முகமூடி வீரர் மாயாவி தோன்றும் இன்ப வேட்கை- சித்ரன்

ந்தக் கதை சுப்பையாவைப் பற்றியது தான். ஆனால் சுப்பையாவின் கதையை மனோகரனிடமிருந்தே ஆரம்பிக்க வேண்டும். சச்சினின் ஆட்ட வசீகரத்தால் கிரிக்கெட் பேட்டோடு அலைந்த தலைமுறையைச் சேர்ந்தவர்கள் நாங்கள். மனோகரனோ ஒருமுறை கூட பேட்டைத் தொட்டிராதவன். ஆனால் நாள் முழுதும் நாங்கள் விளையாடும் மைதானத்தில் தான் அவனும் இருப்பான். கையில் ஏதேனுமொரு புத்தகத்தோடு. புளியமரங்களால் சூழப்பட்ட அம்மைதானத்தின் நிழல் அவனுக்குப் படிப்பறையைப் போல. ஒருமுறை ஆள்பற்றாக்குறையால் எங்கள் அணிக்கு விளையாட வருமாறு அழைத்ததற்கு முடியாதென பதிலளித்து விட்டு புத்தகம் படித்துக் கொண்டிருந்தான். அவனை முதல் ஆட்டக்காரனாய் மட்டையாட களமிறக்குவதாய் நான் ஆசை வார்த்தைகள் கூறியதற்கு என் முகத்தை எரிச்சலோடு நோக்கினான். அப்பார்வை என்னை அவமதிப்பதாய் தோன்ற வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அவனை ஏளனம் செய்ய நான் தவறியது இல்லை.

அது எங்கள் மேல்நிலைப் பள்ளிக் காலம். நாங்கள் கிரிக்கெட்டைத் தவிர வேறு எதையும் பெரிதாய் பொருட்படுத்தியதில்லை. ஆகவே காலை மாலை பள்ளி உணவு இடைவேளை விடுமுறை நாட்கள் என வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் மழையோ வெயிலோ விளையாட்டுத் திடலிலேயே பழியாய் கிடப்போம். அன்று எங்களிடமிருந்த இரண்டு பந்துகளையும் வைரவன் தனது சிக்ஸர்களால் தொலைத்துவிட்டான். கைவசமிருந்த சில்லறைகளைத் தேற்றியும் பந்துக்கான பணம் பற்றாக்குறையாய் இருக்க நாங்கள் கேட்காமலேயே  அதைக் கவனித்துக்கொண்டிருந்த மனோகரன் இரண்டு ரூபாய் தந்தான். அந்நிகழ்வுக்குப் பிறகு நான் அவனைக் கேலி செய்வதை நிறுத்தியிருந்தேன். விரைவிலேயே அவன் எனது நெருங்கிய தோழன் ஆனான்.

ஒரு சனிக்கிழமை காலை டியூசன் செல்ல மனமில்லாமல் வேறு ஏதேனும் அணியுடன் இணைந்து விளையாடலாம் என மைதானத்திற்கு சைக்கிளை ஓட்டிச் சென்றேன். ஆனால் ஆளரவமற்று மைதானம் வெறிச்சோடிக் கிடந்தது. யாரேனும் வருவார்களெனக் காத்திருந்த நான் புளியம்பூக்களை மொய்க்கும் கட்டெறும்புகளைக் கவனித்தவாறிருந்த மனோகரனைக் கண்டேன். யதேச்சையாய் தலையை நிமிர்த்தியவன் என்னைக் கண்டதும் புன்னகைத்தான். கையில் விரித்திருந்த புத்தகத்தை மூடியவன் “எனக்கு கிரிக்கெட் விளையாடத் தெரியாது கண்ணா” என மன்னிப்பு கோருபவனைப் போல் சொன்னான்.

              “கொஞ்ச நாள் எங்க கூட விளையாடு பேட்டிங் வந்துரும்” என்றேன்.

               “இல்ல எனக்கு கிரிக்கெட்டப் பத்தி ஒன்னும் தெரியாது. நான் இதுவரைக்கும் ஒரு தடவை கூட வெளையாண்டது இல்ல.”

                “அப்படியா ஆனா நீ டிவியில கிரிக்கெட் பாப்ப தானே?”

                “இல்ல”

 அவனின் அப்பதிலால் வியப்புற்று என் சைக்கிள் கேரியரில் இருந்த கணக்கு நோட்டின் அட்டைப் படத்தை அவனிடம் காட்டி அது யாரென்று வினவினேன். அவன் வெகு சாதாரணமாய் தனக்குத் தெரியாதெனத் தலையசைத்தான். நான் அடைந்த அதிர்ச்சியை எழுத்தில் சொல்லி விட முடியாது. அது மீசை லேசாக அரும்பியிருக்கும் சவுரவ் கங்குலியின் புகைப்படம். எனது நாயகன். சச்சின் ஆட்டமிழந்தால் வெற்றிவாய்ப்பு முடிந்து விட்டதென தொலைக்காட்சியை விட்டு எழுந்து சென்றவர்களைத் தொடர்ந்து ஆட்டத்தைக்காண வைத்தவன். நான் பதற்றமடைந்து சச்சினைத் தெரியுமா எனக் கேட்டதற்கு டெண்டுல்கரை கேள்விப்பட்டுள்ளதாய் சொன்னான். நான் சற்று ஆசுவாசமடைந்தேன். இருப்பினும் அத்தகவல் வைரவனுக்குத் தெரியாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் அவன் கங்குலியின் எதிரி. தனது உயிரை சச்சின் டெண்டுல்கருக்காய் உயில் எழுதி வைத்தவர்களுள் ஒருவன். எனது உயிரோ கங்குலிக்கு உரித்தானது அன்று அவன் கையில் வைத்திருந்த புத்தகம் என்னவென்று கேட்டதற்குப் பதில் எதுவும் கூறாமல் அப்புத்தகத்தை என்னிடம் நீட்டினான். நான் அதுநாள்வரை பாட நூலைத் தவிர எந்தக் கதைப் புத்தகத்தையும் கையில் தொட்டதில்லை. இருப்பினும் அண்மை நாட்களாய் யாரும் அறியாமல் வாரமலரில் அன்புடன் அந்தரங்கம் வாசிக்கத் தொடங்கியிருந்தேன். (அது சலூனில் யதேச்சையாய் கண்ணில் பட்டது பின்பு பழக்கமாகிவிட்டது).

அவன் என்னிடம் தந்த புத்தகம் இரும்புக்கை மாயாவி. கருப்பு வெள்ளை ஓவியங்களோடு சாணித்தாளில் அச்சிடப்பட்ட அக்கதைப் புத்தகத்தை காமிக்ஸ் என்று சொன்னான். நான் அந்நூலைப் புரட்டிவிட்டு உடன் திருப்பியளித்தால் அவனை அவமதிப்பதாய் இருக்குமோ என யோசித்துக் கொண்டிருந்தேன். என்னை அப்புத்தகம் சற்றும் ஈர்க்கவில்லை. நான் கேட்காமலேயே அவன் இரும்புக்கை மாயாவியின் கதையைச் சொல்லத் தொடங்கினான். விஞ்ஞானி பாரிங்கரின் உதவியாளர் கிராண்டேலுக்கு ஒரு கை இல்லையாம். அதில் இரும்புக்கை பொருத்தியிருக்குமாம். ஒரு முறை அதிபயங்கரமான ஷாக் அடித்ததில் அவர் மாயமாகிவிட்டராம். இரும்புக்கை மட்டும் மறையவில்லையாம். பிறகு மீண்டும் உடல் கண்ணுக்குப் புலப்பட்டதாம். அதன் பிறகு ஒவ்வொரு முறை ஷாக் அடிக்கும் போதும் அவர் மறைந்து மீண்டும் உருப்பெறுவாராம். அப்படியே அவர் பிரிட்டிஷ் உளவாளியாய் வேலை செய்தாராம். நான் அக்கதையில் பெரிதும் ஈர்க்கப்பட்டவனாய் முகத்தை வைத்துக்கொண்டேன்.

