பரிபூரணி- ஐ கிருத்திகா

மாலையிலிருந்து மழை பெய்துகொண்டிருந்தது. அடித்துக் கொட்டாத மென்மழை. சரக்கொன்றை மலர்கள் உதிர்வது போல உதிர்ந்து கொண்டிருந்த துளிகளின் மேல் பிரியம் கூடிப் போனது. தெருவிளக்கின் மஞ்சள் ஒளியில் நனைந்த துளிகள் மட்டும் கம்பி மத்தாப்பு போல ஒளிர்ந்தன.  

ஆசுவாசமாய் அமர்ந்து மழையை வேடிக்கை பார்த்து நாளாகிவிட்டது. சித்தி வீட்டுக்கு வந்ததில் அந்த சந்தர்ப்பம் அமைந்துவிட்டிருந்தது. சித்தி ஏழரைக்கெல்லாம் இரவு உணவை முடித்துக்கொண்டு திண்ணைக்கு அழைத்து வந்துவிட்டாள். மடியில் மல்லிகை மொட்டுகள் கனத்தன. கொல்லையில் பூத்தது. கிண்ணத்து நீரில் ஊறிய நாரை சித்தி ஊக்கால் சிறு சிறு இழைகளாகப் பிரித்தாள். பூக்கள் மேலும் கீழுமாய் நாரில் இணைந்ததில் சரம் நீண்டது. 

ரோஜாப்பூக்கள் சிதறியிருந்த புடவையில் மல்லிகைப்பூவின் வாசம். சூரியகாந்திப்பூ உடுத்திய புடவையில் ரோஜாப்பூக்கள்…….. சொன்னதும் சித்தி சிரித்து விட்டாள்.

” நான் சூரியகாந்திப்பூவா…. கேக்க நல்லாத்தான் இருக்கு.”

கட்டைவிரல், ஆள்காட்டிவிரலால் வலிக்காது பூவை எடுத்தவளுடைய முகத்தில் கனிவு. கழுத்து முறிபடாது தொடுக்கும் லாவகத்தன்மை வாய்க்கப் பெற்றிருந்தவளுக்கு அந்தக் கனிவு இயல்பான மஞ்சள் நிறம்போல முகத்தில் பரவிக்கிடந்தது. 

” ஒரு வாரம் தங்கற மாதிரி வா. அரக்கப்பரக்க ஓடக்கூடாது.” கண்டிப்பாகச் சொல்லிவிட்டாள். முதல் தூறல் போடும்போது கிளம்பும் மண்வாசம்தான் சித்தி. அது தனித்துவமான வாசம். அள்ளி முகரலாம் போலிருக்கும். வாயிலிட்டு விழுங்கி விடலாமென்றுகூடத் தோன்றும். அந்த அழகும், நெருங்கி அமர்ந்திருக்கும் போது எழும் வாசமும் இனம்புரியாத பரவசத்தை உண்டுபண்ணும். 

மழையைப் பார்க்க இதமாயிருந்தது. மழைச்சாரலுக்கு ஜன்னல் கதவை அறைந்து சாத்தும் நகரத்து நாகரீகத்தனம் இங்கு பலிக்காது என்பது போல் முற்றத்தில் மழை பெய்து ஓரங்களை நனைத்தது. திண்ணையிலிருந்து எட்டிப் பார்த்தபோது கூடல்வாய்நீர் ஒரு ஓரத்தில் தொங்கிய குழாய் வழியாக ஒழுகிக் கொண்டிருந்தது. சித்தி கெட்டியாகத் தொடுத்த சரத்தை தலையில் சூட்டிவிட்டாள். காதோரம் இழைந்த விரல்கள் சில்லிட்டன.

” நாப்பது வயசாச்சு அவளுக்கு. இன்னும் ஒரு முடிகூட நரைக்கல”  என்பாள் அம்மா. பாந்தமான உடலுக்கு அப்படித்தான் வாய்க்கும். ‘சித்தப்பா அப்படித்தான் வாய்த்தாரா……?’

கேள்வி சட்டென முளைவிட்டது.

