ஏது எதங்கு-பெருமாள்முருகன்

குழந்தை இன்னும் தூங்கிக்கொண்டிருந்த அதிகாலையில் எழுந்து வழக்கம் போல நாட்காட்டித் தாளைக் கிழித்தாள். எதேச்சையாகக் கண்ணில் பட்ட தேதியில் ஏதோ விசேசம் இருப்பது போலப் பட, நெற்றியைச் சுருக்கிக்கொண்டு மீண்டும் பார்த்தாள்.  குழந்தை அவளிடம் வந்து சேர்ந்த நாள் இது. கணக்கிட்டுப் பார்த்தாள். இருபது வருசங்கள் முடிந்துவிட்டன என்று நினைக்கும்போது உடல் குலுங்கி மனம் நடுங்கியது. சுவரோடு சாய்ந்து அப்படியே சரிந்து உட்கார்ந்தாள். தானாக வழிந்த கண்ணீர் ஊர்வதை உணரவில்லை. ஆனால் உள்ளிருந்து குழந்தை சிணுங்கும் ஒலி கேட்டதும் பதறி எழுந்தாள். ஏன் இப்படி ஓடுகிறோம் என்னும் கேள்வி மனதிற்குள் வந்தது. இதற்கு முன்னும் கேள்விகள், சலிப்புகள் தோன்றியிருக்கின்றன. இத்தனை அழுத்தமாக எதுவும் வந்ததில்லை. என்னவாயிற்று?

சிணுங்கிய குழந்தை எழவில்லை. உறக்கத்திலிருந்து அவள் எழுவதற்கும் குழந்தை விழிப்பதற்கும் இடையேயான இந்தச் சில கணங்கள்தான் அவளுக்கான நேரம். தேநீர் போட்டு எடுத்து வந்து வாசல் கதவைத் திறந்து அங்கிருந்த செம்பருத்திக்கு எதிரே அமர்ந்தாள். அதற்குள் தேநீரில் ஆடை கட்டியிருந்தது. இருமுறை ஆற்றி நுரை ததும்ப எடுத்து வந்து ஒருமிடறு உறிஞ்சி அதன் சுவையை ஏகாந்தமாக அனுபவிப்பாள். இன்றைக்கு எப்படியோ ஆற்ற மறந்து போய்விட்டது. மேற்பரப்பு முழுவதும் பரவி மூடிக்கொண்டிருந்த ஆடை அவளுக்குள் மண்டியிருந்த சலிப்பைப் போலத் தோன்றியது. அதை ஒற்றை விரலால் தொட்டுச் சுருட்டி எடுத்துப் போடுவது அத்தனை சுலபமில்லை. நசநசக்கும் விரலை எதில் துடைப்பது, ஆடையை எங்கே எறிவது, எறியும் போதில் தெறித்துக் காவியாய்ப் படரும் துளிக் கறைகளை எப்படிப் போக்குவது எனப் பல பிரச்சினைகள். எப்படியும் தேநீர் அதற்குரிய சுவையை இழந்து போயிருக்கும். ஏதோ பேருக்குக் குடிக்க நேரும். ஒருநாளின் இயல்பைத் தீர்மானிப்பது முதல் தேநீர்தான்.

ஊதி நகர்த்தும் போது  முதுமையின் சுருக்கங்கள் படர்ந்த கன்னம் போல நகர்ந்த ஆடையை ஒருபுறமாய்த் தொட்டு மெல்ல மேலேற்றி கோப்பையின் ஒருபக்க விளிம்பில் படிய வைத்தாள். மறுபக்க விளிம்பில் உதடுகள் படிந்தன. கோப்பையைக் கீழே வைத்துவிட்டுச் செம்பருத்தியின் மேல் பார்வையைப் படர விடுகையில் ஒரு கை அவள் கன்னத்தைத் தடவிக்கொண்டிருந்தது. இருபது வருசங்களில் எல்லாவற்றிலும் ஏதோ மாற்றம். ஆனால் அவள் வேலைகளில் மட்டும் மாற்றமில்லை. எல்லாரையும் போலத் தன் குழந்தையும் வளர்ந்துவிடும், அதன் நடவடிக்கைகளில் மாற்றங்கள் வந்துவிடும் என்றுதான் நினைத்தாள். ஆனால் இது வளராத குழந்தை. உடலும் வளரவில்லை, மனமும் வளரவில்லை. வளர்ந்த குழந்தையைக் கைவிட்டு விடலாம், வளராத குழந்தையை என்ன செய்ய முடியும்?

