குறி-எம். எம். தீன்

வீனாவின் சிறு கைப்பையில் இருந்த அலைபேசியின் அழைப்புஒலி சிணுங்கலாக அழைத்தது. அவள் கைப்பையைத் திறந்து அலைபேசியை எடுக்க மனமில்லாதவளாக இருந்தாள். மீண்டும் அழைப்பு வந்தது.யாரோடும் பேசும் மனோநிலை இல்லை. இப்போதெல்லாம் அடிக்கடி அப்படியொரு சுயவெறுப்பு மனதைப் பீடித்துக் கொள்கிறது. இந்த வாழ்க்கையில் எந்தச் சாரமும் இல்லை என்பதாகவே உணர்ந்தாள். எந்தப் பிடிப்பும் அர்த்தமுமற்ற இந்த வாழ்க்கையை ஏன் நீடிக்கணும் என்று சொல்லிக் கொண்டாள்.

மீண்டும் அலைபேசி அழைப்பு. அவனேதான். இந்த நேரத்தில் அவனிடம் என்ன பேச வேண்டியதிருக்கிறது. உப்புச்சப்பற்ற வார்த்தைகளில் அவன் அவளைக் கொஞ்சக்கூடும். முதலில் அது ருசியாகத்தான் தெரிந்தது. இப்போது அதுவும் சப்பென்ற கடைச்சாம்பார் போல ஆகிவிட்டது.

 அவன் நேரப்போக்கிற்கு நாமா கிடைத்தோம். இப்போதெல்லாம் நீ நீயாக இல்லை என்பான். எப்போதும் ஏதோ கஞ்சா குடித்தவள் போல இருக்கிறாய். இப்போதெல்லாம் விரல்களை நெஞ்சில் வைத்தபடி நீ என்னிடம் நெகிழ்ந்து பேசி இருக்கிறாயா சொல் என்பான். எப்போதும் வலதுகை விரல்களால் நெஞ்சை தொட்டபடி நேசமாய் பேசுவதை எப்படி கவனித்து இருக்கிறான். இப்போது அவனுக்கு என் பாசத்தை அள்ளி கொடுக்க வேண்டுமாம். என் உடலை எல்லாம் உருட்டி பார்க்க ஆசைப்படுகிறானாம். என் மார்புக் காம்புகளைப் இருவிரல்களால் பிடித்தபடி நடுநெஞ்சில் முத்தம் கொடுக்கணுமாம். எல்லாம் நல்லதாத்தான் இருக்கிறது. அதற்குள் பொய்யும் இளக்காரமும் பொதிந்துள்ளது என்பது தெரியாதா என்ன? தனக்குள் பேசித் தீர்த்தாள்.

 திருப்பியும் அழைப்பு வந்த போது அலைபேசி துடிப்பதைப் போல இருந்தது. அவனுக்கு என்னவாச்சும் ஆகி இருக்குமோ என்று மனம் கசங்கியது. அப்படில்லாம் இருந்தாலும் தன்னிடம் உடனே சொல்லப் போகிறானா என்ன, குமைந்தாள். மூச்சிவிடாமல் அடித்தது அலைபேசி.

 வேறு வழியில்லாமல் கைப்பை திறந்து அலைபேசியை உயிர்ப்பித்தாள். காதில் வைத்து எதிர்முனை பேசுகிறதா என்று பார்த்தாள். எந்தப் பேச்சுமற்று அமைதியாய் இருந்தது. அவளுக்குத் தெரியும் அவள் ஆர்வத்தில் முதலில் பேசுவாள் என்று எண்ணிக் கொண்டு இருப்பான் என்பது.. அவளும் தனது காய்ந்து போன தொண்டைக்குள் எச்சில் மிடறை விழுங்கியபடி மௌனமாக இருந்தாள்.

 “நவீ என்னாச்சு. ஏன் பேசமாட்டேங்கிற. எத்தன தடவ உன்னெ அழைக்கிறது”, என்றான்.

 “போதும் நிறுத்து ஓன் பசப்பை,” என்று திட்ட வேண்டும் போல இருந்தது. சட்டென திட்டவும் மனது வரவில்லை. இரண்டு வருடமாக அவன் தான் அவளின் ஆதர்சமாக இருக்கிறான். கலியாணமாகி இரு குழந்தைகள் உள்ளவன்தான். அந்த அக்காவுக்கு உடம்புக்கு முடியல. சிலசமயம் இவள்தான் அவன் வீட்டுக்குப் போய் எல்லா வேலைகளையும் செய்து வைத்துவிட்டு வருவாள். அவன் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அந்த இரண்டு புள்ளைகளும் அவளுக்கு பொறக்காத புள்ளைகளாகத்தான் உணர்கிறாள். 