அந்நாட்களில் கேபிள் டிவியில் ஒளிபரப்பப்படும் படங்களில் என்னைப் பெரிதும் ஈர்ப்பது ஜாக்கிசானின் திரைப்படங்களே. அப்படங்களைப் பார்த்து விட்டு காம்பவுண்ட் சுவரிலிருந்து தென்னை மரத்திற்குத் தாவுவது. எங்கள் வீட்டு மொட்டை மாடியிலிருந்து ஜன்னலின் சன்சேடில் கால்வைத்து அடுத்த வீட்டு மொட்டை மாடிக்குத் தாவுவது போன்ற சாகசங்களில் ஈடுபட்டு நானும் ஜாக்கிசானாய் உருமாறியிருப்பேன். ஆனால் ஜேம்ஸ்பாண்ட் போன்ற உளவாளிகள் செய்யும் சாகசங்கள் எனக்குப் போதுமானதாய் இல்லை. இருப்பினும் பெண்களை வசீகரிக்கும் அவர்களின் திறமை ஜாக்கிசானுக்கு இல்லை என்பதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்.

 அவனுக்கும் ஜாக்கிசானைப் பிடித்திருந்தது. அந்த விசயத்தால் எங்களுக்குள் ஒரு இணக்கம் உருவாகியது. தனக்கு ஜாக்கிசானின் ‘ஹூமை’ படம் மிகவும் பிடிக்குமென்றான். சற்றுநேரம் கழித்துத்தான் அவன் ‘ஹூ ஆம் ஐ’ திரைப்படத்தைச் சொல்கிறான் எனப் புரிந்தது. நாங்கள் பேச ஆரம்பித்து வெகு நேரமாகியிருந்தது. அன்று எந்த அணியும் விளையாட வரவில்லை. நான் மனோகரிடம் விடைபெற முயன்றேன். அவனோ தன்னை புத்தகக் கடைக்கு அழைத்துச் செல்லுமாறு கேட்டுக் கொண்டான். என்னால் அவன் கோரிக்கையைத் தட்ட முடியவில்லை. என் மிதிவண்டியில் அவனை ஏற்றிக்கொண்டு பழைய பேருந்து நிலையத்திற்கு அருகிலிருக்கும் சுப்பையாவின் புத்தகக் கடைக்கு அழைத்துச் சென்றேன். எத்தனையோ முறை அக்கடையைக் கடந்து சென்றிருந்தாலும்  அதன் உரிமையாளரான சுப்பையாவை முதலில் பார்த்தது அன்றுதான். சட்டை போடாமல் தொந்தி சரிய கைலி அணிந்தவாறு சற்று கருமைத் தூக்கலான ஆளாய் இருந்தார். மீசையற்ற வாயில் கறுத்த உதடுகள் சதா பீடி புகைப்பதை உணர்த்தியது. இடது விழியின் ஓரத்தில் சின்னதாய் ஒரு மரு. அந்த ஆளின் பார்வை ஒரே நேரத்தில் என்னை விரோதியாய் பார்ப்பதைப் போன்றும் ஒளிஞ்சு பிடிச்சு விளையாட்டில் ஐஸ் வைக்கப் பதுங்கி வருபவனைப் போலும் இருந்தது.

சாலையை ஒட்டிய வாரியின் மீது அடுக்கப்பட்ட பட்டியக் கற்கள் மேல் தகரக்கொட்டகை போடப்பட்ட கடை அது. அவ்வரிசையில் அது போல் ஏழெட்டு கடைகள் இருந்தன. அனைத்திற்கும் பின்சுவராய் ஆஃபிசர்ஸ் கிளப்பின் மதில் சுவரிருந்தது. பெரும்பாலும் மெக்கானிக் ஷாப்கள், வாட்ச் ரிப்பேர் செய்யும் கடைகள். சுப்பையாவுடையது மட்டும் புத்தகக் கடை. வாரியின் மேல் உள்ள கொட்டகை உள்ளறை போன்றிருந்தது. பெரும்பாலும் கடை சாலையோரத்தை ஆக்கிரமித்திருந்தது. அதன் மேல் மேசையில் வரிசையாய் அடுக்கப்பட்ட நூல்கள். பெரும்பாலும் காமிக்ஸ், ராஜேஷ் குமார், ரமணிசந்திரன் போன்றவையே. அதிசயமாய் எதையெடுத்தாலும் பத்து ரூபாய் தான். மனோகரோ தன்னிடமிருந்த இரும்புக் கை மாயாவியைத் தந்து விட்டு வேறு புத்தகத்தைத் தேடத் தொடங்கினான். சுப்பையா அந்த புத்தகம் நல்ல நிலையில் உள்ளதா என ஒரு முறை ஆராய்ந்து பார்த்தார். அப்புத்தகத்தை அவர் ஐந்து ரூபாய்க்குப் பெற்றுக் கொள்வார். ஆகவே அடுத்து வாங்கவிருக்கும் நூலுக்கு மனோகரன் ஐந்து ரூபாய் தந்தால் போதும். நானும் மனோகரின் அருகே சென்று புத்தகங்களைப் பார்வையிடத் தொடங்கினேன். அப்போது அவன் என்னிடம் அந்த ஆளிடம் சற்று ஜாக்கிரதையாய் இருக்குமாறு சொன்னான். எதற்குச் சொல்கிறான் என அப்போது விளங்கவில்லை.

நான் முதலில் அங்கு குவிந்திருந்த காமிக்ஸ் நூல்களைப் பார்த்து மலைத்து நின்றேன். மனோகர் அடங்காப் பசியுடையவனைப் போல் அவற்றைப் புரட்டிக் கொண்டிருந்தான். அங்கே இரும்புக் கை மாயாவியைப் போல் வேறு பல மாயாவிகள் இருந்தனர். அதிகமாய் என் கண்ணில் பட்டது முகமூடி வீரர் மாயாவி தோன்றிய பல சித்திர புத்தகங்கள். அதன் பிறகு பேட்மேன், ஸ்பைடர்மேன், நீதிக்காவலன் ஸ்பைடர், ரோபோ ஆர்ச்சி, மேற்கு உலகின் சாகசக்காரர்கள், பெண் சி.ஐ.டி மாடஸ்தி தோன்றும் மர்மக் கோட்டை, வாண்டுமாமா, இந்திரஜால் காமிக்ஸ் மேலும் மேலும் பல திகிலூட்டும் கொலைகாரர்கள், உளவாளிகள், சாகசக்காரர்கள் அனைவரும் அந்த விசாலமான மேஜைகளில் தங்கள் கதைகளைச் சொல்லத் தயாராயிருந்தனர்.