இந்தக் குழந்தைக்கு உடல்ரீதியாக எந்தப் பிரச்சினையும் இல்லை. எல்லாம் சரியாக இருந்தும் ஏன் வளரவில்லை என்பது யாருக்கும் தெரியவில்லை. யாரேனும் புதிதாக வீட்டுக்கு வந்தால் பிறந்து ஒருவருசத்திற்குள்ளான குழந்தையுடன் அவள் வசிப்பது போலத்தான் உணர்வார்கள். அந்தக் குழந்தையை அறிந்தவர்கள் ‘ஒரு கொழந்த கொழந்தயாவே இருக்கறது எவ்வளவு பெரிய விஷயம். அதப் பாத்துக்கற பாக்கியம் உனக்குக் கெடச்சிருக்குது பாரு’ என்பார்கள். யாராவது வரும்போது குழந்தையும் ஒன்றுமே தெரியாத மாதிரி பாந்தமாக நடந்துகொள்ளும். ‘இத்தனை சமர்த்து உனக்கு வாய்த்திருக்கிறது’ என்று பொறாமையோடு பார்ப்பார்கள்.

குழந்தை சில சொற்களை மட்டும் பேசும். காரியார்த்தமான ஒற்றைச் சொற்கள். பெரும்பாலும் வீடெங்கும் தவழ்ந்தே செல்லும். சில சமயம் ஐந்தாறு எட்டு வைத்து நடக்கும். அவள் பார்த்துவிட்டால் உடனே தவழ ஆரம்பித்துவிடும். எல்லாம் அவள்தான் செய்தாக வேண்டும். பெருமூச்சுடன் தேநீர்க் கோப்பையை எடுத்தாள். வயிறு இளகுவது தெரிந்தது. கோப்பையை அலசி வைத்துவிட்டுக் கழிப்பறைக்குள் நுழைந்தாள். ஆள் உட்கார்ந்துவிட்டால் முழுக்க அடைந்துவிடும் சிறுசதுரப் பரப்பு அது. சுவரில் கையைப் பதித்து ஊன்றி எழலாம். எதிர்ச்சுவரில் காலைப் பதித்துச் சாய்ந்து உட்கார்ந்து கொள்ளலாம். வீட்டிலேயே அவளுக்கு மிகவும் பிடித்தமான இடம் அதுதான். பாதுகாப்பான இடமும்கூட. அதற்குள்ளேயே எத்தனை நேரம் என்றாலும் இருந்துவிடத் தோன்றும். எந்த யோசனையும் இல்லாமல் மனம் வெறுமையுற்றிருக்கும். அவ்வளவு நேரம் உள்ளே என்ன செய்து கொண்டிருந்தோம் என்று யோசித்துப் பார்த்தால் ஒன்றுமே தோன்றாது.

இன்றைக்கு ஏனோ வெகுநேரம் உள்ளேயே இருக்க வேண்டும் என்றிருந்தது. ஒவ்வொரு நாளும் ஒரே மாதிரி இருப்பது சாபம். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாதிரி இருப்பதுதான் வரம். ஒவ்வொரு மாதிரி ஆக்கிக்கொள்ள முடியாதா? ஆக்கிக்கொள்ளத் தெரியவில்லையா? என்ன செய்து மீள்வது? மிக ஆசுவாசமாக உணர்ந்த தருணத்தில்  ‘ம்ம்’ என அனத்தல் சத்தம் கேட்டது. குழந்தை அவளை அழைக்கும் சமிக்ஞை அது. அவளிடமிருந்து பதில் வரவில்லை என்றால் ம்மின் ஒலி கூடிக்கொண்டே போகும். வீடெங்கும்  ‘ம்’ நிறைந்துவிடும். சிலசமயம் வெளியே போய்ச் சேர்ந்து யாராவது வந்துவிடுவார்கள். ‘கொழந்தையக் கவனிக்க மாட்டயா’ என்று தொடங்கி அவள் ஏதோ குழந்தையைக் கவனிக்கத் தெரியாதவள் மாதிரி அறிவுரைகளை அடுக்குவார்கள். குழந்தையை அழ விட்டுவிட்டுத் திரிகிறாள் என்று ஏதாவது கதை பரப்புவார்கள். அந்த இம்சைகளிலிருந்து தப்பிக்கத் தன் வீட்டுக் கதவைத் தாண்டி ‘ம்’ போகாதவாறு பார்த்துக் கொள்வது அவள் வழக்கம்.

குழந்தை அழைக்கும்போது வெதுவெதுப்பான பாலோடு அறைக்குள் அவள் நுழைய வேண்டும். கழிப்பறைக்குள் இருக்கும்போது இப்படி அழைப்பு வந்தால் அவசர அவசரமாகத் தயார்ப்படுத்திக்கொண்டு வெளியே ஓடுவாள். இன்றைக்கு அப்படியில்லை. பதிலே பேசக் கூடாது எனத் தோன்றினாலும் அப்படி இருக்க முடியவில்லை. தாழ் மாற்றும்போது ஏற்பட்ட சிறு ஓட்டை ஒன்று கதவில் இருந்தது. அதில் வாய் வைத்து ‘கழிப்பறைல இருக்கறன்’ என்று சத்தமாகச் சொன்னாள். அதையெல்லாம் புரிந்துகொள்ளக் கூடியதுதான். சற்று நேரம் குரல் வரவில்லை. இடைவெளி விட்டுக் குரல் வரும் என எதிர்பார்த்திருந்தாள். வரவேயில்லை. என்ன ஆயிற்று?