“நல்ல மனுஷந்தான். என்ன முன்கோவம் ஜாஸ்தி. சட்டுன்னு பேசிடுவாரு. இவ மகராசி, சிரிச்சே  கடந்துடுவா. சின்ன வயசுலேருந்தே அப்படித்தான். அம்மாட்ட கூட ஓரொரு வார்த்த பேசுவா. அப்பாட்ட. இம்…..அவ்ளோதான். தலை அசையும். அதோட சரி. “

அம்மா சொல்லிக்கொண்டே போவாள்.

” மழ பேஞ்சா கரண்ட்டு போயிடும். நீ வந்த மாயமோ என்னவோ போகாம இருக்கு.” 

மஞ்சள் நிற காட்டன் புடவை உடலோடு ஒட்டியிருந்தது. இரு மார்புகளும் குவிந்த மொட்டுகள் போல் திரண்டிருந்தன. நாற்பதிலும் தளராத முலைகள். அளவான உயரத்திற்கேற்ற வடிவாம்சம். சித்தப்பா  சரியான பொருத்தம். ஃபோட்டோவைப் பார்த்ததுமே தாத்தா புருவம் உயர்த்திவிட்டதாக அம்மா அடிக்கடி சொல்வாள். 

” நல்ல ஜோடிப் பொருத்தம். அமைஞ்சா இப்படி அமையணும்” என்று கல்யாணத்துக்கு வந்தவர்கள் வாய் ஓயாமல் பேசினார்களாம். அம்மா நூலிழையளவு நேரம் கிடைத்தாலும் பெருமை பீற்றிக்கொள்வாள்.

கூடத்து சுவரில் நடுநாயகமாக சித்தி, சித்தப்பா சேர்ந்து நிற்கும்  ஃபோட்டோ. மின்னல் துணுக்கொன்று ஃபோட்டோவிலிருந்த சித்தியின் புன்னகையில் ஒட்டிக் கொண்டிருந்தது. அது பளீரென முகத்தை மிளிரச் செய்திருந்தது. சிரிக்காமல் போஸ் கொடுக்கும் அப்போதைய வழக்கத்தை உடைத்து சித்தி பற்கள் பளிச்சிட சிரித்துக் கொண்டிருந்தாள்.  சித்தப்பா அடர்ந்த மீசைக்குள் அதை ஒளித்து வைத்திருந்தார். 

அம்மாவும், சித்தியும் நாளொன்றுக்கு அரைமணி நேரமாவது பேசி விடுவார்கள். அப்படி என்னதான் பேசுவார்களோ….. வார்த்தை சிதறாத பேச்சு. அருகில் நின்று கேட்டாலும் காதில் விழாது.

” ஒங்கம்மா சித்திகிட்ட பேசுறாளாக்கும்.”

அப்பா உதடு சுளித்துக் கிண்டலடிப்பார்.  

” பொம்பளைங்களுக்குள்ள ஆயிரமிருக்கும். அது என்னாத்துக்கு ஒங்களுக்கு…..”

அலைபேசியை காதிலிருந்து எடுத்து இணைப்பைத் துண்டித்து ஸ்கிரீனை முந்தானையால் துடைத்துவிட்டு அம்மா இதைச் சொல்வாள். 

வானத்தில் வெள்ளிக் கோடொன்றை இழுத்தது போல பளீரென்று வெளிச்சம்.  முற்றம் கருங்குகைக்கான திறப்புபோல வாய்பிளந்து கிடப்பதாய் நினைத்துக்கொண்டு  சிறுவயதில் 

பீதியடைவதுண்டு. இப்போதும் சட்டென அந்த எண்ணம் எழுந்தது. மின்னல் தெறிப்பு சற்று ஆறுதலாயிருந்தது. சித்தி கூடத்தில் பாய் விரித்துப் போட்டாள். 

” மணி ஒம்போதுதான் ஆவுது. சும்மா படுத்துக்கிட்டு பேசிக்கிட்டிருப்போம்.”

இரண்டு தலையணைகளைத் தலைக்கு ஒன்று காலுக்கு ஒன்றாய் போட்டாள். சோப்பு வாசனையோடு மொறுமொறுத்த போர்வைகளைப் பக்கவாட்டில் வைத்தாள்.

” படுத்துக்கடி…..”    

