாவாரியாக விளக்கினாள். அதெல்லாம் உண்மையாக இருக்க வாய்ப்பில்லை என்று டமாஸோவே நினைக்க முடியாத அளவுக்குத் தீர்க்கமான குரலில் அவள் பேசிக்கொண்டிருந்தாள்.  

“என்ன கருமமடா இது?” அலுத்துக்கொண்டே சமையற்கட்டுக்குள் நுழைந்தான் டமாஸோ.

பற்களை இடுக்கிக்கொண்டு அதனூடே பாட ஆரம்பித்தாள் அனா. உள்முற்றத்தின் சுவரை ஒட்டி ஒரு சேரில் சாய்ந்து கொண்டான் டமாஸோ. பதட்டத்தைத் தணிக்க முயன்று கொண்டிருந்தான். மூன்று மாதங்களுக்கு முன்பு அவனுக்கு இருபது வயது ஆனபோது அரும்பியிருந்த மீசை ஏதோ ஒரு தியாகத்தின் விளைவாக வந்த ஒன்று என்ற ரகசிய உணர்வைத்தாண்டி ஒரு மென்மையான உணர்வுடன் அவனுடைய அம்மைத் தழும்பு நிறைந்த முகத்துக்கு ஒரு பக்குவமான தோற்றத்தையும் அது தந்து கொண்டிருந்தது. அன்றிலிருந்து அவன் தன்னை ஒரு வளர்ந்த மனிதன் என்று நினைத்துக்கொண்டான். ஆனால் அன்று காலையில் தலைவலியின் கசகசப்பில் அவன் நீச்சலடிப்பதற்கு முன்னால் முந்திய தின இரவின் நினைவுகள் அவன் எங்கிருந்து வாழத் தொடங்குவது என்பதைக்கூட அறிய விடாமல் அவனைத் துரத்தியடித்தன.

துணிகள் அனைத்தையும் இஸ்திரி செய்த பின் அந்தத் துணிகளை இரண்டு சம அளவிலான குவியலாக அடுக்கினாள் அனா. அதன் பின் வெளியே செல்வதற்குத் தயாரானாள்.

“ரொம்ப நேரம் வெளியே இருக்காதே” என்றான் டமாஸோ.

“வழக்கம்போல போவதுதான்.”

அறைக்குள் அவளைப் பின்தொடர்ந்து வந்தான்.

“உன்னோட கட்டம் போட்ட சட்டையை அங்கே வச்சிருக்கேன்” என்றாள் அனா. “உன்னோட அந்தக் கோடு போட்ட சட்டையை இனிமேல் போடாமல் இருந்தால் நல்லது”. தெளிவான பூனைக்கண்கள் போலிருந்த தன் கணவனின் கண்களை நோக்கிக்கொண்டு சொன்னாள்.

“யாரேனும் உன்னைப் பார்த்திருப்பார்களா என்று நமக்குத் தெரியாது”

கைகளில் ஊறிய வியர்வையைத் தனது பேன்ட்டில் துடைத்துக்கொண்டான் டமாஸோ.

“யாரும் என்னைப் பார்க்கவில்லை”

“நமக்கு அது தெரியாது” அனா அதையே மீண்டும் சொன்னாள். அவளுடைய இரு கரங்களிலும் துணி மூட்டையை வைத்துக் கொண்டிருந்தாள். “அது தவிர, நீ வெளியே போகாமல் இருப்பது இப்போதைக்கு நல்லது. எனக்கு எதுவும் தெரியாத மாதிரி நான் கொஞ்சம் வெளியே போய் உலாத்திவிட்டு வருகிறேன். அதுவரை கொஞ்சம் காத்திரு”

நகரவாசிகள் அந்த நிகழ்வைத் தவிர வேறு எதையும் பேசியதாகத் தெரியவில்லை. ஒரே நிகழ்வைப்பற்றிய மாறுபட்ட ஒன்றுக்கொன்று எதிரான கதைகளை அவள் பலமுறை கேட்க நேர்ந்தது. வழக்கமாகத் துணிகளை உரியவர்களிடம் சேர்த்த பின்னர், ஒவ்வொரு சனிக்கிழமையும் சந்தைக்குப் போவாள். அன்று அப்படிப் போகாமல்  நேராகச் சம்பந்தப்பட்ட  அந்த அங்காடியை நோக்கிச் சென்றாள்.          

 அவள் நினைத்ததற்கு மாறாக ஒரு சிலரே அந்த சூதாட்ட அறையின் முன்னால் நின்று கொண்டிருந்தார்கள். பாதாம் மரத்தின் கீழே நின்று கொண்டு சில ஆண்கள் பேசிக்கொண்டு இருந்தார்கள். சிரியர்கள் மதிய உணவுக்காகத் தங்களது வண்ணத் துணிகளை விரித்திருந்தார்கள். துணி விரிப்பின் கீழே எல்லா சாமான்களும் தூங்கி வழிவதைப்போலத் தோன்றியது. ஹோட்டலின் வரவேற்பறையில் ஆடும் மேசை ஒன்றில் ஒருவன் படர்ந்து, உதட்டையும் கால்களையும் அகற்றிக்கொண்டு தூங்கிக்கொண்டிருந்தான். மதியத்தின் வெப்பத்தில் எல்லாம் முடங்கிப்போய் கிடந்தன.  

சூதாட்ட விளையாடும் கட்டிடத்தை ஒட்டியவாறு நடந்தாள் அனா. கப்பலில் பொருள் ஏற்றும் இடத்துக்கு எதிரில் இருந்த காலி இடத்தை அவள் கடந்து சென்றபோது, கூட்டம் கூடி இருப்பதை அவள் கண்டாள். அப்போதுதான் டமாஸோ அவளிடம் சொன்ன ஏதோ ஒன்று நினைவுக்கு வந்தது. அதாவது, எல்லோருக்கும் தெரிந்த ஒன்று; ஆனால் வழக்கமாக அங்கே வரும் உண்மையான வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே நினைவில் வருவது. அதுதான் அந்த காலி இடத்தைப் பார்த்த வண்ணம் இருக்கும் சூதாட்ட கிளப்பின் பின்வாசல். ஒரு கணம் நோட்டம் விட்டுவிட்டு கைகளைத் தன்னுடைய வயிற்றின் மீது மடித்து வைத்துக்கொண்டு கூட்டத்தோடு கூட்டமாக ஐக்கியமானாள் அனா. கண்கள் மட்டும் உடைக்கப்பட்டிருந்த கதவின் மீது நிலைத்திருந்தது. அதனுடைய தாழ்ப்பாள் உடையாமல்தான் இருந்தது. ஆனால் அதனைப் பற்றி இருந்த ஒரு கொக்கி பற்களைப் பிடுங்குவதைப்போலப் பிடுங்கப்பட்டு இருந்தது. தனித்த, சாதாரணமாகச் செய்த ஒரு முயற்சியில் உடைந்து போயிருந்த அந்த சேதத்தை எண்ணிப்பார்த்தாள். இரக்கம் மேலிட்டவளாய் தனது கணவனை நினைத்துக்கொண்டாள்.

“யாராக இருக்கும்?” என்று கேட்டாள்.

சுற்றி முற்றும் பார்க்க அவள் துணியவில்லை.

அவர்கள் அவளிடம் பதில் சொன்னார்கள்: “யாருக்கும் தெரியவில்லை. அனேகமாக யாரோ ஒரு புது ஆள்தான் செய்திருக்க வேண்டும் என்று சொல்லிக் கொள்கிறார்கள்.”

“அப்படித்தான் இருக்க முடியும்” அவளுக்குப் பின்னால் இருந்த ஒரு பெண் கூறினாள். இந்த நகரத்தில் திருடர்கள் கிடையாது. இங்கு எல்லோருக்கும் எல்லோரையும் தெரியும்”

அனா தலையைத் திருப்பினாள். “சொல்வது சரிதான்.” சிரித்துக்கொண்டே சொன்னாள். வியர்வையில் நனைந்துபோய் இருந்தாள். கழுத்துக்குக் கீழே ஏகத்துக்கும் தோல் சுருங்கிப்போய் இருந்த பெரிய வயோதிகன் ஒருவன் அவள் அருகில் நின்று கொண்டிருந்தான்.

“எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு போய்விட்டார்களா?” என்று கேட்டாள்.

“இருநூறு பெசோவையும் பில்லியர்ட்ஸ் பந்துகளையும் காணோம்” என்று அந்த வயோதிகன் சொன்னான். ஓர் இனம் புரியாத ஆர்வத்துடன் அந்தக் கிழவன் அவளைப் பார்த்துக் கொண்டு நின்றான். “வெகு சீக்கிரம் நாம் எல்லோரும் நமது கண்களைத் திறந்து வைத்துக்கொண்டுதான் தூங்க வேண்டும் போல இருக்கிறது” என்றான் அவன்.  

அனா அவனைப் பார்த்தாள். “அதுவும் சரிதான்” என்று மீண்டும் சொன்னதையே சொன்னாள். அந்தக் கிழவன் அவளையே கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறான் என்ற எண்ணத்தைத் தவிர்க்க இயலாதவளாய் தலையில் ஒரு துணியைப் போர்த்திக்கொண்டு அவ்விடத்தைவிட்டு நகர்ந்தாள்.  

உடைக்கப்பட்டிருந்த கதவுக்குப் பின்னால் யாரோ இறந்து கிடப்பதைப் போல அந்தக் காலி இடத்தில் கூடியிருந்த கூட்டம் ஒரு பதினைந்து நிமிடங்களுக்குப் பவ்வியமாக நடந்துகொண்டது.  அதன் பிறகு அவர்களுக்குள் ஒரு கிளர்ச்சி உருவாக, திரும்பி அங்காடிக் கட்டிடத்துக்குள் பிரவேசித்தது.

சூதாட்ட கிளப்பின் முதலாளி முன் வாசலில் நின்று கொண்டிருந்தான். நகரத்தின் மேயரும் இரண்டு போலீஸ்காரர்களும் உடனிருந்தார்கள். குள்ளமாகவும் உருண்டையாகவும், வயிற்றின் அழுத்தம் காரணமாக மட்டுமே இடுப்பில் நின்று கொண்டிருக்கும் பேன்ட் சகிதம், சிறுகுழந்தைகள் செய்து விளையாடும் கண்ணாடி போன்ற ஒன்றையும் அணிந்துகொண்டு பார்ப்பதற்கு அந்த முதலாளி மரியாதைக்குரியவனாகத்தான் தெரிந்தான்.

கூட்டம் அவனைச் சூழ்ந்து கொண்டது. கூட்டம் கலையத் தொடங்கும்வரை வரை சுவரில் சாய்ந்து கொண்டு அவன் கூறுவதைக் கேட்டுக்கொண்டு நின்றாள் அனா. பின்னர் வியர்வையில் குளித்தவாறு, அவளுடைய அண்டை வீட்டார் சொல்லும் கதைகளைக் கேட்ட வண்ணம் அவளுடைய அறைக்குள் நுழைந்தாள்.

புகைப்பிடிக்காமல் அன்றைய இரவில் அனாவால் எப்படி தனக்காகக் காத்துக் கிடக்க முடிந்தது என்று கட்டிலில் கால்களை விரித்தபடி கிடந்த டமாஸோ பலமுறை தன்னைத் தானே கேட்டுக்கொண்டிருந்தான். சிரித்துக்கொண்டு அவள் அறைக்குள் நுழைவதையும், வியர்வையால் நனைந்திருந்த முக்காடை எடுப்பதையும் அவன் பார்த்தான். தன்னிடம் ஏறக்குறைய பயன்படுத்தாத நிலையிலிருந்த சிகரெட்டை எடுத்து அதன் நடுவில் அழுத்தி பின்னர் மண்தரையில் போட்டு நசுக்கினான். கலக்கம் மேலிட அவளுக்காகக் காத்திருந்தான்.

“ரொம்பப் பிரமாதம்”

படுக்கைக்குப் பக்கத்தில் மண்டியிட்டு அமர்ந்தாள் அனா.

“பிரமாதம். நீ ஒரு திருட்டுப்பயல் என்பது எனக்குத் தெரியும். ஆனால் நீ ஒரு பொய்யன் என்ற உண்மை இப்போதுதான் தெரிகிறது” என்றாள்.

“ஏன் அப்படிச் சொல்கிறாய்?”

“ஏனென்றால் டிராயரில் ஒன்றுமே இல்லையென்று நீ என்னிடம் சொன்னாய். இல்லையா?”

டமாஸோ கொதித்தான்.

“அதில் ஒன்றுமே இல்லை”

“அதில் இருநூறு பெசோ இருந்தது” என்றாள் அனா.

“அது பொய்” குரலை உயர்த்திக் கத்தினான் அவன். பின்னர் கட்டிலில் உட்கார்ந்தான். அவனுடைய குரல் தடுமாற்றமில்லாமல் மாறி இருந்தது.

“அங்கே இருந்தது வெறும் இருபத்தைந்து சென்ட் மட்டும்தான்”

ஒருவழியாக அவன் அவளைச் சமாதானப்படுத்திவிட்டான். “அந்தக் கிழவன் ஒரு வஞ்சகன்” என்று முஷ்டியை மடித்துக்கொண்டு சொன்னான் டமாஸோ.

“என்னுடைய முகத்தில் அவனுடையதைக் கொண்டு மோத விரும்புவதைப்போல என்னை உற்றுப்பார்த்துக்கொண்டு இருந்தான் அவன். சரி. நீ முட்டாளாக இருக்காதே” என்று சொல்லிச் சிரித்தாள் அனா.

அவனும் அவளோடு சேர்ந்து சிரித்தான். அவன் சவரம் செய்து கொண்டிருந்தபோது வெளியே போய் தான் சேகரித்த தகவல்களை அவள் அவனிடம் சொன்னாள். போலீஸ் யாரோ அன்னியன் ஒருவனைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள் என்று சொன்னாள்.

“வியாழக்கிழமை அவன் வந்ததாகவும், நேற்று இரவில் அவன் கப்பலில் பொருள் ஏற்றும் இடத்தில் உலவிக்கொண்டு இருந்ததைப் பார்த்தாகவும் அவர்கள் சொன்னார்கள். அவனை வேறு எங்கும் காணவில்லை என்றும் சொல்லிக்கொண்டார்கள்” என்றாள். தான் பார்க்காத அந்த அந்நியனைப் பற்றி நினைத்துப்பார்த்தான் டமாஸோ. ஒரு நிமிடம் அவனுக்கே அது ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒன்றாகத் தோன்றியது. அவனாக இருக்குமோ என்று சந்தேகப்படவும் ஆரம்பித்துவிட்டான்.

“எங்காவது ஓடி ஒளிந்திருப்பான்” என்றாள் அனா.