 “ஆங், இன்னிக்கு பூரா ஒரே அலைச்சலா போச்சு. இப்பத்தா அலுத்து போயி ஊட்டுக்குள்ளே வந்தேன். செல்லு ஹேண்டபேக்குல இருந்துச்சி. அதான் சட்டுன்னு எடுக்க முடியல,” அவளின் கரகரத்த குரலில் பேசினாள்.

 “உன்ன பாக்கணும் போல இருந்துச்சி. அதான் கூப்டேன். நீ அமுதவாணி ஓட்டல் பக்கம் வாயேன்,” என்றான் அவன்.

  “இப்பத்தான் ஊட்டுக்குள்ளே வந்திருக்கேன். மூஞ்சி கைகால் கழுவிட்டு வந்து நா பேசுறேனெ,” என்றாள்.

  “வீடு முத்தம் தெளிக்காமல், கூட்டிப்பெருக்கி அள்ளாமல் இருண்டு போய் கிடக்கிறது. ‘ஒத்தக்கட்டெயா கெடந்துக்கிட்டு என்ன லோலு பட வேண்டியதிருக்கு. இந்த லெச்சணுத்துல நம்மள நம்பி எல்லாவளும் வந்திருதாளுவொ. பின்னெ அவளுவ எல்லாத்துக்கும் சேத்து வடிச்சிக் கொட்டிட்டு அவளுவளுக்கு என்னமும் காசு பாத்துக் கொடுக்க தெருத்தெருவா போக வேண்டியதிருக்கு. இதுல இவென் வேற வந்துகிட்டு பாக்கணும் போல இருக்காம். என்னத்த பாக்கப் போறானாம் இந்த நேரத்துல. என்னமோ அவென் மேல இருக்கிற பிரியக்கால தெரிஞ்சிக்கிட்டு என்னா பாடுபடுத்துறான், அவள் புலம்பிக் கொண்டே விளக்கினைப் போட்டு வீட்டைப் பெருக்கிக் கொண்டிருந்தாள்.

  வீடுன்னா என்னமோ பெரிய வீடுன்னு நினைக்க வேண்டாம். ஒரு பத்துக்குபத்து ஹாலும், ஒரு அடுப்படியும்தான். முன் அறையை பெருக்கி விட்டு மின்விசிறியை சுழல விட்டாள். அதன் காற்று சேலையை தாண்டி வயிற்றிலும், முதுகிலும் பட்டு ஒரு இதத்தை கொடுத்தது. ‘அப்பாடா’ என்று சேரில் அமர்ந்தாள். இந்த சேர் அவன் வாங்கிக் கொடுத்ததுதான். ‘அப்போ அவன் என்மேல எவ்வளவு ஆசையோட இருந்தான். எங்கிணயும் நிக்கவுட மாட்டான். யார்ட்டயும் போயி நின்னு காசு கேக்கக்கூடாதும்பான். இந்தா பாரு உன்ன ராணி மாரி வச்சிக்கிடுவேம்பான்,’ என்று எண்ணிக் கொண்டே கன்னத்தை தடவிப் பார்த்துக் கொண்டாள். கன்னம் கொஞ்சம் சொரசொரப்பாகி விட்டது போலிருந்தது. ஒரு தடவை கண்ணாடியில் முகத்தைப் பார்க்கலாம் போல இருந்தது. இப்போது வெளியே போகப் போவது இல்லையே. எதற்குப் பார்க்கணும். அவனை நம்பிப் போனால் இன்னும் அரைமணி.நேரம் கழித்து வந்தாலும் வருவான். இனி அழைத்தால் படுத்துவிட்டேன் என்று சொல்லிக் கொள்ளலாம்.

  தொலைக்காட்சியை உயிர்ப்பிக்க தூரஇயக்கியை அழுத்தினாள். ஒரு நல்ல பாட்டு போடமாடானா என்றிருந்தது. மோகன் படத்துல “குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டு கேக்குதா”, பாட்டு மனதில் தோன்ற அதைக் கீச்சுக்குரலில் பாடிக்கொண்டே திருப்பினாள். பழைய பாடல்கள் பாடியது சேனல்கள். அவன் அழைக்கமாட்டானா என்று அலைபேசியைப் பார்த்தாள். அமைதியாக இருந்த அலைபேசியை திட்டத்தோன்றியது. “சே இதென்ன செய்யும். அவன் அழைத்தால் உடனே போவணுமாக்கும்”.