தாழ் ஓட்டை வழியாகக் கண்ணை வைத்துப் பார்த்தாள். வீட்டின் ஒருபகுதி முழுக்கத் தெரிந்தது. வெளிச்சத்தை அனுபவிக்கச் சிறுஓட்டை போதும் போல. இந்தச் சின்ன ஓட்டை வழியாக இவ்வளவு பெரிய பரப்பு தென்படுகிறதே. இதுநாள் வரைக்கும் இந்த நுட்பம் தெரியவில்லையே. இந்தச் சிறு அறைக்குள்ளேயே இன்னும் அறியாத விஷயம் நிறைய இருக்குமோ. கண்ணை அவள் எடுக்க நினைக்கும்போது ஓட்டை வெளிக்குள் குழந்தை நுழைந்தது. கண்ணை அழுந்த வைத்தாள். சில அடி தூரம் தவழ்ந்து வந்தது குழந்தை. கழிப்பறைப் பக்கம் அண்ணாந்து பார்த்தது. பின் மெல்ல எழுந்து நின்றது. சமையலறை நோக்கி நடந்து மறைந்தது. கண்களை எடுக்காமல் திரும்ப வருவது தெரிகிறதா எனப் பார்த்தாள். சமையலறைக்குள் சில பாத்திரங்கள் உருளும் சத்தம் கேட்டது. தானாக ஏதேனும் வேலை செய்தால் இப்படி உருட்டுவது வழக்கம். அப்போதுதானே குழந்தை.

சற்று நேரத்தில் வந்த குழந்தை இரண்டு கால்களையும் அகட்டிக்கொண்டு நீள்குறி தெரிய அவள் கண்ணுக்கு நேராக உட்கார்ந்து கொண்டது. அருவருப்புடன்  முகம் சுழித்தாள். எத்தனை சொன்னாலும் ஒன்றையும் கற்றுக்கொள்ளாமல் வேண்டுமென்றே இப்படிச் செய்யும். கால்களுக்கிடையே சிறுகுண்டானையும் டம்ளரையும் வைத்துக்கொண்டு பாலை ஊற்றி ஊற்றிக் குடித்தது. அவ்விடத்திலேயே எறிந்துவிட்டுத் தவழ்ந்து போய்ச் சோபாவில் ஏறிப் படுத்துத் தொலைக்காட்சியைப் போட்டது. சோபாவின் கால்கள் மட்டும் தெரிந்தன. எல்லாம் தெரிந்தும் தெரியாத மாதிரி இருப்பதுதான் அதன் வழக்கம். எரிச்சலாக இருப்பினும் வெளியே போக வேண்டும் என்று தோன்றவில்லை. கண்ணை முன்னும் பின்னும் ஓட்டிப் பார்த்தாள். முழுமையாகப் பார்க்க முடியவில்லை.

ஓட்டையிலிருந்து கண்ணை எடுத்தவள் சுவரோடு சாய்ந்து கொண்டாள். கண்களை மூடியிருந்தாள். இதயம் படபடத்துப் பெருமூச்சாக வந்தது. ஆசுவாசம் தரும் அவ்வறை இப்போது வெம்மை கூடியது. ஓட்டையில் கண் வைத்துப் பார்த்திருக்கக் கூடாது; அந்த ஓட்டையையே கண்டுபிடித்திருக்கக் கூடாது. அறை காத்து வைத்திருந்த குளிர்ச்சி முழுவதையும் சிறுஓட்டை போக்கிவிட்டது. இனி உள்ளே வந்தால் அறியாமல் அந்த ஓட்டைக்குத்தான் கண் போகும். வேவு பார்க்கும் மனநிலை வந்துவிடும். பெரிய புளி உருண்டையை வைத்து அவ்வோட்டையை அடைத்துவிட வேண்டும். புளியை எடுக்கக் கை பரபரக்கும். நிரந்தரமாக அடைத்துவிட வேண்டும். அதற்கு மேல் அங்கே இருக்கப் பிடிக்கவில்லை.