வழக்கம் போல உடையணிந்துகொள்ள அவனுக்கு மூன்று மணி நேரம் தேவைப்பட்டது. முதலில் வருவது நேர்த்தியாக மீசையை நறுவிசாக ஒழுங்கு செய்து கொள்வது. அதன் பின் உள்முற்றத்தில் இருக்கும் குழாயில் குளிப்பது. அவனை முதன்முதலில் சந்தித்த அந்த இரவிலிருந்து இன்று வரை சற்றும் குறையாமல் இருக்கும் அதே ஆர்வத்துடன் அவன் தலை சீவுவதற்கு எடுத்துக்கொள்ளும் பிரயத்தனங்கள் ஒவ்வொன்றையும் அவள் கவனித்துக் கொண்டு வந்தாள். சிவப்புக்கோடு போட்ட சட்டையை அணிந்துகொண்டு வெளியே கிளம்புவதற்கு முன்னால் கண்ணாடியில் ஒருமுறை தன்னைப் பார்த்துக்கொண்டான். அவனைப் பார்க்கும்போது தான் வயதானவளைப் போலவும் மெத்தனமானவளைப் போன்றும் அவளுக்குத் தோன்றியது. தொழில் ரீதியான ஒரு குத்துச்சண்டை வீரனின் நுணுக்கத்துடன் அவன் அவளை நோக்கி விளையாட்டாகக் கையை வீசினான். அவள் அவனுடைய மணிக்கட்டைப் பற்றிக்கொண்டு கேட்டாள்.  

“உன்னிடம் பணம் எதாச்சும் இருக்கா?”

“நான் ஒரு பணக்காரன். என்னிடம் இருநூறு பெசோ இருக்கு” என்று கிண்டலாகச் சொன்னான் டமாஸோ.

அனா சுவரை நோக்கித் திரும்பி சட்டைக்குள் இருந்து கரண்ஸி தாள்களின் சுருள் ஒன்றை வெளியே எடுத்தாள். அதிலிருந்து ஒரு பெசோவை எடுத்து அவனை நோக்கி நீட்டிக்கொண்டு சொன்னாள்:

“இதை வைத்துக்கொள் அன்பே!’

அன்றிரவே டமாஸோ தனது நண்பர்களுடன் அந்த அங்காடிக்குள் இருந்தான். கிராமப்புறங்களிலிருந்து வந்திருந்த மக்கள் ஞாயிற்றுக்கிழமை சந்தையில் தங்கள் பொருட்களை விற்பதற்காக “பிரென்ச் ஃப்ரையும் லாட்டரி டிக்கெட்டும்” விற்கும் கடைகளுக்கு மத்தியில் தங்களது விரிப்பையும் விரித்திருந்தார்கள். மாலை நேரம் தொடங்கினால் அவர்கள் குறட்டை விடுவதைப் பார்க்க முடியும். சூதாட்ட கிளப்பில் நடந்த திருட்டைப்பற்றி டமாஸோவுக்கும் அவனுடைய நண்பர்களுக்கும் எந்தக் கவலையும் இல்லாமல் இருந்தது.  ரேடியோவில் ஒலிபரப்பப்பட்ட ‘பேஸ்பால்’ குறித்த வர்ணனைதான் அவர்களுடைய கவலையாக இருந்தது. சூதாட்ட கிளப் மூடப்பட்டு இருந்ததால் அவர்களால் அதைக் கேட்க முடியாமல் போயிருந்தது. ‘பேஸ்பால்’ பற்றிப் பேசிக்கொண்டே எந்த முன் திட்டமிடலும் இல்லாமல் ஓடுவது என்ன படம் என்பது கூட தெரியாமல் அவர்கள் சினிமா பார்க்கக் கிளம்பினார்கள்.

திரையரங்கில் காண்டின் ஃப்ளாஸ் நடித்திருந்த திரைப்படம் ஒன்று ஓடிக் கொண்டு இருந்தது. பால்கனியின் முதல் வரிசையில் உட்கார்ந்துகொண்டு வெட்கமில்லாமல் சிரித்துக்கொண்டிருந்தான் டமாஸோ. உணர்ச்சி பிரவாகத்தில் அவன் நலமடைந்து வருவது போல உணர்ந்தான். அது இனிமையான ஜூன் மாத இரவு. முன்னால் நீண்டிருந்த வெற்று வெளியில் பார்க்கும்போது ‘ப்ராஜக்டரின்’ தூசு நிறைந்த ஒளிக்கற்றையும் நட்சத்திரங்களின் அமைதியும் கூரையில்லாத அந்தத் திரையரங்கின் மீது இறங்கி நிற்பதைப்போலத் தோன்றியது.

திடீரென்று திரையில் தெரிந்த பிம்பங்கள் மங்கலாயின. இசைக்குழுவினருக்குப் பின்னால் ஏதோ கூச்சல் குழப்பமுமாகச் சத்தம் கேட்டது. திடீரெனத் தோன்றிய வெளிச்சத்தில் தன்னைக் கண்டுபிடித்து விட்டதைப் போலவும், குற்றவாளியாக்கப்பட்டு விட்டதைப் போலவும் உணர்ந்தான். உடனே தப்பித்து ஓட முனைந்தான். ஆனால் இசைக்குழுவின் பார்வையாளர்கள் ஸ்தம்பித்துப் போய் நிற்பதைப் பார்த்து நிதானித்தான். போலீஸ்காரன் ஒருவன் தன்னுடைய பெல்ட்டை முஷ்டியில் சுற்றிக்கொண்டு அதில் இருக்கும் தாமிரப்பட்டையால் ஒருவனை அடித்துத் துவம்சம் செய்துகொண்டு இருந்தான். அடிபட்டவன் ராட்சத உருவத்திலிருந்த கறுப்பினத்தைச் சேர்ந்தவன். அங்கிருந்த பெண்கள் கத்தத் தொடங்கினார்கள். கறுப்பனை அடித்துக்கொண்டிருந்த போலீஸ்காரன் அந்தப் பெண்களின் கூக்குரலைத் தாண்டி “திருடன்…திருடன்” என்று கத்தினான். நாற்காலிகளுக்கு மத்தியில் புரண்டுகொண்டு அடியிலிருந்து தப்ப அந்தக் கறுப்பினத்தவன் முயன்றுகொண்டிருந்தான். அவனைத் துரத்திச் சென்ற இரண்டு போலீஸ்காரர்களும் அவனுடைய முதுகின் பின்புறத்தில் தாக்கி அவனை நிலைகுலையச் செய்து அவனை ஒருவழியாகப் பின்னால் இருந்து இறுக்கிப்பிடித்துக் கொண்டார்கள். கொஞ்ச நேரத்துக்கு முன்பு அவனை அடித்த போலீஸ்காரன் அந்த மனிதனின் முழங்கைகளை ஒரு பட்டையால் பின்னால் பிடித்து இழுத்துக் கட்டினான். பின்னர் மூன்று பேர் சேர்ந்து அவனைத் தரையில் விழுமாறு கீழே தள்ளினார்கள். எல்லாமே கணப்பொழுதில் நடந்தேறிவிட்டது. பக்கத்தில் அந்தக் கறுப்பினத்தவன் தன்னைக் கடந்து போகும்போதுதான் என்ன நடந்தது என்பதை டமாஸோவால் ஊகிக்க முடிந்தது. அவனுடைய சட்டையெல்லாம் கிழிந்து தொங்கியது. அவனுடைய முகம் தூசியும், வியர்வையும், ரத்தமும் கலந்து பூசப்பட்டது போல அகோரமாகக் காட்சி தந்தது. “கொலைகாரர்கள்…இவர்கள் கொலைகாரர்கள்” என்று அழுதுகொண்டே நடந்தான் அந்த மனிதன். இந்தச் சம்பவத்துக்குப் பின்னர் ‘ப்ராஜெக்டர்’ மறுபடியும் உயிர் பெற்றது. திரைப்படம் தொடர்ந்தது.

அதற்குப்பின் டமாஸோ சிரிக்கவே இல்லை. விளக்குகள் ஒளிரும் வரை தொடர்ச்சி இல்லாத கதையும் காட்சிகளும், தொடர்ச்சியாகப் புகைத்த சிகரெட்டுகளுமாக அது முடிந்தது.  வெளிச்சம் வந்தவுடன் ஏதோ உண்மையைக் கண்டுவிட்ட திகிலுடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். “இது நன்றாக இருந்தது” என்று டமாஸோவின் அருகிலிருந்த ஒருவன் சிலாகித்துக் கொண்டான். டமாஸோ அவனைப் பார்க்க எத்தனிக்கவில்லை.

“காண்டின் ஃப்ளாஸ் அருமையாக நடிக்கிறான்” என்று புகழ்ந்தான் அவன்.

கூட்டமாக நகர்ந்த மக்கள் அவனை வாசல் வரை தள்ளிக்கொண்டு வந்தார்கள். உணவு விற்பவர்கள் கூடைகளைச் சுமந்தபடி வீடு நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தார்கள். பதினோறு மணிக்கு அப்பாலும் மக்களில் அனேகம் பேர் இவர்கள் வெளியே வரும்வரை தெருவில் காத்துக்கிடந்தார்கள். அந்தக் கறுப்பினத்தவனைப் பிடித்துக்கொண்டு போனதைப் பற்றி விசாரித்துத் தெரிந்துகொள்ள அவர்களுக்கு ஆர்வம் இருந்தது.

அன்றிரவு மிகவும் கவனமாகத் தன்னுடைய அறைக்குள் நுழைந்தான் டமாஸோ. அரை குறைத் தூக்கத்திலிருந்த அனா அவன் வருவதைப் பார்த்துவிட்டாள். அவன் தனது இரண்டாவது சிகரெட்டைப் புகைத்த வண்ணம் அப்படியே கட்டிலில் மல்லாக்க விழுந்தான்.

“சாப்பாடு அடுப்பின் மீது இருக்கு” என்றாள் அவள்.

“எனக்குப் பசிக்கவில்லை” என்றான் டமாஸோ.

அனா பெருமூச்சுவிட்டாள். “நோரா வெண்ணெய்யால் பொம்மை செய்வது போல கனவு கண்டேன்” படுக்கையை விட்டு எழாமல் சொன்னாள். விருப்பமில்லாமல் தான் ஆழ்ந்து தூங்கிவிட்டதை அவள் அப்போதுதான் திடீரென உணர்ந்தாள். கண்ணை விழித்து, கசக்கிக் கொண்டு டமாஸோவை நோக்கித் திரும்பினாள்.

“அவர்கள் அந்த அன்னியனைப் பிடித்து விட்டார்கள்” என்று சொன்னாள்.

பேசுவதற்கு முன்னால் டமாஸோ சிறிது நேரம் காத்திருந்தான்.

“யார் சொன்னது?”

“அவனைத் திரையரங்கில் பிடித்தார்களாம். எல்லோரும் அங்கேதான் இருந்தார்கள்” என்றாள் அனா.

கைது பற்றிய திரிக்கப்பட்ட கதையை அவள் அவனிடம் சொன்னாள். அவள் சொன்னதைத் திருத்த டமாஸோ முற்படவில்லை.

“பாவம் அவன்” அனா பெருமூச்செறிந்தாள்.

“எதுக்கு அவன் பாவம்?” டமாஸோ சூடாகக் கேட்டான். “அதாவது அவனுக்குப் பதிலாக நான் பிடிபட்டு இருந்தால் உனக்கு நன்றாக இருந்திருக்கும். இல்லையா?”

அவளுக்கு அவனைப் பற்றி மிக நன்றாகத் தெரியுமாதலால் அவனுக்கு அவள் பதில் சொல்லவில்லை. விடியலின் முதல் வெளிச்சம் வரும்வரை ஓர் ஆஸ்த்மா நோயாளியைப் போன்று அவன் மூச்செறிந்துகொண்டு புகைபிடித்தபடி இருந்தான் என்பதை அவள் உணர்ந்தாள்.  கொஞ்ச நேரத்தில் அவன் படுக்கையிலிருந்து எழுந்துவிட்டான் என்பது தெரிந்தது. பார்த்துத் தெரிந்துகொள்வதைவிடத் தொட்டு உணர்ந்தால்தான் உண்மை புலப்படும் என்பதைப்போல எதையோ நினைத்துக் குருட்டுத்தனமாகத் தேடிக்கொண்டிருந்தான்.  அந்த அறையையே தலைகீழாகப் புரட்டிப்போட்டுக்கொண்டு இருந்தான். பதினைந்து நிமிடங்களுக்கு மேலாகப் படுக்கையின் கீழே எதையோ துழாவிக்கொண்டிருந்தான் என்பது அவளுக்குப் புரிந்தது. பிறகு இருட்டில் அவன் அவனது ஆடைகளைக் களைவதைப் பார்த்தாள். அவள் தூங்குகிறாள் என்று அவனை நம்ப வைக்க அவள் ஒரு நிமிடத்தைக் கூட வீணடிக்காமல் அவள் அவனுக்கு உதவுவதைப் புரிந்து கொள்ளாமல் இருட்டில் எந்தச் சத்தமும் செய்யாமல் அனைத்தையும் செய்து கொண்டிருந்தான். அவளுடைய ஆழமான மானுட நுண்ணுணர்வில் ஏதோ ஒரு பொறி தட்டியது. டமாஸோ சினிமா பார்க்கப் போயிருந்தான் என்ற உண்மை அனாவுக்குத் தெரியும். படுக்கையின் கீழே அந்த மூன்று பில்லியர்ட்ஸ் பந்துகளை எதற்காக ஒளித்து வைத்தான் என்பது இப்போது அவளுக்குப் புரிந்தது.

சூதாட்ட கிளப் திங்கள்கிழமை திறக்கப்பட்டது. தலையில் கனம் ஏறிப்போன அதன் வாடிக்கையாளர்கள் அதனை நோக்கிப் படையெடுத்து வந்தார்கள். பில்லியர்ட்ஸ் மேசை ஒரு அடர்நீலவண்ண துணி ஒன்றினால் மூடப்பட்டிருந்தது. இழவு வீட்டிலிருக்கும் ஒரு சோக உணர்வை அந்த இடத்திற்கு அது தந்து கொண்டிருந்தது. சுவரில் ஒரு வாசகம் எழுதப்பட்டு இருந்தது. “பந்துகள் இல்லை; பில்லியர்ட்ஸும் இல்லை” அது என்னவோ ஒரு பெரிய செய்தி போல மக்கள் சாரை சாரையாக வந்து அதைப் படித்துவிட்டுப் போனார்கள். சிலர் அதன் முன்னால் நெடுநேரம் நின்றுகொண்டு ஆழம் தெரியாத ஒரு பக்தியுடன் அதை மீண்டும் மீண்டும் படித்துக்கொண்டிருந்தார்கள்.