தொடர் வாகன நெரிசலான அச்சாலையின் ஓரத்தில் முற்றிலும் வேறொரு உலகமாய் அக்கடை காட்சியளித்தது. சற்று நேரத்தில் வாகன இரைச்சலும் என் செவிகளுக்குப் பழகிவிட்டது.  காமிக்ஸ் நூல்களுக்கு அடுத்த மேஜையில் அடுக்கப்பட்டிருந்த புத்தகங்களை நோக்கிச் சென்றேன். அவற்றின் தலைப்புகளே எனக்கு விநோதமாய் தோன்றின. யாரிடமும் சொல்லாதே, கனவுக்குயில், ஆசை மாமி, இந்திர லீலை எனத் தலைப்பிடப்பட்ட புத்தகங்களின் அட்டைப் படங்களில் பெண்கள் தங்கள் மாராப்பைச் சரியவிட்டவாறு  சற்று கோணலாய் அமர்ந்திருந்தனர். நான் ‘மன்மத வேட்கை’ எனத் தலைப்பிடப்பட்ட புத்தகத்தைக் கையில் எடுத்துப் பக்கங்களைப் புரட்டினேன். அதுவரை நான் அறிந்திராத ஒரு மர்ம உலகின் வாசல் அந்த நொடியில் திறந்து கொண்டது. அப்போது நான் உணர்ந்த என் இதயத் துடிப்பின் வேகமும் பார்வையின் துல்லியமும் செவிகளின் கூர்மையும் அதுவரை நான் உணர்ந்திராதது. கருப்பு வெள்ளை புகைப்படத்தில் ஒரு நடிகை தன் திறந்த மார்பகங்களைக் காட்டிக் கொண்டிருந்தாள். கண்களில் சுண்டியிழுக்கும் கிரக்கம். அவள் பெயர் எனக்குத் தெரியவில்லை. ஆனால் ‘ஆத்தாடி பாவாடை காத்தாட’ பாடலில் பாவாடையைக் கட்டிக் கொண்டு குளிப்பவள். அநேகமாய் காற்றின் வேகத்தில் பாவாடை பறந்திருக்கக் கூடும். யாரோ அவளறியாமல் புகைப்படம் எடுத்துவிட்டனர் என எனக்குள் சமாதானம் சொல்லிக் கொண்டேன். ஆனால் அவளது விழிகள் அதைப் பொய்யென உரைத்தன. சற்றும் நான் எதிர்பாரா நேரத்தில் ஒரு கை என் உயிர்நாடியை அழுத்திவிட்டுச் சென்றது. நான் பதறி புத்தகத்தைப் பறக்கவிட்டேன். சுப்பையா ஒன்றும் அறியாதவரைப் போல் அவரது இருக்கைக்குத் திரும்பினார். நான் திகைத்து மனோகரனைப் பார்த்தேன். அவன் பொங்கி வந்த சிரிப்பை அடக்கியவாறு “அதான் ஒன்னைய ஜாக்கிரதையா இருக்கச் சொன்னேன்ல” என்றான். அவனொரு காமிக்ஸை வாங்கிய பின் நாங்கள் புறப்படவிருந்த நேரத்தில் சுப்பையா மெதுவாய் என்னருகே வந்து “கலர் புத்தகம் உள்ள இருக்கு பாக்குறியா? அஞ்சு ரூவா தான்டா” என்றார். நான் மறுத்துவிட்டு சைக்கிளை நோக்கிச் சென்ற நொடியில் “காசு இல்லன்னாலும் பரவாயில்லடா அடுத்த வாட்டிக் குடுத்துக்கலாம்” என்றார்.

 மைதானத்தை அடையும் வரை என் படபடப்பு அடங்கவில்லை. சிறுவயதில் டவுசர் அணியாத என்னை சுந்தரி அக்காள் “என்ன மணியக்காரரே” என அழைத்துவிட்டு மணி அடிப்பதைப் போல் செய்துவிட்டுப் போவாள். பல வருடங்கள் கழித்து அது நினைவிற்கு வந்தது. நான் மனோகரிடம் “அதென்னடா கலர் புத்தகம்?” எனக் கேட்டேன். “எதாச்சும் அம்மணக் குண்டி புத்தகமா இருக்கும்” என்றான். நீ பாத்துருக்கியா எனக் கேட்டதற்கு இல்லையெனத் தலையசைத்தான்.

 அன்று மாலை சன்டிவியில் ‘குளிக்குது ரோசா நாத்து… தண்ணி கொஞ்சம் ஊத்து ஊத்து…’ என இளையராஜா பாடிக் கொண்டிருந்தார். நான் கொல்லைப் புறத்திலிருந்து வேகமாய் அப்பாடலைக் காண்பதற்கு வந்தேன். அப்பா அதற்குள் அலைவரிசையை பொதிகைக்கு மாற்றிவிட்டார். அவருக்கு அந்த நடிகையின் பெயர் தெரிந்திருக்கலாம். ஆனால் எனக்குக் கேட்பதற்குத் தைரியமில்லை.

 அன்றிரவு எனக்கு விநோதமான கனவு வந்தது. அடைக்கலசாமி சார் கணக்குப் பாடம் எடுக்க வந்தார். அனைவரும் பைக்குள்ளிருந்து கணக்கு நோட்டை வெளியில் எடுத்தனர். ஆனால் என் பைநிறைய மாராப்பணியாத பெண்களின் புத்தகங்களாய் இருந்தன. கணக்கு நோட்டைக் காணவில்லை. அவர் கரும்பலகையில் போடும் கணக்கை மாணவர்கள் அனைவரும் தன் கணக்கு நோட்டில் எழுதுகின்றனர். நான் மட்டும் என்ன செய்வதெனத் தெரியாமல் திகைத்து அமர்ந்துள்ளேன். என்னைக் கவனித்துவிட்ட அடைக்கலசாமி சார் மெதுவாய் என்னருகே வந்தார். “எழுதாம என்னடா பண்ற?”. நான் பதிலளிக்காமல் கைகட்டி தலைகவிழ்ந்து நின்றேன். “பைய வெளிய எடு”. அதற்கும் நான் எதிர்வினையாற்றவில்லை.  அவர் அருகில் அமர்ந்திருந்த வேல்பாண்டியிடம் பையை எடுக்கச் சொல்லிக் கண்ணைக் காட்டினார். அவன் புத்தகப்பையை சிரமப்பட்டுத் தூக்கி மேசை மேல் வைத்தான். பைக்குள் கையைவிட்டு ஒரு புத்தகத்தை வெளியிலெடுத்தவர் புத்தகத்தை உயர்த்திக் காட்டி “என்னடா இது?” என்கிறார். அந்த புத்தகத்தின் அட்டைப் படத்தில் பிளவுஸ் அணியாமல் சேலைச் சுற்றியிருந்த ஒரு பெண் தன் திறந்த முதுகைக் காட்டியவாறு திரும்பிப் பார்த்தாள். மொத்த வகுப்பே சிரிப்பலையில் மூழ்குகிறது. வேகமாய் அவர் பிரம்பை எடுக்கச் சென்றார். ஓரத்தில் அமர்ந்திருந்த நான் சட்டென வகுப்பை விட்டு வெளியில் ஓடுகிறேன். அவர் கையில் பிரம்போடு என்னைத் துரத்தி வருகிறார். நான் மைதானத்தில் இறங்கி ஓடுகிறேன். அவர் எங்கள் பள்ளியின் ஹாக்கி கோச்சும் கூட. விடாமல் விரட்டி வருகிறார். அப்படியே நான் வேலியைத் தாண்டி ஐயனார் கோயில் குளக்கரையில் ஏறிவிட்டேன். அதிசயமாய் என்னைத் துரத்திய அடைக்கலசாமி சாரைக் காணவில்லை. குளக்கரையின் கருவேல மரங்களில் பலவண்ணப் பாவாடைகள் காற்றில் படபடத்தன. குளத்திற்குள் ஏதோ சலசலப்புக் கேட்டது. என்னைப் பார்த்ததும் குளத்திற்குள் நீந்திய அந்நடிகை மெல்ல எழுந்து வந்தாள். நீர் சொட்டும் தன் செழுமையான மார்பகங்களை வலதுகையாலும் பிறந்தகத்தை இடதுகையாலும் மறைத்தவாறு என்னை நோக்கிப் புன்னகைத்தாள். நான் பதறி கண்விழித்தேன்.

 அடுத்த நாள் மாலை மைதானத்தில் எல்லைக் கோட்டில் நின்ற என் கண்கள் மனோகரனைத் தேடிக் கொண்டிருந்தன. அதனால் இரண்டு கேட்சுகளைத் தவறவிட்டேன். வைரவன் என் தலைவரைப் போல் நானுமொரு ஒழுவுனி என என்னைக் கடிந்து கொண்டான். அதன் பிறகு அடுத்த சனிக்கிழமை காலையன்றே மனோகரன் கண்ணில் பட்டான். மனோகரன் எங்கள் பள்ளியல்ல. பிரகதாம்பாள் பள்ளி மாணவன். அவனுடைய அப்பா சைக்கிளில் ஐஸ் விற்பவர். மாலை நேரங்களில் மனோகரனும் ஐஸ் விற்று அதில் கிடைக்கும் லாபத் தொகையில் புத்தகங்கள் வாங்குபவன். அவனோடு அன்று புத்தகக் கடைக்குச் செல்ல விரும்பிய நான்  அதைக் கேட்பதற்குத் தயங்கியவாறு வேறு விசயங்களைப் பேசிக்கொண்டிருந்தேன். பிறகு பேச்சோடு பேச்சாய் சென்ற வாரம் வாங்கிய காமிக்ஸை மனோகரன் படித்துவிட்டதையும் வேறு வாங்கியுள்ளதையும் அறிந்து கொண்டேன். நாங்கள் ஆட்டங்களை முடித்து உணவு இடைவேளைக்கு கிளம்பவிருந்த நேரத்தில் அவன் வைத்திருந்த இரும்புக்கை  மாயாவியின் பாதாள நகரம் காமிக்ஸை இரண்டுமுறை படித்து விட்டான். ஆகவே அடுத்த காமிக்ஸை வாங்குவதற்காய் பெருந்தன்மையோடு அவனை சைக்கிளில் அழைத்துச் சென்றேன்.