வெளியே வந்ததும் குழந்தை அவளை முறைத்துப் பார்த்தது. தன் தேவையை உடனே வந்து நிறைவேற்றவில்லை என்றால் இப்படித்தான் அதன் முகம் போகும். சோபாவில் இருந்தவாக்கில் சிறுநீர் கழித்தது. தன்னைக் கவனிக்க வைக்க இப்படியெல்லாம் செய்யும் என்பது அவள் அறிந்ததுதான். அப்படிச் செய்யும் போதெல்லாம் வேகமாக ஓடிப்போய் இரண்டு அடி கொடுத்துச் சுத்தம் செய்வாள். அடித்தால் உர்ரென்று முகத்தை வைத்துக்கொண்டு முறைக்கும். இப்போது ஏனோ எதுவும் செய்யத் தோன்றாமல் சமையலறைக்குப் போய் இன்னொரு தேநீரைக் கலக்கினாள். அதை எடுத்துக்கொண்டு குழந்தைக்குப் பக்கத்திலேயே போய் உட்கார்ந்தாள்.

சிறுநீர் நாற்றம் நாசியில் ஏறிற்று. இருந்தும் எதுவும் காட்டிக்கொள்ளாமல் அப்படியே உட்கார்ந்து தேநீரைக் குடித்தாள். அவளது விசித்திரப் போக்கை ஆச்சரியமாகப் பார்த்த குழந்தை அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் அவளையே மாறி மாறிப் பார்த்தது. பிறகு தனது வழக்கமான ம்ம்மை நீட்டி அழுகுரல் எடுத்தது. அதைத் தவிர்த்துவிட்டுத் தனக்கென எதையுமே செய்துகொள்ள முடியவில்லை என்பதைத் தீவிரமாக உணர்ந்தாள். அதனால் அவசரம் காட்டவில்லை. கோப்பையைக் கழுவ வைத்துவிட்டுச் சாவகாசமாக வந்து குழந்தையைத் தூக்கித் துடைத்தாள். தொடையெல்லாம் ஈரம் காய்ந்து உப்புப் படர்ந்துவிட்டது. தூக்கிக் கொண்டுபோய் குளியலறை வாளிக்குள் நிறுத்தித் தண்ணீரைத் திறந்துவிட்டாள். அருகில் எல்லாம் எடுத்து வைத்திருந்தாள். வாளி நீருக்குள் கொஞ்சம் நேரம் கொட்டம் அடிக்கும். வாரி இறைத்துக் குதூகலிக்கும். அவள் மீது அள்ளி இறைக்கும்.

பிறகு அவள் வேலைகள் வழக்கம் போலத் தொடங்கின. குழந்தையைக் குளிக்க வைப்பது, துணி மாற்றுவது, உணவு தயாரிப்பது, சாப்பிட வைப்பது என வேலைகள். சமைக்கும் நேரத்தில் வெளிவாசலுக்குக் குழந்தையைக் கொண்டு போய் விட்டுவிடுவாள். அங்கே சுற்றிலும் வலையடித்த பாதுகாப்பு வளையம் இருக்கிறது. அதற்குள் கொஞ்சம் விளையாட்டுப் பொருள்களும் இருக்கின்றன. குழந்தை எங்கெங்கோ வேடிக்கை பார்த்துக் கொண்டும் வழக்கமான விளையாட்டுக்களில் ஈடுபட்டுக்கொண்டும் நேரத்தைப் போக்கும். சிலசமயம் அங்கேயே கண்ணயர்ந்துவிடும்.

வெளியேயிருந்து வரும் குழந்தையின் சத்தத்தைக் காதில் கேட்டுக்கொண்டே உள்ளே வேலைகள் செய்வாள். அவ்வப்போது குழந்தையை நோக்கி ஏதாவது பேசுவாள். இன்றைக்கு அது மட்டும் இல்லை. ஏதோ உள்ளுக்குள் பேச்சு ஓடிக்கொண்டே இருந்ததால் குழந்தையின் குரல் காதில் விழவில்லை. அதுவும் எத்தனையோ பிரயாசைகள் செய்து பார்த்தும் அவளிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை. அழ ஆரம்பித்தால் யாராவது வீட்டுக்குள் எட்டிப் பார்த்து ‘கொழந்த அழுவுது பாரும்மா’ என்று சொல்லிப் போவார்கள். இன்று ஒருவருக்கும் அத்தகைய இரக்கம் வரவில்லை போல. அழுது பார்த்த குழந்தை மயங்கித் தூங்கிவிட்டது.

வேலைகள் முடிந்த பிறகு போய்க் குழந்தையைத் தூக்கி வந்தாள். அவள் கை பட்டதும் படக்கென்று விழித்து அவளை இறுகக் கட்டிக்கொண்டது. வழக்கமான தழுவலாக இல்லாமல் ‘உன்னை விட மாட்டேன்’ என்று சொல்வது போலிருந்தது. ஏன் இப்படி நடந்துகொண்டோம் என்று இரக்கத்தோடு குழந்தையைத் தானும் இறுக்கி அணைத்துக்கொண்டாள். குழந்தைக்கு மீண்டும் உணவு கொடுத்துவிட்டுத் தானும் உண்டாள். குழந்தையால் திறக்க முடியாதபடி கதவின் மேல்தாழைப் போட்டுவிட்டுக் கட்டிலில் படுத்தாள். அவளோடு சேர்ந்து குழந்தையும் தூங்கும் நேரம்.