அங்கே முதன் முதலில் வந்த வாடிக்கையாளர்களில் டமாஸோவும் ஒருவன். பார்வையாளர்களுக்கென்று ஒதுக்கப்பட்டிருந்த இருக்கைகளில்தான் அவன் தன் வாழ்நாளின் கணிசமான பகுதியைக் கழித்திருந்தான். கதவு திறந்த தருணத்திலிருந்து அவன் அங்கேதான் நின்று கொண்டிருந்தான். அது சிரமமான, அதே சமயம் இயல்பாகத் தோன்றிய ஒரு துக்க விசாரிப்பை ஒத்திருந்தது. கல்லாவுக்கு அப்பாலிருந்த கடை முதலாளியின் முதுகில் தட்டிக்கொடுத்துவிட்டுச் சொன்னான்:

“என்ன ஒரு வேதனை! ரோக்”

அந்த முதலாளி வேதனை கலந்த ஒரு சிரிப்பை உதிர்த்தவாறு தலையை ஆட்டினான். பெருமூச்சு ஒன்றை விட்டுக்கொண்டான். “எல்லாம் சரியாயிடும்” என்றான் அவன். மற்ற வாடிக்கையாளர்களுக்காக அவன் காத்திருக்கத் தொடங்கினான். டமாஸோ தனியாக ஒதுக்கப்பட்டிருந்த ஒரு பிரிவில் போய் அமர்ந்தான். அவன் அமர்ந்திருந்த அடர்நீலவண்ணத் துணியில் போர்த்தப்பட்டிருந்த அந்த மேசைதான் அந்தப் பயங்கரத்தைத் தன்வசம் தாங்கிக்கொண்டிருந்தது.

“என்ன ஒரு விசித்திரம்” என்று சொல்லிக்கொண்டான்.

“நீ சொல்வது சரி. நாம் என்னமோ ஏதோ ஒரு புனித வாரத்தில் ஒன்று கூடியது போன்ற உணர்வுதான் ஏற்படுகிறது” என்று அவனுக்கு அருகில் அமர்ந்திருந்தவன் சொன்னான்.

பெரும்பாலான வாடிக்கையாளர்கள் மதிய உணவுக்காக எழுந்துசென்ற பின்னர் தானியங்கி இசைப்பெட்டியில் நாணயம் ஒன்றைப் போட்டான் டமாஸோ. மெக்ஸிகோவின் பாடல் ஒன்றைத் தெரிவு செய்தான். வரிசைக்கிரமத்தில் அது எங்கே இருக்கும் என்பது அவனுக்கு மனப்பாடமாகத் தெரியும். ரோக் மேசைகளையும் நாற்காலிகளையும் மண்டபத்தின் பின்புறத்திற்கு நகர்த்திக்கொண்டு இருந்தான்.

“நீ என்ன செஞ்சுகிட்டு இருக்கே?” என்று கேட்டான் டமாஸோ.

“சீட்டு விளையாடுவதற்காக ஏற்பாடு செஞ்சுகிட்டு இருக்கேன். பந்துகள் வரும்வரை நான் ஏதாவது செய்தாகனுமே” என்றான் ரோக்.

இரண்டு கைகளினாலும் ஒவ்வொரு நாற்காலியை அவன் தயக்கத்தோடு நகர்த்திக்கொண்டு போவதைப் பார்க்கும்போது சமீபத்தில் மனைவியை இழந்தவனைப் போல காணப்பட்டான்.

“தொலைந்தது எப்போது வரும்?” என்று டமாஸோ வினவினான்.

“ஒரு மாதத்திற்குள் வரும் என்று நம்புகிறேன்.”

“அதற்குள் மற்ற எல்லாம் திரும்ப வந்திருக்கும்” என்றான் டமாஸோ.

சிறு மேசைகள் வரிசையாக வைக்கப்பட்டிருப்பதைக் கண்டு ரோக் திருப்திப் பட்டுக்கொண்டான். “அவை திரும்ப வரப்போவதில்லை” நெற்றியை சட்டைத்துணியால் துடைத்தவாறு கூறினான். “அந்தக் கறுப்பினத்தவனை சனிக்கிழமையிலிருந்து பட்டினி போட்டு இருக்கிறார்கள். இருந்தாலும் அது எங்கே இருக்கிறது என்பதை அவன் சொல்ல மாட்டேன் என்கிறான்” வியர்வையால் மங்கலாகிப் போயிருந்த கண்ணாடி வழியாக அவன் டமாஸோவை அளந்து கொண்டிருந்தான்.

“எனக்குக் கண்டிப்பாகத் தெரியும். அதை எல்லாம் அவன் ஆற்றுக்குள்தான் வீசி எறிந்திருப்பான்.”

டமாஸோ உதட்டைக் கடித்துக்கொண்டான்.

“அப்ப அந்த இருநூறு பெசோ என்னாச்சு?”

“அதையும்தான். அவனிடம் வெறும் முப்பது மட்டும்தான் இருந்திருக்கிறது.” என்றான் ரோக்.

ஒருவரின் கண்களை ஒருவர் ஊடுருவுவதுபோல பார்த்துக்கொண்டார்கள். அந்தப் பார்வை அவனுக்கும் ரோக்குக்கும் இடையில் உடந்தையான ஒரு பரஸ்பர உறவை ஸ்தாபித்திருக்கிறது என்ற கருத்தை அவனால் சொல்ல முடியவில்லை. அன்று மதியம், அவன் வீட்டுக்கு வரும்போது குத்துச்சண்டை வீரனைப் போல நடனமாடிக்கொண்டு வருவதை அனா கழிவறையிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தாள். அறைக்குள் வந்தவுடன் அவள் அவனைப் பின்தொடர்ந்து வந்தாள்.

“எல்லாம் ஒரு வழியா சரியாயிருச்சு. அந்தக் கிழவன் அலுத்துப்போய் புதிய பந்துகளை வாங்கச் சொல்லிவிட்டான். இப்ப இருக்கும் ஒரே பிரச்சினை அவர்கள் இந்தச் சம்பவத்தை மறக்கும் வரை காத்திருப்பதுதான்”

“அந்தக் கறுப்பின நபர் என்னவானான்”

“அது ஒன்றுமில்லை. அவனிடம் பந்துகள் எதுவும் இல்லையென்றால் அவனை விட்டுவிடுவார்கள்.” என்று தன்னுடைய தோள்களைக் குலுக்கிக்கொண்டு சொன்னான் டமாஸோ.

உணவருந்திய பின்னர் முன்கதவின் வெளியே வந்து அவர்கள் அமர்ந்தார்கள். தியேட்டரில் உள்ள ஒலிபெருக்கியில் இருந்து வரும் சத்தம் நிற்கும் வரை அவர்கள் அண்டை வீட்டாரிடம் பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் தூங்கச் சென்றபோது டமாஸோ பெரும் உற்சாகத்திலிருந்தான்.

“ஒரு அருமையான வேலை பற்றிய யோசனை எனக்குத் தோன்றி இருக்கிறது”.

அன்று மாலையிலிருந்து அவன் ஏதோ ஒன்றைப்பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறான் என்பதை அனாவும் உணர்ந்துதான் இருந்தாள்.

“நான் ஒவ்வொரு நகரமாகச் செல்வேன். அங்கிருந்து பில்லியர்ட்ஸ் பந்துகளைத் திருடிக்கொண்டுவந்து அதை இன்னொரு நகரத்தில் விற்பேன். ஒவ்வொரு நகரத்திலும் கண்டிப்பாக ஒரு சூதாட்ட கிளப் இருக்கும்” என்று சொல்லிக்கொண்டே போனான் டமாஸோ.

“அதாவது நீ சுடப்பட்டுச் செத்துப்போகும் வரை!”

“சுடுவதா…எந்த மாதிரியான சுடுதலைப் பற்றி பேசுகிறாய்? அதெல்லாம் சினிமாவில் மட்டும்தான் நடக்கும். அறையின் நடுவில் நின்றுகொண்டு  அவனுடைய உற்சாகம் தந்த மயக்கத்தில் அவன் மூழ்கிப்போயிருந்தான். அனா உடைகளைக் களைய ஆரம்பித்தாள். அவன் பிதற்றுவதை அவள் கண்டு கொள்ளாதவளைப் போலக் காட்டிக்கொண்டாலும் உண்மையில் அவன் சொல்வதை எல்லாம் ஒரு உள்ளார்ந்த கரிசனத்தோடுதான் அவள் கேட்டுக்கொண்டிருந்தாள்.

“நான் நிறைய சூட்டுகள் வாங்கப்போகிறேன்” என்று தனது ஆட்காட்டி விரலை நிமிர்த்தி சுவரின் நீளத்திற்கு கற்பனையாக ஓர் அலமாரி இருப்பதைப் போல வரைந்து காட்டினான். “இங்கிருந்து அதுவரைக்கும். அப்புறம் ஐம்பது ஜோடி காலணிகளும் வாங்கணும்”

“எல்லாம் கடவுள் சித்தம்” என்று சொன்னாள் அனா.

டமாஸோ அவளை நோக்கி கடுமையான பார்வை ஒன்றை வீசினான்.

“நான் சொல்லும் விஷயங்களில் நீ ஆர்வம் காட்டுவதே இல்லை” என்றான்.

“அதெல்லாம் என்னை விட்டு வெகுதூரம் உள்ள விஷயங்கள்” என்று சொன்னாள் அனா. விளக்கை அணைத்துவிட்டு சுவரோரமாகப் படுத்துக்கொண்டாள். வார்த்தைகளில் ஓர் அழுத்தமான கசப்போடு சொன்னாள்:

“உனக்கு முப்பது வயதாகும்போது எனக்கு நாற்பத்தேழு வயதாகி இருக்கும்”

“முட்டாள்தனமாக எதையாவது உளராதே” என்றான் டமாஸோ.

தீக்குச்சிகளைத் தேடி அவன் தன்னுடைய பாக்கெட்டைத் துழாவினான்.

“இனிமேல் இந்தத் துணிமணிகளோடு நீ போராட வேண்டிய அவசியம் இருக்காது. சிறு குழப்பத்தோடுதான் அவன் இதைச் சொன்னான். அனா அவனுக்குத் தீக்குச்சி ஒன்றைத் தந்தாள். தீக்குச்சி அணையும்வரை அதன் சுடரை அவள் பார்த்துக்கொண்டிருந்தாள். பிறகு அதை எடுத்துத் தூர எறிந்தாள். படுக்கையில் படுத்துக்கொண்டு டமாஸோ பேசத் தொடங்கினான்.

“பில்லியர்ட்ஸ் பந்துகள் எதனால் செய்யப்பட்டவை என்பது உனக்குத் தெரியுமா?”

அனா அதற்குப் பதில் சொல்லவில்லை.

“யானையின் தந்தங்களிலிருந்து செய்யப்படுகின்றன. அவை கிடைப்பதே மிகச் சிரமமான காரியம். அவை வருவதற்கு ஒரு மாதத்திற்கு மேலாக ஆகும். உன்னால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா?” என்று பேசிக்கொண்டே போனான் டமாஸோ.

“சரி தூங்கு. நான் காலையில் ஐந்து மணிக்கு எழவேண்டும்” என்று இடை மறித்தாள்

 அனா.  

டமாஸோ தனது இயல்பு நிலைக்குத் திரும்பினான். படுக்கையில் கிடந்துகொண்டு புகைப்பிடித்தவாறு தனது காலைப் பொழுதைக் கழித்தான். கொஞ்சம் மதிய உறக்கத்திற்குப் பிறகு வெளியே செல்லத் தயாரானான். சூதாட்ட கிளப்பில் அன்றிரவு பேஸ்பால் வர்ணனை ஒலிபரப்பை ரேடியோவில் கேட்டான். தனக்குத் தேவையான வேலைகளை அவன் நினைத்துப் பார்ப்பதை எவ்வளவு உற்சாகத்துடன் செய்வானோ அதற்குக் கொஞ்சம் கூட குறையாத உற்சாகத்தில் அவை எல்லாவற்றையும் மறக்கும் சக்தியையும் பெற்றவன் அவன்.

“உன்னிடம் ஏதாச்சும் கொஞ்சம் பணம் இருக்கிறதா?” சனிக்கிழமையன்று அவன் தன் மனைவியிடம் கேட்டான்.

“பதினோரு பெசோக்கள் இருக்கு. வாடகைக்காக வைத்திருக்கிறேன்” மெதுவாகப் பதில் சொன்னாள் அவள்.

“சரி…. உன்னுடன் ஒரு ஒப்பந்தம் செய்துகொள்ளட்டுமா?” என்று கேட்டான்.

“என்ன ஒப்பந்தம்?

“அதை என்னிடம் கொடுத்து விடு”

“வாடகை தரவேண்டுமே?”

“அதைப் பிறகு கொடுத்துக் கொள்ளலாம்”

அனா மாட்டேன் என்று தலையை அசைத்தாள். சற்று முன்னர் அவர்கள் இருவரும் சேர்ந்து காலை உணவு சாப்பிட்ட மேசையிலிருந்து அவளை எழ விடாதவாறு டமாஸோ அவளுடைய மணிக்கட்டை இறுக்கமாகப் பற்றினான்.

“கொஞ்ச நாளைக்குத்தான் இது எனக்குத் தேவைப்படும்” அவளுடைய கவனத்தைத் திசைதிருப்பும் விதமாக அவளுடைய கரங்களை மெதுவாக வருடியவாறு பேசினான். “அந்தப்பந்துகளை நான் விற்றால் நமக்குத் தேவைக்கு அதிகமான பணம் கிடைத்துவிடும்.” என்றான்.

அனா அதற்கும் மசியவில்லை.

அன்றிரவு டமாஸோ அனாவை சினிமா பார்க்க அழைத்துச் சென்றான். இடைவேளையில் அவன் அவனது நண்பர்களிடம் பேசிக்கொண்டிருக்கும்போது கூட அவன் தனது கரங்களை அவளது தோளிலிருந்து எடுக்கவில்லை. படத்தின் காட்சிகளை அவர்கள் பார்த்தார்கள். சினிமா முடிந்தது. டமாஸோ பொறுமை இழந்தான்.

“அப்படீன்னா நான் பணத்தைக் கொள்ளையடிக்க வேண்டியதுதான்.”  என்று சொன்னான் அவன்.

அதைக்கேட்டு அனா தனது தோளைக் குலுக்கிக் கொண்டாள். “முதலில் எவன் என் கண்ணில் படுகிறானோ அவன் தொலைந்தான்” என்று சொல்லிக்கொண்டே கூட்டத்துக்கு இடையே ஊடுருவியவாறு அவளைத் தள்ளிக்கொண்டு சினிமா தியேட்டரை விட்டு வெளியே வந்தான் டமாஸோ. “பிறகு கொலை செய்த குற்றத்திற்காக அவர்கள் என்னை ஜெயிலில் தள்ளுவார்கள்” என்று சொல்லிக் கொண்டே வந்தான். அனா உள்ளுக்குள்ளேயே சிரித்துக்கொண்டாள். ஆனாலும் அவன் தனது நிலைப்பாட்டிலிருந்து அசைந்து கொடுக்கவில்லை. அடுத்த நாள் காலை, புயல் வீசி ஓய்ந்த முன்னிரவுக்குப் பின்னர், டமாஸோ மிகவும் அவசரகதியில் உடையணிந்துகொண்டான். அவனுடைய மனைவிக்கு அருகில் வந்து நின்றான். உறுமியவாறு கத்திச் சொன்னான்.