இம்முறை நான் வெகு கவனமாய் சுப்பையாவின் நடவடிக்கைகளின் மீது கண் வைத்திருந்தேன். காமிக்ஸின் இறுதி வரிசையில் நின்றவாறு அதிலொன்றைக் கையில் எடுத்துப் புரட்டியபடி அடுத்த மேஜையின் மீது கண்களை ஓடவிட்டேன். சல்லாபக் கிளி, காம விருந்து, இன்பத் துடிப்பு எனத் தலைப்புகள் கண்ணில் பட்டன. சுப்பையா நூல்களை ஒழுங்கு செய்தவாறே என் அருகில் வந்தார். நான் சட்டென சுதாரித்துக்கொண்டு கடையை விட்டு வெளியில் சென்றேன். இம்முறை அவர் கையில் அகப்பட்டது மனோகரன். அய்யோ என அலறி என்னிடம் ஓடி வந்தான். நான் பொங்கிய சிரிப்பை அடக்கியவாறு “இரும்புக்கை மாயாவி” என்றேன். என்னைப் பார்த்து முறைத்தவன் கையில் எடுத்த நூலுக்கு காசு கொடுத்துவிட்டு வந்தான். நான் கொஞ்ச தூரம் சென்ற பிறகு  “டேய் அந்த கலர் புத்தகம் என்னன்னு பார்க்கலாமா என்கிட்ட அஞ்சு ரூவா இருக்கு” என்றேன். அவன் மறுப்பேதும் சொல்லவில்லை. அது நான் சற்று எதிர்பாராதது தான் அவன் மறுக்கக்கூடுமென்றே நினைத்திருந்தேன்.

 எங்கள் கோரிக்கையைக் கேட்ட சுப்பையாவின் முகத்தில் என்னவென்று சொல்ல முடியா ஒரு வெறுப்பு எஞ்சியிருந்தது. அவர் யாரேனும் ஒருவரை மட்டும் எதிர்பார்த்திருக்கிறார் எனப் பின்பு யூகித்தேன். “எவ்வளவு காசு வைச்சிருக்க” என்றார். “அஞ்சு ரூவா தானே” எனப் பதிலளித்தேன். “ஓகோ ஒரு ஆளுக்குச் சீட்டு வாங்கிட்டு மொத்த குடும்பத்தையும் கொட்டகைக்கு கூட்டிப் போவியா?” என்றார். நான் பதிலற்று நின்றிருக்க சலிப்புடன் ஐந்து ரூபாயைப் பெற்றுக் கொண்டு உள்ளே போகச் சொன்னார். இருட்டான உள்ளறையில் ஒரு தகர நாற்காலி மட்டும் கிடந்தது. அதற்குள் எந்த புத்தகங்களும் இல்லை. உள்ளே நுழைந்த சுப்பையா சுவிட்சைத் தட்டும் ஓசை கேட்க மின்விசிறியும் மஞ்சள்விளக்கும் உயிர்பெற்றது. துருவேறிய நாற்காலியின் மேலே ஒரு கண்திருஷ்டி கணபதியின் ஸ்டிக்கர். சுப்பையா என்னை நகரச்சொல்லி விட்டு நாற்காலியின் மீதேறியவர் உள்ளறைக்குத் தடுப்பாயிருந்த ரேக்கின் மேலிருந்து ஒரு புத்தகத்தை வெளியிலெடுத்தார். அட்டைப்படத்தில் உள்ளாடைகள் மட்டும் அணிந்திருந்த ஒரு பொன்னிறக் கூந்தலழகி மஞ்சள் ஒளியால் மேலும் பிரகாசமடைந்திருந்தாள். தன் உள்ளங்கையைத் தராசைப் போல் பாவித்து அந்த புத்தகத்தின் எடையை அனுமானித்த சுப்பையா பின் அதை என் கையில் நீட்டினார்.

நான் புத்தகத்தை வாங்கிய பின் சுப்பையா வெளியில் செல்லும்வரை காத்திருந்தேன். பிறகு பக்கங்களைப் புரட்டத் தொடங்கினேன். என்னால் புத்தகத்தை கையில் பிடித்திருக்க முடியவில்லை. எனதுடலோ நடுங்கத் தொடங்கியது. ஆலிங்கனத்தை முதன் முதலாய் கண்ணுற்ற நான் அதிர்ச்சியில் உறைய மனோகரனோ வெடித்துச் சிரிக்கத் தொடங்கினான். நிர்வாண உடல்கள் முயங்கச் சாத்தியமான எல்லா வழிகளிலும் அப்புத்தகத்தின் பக்கங்கள் தோறும் புகைப்படங்களாய் உறைந்திருந்தன. கருப்பு வெள்ளை உடல்கள், கூட்டுக் கலவிகள், தன்பால் சேர்க்கைகள், அந்தரத்தில் பறக்கும் இந்திரியங்கள், வாய்வழிப் புணர்ச்சிகள் என வண்ணப் புகைப்படங்கள் மிக உயர்ந்த வழுவழுப்பான காகிதங்களில் அச்சிடப்பட்டிருந்தன. ஆனால் நான் பக்கங்களைப் புரட்டுந்தோறும் மனோகரன் “இங்க பாருடா” என மேலும் மேலும் கட்டுப்பாடற்று சிரித்துக் கொண்டிருந்தான். “டேய் கிறுக்குத் தாயளி எதுக்குடா சிரிக்கிற?” என்றேன். “தெரியலையே” எனப் பதிலளித்து விட்டு புத்தகத்தைக் கையில் வாங்கிப் புரட்டியவாறு கண்களில் நீர் வழிய சிரிப்பைத் தொடர்ந்தான். நாங்கள் இறுதிப் படத்தைப் பார்த்து முடிப்பதற்கும் சுப்பையா உள்நுழைவதற்கும் சரியாய் இருந்தது. என்னிடமிருந்து முதலில் புத்தகத்தை வாங்கியவர் மீண்டும் தன் உள்ளங்கையை தராசைப் போல் பாவித்து எடையை அனுமானித்தார். பின்பு எங்களிடம் “ஒரு தாளு கிழிச்சாலும் தெரிஞ்சுபோயிரும் பாத்துக்கிடுங்க” என்றவாறு நாங்கள் வெளியே செல்ல அனுமதித்தார். நான் அறையை விட்டு வெளியில் செல்ல முயற்சிக்கும் போது என் புட்டத்தில் கை வைத்து “ரொம்ப சூடா இருக்கீக போலிருக்கே” என்றார். நான் வேகமாய் அவரது கையைத் தட்டி விட்டு வெளியே வந்தேன். அப்பொழுது ஒரு பருத்த பெண்மணி ஒயர்கூடையில் சாப்பாட்டுக் கேரியரோடு கடைக்கு வந்தாள். எங்களை ஏறயிறங்கப் பார்த்தவள் எங்களைப் பின்தொடர்ந்த சுப்பையாவை நோக்கி ஆத்திரத்துடன் “கேணமாடு படிக்கிற பயலுகளுக்கு கலரு புத்தகம் காட்டுறியா உருப்படாதவனே” எனத் திட்டினாள். சுப்பையா பதிலளிக்காமல் தலை கவிழ்ந்திருந்தார். நாங்கள் வேகமாய் சைக்கிளை கிளப்பினோம். நான் “யாருடா அந்த பொம்பள” என வினவியதற்கு “அந்த ஆளோட சம்சாரம்” எனப் பதிலளித்தான்.