 நெஞ்சின் மேல் உள்ளங்கைகளை வைத்துக்கொண்டு முகத்தை சுழித்துக் கொண்டாள். ‘மைதிலிக்கு என்னா. அவளுக்கு கிடைச்சிருக்கிற பையன் அழகாக இருந்தான். அழகுன்னா அப்படி ஒரு அழகு. அவளைத் தேடி சரியா சாய்ந்திரம் 6 மணிக்கு அவள் சொன்ன இடத்திற்கு வந்து விடுவானாம். அவளைக் கொஞ்சித்தான் தீர்க்கிறானாம். அவளும் அவனுக்காக ஓடியாடிக்கிட்டே இருக்காளாம். அவனுக்கு ஒரு பிரேஸ்லெட் வாங்கப் போறாளாம். சீ, கழுதை வேண்டாத வேலை பார்க்கிறாள். அவள்ட்ட சொல்லியாச்சி. எந்தப் பொட்டை சொல்றதைக் கேட்குது. ஒரு போக்குல போயி எல்லாத்தையும் இழந்துட்டு வாயிலயும் வயித்துலயும் அடிச்சிக்கிட்டு ஓடி வந்து அழுவுங்கள். நமக்குத்தான் மனசு கேக்க மாட்டேங்குது’.

அவள் வாழ்க்கையிலும் நடக்காததா என்ன.? வேம்புலி வாத்தியாரோட ஆட்டபாட்டங்களுக்கு போயிட்டு ராத்திரிக்கு சங்கரன்கோவில் பஸ்ஸுல ஏறும் போது அவனும் அடுத்த சீட்டில் அமர்ந்து கொண்டு வந்தான். அவனும் பாளையங்கோட்டையில இருக்கிறதா சொன்னான். அவனோட அம்மா ஊரூதானாம் இருமன்குளம். ஒவ்வொரு வருசமும் கோவில் கொடையில அவள் ஆடுறத பாத்திருக்கானாம். ரவீனா ரிக்கார்டு டான்ஸுன்னு அழைப்பிதழ்ள போட்டிருந்திச்சாம். அதனால் தேரமானாலும் இருந்து பாத்துட்டு வாரானாம். “நீங்க ரவீனா தானே”, என்று அவளோடு பேச ஆரம்பித்து அவளையே சுற்றி வர ஆரம்பித்தான். இரவில் எங்கிருந்தாலும் அவளைத் தேடி ஓடி வந்திருவான். அவளது சுகம் அவனுக்கு தேவைப்பட்டது. அவளுக்கும் அவன் ஒருநாள் வராவிட்டாலும் தற்கொலை செய்யும் மனநிலைக்குப் போய் விடுவாள். அவனுக்காக எல்லா ஊர்களுக்கும் ஆட்டத்திற்கு ஓடிக் கொண்டே இருந்தாள். பாதி ஊர்களுக்கு அவனையும் துணைக்கு அழைத்துச் செல்வாள். சம்பாத்யம் அனைத்தையும் அவனுக்காக செலவழித்தாள். பூர்வீக குச்சு வீட்டையும் விற்றுக் கொடுத்தாள். அவளுக்கு அவனோட பிள்ளை ஒன்றை வளர்க்க வேண்டுமென ஆசை. இவளாக திருமணம் செய்யச் சொன்னாள். அதுக்கும் நிறைய பணம் கொடுத்தாள். திருமணத்துக்கு பிறகு அவன் அவளை ஏறிட்டும் பார்க்கவில்லை. தூரத்தில் கண்டாலும் ஒதுங்கி ஓடிவிடுவான். கொஞ்ச நாளைக்கி முன்னாடி வரை எப்படி இருந்தான் அவன் எண்ணிப் பார்த்தாள். பொட்டைகளின் வாழ்க்கையில இதுல்லாம் சகஜம்தான் என்று மனசு சொல்லிக் கொள்ளுது. வேற ஆவப் போற காரியம் என்ன, அவள் சலித்துக் கொண்டாள்.