அவள் கண்ணயர்ந்த சமயத்தில் அவள் ரவிக்கை ஊக்குகளைக் கழற்றத் தொடங்கியது குழந்தை. அதுவும் வழக்கம்தான். பால் சுரக்காத முலைகள் என்றாலும் வாய் வைத்துச் சப்பிக்கொண்டே தூங்கிவிடும். அதற்கு வாகாக மல்லாந்து படுத்தபடி தூக்கத்தைத் தொடர்ந்தாள். சிலசமயம் குழந்தையின் உதட்டின் வருடல் இன்பமாக இருக்கும். குழந்தையின் வாயசைவு கனவில் நடப்பது போலிருந்தது. கண்கள் சொருக உடலை வாகாக்கிக் கொடுத்து அப்படியே தூங்கிப் போவாள்.  அவள் ஆர்வம் காட்டவில்லை என்பதை உணர்ந்தால் குழந்தை தன் கொட்டப்பற்களால் அழுந்தக் கடிக்கும். வலி பொறுக்காமல் அதன் தலைமயிரைக் கொத்தாகப் பிடித்துத் தூக்குவாள். வாய்ப்பிடியை விடாமல் கண்களால் சிரிக்கும். உதடுகளில் படிந்த ரத்தத் துளிகளை நாவால் வருடிச் சுவைக்கையில் ‘காட்டேரி’ என்று திட்டுவாள். தனக்குக் கிடைத்த பதக்கமாய்க் கருதிப் பெருமை மிளிரக் கட்டிலின் ஒருபுறம் கவிழ்ந்து படுத்துத் தூங்கும்.

இப்போது முலைக்குள் வாய் இருக்கவே தூங்கிப் போயிற்று.  பெருங்கனத்தை இறக்கி வைக்க மெல்ல முயன்றாள். அதன் வாயை உருவி எடுத்தாள். உடலைத் திருப்பிப் படுக்க வைத்தாள். வாயை மூடாமல் அப்படியே தூங்கிற்று. எங்கிருந்துதான் இதற்கு இப்படித் தூக்கம் வருமோ. தூங்குவதற்காகவே அடம் பிடித்து முலை கேட்கும். அவளுக்குத் தூக்கம் வரவில்லை. குளியலறைக்குச் சென்று சோப்புப் போட்டு இரண்டு மூன்று முறை கழுவினாள். குழந்தையின் உதடுகள் பசை போட்டு ஒட்டிவிட்ட மாதிரியிருந்தது. எச்சில் பிசுபிசுப்புப் போகவேயில்லை. முலைக்காம்புகளைச் சுற்றிலும் அதன் பல்தடங்கள் வடுக்களாய் நிறைந்திருந்தன. என்ன செய்தாலும் இந்த வடுக்களைப் போக்க முடியாது. நெடுநேரம் வருடிக் கொண்டேயிருந்தாள்.

கதவு தட்டும் மெல்லிய சத்தம் கேட்டது. யாரோ தெரிந்தவர்தான். குழந்தை இருக்கும் வீடு என்னும் எச்சரிக்கையோடு விரல் மடிகிறது. வந்து திறந்தாள். அவள் அம்மா. ‘கொழந்த தூங்குதா?’ என்று கிசுகிசுப்பாய்க் கேட்டுக்கொண்டே உள்ளே நுழைந்தார். படுக்கையறைக் கதவை நன்றாகச் சாத்திவிட்டு வந்தாள். அம்மாவுக்கும் தனக்கும் சேர்த்துத் தேநீர் தயாரிக்கச் சமையலறைக்குப் போனாள். பின்னாலேயே அம்மா வந்தார். அம்மா என்னவெல்லாம் கேட்பார், எப்படிப் பதில் சொல்ல வேண்டும் என்பது பழகிப் போன விஷயம்.  ‘கொழந்தய நல்லாப் பாத்துக்கறயா?’, ‘வேளாவேளைக்கு எல்லாம் செஞ்சு குடுக்கறயா?’,  ‘நல்லாத் தூங்குதா?’, ‘மொல சப்பக் குடுக்கறயா?’ எல்லாக் கேள்விகளுக்கும் ‘ஆமாம்’ என்னும் ஒரே பதில்தான். 