சாப்பிட்டு விட்டு அனைவரும் மைதானத்திற்குத் திரும்பியிருந்தனர். என் மனம் அசாதாரணமானதொரு விழிப்பு நிலையிலிருந்தது. நரம்புகளில் என்னவென்றுப் புரியா ஒரு வலி. எனது அணி முதல் பேட்டிங். நான் முதலில் மட்டையாடச் சென்றேன். முதல் பந்தே பாயின்ட் திசையில் பவுண்டரி ஆனது. அடுத்த பந்து பிட்சில் புதைந்திருந்த ஒரு கூழாங்கல்லில் குத்தி வெளியில் செல்ல வேண்டிய லைனிலிருந்து திரும்பி விருட்டென குச்சியை நோக்கி வந்தது. நான் மிகத் துல்லியமாய் அதை நடுமட்டையில் தடுத்தாடினேன். அதன் பிறகு லாங்க் ஆஃப் திசையில் ஒரு சிக்ஸரும் எக்ஸ்ட்ரா கவர் திசையில் ஒரு பவுண்டரியும். எனது விழிகளுக்கு சேற்று நிறத்தை உள்வாங்கியிருந்த அப்பந்து இருளில் தீச்சுடரைப் போல் புலனாகியது. மறு ஓவரை வைரவன் வீச வந்தான். முதல் பந்தில் சிங்கிள் கிடைக்க நான் மட்டையாட வந்தேன். அப்பந்தை வைரவன் என் இடுப்பை நோக்கி வீசுவான் எனத் தெரியும். ஏனெனில் எனக்கு புல்ஷாட் ஆடவராது. நான் எதிர்பார்த்ததைப் போல் பந்து குறைநீளத்தில் விழுந்து இடுப்பை நோக்கி வந்தது. என்ன நிகழ்ந்ததென எனக்கே புரியவில்லை. பந்து பாலையா ஸ்கூல் மைதானத்திலிருந்து ஆரோக்கிய மாதா மக்கள் மன்றத்தைத் தாண்டிப் பறந்து சென்றது. வேறு அணிகள் வந்துவிடாமல் மனோகரனைப் பிட்சுக்கு காவலாய் வைத்துவிட்டு நாங்கள் பந்தைத் தேடச் சென்றோம். எங்கும் படர் கொடிகளால் சூழப்பட்ட அவ்விடத்தில் மட்டையாலும் ஸ்டம்பாலும் கொடிகளை அழுத்தித் தேட வேண்டும். வைரவன் என்னிடம் “என்னத்தடா தின்னுட்டு வந்த இந்த அடி அடிக்கிற” என்றான். பிறகுதான் நான் மதியம் உணவருந்தவில்லையென்பதை உணர்ந்தேன். அரைமணி நேரத் தேடலுக்குப் பிறகு பந்து கிடைத்தது. ஆனால் நாங்கள் விளையாடிய பிட்ச்சில் வேறு அணி விளையாடிக் கொண்டிருக்க மனோகரன் மதியம் வாங்கிய காமிக்ஸோடு புளியமரத்தடியில் ஐக்கியமாகியிருந்தான்.

 மறுவாரத்திற்காய் தினமும் கிடைக்கும் சில்லறைகளைச் செலவு செய்யாமல் சேமிக்கத் தொடங்கினேன். மனோகரனும் மாலை நேரங்களில் ஐஸ் விற்று காசு தேற்றிக் கொண்டிருந்தான். அந்த வாரம் முழுதும் வரவிருக்கும் சனிக்கிழமையைக் குறித்த நினைப்பாய் இருந்தது. எப்போதும் நண்பர்கள் சூழ இருக்கும் நான் முதன்முதலாய் தனிமையை விரும்பத் தொடங்கினேன். மற்ற கேளிக்கைகள் அனைத்தும் பொருளற்றதாய் தோன்றியது. சனிக்கிழமை காலை விடியலுக்கு முன்பே கண்விழித்தேன். அன்று இருவரும் பத்து மணியளவில் சுப்பையாவின் கடைக்குச் சென்றோம். சைக்கிளில் செல்லும் போது இருவரும் கலர் புத்தகத்தைப் பற்றி எதுவும் பேசிக்கொள்ளவில்லை. கடையிலோ சுப்பையாவைக் காணாதது கொஞ்சம் ஏமாற்றமாயிருந்தது. உள்ளறையிலிருந்து ஊதுவத்தியின் நறுமனம் கமழ்ந்ததுடன் ஆளரவமும் கேட்க நாங்கள் அண்ணா என்று அழைத்துப் பார்த்தோம். அதற்கு எந்த எதிர்வினையுமில்லை. சற்று நேரம் கழித்து மெதுவாய் உள்ளே எட்டிப் பார்த்த மனோகரனோ பேயைக் கண்டவனைப் போல் மிரட்சியடைந்தான்.  நான் என்னவென்றுக் கேட்டது எதுவும் அவன் செவிகளில் விழவில்லை. பதட்டத்தோடு காமிக்ஸைக் கூட வாங்காமல் சாலையில் நடக்கத் தொடங்கினான். நானும் உள்ளே எட்டிப் பார்க்க உத்தேசித்து பின் வேண்டாமென சைக்கிள் அருகே சென்றேன். சில நிமிடங்கள் நின்று விட்டு சைக்கிள் ஸ்டேண்டை விடுவிக்கும் நேரத்தில் உள்ளறையிலிருந்து சுப்பையாவும் வேறொரு ஆளும் வெளியில் வந்தனர். நான் வேகமாய் சைக்கிளைக் கிளப்பினேன். மனோகரன் தான் பார்த்ததைக் குறித்து எதுவும் பேசவில்லை.

 அந்நாளுக்குப் பிறகும் நாங்கள் சுப்பையாவின் கடைக்குச் சென்றோம். ஆனால் மனோகரனோ கலர் புத்தகம் பார்ப்பதற்கு மட்டும் வர மறுத்துவிட்டான். நான் காரணத்தை வினவியும் அவன் அது குறித்துப் பேசுவதைத் தவிர்த்தான். எனக்கும் தனியாய் உள்ளறைக்குச் செல்வதற்கு அச்சமாய் இருந்தது. பிறகு என் சிந்தையெல்லாம் மாராப்பற்ற தமிழ் புத்தகங்கள் வாங்குவது குறித்த எண்ணங்களால் நிறையத் தொடங்கியது. ஏனோ அதை நான் செயல்படுத்தத் துணியவில்லை. ஒருவேளை அடைக்கலசாமி சார் பிரம்போடு துரத்திய கனவு கூட அதற்குக் காரணமாய் இருந்திருக்கலாம்.

வாரந்தோறும் சுப்பையாவின் கடைக்குச் செல்வது ஒரு சடங்கைப் போல் மாறியிருந்தது. சுப்பையாவோ கோழி பிடிக்க வருபவனைப் போல் பதுங்கியபடி எங்களைச் சுற்றி வருவார். நாங்கள் மிகவும் எச்சரிக்கையாய் அவரிடமிருந்து விலகியோடுவோம். நான் விரைவில் அதற்கொரு தீர்வைக் கண்டுபிடித்தேன். கிரிக்கெட் பந்து டோர்னமென்ட் ஆடும் ஜோதி அண்ணனிடமிருந்து பெல்விக் ஃகார்டை வாங்கிக் கொண்டேன். பெரும்பாலும் அவை ஒரு அணிக்கே மூன்று தான் இருக்கும். அனைவரும் கைக்குட்டையை வைத்து அதைப் பயன்படுத்துவர். எங்கள் மத்தியில் அதற்குப் பெயர் கிட்னி ஃகார்ட். அவர் உனக்கெதுக்குடா என வினவியதற்கு “குறுக்கு பேட் ஆடும் போது அடிபடுதுண்ணே” எனப் பதிலளித்தேன்.