 அதற்குப்பிறகு அவள் அவனையே நினைச்சி தண்ணி அடிச்சி தூங்க முடியாமப் போயி ஒருவாரம் நினைவிழந்து தெருவும் ஆஸ்பத்திரியுமா கிடந்து சுயநிலைக்கு வர இரண்டு வருஷமாச்சி. அதுவரைக்கும் எச்சிக்கஞ்சியும், பிச்சையும்தான் அவள் வாழ்க்கை. நினைத்துப் பார்த்தபோது கண்ணில் நீர் அரும்புகிறது.

    “சே, காத்தக்குட்டியை குத்தம் சொல்லக்கூடாது. அவன் எனக்கு ஆட்டம்பாட்டம் சொல்லித்தா நான் உங்கூடயே இருக்கேன்னு சொன்னான். நான்தான் இந்த ஆட்டம்பாட்டமெல்லாம் ஒரு வாழ்க்கையா அது என்னோட போவட்டும்னு சொல்லிட்டேன். அவன் ஆசையில மண்ணை அள்ளிப் போட்டேன். அவன் பதிலுக்கு என் ஆசையில தூசிமண்ணை அள்ளி பரத்தி விட்டுட்டு போய்ட்டான். இப்போதும் காத்தமுத்துவை எங்காவது பார்க்க மாட்டோமான்னு இருக்கிறது. குறி அறுத்து இருந்தால் அவன் அவளோடு இருந்திருக்க்கூடும். அவளுக்கும் குறி மாற்று சிகிச்சை செய்து கொண்டு முழுப் பெண்ணாக மாறி விட எவ்வளவு ஆசை இருந்தது. ஒருவேளை காத்தமுத்து ஓடிப்போனாலும், எப்போதும் எங்கன்னத்தை கிள்ளிவிட்டு போகும் பாசக்கார புல்லட் பூதத்தான் என்னை கொஞ்ச நாள் வச்சிருப்பான் தான். எல்லாத்துக்கும் தேரம்காலம் வரணுமில்லா. நீர்த்து போன எச்சிலை விழுங்கினாள்.

 தீவிர ஆசையோடு அவள் குறி மாற்றுக்காக முயற்சி செய்து கொண்டிருந்த போது, அவளோடு சேர்ந்த சிலபொட்டைகள் அவளைப்பயம் காட்டியதும், பெரும் பணம் செலவாகும் என்பதாலும் அவளால் செய்ய முடியாமல் போய்விட்டது. குறி மாற்றுவது முழுப்பெண்மையின் அடையாளம்தான். அவள் அதைச் செய்திருந்தால் அவளை அது வேசியாக்கி இருக்கவும் கூடும்..

 அவன் இன்னும் அழைக்காமல் இருந்தது கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. இனி அழைக்க மாட்டான் என்று சொல்லிக் கொண்டாள். தொலைபேசியில் ஏதோ ஒரு படம் குறைந்த சத்தத்தில் ஓடிக் கொண்டிருந்தது.  

 வெளியில் காற்று பரம்பரமென்று அடித்துக் கொண்டிருந்தது. சன்னல் கதவின் கொக்கி வளையம் காற்றில் ஆடி ஒரு குருவியைப் போல கத்திக் கொண்டிருந்தது. ஜமுனா பொட்டை ஒருநாள் வீட்டுக்கு வந்த போது. இப்பம் என்னடி குருவி கத்துதுன்னா.” உத்துப் பாத்தா இரும்புக் கொண்டிதான் அது. இப்போவும் அதன் ஆடுஒலி ராத்திரிக்கு ஒரு குருவி அவளோடு இருப்பது போலவே தோன்றும். சிலசமயம் அது அவளோடு பேசிக்கொண்டிருப்பது போல இருக்கும். அவளும் அதற்கு பதில் சொல்லுவாள். இப்போது கொஞ்சம் அதிகமாகவே சத்தமிடுகிறது. அது அவளைத்தேடி காணாமல் ஆர்ப்பாட்டம் பண்ணுகிறது போல இருந்தது.

