எப்பவும் போலத்தான்-காலத்துகள்

லோ ஸார்’

ஸ்ரீனிவாசனை கவனிக்காதது போல் இருந்தாலும் கூப்பிடுகிறார்.

‘ஹலோ ஸார்’

‘ஆபீஸுக்கா’

திங்கட்கிழமை காலை எட்டரை மணிக்கு, ஓரளவுக்கு நேர்த்தியாக உடையணிந்து கொண்டு தன் இருசக்கர வாகனத்தை எதற்காக ஒருவர் இயக்கிக் கொண்டிருப்பான். ‘நீங்க மண்டே பத்து மணி ஷோக்கு, பலான தியேட்டர் போவீங்களா ஸார்’ என்று கேட்கலாமா? இப்போது பத்து மணி ஷோ என்று ஒன்று இருக்கிறதா? பலான படங்கள் கூட அலைபேசியிலேயே கிடைக்கும் போது, எதற்கு திரையரங்கம்.

‘ஆமாம் ஸார்’

‘எல்லா நாளும் போணுமா ஸார்’

‘மண்டே, ட்யுஸ்டே மட்டும். மீதி வர்க் ப்ரம் ஹோம் தான்’

‘நேத்து ஈவ்னிங் க்ரூப்ல மெசேஜ் அனுப்பியிருந்தேனே. பாம்பு பிடிக்க பாரஸ்ட் டிபார்ட்மெண்ட் கிட்ட சொல்லணும், சம்ப்ல தண்ணி ஏற மாட்டேங்குது, சரி பண்ணனும். அதுக்கு மொத்தமா ரெண்டாயிரம் ரூபாய் ஆகும். எல்லாரும் ஒத்துகிட்டா தான் ப்ரொசீட் பண்ண முடியும்.’

அரசு வங்கி வேலையிலிருந்து பெருந்தொற்றுக்கு முந்தைய வருடம் ஓய்வு பெற்ற ஸ்ரீனிவாசன், அதன் பின்  யாரும் எடுத்துப் போட்டு செய்யாத அபார்ட்மெண்ட் வேலைகளை தன் பொறுப்பில் அவராக செய்ய ஆரம்பித்தார். முதல் லாக் டவுன் போது, வசிப்பவர்கள் அனைவருக்கும் தேவையான பொருட்களை ஏற்பாடு செய்தது, கடந்த பத்து பதினைந்து நாட்களாக அபார்ட்மெண்ட்டை அடுத்துள்ள காலி மனையில் உலவிக் கொண்டிருக்கும் பாம்புகளை பிடிக்க ஏற்பாடு செய்வது, இவையெல்லாம் திங்கள் காலை சலிப்புடன் வேலைக்கு செல்பவனை மேலும் எரிச்சலூட்டும் உரிமையை அவருக்கு கொடுக்கிறது போலும்.

‘பண்ணிடலாம் ஸார். ஒவ்வொருத்தரும் எவ்வளவு குடுக்கணும்னு சொல்லுங்க, ஜி-பே பண்ணிடறேன். நேத்து ஈவ்னிங் கெஸ்ட் வந்திருந்தாங்க, பீச் போயிருந்தோம், அதான் உங்க மெசேஜ் மிஸ் பண்ணிருப்பேன்’

‘ஒகே ஸார். ஏற்கனவே மெயின்டனன்ஸ் அமவுண்ட் இருக்கு. அதுலேந்து தந்துடறேன். அப்பறம் இந்த பாம்பு விஷயம் வேற. எவ்ளோ இருக்குனே தெரியல. ஒரு குட்டி பாம்பு இருக்கு, மத்தபடி எல்லாம் ஒரே மாதிரி இருக்குங்க’

அனக்கொண்டாவே இருக்கட்டுமே, ஏன்யா என்னை தொந்தரவு செய்யற. அதான் மாசா மாசம், என்ன செலவாகுமோ அதை தந்துடறேனே.

‘கஷ்டம் தான் ஸார்.’

‘இப்ப பக்கத்து க்ரவுண்ட்ல மட்டும் தான் உலாத்துது, அடுத்து அபார்ட்மெண்ட்டுக்குள்ள வர ஆரம்பிச்சுடும்’

வந்து உன்ன மொதல்ல கடிக்கணும்யா.