“இனிமேல் நான் இங்கு திரும்பி வரப்போவதில்லை.”

இதைக்கேட்டதும் ஏற்பட்ட சிறுநடுக்கத்தை அனாவால் மறைக்க முடியவில்லை.     

“உன்னுடைய பயணத்திற்கு என்னுடைய வாழ்த்துகள்” என்று அவளும் பதிலுக்குக் கத்தினாள்.

சடாரென்று அவன் கதவைச் சாத்திவிட்டு வெளியே வந்தபின்னர் டமாஸோவின் வாழ்வில் வெறுமையான, முடிவில்லாத ஞாயிற்றுக்கிழமைகள் அவனை நோக்கி வெறிக்கத் தொடங்கின. சந்தையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பீங்கான் பொருட்களும், எட்டு மணி வழிபாட்டுக்காகப் பளிச்சென்று உடையணிந்து தத்தம் குழந்தைகளுடன் நடந்து சென்ற பெண்களும் அந்த அங்காடிக்கு ஒரு தனி மெருகைத் தந்து கொண்டிருந்தனர். இருந்தாலும் அங்கிருந்த சூழ்நிலை வெப்பத்தால் இறுகிப் போனதைப்போல அவனுக்குத் தோன்றியது.  

நாள் முழுவதையும் அவன் அந்தச் சூதாட்ட கிளப்பிலேயே கழித்தான். காலையில் குழுவாக வந்திருந்த சிலர் அங்கே சீட்டாட்டம் ஆடினார்கள். மதியத்துக்குச் சற்று முன்னர் வாடிக்கையாளர்களின் வருகை கணிசமாக உயர்ந்திருந்தது. ஆனால் அந்தக் கட்டிடத்துக்கு முன்பிருந்த சோபை இப்போது இல்லை என்பது கண்கூடாகத் தெரிந்தது. பேஸ்பால் வர்ணனை ஒலிபரப்பாகிக்கொண்டிருக்க, பின்மாலைப்பொழுது நெருங்கிய பின்னர்தான் அந்தக் கட்டிடத்தின் பழைய சோபையில் கொஞ்சம் திரும்பி வந்தது போல இருந்தது.

கிளப்பை மூடிய பின்னர், டமாஸோவுக்கு எங்கே போவது என்று தெரியவில்லை. மொத்த கட்டிடமும் வெறிச்சோடிக் கிடந்தது. தூரத்தில் துறைமுகத்தை ஒட்டினாற்போல அதற்கு இணையாக ஓடிய தெருவில் மகிழ்ச்சி கலந்த இசையொன்று கலந்தோடி இழைந்து வந்தது. அவன் அதை நோக்கிச் சென்றான். அந்தத் தெருவின் முடிவில் ஒரு மிகப்பெரிய காலியான நடனமண்டபம் ஒன்று தென்பட்டது. வண்ணம் மங்கிப்போன தாள்களால் செய்யப்பட்ட மாலைகளால் அந்த மண்டபம் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அதற்குப் பின்னால் மரத்தாலான ஒரு மேடையில் இசைக்குழு ஒன்று இசைத்துக் கொண்டிருந்தது. மூச்சுத்திணறவைக்கும் செயற்கை ஒப்பனைகள் ஏற்படுத்திய நாற்றம் அந்த இடத்தில் மிதந்து வந்து கொண்டிருந்தது.

டமாஸோ அங்கிருந்த இருக்கை ஒன்றில் அமர்ந்தான். அந்தப்பாடல் முடிந்தவுடன் அதை இசைத்த சிறுவன் அங்கே நடனமாடிக் கொண்டிருந்தவர்களிடம் சென்று காசுகளைச் சேகரித்தான். மண்டபத்தின் நடுவில் நடனமாடிக் கொண்டிருந்த பெண்னொருத்தி தன்னுடைய துணையை விட்டுவிட்டு டமாஸோவை நோக்கி வந்தாள்.

“ஏதாச்சும் விஷேசம் உண்டா அன்பே?”

டமாஸோ பக்கத்திலிருந்த ஒரு சீட்டில் அவளை அமரச் சொன்னான். முகம் முழுக்க பவுடர் பூசி, காதில் இளஞ்சிவப்பு நிறத்தில் பூ ஒன்றைச் செருகியவாறு அருகில் வந்த சேவகன் அவர்களைப் பார்த்து உச்சஸ்தாயியில் கேட்டான்:

“என்ன வேண்டும் உங்களுக்கு?” 

அந்தப் பெண் டமாஸோவை நோக்கித் திரும்பினாள்.

“நாம் என்ன குடிக்கலாம்?”

“ஒன்றும் வேண்டாம்”

“இது என்னுடைய விருந்து”

“எதுவும் வேண்டாம். எனக்குப் பசிக்கிறது” என்றான் டமாஸோ.

“இவனுடைய கண்களைப் பார்த்தால் பரிதாபமாகத்தான் இருக்கிறது” என்று அந்த சேவகன் உச்சுக் கொட்டினான். 

மண்டபத்தின் பின்னால் இருந்த உணவருந்தும் இடத்தை நோக்கி அவர்கள் சென்றார்கள். உடல் வடிவத்தை வைத்துப் பார்க்கும்போது அந்தப் பெண் மிகவும் இளைய வயதினளாய் தெரிந்தாள். ஆனால் முகத்தில் அப்பி இருந்த பவுடரின் அடுக்கு, தகதகக்கும் இளஞ்சிவப்பு நிறம், உதட்டில் பூசப்பட்டிருந்த உதட்டுச் சாயம் எல்லாம் சேர்ந்து அவளுடைய உண்மையான வயதைக் கண்டுபிடிக்க விடாமல் செய்துகொண்டிருந்தன. சாப்பிட்டு முடித்த பின்னர் இருள் சூழ்ந்து கிடந்த உள் அறை ஒன்றின் பின்புறம் இருந்த ஓர் அறையை நோக்கி அவள் சென்றாள். டமாஸோ அவளைப் பின்தொடர்ந்தான். தூங்கிக்கொண்டிருந்த விலங்குகளின் மூச்சுவிடும் சத்தம் அங்கே கேட்டுக் கொண்டிருந்தது. அங்கிருந்த படுக்கை ஒன்றில் குழந்தை ஒன்று வண்ணத்துணி ஒன்றினால் போர்த்தப்பட்டுக் கிடந்தது. அந்தப் பெண் துணிகளை எடுத்து ஒரு பெட்டியில் அடுக்கி அதனுள் குழந்தையைக் கிடத்தினாள். பிறகு அந்தப்பெட்டியைத் தரையில் வைத்தாள்.

“அய்யோ எலிகள் குழந்தையைத் தின்றுவிடும்” என்றான் டமாஸோ.

“இல்லை. அவை தின்னாது” என்று அவள் சொன்னாள்.

அவளுடைய செந்நிற உடையைக் களைந்துவிட்டு கழுத்து இறக்கமாகத் தைக்கப்பட்ட, பெரிய மஞ்சள் பூக்களுடன் டிசைன் செய்யப்பட்ட இன்னொரு உடையை அணிந்து கொண்டாள்.

“இந்தக் குழந்தைக்கு அப்பா யார்?” என்று டமாஸோ கேட்டான்.

“யாருக்குத் தெரியும்? எனக்கு அதைப்பற்றி எதுவும் தெரியாது” சொல்லிக்கொண்டே கதவுக்கு அருகில் நின்றுகொண்டு அவனை நோக்கிச் சொன்னாள்:

“கொஞ்ச நேரத்தில் திரும்பிவிடுவேன்”

அவள் தாழ்ப்பாளைப் பூட்டும் சத்தம் அவனுக்குக் கேட்டது. உடையைக் களையாமல் அப்படியே படுக்கையில் மல்லாக்கப் படுத்துக்கொண்டு சிகரெட்டுகளை ஊதித் தள்ளினான். மேளச்சத்தத்தின் அதிர்வலைகள் கட்டிலையும் அதிரச் செய்தன. எப்போது ஆழ்ந்து தூங்கத் தொடங்கினான் என்பதே அறியாமல் நன்றாகத் தூங்கினான். கண் விழித்தபோது இசை நின்றுவிட்டதாலோ என்னவோ அவனுக்கு அந்த அறை முன்பு இருந்ததை விட பெரியதாகத் தோன்றியது.

படுக்கைக்குப் பக்கத்தில் நின்றுகொண்டு அந்த பெண் தனது ஆடைகளைக் களைந்து கொண்டிருந்தாள்.

“இப்போது நேரம் என்ன?”

“நாலு மணி இருக்கும். குழந்தை அழுதானா?”

“அழவில்லைன்னு நினைக்கிறேன்” என்றான் டமாஸோ.

அந்தப் பெண் அவனுக்கு மிக நெருக்கமாக வந்து படுத்துக் கொண்டாள். கண்களால் அவனை அளந்து பார்த்தாள். பின்னர் கொஞ்சம் விலகிப் படுத்துக்கொண்டு அவனுடைய சட்டைப் பொத்தான்களைக் கழற்றினாள். அவள் நன்றாகக் குடித்துவிட்டு வந்திருக்கிறாள் என்பது டமாஸோவுக்கு நன்றாகப் புரிந்தது. அவன் விளக்கை அணைக்க எத்தனித்தான்.

“அது எரியட்டும். உன்னுடைய கண்களைப் பார்க்க நான் ஆசைப்படுகிறேன்” என்றாள் அவள்.

விடிந்ததிலிருந்து அக்கம் பக்கத்திலிருந்து கேட்ட குடியான மக்களின் குரல்கள் அந்த அறையை நிறைத்தன. குழந்தையும் தன் பங்குக்கு அழுதது. அந்தப் பெண் குழந்தையைத் தூக்கிக்கொண்டு படுக்கைக்குப் போனாள். பால் தந்துவிட்டு எல்லோரும் தூங்கும்வரை தனக்குத் தெரிந்த ஏதோ மூன்று அசைகளில் உள்ள தாலாட்டுப் பாடல் ஒன்றைப்பாடினாள். அந்தப்பெண் ஏழு மணிக்கு எழுந்து அறையை விட்டு வெளியே சென்றதையும், அவள் திரும்பி வந்தபோது அவள் கையில் குழந்தை இல்லாமல் இருந்ததையும் டமாஸோ கவனிக்கவில்லை.

“எல்லோரும் துறைமுகத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறார்கள்” என்றாள்.

“கடந்த இரவு தான் தூங்கியது ஒரு மணி நேரத்துக்கு மேலாக இல்லை என்ற உணர்வு ஏற்பட்டது டமாஸோவுக்கு.

“எதுக்கு போறாங்க?”

“பில்லியர்ட்ஸ் பந்துகளைத் திருடிய அந்த கறுப்பினத்தவனை பார்க்கத்தான். அவனை இன்று அவர்கள் கூட்டிச் செல்கிறார்கள்” என்று சொன்னாள்.

டமாஸோ சிகரெட் ஒன்றைப் பற்ற வைத்துக்கொண்டான்.

“பாவம் அவன்” என்று பரிதாபப்பட்டாள் அந்தப்பெண்.

“அவன் என்ன பாவம்? அவனை யாரும் திருடனாகும்படி நிர்ப்பந்திக்கவில்லை” என்றான் டமாஸோ.

அவனது நெஞ்சில் தலையை வைத்துக்கொண்டு அந்தப் பெண் ஒரு கணம் அமைதியாக இருந்தாள். பின்னர் தாழ்வான குரலில் சொன்னாள்:

“திருடியது அவன் அல்ல”

“யார் சொன்னது அப்படி?”

“எனக்குத் தெரியும். சூதாட்ட அறையை அவர்கள் உடைத்தபோது அந்த கறுப்பன் இங்கே க்ளோரியாவுடன்தான் இருந்தான். அவளுடைய அறையில்தான் அவன் அவளுடன் ஏறக்குறைய நடுநிசி வரை இருந்தான். அதற்கு அப்புறம் அவர்கள் வந்து அவனை சினிமா தியேட்டரில் கைது செய்ததாகச் சொன்னார்கள்” என்று விலாவாரியாகச் சொன்னாள்.

“க்ளோரியா போலீசிடம் சொல்லி இருக்கலாமே”

“அந்தக் கறுப்பன் போலீசிடம் அதையும் சொல்லி இருக்கிறான். உடனே மேயர் க்ளோரியாவின் அறைக்கு வந்து அவளுடைய அறையைத் தலைகீழாய் புரட்டிப்போட்டு தேடிப்பார்த்தான். அவனுடன் சேர்ந்துகொண்டு குற்றம் செய்ததற்காக அவளையும் ஜெயிலில் கொண்டுபோய் விடப்போகிறேன் என்று அவளை மிரட்டி இருக்கிறான். கடைசியாக இருபது பெசோக்களை வாங்கிக்கொண்டு விஷயம் முடக்கப்பட்டு விட்டது” என்றாள் அந்தப் பெண்.

டமாஸோ எட்டு மணிக்கு முன்பாகவே எழுந்துவிட்டான்.

“இங்கேயே இரு. மதிய உணவுக்கு கோழி ஒன்றை கொல்லனும்” என்றாள் அவள்.

டமாஸோ தன் கையிலிருந்த சீப்பை உள்ளங்கையில் அடித்துக் குலுக்கி சுத்தம் செய்து விட்டு பேன்ட்டின் பின்பாக்கெட்டுக்குள் போட்டுக்கொண்டான். “என்னால் காத்திருக்க முடியாது” என்று சொல்லிக்கொண்டே அவளுடைய மணிக்கட்டைப் பற்றி அவன் பக்கமாக இழுத்தான். அவள் அப்போதுதான் முகம் கழுவி இருந்தாள். அவள் உண்மையாகவே மிகவும் இளைய வயதுடைய பெண்ணாக இருந்தாள். இரண்டு பெரிய கரிய கண்கள். அதைப்பார்க்கும்போது அதில் அவளுடைய வெகுளித்தனம் தெரிந்தது. அவள் அவனுடைய இடுப்பை தன்னோடு வளைத்துப் பிடித்துக்கொண்டு நின்றாள்.

“இங்கேயே இரு” அவள் அவனை வற்புறுத்தினாள்.

“நிரந்தரமாகவா?”

சிறிதாக வெட்கம் கொண்டாள். பின்னர் விலகிக்கொண்டாள்.

“நீ ஒரு ஜோக்கர்டா” என்று சொன்னாள்.