காத்தக்குட்டி சத்தமும் பொம்பளைச் சத்தம் போல கீச்சுக்குரலில் இருக்கும். அந்தக்குரல் அவளுக்கானது போல இருக்கும். அவனை அவளோடு சேர்த்து வைத்ததும் அதுதான். ஆனாலும் அவன் சீனித்துரை போல ஏமாற்றுக்காரன் அல்ல. சீனி அவளோடு பழகி படுத்துக்கிடந்து, அவள் வீட்டில் சாப்பிட்டுவிட்டு கைப்பையில் அவள் வைத்திருந்த செல்போனையும், 2000 ரூபாய் பணத்தையும் எடுத்துகிட்டு போயி இருண்டு நாள் கழிச்சி, “நவீனா இப்போ நான் திருப்பூர்ல வேலைக்கு வந்திருக்கேன். உன் செல்லையும் பணத்தையும் எடுத்துட்டு வந்துட்டேன். என்னையெ தேடாதே.” என்று சொல்லி ஏமாற்றியவன் கிடையாது. அவள் வைத்திருக்கும் பணத்தை அடித்துவிட்டு போக வேண்டும் என்பதற்காக அவளோடு பொய்யாக உறவாடியாது கிடையாது. எத்தனை நெசமாக, என்னை இழுத்து தன் நெஞ்சோடு வைத்துக்கொள்வான் காத்தக்குட்டி. அதுதான் இப்போதும் காத்தக்குட்டியைத் தேடச் சொல்கிறது..

தலையில் கைகளை வைத்துக் கொண்டு வெறும் தரையில் படுத்தாள். மூன்று நாட்களுக்கு முன்பு பேய்க்குளத்தில் முண்டன்சாமி கோவில்கொடையில் ஆட்டத்திற்கு முன்பு வாங்கிக்கொடுத்த நாட்டுச் சரக்கின் வீர்யம் இன்னும் இருந்தது. தலைவலியோடுதான் இன்றைக்கு வந்த லாவண்யா பொட்டைக்கு கடைகளில் காசு சேர்த்துக் கொடுத்து அனுப்பி வைத்தாள். வீட்டுக்கு வெளியே இருக்கிற அரசமர இலைகளின் சபதம் மொறுமொறுத்தன. நிலாவெளிச்சம் தெருவாசலில் பால் கொட்டியது போலக் கிடந்தது. அவன் தொலைக்காட்சியின் சேனலை மாற்றினாள். மைசூர் பிருந்தாவனத்தில் ஜெமினி ஓடியபடி பாடிக் கொண்டிருந்தார். ஜெமினி அந்தக்காலத்தில் காதல் மன்னனாம். அவளுக்கு அந்தச் சொல் பிடிக்காதுதான். ஆனாலும் சேனலை மாற்றவில்லை. அடுத்தப் பாடல் நல்ல பாடலாக வரக்கூடும் என்றிருந்தாள்.

காத்ததக்குட்டியுடன் மணிமுத்தாறு அணை போயிந்தபோது அவன்தான் அவள் எதிர்பாராத வேளையில் அவள் கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்தான். அந்த முத்தத்தின் சுவை இப்போதும் அவளால் உணரமுடிகிறது. அணையின் மேல் இருக்கும் கற்பாறைகளின் அருகில் மறைவில் அது நிகழ்ந்தது. அங்கே போகும் போது அவள் ஆண்கள் உடையில்தான் போயிருந்தாள். அப்போது வீட்டில் தனது பெண்மை பதிய வைக்க முயன்று அடி உதைகளில் தோற்றுப் போயிருந்தாள். அந்த முத்தம் அவளது முழு பெண்மை வெளியே கொண்டு வந்தது. அதுதான் பிறந்த வீட்டை விட்டு வெளியேறவும் காரணமானது. 

அந்தக்கணம்தான் அவள் மனம் எல்லா அவமானங்களையும் சகித்துக் கொண்ட இடம். சகோதரர்களின் கடும் கோபத்தை தணிக்க முடியாமல் வீட்டை விட்டு வெளியேறி சென்னைக்கு ரயில் ஏறி என்னவெல்லாமோ வேலை பார்த்து தன்னை பெண்ணாக்கிக் கொண்ட காலம். சென்னையின் ரயில்நிலையங்களில் முழுபெண்ணாக மகிழ்வோடு உலவினாள். பலரும் அவளை அங்கீகரித்த பின்பு அந்த பாலியல் வாழ்வின் தொல்லைகளை தவிர்க்க விரும்பினாள். நல்லவேளையாக. ரயில் அவளை பல இடங்களுக்கும் செலவின்றி அழைத்துச் சென்றது. எத்தனை நெடிய பயணங்கள், இருளுக்குள் தேடிய வாழ்க்கை, கருணையற்ற உலகம் கசக்கி போட்டுவிட்ட காலங்கள், அடிகள், அவமானங்கள் எல்லாம் அவள் மனதிற்குள் ஒரு பயணம் போல கடந்து போனது. எழும்பூரில் அவளை உரித்து பார்த்த கிழவனின் சேட்டையை நினைத்தால் இப்போதும் நெஞ்சம் கனத்து விடுகிறது. அழகான ரலீனாவுக்கு சரக்கு கொடுத்த.அவளை குற்றுயிராக்கி நடைமேடையில் போட்டுப் போனதை எண்ணவே பயமாயிருக்கிறது. பெருங்கஷ்டங்களை எதன்பொருட்டு யாரிடம் சொல்லமுடியும். படுத்தபடி அவளது சிந்தனைகள் எங்கெல்லாமோ போய்க் கொண்டிருந்தது.