 அவ்வாரம் சுப்பையாவின் கடைக்கு உள்ளாடைக்குள் பெல்விக் ஃகார்டை பொருத்தியவாறு சென்றேன். நான் வழக்கத்தை விட மிக உற்சாகமாய் இருப்பது மனோகரனுக்கு விநோதமாய் தோன்றியது. நான் அவனுக்கு என் ரகசியத்தைச் சொல்லவில்லை. இம்முறை மிகத்தீவிரமாய் புத்தகங்களைப் பார்ப்பது போல் பாசாங்கு செய்ய வேண்டும். பதுங்கியவாறு  வரும் சுப்பையா பெல்விக் ஃகார்டில் கைவைத்து திகைத்து நிற்பார் என  ஏதோ சிறுபிள்ளை விளையாட்டைப் போல் கற்பனையிலிருந்தேன். சுப்பையா கடைக்கு வெளியே பீடி புகைத்துக் கொண்டிருந்தார். வழக்கத்தை விட அவர் முகம் மிக இறுக்கமாய் இருந்தது. அவரைச் சுற்றி புகைத்த பீடித் துண்டுகள் ஒரு கட்டாவது தேறும். நாங்கள் உள்நுழைந்து புத்தகங்களைப் புரட்டிக் கொண்டிருக்க அவர் எங்களைச் சற்றும் பொருட்படுத்தவில்லை. எனக்கு அது ஏமாற்றமாய் இருந்தது. அவர் அப்படியே அருகிலிருந்த கடைகளுக்குச் சென்று ஏதோ பேசிவிட்டு வந்தார். அவர் கடையில் ஆளிருக்கையில் அப்படி விட்டுச் செல்பவரல்ல. ஏனெனில் புத்தகங்களை வாடிக்கையாளர்கள் கால்சட்டைக்குள் சொருகியவாறு சென்றுவிடுவர்.

 அவ்வரிசையிலிருந்த எல்லாக் கடையின் உரிமையாளர்களும் வெளியில் பதட்டத்தோடு கூடி நிற்பதை பிறகுதான் கவனித்தோம். சற்று நேரத்தில் நகராட்சி ஆணையரின் ஜீப் வந்தது. முன்னிருக்கையிலிருந்து இறங்கிய ஆணையர் இளைஞனாய் இருந்தார். அனைவரும் அவரிடம் சென்று ஏதோ முறையிட்டுக் கொண்டிருந்தனர். அவர் கடைக்காரர்களை பெரிதாய் பொருட்படுத்தவில்லை. ஆஃபிசர்ஸ் கிளப்பிற்கு பின்னாலிருந்த வாய்க்காலை சென்று பார்த்தார். பிறகு புல்தண்ணீர் பந்தலைச் சென்றடையும் சமஸ்தானத்து பாதாளச் சாக்கடையை ஆய்வு செய்தார். அவர் செல்லுமிடமெல்லாம் மேஸ்திரி உடலைக் குறுக்கிப் பின் தொடர்ந்தார். மேஸ்திரியை கடைக்காரர் ஒருவர் கையைப் பிடித்து இழுத்து ஏதோ கோபமாய் கேள்விகளைக் கேட்டார். அதற்கும் மேஸ்திரி உடலை நெளித்துக் கொண்டிருந்தார். மனோகரன் அப்போது காமிக்ஸ் ஒன்றைக் கால்சட்டைக்குள் சொருகுவதைப் பார்த்தேன். நான் வேகமாய் கடைசி மேசைக்குச் சென்று  ‘கனவு சுந்தரி’ நூலைக் கையிலெடுத்தேன். கால்சட்டைக்குள் சொருகுவதற்கு முன் சுப்பையாவை நோட்டமிட்டேன். யாரிடமோ பேசிக் கொண்டிருந்த சுப்பையாவின் பார்வை என்னில் நிலைத்திருந்தது. நான் அப்புத்தகத்தைக் கீழே வைத்துவிட்டு  கடையை விட்டு வெளியே வந்தேன். பிறகு மனோகரன் கையிலெடுத்த காமிக்ஸிற்கு மட்டும் காசு கொடுத்துவிட்டு வந்தான்.

 மறுவாரம் நாங்கள் சற்றும் எதிர்பாராதது நிகழ்ந்தேறியது. அவ்வரிசைக் கடைகள் அனைத்தையும் நகராட்சி அப்புறப்படுத்தியது. கடைக்காரர்கள் எவ்வளவோ வாக்குவாதத்தில் ஈடுபட்டும் மன்றாடியும் ஆணையர் அசைந்து கொடுப்பதாயில்லை. தாங்கள் வேறு கடைகளைப் பார்த்துக்கொள்ள கால அவகாசம் தரப்படவில்லை என்பது அவர்களின் குமுறலாய் இருந்தது. சுப்பையாவின் மனைவியிடமிருந்து யாராலும் செவி கொடுக்க முடியா வசவு வார்த்தைகள் பெருக்கெடுத்தன. அவள் யாரையும் நேரடியாகச் சுட்டாமல் தன் போக்கில் வசவுகளைப் பொழிந்தாள். சுப்பையா புத்தகங்களைக் கடையிலிருந்து வெளியே எடுத்துவந்து சாலையோரத்தில் அடுக்கி வைத்துக்கொண்டிருந்தார். ஜேசிபி வண்டியின் இயந்திரக் கைகள் அது வரை இரண்டு கடைகளைத் தகர்த்திருந்தது. மற்ற கடைகளின் தகரக் கொட்டகைகளை கடைக்காரர்களே பிரிக்கத் தொடங்கினர். வேறு வழியின்றி சுப்பையாவின் மனைவியும் புத்தகங்களை வெளியே அடுக்கத் தொடங்கியிருந்தாள். ஆனால் அவள் வாய் மட்டும் ஓய்ந்திருக்கவில்லை. சுப்பையா பொருட்களை ஏற்றிச் செல்ல ஒரு வாடகை வண்டியைப் பிடித்து வர தனது டிவிஎஸ் 50யில் கிளம்பினார். இரைந்து கிடந்த புத்தகங்களை அடுக்கி சணலால் கட்டிய சுப்பையாவின் மனைவிக்கு நாங்களும் உதவி செய்தோம். அவளுக்கருகே ஒரு கலர் புத்தகம் தரையில் கிடந்தது. மேஸ்திரி அதை நோட்டமிட்டவாறு சுற்றி வந்தார். சுப்பையாவின் மனைவி மேஸ்திரியை  மார்கழி மாத நாயுடன் ஒப்பிட்டு ஒரு செவி கூசும் வசவைக் கொட்ட அவர் தெறித்து ஓடினார். அவள் புத்தகங்களைக் கட்டி முடிப்பதற்கும் சுப்பையா மூன்று சக்கர லோடு ஆட்டோ வண்டியை அழைத்து வருவதற்கும் சரியாய் இருந்தது. புத்தகக் கட்டுகளை வண்டியில் ஏற்றுவதற்கு நாங்கள் உதவி செய்ததோடு அவ்வண்டியைப் பின்தொடர்ந்தும் சென்றோம். சுப்பையா டிவிஎஸ் 50 யில் வர அவர் மனைவி லோடு ஆட்டோவின் பின்னால் ஏறி வந்தாள்.