தலைமாட்டில் ஒரு செம்பில் நீர் வைத்து விடிவிளக்குப் போட்டு விளக்கணைத்து நேர்கோடாய் படுத்துக்கொண்டாள். அம்மாவிற்குப் பிறகு பத்து வருடங்கள் கழித்துப் பிறந்தவள். வயது வித்தியாசம் அதிகமென்பதால் சண்டை வந்ததேயில்லை என்பாள் அம்மா. சித்தியிடம் குரல் மாற்றி  ஒருசொல் சொல்லிவிட யாருக்குத்தான் மனசு வரும். 

” தூக்கம் வந்தா தூங்கு பாப்பா…..”  கதகதப்பான அருகாமையில் பெரும்பாலும் பாப்பாதான். வானதி பெரியவளானபோது அவளைத் தனியே படுக்கவிட மனமில்லாமல் கட்டி அணைத்துப் படுத்துக் கொண்டாள்.

” தீட்டெல்லாம் ஒன்னாக்கற…..” அம்மாவின் புலம்பல் அவளின் ஒரு அதட்டலில் நின்றுபோனது.

” காலையில எந்திரிச்சதும் தலையில தண்ணி ஊத்திக்கிறேன். போதுமா….?” விரல்கள் தலை கோதின. உதிராத குண்டு மல்லிகையின் வாசனைபோல சித்தி அவளை வியாபித்திருந்தாள். இரவில் உறக்கத்தின் நடுவிலும் மல்லிகையின் வாசனையாய் அவள் சித்தியை உணர்ந்தாள்.

அவள் பிடிக்குள் அடங்கி ஒடுங்கிக் கொள்ள அவ்வளவு விருப்பமாயிருந்தது. மெத்தென்ற அவள் மார்பில் தலைபதித்து உறங்கிய போது அவளுடைய பருத்த முலைகளைச் சப்பிக் குடிப்பதுபோல கனவு வந்தது. குழந்தைபோல் கடைவாயில் வழிய விட்டுக்கொண்டு உறிஞ்சி, உறிஞ்சிக் குடித்ததில் காம்புகள் அழன்றுபோயின. மறுநாள் கனவைச் சொன்னபோது  தண்ணீர்  குடித்துக்கொண்டிருந்தவளுக்குப்  புரையேறிவிட்டது.

“என்னன்னு எங்கிட்டயும் சொல்லுங்கடி …. “

அம்மா கேட்டுச் சலித்துப் போனாள். சொன்னால் திட்டுவாள். அதன் பிறகு சமயம் கிடைக்கும்போதெல்லாம் இதைச் சொல்லிச் சிரிப்பதுண்டு. இப்போதும் ஞாபகம் வந்தது. சித்தி அனிச்சையாய்  நெஞ்சில்  கைவைத்துக்கொள்ள,

” என்ன சித்தி பால் கட்டிக்கிச்சா…. வேணும்னா நான் குடிச்சிடவா?” கேட்கும்போதே தாங்கவில்லை. இரு பெண்களின் கலகலப்பில் வவ்வால்கள் படபடத்து சாமியறைக்குள் பதுங்கின.    

விடிவிளக்கு வெளிச்சத்தில் வானதி சித்தியின் விரல்களைக் கோர்த்துக் கொண்டாள். 

சிறுவயதில் சோறூட்டிய விரல்கள். பருப்பு சாதத்தில் நெய்யூற்றி குழையப் பிசைந்து உள்ளங்கை படாமல் ஊட்டும்போது சித்தியின் முகத்தில் தாய்மை விகசிக்கும். விரல்களில் ஒட்டியிருக்கும் மசிந்த சோறு காய்வதற்குள் ஊட்டி முடித்துவிடுவாள். அம்மாவுக்கு வேலை மிச்சம். பாட்டி வீட்டின் சலுகைகளில் சித்தி சிறப்புச் சலுகையாகக் கிடைத்திருந்தாள். 

” அச்சச்சோ……சித்தியோட கட்டவெரல் தொந்தாக்குள்ள போயிடுச்சாடி…..”

விரலை மடக்கி நான்கு விரல்களை மட்டும் நீட்டி பரிதாபமாகக் கேட்கும் மேஜிக் வித்தைகளும் நடக்கும். 