அன்று காலை அனா வெகுவாகக் களைப்படைந்திருந்தாள். இருந்தாலும் அந்த நகரத்தின் உற்சாகம் எல்லோரையும் உடனே தொற்றிக்கொள்ளும் தன்மை வாய்ந்தது. அந்த வாரம் துவைக்க வேண்டிய துணிமணிகளை வழக்கத்துக்கு மாறான வேகத்துடன் அவள் சேகரித்துக் கொண்டாள். அந்த கறுப்பனை கொண்டு செல்வதைப் பார்ப்பதற்காகத் துறைமுகத்தை நோக்கி விரைந்தாள். புறப்படுவதற்குத் தயாராக நின்றிருந்த விசைப்படகுகளுக்கு அருகாமையில் பொறுமையிழந்த கூட்டம் ஒன்று கூடி இருந்தது. டமாஸோவும் அந்த கூட்டத்திலிருந்தான்.

அனா அவனுக்குப் பக்கத்தில் வந்து தனது ஆட்காட்டி விரலால் அவனுடைய இடுப்பில் குத்தினாள்.

“இங்கே நீ என்ன பண்ணிகிட்டு இருக்கே? அதிர்ந்து போனவனாய் அவளைப் பார்த்துக் கேட்டான் டமாஸோ.

“உன்னை வழியனுப்பலாம்னுதான் நான் இங்கே வந்தேன்” என்று பதில் சொன்னாள் அனா.

அருகிலிருந்த விளக்குக் கம்பத்தில் தன் முஷ்டியால் குத்திக்கொண்டான் டமாஸோ.

“அடக் கருமம் பிடிச்சவளே” என்று முனகிக்கொண்டான்.

சிகரெட்டு ஒன்றைப் பற்ற வைத்த பிறகு காலி டப்பாவை ஆற்றுக்குள் வீசியெறிந்தான். அனா தனது மேல்சட்டைப் பையிலிருந்து இன்னொரு சிகரெட் பாக்கெட்டை எடுத்து அவனுடைய சட்டைப்பைக்குள் வைத்தாள். முதன்முறையாக டமாஸோ அவளைப் பார்த்துச் சிரித்தான்.

“நீ எக்காலத்திலும் திருந்தவே மாட்டே” என்றான்.

அனா “ஹா ஹா” என்று சிரித்தாள்.

கொஞ்ச நேரம் கழித்து அந்த கறுப்பனை ஏற்றினார்கள். அங்காடியின் ஊடே அவனைக் கூட்டிச் சென்றார்கள். அவனுடைய கைகள் பின்னால் கட்டப்பட்டு இருந்தன. கயிற்றின் நுனியை போலீஸ்காரன் ஒருவன் பற்றி இருந்தான். இரண்டு போலீஸ்காரரர்கள் கையில் துப்பாக்கியோடு அவனுக்கு அருகாமையில் நடந்து வந்தார்கள். அவன் சட்டை அணியாமல் இருந்தான். உதடு கிழிந்து தொங்கியது. குத்துச்சண்டை வீரனைப்போல புருவங்களில் ஒன்று வீங்கிப்போய் இருந்தது. சுயகண்ணியத்துடன் கூட்டத்தின் பார்வையை அவன் நேரடியாகப் பார்ப்பதைத் தவிர்த்தான். இரண்டு பக்கமும் நடக்கும் நாடகத்தைப் பார்ப்பதற்காகச் சூதாட்ட அறையின் வாசலில் பெரிய கூட்டம் ஒன்று கூடி இருந்தது. குற்றவாளி ஒன்றும் சொல்லாமல் அமைதியாகத் தலையை அசைத்தவாறு நடந்து செல்வதை சூதாட்ட கிளப்பின் முதலாளி பார்த்துக்கொண்டு நின்றான். கூட்டத்தின் மறுபாதி என்ன நடக்கிறது என்பதைப் பார்க்க ஆவலுடன் காத்துக்கொண்டிருந்தது.

விசைப்படகின் கட்டுகள் அவிழ்க்கப்பட்டன. கறுப்பனை அதில் ஏற்றினார்கள். அவனது கையும் காலும் ஒரு எண்ணெய் பீப்பாயோடு சேர்த்துக் கட்டி இருந்தார்கள். விசைப்படகு ஒரு வட்டமடித்துத் திரும்பி கடைசியாகச் சத்தமிட்டுக்கொண்டு ஆற்றின் நடுவே சென்ற போது அந்த கறுப்பினத்தானின் முதுகு மின்னுவது தெரிந்தது.

“பாவப்பட்டவன்” என்று கரிசனப்பட்டாள் அனா.

“குற்றவாளிகள்தானே இவர்கள் எல்லாம். மனிதன் ஒருவனால் அதிக நேரம் சூரிய வெப்பத்தைத் தாங்க முடியாது” அவளுக்குப் பக்கத்திலிருந்த யாரோ ஒருத்தி சொன்னது கேட்டது.   

அநியாயத்துக்கு தின்று கொழுத்துப்போய் நின்ற ஒரு பெண்ணிடமிருந்துதான் அந்த குரல் வந்தது என்பதை டமாஸோ அறிந்துகொண்டான். அங்காடியை நோக்கி நடக்கத் துவங்கினான். “நீ அதிகமாக பேசுறே. இப்ப நீ செய்ய வேண்டியது என்ன தெரியுமா. உண்மையான குற்றவாளி யார் என்பதை எல்லோருக்கும் கேட்கும்படி கத்திச் சொல்வதுதான்.” என்று அனாவின் காதுகளில் கிசுகிசுத்தான் டமாஸோ. சூதாட்ட அறையின் வாசல் வரை அவள் அவனைப் பின் தொடர்ந்து வந்தாள்.

“வீட்டுக்குப்போய் உடையை மாற்றித் தொலை. உன்னைப் பார்த்தால் பிச்சைக்காரனைப் போல இருக்கு” அவனிடமிருந்து விடைபெற்றுக்கொண்டு செல்லும்போது அவனிடம் இப்படிச் சொல்லிவிட்டு நகர்ந்தாள்.

உற்சாகத்தில் துள்ளிய கூட்டம் ஒன்றை அந்த ஒட்டு மொத்த நிகழ்ச்சி சூதாட்ட கிளப்புக்குத் தள்ளிக்கொண்டு வந்தது. அவர்கள் அனைவருக்கும் தேவையானதைக் கொடுப்பதற்காக ஒரே நேரத்தில் எல்லா மேசைகளிலும் போய் காத்திருந்தான் ரோக். அவன் தன் பக்கத்தில் வந்து கடந்து செல்லும்வரை டமாஸோ அவனுக்காகக் காத்திருந்தான்.

“உனக்கு ஏதாவது உதவி தேவையா?”

அரை டஜன் பீர் பாட்டில்களை அவன் முன்னால் கொண்டு வந்து வைத்தான். பாட்டில்களின் கழுத்தில் கண்ணாடிக் குவளைகள் தலைகுப்புற மூடி இருந்தன.

“மிகவும் நன்றி மகனே”

டமாஸோ அந்த பாட்டில்களை மேசைகளுக்கு எடுத்துச் சென்றான். வாடிக்கையாளர்களுக்குத் தேவையானதை அடிக்கடி குறித்துக்கொண்டு வந்து அவர்கள் மதிய உணவுக்குச் செல்லும்வரை பாட்டில்களை எடுத்துச் செல்வதும் கொண்டு வருவதுமாக இருந்தான். அதிகாலையில் அவன் தன்னுடைய அறைக்குத் திரும்பிய போது அவன் நன்றாகக் குடித்திருந்தான் என்பதை அனா உணர்ந்து கொண்டாள். அவனுடைய கையைப் பற்றி அவளுடைய வயிற்றில் வைத்துக்கொண்டாள்.

“இதைக் கொஞ்சம் தொட்டுப்பார். உன்னால் ஏதாவது உணர முடிகிறதா?” என்று அவனைக் கேட்டாள்.

டமாஸோவிடம் உற்சாகத்தின் அறிகுறி எதுவும் தென்படவில்லை.

“குழந்தை உள்ளே உதைத்துக் கொண்டிருக்கிறான். இரவு முழுவதும் எனக்குத் தொடர்ந்து குட்டி உதைகள் தந்துகொண்டே இருக்கிறான்.” என்று சொன்னாள் அனா.

அவள் சொன்னதுக்கு அவன் எதுவும் சொல்லாமல் இருந்தான். தன்னை பற்றி மட்டுமே சிந்தித்துக் கொண்டிருப்பவனாய் அடுத்த நாள் காலை வெகுசீக்கிரமே வீட்டை விட்டுக் கிளம்பிச் சென்றான். நள்ளிரவு வரையிலும் அவன் வீடு திரும்பவில்லை. அப்படியே சில வாரங்கள் கழிந்தன. வீட்டில் தங்கி இருக்க நேரிட்ட சில கணப்பொழுதுகளில் கூட பேசுவதை அவன் தவிர்த்தான். கட்டிலில் படுத்துக்கொண்டு புகைப்பிடித்துக் கொண்டிருப்பான். அவன் மீதான தனது கவனத்தைத் தீவிரப்படுத்தினாள் அனா. முன்னொரு காலத்தில் அவர்கள் இருவரும் சேர்ந்து தங்கள் வாழ்க்கையைத் தொடங்கிய நாளில் அவன் இப்படித்தான் நடந்துகொண்டிருந்தான். ஆனால் அவனைத் தொந்தரவு செய்யாமல் இருக்கும் அளவுக்கு அவள் அவனை அந்த நாட்களில் போதுமான அளவில் தெரிந்து வைத்திருக்கவில்லை. படுக்கையில் அவளைக் கீழே கிடத்தி மேலே ஏறி உட்கார்ந்து அவளுடைய முகத்தில் அறைந்து ரத்தம் வரச் செய்திருக்கிறான்.      

ஆனால் இப்போது அவள் காத்திருந்தாள். அன்றிரவு அவனது விளக்குக்குப் பக்கத்தில் ஒரு பாக்கெட் சிகரெட்டை வைத்தாள். அவன் பசியையும் தாகத்தையும்கூட பொறுத்துக்கொள்வான். ஆனால் சிகரெட்டை விட்டுவிட்டு அவனால் இருக்க முடியாது என்பதை அனா அறிவாள். கடைசியில், ஜூலை மாதத்தின் இடையில் மாலை மங்கிய நாளொன்றில் டமாஸோ வீட்டுக்குத் திரும்பி வந்தான். அனாவுக்கு பதற்றமாக இருந்தது. அந்த நேரத்தில் அவன் எதற்காக அவளைத்தேடி அங்கே வந்தான் என்பது அவனுக்கே குழப்பமாக இருக்கும் என்று அவள் நினைத்தாள். இருந்தாலும் படுக்கப்போகும் முன் எதிர்பாராத விதமாக டமாஸோ அவளிடம் அன்பாகவும் நாகரீகமாகவும் நடந்து கொண்டான். 

“நான் இங்கேயிருந்து கிளம்பணும்”

“எங்கே?”

“எங்கேயோ”

அனா அந்த அறையைச் சுற்றும் முற்றும் பார்த்தாள். பத்திரிக்கை இதழ்களின் அட்டைகளை வெட்டி அறையின் சுவர் முழுவதும் சினிமா நட்சத்திரங்களின் படங்களால் நிரம்பி வழியும்வரை அதை ஒட்டி வைத்திருந்தாள் அனா. அந்தப் படங்கள் மங்கிப்போயும் வண்ணம் குன்றியும் காணப்பட்டன. படுக்கையில் படுத்துக்கொண்டு சுவரில் அவள் பார்த்த ஆண்களின் எண்ணிக்கையை அவள் மறந்துவிட்டாள். அந்த ஆண்களும் மெதுவாக மறைந்துவிட்டார்கள். அவர்கள் சென்ற போது அந்தப் படங்களின் வண்ணங்களையும் எடுத்துச் சென்றுவிட்டது போலத் தோன்றியது அவளுக்கு. 

“என்னிடம் சேர்ந்து வாழ்வது உனக்கு அலுத்துவிட்டதா?” என்று அவள் கேட்டாள்.

“அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. இந்த நகரம்தான்.”

“எந்த ஒரு நகரத்தைப் போலவும் இதுவும் ஒரு நகரம். அவ்வளவுதான்”

“இங்கே அந்தப் பந்துகளை என்னால் விற்க முடியாது.” என்று சொன்னான் டமாஸோ.

“அந்தப் பந்துகளை மறந்துவிடு. இந்தத் துணிகளை சலவை செய்துகொண்டு மல்லுக்கட்ட உடம்பில் தெம்பை எனக்கு ஆண்டவன் கொடுத்திருக்கும் வரையில் நீ இந்த மாதிரியான அபாயகரமான விஷயங்களில் ஈடுபடத் தேவையில்லை” என்று ஆறுதலாகப் பேசினாள் அனா. சொல்லிவிட்டு மிருதுவான குரலில் அவனிடம் நெருங்கினாள்:

“இந்த பாழாய்ப்போன ஈன வியாபார புத்தி உன் மண்டைக்குள் எப்படி நுழைந்தது என்பதுதான் தெரியவில்லை.”

பதில் சொல்வதற்கு முன்னால் டமாஸோ சிகரெட்டு ஒன்றைப் பற்ற வைத்துக்கொண்டான்.

“இந்த விஷயம் எப்படி மற்றவர்களுக்குத் தோன்றாமல் இருக்கிறது என்பது எனக்குப் புரியாமல் இருப்பது சுலபமான விஷயம்தான். ”என்றான் டமாஸோ.

“பணத்துக்காகத்தான்” அவன் சொன்னதை ஒப்புக்கொண்டு மேலே பேசினாள் அனா. “ஆனாலும் அதற்காகப் பந்துகளைத் திருடும் அளவுக்கு ஒருவரும் முட்டாளாக இருக்க மாட்டார்கள்.”

“எதையும் சிந்திக்காமல் நான் அதைச் செய்துவிட்டேன். நான் அங்கிருந்து கிளம்பும்போது ஒரு சிறிய பெட்டியில் கல்லாவுக்குப் பின்னால் அவை இருப்பதைப் பார்த்தேன். இவ்வளவு சிரமப்பட்டு உள்ளே வந்திருக்கிறேன். வெறும் கையோடு திரும்ப மனசில்லை. அதான்” என்றான் டமாஸோ.

“அதுதான் நீ செய்த தவறு” என்றாள் அனா.

டமாஸோவுக்கு கொஞ்சம் திருப்தியாக இருந்தது. “ஆஹ்…சொல்ல நினைத்தேன். அந்த புதிய பந்துகள் இன்னும் வந்து சேரவில்லை. அவைகளின் விலை இப்போது அதிகமாகி விட்டது என்று சொல்லியனுப்பி இருக்கிறார்கள். அதனால் ஆர்டரை ரத்து செய்துவிட்டதாக ரோக் சொன்னான்” என்றான் டமாஸோ. இன்னொரு சிகரெட்டை பற்றவைத்துக் கொண்டான். அவன் பேசும்போது தன்னை பீடித்திருந்த ஏதோ ஒரு அசூயையான பீடை அவனை விட்டு நீங்கிவிட்டதைப் போல உணர்ந்தான்.