‘இன்னைக்கு என்ன செஞ்சிருக்கற? கேக்கு எப்ப வெட்டப் போற? வெளிய போகப் போறீங்களா?’ என்றெல்லாம் அம்மா கேட்டார். ‘இந்தக் கொழந்தயப் பாத்து வளக்கறதுக்குத்தான் என்னயப் பெத்தயா?’ என்று கேட்டுக் கேட்டுச் சலித்துவிட்டது. கொஞ்சமும் தயக்கமே இல்லாமல் ‘வேற என்ன வேல உனக்கு’ என்பார் அம்மா. இப்படி ஒரு குழந்தையை எங்கிருந்து பிடித்து வந்து தலையில் கட்டினாரோ? தன் குழந்தையை விட வந்த குழந்தைதான் அம்மாவுக்குப் பெரிது. இந்த நாளை அம்மா இப்படி நினைவு கொண்டிருப்பது எதற்கு என்று புரியவில்லை. ஒரு துயரம் வந்து சேர்ந்த நாள் என்பது அம்மாவுக்குப் புரியவில்லை என்றாலும் சந்தோசம் கூடிய நாளாக எப்படிக் கருத முடிகிறது? அம்மாவின் கேள்விகளுக்கு எல்லாம் ஏதேதோ பதில் சொன்னாள்.

அதன் பிறகு அம்மாவின் அறிவுரைப் படலம் ஆரம்பித்துவிடும்.  ‘கொழந்ததான் முக்கியம்’ என்பார். ‘கொழந்தயக் கவனிச்சுக்கறது பாக்கியம்’ என்று ஏதேதோ சொல்வார். அவள் மனதில் படிந்திருக்கும் வெறுப்பை உணர்ந்து கொண்டதாலோ என்னவோ இப்போதெல்லாம் அம்மாவின் அறிவுரை அதிகரித்துவிட்டது. எல்லாவற்றையும் புன்னகையோடு ஏற்றுக்கொள்ளப் பழகிவிட்டாள். இந்த நாளை நினைவுகூர்ந்து அவளை மகிழ்ச்சிப்படுத்த எதை எதையோ அம்மா பேசினார். ‘கேக் வெட்டறயா?’ என்றார் மீண்டும். ‘ராத்திரிக்கிப் பாத்துக்கலாம்’ என்றாள். அம்மாவைத் தொடர்ந்து இன்னும் யாராவது வந்து விடுவார்களோ என்று அச்சமாக இருந்தது.

குழந்தைக்குப் பிடிக்கும் என்று கொண்டு வந்திருந்தவற்றை எல்லாம் கொடுத்துவிட்டு அம்மா கிளம்பினார். எப்போதும் கொண்டுவரும் ஒரே வகைப் பலகாரம். நாக்குக்குச் சுவை மாற்றம் பிடிக்காதா? ஒரே சுவையை எப்படி எல்லாக் காலத்திற்கும் அது அனுபவிக்கிறது? பழகிப் போனதையே செய்வதில் என்ன சுவாரசியம் இருக்கிறது? படுக்கையறைக் கதவைத் திறந்து ஒரே ஒருமுறை குழந்தையை எட்டிப் பார்த்த அம்மா ‘என்ன, எளச்ச மாதிரி தெரியுது’ என்றார். ‘நல்லாப் பாத்துக்க’ என்று பொய்க்கோபம் காட்டினார். ஆனால் அவர் முகத்தில் திருப்தி இருந்தது. வழியனுப்பிவிட்டு வேலைகளைத் தொடங்கினாள். குழந்தை எழுந்ததும் கொடுப்பதற்கானவை, இரவு உணவுக்கான தயாரிப்புகள் என்று எந்திரமாக இயங்கினாள். முடித்த நேரத்தில் குழந்தை எழுந்துகொண்டது.

மாலை நேரம் அவளுக்கு மிகவும் பிடித்தமானது. குழந்தையோடு வெளியே போவதற்குக் கொஞ்சம் நேரம் கிடைக்கும். அருகில் இருக்கும் பூங்காவுக்குச் செல்வாள். சரியாகப் பராமரிப்பு இல்லை என்றாலும் வந்து செல்லும் மனிதர்களைப் பார்ப்பதே சந்தோசமாக இருக்கும். சிலசமயம் கடைக்குப் போவாள். வேண்டும் பொருள்களை வாங்குவது மட்டுமல்ல, வேடிக்கை பார்ப்பதிலும் அவளுக்கு ஈடுபாடு உண்டு. யாருடைய வீட்டிற்காவது சென்று வருவாள். அது பெரும்பாலும் வருத்தத்தில்தான் முடியும். குழந்தை ஏதாவது செய்து வைக்கும். அது அவளுக்குப் பிடிக்காது. அல்லது அவர்களுக்குப் பிடிக்காது. அவர்கள் முன்னால் ரொம்பவும் நடித்து நல்ல பெயரை வாங்கிக் கொள்வதும் உண்டு. அவளுக்கு ஏதாவது வகையில் கெட்ட பெயரை ஏற்படுத்த முயலும்.