 சுப்பையாவுடைய வீடு காமராஜபுரத்தில் இருந்தது. திண்ணை வைத்த ஓட்டு வீடு. உள்ளே தாழ்வாரத்தில் சாக்குகளை வரிசையாய் விரித்த சுப்பையாவின் மனைவி இம்முறை எங்களிடம் உரிமையோடு வேலைகளை ஏவினாள். பெரும்பான்மையான புத்தகக் கட்டுகளை நாங்களும் லோடு ஆட்டோ ஓட்டுநரும் இறக்கி வைத்தோம். சுப்பையா பக்கத்திலிருந்த பெட்டிக் கடைக்குச் சென்று பீடி வாங்கி புகைத்துக் கொண்டிருந்தார். அதைப் பார்த்ததும் எரிச்சலுற்ற அவர் மனைவி “பாருங்க இந்த அநியாயத்த எங்கேயிருந்தோ புள்ளக வந்து உதவி பண்ணுதுக இந்தக் கேணமாடு போயி பீடி குடிச்சிக்கிட்டுருக்கு” என்றாள். ஓட்டுநருக்கு வாடகையைத் தந்து அனுப்பியவள் விடைபெற்ற எங்களை திண்ணையில் அமரச் சொன்னாள். வீட்டுக்குள் இருந்து ஒரு தட்டில் முறுக்கும் அதிரசமும் எடுத்து வந்து சாப்பிடச் சொன்னவளின் குரல் அவ்வளவு நேரம் வசவுகளைப் பொழிந்த குரலாய் இல்லை. சொம்பில் நீரருந்தும் போது தண்ணீர் என் சட்டையில் சிந்தியதைக் கவனித்தவள் “சும்மா வாய் வைச்சுக் குடி தம்பி” என்றாள். பிறகு எங்களிடம் இரும்புக் கை மாயாவியின் இரண்டு புத்தகங்களைக் கொடுத்து “இது மாதிரி சித்திரக் கதைகள் தான் படிக்கனும் மத்ததெல்லாம் பெரிய ஆளுக படிக்கிறது சரியா?” என்றாள். மனோகரன் தன்னிடம் ஐந்து ரூபாய் தான் உள்ளதெனச் சொன்னதற்கு “அடச் சும்மா வைச்சுக்கய்யா” எனக் கடிந்துகொண்டாள்.

நாங்கள் வழக்கம் போல ஒவ்வொரு சனிக்கிழமையும் சுப்பையாவின் வீட்டுக்கே சென்று காமிக்ஸை வாங்கி வந்தோம். அப்போது சுப்பையாவின் வாடிக்கையாளர் நாங்கள் மட்டுமே. எங்களை ஒவ்வொருமுறை காணும்போதும் சுப்பையாவின் மனைவி பெரியாஸ்பத்திரிக்கு வெளியே ஒரு தள்ளு வண்டியில் கடையைப் போடுமாறு சுப்பையாவிடம் சொல்ல ஆரம்பிப்பாள். அது செவிகளிலே விழாததைப் போல் சுப்பையா நடந்து கொள்வார். பேச்சு கொஞ்சம் கொஞ்சமாய் வசவாய் உருமாறும். எதற்கும் சுப்பையா அசைந்து கொடுக்காதவராய் திண்ணையில் பீடி புகைத்துக் கொண்டிருப்பார். அவள் அடுக்களையிலிருந்து அரிவாள்மணையுடன் ஓடி வந்து சுப்பையாவின் குரல்வளையில் வைத்து “அறுத்துப் புடுறேன் உன்னைய” எனக் கத்துவாள். சுப்பையாவோ மனைவியின் எதிர் திசையில் வாயைக் கோணிக் கொண்டு புகையை ஊதுவார். பிறகு “இந்த எளவெடுத்தவனோட வாழ்ந்தது போதும் பேசாம நான் சாகுறேன்” என அரிவாள்மணையைத் தன் குரல்வளையில் வைத்து மிரட்டுவாள். அப்போது அவளது விழிகள் பிதுங்கியபடி கபாலக்குழிக்குள்ளிருந்து வெளியே விழுந்துவிடுவதைப் போல் அச்சுறுத்தும். அந்நேரத்தில் அண்டை வீட்டார் ஓடிவந்து அவளைக் கடிந்து கொள்வர். அவளும் அரிவாள்மணையைத் தூக்கி ஓரமாய் வீசி விட்டு வீட்டிற்குள் செல்வாள்.

 அக்கொலை மிரட்டலை முதன் முறைக் கண்ட போது நாங்கள் செய்வதறியாது பதைபதைப்புடன் நின்றோம். பிறகு வழமையான அக்காட்சியை நாங்களும் இயல்பாய் எடுத்துக் கொண்டோம். அதற்கு அருகிலிருந்த பெட்டிக் கடைக்காரரும் ஒரு காரணம். முதல் முறை நாங்கள் மிரண்டு போய் அக்கடைக்குச் சென்று இளைப்பாறும் விதமாய் ஒரு பன்னீர் சோடா வாங்கி அருந்தினோம். எங்களின் படபடப்பைக் கவனித்த கடைக்காரர் “என்ன தம்பிகளா பயந்துட்டீகளா?” என்றார். நாங்கள் தலையசைக்க “இது வழக்கமா நடக்குறது தான். இந்த சண்டைக்கெல்லாம் வெளியே சொல்ற காரணம் சும்மா ஒரு பேச்சுக்கு தான்யா. பாவம் பதினைஞ்சு வருசமாச்சு கல்யாணம் பண்ணி. அவளுக்கும் ஒரு புள்ள குட்டி துணைக்கு இல்ல. நல்ல மனுஷி. அவன சகிச்சுக்கிட்டு இருக்கா. சுப்பையாவும் நானும் அஞ்சாவது வரைக்கும் ஒன்னாதான் படிச்சோம். இன்னொரு விரியனைத் தொட்டாதான் அவனுட்டு சீறும். அவன் கல்யாணம் வேணாம்னு தான் இருந்தான். அவுக அப்பாரு தான் வலுக்கட்டாயமா பண்ணி வைச்சாரு. என்ன பண்றது?” என்றார். எங்களுக்கு ஏதோ அரைகுறையாய் புரிந்தது. அவர்களுக்குக் குழந்தைகள் எதுவும் இல்லையென்பதை அப்போது தான் உணர்ந்தோம்.

 ஒவ்வொரு முறை நாங்கள் சுப்பையாவின் வீட்டுக்குச் செல்லும் போதும் அவரது மனைவியே எங்களை வரவேற்று காமிக்ஸை எடுத்துத் தருவாள். மனோகரன் இரும்புக் கை மாயாவியை முழுதாய் முடித்து விட்டு முகமூடி வீரர் மாயாவிக்குத் தாவியிருந்தான். நானும் அண்மை நாட்களில் டெக்ஸ் வில்லரை வாசிக்கத் தொடங்கியிருந்தேன். அனைவரிடமும் என் பெயரை கண்ணா ‘ஐயனார்புரத்து ரேஞ்சர்’ என்றே சொல்லித் திரிந்தேன். காமிக்ஸை வாசிக்கும் போது உற்சாக மிகுதியில் ரோல் கேப் துப்பாக்கியைச் சுடும் என் சேட்டையை மட்டும் மனோகரனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. சுப்பையா கடையைக் காலி செய்து மூன்று மாதங்களுக்கு மேல் ஆகியிருந்தது. எங்களைக் கண்டாலே மனைவியின் வசவுக்குப் பயந்து அவர் வெளியேறி விடுவார்.

 அவ்வருட ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை விடுமுறை வந்தது. எல்லாக் கடைகளிலும் ஒலிபெருக்கிகள் அலறியவாறிருந்தன. அதிசயமாய் அன்று சுப்பையா எங்களைப் பார்த்து ஓடவில்லை. அவரது மனைவி சாமி படங்களுக்கு முன்பு கொஞ்சம் புத்தகங்களுக்கு சந்தனப் பொட்டு வைத்துக் கொண்டிருந்தாள். அதில் ‘இன்ப வேட்கை’ எனும் புத்தகமும் இருந்தது. வேட்கை மிகுதியில் வாயைப் பிளந்திருந்த பெண்ணின் நெற்றி முழுதும் சந்தனப் பொட்டு அலங்கரிக்கப்பட்டிருந்தது. நானும் மனோகரனும் கள்ளத்தனமாய் சிரித்துக் கொண்டோம். அவனுக்கு சிரிப்பை அடக்கும் போது உடல் குலுங்கும். சுப்பையாவின் மனைவிக்கு எங்களின் கிண்டல் புரிந்திருந்தது. ஆனால் அவள் அதைக் கண்டுகொள்ளவில்லை.