‘கிளம்பறேன் ஸார்’

வண்டியின் மீதமர்ந்தவன், நேற்று எடுத்திருந்த, அடுத்த மனையில், நன்கு நிமிர்ந்திருக்கும் பாம்பின் புகைப்படத்தை, ஷங்கருக்கு  அனுப்பினான்.  

oOo

அலுவலகத்தை அடைந்த போது, ரமேஷ் தன் வாகனத்திலிருந்து இறங்கிக்கொண்டிருந்தான்.

‘பேன்ட், சட்ட போடவே எரிச்சலாருக்கு’ என்றான் ரமேஷ்.

‘ஏன்’

‘ரெண்டு வருஷமா, பெர்முடா, பனியன்னு ஓட்டிட்டு, இப்ப இது

அனிஸியாருக்கு’

‘ரெண்டு நாள் தானே. ஷூ, டை இம்சைலாம் இல்லைல. ஷர்ட் டக் பண்ணா போதும். அது வரைக்கும் ஒகே’

‘வீக்எண்ட் எப்படி போச்சு’

‘ஆஸ் யூஷுவல்’ என்றானிவன்.

‘வெளில எங்கேயும் போலயா. நான் நேத்து மைலம் போயிருந்தேன்’.

‘திருப்பி கேஸ் அதிகமாகுது போலிருக்கே. சைலென்ட் வேவ்னு புதுசா ஆரம்பிக்கறாங்க. ஸ்வைன் ப்ளூ வேற வந்திருக்கு. அதான் வீட்லயே இருந்துட்டோம், பெரும்பாலும் வெளில போவதேயில்லை, ரிலேடிவ், ப்ரண்ட்ஸ் யாராவது இங்க வரலாமான்னு கேட்டா கூட, எதையும் கமிட் பண்ணிக்கறதில்லை. எவனும் இப்பலாம் மாஸ்க் வேற போட மாட்டேங்கறாங்க. இப்ப புதுசா அபார்ட்மென்ட்ல பாம்பு வேற உலாத்துது, வண்டி கூட ரொம்ப ஜாக்கிரதையா எடுக்க வேண்டியிருக்கு’.

‘பாம்பா..?’

தன் இருக்கையில் அமர்ந்தான். பாம்பு புகைப்படத்திற்கு, பீதியை வெளிப்படுத்தும் எமொஜியை அனுப்பியிருந்த ஷங்கர். மதியம் அழைப்பதாகவும் சொல்லியிருந்தான்.

oOo

பத்து மணிக்கு அலைபேசியில் அழைத்த  இன்னோவேட் க்ளாதிங், சுகுமார்.

‘என்ன ஸார், முப்பத்திரண்டு நாளைக்கு பில்லிங் போட்டிருக்கீங்க’ என்று கேட்க,

‘கரெக்ட் எஸ்டிமேட் தான் ஸார்’ என்றானிவன்.

‘ரேட்..’

‘யூஷுவல் மேன் டேஸ் ரேட் தானே’

‘கொஞ்சம் குறைங்களேன்’

‘கஷ்டம் ஸார்’

‘பைவ்  டேஸாவது  கம்மி பண்ணுங்க ஸார். நீங்க ப்ரைடே மெயில் அனுப்பினவுடனேயே கால் பண்ணினேன், நீங்க எடுக்கல’

‘வீகென்ட் மீட்டிங், அதான் மிஸ் பண்ணிருப்பேன்’

‘கொஞ்சம் பாருங்க ஸார். விஜயதசமிக்கு முன்னாடி முடிச்சிடுவீங்களா’

‘விஜயதசமிக்கு இன்னும் பத்து நாள் கூட இல்லையே. தர்ட்டி டூ டேஸ் வரக்க எப்படி முடிக்க முடியும். இதுல நான் வேற புல் டைமா இன்வால்வ் ஆகப்போறேன். ஸோ ரேட் கம்மி பண்ண சான்ஸ் கம்மி’

‘இன்னும் வேற நெறைய வர்க் இருக்கு ஸார், உங்க கிட்ட தானே வரப் போறோம்.’