எதுவும் இல்லாத போது மொட்டை மாடி இருக்கவே இருக்கிறது. யார் இடையீடும் இல்லாத இடம். எல்லோரையும் மேலிருந்து பார்க்கலாம். பொம்மைகள் உருள்வது போலத் தெரியும் காட்சிகளைக் கண்டு குதூகலிப்பாள். ஏதுமற்று விரிந்திருக்கும் வான்வெளி கை நீட்டி அணைத்துக் கொள்ளும். குழந்தைக்கும் மொட்டை மாடி பிடிக்கும். தரையில் தானாக உருளும்.  சுவரைப் பிடித்துக்கொண்டு நடக்கும். வெட்டவெளியை அண்ணாந்து பார்த்துச் சிரிக்கும். அவளுக்கு விளையாட்டுக் காட்டித் தவழ்ந்தோடும். நிம்மதியாக மூச்சுவிடக் கிடைத்த நேரம் அது.

மொட்டை மாடிக்குச் செல்லும் படிகளில் தானே தவழ்ந்து ஏறியது குழந்தை. விழுந்துவிடக் கூடாது என்பதற்காக அதன் பின்னால் மெல்ல ஏறினாள். குழந்தை கேட்கும் என்பதற்காகக் குடுவையில் பாலும் கொறிக்கத் தீனியும் எடுத்திருந்தாள். குழந்தையும் பாரம்; தீனியும் பாரம். சுமப்பதே தன் வேலையாகி விட்டது என்று தோன்றியது. மேலே வந்த கொஞ்ச நேரம் குழந்தை அவளைத் தொந்தரவு செய்யாது. துவைக்கும் கல் மீது உட்கார்ந்து சுற்றிலும் பார்த்தாள். விதவிதமான கட்டிடங்கள். வாகனப் பெருக்கம். விளம்பரப் பலூன்கள் கயிற்றை அறுத்துப் பறக்க முனைகின்றன. இது தீபாவளிக் காலம். மழைக்காலமும்கூட. பெருங்காற்று மோதினால் ராட்சதப் பலூன் விடுதலை பெற்றுவிடக் கூடும். அது எங்கே போகும், எவ்வளவு உயரத்தில் பறக்கும்? எதுவும் பட்டுக் காற்றுப் போகும் வரை நகர்ந்து கொண்டேயிருக்கும். அப்படி ஒரு காட்சி கிடைக்கவில்லை. விடுபடும் தவிப்பில் பலூன் மிதக்கிறது. மனிதக் குரல்கள் பொருளற்ற ஒலிகளாய்ப் பெருகின. எல்லாவற்றிலும் ஏதேதோ மாற்றம். தான் மட்டும் எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே இருப்பதாய் நினைத்துப் பெருமூச்சு விட்டாள்.

உடல் சதை போட்டிருக்கிறது. கண்ணில் கருவளையம். முகத்தில் மங்குகள் திட்டுத் திட்டாய்ச் சேர்ந்துவிட்டன. கருமயிரை மேலெடுத்துவிட்டு மறைக்க முயன்றாலும் நரை துருத்தித் தெரிகிறது. இதெல்லாம் மாற்றங்கள்தான். மனதுக்கு இதம் தரும் மாற்றங்கள் அல்ல. அன்றாடத்தில் எந்த மாற்றமும் இல்லை. பார்வைக்குத் தெரியும் காட்சிகள் பலவிதம். எதையும் யோசிக்காமல் மனதை அதில் செலுத்த முயன்றாள். அப்போது குழந்தை அவளை நோக்கி வந்தது. விசிறி போல் இறக்கையை அடித்துக்கொண்டு நாரைக் கூட்டம் மேற்கு நோக்கிச் சென்றது. நாரைகளா, கொக்குகளா? கொக்கு முழுவெள்ளை. நாரைக்கு மேலிறக்கை சாம்பல் பூத்திருக்கும். பறக்கும் போது இரண்டும் ஒன்று போலவே தோன்றும்.  உன்னிப்பாகக் கவனிக்க முயன்றபோது அவள் காலைப் பற்றியேறி சேலையை இழுத்து அழைத்தது குழந்தை. அண்ணாந்து பார்த்துக்கொண்டே குழந்தையுடன் சென்றாள்.

தண்ணீர்த் தொட்டிக்கு ஏற வைத்திருந்த இரும்பு ஏணியருகே போய் ‘ஏது ஏது’ என்றது.  அங்கே எதற்கு ஏறச் சொல்கிறது என்று புரியவில்லை. பன்னிரண்டு பளுதுகள் கொண்ட ஏணி. நான்கில் ஏறி நின்றாள். அவள் நிற்பதைப் பார்த்து மேலும் ‘ஏது ஏது’ என்றது. சரி என்று முழுதும் ஏறினாள். தண்ணீர்த் தொட்டிக்கு மேலே போனதும் அந்தரத்தில் நிற்பது போலிருந்தது. தொட்டியைச் சுற்றிலும் எந்தத் தடுப்பும் இல்லை. காற்று வாரி வந்து சூழ்ந்தது. கைகளைக் குறுக்கிக் கால்களுக்குள் வைத்தபடி வானத்தை நோக்கினாள். கீழிருந்து குழந்தை ‘எதங்கு எதங்கு’ என்று கத்தியது. சற்றே இடைவிட்டு இறங்கினாள். பன்னிரண்டு பளுதுகள். கடைசிப் பளுதில் கால் வைத்ததும் ‘ஏது ஏது’ என்றது. ஏறினாள். மேலே கடைசிப் பளுதில் நிற்கையில் ‘எதங்கு’ என்றது. அவள் ஏறுவதும் இறங்குவதும் அதற்கு விளையாட்டு என்பதைப் புரிந்துகொண்டாள். இப்படி ஒரு புதிய விளையாட்டைக் குழந்தை கண்டுபிடித்திருக்கிறது. இது எத்தனை நேரம் நடக்குமோ?