சட்டென விடிவிளக்கு அணைந்து போனது.

”  கரண்ட் போயிடுச்சு. இரு, வெளக்கேத்தறேன்.”

” வேணாம் சித்தி.  இருட்டு நல்லாயிருக்கு. படு….”

வானதி துழாவி அவள் வயிற்றில் கை போட்டுக் கொண்டாள் . 

சித்தி தலைக்குக் குளித்து வெள்ளைத் துண்டால் தலையை இறுகச் சுற்றியிருந்தாள். 

” சிதம்பரம் கொஸ்த்து செஞ்சிருக்கேன். ஒனக்கு ரொம்பப் பிடிச்சது. பட்டுன்னு  குளியலை முடிச்சிட்டு வா. ஒரு வெட்டு வெட்டலாம்…..”

அவள் சொல்லும்போதே பசி எடுக்க ஆரம்பித்தது. வார்த்தைகளில் சுவையை ஏற்றிவிட அவளுக்குத் தெரிந்திருந்தது. அவளுடைய நீலப் புடவையில் இன்று வெங்காய வாசனையடித்தது.

நேரம் கடந்து விட்டபிறகு வீசும் மெல்லிய வாடை. ஏழெட்டு  இட்லிகள் உள்ளே போனதே தெரியவில்லை. சிதம்பரம் கொஸ்த்தில்  தன்  அன்பையும் கலந்துவிட்டாள் போலும். அது பாட்டுக்கு ஏகத்துக்கு ருசித்தது. 

” எக்கசக்கமா சாப்பிட்டுட்டேன். “

சித்தி, வானதியைக் கைப்பிடித்து எழப்பண்ணினாள். சித்தப்பாவை அப்படிப் பல தடவைகள் அவள் எழுப்பிவிட்டதை வானதி பார்த்திருக்கிறாள்.

” சமையல்ல உன்னை மிஞ்ச யாருமில்ல சித்தி. “

” எல்லாம் கல்யாணமானபிறகு கத்துக்கிட்டதுதான். அம்மா வீட்ல இருந்தப்ப தி. ஜானகிராமனையும், அசோகமித்திரனையும் படிக்கவே நேரம் சரியா இருந்துச்சு.  நிச்சயத்துக்கப்புறம் அம்மாவோட வற்புறுத்தலால கொஞ்சம் கத்துக்கிட்டேன். அதை வச்சே சமாளிச்சிடுவேன்னு அம்மாட்ட வாயாடிட்டு வந்துட்டேன். ஆனா இங்கே வந்தப்புறம்தான் அது தப்புன்னு தெரிஞ்சது. “

சித்தி யாரிடமோ சொல்வது போல மேலே பார்த்தபடி சொல்லிக்கொண்டிருந்தாள்.  

கொல்லைப் படிக்கட்டில் வந்தமர்ந்த காகம் தலையசைத்து கண்களை உருட்டி, உருட்டிப் பார்த்தது.

” மணி பதினொன்னாச்சு.” சொல்லிவிட்டு எழுந்து போனவள்  ஒரு இட்லியை எடுத்து வந்து பிய்த்துப் போட்டாள். காகம் நிதானமாகக் கொத்தத் தொடங்கியது. சித்தியின் கண்களில் ஒரு ஒளி. விழிகளில் அத்தனை காருண்யத்தை அவள் பெரும்பாலும் இப்படிப்பட்ட தருணங்களில்  சுமந்து கொண்டிருந்தாள். மற்ற நேரங்களில் ஆச்சரியங்களை  எதிர்பார்ப்பவை போல, காணும் ஒவ்வொன்றையும் ஆச்சரியங்களாக்கிக் கொள்பவை போல அந்தக் கண்கள் மிதந்தபடியிருந்தன. 

பூக்களைப் பறிக்கும் போதும் அவள் கண்கள் ஒளி சூடிக்கொண்டன. வலிக்காத ஒரு  வருடலை, பூக்கள் அவளுடைய தொடுசுகத்தில் உணர்ந்திருக்கக் கூடும். காகம் பறந்து போக  இயல்பாகத் திரும்பிவந்து  தண்ணீரில் கிடந்த தோல் சீவிய வாழைக்காயை நறுங்கத் தொடங்கினாள். 