   மனது கனத்தது போல இருந்தது. அலைபேசியை எடுத்துப் பார்த்தாள். அவன் அழைப்பு இல்லை. அவன் அழைக்காதது நல்லது என்றே தோன்றியது. அடுத்த கணத்தில் அவன் ஏன் அழைக்கவில்லை. அழைத்திருக்கலாமோ என்றும் தோன்றியது. இப்போது ரத்னா தியேட்டரில் படம் பார்த்துக் கொண்டிருப்பானோ. எவ்வளவு நாளாயிற்று. அவனோடு படம் பார்த்து. தென்காசி பரதன் தியேட்டரில் ஏதோ ஒரு படம் பார்த்தது. இப்போது அவளை அழைத்து செல்வது அவனுக்கு கூச்சமாகக் கூட இருக்கலாம். “ம்ம், பார்த்துவிட்டு போகிறான். போவட்டும் மாராசன்.” என்று நினைத்துக் கொண்டாள்.

 அவன் நினைவை விட்டு அகல. திரும்பவும் எழும்பூர் ரயில்நிலைய சம்பவம் நினைவில் வந்து நின்றது. தொண்டைக்குள்ளிருந்து காறலை காறி துப்ப எழுந்தாள். ரலீனாவின் அழகான முகம் அவள் கண் முன் வந்து நின்றது. தினமும் ஷேவிங் தேவைப்படாத முகம் அது. ஒன்றிரண்டு பூனைமுடிகளும் அவளின் கேரட் கலருக்கு அழகாத்தான் இருக்கும். பெரிய பெரிய ஆட்களெல்லாம் அவளது வாடிக்கைதாரர்கள்.

பின்னாளில் வியாதி வந்து சின்னாபினமாகி ரயிலில் விழுந்து இறந்து போனதை இன்னொரு பொட்டை சொல்லி அழுதது ஞாபகத்தில் வந்தது. “ஆமா பொட்டைகளுக்கு வயதான காலத்தில் எல்லாமே மாறிப் போய்விடுகிறது. தினசரி மேக்கப் பண்ண முடியாமலும், நல்ல உடைகளில் திரிய முடியாததும், தங்கவும், திங்கவும் இடமிற்றுப் போவதும் எவ்வளவு பரிதாபமானது. தன்னை எண்ணிப் பார்த்தாள். திம்மராஜபுரத்து தம்பிக்கு எவ்வளவு பணம் கொடுத்தாலும் அவன் கடைசி காலத்தில பார்க்க மாட்டான் என்றே தோன்றியது. சரி இவனும் அம்புட்டுக்கு அம்புட்டுதான். நம்மகிட்ட பணமிருந்தா அவன் புள்ளைகளைப் பார்க்கலாம். ஒண்ணுமில்லாமப் போச்சுன்னா அவளால் என்ன செய்ய முடியும்.   

 அவள் தன் எதிர்காலத்தை எண்ணிப் பார்த்தாள். அவளுக்கென்று யார் இருக்கிறார்கள். பொட்டையெல்லாம் கெடையில விழுந்திரக்கூடாது. அப்படி விழுற மாதிரி தெரிஞ்சா ஏதாவது மாத்திரை, மருந்து தின்னு செத்துப் போவணும். இல்லாட்டி லோலு பட்டுத்தான் சாவணும்,” கனகா அக்கா சொன்னது நெஞ்சத்துல நின்னுகிட்டே இருக்கு. கனகாவும் கடைசி காலத்துல தூக்க மாத்திரை தின்னுதான் செத்துப் போனாள். நவீனாவிற்குள் சிந்தனை கிளர்ந்து கிளர்ந்து எழுந்தது.