ஏறினாள்; இறங்கினாள். ஏறியும் இறங்கியும் கால்கள் வலித்தன. குழந்தை தன் கட்டளையை நிறுத்தவில்லை. அவள் நின்றால் கத்தியது. காற்றின் ஓலத்தை மீறி அதன் குரல் ஒலித்தது. இது சரிப்படாது. அந்த முறை இறங்கும்போது ‘வா’ என்று குழந்தையை அழைத்தாள். அது சற்றே தயங்கியது. முகத்தில் சிரிப்போடு ‘வா, நல்லாருக்கும்’ என்று ஆசை காட்டினாள். வந்தது. அதைத் தூக்கிக் கொண்டு ஏற முடியாது. பெருத்த பூதவுடல். அதை முன்னே விட்டு மெல்லப் பிடித்து ஏற்றினாள். தலையைக் குனிந்து கால்களையும் பளுதுகளையும் பார்த்தபடி ஏறிய குழந்தை கடைசிப் பளுது தாண்டி தொட்டியின் மேற்பரப்பில் கால் வைத்ததும் வெற்றுவெளியையும் காற்றையும் கண்டு ‘எதங்கு எதங்கு’ என்று கத்தியது. அவள் மேலே ஏறி நின்றாள். அவள் கால்களைக் கட்டிக்கொண்டு அச்சத்தோடு ‘எதங்கு எதங்கு’ எனக் கதறியது.

‘எதங்கனுமா?’ என்று அவள் கேட்டது காற்றின் வீசலில் குழந்தைக்குக் கேட்கவில்லை. மெல்லக் குனிந்து குழந்தையைத் தூக்கினாள். பாரத்தைக் காற்று லேசாக்கியது. பந்தைப் போலத் தலைக்கு மேலேற்றி அப்படியே  அந்தரத்தில் வீசினாள். பந்து சுழன்று சுழன்று கீழே இறங்கும் காட்சியை ஆவலாகப் பார்த்தாள். பிறகு  மிகவும் நிதானமாகக் கீழே இறங்கினாள்.

Previous articleபரிபூரணி- ஐ கிருத்திகா
Next articleபார்த்திருத்தல்-வண்ணதாசன்
பெருமாள்முருகன்
பெருமாள்முருகன் (பி. 1966) ஒரு தமிழ் எழுத்தாளர். இவர் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டம் கூட்டப்பள்ளியில் பிறந்தவர். தமிழ் வட்டார நாவலின் முன்னோடியாகிய எழுத்தாளர் ஆர். சண்முகசுந்தரம் குறித்து ஆய்வு செய்து தமிழ் இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். அரசு கலைக் கல்லூரி ஒன்றில் தமிழ்ப் பேராசிரியராகவும் கல்லூரி முதல்வராகவும் பணியாற்றியவர். "பெருமாள்முருகன்” என்னும் பெயரில் கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை ஆகியவற்றை எழுதி வருகிறார். இளமுருகு என்னும் பெயரில் கவிதைகள் எழுதியுள்ளார். காலச்சுவடு இதழின் ஆசிரியர் குழுவில் ஒருவராக இருந்தார். மனஓசை, குதிரைவீரன் பயணம் ஆகிய இதழ்களின் ஆசிரியர் குழுவில் பணியாற்றி உள்ளார். கல்வி பற்றிய பல கட்டுரைகளை எழுதியுள்ளார். இவரது ஒன்பது நாவல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. நிழல்முற்றம் நாவல் போலிஷ் மொழியிலும் மாதொருபாகன் நாவல் ஜெர்மன் மொழியிலும் செக் மொழியிலும் வெளியாகியுள்ளன. மலையாளம், கன்னடம், தெலுங்கு, மராத்தி, இந்தி உள்ளிட்ட இந்திய மொழிகள் பலவற்றில் மாதொருபாகன் நாவல் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இவரது பெரும்பாலான நாவல்கள் மலையாளத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. அகராதியியல், பதிப்பியல் ஆகிய துறைகளில் ஆர்வமுடையவர். அத்துறைகளில் நூல்கள், கட்டுரைகள் எழுதியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.