” தெனமும் வருமா சித்தி….?”

” ஆமா…. உப்புமா, இட்லி, தோசை இந்த மாதிரி விதவிதமா சாப்பிடப் பிடிக்கும். சர்ருன்னு பறந்து வந்து ஒக்காந்துக்கிட்டு மிடுக்காப் பாக்கும், நீ, எனக்குப் பாத்தியதைப் பட்டவ, செஞ்சுதான் ஆகணுங்கறமாதிரி. போட்டதை ஒரு துளி வீணாக்காம சாப்பிட்டுட்டு போயிடும்.”

” காக்கா மட்டுந்தானா….?”

” யாரு சொன்னா….. சாயந்திரம் நாலு மணிக்கு மயிலார் வருவார். வந்து கிரில் கதவுல அலகால சத்தமெழுப்புவார். கம்போ, சோளமோ, தினையோ கால் கைப்பிடி தூவிவிடுவேன். சிறுதானியம் ஒடம்புக்கு ரொம்ப நல்லதுன்னு சொல்றாங்களேடி……” கண் சிமிட்டினாள். வானதிக்கு அவளைக் கட்டிக்கொள்ள வேண்டும் போலிருந்தது.

 ” அப்புறம் எப்பதான் சமைக்க கத்துக்கிட்ட?”  

” மாமியார் கத்துக் குடுத்தாங்க. நுணுக்கமா எல்லாஞ் செய்யத் தெரியுது. புத்தகத்தைத் தொறந்தா அதுல கரைஞ்சு போயிடுற. ஈடுபாடு இல்லாட்டி எதையும் செய்ய முடியாதுல்ல. அதுதான் இங்க இடிக்குதுன்னு திடீர்ன்னு ஒருநாள் சொன்னாங்க பாரு. அன்னிக்கு ரசம் வச்சிருந்தேன். எடுத்து ஒரு சொட்டு வாயில விட்டுக்கிட்டேன். ஒரே புளிப்பு. இன்னிக்கும் அந்தப் புளிப்பு என் நாக்குல இருக்கு…..சட்டுன்னு சுதாரிச்சிக்கிட்டேன். என் மாமியார் கில்லாடி. பாத்த நொடி என்ன கொறைன்னு கண்டுபிடிச்சிடுவாங்க. விஷயஞானம் அதிகம். குரு பூரணத்துவம் நிறைஞ்சவரா இருக்கணும். அப்படி மட்டும் வாய்ச்சிட்டா அவர் அதை நமக்கு முழுமையா கடத்தி விட்டுடுவாருல்ல……  “

“உன்னை மாதிரி யோசிக்க நான் அறிவாளியில்ல  சித்தி.”

” போடி கழுத…..பேச்சப்பாரு….”

சித்தி செல்லமாகக் குட்டினாள். 

சித்தப்பா இல்லாத வீட்டில் சித்தி ஒற்றையாளாய் எங்கும் நிறைந்திருந்தாள். தெருவிலிருந்து கொல்லைவரைக்கும் முழுமையாக ஒளியோடிய வீடு அது. அவளின் இருப்பில் அது அவ்வாறு ஒளிர்ந்ததாக வானதிக்குப் பட்டது. முற்றத்தில் குழல்கம்பியிடுக்குகளின் வழியே கசிந்த வெயிலில் நீர்சொட்டும் கூந்தலை முதுகில் படரவிட்டபடி குறட்டிலமர்ந்து நீலபத்மநாபனின் பள்ளிக்கொண்டபுரத்தை வாசிக்கையில், புனத்தில் குஞ்சப்துல்லாவின் மீஸான் கற்களை வாசிக்கையில், மலர்வதியின் தூப்புக்காரிக்குக் கரிக்கும் நீரைக் கண்களில் தேக்கி அமர்ந்திருக்கையில் ஒளிப்பாறையை  செதுக்கி செய்தது போலத்தான் எண்ணத் தோன்றும். சிலபேருக்கு மனமும், குணமும் அப்படி. இயற்கையாகவே அமைந்துவிட்ட வாகு அது.