சூதாட்ட கிளப்பின் முதலாளி அதை விற்க முடிவு செய்திருப்பதாக அவன் சொன்னான். அது ஒன்றும் பெரிய விலைக்குப் போகாது. அந்தத் துணி கத்துக்குட்டிகள் கற்றுக் கொள்ளும்போது செய்யும் குதர்க்கங்களால் அருவருப்பான தோற்றத்தில் கிழிந்திருந்தது. அது பலமுறை வித்தியாசமான வண்ணங்கள்கொண்ட துணிகளைக்கொண்டு சதுரம் சதுரமாக வெட்டி பழுது பார்க்கப்பட்டு இருந்தது. மொத்த துணியையும் பழுதுபார்க்க வேண்டியிருந்தது. இதற்கிடையில் சூதாட்ட கிளப்பின் வழக்கமான வாடிக்கையாளர்கள் பில்லியர்ட்ஸ் விளையாட்டை மட்டும் பார்த்து வளர்ந்தவர்கள். இப்போது அவர்களின் பொழுதுபோக்கிற்கு ரேடியோவில் வரும் பேஸ்பால் ஒலிபரப்பைத் தவிர வேறு எதுவும் இருக்கப் போவதில்லை.

“எனவே நமக்கு விருப்பமே இல்லாமல் இந்த ஒட்டு மொத்த நகரத்தையும் நாம் காயப்படுத்தப் போகிறோம்” என்று சொல்லி தனது உரையை முடித்தான் டமாஸோ.

“ஒன்றுக்கும் பயனில்லாமல்” என்று எடுத்துக் கொடுத்தாள் அனா.

“அடுத்த வாரம் சாம்பியன்ஷிப் முடிந்து விடும்.” என்றான் டமாஸோ.

“அது ஒன்றும் கொடுமையான விஷயம் இல்லை. கொடுமையான விஷயம் அந்தக் கறுப்பினத்தானை என்ன செய்தார்கள் என்பதுதான்.” என்றாள் அனா.

முன்பொரு காலத்திலிருந்ததுபோல அவள் அவனுடைய தோளில் சாய்ந்து கொண்டாள். அவளுடைய கணவன் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறான் என்பது அவளுக்குத் தெரியும். அவன் சிகரெட்டை குடித்து முடிக்கும்வரை பேசாமல் காத்திருந்தாள். கொஞ்சம் எச்சரிக்கை கலந்த குரலில் பேசத் தொடங்கினாள்.

“டமாஸோ”

“சொல்லு.  என்ன விஷயம்?”

“அதைத் திருப்பிக் கொடுத்துவிடேன்”

அவன் மறுபடியும் சிகரெட் ஒன்றைப் பற்ற வைத்துக்கொண்டான்.

“கடந்த சில தினங்களாக நானும் அதைத்தான் யோசித்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் அதை எப்படி செய்வது என்பதுதான் அதில் இருக்கும் சிரமம்.” என்றான் டமாஸோ.

ஏதாவது ஒரு பொது இடத்தில் அந்தப் பந்துகளைப் போட்டு விடுவது என்று அவர்கள் முடிவு செய்து கொண்டார்கள். அப்படிச் செய்வது சூதாட்ட கிளப்பின் பிரச்சினையை வேண்டுமானால் தீர்த்து வைக்கும். அந்தக் கறுப்பின மனிதனின் பிரச்சினையைத் தீர்த்து வைக்காது என்பதைப் பற்றி அனா யோசித்தாள். அவனை வெளியே விடாமல் அந்தப் பந்துகள் எப்படிக் கிடைத்திருக்கக்கூடும் என்பதைப் போலீஸ் ஒரு தனிக்கதையாக விளக்கிச் சொல்லிவிடுவார்கள். அதையும் தாண்டி இன்னொரு அபாயமும் இருக்கிறது. அந்தப் பந்துகளைப் பார்க்கும் யாராவது அதைக் கையகப்படுத்திக்கொண்டு பின்னர் விற்றுக்கொள்ளலாம் என்று யாருக்கும் தகவல் தெரிவிக்காமல் இருந்தால் என்ன செய்வது? அனாவால் இந்தச் சாத்தியத்தை மறுக்க முடியவில்லை.

“நல்லது. ஒரு விஷயத்தைச் செய்ய வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால் அதை உடனே செய்து விடுவது சாலச் சிறந்தது” என்று அனா ஒரு முடிவுக்கு வந்தாள்.

உடனே அவர்கள் அந்தப் பந்துகளை வெளியே எடுத்தார்கள். உள்ளே இருக்கும் பொருளின் வடிவம் வெளியே துருத்திக்கொண்டு அது என்னவென்று சுலபமாகக் கண்டுபிடிக்க முடியாதபடி பழைய செய்தித்தாள் ஒன்றில் வைத்து அதைக் கட்டினார்கள். பின்னர் அதை இரும்புப் பெட்டிக்குள் வைத்துப் பூட்டினார்கள்.

“சரியான சமயம் வரும்வரை நாம் காத்திருக்க வேண்டும்.” என்று சொன்னாள் அனா.

ஆனால் அந்த சரியான சந்தர்ப்பம் வருவதற்காக அவர்கள் வாரக்கணக்கில் காத்திருந்தார்கள். ஆகஸ்ட் 20 ம் தேதி இரவு- கொள்ளை நடந்து இரண்டு மாதங்களுக்குப் பிறகு- ரோக் கல்லாவுக்குப் பின்னால் உட்கார்ந்துகொண்டு ஒரு விசிறியால் கொசு விரட்டிக் கொண்டிருப்பதை டமாஸோ பார்த்தான்.  ரேடியோ சத்தம் இல்லாமல் அவனுடைய தனிமை மிகவும் கடுமையான ஒன்றாக இருந்தது.

“நான் சொல்லல. வியாபாரம் சுத்தமா படுத்து விட்டது” தான் சொன்ன ஆரூடம் உண்மையாகிவிட்டதில் சந்தோசப்படுபவனைப்போலச் சொன்னான் ரோக்.

தானியங்கி இசைப்பெட்டியில் காசு ஒன்றைப் போட்டான் டமாஸோ. இசையின் சத்தமும் வண்ணங்களை அள்ளித் தெளித்து இயங்கும் அந்த இயந்திரத்தின் வேகமும் அவனுடைய விசுவாசத்தின் இரைச்சல் சாட்சியாக நின்றன. ஆனால் இதையெல்லாம் ரோக் கவனிக்கவில்லை என்பதை டமாஸோ கவனித்தான். ஒரு நாற்காலியை தன் பக்கம் இழுத்துப் போட்டுக்கொண்டு ஏதோ பிதற்றல் கலந்த விவாதத்துடன் அவனைச் சமாதானப்படுத்த முயன்றான். ஆனால் கவனமற்றுப்போய் ஆடிக்கொண்டிருந்த அவனுடைய விசிறியின் வீசலில் எந்தவித உணர்ச்சியும் இல்லாமல் அவனுடைய பேச்சையெல்லாம் அந்த முதலாளி உடைத்தெறிந்தான்.

“இனிமேல் செய்வதற்கு ஒன்றுமே இல்லை. பேஸ்பால் சாம்பியன்ஷிப்பும் ரொம்ப நாளுக்குத் தேறாது” என்று புலம்பினான் அவன்.

“ஆனால் அந்த பந்துகள் மீண்டும் கண்டுபிடிக்கப்படலாம்”

“அதெல்லாம் வராது”

“அந்த நீக்ரோ அதை ஒன்றும் சாப்பிட்டிருக்க மாட்டான்”

“போலீஸ் எல்லா இடத்திலும் தேடிப் பார்த்துவிட்டார்கள். அவன் அதை எல்லாம் ஆற்றுக்குள் தூக்கி எறிந்து விட்டான்.” ஒரு விரக்தி கலந்த நிச்சயத்துடன் பேசினான் ரோக்.

“ஏதேனும் அதிசயம் நடக்கலாம் இல்லையா?”

“உன்னுடைய இந்த மயக்கங்களை எல்லாம் மறந்துவிடு மகனே! துரதிர்ஷ்டம் நத்தை மாதிரி. நீ இந்த அதிசயம் நடக்கும் என்பதையெல்லாம் நம்புகிறாயா?” என்று கேட்டான் ரோக்.

அவன் அங்கிருந்து கிளம்பியபோது சினிமா இன்னும் முடியாமலிருந்தது. ஒலிபெருக்கியில் வந்துகொண்டிருந்த நீளமான, உடைந்த உரையாடல்கள் இருள் சூழ்ந்த அந்நகரத்தில் எதிரொலித்துக் கொண்டிருந்தது. எதையோ தற்காலிகமாக வைத்திருப்பதைப்போல சில வீடுகள் மட்டும் திறந்து வைக்கப்பட்டிருந்தன. சினிமா தியேட்டர் இருந்த திசையை நோக்கி டமாஸோ கொஞ்ச நேரம் உலாத்திக் கொண்டிருந்தான். பிறகு நடன மண்டபத்தை நோக்கி நடந்தான்.

அங்கிருந்த இசைக்குழு தனியாளாய் ஒரே நேரத்தில் இரண்டு பெண்களுடன் நடனமாடிக் கொண்டிருந்த வாடிக்கையாளன் ஒருவனுக்காகப் பாடலை இசைத்துக் கொண்டிருந்தது. மற்றவர்கள் சுவரோடு சுவராக ஒன்றும் செய்யாமல் அமைதியாக அமர்ந்திருந்தார்கள். ஏதோ செய்திக்காக அவர்கள் காத்திருப்பதைப்போலத் தோன்றியது. டமாஸோ ஒரு மேசையில் போய் உட்கார்ந்தான். சேவகனை நோக்கி கையசைத்து ஒரு பீர் கொண்டுவரும்படி பணித்தான். வந்தவுடன் அந்த பாட்டிலிலிருந்த பீரை ஒவ்வொரு மூச்சுக்கும் இடைவெளி விட்டு, பாட்டிலின் கண்ணாடி வழியாக இரண்டு பெண்களோடு நடனமாடும் அந்த ஆளைப் பார்ப்பதுபோல நிதானமாகக் குடித்தான்.   அந்தப் பெண்களை விட அந்த மனிதன் குள்ளமாக இருந்தான்.

நள்ளிரவில் சினிமாவுக்கு சென்றிருந்த பெண்கள் அங்கே வந்தார்கள். அவர்களைத் தொடர்ந்து வந்த சில ஆண்களும் குழுவாக அங்கே வந்தார்கள். அவர்களில் ஒருத்தி டமாஸோவுக்குத் தெரிந்தவள். அவள் மற்றவர்களை விட்டுவிட்டு டமாஸோவை நோக்கி வந்தாள். அவனுக்குப் பக்கத்தில் மேசையில் அமர்ந்தாள்.

டமாஸோ அவளை ஏறிட்டுப் பார்க்கவில்லை. அரை டஜன் பீரைக் குடித்துவிட்டு அந்த மனிதனை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். அந்த மனிதன் இப்போது மூன்று பெண்களோடு நடனமாடிக்கொண்டிருந்தான். ஆனால் அந்தப் பெண்களின் மீது கவனம் செலுத்தாமல் நளினமாக நகரும் தனது பாதங்களையே கவனித்தவனாய் நடனமாடிக் கொண்டிருந்தான். பார்ப்பதற்கு மகிழ்ச்சியானவனாகத் தெரிந்தான். அவனுடைய கால்களையும் கைகளையும் தவிர வால் ஒன்றும் இருந்திருந்தால் அவன் இப்போது இருப்பதை விட இன்னும் சந்தோசமாக இருந்திருப்பான் என்று தோன்றியது.

“எனக்கு அவனைப் பிடிக்கவில்லை” என்று சொன்னான் டமாஸோ.

“அப்படீன்னா அவனைப் பார்க்காதே” என்று சொன்னாள் அவன் தோழி.

சேவகனை அழைத்து அவளும் குடிப்பதற்காக ஆர்டர் செய்தாள். நடன மண்டபம் ஆணும் பெண்ணுமாய் இணைகளால் நிரம்பத் தொடங்கியது. ஆனால் மூன்று பெண்களோடு ஆடிக்கொண்டிருந்த மனிதன் அந்த மண்டபத்தில் அவன் மட்டும்தான் இருக்கிறான் என்பதுபோலத் தொடர்ந்து ஆடிக்கொண்டே இருந்தான்.  ஒரு திருப்பத்தில் அவன் கண்கள் டமாஸோவின் கண்களில் பதிந்தன. பார்த்தவுடன் அவன் தன்னுடைய ஆட்டத்தில் இன்னும் தீவிரம் காட்டத் தொடங்கினான். எலியின் பல்லைப் போன்ற தனது பல்லை அவனிடம் காட்டி ஒரு சிரிப்பை உதிர்த்தான். அந்த மனிதன் சிரிப்பை மறந்து முதுகைக் காட்டும் வரை கண்ணை அசைக்காமல் டமாஸோ அவனுடைய பார்வையை எதிர்கொண்டான்.

“தான் மிகவும் சந்தோசமாக இருப்பதாக அந்த மனிதன் நினைத்துக் கொண்டிருக்கிறான்” என்றான் டமாஸோ.

“அவன் சந்தோசமாகத்தான் இருக்கிறான். ஒவ்வொரு முறையும் அவன் நகரத்துக்கு வரும்போது இந்த இசைக்குச் செலவு செய்வான். ஊர் ஊராகச் சுற்றும் பொருள் விற்பவனைப் போல” என்று சொன்னாள் அவள்.

தனது கண்களை அவனிடமிருந்து விலக்கி அவளை நோக்கித் திருப்பினான்.

“அப்ப அவனோடு போ. மூன்றுக்கு இடம் இருந்தால் நான்காவதுக்கும் கண்டிப்பா இடமிருக்கும்” என்றான் டமாஸோ.

அவனுக்குப் பதில் சொல்லாமல் நிதானமாகக் குடித்துக்கொண்டு அவள் தனது முகத்தை நடன மண்டபத்தை நோக்கித் திருப்பினாள் அவள். வெளிறிப்போயிருந்த மஞ்சள் நிற உடை அவளது கூச்சத்தைத் தூக்கலாகக் காட்டியது.

அவர்கள் நடனத்தின் அடுத்த கட்டத்துக்குப் போனார்கள். அது முடிந்தபோது, டமாஸோ முற்றிலும் கசங்கிப் போயிருந்தான். “எனக்குப் பசிக்கிறது” என்று அந்தப் பெண் கூறினாள். அவனுடைய கைகளைப் பற்றிக்கொண்டு சாப்பாடு கிடைக்கும் பிரிவுக்குச் சென்றாள். “நீயும் சாப்பிட வேண்டும்” என்றாள். அந்த சந்தோசமான மனிதன் தன்னுடைய மூன்று பெண்களோடு எதிரே வந்து கொண்டிருந்தான். 