 சேரில் உட்கார்ந்து டிவியைப் பார்த்தாள். யாரோ இரண்டு பேர் எதிர்எதிராக உட்கார்ந்து எதையோ பேசிக் கொண்டிருந்தார்கள். என்ன பேசுகிறார்கள் என்று கூர்ந்து கேட்டாள். புதூசா நடமாடுற வியாதியைப் பத்தி பேசுறாங்க போலிருக்கு. ஆனா இங்கிலீஷ்ல பேரைச் சொல்லி பேசுனா எவனுக்கு விளங்கும் என்று சொல்லிக் கொண்டாள். அப்படியாவது ஒரு வியாதி வந்து ரெண்டு நாளுல அடிச்சிட்டு போய்ட்டா நல்லா இருக்கும் போல.

 தொலைபேசியை மேலும் கவனிக்காது இருந்தாலும் அதை அணைக்க விரும்பவில்லை. இப்போது தனியாக படுத்துக் கிடந்தாலே என்னவெல்லாமோ தோணிக்கிட்டே இருக்கு. டிவி மட்டுந்தான் கூட ஒரு ஆளு பக்கத்துல இருந்து பேசிக்கிட்டு இருக்கிற மாதிரி இருக்கு. தூக்கம் வராத சில நாட்களில் விடியவிடிய ஓடிக்கொண்டே இருக்கும்.

 அவள் நடுஜாமத்தில் தூக்கம் கலைந்து எழுந்து சிறுநீர் கழித்து விட்டு மீண்டும் தூங்குகையிலும் அது ஓடிக் கொண்டே இருக்கும். பலதையும் நினைச்சிக் கொளம்பாம தூங்கு என்று அவள் சொல்லிக் கொண்டாலும் மீண்டும் மீண்டும் மனது எங்கெல்லாமோ சென்றபடியேதான் இருக்கிறது.

 இப்போது அவன்கூட இருந்தால் ரொம்ப நல்லாயிருக்கும் போல இருக்கிறது. காலையில் எழுந்து, ஏன் ராத்திரி வரலை என்று கேட்கலாம் என்று தோன்றியது. மணியைப் பார்த்தாள். 12 1/2 ஆகியிருந்தது. எழுந்து வெளியே.ஒரு நடை போகலாம் என்று எண்ணினாள். கூட சேர்ந்த பொட்டைகள் பேருந்து நிலையத்தில் நின்றபடி கும்மி அடித்துக் கொண்டிருப்பார்கள். எல்லாவளும் தண்ணீ போட்டிருப்பாளுவொ. அதுனால ராவு விடிய விடிய கூடி சேர்ந்து கூத்து அடிக்காளுவெ. அடிச்சிட்டு போவட்டும். நாம அடிக்காத கூத்தா என்று தன்க்குள் சமாதானம் சொல்லிக் கொண்டாள்.

 காலையில் வேலு அண்ணாச்சி சொன்னது ஞாபகத்திற்கு வந்தது. வேலு அண்ணாச்சி அவளை ஒருநாளும் “சீ” போன்னு சொன்னதில்லே. எட்டுக்கு மேல வாம்ப்பாரு. எட்டுக்கு அடுத்த நம்பரைச் சொன்னால் கூட அது அவளைக் காயப்டுத்தும் என்று எண்ணுகிறவர். இப்படியான மனிதர்கள் பொட்டைகள் உலகத்தில் ரொம்ப குறைவுதான். எல்லோரும் அவளை வா போன்னுதான் பேசுறாங்க. அண்ணாச்சி போல ஒன்றிரண்டு பேருதான் அப்படி இருக்காங்க.

 “காலம்ப்ற ரெண்டு பேர் வாங்க. அம்மாவுக்கு திதி. சேலை சட்டையெல்லாம் எடுத்து வச்சிருக்கேன். நம்ம ஊட்டுல சாப்புடணும். கண்டிப்பா வந்திரணும். நீங்க வந்து புள்ளைகளை ஆசீர்வதிக்கணும் அதுதான் கூப்பிடுதேன். கட்டாயம் வரணும்” என்று சொல்லியிருந்தார். ரம்யா பொட்டையும் துணிமணிக்கு கஷ்டப்படுதா, அவளைக் கூப்பிடலாம் என்று எண்ணினாள்.