  சுப்பையா சாமி படங்களுக்குத் தீபாராதனை காட்டிவிட்டு திருநீறு தந்தார். நாங்கள் நெற்றியில் பூசிவிட்டு காமிக்ஸ்களை வாங்கிக்கொண்டு கிளம்ப எத்தனித்தோம். சுப்பையாவின் மனைவி பொரியும் அவித்த கொண்டைக்கடலையும் தந்து திண்ணையில் அமர்ந்து சாப்பிடச் சொன்னாள். பின் சாம்பிராணி போடுவதற்காய் தூபக்காலில் கரித்துண்டுகளை இட்டு தீ மூட்ட முயன்று கொண்டிருந்தாள். மழையில் நனைந்திருந்த கரித்துண்டுகள் இன்னும் போதுமான அளவு உலர்ந்திருக்கவில்லை. அளவுக்கதிகமாய் மண்ணெண்ணெய் ஊற்றியும் தீப்பற்றவில்லை. “இந்தா அதை ஏங்கிட்ட கொடு” என்று வாங்கியபடி சுப்பையா தூபக்காலைத் தனது டிவிஎஸ் 50யிடம் கொண்டு சென்றார். வண்டிக்கருகே குந்தியவாறு பெட்ரோல் டேங்கிலிருந்து இஞ்சினுக்குச் செல்லும் டியூபைக் கழட்டி கொஞ்சம் பெட்ரோலை தூபக்காலில் விட்டார். பிறகு அனைத்தும் நொடிப் பொழுதில் நிகழ்ந்தேறியது. கரித்துண்டுகளுக்குள்ளிருந்த தீப்பொறிகிளம்பி டிவிஎஸ் 50 தீப்பற்றி எரிந்தது. சுப்பையா சுதாரிப்பதற்குள் அவர் கைலியிலும் தீப்பற்றியது. அவர் அலறியவாறு தெருவை நோக்கி ஓடினார். எங்கும் ஒரே காட்டுக் கூச்சல். நாங்கள் வெளியிலிருந்த தொட்டிக்கருகே ஓடிச் சென்றோம். ஆனால் தொட்டியில் நீரில்லை. அவரது மனைவியின் அலறல் சத்தம் நிச்சயம் போஸ்நகர் வரை கேட்டிருக்கும். மனோகரன் அவளிடம் போர்வையை எடுத்து வரச் சொல்லிக் கத்தினான். அவன் அய்யோ என்ற தனது அலறலை ஒரு நொடிப் பொழுது மட்டும் நிறுத்தி பேச்சற்று நின்றாள். போர்வைக்குத் தேவையிருக்கவில்லை. அதற்குள் சுப்பையா தானாகவே தெருவில் புரண்டு தீயை அணைத்திருந்தார். வழக்கம் போல் அன்றைக்கும் அவர் சட்டை அணிந்திருக்கவில்லை. இல்லையென்றால் தீ உடல் முழுதும் பரவியிருக்கும். இப்போது அண்டை வீட்டார் டிவிஎஸ் 50 ஐ நீரூற்றி அணைத்தனர். அதற்குள் அது முழுதாய் கருகியிருந்தது. சிலர் சுப்பையாவிற்கு தோள் கொடுத்து அழைத்து வந்து திண்ணையில் அமர வைத்தனர். இடுப்புக்குக் கீழே ஆங்காங்கே  தீயின் சூட்டில் தோலுரிந்து வெண்மையாய் ஆகியிருந்தது. சுப்பையா அம்மா அம்மா என அரற்றிக் கொண்டிருந்தார். “அய்யோ இப்படியாச்சே நான் என்ன பண்ணுவேன் எனக்கு ஒன்ன விட்டா யாரிருக்கா” என அவரது மனைவி அழுதவாறிருந்தாள். “ஒன்னும் பெரிய காயமில்ல” எனச் சுற்றியிருந்தவர்கள் ஆறுதல் அளித்தனர். பெட்டிக் கடைக்காரர் ஆட்டோவை அழைத்து வந்தார். சுப்பையாவை கைத்தாங்கலாய் அதில் ஏற்றி அமரவைத்தனர். பக்கத்து வீட்டுப் பெண் ஓடிச் சென்று கொடிக்கயிற்றிலிருந்த ஒரு வேட்டியை எடுத்து வந்து அவர் மனைவியிடம் நீட்டினாள். அவளதை சுப்பையாவின் தொடைகளின் மீது போட்டாள். பெட்டிக் கடைக்காரர் முன்னால் ஓட்டுநர் அருகே அமர ஆட்டோ பெரியாஸ்பத்திரிக்கு கிளம்பியது. உடன் வேறு சிலரும் தங்களது சைக்கிளில் உடன் சென்றனர்.

நாங்கள் அண்ணா சிலை வரையிலும் ஆட்டோவைப் பின்தொடர்ந்து சென்றோம். பிறகு அருள் கூல்டிரிங்ஸ் கடையைப் பார்த்ததும் சைக்கிளை ஓரங்கட்டினேன். எங்களுக்கு நெருப்பைத் தின்றது போல் பெருந்தாகமாயிருந்தது. இருவரிடமும் காமிக்ஸிற்காய் சேர்த்த பணமிருந்தது. ஆகவே ஆளுக்கொரு லெஸ்ஸியை வாங்கி ஓரே மூச்சில் அருந்தினோம். பிறகு தான் எங்களால் தெளிவாய் சிந்திக்க முடிந்தது. இருப்பினும் தாகம் தணிந்திருக்கவில்லை. மேலும் ஒரு லெஸ்ஸியை வாங்கி அதை மெதுவாய் கொஞ்சம் கொஞ்சமாய் உறிஞ்சிக் குடித்தோம். அப்போது மனோகரன் என்னிடம் அக்கேள்வியைக் கேட்டான். “நான் போர்வையைக் கேட்கும் போது அந்த அக்கா என்ன பண்ணுச்சுன்னு கவனிச்சியா?”. ஆம் அப்போது எனக்கது தெளிவாய் புலனாகியது. அய்யோ அய்யோ எனத் தலையில் அடித்துக் கதறிக் கொண்டிருந்த சுப்பையாவின் மனைவியிடம் மனோகரன் போர்வையை எடுத்துவரச் சொல்லிக் கத்தினான். அப்போது அவள் எதையோ கண்டு திகைத்தவாறு அலறுவதை நிறுத்தியிருந்தாள். எங்கள் பார்வை அனிச்சையாய் சுப்பையாவின் பக்கம் திரும்பியது. சுப்பையாவின் உடலில் கொஞ்சம் மட்டுமே ஒட்டியிருந்த கைலியும் எரிந்து சாம்பலாகிக் கொண்டிருந்த அத்தருணத்தில் தீயின் அனலில் சுப்பையாவின் குறி கிளர்ந்திருந்தது.

 பதினைந்து நாட்களில் சுப்பையா உடல் நலமடைந்து வீடு திரும்பியிருந்தார். ஒரு மாதத்தில் பெரியாஸ்பத்திரிக்கு வெளியே தள்ளு வண்டியில் புத்தகங்களை விற்கத் தொடங்கினார். அதன் பிறகு அவர்கள் வாழ்க்கையில் நிகழ்ந்தது தான் யாரும் எதிர்பாராதது. சுப்பையாவின் மனைவி அடுத்த வருடத்திலிருந்து வருடத்திற்கு ஒன்றென முத்து முத்தாய் மூன்று பிள்ளைகளைப் பெற்றெடுத்தாள்.

Previous articleஎப்பவும் போலத்தான்-காலத்துகள்
Next articleகுறி-எம். எம். தீன்
சித்ரன்
சித்ரனின் முதல் சிறுகதைத் தொகுப்பான ‘கனாத்திறமுரைத்த காதைகள்’ 2018 ஆம் ஆண்டு யாவரும் பதிப்பாக வெளிவந்தது. அத்தொகுப்பு 2018ஆம் ஆண்டு சிறந்த சிறுகதைத் தொகுப்புக்கான த.மு.எ.க.ச விருதையும், முதல் சிறுகதைத் தொகுப்புக்கான க.சீ.சிவக்குமார் நினைவு விருதையும் பெற்றது. இரசவாதத்தைக் கதைக்களமாய் கொண்ட அவருடைய ‘பொற்பனையான்’ நெடுங்கதை அக்டோபர் ‘சிறுபத்திரிகை’ இதழில் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.