‘டூ டேஸ் வேணா குறைக்க ட்ரை பண்ணலாம்’

‘ரெண்டு மூணு பேரை போட்டு சீக்கிரம்..’

‘ரிசோர்ஸ் இல்லை ஸார். ட்வென்டி பைவ், ஸிக்ஸ் டேஸுக்கு கம்மியா பினிஷ் பண்ண முடியாது. டெஸ்டிங் வேற பண்ணணும்.’

‘சரி ஸார், முடிஞ்சா வரை க்விக்கா முடிக்க ட்ரை பண்ணுங்க.’

‘நீங்க பிஓவை அப்ப்ரூவ் பண்ணி, இனிஷியல் பேமண்ட் பண்ணிட்டீங்கன்னா ஸ்டார்ட் பண்ணிடுவேன்’

‘இன்னிக்கு மதியம் அமவுண்ட் ட்ரான்ஸ்பர் செஞ்சுடுவோம், நீங்க இப்பவே ஆரம்பிச்சுடுங்க’

‘ரமேஷ், இன்னோவேட் வர்க் எவ்ளோ நாள் முடிஞ்சிருக்கு’

‘த்ரீ டேஸ் ஓவர். இன்னும் பதினஞ்சு நாள் இருக்கு’

‘நம்ம எஸ்டிமேட்ல, இன்னிக்கு ஸ்டார்ட் பண்ணி, இருவத்தஞ்சு நாள்ல முடிக்கற மாதிரி காலண்டர் டேஸ் எஸ்டிமேட் குடுங்க. அவங்களுக்கு அனுப்பிடலாம்’

oOo

பதினொன்றே முக்காலுக்கு ‘ப்ரீ?’ என்று வாட்ஸாப்பில் அனுப்பியவுடனேயே அழைத்த ஷங்கர், ‘என்ன நாயே, வீட்லயே  ஸ்னேக் பார்க் ஆரம்பிச்சிட்டியா’ என்றான்.   

‘ஆமாம் நாயே, அடுத்து மலைப்பாம்பு, அப்பறம் அனக்கொண்டா தான்’

‘பயங்கரமா படம் எடுக்குது, நாகப் பாம்பா?’

‘எவனுக்கு தெரியும். கொஞ்ச நாளாவே இங்க சுத்திட்டிருக்கு. சாட்டர்டே என்னை போட்டுத் தள்ளிருக்கும். அபார்ட்மெண்ட் கேட் தொறந்தவுடன  என் பார்கிங் ஸ்பேஸ் தான், வண்டி எடுக்க வரேன், இது என் வண்டி வீல் கிட்ட சுருண்டு கிடக்கு’

‘கையாலையே எடுத்து தூக்கி போட வேண்டியது தானே’

‘ஏண்டா உனக்கு இந்த விபரீத ஆச. நான் இன்னும் நிறைய நாளிருக்கணும்டா’

‘இருந்து என்ன சாதிக்கப் போறே’

‘சாதனைக்கும் நமக்கும் என்ன சம்மந்தம், அத சொல்லு நாயே.’

‘இது ஒரு நல்ல கேள்வி. அப்பறம் என்ன செஞ்ச’

‘விரட்டவும் பயமாயிருக்கு, அது பாஞ்சு கொத்தி வெச்சிருச்சுன்னா. ரெண்டு, மூணு நிமிஷம் வெயிட் பண்ணேன், சனியனுக்கு என்ன தோணிச்சோ  தானா பக்கத்துல இருக்கிற க்ரவுண்டுக்கு போச்சு.’

‘அன்னிக்கு குளிச்சிருந்தியா’

‘நாயே, ஒன்ன மாதிரினு நெனச்சியா, அது அங்க போய் தலையை தூக்கி பார்த்தப்ப தான் இந்த போட்டோவை எடுத்தேன்’

‘பிடிக்க ஏற்பாடு பண்ணுடா’

‘இன்னிக்கு தான் பாரஸ்ட் டிபார்ட்மெண்ட்ல சொல்லப்போறோம்’

‘பாத்துடா. உன் பாம்பை பத்திரமா பாத்துக்கோ, வரவனுங்க, அதை புடிங்கிடப் போறானுங்க’

‘அது அனக்கொண்டாடா’

‘அது நீ சொல்றதுடா, ஆனா ட்விட்டர், பேஸ்புக்ல செத்த சாரைப் பாம்புன்னு பேசிக்கறாங்க’

oOo

‘கீரை மசியல் ரொம்ப நல்லாருக்கு ஸார்’ என்று மதிய உணவின் போது யுவராஜ் கூறினான்.