“கொஞ்சம் நில்லு” என்று அவனுக்கு முன்னால் போய் நின்றான் டமாஸோ.

அந்த மனிதன் நிற்காமல் இவனைப் பார்த்துப் புன்னகைத்துவிட்டு நகன்றான். தன்னைப் பிடித்துக்கொண்டிருந்த கைகளிலிருந்து விடுபட்டு அவனுடைய வழியை மறித்தபடி நின்றான்.

“உன்னுடைய பல்லை எனக்குப் பிடிக்கவில்லை”

அந்த மனிதன் லேசாகத் திகில் அடைந்து வெளிறினான். ஆனால் சிரிப்பதை நிறுத்தவில்லை.

“எனக்கும்தான் பிடிக்கவில்லை” என்றான் அவன்.

டமாஸோவின் தோழி அவனைத் தடுக்கும் முன், டமாஸோ அந்த மனிதனின் முகத்தில் ஓங்கிக் குத்தினான். நடன மண்டபத்தின் நடுவில் அந்த மனிதன் அப்படியே உட்கார்ந்து விட்டான். அங்கிருந்த வாடிக்கையாளர்களில் எவரும் இதில் குறுக்கிடவில்லை. அந்த மூன்று பெண்களும் டமாஸோவின் இடுப்பைச் சுற்றிவளைத்துப் பிடித்துக்கொண்டு கத்தினார்கள். அவனுடைய தோழி அவனை மண்டபத்தின் பின்புறத்தை நோக்கித் தள்ளிக்கொண்டு போனாள். அடிபட்டவன் துள்ளி எழுந்தான். விழுந்த அடியில் அவனுடைய முகம் கோணலாகி இருந்தது. ஒரு குரங்கைப்போலத் துள்ளிக்கொண்டு நடன மண்டபத்தின் நடுவே வந்து குதித்தான். குதித்த வண்ணம் சத்தமிட்டான்:

“இசையை எழுப்புங்கள்”

இரண்டு மணி ஆகும்போது அந்த மண்டபம் காலியாகி இருந்தது. வாடிக்கையாளர்கள் கிடைக்காத பெண்கள் சாப்பிடத் தொடங்கி இருந்தார்கள். சாப்பாடு சூடாக இருந்தது. டமாஸோவின் தோழி சோற்றையும், பீன்ஸையும் பொரித்த மாமிசத்தையும் மேசைக்குக் கொண்டுவந்தாள். கொண்டு வந்த எல்லாவற்றையும் ஒரு சிறு கரண்டியால் சாப்பிட்டாள். டமாஸோ அவள் சாப்பிடுவதை ஒரு அரை மயக்க நிலையில் பார்த்துக் கொண்டிருந்தான். கரண்டியில் கொஞ்சம் சோற்றை எடுத்து அவனிடம் நீட்டினாள்.

“வாயைத் திற”

டமாஸோ தனது தாடைகளை நெஞ்சின் வரை கொண்டுவந்து மாட்டேன் என்று தலையை இப்படியும் அப்படியும் ஆட்டினான்.

“இதெல்லாம் பெண்கள் சாப்பிடுவது. நாங்கள் ஆண்கள், சாப்பிடுவதில்லை”

எழுந்து நிற்கவே அவன் தனது இரு கைகளையும் மேசையின் மீது ஊன்ற வேண்டியிருந்தது. ஒரு சமநிலையை அவன் அடைந்தவுடன் அங்கிருந்த சேவகன் அவன் முன்னால் நெஞ்சுக்குக் குறுக்கே கைகளைக் கட்டியவாறு வந்து நின்றான்.

“மொத்தம் தொள்ளாயிரத்து எண்பது ஆகிவிட்டது. இந்த விருந்து ஒன்றும் உன்னுடைய வீட்டில் நடக்கவில்லை” என்றான் அவன்.

டமாஸோ அவனை அந்தப்பக்கமாகத் தள்ளினான்.

“எனக்கு அரைக்கிறுக்கன்களைப் பிடிக்காது” என்றான் டமாஸோ.

சேவகன் அவனுடைய சட்டைக் காலரைப் பிடித்துத் தூக்கினான். ஆனால் அவன் தோழி காட்டிய சைகையைக் கண்டு அவனைக் கீழே விட்டான். விட்டுவிட்டுச் சொன்னான்:

“நீ எதை இழந்துகொண்டிருக்கிறாய் என்பது உனக்குத் தெரியவில்லை” என்றான்.

டமாஸோ வெளியே வந்து தடுமாறினான். நிலவொளியின் கீழே ஓடிக்கொண்டிருந்த ஆற்றின் புதிர்போன்ற ஒளிர்வு அவனுடைய மூளையில் ஒரு தெளிவின் தீற்றலைத் திறந்துவிட்டுச் சென்றது. நகரத்தின் அந்தப்பக்கம் இருந்த அவனுடைய அறையை அவன் பார்த்தபோது தான் தூக்கத்தில் நடந்து வந்திருக்கிறோம் என்பது டமாஸோவுக்கு உறுதியாகப் புரிந்தது. அவன் தனது தலையைச் சிலுப்பிக்கொண்டான். இனிமேல் அந்தக் கணத்திலிருந்து அவனுடைய நடவடிக்கைகள் ஒவ்வொன்றையும் கவனிக்க வேண்டும் என்று குழப்பமான அதே சமயம் ஒரு அவசரமான நிலையில் அவன் முடிவெடுத்துக்கொண்டான். திறக்கும்போது ‘கிரீச்’ சத்தம் வராமலிருக்க வேண்டி கதவை கவனமாகத் தள்ளினான்.

அவன் இரும்புப் பெட்டியைத் தேடுகிறான் என்று அனா நினைத்தாள். விளக்கொளியிலிருந்து தப்புவதற்காக சுவரோரமாகப் பதுங்கிக் கொண்டாள். அவன் தனது ஆடைகளைக் களையவில்லை என்பதைப் பின்னர் புரிந்துகொண்டாள். அவளுடைய மனதில் ஏதோ ஒன்று தோன்றி அவளைச் சட்டென்று படுக்கையிலிருந்து எழுப்பி உட்கார வைத்தது. டமாஸோ இரும்புப் பெட்டியின் அருகில் பந்துகள் இருந்த பொட்டலத்தோடும் கையில் ஒரு டார்ச் விளக்கோடும் நின்றுகொண்டிருந்தான்.

தன்னுடைய ஆட்காட்டி விரலைத் தனது உதட்டில் வைத்துக்கொண்டு யோசித்தபடி நின்றான்.

அனா படுக்கையை விட்டுக் கீழே குதித்தாள். “உனக்கென்ன பைத்தியமா பிடித்திருக்கு” என்று முணுமுணுத்துக் கொண்டே கதவை நோக்கி ஓடினாள். தாழ்ப்பாளை அவசரமாகப் பூட்டினாள். டார்ச் விளக்கை தனது பேண்ட் பாக்கெட்டுக்குள் போட்டுக்கொண்டு கையில் வைத்திருந்த சிறு கத்தியையும் கூர் தீட்டப்பட்ட அரங்களையும் பிடித்துக்கொண்டு அவளை நோக்கி முன்னேறி வந்தான். பொட்டலம் அவனுடைய கையிடுக்கில் இருந்தது. அனா கதவில் போய் சாய்ந்து கொண்டாள்.

“நான் உயிரோடு இருக்கும்வரை நீ இங்கிருந்து நகர முடியாது” என்று அவள் அமைதியாகச் சொன்னாள்.

டமாஸோ அவளைத் தள்ளிக்கொண்டு போக முயன்றான். “தள்ளிப்போ” என்று கத்தினான். அனா கதவின் நிலையைத் தனது இரண்டு கைகளாலும் இறுக்கிப் பிடித்துக்கொண்டு உறுதியாக நின்றாள். கண்களை இமைக்காமல் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு நின்றார்கள். “நீ ஒரு முட்டாள் கழுதை. கடவுள் உன் கண்களில் எதைக் கொடுத்து இருக்கிறானோ அதை உனது மூளையிலிருந்து எடுத்துவிட்டான்” என்று சொன்னாள் அனா. டமாஸோ அவள் தலைமுடியைக் கொத்தாகப் பற்றினான். மணிக்கட்டை முறுக்கினான். அவளுடைய தலையைக் கீழாக அழுத்தி பற்களை நற நற வென்று கடித்தவாறு, “என்னை வழி மறித்துக்கொண்டு நிற்காதே என்று சொன்னேன்.” என்று உறுமினான். நுகக்கால் கழுத்தில் கிடந்து அழுத்த, அதிலிருந்து விடுபடமுடியாமல் விழிகளைத்  திருப்பிப் பார்க்கும் எருதைப்போல தன் கண்களை விழித்து கடைக்கண் வழியாக அவனைப் பார்த்தாள் அனா. வலி தன்னை பலவீனப்படுத்தாது என்றும் தனது கணவனை விட தான் வலிமையானவள் என்றும் ஒரு கணம் நினைத்தாள் அனா. ஆனால் அவனோ அவளுடைய கண்களிலிருந்து கண்ணீர் தெறித்து விழும் வரை அவளுடைய கூந்தலை மேலும் மேலும் முறுக்கிக்கொண்டு இருந்தான்.                                

“என் வயிற்றில் இருக்கும் குழந்தையை நீ கொல்லத்தான் போகிறாய். பார்” என்று கூவினாள் அனா.

டமாஸோ அவளை தரதரவென்று இழுத்துக்கொண்டு போய் ஏறக்குறைய அலேக்காகத் தூக்கி படுக்கையில் வீசினான். அவன் தனது பிடியை விட்டவுடன் அவள் திடீரென்று குதித்து எழும்பி அவனுடைய முதுகில் சவாரி ஏறிக்கொண்டாள். அவளது கால்களையும் கைகளையும் அவனைச் சுற்றி இறுக்கமாகப் பிணைத்துக்கொண்டாள். இருவரும் படுக்கையில் விழுந்தார்கள். ஒருவர் மீது ஒருவர் கட்டிப்புரண்டார்கள். “நான் கத்துவேன். நீ இங்கிருந்து சென்றால் நான் கத்தி ஊரைக் கூட்டுவேன்” என்று அனா அவனுடைய காதுக்குள் சொன்னாள். டமாஸோவுக்கு கோபம் தலைக்கேறியது. கையிலிருந்த பந்து பொட்டலத்தால் அவளுடைய முழங்கால்களை இடித்தான். வலி காரணமாக அனா கத்தினாள். தனது முழங்கால்களைத் தளர்த்தினாள். ஆனால் அவன் கதவை நோக்கி நகர முடியாதவாறு அவனுடைய இடுப்பை நன்றாகச் சுற்றி வளைத்துப் பிடித்துக் கொண்டாள். பிறகு அவனைக் கெஞ்சத் தொடங்கினாள். “நாளை காலை நானே உனக்கு அதை எடுத்துத்தருகிறேன்.” என்று கெஞ்சினாள். “யாரும் அறியாதவாறு நானே அதைக் கொண்டுபோய் வைத்துவிட்டு வந்து விடுகிறேன்” என்றாள். கதவை நெருங்க நெருங்க டமாஸோ தன்னிடம் இருந்த பொட்டலத்தால் அவளது கைகளை அடித்துக்கொண்டே இருந்தான். வலியைத் தவிர்க்க வேண்டி ஒரு கணம் அவள் அவனை விட்டுவிடுவாள். பின்னர் மீண்டும் பிடித்துக்கொண்டு கெஞ்சுவாள்:

“எல்லாவற்றுக்கும் காரணம் நான்தான் என்று கூட என்னால் சொல்ல முடியும். என்னுடைய இந்த நிலைமையில் அவர்களால் என்னை ஜெயிலில் போட முடியாது” என்று சொன்னாள்.

டமாஸோ அவளை உதறித் தள்ளினான்.

“ஒட்டு மொத்த நகரமும் உன்னைப் பார்க்கும். இன்று பவுர்ணமி என்பதைக் கூட அறியாத முழுமூடனாக இருக்கிறாய் நீ” என்று அரற்றினாள் அனா. அவன் தாழ்ப்பாளை நெருங்கி அதைத் திறப்பதற்குள் அவள் அவனை மீண்டும் பற்றிக்கொண்டாள். பிறகு கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டு அவனுடைய கழுத்திலும் முகத்திலும் குத்தத் தொடங்கினாள். “மிருகமே…மிருகமே” என்று கத்தினாள். அவளது அடியிலிருந்து தப்ப முயன்றான். அவன் கையிலிருந்து தாழ்ப்பாளை அவள் பிடுங்கிக்கொண்டாள். அதை வைத்து அவனுடைய தலையை நோக்கி ஒரு வீசு வீசினாள். டமாஸோ சட்டென்று விலகிக்கொண்டான். கண்ணாடி சட்டியில் விழுவதைப் போல அடி அவனுடைய தோள் பட்டை எலும்பில்  விழுந்தது.

“அடி நாயே!” என்று இரைந்தான்.

சத்தம் போடக்கூடாது என்ற உணர்வு அந்த சமயம் தொலைந்து போயிருந்தது. முஷ்டியை மடித்துக்கொண்டு அதன் பின்புறத்தால் அவளுடைய காதில் அடித்தான். அடித்த வேகத்தில் அவளிடமிருந்து பெரிய கூக்குரலும் அவளுடைய உடல் சுவரில் மோதிய சத்தமும் அவனுக்குக் கேட்டன. ஆனால் அவன் அவளைப் பார்க்கவில்லை. அறையின் கதவை மூடாமலேயே விருட்டென்று வெளியேறினான்.

உடலெங்கும் வலியுடன் அனா அப்படியே தரையில் உட்கார்ந்திருந்தாள். அடிவயிற்றில் ஏதோ நடக்கப்போவதைப்போலக் காத்திருந்தாள். சுவரின் அந்தப் பக்கத்திலிருந்து அக்கம்பக்கத்தார் அவளைக் கூப்பிட்டார்கள். அவர்களுடைய குரல் தொலைவில் இருக்கும் கல்லறையிலிருந்து கேட்பதைப் போல கேட்டது. அழுகையை அடக்குவதற்காக தன்னுடைய பற்களைக் கடித்துக்கொண்டாள். பின்னர் எழுந்து உடையணிந்து கொண்டாள். சண்டைக்குப் பிறகு டமாஸோ அறைக்கு வெளியே காத்திருக்கலாம், போட்ட திட்டம் நிறைவேறவில்லை என்று தனக்குத்தானே பேசிக்கொண்டு அவன் வெளியே அவளுக்காகக் காத்திருக்கலாம் என்று அவளுக்குத் தோன்றவில்லை. அது அவளுக்கு முதல் தடவையும் இல்லை. அப்படித் தோன்றாததால் அவள் ஏற்கனவே செய்த தவறை மீண்டும் செய்தாள்: அவள் தன் கணவனை விரட்டிப் பிடிப்பதற்குப் பதிலாகக் காலணிகளை அணிந்துகொண்டு தடாலென்று கதவை அடித்து மூடினாள். படுக்கையில் உட்கார்ந்துகொண்டு காத்திருக்கலானாள்.