” வந்து எங்ககூட கொஞ்சநாள் இருக்கலாமில்ல. …”

அம்மாவின் புலம்பல்களுக்கு அளவேயில்லை. 

” அடர்த்தியான செவப்பு நெறத்துல ஸ்டிக்கர் போட்டு வச்சிக்குவா. அது எல்லாருக்கும் பொருந்தாது. ஏன் எனக்கே அது சகிக்காது. ஆனா அவளுக்கு அவ்ளோ பாந்தமாயிருக்கும். நல்லா பழுத்த மொளகா பழத்த நறுக்கி வச்சிக்கிட்டாப்ல….இப்ப கருப்பு பொட்டுதான். “

குரல் அடைக்கும். பேசமுடியாது.

தெருப்பிள்ளைகள் அவ்வப்போது வருவதும், போவதுமாயிருந்தனர். பொடிசு, பொட்டாய், சிண்டு, சிமிழாய் நிறைய பிள்ளைகள். அத்தை, அத்தை என்று சித்தியைச் சூழ்ந்துகொண்டன. மாலையில் கூடம் முழுக்க கீச், கீச் குருவிகள் போல குழந்தைகள். சித்தி பாடம் சொல்லிக்கொடுத்தாள், தலை பின்னி விட்டாள், கைநிறைய உப்புக்கடலையும், பொரியும் கொடுத்தாள். மடியில் வைத்துக் கொஞ்சினாள். சிம்மாசனம் போல மடி. அதில் பொருந்திப்போய்விட்ட குழந்தைகள். அவர்களிடம் அவள் பேசிக்கொண்டிருந்தபோது வியப்புக்குறியொன்று அவள் முகத்தில் நிரந்தரமாகக் குடி கொண்டிருந்ததாய் வானதிக்குத் தோன்றியது.

சித்தி ஏதேதோ மூட்டைக்கட்டி  வைத்திருந்தாள். கிளம்புபோதான ரகளை எப்போதும் உண்டு. அது சிறுபிராயத்திலிருந்தே வழக்கமான ஒன்றுதான். அழும்போது,

” சித்தி வரணும், சித்தி வரணும் ” என்ற வார்த்தைகள் அச்சிலிட்டவை போலச் சீரான இடைவெளியோடு வரும். சில நேரம் அம்மாவிடம் முதுகில் சாத்துப்படி வாங்கியதும் உண்டு. சித்தி கொஞ்சி குலாவிச் சமாதானப்படுத்துவாள். வளர்ந்தபிறகு வார்த்தைகளில்லாத அழுகை அழக் கற்றுக்கொண்டாள். 

” மொதல்  தடவையா தனியாப்போற. கெளம்பறச்ச  அழுது, ஆர்ப்பாட்டம் பண்ணாத. வளந்த பிள்ளையா லச்சணமா  வந்து சேரு….”

அம்மா ஆயிரம் தடவைகள் சொல்லி அனுப்பியிருந்தாள். 

பஸ்சிலேறும் வரை தாக்குப்பிடித்தால் போதும். பிற்பாடு முகத்தைத் திருப்பி வெளியே பார்ப்பதுபோல நின்றோ, அமர்ந்தோ கொண்டால் சவுகரியமாகிவிடும். சித்தி இன்னொரு பையைக் கொண்டுவந்து வைத்தாள்.

” இதுல மணத்துக்ளி வத்தலும், கொத்தவர வத்தலும் இருக்கு. ஒனக்கு ரொம்பப் பிடிச்சது.”

குனிந்து வைத்தவளுடைய முதுகு குலுங்கியது. 

” சித்தி….”

நிமிர்ந்தவளுடைய கண்கள் கொட்டின. அடக்கியதில் பீறிட்ட அழுகையை அவள் முந்தானை வைத்து நிறுத்தப்பார்த்தாள். தோள்பட்டைகள் ஏறி, இறங்க அவள் மாலை நேரத்துக் குழந்தைகளின் ஒட்டுமொத்த சாயலை முகத்தில் தேக்கியிருந்தாள். உள்ளிருந்த ஒன்றைக் கோடிட்டுக் காட்டியது போலிருந்தது. சித்தி பரிபூரணி. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.