‘நான் தான் செஞ்சேன்’

‘என்ன ஸார்!! நீங்க குக் பண்ணுவீங்களா’

‘ரொம்பலாம் தெரியாது. எனக்கு கீரை பிடிக்கும், ஸோ இதை செய்வேன். அப்பறம் ரசம் வைப்பேன், அவ்ளோ தான்’

உண்ட பின், ‘வெளில போயிட்டு வருவோமா ஸார்’ என்றான் யுவராஜ். அலுவகத்திற்கு அடுத்த தெருவிலுள்ள சிறிய கடையில் ஸ்ப்ரைட் வாங்கிய யுவராஜ், ‘ஆபிஸ் வந்தா லஞ்ச்சுக்கப்பறம் , இப்படி குடிச்சா தான் ஜீரணமாகுது. ரெண்டு வருஷமா, பண்ணண்டு, மூணுன்னு கண்ட நேரத்துக்கு சாப்பிட்டு பழகி இப்ப கரெக்ட்டா ஒரு மணிக்கு சாப்ட கஷ்டமாருக்கு’ என்றான்.

‘வீட்லையும் இதே டைம பாலோ பண்ணுங்க, சரியாயிடும்’

‘அதான் ஸார் செய்யணும்’

அலுவலகத்திற்கு திரும்பிக் கொண்டிருந்த போது மூடப்பட்டிருந்த டைலர் கடையை சுட்டி

‘க்ளோஸ் பண்ணிட்டாங்க போலிருக்கு’ என்றான் யுவராஜ்.

‘கடன் போல. அதான்’

‘ஓ, யார் சொன்னாங்க’

‘போன மண்டே நீங்க வரலைல, மதியம் இந்தப் பக்கம் வந்தப் போது, காலி பண்ணிட்டிருந்தாங்க. என்னன்னு ஓனர்ட்ட கேட்டேன். பிசினஸ்  சரியா வரமாட்டேங்குது, சின்ன கடைக்கு மாத்தறேன்னு சொன்னார்’

‘கொரோனாவால நெறைய பிஸினஸ் இப்படியாயிடுச்சு’

oOo

‘டீ குடிக்கறீங்களா ஸார்’

‘வேணாம்’

‘எனக்கு காப்பி’ என்றான் ரமேஷ்.

காப்பியை குடித்துக் கொண்டே அலைபேசியை பார்த்துக் கொண்டிருந்த ரமேஷ்,

‘இத பாருங்க ஸார். மேரீட் லேடி ஒருத்தி, தன் லவரை, இன்னொரு லவரோட சேர்ந்து கொன்னிருக்கா. அப்பறம், தன் ரெண்டு பசங்க கிட்ட,  வீட்ல அம்மா இல்லாதப்ப குடிச்சிட்டு வந்து கலாட்டா பண்ணினதால, நாங்க தான் தள்ளி விட்டோம், செத்துட்டான்னு  சொல்ல சொல்லியிருக்கா. பத்து, பண்ணண்டு வயசு பசங்க ஸார், அவங்களுக்கு என்னத்த தெரியும். உண்மையை சொல்லிட்டாங்க. இவ மாட்டிக்கிட்டா. தான் தப்பிக்க, அம்மாவே பசங்களை ஜெயிலுக்கு அனுப்ப ட்ரை பண்ணுவாளா ’

‘இது மாதிரி ந்யூஸ் நெறய வருது’ என்று யுவராஜ் கூற

‘என் வீட்டு பக்கத்துல, இதே மாதிரி நம்ப முடியாத விஷயம் இருக்கு. சின்ன வீடு, கீழ எலெக்ட்ரிக்கல் கடை வெச்சிருக்கார், , மாடில குடியிருக்கார். ஒரு பெண் குழந்தை, அஞ்சாறு வயசிருக்கும். எப்பவுமே இவர் தான் குழந்தையை ஸ்கூலுக்கு கொண்டு விடுவார், சாப்பாடு கூட வெளிலேந்து தான் நிறைய நாள் வாங்கிட்டு வருவார். அவர் வைப்பை நான் பாத்ததேல. முதல்ல கொஞ்ச நாள், ஷிபிட்ல வேலை பாக்கறாங்க போலன்னு நினைச்சேன், அப்படியிருந்தா கூட எப்பவாவது கண்ல படுவாங்கல’