 ரம்யா நல்ல பிள்ளைதான். ராத்திரிக்கு எல்லா பொட்டைகளுடனும் போய் விட்டு பின்னிரவில் உறக்கமின்றி திரும்பும் அவள் மற்றவர்களைப் போல எந்த ஆணையும் வளைத்து போட்டு விடும் முன்முனைப்பின்றி ஒதுங்கி அவர்களோடு நின்று விட்டு அவர்கள் கொடுப்பதை தின்று விட்டு திரும்புபவள். உள்ளமும் உடலும் வெந்து போய் ஒவ்வொரு நாளும் அழுது தீர்ப்பாள். தன் வாழ்வில் கொஞ்ச நாளாவது மற்ற பொட்டைகள் போல ஒருவனை ஆகர்சித்துக் கொண்டு அவனைத் தேடியும் ஓடியும் திரிய ஆசை. கொஞ்ச நாளில் அவன் விட்டுட்டு போனாலும் பரவாயில்லை என்று சொல்லுவாள். பின்ன ஏண்டி ராத்திரியான கட்டோ கட்டுன்னு பஸ்ஸ்டாண்ட்கு போறேன்னு கேட்டா, ஏதோ ஒரு மனசு என்ன இழுத்துட்டு போவுதுங்கிறாள். ஒதுங்கி வாழும் சின்ன பெண் போல ஒரே ஒருத்தனோட வாழ ஆசைபடுகிறாள். என்னடி சொல்றே, இன்னும் நாள் கெடக்கிடி உனக்கு, உன் அழகுக்கு ஒருத்தன் வராமலா போவான் என்று முதிர் கன்னிகளுக்கு ஆறுதல் சொல்வது போல சொல்லி வைப்பாள். அவளும் அந்த வார்த்தை ஆறுதலை தவிர வேறொன்றுமில்லை என்று எண்ணியபடி உம்மென்று இருப்பதை பார்ப்பாள். வருத்தம் தோய, அந்த புள்ளையயும் வுட்டுரக்கூடாதுன்னு மனது அடித்துக் கொள்ளும்.

 வேலு அண்ணாச்சிக்கும் அவளது அடக்கமான குணம் பிடிக்கும்.”ஏ புள்ள ரம்யா, உன்ன ரெண்டாவது கட்டிக்கவா”, என்று கேலியாகக் கேட்பார். தன்னையும் ஒரு பெண் போல அழைத்துப் பேசும் ரம்யா அந்த வார்த்தைக்காகவே அவரைத் தேடி வருவாள். யாரிடமிருந்தோ வரவேண்டிய வார்த்தை அவரிடமிருந்தாவது வருகிறதே என்று ரம்யா மனது மகிழ்ச்சியில் பொங்கி வழிவதை பார்க்கும் போது அவளுக்கு மகிழ்ச்சியாய் இருக்கும். ஒரு “பொய்” வார்த்தைக்காக ரம்யாவின் மனம் எவ்வளவு ஏங்குகிறது. படுத்திருந்த அவள் கண்களிலிருந்து சூடாக ஏதோ இறங்கியதைப் போல இருந்தது.

 காத்தமுத்து அவள் பக்கத்தில் படுத்துக்கொண்டு அவளைச் சீண்டி விளையாடுவது போலவும், அவன் குறியை அவள் கையில் திணிப்பது போலவும், அவள் சீயென சொல்லியபடி தள்ளி படுப்பது போலவும் பிரமை வந்தது. சே, அவன எண்ணி எந்த பிரயோஜனமும் கெடையாது, இனியால அவன் நம்மவனும் இல்லை, இனிமே எதுக்கு இந்த அசிங்கமான நெனப்பு, ஏ நவீனா, ஒழுங்கு மரியாதையா ஓங் காலத்த கழிக்கப் பாரு, என்று ஏதோ ஒரு மௌன அசரீரீ சொல்லியது போல் இருந்தது. அறையின் வெளிச்சமும் டிவி வெளிச்சமும் ஏதோ செய்வதைப் போல இருந்தது.

  மெல்லமாக எழுந்து ஓடிகொண்டிருந்த டிவியையும், குழல் விளக்கையும் அணைத்தாள். சட்டென அறை இருளைப் போர்த்திக் கொள்ள, கும்மிருட்டு வீட்டில் கவிந்தது. காதைத் தீட்டி கொண்டு ஏதும் கேட்குமோ என்று எண்ணியபடி படுத்திருந்தாள். பின்னிரவு ஆழ்ந்த மௌனத்தில் இருந்தது. அரச இலைகளின் கினுகினுப்பு கூட கேட்கவில்லை. கண்களை மூடப் பிரியமில்லாமல் ஒரு சாய்த்து படுத்திருந்தாள்.

 ஜன்னலின் ஓரத்திலிருந்த கெவுளி கீச்சென சத்தமிட்டது, அது அவளுக்கு நல்ல சகுனமாகத் தெரிந்தது.. அதைவிடவும் தான் வீட்டில் தனியாக இல்லை எனத் தோன்றியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.