கதவு மூடப்பட்ட பின்புதான் தன்னால் திரும்பி வீட்டுக்குள் நுழைய முடியாது என்ற உண்மை  டமாஸோவுக்குப் புரிந்தது. தெருவில் திரிந்த நாய்கள் குரைத்துக்கொண்டு அவனைத் தெருவின் முனை வரைக்கும் துரத்தி வந்தன. ஏதோ பிசாசு வந்ததைப்போல அங்கே ஒரு நிசப்தம் நிலவியது. அவன் நடந்து செல்லும்போது ஏற்படும் சத்தம் பெரியதாகவும் தூங்கி வழிந்து கொண்டிருக்கும் அந்த நகரத்தில் அன்னியமாகப் பட்டதாலும் அதைத் தவிர்க்க வேண்டி சாலையின் பக்கவாட்டில் நடந்து செல்வதைத் தவிர்த்தான். சூதாட்ட கிளப்பின் பின்வாசலின் பக்கமாக இருக்கும் காலி இடத்தை அடையும் வரை அவன் எந்த விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை.

இந்த முறை அவனுக்கு டார்ச் லைட் தேவைப்படவில்லை. கதவு எங்கே உடைக்கப்பட்டிருந்ததோ அந்த இடத்தில் மட்டும் அரைகுறையாக ஏதோ சரி செய்து வைத்திருந்தார்கள். வடிவத்திலும் அளவிலும் ஒரு செங்கல் அளவுக்குக் கதவிலிருந்து மரத்தைப் பெயர்த்தெடுத்து அந்த இடத்தில் புதிய மரத்தை வைத்துப் பழுது பார்த்திருந்தார்கள். டமாஸோ தனது இடது கையால் அந்த தாழ்ப்பாளைப் பிடித்து இழுத்தான். பழுது செய்யப்படாமல் இருந்த கொக்கியின் கால்களுக்கு இடையில் தன்னிடம் இருந்த அரத்தின் ஒரு நுனியைச் செருகினான். கியரை ஆட்டுவதைப்போல அழுத்தமாக அதே சமயம் வலுவாக ஆட்டாமல் துருப்பிடித்த இரும்புத் துகள்கள் வெடிப்பதைப்போல அந்த மரப்பலகை வெடிக்கும் வரை அரத்தை முன்னும் பின்னும் ஆட்டினான். கதவைத் தள்ளிக்கொண்டு உள்ளே போகும் முன் அதை அப்படியே தூக்கி மெதுவாகத் தள்ளி வைத்தான். தரையில் கிடக்கும் செங்கற்களோடு அது மோதி சத்தம் ஏற்படுத்தாமல் இருக்க அப்படிச் செய்தான். கதவைப் பாதி திறந்து வைத்தான். இறுதியாக தன்னுடைய காலணிகளைக் கழற்றி வைத்துவிட்டு கையில் பந்து பொட்டலத்துடன் மெதுவாக உள்ளே நுழைந்தான். நெஞ்சின்மேல்  சிலுவைக் குறியிட்டுக் கொண்டான். அறை முழுதும் நிலவு வெளிச்சம் பரவிக்கிடந்தது.

அவனுக்கு முன்னால் காலி பாட்டில்களும் காலி பெட்டிகளும் சிதறிக்கிடந்த இருட்டான ஒரு சுரங்கப்பாதை தென்பட்டது. அதைத் தாண்டி தொங்கிக் கொண்டிருந்த கண்ணாடி விளக்கின் வெளிச்சத்துக்குக் கீழே பில்லியர்ட்ஸ் மேசை தென்பட்டது. பிறகு அங்கிருந்த பெட்டகங்களின் பின்புறம் தெரிந்தது. கடைசியாக முன் வாசலின் பின்புறம் அடுக்கி வைக்கப்பட்டிருந்த சிறு மேசைகளும் நாற்காலிகளும் பார்வைக்கு வந்தன. நிலவு வெளிச்சத்தையும் அங்கு நிலவிய இறுகிய பேரமைதியையும் தவிர முதன் முதலில் அவன் வந்தபோது அங்கிருந்த பொருட்கள் எப்படி இருந்தனவோ அப்படியேதான் இப்போதும் இருந்தன. அந்தக்கணம் வரை தனது நரம்பு மண்டலத்தை ஒருவாறு தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்த டமாஸோவுக்கு அந்த சூழ்நிலை ஒரு புதுவிதமான கவர்ச்சியை உண்டுபண்ணியது.

கீழே சிதறிக்கிடந்த செங்கற்களைப் பற்றி அவன் இப்போது கவலை கொள்ளவில்லை. அவனுடைய காலணியால் கதவை நகரவிடாமல் செய்துகொண்டான். வெளிச்சத்தை தாண்டியபிறகு டார்ச் லைட்டை எரியவிட்டு கல்லாவுக்குப் பின்னால் இருக்கும் பந்துகளை வைக்கும் சிறுபெட்டியைத் தேடினான். எந்த ஓர் எச்சரிக்கை உணர்வும் இல்லாமல் செயல்பட்டுக் கொண்டிருந்தான். டார்ச் லைட்டை அங்கும் இங்குமாக ஆட்டியபோது அழுக்கடைந்து போன கூஜாக்களும், முட்களுடன் கூடிய குதிரைஓட்டும் அங்கவடியும், மோட்டார் எண்ணெய் படிந்து பிசுபிசுப்புடன் சுருட்டிய நிலையிலிருந்த சட்டை ஒன்றும் அவன் பார்வைக்கு வந்தன. அதன் பிறகு அவன் எந்த இடத்தில் விட்டுச் சென்றானோ அதே இடத்தில் அந்த சிறு பெட்டி இருந்ததைப் பார்த்தான். பார்த்த பின்னரும் லைட்டின் வெளிச்சத்தை கல்லாவின் இறுதி வரை பாய்ச்சினான். அங்கே பூனை ஒன்று உட்கார்ந்திருந்தது.

லைட்டின் வெளிச்சத்தில் அந்தப்பூனை அவனை எந்தவொரு ஆச்சரியமும் காட்டாமல் அவனை சாதாரணமாகப் பார்த்தது. டமாஸோ டார்ச் லைட்டை பூனையின் மீது அடித்தான். அன்று நாள் முழுவதும் இதுவரை அறியாத ஒரு நடுக்கம் அப்போதுதான் அவனை வியாபித்தது. வெளிச்சத்தை அதன் மீது காட்டி சத்தமிட்டு அதை விரட்ட முயன்றான். ஆனால் அது எந்தவொரு அசைவையும் காட்டாமல் கல்லைப்போல சமைந்திருந்தது. திடீரென்று அவன் மண்டைக்குள் அமைதியாக ஒரு வெடி வெடிப்பது போன்ற உணர்வு தோன்றியது. அந்தப் பூனை அவனுடைய நினைவிலிருந்து முற்றிலும் அகன்று விட்டது. என்ன நடந்தது என்பதை அவன் அறிந்து கொள்ளும்போது அவன் ஏற்கனவே டார்ச் லைட்டை நழுவ விட்டிருந்தான். பொட்டலத்தை நெஞ்சோடு இறுக்கிப் பிடித்த வண்ணம் நின்று கொண்டிருந்தான். அந்த அறையின் எல்லா விளக்குகளும் ஒளிர்ந்தன.

“நல்லது”

அது ரோக்கின் குரல்தான் என்பதைத் தெரிந்து கொண்டான். மெதுவாக எழுந்தான். பின் முதுகில் பயங்கரமான வலி இருப்பதை உணர்ந்தான். அரை டவுசர் அணிந்துகொண்டு கையில் ஓர் இரும்புக் கம்பியுடன் வெளிச்சத்தில் தெரியும் பளபளப்போடு அறையின் பின்புறம் இருந்து வெளியே வந்தான் ரோக். பாட்டில்களுக்கும் காலிப்பெட்டிகளுக்கும் பின்னால் துணியாலான ஓர் ஊஞ்சல் தொங்கிக் கொண்டிருந்தது. டமாஸோ உள்ளே நுழைந்தபோது அவன் கடந்து வந்த இடத்துக்கு வெகு சமீபத்தில்தான் அது தொங்கிக் கொண்டிருந்தது. இதுவும் அவன் முதல் தடவை வந்த போது அங்கு இல்லாமல் இருந்த ஒன்றுதான்.

அவன் முப்பது அடிகளுக்கும் குறைவான தூரத்தில் நின்று கொண்டிருக்கும்போது ரோக் லேசாகக்குதித்து தாக்குவதற்குத் தயாரானநிலையில் நின்றான். பொட்டலத்தை வைத்துக்கொண்டு தன்னுடைய கைகளைப் பின்னால் மறைத்துக்கொண்டு நின்றான் டமாஸோ. ரோக் மூக்கை சுழித்துக்கொண்டு தலையை முன்னோக்கி நீட்டி நன்றாகப் பார்த்தான். கண் கண்ணாடி இல்லாமல் வந்தவனை அடையாளம் கண்டுகொள்ள முயன்றான்.

“நீயா” என்று ஆச்சரியத்தில் வாய் பிளந்தான்.

முடிவு தெரியாமல் நீண்டுகொண்டு சென்ற ஏதோ ஒன்று முடிவுக்கு வந்து விட்டதைப்போல உணர்ந்தான் டமாஸோ. கையிலிருந்த தடியைக் கீழே தொங்கவிட்டு, திறந்த வாயை மூடாமல் அவன் அருகில் வந்தான். கண்ணாடி இல்லாமலும் பொய்ப்பற்கள் இல்லாமலும் பார்ப்பதற்கு ஒரு பெண்ணைப்போல இருந்தான் ரோக்.

“நீ இங்கே என்ன செய்துகொண்டிருக்கிறாய்”

“ஒன்றுமில்லை” என்றான் டமாஸோ.

அவன் உணராதபடி தன் உடலை லேசாக இடம் மாற்றிக்கொண்டான்.

“உனக்கு இங்கே என்ன வேலை?” என்று கேட்டான் ரோக்.

டமாஸோ ஓரிரு அடிகள் பின்னோக்கி நடந்தான். “ஒன்றுமில்லையே” என்று சமாளிக்க முயன்றான். ரோக்கின் முகம் சிவந்தது. நடுக்கம் தொற்றிக் கொண்டது. “உனக்கு இங்கே என்னடா வேலை?” என்று குரலெடுத்துக் கத்திக்கொண்டு அவனை அடிக்க கையில் பிடித்திருந்த இரும்புக் கம்பியை ஓங்கியவாறு முன்னேறி வந்தான். டமாஸோ அந்த பொட்டலத்தை அவனிடம் நீட்டினான். உயர்த்திய கம்பியைத் தாழ்த்தாமல் தனது இடதுகையால் அதை வாங்கிக்கொண்டான் ரோக். விரல்களால் அதைத் தொட்டுப் பார்த்துக்கொண்டான். அதற்கு அப்புறம் தான் அவனுக்கு எல்லாமே விளங்கத் தொடங்கியது.

“அப்படியும் இருக்குமோ” என்று சொல்லிக்கொண்டான்.

மிகவும் குழம்பிப்போன மனநிலையுடன் கம்பியை கல்லாவில் வைத்தான். பொட்டலத்தைப் பிரிக்கும்போது டமாஸோ நின்று கொண்டிருப்பதை முற்றிலும் மறந்துபோனான். அமைதியாக அந்தப் பந்துகளை பார்த்துக்கொண்டிருந்தான்.

“அவைகளைத் திரும்ப வைப்பதற்காகத்தான் நான் இங்கே வந்தேன்” என்றான் டமாஸோ.

“கண்டிப்பாக. தெரியும்” என்றான் ரோக்.

டமாஸோ அப்படியே நொடிந்து போனதைப்போல நின்றான். கொஞ்ச நஞ்ச சாராயத்தின் தாக்கமும் அவனை விட்டு நீங்கி இருந்தது. ஏதோ கொஞ்சம் பட்டும் படாமலும் அவனுடைய நாக்கில் ஒட்டிக்கொண்டிருந்தது. குழப்பமான ஒரு தனிமை உணர்வு அவனைத் தாக்கியது.

“ஆக இது ஒரு அதிசயம்தான், இல்லையா! நீ இந்த அளவுக்கு ஒரு முட்டாளாக இருப்பாய் என்று நான் நினைக்கவில்லை.” பொட்டலத்தை மீண்டும் மடித்துக் கட்டியவாறு சொன்னான் ரோக். டமாஸோவைப் பார்க்க தலையை உயர்த்திய போது அவனுடைய முகத்தில் மாறுதல் தெரிந்தது.

“அப்ப அந்த இரு நூறு பெசோக்கள் எங்கே போயிற்று?”

“டிராயரில் ஒன்றுமே இல்லையே” என்றான் டமாஸோ.

எதையோ நினைத்துக்கொண்டவனாய், வெறும் வாயில் எதையோ மென்றுகொண்டு ரோக் அவனைப் பார்த்தான். பிறகு லேசாக அவனைப் பார்த்துச் சிரித்தான். “ஆக அதில் ஒன்றுமே இல்லை. அப்படித்தானே!” என்று அந்த வாக்கியத்தைப் பலமுறை திரும்பத் திரும்ப உச்சரித்தான். “ஆக அதில் ஒன்றுமே இல்லை; அப்படித்தானே”. இரும்புக்கம்பியை மீண்டும் எடுத்துக்கொண்டு சொன்னான்:

“நல்லது. இந்தக் கதையை இப்போதே நான் மேயரிடம் போய் சொல்கிறேன்.”

கையை நனைத்த வியர்வையை டமாஸோ தனது பேன்ட்டில் துடைத்துக்கொண்டான்.

“நிஜமாகவே அதில் ஒன்றுமே இல்லை. உனக்குத் தெரியாதா?”

ரோக் சிரித்துக்கொண்டே இருந்தான்.

“அதில் இருநூறு பெசோக்கள் இருந்தன. இப்ப அதை அவர்கள் உன்னிடமிருந்து பிதுக்கி வெளியே எடுக்கப்போகிறார்கள். நீதான் திருடியவன் என்பதற்காக மட்டுமல்ல. இப்படிப்பட்ட முட்டாளாகவும் இருந்ததற்காகவும் தான்”

மூலம்: Gabriel Garcia Marquez’s short story “There are No Thieves in this Town”

ஆங்கிலம் வழியாகத் தமிழில் : கா. சரவணன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.