‘இறந்துட்டாங்களோ’

‘தட்ஸ் வாட் ஐ தாட். எங்க அபார்ட்மெண்ட் மோட்டார் பிரச்சனை, வீட்ல பேன், ஹீட்டர் ப்ராப்ளம் எல்லாம் அவர் தான். ஸோ எனக்கு கொஞ்சம் பழக்கம் இருக்கு. ஒரு வாட்டி, நீங்களே குழந்தையை பாத்துக்கறீங்களே, ரொம்ப கஷ்டமாருக்குமேன்னு கேட்டேன்’

‘..’

‘அவர் சொன்னதைக் கேட்டு ஐ வாஸ் ஷாக்ட். அவர் வைபுக்கு கல்யாணத்துக்கு முன்னாடிலேந்தே இன்னொருத்தனோட, அபேர், அதுக்கப்பறமும் கூட கன்டிந்யு ஆயிருக்கு. மேரேஜ் முடிஞ்சு ஒரு வருஷத்துல குழந்தை. அதுக்கு ஒரு வயசு கூட ஆகலை, அவ ஓடிட்டா. குழந்தையோட போயிருக்கலாம்’

‘இதுவும் ரொம்ப சாதாரணமாயிடுச்சு’

‘அந்த லேடியோட லவ்வர் இந்தக் குழந்தைக்கு நெறைய கிபிட் கொடுப்பானாம். கசின் முறை போல, ஸோ இவரும் அவன் வந்து போறதை முதல்ல பெருசா எடுத்துக்கல.’

‘..’

‘கடசியா அவர் ஒரு விஷயம் சொன்னார். எப்படியிருந்தாலும் நான் தான் இவளுக்கு அப்பா’

‘அப்போ..’

‘க்ரேட் மேன், இப்படியும் மனுஷனுங்க இருக்காங்க’

oOo

எலெக்ட்ரிக்கல் கடையின் முன் நின்றிருந்தவரை பார்த்து அவரருகே வண்டியை நிறுத்தினான்.

‘ஆளுங்களை கூட்டிட்டு வந்து, சம்ப் சரி பண்ணிட்டேன் ஸார்.’ என்றார் அவர்.

‘வேறெதுவும் ப்ராப்ளம் இல்லைல’

‘மோட்டார்லாம் நல்லா வர்க் பண்ணுது ஸார்’

‘ரெண்டு மூணு நாளா ஹீட்டர்ல சூடு வரமாட்டேங்குது, செக் பண்ணனும்’

‘நாளைக்கு வரேன் ஸார்’  

oOo

வீட்டிற்கு வந்தவுடன், டிபன் பாக்ஸை சமையலறையில் வைத்தவன் ‘உன் கீரை மசியல் ரொம்ப சூப்பரா இருந்ததுன்னு எல்லாரும் சொன்னாங்க.’ என்று மனைவியிடம் கூறினான்.

‘எப்பவும் செய்யறது தானே, நத்திங் ஸ்பெஷல்’

‘உன் ரசமும் ரொம்ப நல்லாருக்கும்னு சொன்னேன், எடுத்துட்டு வர கேட்டாங்க. தனியா சின்ன டேக்ஸால எடுத்துட்டு போலாம்ல’

‘கொட்டமா கொண்டு போணும்’

‘நாளைக்கு தா’

உடை மாற்றிக் கொண்டிருக்கும் போது, அறைக்குள் வந்தவள்  

‘எட்டு மணிக்கு சாப்பிடலாம்’ என்றாள்.

‘ஓகே’ என்றபடி இவன் நாற்காலியில் சாய

‘ஹவ் வாஸ் யுவர் டே, ரொம்ப வர்க்கா.’ என்று கேட்டாள்.

‘எப்பவும் போலத்தான்’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.